Monday, September 26, 2011

புரியாத ‘கடவுள் கணக்கு’ !                           புரியாத ‘கடவுள் கணக்கு’ !
                                                         [சிறுகதை]

கண் மூடி, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த இறைவனை நீண்ட நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் இறைவி.

அதை மனக்கண்ணால் உணர்ந்த இறைவன், ”ஏதோ சொல்ல நினைக்கிறாய் போல. சொல்” என்றார்.

“சொல்ல நினைக்கல. கேட்க நினைக்கிறேன்” என்றார் இறைவி..

“கேள்”

“கடவுள் நீங்க ஒருத்தர்தானா?”

ஒரு முறை அதிர்ந்து அடங்கியது இறைவனின் பொன் நிற மேனி.

“நான் ஒரு போதும் அப்படிச் சொன்னதில்லை” என்றார் இறைவன்.

“நீங்க சொன்னதில்லை. மண்ணுலகில் வாழும் மனிதர்கள் சொல்கிறார்கள்.”

’எல்லாரும் சொல்வதில்லை. ‘நான் ஆன்மிகவாதி’, ‘கடவுளின் அவதாரம்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் சொல்கிறார்கள்.”

“அதென்ன கணக்கு, ‘ஒன்று’? கட்டற்ற...கணிப்புக்கு உட்படாத... அதிபிரமாண்ட பிரபஞ்சத்தில் ஒரே கடவுள்தான் உண்டு. அவர்தான் அனைத்தையும் தோற்றுவித்து இயக்குகிறார் என்பது என்ன கணக்கு? ஒருவருக்கே அத்தனை நற்குணங்களையும் நிகரற்ற பேராற்றலையும் உரித்தாக்கிக் கொண்டாடுவது
ஏன்? நற்குணங்கள் கொண்ட பல நல்ல கடவுள்கள், ஆதிக்க மனப்பான்மை இன்றி, ஒத்த மனப் போக்குடன் ஒருங்கிணைந்து இந்தப் பிரபஞ்சத்தை ஆளுவது சாத்தியமான ஒன்றுதானே?.......இப்படிச் சிலர் கேட் கிறார்கள்! அவர்கள்.....”

குறுக்கிட்ட இறைவன்,”அவர்கள் சிறந்த சிந்தனையாளர்கள்...
பகுத்தறிவாளர்கள்.” என்றார்.

”எது? எப்படி? எப்போது? என்பன போன்ற கேள்விகள் விடை காண முடியாத
புதிர்கள். மேம்போக்காக நோக்கும் போது, பிரபஞ்ச இயக்கம் ஒரு ஒழுங்குக்கு உட்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் கடவுள் என்ற ஒருவரின் கட்டுப்பாட்டில் அது இருப்பதாகத் தெரியவில்லை. எனவே கடவுள் என்ற ஒருவர் தேவையற்றவர் ஆகிறார். என்று சொல்பவர்களும் நிலவுலகில் இருக்கிறார்கள்” என்றார் இறைவி.

“அவர்கள்தான் நாத்திகர்கள்.” மெலிதாகப் புன்னகைத்தார் இறைவன்.

“கடவுள் உண்டுங்கிறாங்க. இல்லைன்னும் சொல்றாங்க. செத்த பிறகு,நரகம்
சொர்க்கம்கிறாங்க. ஆவியா பேயா அலையணும்னு அடிச்சிப் பேசறாங்க.
. அதெல்லாம் ஒன்னுமில்ல. செத்தா மண்ணு. அவ்வளவுதான்னும் அலட்சி யமா சொல்றவங்களும் இருக்காங்க. ஒன்னும் புரியல. மனுசனா ஏன் பிறந்தோம்னு தெரியல........இப்படிப் புலம்பறவங்களும் அங்கே இருக்காங்க.”
என்று இறைவி சொல்ல.......................

”அவர்கள் எல்லாம் சராசரி மனிதர்கள்” என்றார் இறைவன்.

“இப்படி இன்னும் என்னவெல்லாமோ கேள்விகள் கேட்கிறாங்க பூலோகவாசிகள். இதுக்கெல்லாம் எனக்கு விடை தெரியலையேங்கிற உறுத்தல் இருந்துட்டே இருக்கு. எல்லார்த்துக்கும் நீங்கதான் விடை சொல்லணும்” என்று தன் கேள்விகளுக்கு முத்தாய்ப்பு வைத்தார் இறைவி.

முகத்தில் சிறு விரக்திப் புன்னகை மலர்ந்து மறைய, இறைவன் சொன்னார்:

“ யுகம்... யுகம்...யுகம்...யுகம்...யுகமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை எந்தவொரு கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியாது.”

மோனத்தில் புதைந்து போனார் இறைவன்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


                                                               
                     

Saturday, September 24, 2011

மனிதனுக்கு ஆயிரம் வயது!!!

                                     மனிதனுக்கு ஆயிரம் வயது!!!


சாவைப் பற்றிய அச்சம் உருவாவதற்கான காரணங்களில் முதலாவது, மரணம் அடையும் போது நம் உடம்பை வருத்தும் ‘வலி’ அல்லது ‘வேதனை’ பற்றிய சிந்தனை ஆகும்.


குறையில்லாத உடல் நலத்துடன் ஒருவர் சாவைத் தழுவுகிற போது, எந்தவொரு வலிக்கோ துன்பத்திற்கோ அவர் ஆளாவதில்லை என்பது நிரூபிக்கப் பட்டுவிட் டால் இந்தப் பயத்திலிருந்து ஓரளவுக்கு மனிதன் விடுபட்டுவிடுவான்.


இந்த நிரூபணம் அறிவியலால் மட்டுமே சாத்தியப்படக் கூடிய ஒன்று.


இதற்கு விஞ்ஞானிகளின் கடின உழைப்பு தேவை.


அவர்களைப் பேரார்வத்துடன்...ஏன்...ஒருவித வெறியுடன் ஆராயத் தூண்டுவது ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும்.


கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு, மக்களின் மனங்களில் கணக்கற்ற மூட நம்பிக்கைகளைத் திணித்துத் தம்மை வழிபட வைத்து, சுக
போகங்களில் திளைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளின் பின்னால் ஓடுவதை.......
அவர்களின் கால்களில் விழுவதை நிறுத்தி, அறிவியல் அறிஞர்களைத் தேடிச் சென்று, அவர்களைப் போற்றுவதற்கும் புகழ்வதற்கும் நாம் கற்க வேண்டும்.


தேவைப்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியும் செய்தல் வேண்டும்.


எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வெறும் கற்பனையில் உருவாக்கப்பட்ட கடவுளுக்கு விழா எடுப்பதைத் தவிர்த்து, சாதனைகள் நிகழ்த்தும் அறிஞர்களுக்கு விழா எடுத்துச் சிறப்பித்துப் போற்றும் மனப் போக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சுகபோகப் பற்று


மரணத்தை எதிர்கொள்ளும் தெம்பும் திராணியும் மனிதருக்கு இல்லாமல் போனதற்கான அடுத்த காரணம்.....

பற்று!

வாழ்க்கையில் அனுபவித்த இன்பங்களின் மீது கொண்ட பற்று! அவற்றை வாரி வழங்கிய இம்மண்ணின் மீது கொண்ட பற்று!

வாழ்க்கையில் துன்பங்களையே அனுபவித்துத் துவண்டவனும்கூட, இம்மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து, ஆசைப்பட்டதெல்லாம் அனுபவிக்க நினைக்கிறானே தவிர இங்கிருந்து விடுபட்டுப் போகச் சம்மதிப்பதில்லை!

இன்பங்களின் மீதான...இம்மண்ணுலகின் மீதான பற்றுதலிலிருந்து விடுபட வழி உண்டா எனின் இல்லை என்றே சொல்லலாம்.

’இந்தப் பிரபஞ்சத்தில் அழிவுறாதது எதுவும் இல்லை. பழையன அழிவதும் புதியன தோன்றுவதுமான மாறுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நாம் மட்டும் விதி விலக்கா என்ன?’ என்பன போன்ற சிந்தனைகளால் நம்மை நாமே ஆற்றுப் படுத்துவதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இயலாமையைப் பயன் படுத்தித்தான் ஆன்மிகவாதிகளும் அவதாரங் களும் மக்களை நிரந்தர முட்டாள்களாக ஆக்கி வருகிறார்கள்.


மரணத்தைத் தவிர்ப்பது ஒரு போதும் சாத்தியமற்ற ஒன்று என்றாலும், மனித னின் ஆயுளை ஐநூறு ஆயிரம் பல்லாயிரம் இலட்சம் கோடி என்று நீட்டித்துக் கொண்டே போவது அறிவியலால் சாத்தியப்படுவதுதான் என்பதை எண்ணி மனித இனம் ஆறுதல் கொள்ளலாம்.


ஆக, இம்மண்ணின் மீதுள்ள பற்றால் மரணத்தை எதிர் கொள்ள நாம் அஞ்சும்
கோழைத்தனத்தை அறிவியலின் துணையுடன் படிப்படியாகக் குறைக்க முடியும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Thursday, September 22, 2011

மரண சுகம்

 வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில் அது அத்தனை துன்பமானதா என்ன?

இல்லை...இல்லவே இல்லை.

முழு உடல் நலத்துடன் வாழ்ந்து முடித்த ஒருவரின் உடல், மரணத்தை ஏற்க
ஆயத்தம் ஆகும் தருணங்களிலோ, மரணத்தைத் தழுவுகிற அந்தக்
கணங்களிலோ எந்தவிதமானதொரு வலியையோ துன்பத்தையோ அனுபவிப்பதில்லை.

அந்த அனுபவம் சுகமானது.

உழைத்துக் களைத்து, வயிறார உண்டு முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் உறங்கத் தொடங்குகிற அந்தக் கணங்கள் எத்தனை சுகமானவையோ அத்தனை சுகமானது மரணம்.

உடம்பின் அணுக்களில் பெரும்பாலானவை அல்லது கணிசமானவை அழிவுறும் நிலையில் புதிய அணுக்கள் உருவாக அல்லது பழையவை புதுப்பிக்கப்பட, உடம்பு உறக்கத்தில் ஆழ்த்தப் படுகிறது.

இந்த ‘உறக்கம்’ ஒரு தற்காலிக மரணமே.

அணுக்களைப் புதுப்பித்துக் கொள்ளும் அல்லது புதியனவற்றை உருவாக்கும்
ஆற்றலை உடம்பு முற்றிலுமாய் இழந்துவிடும் நிலையில் எய்துவதே மரணம்.

[’உறங்குவது போலும் சாக்காடு...’ என்னும் திருக்குறள் தந்த மேதையின் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது. மறு பிறப்பு பற்றிச் சிந்திக்கும் போது
இதை ஆராயலாம்]

தற்காலிக மரணத்தின் போதோ, நிரந்தர மரணத்தின் போதோ உடல் எந்தவொரு வலியையோ துன்பத்தையோ உறுவது இல்லை என உறுதிபடச் சொல்லலாம்.

அவ்வாறாயின் ‘மரண வேதனை’ என்கிறார்களே, அதெல்லாம் வெறும் கற்பனைதானா?

ஒரு நோய் காரணமாக மரணம் சம்பவிக்கும் போது , அந்த நோயால் 


உண்டாகும் வேதனையை மரணம் தரும் வேதனை என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

விபத்துகளாலோ, பிறரின் தாக்குதல்களாலோ உடல் உறுப்புகள் 

சிதைக்கப்பட்டு, அதனால் விளையும் வலிகளையும் மரணம் தரும் வலி என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

உடம்பை இயக்குகிற முக்கிய உறுப்புகள் வயது ஆக ஆக வலிமை குன்றி வருகின்றன; செயலாற்றும் திறனை இழக்கின்றன.

இதன் விளைவாக, மனிதனின் சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து வருகிறது.

பெருமளவில், முக்கிய உறுப்புகள் தம் செயல் திறனை இழக்கும் போது, மனிதனின் சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து அவன் ‘மயக்க நிலை’ எய்துகிறான்.

உறுப்புகள் தம் முழுத் திறனையும் இழக்கும் போது மனிதனுக்கு மரணம் சம்பவிக்கிறது.

இம்மாதிரியான ‘இயற்கை’ மரணத்தில் வலியோ ஒருவித வேதனையோ இடம் பெற வாய்ப்பே இல்லை என்பது அறியற்பாலது.

முழு முதுமை எய்திய நிலையில் அரிதாகச் சிலர், சில நாட்களோ பல நாட்களோ சுய நினைவு இழந்த நிலையில் உயிர் வாழ்ந்து மரணத்தைத் தழுவுவது அறியற்பாலது.

இயற்கை மரணம் துன்பம் தரும் ஒன்றல்ல என்பது உண்மை. எனினும், மனிதர் கள் மரணத்தை எண்ணி எண்ணி அல்லல் பட்டு, அஞ்சி அஞ்சிச் செத்துச் செத்துப் பிழைப்பது ஏன் என்று மனம் கேள்வி எழுப்புவது இயல்புதான்.

அதற்குக் காரணம்..............................

மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவில் உதிக்கும் கற்பனைகளும் அனுமானங்களும்தான்!
***********************************************************************************************************************