தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Nov 16, 2011

ஆன்மாவுடன் ஓர் உரையாடல்.

ன்பமோ துன்பமோ அனுபவிப்பது எதுவாக இருந்தாலும், என்றென்றும்... எக்காலத்தும் ஏதேனும் ஒரு வடிவில் உயிர் வாழவே மனிதன் ஆசைப் படுகிறான்.

மனித உருவில் வாழும் எவரும் இதற்கு விதிவிலக்கல்லர்.

மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய...அதை எதிர் கொள்ளும் மன திடம் அறவே இல்லாத ...ஆயினும் சிந்திக்கத் தெரிந்த... சில புத்திசாலிகளின்  அனுமானமே இந்த ஆன்மா. [கடவுளைக் கற்பித்தவர்களும் அவர்களே]

சிந்திக்கும் திறன் குறைந்த...அதற்கான சூழல் அமையாத மக்கள், இவர்கள் கட்டிவிட்ட கதைகளில் மயங்கி இவர்களுக்கு அடிமைகளாகவும் ஆனார்கள்!

அறிவியல் வளர்ந்து, ஒவ்வொரு மனிதனும் நல்ல சிந்தனையாளனாக உருமாறும் சூழல் அமைந்த நிலையிலும், ஆன்மா பற்றிய பழங்கதைகளை நம்புவது நீடிக்கிறது!

கடவுளின் ஒரு கூறு ஆன்மா என்று சொல்லும் ஆன்மிகவாதிகள், தாங்கள் நம்பும் கடவுள் பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை ஒருபோதும் தந்ததில்லை.[இவ்வலைப்பதிவின் ஆரம்பப் பதிவுகளில் இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறோம்]

ஒவ்வொரு உடம்பிலும் ஓர் ஆன்மா பயணிக்கிறது என்கிறார்கள். அது உடம்பில் புகுந்தது எவ்வாறு என்பது பற்றி எவரும் அறிவு பூர்வமாக விளக்கிச் சொன்னதில்லை.

உடம்பில் தங்கியிருந்து, அதன் மூலம் இன்ப துன்பங்களை அனுபவிக்கிற அது....

உடம்பு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது, தான் உறையும் உடம்பிலிருந்து வெளியேறி, அலைந்து திரிகிறது என்கிறார்கள்.

என்ன ஆதாரம்?

பெண் உறுப்பு வழியாக உள் நுழைந்த அது [இதைச் சொன்னதும் அவர்கள்தான்] பின்னர் எந்த உறுப்பு வழியாய் வெளியேறியது?

மீண்டும் எப்படி உடம்புக்குள் நுழைந்தது?

கட்டுப்பாடு ஏதும் இல்லையா? [ ஆன்மாக்களைத் தன்னிலிருந்து பிரித்து, பிரபஞ்சத்தில் உலவவிட்டதோடு கடவுளின் கடமை முடிந்துவிட்டதா?]

இது வெளியேறிய தருணத்தில் வேறொரு ஆன்மா இவ்வுடலில் நுழைந்து விடலாமே? அது நிகழ்ந்தால், இது வேறொரு உடலைத் தேடி அலையுமா? இல்லை, அதை எதிர்த்துப் போராடுமா?

ஓர் உடலுக்காக இரண்டோ, அதற்கும் மேற்பட்ட ஆன்மாக்களோ மோதிக் கொள்வதும் உண்டா?

வெளியேறுகிற ஆன்மா ஊர் சுற்றிவிட்டு, தன்னை மறந்த நிலையில் தங்கியிருந்த உடம்பை மறந்து விடுவது அல்லது புறக்கணித்து விடுவதும் சாத்தியமா?

ஆன்மாவைப் பொருத்தவரை, ஐம்புலன் நுகர்ச்சி என்பது இல்லை என்கிறார்கள். அது ஓர் உடம்புக்குள் புகுந்துதான் ஒரு காட்சியைப் பார்க்கவோ ஓர் ஒலியைக் கேட்கவோ முடியும் என்கிறார்கள். உடம்பிலிருந்து வெளியேறி, ஊர் சுற்றிப் ’பார்ப்பது’ என்பது எவ்வாறு சாத்தியம்?

உடம்பின் ஒட்டுறவின்றி, பார்ப்பதும் கேட்பதும், தொட்டு உணர்வதும், நுகர்வதும், சுவைப்பதும் அதற்கு இயலாது என்று சொன்னவர்களும் இவர்கள்தானே?

கதை அளப்பதற்கு ஓர் எல்லை இல்லையா?

உடம்பின் செயல்பாடுகளால் விளையும் நன்மை தீமைகளை இந்த ஆன்மா நேரிடையாக ப் பெறுகிறதா, இல்லை மூளை வழியாகவா?

இது பற்றியெல்லாம் ஆன்மிகங்கள் சிந்தித்திருக்கிறார்களா?

அனுபவிப்பது உடல் மூலமாக என்றால்.....

சிந்திப்பது?

ஆன்மாவுக்குச் சிந்திக்கத் தெரியுமா?

சிந்திக்கும் திறன் இருந்தால், தான் பயணிக்கும் உடம்பை நற்செயல்களில் மட்டும் ஈடுபடுத்தலாமே? தீச்செயலும் செய்ய அனுமதிப்பது ஏன்?

உடம்பு, மூளையின் ஆணையை ஏற்றுக் குற்றங்கள் புரிய, அதனால் விளையும் பாவங்களை ஆன்மா சுமந்து திரியும் பரிதாபம் ஏன்?

கொஞ்சமும் சிந்திக்கும் திறனற்ற ஓர் அஃறிணைப் பொருளைக் கடவுளின் ஒரு கூறு என்று சொல்வது எவ்வாறு?

இப்படி, இன்னும் பல வினாக்களுக்கு அவர்களால் ஒரு போதும் விளக்கம் தர இயலாது என்பது தெரிந்திருந்தும்.......

நண்பர்களே, உங்களில் எவரேனும் ஆன்மா இருப்பதை நம்புகிறீர்களா?

”ஆம்” எனின், அத்தகு நம்பிக்கை கொண்ட என் இனிய ஆன்மா நண்பரே..........

உங்களுடன் பேச எம்மை அனுமதியுங்கள்.

‘நீங்கள்’ என்று நாம் சொன்னால், அது உங்கள் ஆன்மாவையே குறிக்கும்.

நீங்கள் வேறு உங்கள் ஆன்மா வேறு அல்ல.

ஆன்மிகங்கள், ஆன்மாவை ஒருமையில்தான் ...’அது, இது’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றுகிறோம்.

எம் நண்பராம் ஆன்மாவே,

ஓர் உடம்புக்குள் ஒளிந்து கொண்டுதான் உன்னால் இன்ப துன்பங்களை அனுபவிக்க முடிகிறது. நீ உறையும் உடம்பு உன்னால் இயக்கப்படுவதில்லை.
அது மூளையின் ஆளுமைக்கு உட்பட்டது. பாவ புண்ணியங்களைச் சுமக்க மட்டுமே உன்னால் முடியும். அவற்றில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ உன்னால் முடியாது. ஆக, ஆறறிவு என்றில்லை, ஓரறிவு கூட இல்லாத ஒரு ஜடப் பொருள் என்று உன்னைச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. என் சந்தேகம் நியாயமானதுதானா?

எது எப்படியோ, உன்னிடம் சில கேள்விகள்.

கடந்த பிறவிகளில் எத்தனை முறை ஆண் உடம்பிலும் எத்தனை முறை பெண் உடம்பிலும் சுக துக்கங்களை அனுபவித்தாய்? ‘அலி’களின் தேகத்திலும் நீ விரும்பிப் பயணித்ததுண்டா? அழகான பெண் கருவில் [உடம்பில்] நீ விரும்பிப் புகுவது உண்டா?

எந்தவொரு உடம்பிலும் புகாமல், வெறுமனே விண்ணில் அலைந்து திரிகிற போது உன் நிலை என்ன? உன்னைப் புரிந்து கொள்வது எப்படி? பிறருக்குப் புரிய வைப்பது எப்படி?

கடவுளைப் போலவே உன்னையும் உணரத்தான் முடியுமா? உணரும் சக்தியைக் கடவுள் எமக்கு வழங்குவாரா? அவரை மசிய வைப்பது எப்படி?

ஒரு பிறவியில் வாழ்ந்து முடித்த அனுபவம் அடுத்த அடுத்த பிறவிகளிலும்
உன் நினைவில் தங்கியிருக்குமா?

எம்மைப் பொறுத்தவரை, எம் ஆன்மா பற்றிய எந்தவொரு பதிவும் எம்மிடம் இல்லை. முற்பிறவி பிற்பிறவி என்று எப்பிறவி பற்றியும் எமக்கு எதுவுமே நினைவில் இல்லை. அப்புறம், பாவம் புண்ணியம் என்றெல்லாம் அலட்டிக் கொள்வது முட்டாள்தனம் அல்லவா?

ஒரு பிறவியில் இனியன் உடம்பிலும், இன்னொன்றில் அமுதாவின் உடம்பிலும், அடுத்த ஒன்றில் சூர்யாவின் உடம்பிலும்...இப்படி ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவர் உடம்பில் புகுந்து வெளியேறுவது உன் வழக்கமாக இருந்திருக்கிறது. உண்மையில், மேற்சொன்னவர்களில் எவருக்குச் சொந்தமான ஆன்மா நீ?

தன்னின் ஒரு கூறான உன்னை, வெறும் ‘ஜடப்பொருள்’ ஆக்கி, கூடு விட்டுக் கூடு பாயப் பணித்து, பல பிறவிகள் எடுக்கச் செய்து, அலையவிட்டு , சொல்லொணாத துன்பங்களுக்கு உட்படுத்திக் கடவுள் தண்டிப்பது ஏன்?

இதுவும் அவருடைய திருவிளையாடல்களில் ஒன்றா?

இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் இவற்றிற்கு மட்டும் இப்போது அவசியம் பதில் தேவை.

’ஆன்மாவுடன் பேச முடியாது’ என்று சொல்லி நழுவ வேண்டாம். நீ பயணிக்கும் உடம்புக்கு ஒரு மழலை முத்தமிட்டால், அந்தப் பேரின்பத்தைத் தொடு உணர்ச்சி மூலம் உன்னால் அனுபவிக்க முடிகிறது. அவ்வாறே எதிர் நின்று ஒருவர் பேசுவதையும் உன்னால் கேட்க முடிகிறது. பார்க்க முடிகிறது; சுவைக்க முடிகிறது. ஆக, ஐம்புல நுகர்ச்சி உனக்கு உண்டு. ஆதலால், ஐயத்திற்கு இடமின்றி உன்னால் நீ குடி கொண்டிருக்கும் உடம்பின் வாய் மூலம் எம்முடன் பேச இயலும்.

பேசு...எம் கேள்விகளுக்குப் பதில் சொல்.

'ஆன்மா என்பது வெறும் கற்பனை; அப்பட்டமான பொய்” என்று சொல்லப் படுவதைப் பொய்ப்பிக்க நீ பேசு........................

பேசு ஆன்மாவே பேசு................பேசு......................பேசு...................................

நீ பேசுவதைக் கேட்க நாம் மட்டுமல்ல, இந்த மண்ணுலக மக்கள் அனைவரும்
ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
9 comments :

 1. //‘ஆன்மா என்பது வெறும் கற்பனை; அப்பட்டமான பொய்” என்று எம் மக்களிடையே தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருப்போம்.//

  மின்சாரம் கூட கடத்தியினால் தான் அளவிட முடியும், அறிந்து கொள்ளமுடியும், கடத்தி இல்லை என்றால் மின்சாரம் பொய் என்று கூறிவிட முடியாது. கடத்தி இல்லை என்றால் மின்சாரத்தினாலும் பயனில்லை என்று கூறுவது உண்மையாக இருக்கலாம்.

  ReplyDelete
 2. தங்களின் கருத்துரைக்கு நன்றி கண்ணன்.

  ‘கடத்தியினால்தான் மின்சாரத்தை அறிந்து கொள்ள முடிந்தது’என்பது உண்மை.

  கடத்தியின் மூலம் மின்சாரத்தை ‘அறிந்து’ கொண்ட பிறகுதான் விஞ்ஞானி அதை உலகுக்கு அறிமுகப் படுத்தினான்.

  இயற்கையில் இப்படி ஒரு ‘சக்தி’ இருப்பதை அனுமானித்த நிலையிலேயே, அதை நம்பும்படி எவரையும் அவன் வற்புறுத்தவில்லை.

  அவன் அப்படி வற்புறுத்தியிருந்தால்...
  அதைக் கற்பனை என்று சொல்ல எவருக்கும் உரிமை உண்டு.

  ஆன்மிகவாதிகள், ஆன்மா பற்றிய தங்களின் அனுமானங்களை...புனைவுகளை...
  தொடர் பிரச்சாரங்களால் நம்பவைத்து
  மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்துவிட்டார்கள்.

  அதைக் கண்டிக்கும் முகமாகத்தான் ‘ஆன்மா என்பது கற்பனை...பொய்’
  என்று சொல்ல நேர்ந்தது.

  இத்தொடரைத் தவிர்த்திருக்கலாம்தான்.

  ஆன்மா என்று ஒன்று இருப்பது கண்டறியப்பட்டால்[நம் காலத்திலேயே] எமக்கும் மகிழ்ச்சிதான்.

  கடவுள் இருப்பது மெய்ப்பிக்கப்பட்டாலும் இதே நிலைதான்.

  எம்முடைய இப்பதிவின் நோக்கமே
  அனுமானங்களை ‘உண்மை’ என நம்ப வைத்து மக்களை மூடர்கள் ஆக்கும் செயலைக் கண்டிப்பதுதான்.

  இப்படியொரு ‘விளக்கம்’ தரத் தூண்டிய தங்களின் கருத்துக்கு மீண்டும் நன்றி கண்னன்.

  ReplyDelete
 3. ’கண்னன்’ என்று பிழைபட எழுதியுள்ளேன்.
  ‘கண்ணன்’என்பதே சரி.

  ReplyDelete
 4. //எம்முடைய இப்பதிவின் நோக்கமே
  அனுமானங்களை ‘உண்மை’ என நம்ப வைத்து மக்களை மூடர்கள் ஆக்கும் செயலைக் கண்டிப்பதுதான்.

  இப்படியொரு ‘விளக்கம்’ தரத் தூண்டிய தங்களின் கருத்துக்கு மீண்டும் நன்றி கண்னன்.

  //

  வாடியப் பயிர்களைக் கண்டபோது வாடினேன் என்றவரும்,
  ஏழைகளின் பசிக்கு உணவு அளிப்பதே ஆன்மிகமாகக் கொண்டவருமான வள்ளலார்கள் கூட ஆன்மா பற்றிச் சொல்லி இருக்கிறார், அவர் அதை வலியுறுத்த அவர்களின் போலி ஆன்மிகம் அடிப்படை என்று நான் நம்மவில்லை.

  ReplyDelete
 5. வள்ளலாரைப் போற்றுகிற நல்ல உள்ளங்களைப் புண்படுத்தும் நோக்கம்
  எமக்கு இல்லவே இல்லை.

  இதைத் தங்களைப் போன்ற நல்லவர்கள் புரிந்து கொண்டால் போதும்.

  ReplyDelete
 6. பதிவு அருமை... விவாதமும் அருமை... வள்ளலார் பிற்கால கட்டத்தில் பக்தி மார்க்கத்தில் இருந்து, அத்வைதம் சென்று பின்பு முழு நாத்திகவாதியாக மாறியதால் தான் அவரை கொன்று விட்டார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள். ஊகத்தை பதிவாக பதிப்பாக்க முடியாது... ஆகையால் தகவலாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்... ஆதாரம் அவரின் பிற்கால படைப்புகளில் தெரிகிறது என்கின்றனர்...
  ஆன்மா குறித்து படு விளக்கமாக பேசி விவாதம் அருமையாக செல்கிறது...

  மின்சாரம் கடத்தி இருந்ததால் தான் தெரிந்தது என்பது விதண்டாவாதம்.. முதல் மின்சாரம், மின்னல்... அதை அனைவரும் கண்ணால் பார்க்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 7. // பரமசிவம் கூறியது...
  வள்ளலாரைப் போற்றுகிற நல்ல உள்ளங்களைப் புண்படுத்தும் நோக்கம்
  எமக்கு இல்லவே இல்லை.

  இதைத் தங்களைப் போன்ற நல்லவர்கள் புரிந்து கொண்டால் போதும்.//

  நான் வள்ளலாரைப் / பெரியாரைப் பின்பற்றுவது இல்லை, அவர்களைப் பிடிக்கும் அவ்வளவே. வள்ளலாரும் ஆன்மா பற்றிப் பேசி இருக்கிறார் எனவே அவரெல்லாம் ஏமாற்றுவதற்காகத் அதைச் சொல்லவில்லை என்பதற்க்காக் குறிப்பிட்டேன்

  ReplyDelete
 8. //மின்சாரம் கடத்தி இருந்ததால் தான் தெரிந்தது என்பது விதண்டாவாதம்.. முதல் மின்சாரம், மின்னல்... அதை அனைவரும் கண்ணால் பார்க்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//

  மின்னலில் ஏற்படும் மின்சாரத்திற்கும் அதன் வெளிச்சத்திற்கும் ஊடகம் இல்லை என்று யார் சொன்னது, மிகப் பெரிய அளவிலான மின்சாரம் உற்பத்தியாகும் சூழலில் காற்று ஊடகாமாக எடுத்துக் கொள்ளப்படும், காற்றில் உராய்ந்து / ஊடாகச் செல்வதால் போட்டன்கள் வழியாக ஒளியாகத் தெரிகிறது, மற்றபடி மின்சாரம் ஊடகங்கள் வழியாகச் செல்லவில்லை என்றால் அவற்றைப் பார்க்கவோ அளவிட முடியாது, மின்சாரம் என்பது மின் காந்த ஐயனிகளின் நகர்வு, அவற்றை ஊடகங்கள் வழியாக மட்டுமே அறிய முடியும்

  the huge charges in the cloud cause the air to be ionized making the air a good conductor of electricity causing the air around them to act as a bridge. This now means that the electrical path is complete between the ground, air and cloud. After this happens, a giant "spark" occurs causing the rapid flow of electricity (electrical energy ) to be released through the air to the ground such as houses, buildings or other ground objects ( see diagrams above ) that have an opposite charge.

  ReplyDelete
 9. வள்ளலாரின் இறுதிக்கால மன மாற்றம்
  குறித்துத் தகவல் அளித்தமைக்கும், மின்னல் குறித்த சிந்தனையைத் தூண்டியதற்கும் நண்பர் சூர்யஜீவாவுக்கு என் நன்றிகள்.
  மின்னல் பற்றி, அறிவியல் அடிப்படையிலான விளக்கம் அளித்த
  நண்பர் கண்ணனுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete