தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Nov 29, 2011

விஞ்ஞானியும் மெய்ஞானியும்.

                     விஞ்ஞானியும் மெய்ஞானியும்.

இந்த இருவர் பற்றியும் அறியாதார் எவருமிலர்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானியும், ஆன்மிக வளர்ச்சிக்கு மெய்ஞ்ஞானி எனப்படுபவரும் பாடுபடுவதாக மனித சமுதாயம் நம்புகிறது.

இந்த இருவரின் குண இயல்புகள் பற்றிப் பலரும் சிந்தித்திருப்பர்.

ஆனால், ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் நம்மில் எத்தனை பேர்?

அவ்வாறு ஆராய்வதில் பலன் ஏதுமுண்டா? வீண் வேலையா?

விடை எதுவாயினும் ஒரு முறை முயன்று பார்ப்பதில் தவறில்லை எனலாம்.

விஞ்ஞானி: ’எந்த ஒன்றையும்’ அறிவியல் சாதனங்களின் துணையுடன் [துணை இல்லாமலும்] அது பற்றிய ‘உண்மைகளை’ ஆராய்ந்து அறிவதில்  நாட்டம் கொண்டவர்.


மெய்ஞ்ஞானி: ’ஆழ்ந்த சிந்தனையின் மூலமே அனைத்து ‘உண்மைகளை’யும் கண்டறிந்துவிட முடியும் என நம்புபவர்.


விஞ்ஞானி: ‘இவ்வாறு இருக்கலாம்’ என்று, தான் ‘அனுமானித்தவற்றை,
ஆய்வு செய்து,‘உண்மை’ எனக் கண்டறிந்த பிறகே அதை உலகுக்கு 
அறிவிப்பவர். அதை உலகம் ஏற்குமா இல்லையா என்பது பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்.
தான் அனுமானித்ததை, “இது என் அனுமானம்தான்” என்று ஒப்புக்கொள்பவர்.

மெய்ஞ்ஞானி: தான் அனுமானித்தவற்றோடு, புனைவுகளும் கற்பனைகளூம் 
கலந்து, ‘இதுவே உண்மை’ எனப் பறை சாற்றுபவர்; தொடர் பிரச்சாரங்கள் மூலம் அதை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைத்திட முயல்பவர்.
[படிப்பவர்களுக்குப் புரியும் என்பதால் உதாரணங்கள் தரப்படவில்லை]

விஞ்ஞானி: பிறர், தமக்குள் எழும் ஐயங்களை இவர் முன் வைக்கும் போது, உரிய விளக்கங்களைத் தர இயலவில்லை என்றால், “எனக்குத் தெரியாது”, அல்லது, “புரியவில்லை” என, கவுரவம் பார்க்காமல் இயலாமையை ஒத்துக் கொள்வார்.


மெய்ஞ்ஞானி: “தெரியாது”, “புரியவில்லை” போன்ற சொற்களை இவர் ஒருபோதும் உச்சரித்ததில்லை. “நீ அஞ்ஞானி...அற்பஜீவி...” என்றோ, “நாம் சொல்லும் உண்மையை உணரத்தான் முடியும்; உணர்த்த முடியாது” என்றோ சொல்லி வாய்ப்பூட்டு போடுவார்..


விஞ்ஞானி: மிகக் கடுமையாய் உழைத்தும் உண்மைகளைக் கண்டறிய இயலாதபோது, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்.


மெய்ஞ்ஞானி: ஒன்றும் புரியாத நிலை வரும்போது, தொடர்ந்து சிந்திக்கும் திறன் இழந்து, “எல்லாம் அவன் சித்தம்...அவனின்றி அணுவும் அசையாது...அவனன்றி வேறு யாரறிவார்...” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி உண்மைகளை ஆராய்ந்து அறியும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பவர்.


விஞ்ஞானி: ‘கண்டுபிடித்தே தீருவது’ என்ற தணியாத ஆவேசத்துடன் அலுக்காமல் உழைப்பார்; சேர்த்து வைத்த பொருளை இழப்பார்; ஆய்வுக்குத் தன் உடலையே அர்ப்பணித்து உயிரிழக்கவும் துணிவார்.


மெய்ஞ்ஞானி: உடல் உழைப்பும் மூளை உழைப்பும் இன்றி, ‘சொகுசு’ வாழ்க்கை வாழ்பவர். [தாங்குவதற்குத் தொண்டர்படை உள்ளது. பிறகென்ன.....!]

இந்த ’முன்மாதிரி’  ஒப்பீடு தற்சார்பானதா? நடுநிலை பிறழாத ஒன்றா?

இந்த இருவரில், உண்மையாக மக்கள் நலனுக்கு உழைப்பவர் யார்? நம்பத் தகுந்தவர் யார்? [இவர்களால் விளையும் நன்மை தீமைகள் பற்றிய ஆய்வுக்கு இங்கு இடம் தரப்படவில்லை]

நம் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் யார்?

முடிவு...?

சிறந்த சிந்தனையாளர்களான உங்கள் கையில்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
10 comments :

 1. முக்கியமான பாயிண்ட்
  ஞானி மனம் கடந்தவர். இவர் மனம் உடல் கடந்தவர்.
  விஞ்ஞானி மனதை வைத்து போராடுபவர். இவர் மனம் என்னும் சகதியில் கிடப்பவர்

  ReplyDelete
 2. நண்பர் சிவம்ஜோதி அவர்களே,

  ’ஞானி மனம் கடந்தவர்; உடல் கடந்தவர்’என்றெல்லாம் எதை அடிப்படையாகக் கொண்டு, எதை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறீர்கள்?

  என் பதிவு முழுதும் படித்தீர்களா?

  மாய்ந்து மாய்ந்து எழுதினாலும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடவே மாட்டீர்களா?

  உங்களைத் திருத்த உங்கள் ஆண்டவனாலும் முடியாது!

  ‘மனதை வைத்துப் போராடுவது’ என்கிறீர்.

  என்னய்யா மனதை வைத்து?

  சொல்ல நினைப்பதைப் புரியும்படி சொல்லத் தெரியுதா உங்களுக்கு?

  என் போன்றவர்களின் நேரத்தை இனியும் வீணடிக்காதீர்கள்.

  மனிதப் பண்பு கருதி உங்களுக்குப் பதில் சொல்லியிருக்கிறேன்.

  என்னை மதித்து உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 3. நல்ல பதிவு.
  விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டும் தேவைதான்.

  ReplyDelete
 4. தாங்கள் அளித்த தீர்ப்புக்கு நன்றி Robin

  ReplyDelete
 5. கடும் சொற்கள் தவிர்க்கலாம்.
  நீங்கள் மனம் அற்ற நிலையில் 10 நிமிடம் இருந்து பாருங்கள்.

  நான் விஞ்ஞாநியை சாடவில்லை. மனம் என்ற நிலை கஷ்டமான நிலை.
  அதில் இருந்து விடுபட ஞானிகள் வருகிறார்கள்.

  Think out of box.

  ReplyDelete
 6. முயன்று பார்க்கிறேன்.
  நன்றி சிவம்ஜோதி.
  நான் பயன்படுத்தியவை கடும் சொற்கள் என்று தாங்கள் கருதினால்,அவற்றைத் தவிர்க்க முயல்வேன் நண்பரே.
  தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு வேண்டுகிறேன்.
  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 7. Its tough in beginning.. if done with some breathing exercises you can achieve. Happiness use to blossom in me.. It was more effective in my office..

  ReplyDelete
 8. நண்பர் சிவம்ஜோதிக்கு,
  தங்களின் நல்ல உள்ளம் மெல்ல மெல்லத்தான் புரிகிறது.
  என்பால் காட்டும் பரிவுக்கு என் மனப்பூர்வ நன்றிகள்.
  ஆங்கிலத்தில் தங்களால் தெளிவாக எழுத முடிகிறது. மகிழ்ச்சி.
  தமிழிலும் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

  ReplyDelete
 9. தோழர்,
  பலர் புரியாமல் பின்னூட்டம் அளித்திருக்கிறார்கள்...
  விஞ்ஞாணிகலிலும் போலிகள் இருப்பதால்... எனக்கு பிடித்த விஞ்ஞானி ஜான் சால்க் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்...

  சிவம் ஜோதி தோழருக்கு,
  மனம் அற்ற நிலை என்று எதுவும் இல்லை...
  மனம் அற்ற நிலை என்றால் மூளையின் மரணம்... அந்த நிலை வந்தால் அவன் வெறும் அணுவின் கூட்டமைப்பே

  ReplyDelete
 10. தங்கள் கருத்துகளை ஏற்கிறேன் ஜீவா.
  தொடரும் தங்கள் ஆதரவுக்கு நன்றி.

  ReplyDelete