செவ்வாய், 10 ஜனவரி, 2012

கேடு கெட்ட மானிடரே!

                                          கேடு கெட்ட மானிடரே!

பிறவி ஏன்? இன்ப துன்பங்கள் ஏன்? மரணம் ஏன்?

மனிதனுக்குச் சிந்திக்கும் திறன் வாய்க்கப் பெற்ற அந்த நாள் முதல் இந்த நாள் வரை இக்கேள்விகளுக்கு விடையில்லை.

பஞ்ச பூதங்கள் ஏன்? பிரபஞ்சம் ஏன்? உலகங்கள் ஏன்? உயிர்கள் ஏன்?...............
என்றிப்படி மனித அறிவால் விடை காண முடியாத ஏன்கள் எத்தனையோ உள்ளன.

ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்த அறிவியல் அறிஞர்கள் பலரும், சிந்தனையாளர்களும் தருகிற ஒரே பதில்..........................

“தெரியவில்லை” என்பதுதான்.

ஆராய்ந்து அறியும் திறன் இத்தகையோருக்குக் கூடுதலாக இருப்பதால்,
பெரிதும் போற்றப் படுகிறார்களே தவிர, இவர்களும் மனிதர்கள்தாம் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.

மனித உருவில் பிறந்த அத்தனை பேரும் மனிதர்கள்தான். விதி விலக்கானவர் எவருமில்லை. நாம் எல்லோருமே உண்பதும் உறங்குவதுமாய் வாழ்ந்து ஒரு நாள் மண்ணில் கலப்பவர்கள்தான்.

அதன் பிறகு என்ன ஆவோம் என்பது யாருக்கும் தெரியாது.


சிறு நீர் பெய்து மலம் கழித்து வாழ்ந்த மனித ஜென்மங்களை மகான்கள் என்றும், கடவுளின் அவதாரங்கள் என்றும் போற்றித் துதி பாடியவர்கள்...பாடுபவர்கள் மனித சமுதாயத்தின் விரோதிகள்.

அவர்களைப் பின்பற்றுவோரும் குற்றவாளிகள்தான்.

மகான்கள் என்று போற்றப்பட்ட...படுகிற அந்தச் சாதாரண மனிதர்கள்தான் முழுமுதல் கடவுளைக் கற்பித்தவர்கள்.

ஏன்? ஏன்? ஏன்? என்று விடை காண இயலாத பல கேள்விகளை எழுப்பினோம்.


நம்மைப் போன்றவர்களுக்கு.....நல்ல சிந்தனையாளர்களுக்கு.....
விஞ்ஞானிகளுக்கு விடை தெரியாத அந்தக் கேள்விகளுக்கு இந்த மகான்கள் மட்டும் எப்படி விடை அறிந்தார்கள்?


.இவர்கள் சாதாரண மனிதர்கள். [தூய்மையான வாழ்க்கை...மக்கள் நலனுக்காக வாழ்வை அர்ப்பணிப்பது போன்ற காரணங்களால் சிலர் போற்றப் படலாம். அதற்காக அவர்கள் போற்றும் கடவுளை நாம் ஏற்பது அறிவீனம்]

அறிவு பூர்வமாக எழுப்பப் படும் எந்தவொரு கேள்விக்கும் விடை தர இயலாத இவர்கள் ஞானிகள் ஆனது எப்படி?

மகான்களாக மாறியது எவ்வாறு?

கடவுளைக் கற்பித்ததால்தானே? ஆன்மா, மறுபிறப்பு, பாவ புண்ணியம் என்று கதைகதையாய்ச் சொல்லி மக்களை மயங்க வைத்ததால்தானே?

அதையெல்லாம் மக்கள் முழுமையாக நம்பியதால்தானே?

 கடவுளை அவர்கள் கருணை வடிவானவன் என்றார்கள்; என்கிறார்கள்.


விதம் விதமாக, வகை வகையாகத் தொகை தொகையாகத் திரண்டு வந்து தாக்கிய துன்பங்களிலிருந்து விடுபட முடியாமல் தவித்த மக்களுக்கு இது நல்லதொரு பற்றுக்கோடாக அமைந்தது.

கடவுளை நம்பினார்கள்; அவன் கருணை வடிவானவன் என்று எண்ணினார்கள்.அவனை அறிமுகப் படுத்திய இந்த மகான்களையே கடவுள்கள் ஆக்கி மகிழ்ந்தார்கள்.

கடவுளா? அவர் எப்படித் தோன்றினார்? ஏன்? எங்கே? என்றெல்லாம் கேள்வி கேட்கத் தவறிய...கேட்டவர்களையும் கேலிக்குள்ளாக்கிப் பழித்துப் பேசிய  முட்டாள் மனிதர்களுக்கு, கடவுள் கருணையின் வடிவானவன் என்று மகான்கள் சொன்ன போது , மறுத்துப் பேசக் குறைந்த பட்சப் பகுத்தறிவுகூட இல்லாமல் போனது.

கடவுள் தந்ததாகச் சொல்லும் கூடுதல் அறிவால் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் கூடுதல் இன்பங்களை அனுபவித்தான் மனிதன். அவ்வாறே அளவற்ற அடுக்கடுக்கான துன்பங்களையும் சுமந்து வாழ்ந்தான்; வாழ்கிறான்.

இவன் அனுபவிக்கும் துன்பங்கள், இன்பங்களைவிட கனமானவை; ஆழமானவை; அடர்த்தியானவை.

தன்னுடன் பகை பாராட்டுபவனை, பல பேர் முன்னிலையில், உயிரோடு தோல் உரிப்பது! தீயிட்டுக் கொளுத்துவது!

வஞ்சம் தீர்ப்பதற்காக, ஜென்மப் பகைவனின் கண் எதிரில்...ஊரார்  முன்னிலையில் அவன் குடும்பத்துப் பெண்களைக் கற்பழிப்பது! [இதற்கு வரலாற்றுச் சான்று உண்டு.]

கூட்டணி அமைத்து, பூக்காத இளம் மொட்டுகளைக் கடத்திச் சென்று அடைத்து வைத்து, சித்ரவதைக்கு உள்ளாக்கி இன்பம் துய்ப்பது.[’கடவுள் ஓர் அரக்கன்’, ‘இறைவியின் சீற்றம்’ ஆகிய பதிவுகளைப் படியுங்கள்]

சின்னஞ் சிறுசுகளை ஊனப் படுத்திப் பிச்சை ஏந்த வைத்து, உழைக்காமல் தின்று கொழுத்து வாழ்வது.

ஏழை அப்பாவிப் பெண்களைக் கடத்தி விபச்சாரத்தில் தள்ளுவது.

இப்படி, நினைத்தாலே நெஞ்சைப் பதற வைக்கிற கொடுஞ் செயல்களை மனிதன் செய்து கொண்டிருக்கிறான்!

வேண்டாதவர்களை விதம் விதமாகச் சித்திரவதை செய்வதில் தேர்ந்தவனாக இருக்கிறான்.

இதையெல்லாம் இவனுக்குக் கற்றுக் கொடுத்தது அனைத்திற்கும் மூல காரணமான கடவுள்தானே? [மனிதனைத் தீமை செய்யத் தூண்டுவது ஒரு தீய சக்தி என்று கதைப்பவர்கள் கயவர்கள் என்பது அறியத் தக்கது. கடவுள் காரணமல்ல. மனிதன் தானே தீச் செயல் புரிகிறான் என்று சொல்பவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். தீச் செயல்களுக்கெல்லாம் மனிதனே காரணம் என்றால் அவன் புரியும் நற்செயல்களுக்குக் கடவுள் காரணமா? மனிதர்களை முட்டாள்கள் ஆக்குவதற்கு ஓர் எல்லையே இல்லையா?]


கயமைக் குணம் கொண்ட இந்தக் கடவுளைத்தான் கருணையின் வடிவம் என்கிறார்கள்.

ஒருவனின் கண் முன்னால், அவனின் குடும்பப் பெண்ணொருத்தி மானபங்கப் படும்போதோ, அவன் பெற்றெடுத்த பெண் பிள்ளை காணாமல் போகும் போதோ அவன் படும் வேதனையைப் படம் பிடிக்க வார்த்தைகள் ஏது?

அவன் அனுபவித்த கொடுந்துன்பத்தை மறக்கடிக்க யாரால் முடியும்? எதனால் இயலும்?

மனம் ஒத்த ஆணும் பெண்ணும் ஓர் ஆயிரம் முறை...ஒரு நூறாயிரம் முறை இணைந்து பெற்ற இன்பத்தால் அது சாத்தியம் ஆகுமா?

பிஞ்சு மழலைகளைக் கொஞ்சிக் குலவுவதால் மனதில் ஆழமாய்ப் பதிந்த வேதனைத் தழும்புகள் மறைந்து போகுமா?

தன்னிலை மறந்து இயற்கை அழகை அள்ளிப் பருகுவதால் இயலுமா?

எத்தனை எத்தனை இன்பங்கள் வாய்த்து என்ன பயன்?

இம்மண்ணுலகில், ஒவ்வொரு நொடியும், வலிய உயிர்களால் தாக்கப் படும் எளிய உயிர்கள் எழுப்பும் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறதே, அந்த அவலக் குரல்....................

முட்டாள் மனிதர்களே உங்கள் செவிகளில் விழவில்லையா?

விழுந்த பிறகுமா அந்தக் காட்டுமிராண்டிக் கடவுளைப் போற்றித் துதிக்கிறீர்கள்!?

இல்லாத கடவுளைக் காப்பாற்ற எத்தனை எத்தனை மதங்கள்!


மத போதகர்களின் தூண்டுதலால் நடந்த போர்கள் எத்தனை! கலவரங்கள் எத்தனை எத்தனை!

உயிர்ப்பலிகள்................................?

கணக்கிட்டுச் சொல்ல யாரால் இயலும்?

மனிதராய்ப் பிறந்தவர்களே..................

இதையெல்லாம் மறந்துவிட்டு,  மதகுருமார்களையும் ஆன்மிகம் பேசுபவர்களையும் மகான்கள் என்றும் ஞானிகள் என்றும் போற்றுகிறீர்களே! கடவுள் கடவுள் என்று அலைகிறீர்களே!

நீங்கள் எல்லாம் மனிதப் பிறவிகள்தானா?

 நாட்கணக்கில் கழுவில் தொங்கவிட்டு, அணுஅணுவாய்த் துடித்துச் சாகச் செய்யும் அரக்கத்தனம். கும்பல் கும்பலாய்க் கப்பலில் ஏற்றி , மாற்று மதத்தவரைக் கடலில் கொட்டும் கொடூரம்!

இம்மாதிரிச் சம்பவங்கள் கணக்கு வழக்கில்லாமல் வரலாற்றில் பதிவாகியிருக்கிறதே, நீங்கள் வரலாறு படிப்பதில்லையா?


இத்தனை படு பயங்கரமான...அதி கொடூரமான துன்பங்களை மனிதனுக்கு வாரி வழங்கிய அந்த ஆளையா கருணையின் பிறப்பிடம் என்கிறீர்கள்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இனியும் எழுதுவோம்......................

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++