தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

May 18, 2012

அணுக்களா, கடவுளா?

ஆத்திக நண்பர்களே வாருங்கள்...........                              

                                       அணுக்களா, கடவுளா?

 நீங்கள் நம்புகிற கடவுள் என்பவரின் தேவை என்ன? அவர் எப்போது, எங்கே எப்படித் தோன்றினார் என்பன போன்ற கேள்விகளுக்கு நீங்கள் கடவுளுக்குச் சமமாக வைத்துப் போற்றுகிற அவதாரங்களிடமிருந்தோ ஆன்மிகவாதிகளிடமிருந்தோ உங்களிடமிருந்தோ சரியான பதில் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை.

//கடவுளுக்குத் தோற்றமோ அழிவோ இல்லை; அவர் எப்போதும் இருந்துகொண்டே இருப்பவர்// என்ற உங்கள் தரப்பிலான அனுமானத்தைத் தகர்க்கும் விதமாக, //என்றும் இருத்தலான நிலை அவருக்கு எப்படி வாய்த்தது? அந்நிலையை உருவாக்கியவர் யார்// என்று சிந்தனையாளர்கள் எழுப்பும் வினாக்களுக்கும் விடை தரப்படவில்லை.


நீங்கள் நம்புகிற கடவுளே அனைத்திற்கும் மூலகாரணமானவர் என்கிறீர்கள். அவ்வாறாயின், நம்மைத் தாக்குகிற அளப்பரிய துன்பங்களுக்கும் அவர்தானே காரணம் என்று கேட்டால், அதைக் குதர்க்க வாதம் எனச் சாடுகிறீர்கள்.

எங்களுடைய இன்னும் பல நியாயமான கேள்விகளையெல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு, கடவுளைக் காப்பாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறீர்கள்.

//பிரபஞ்ச வெளியில் உலா வரும் கோள்களும், நட்சத்திரங்களும் பிறவும் வடிவமைக்கப்பட்ட விதமும், உயிர்களின் உடலமைப்பும் அவற்றின், ஓர் ஒழுங்குக்கு உட்பட்ட இயக்கமும் எத்தனை அதிசயமானது!. இந்த அதிசயம் தானாக நிகழ்ந்திருக்க முடியாது. இதை நிகழ்த்த ஒருவர் தேவை. அவரே கடவுள்// என்று உங்கள் தரப்பு சொல்லிக் கொண்டே இருக்கிறது.

அந்த ‘அதிசயக் கடவுளை’த் தோற்றுவித்தது யார் என்ற கேள்விக்கு உங்களை வழிப்படுத்துவோரிடமிருந்து எப்போதும் பதில் வந்ததில்லை. ’புரியவில்லை’ என்று ஒப்புக் கொள்ளும் நேர்மையும் இல்லை.


கடவுளோ வேறு எதுவோ, அனைத்திற்கும் மூலகாரணமான ‘ஒன்றின்’ தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற வினாவுக்கு விடை காணும் சாத்தியம் இல்லையென்றாலும், இந்த பிரமாண்ட ‘வெளி’யில் வகைவகையான பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் இயக்கங்களையும் காண முடிகிறது.


இவை எப்படியோ தோன்றிவிட்டன. இவற்றின் ’இருப்பு’ உண்மை.

இந்த உண்மையைக் கடவுள் நம்பிக்கையாளர், மறுப்பாளர் என அனைவரும் ஒப்புக் கொள்வர்.

இதைத் தமக்குச் சாதகமாக்கி, ஏன், எப்படி போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டால் என்ன? கோள்களும் உயிர்களும் பிறவும் இருப்பது உண்மை எனின், அவற்றைத் தோற்றுவித்த ஒருவர் இருப்பது சாத்தியம்தானே? அவர்தான் கடவுள் என்று கடவுள் பற்றிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட முயல்கின்றனர் கடவுளைப் போற்றுவோர்..

அத்தகையோரிடம் நாம் முன்வைக்கும் வினா இதுதான்.........................


மையப்புள்ளி இல்லாத, நீளம் அகலம் சுற்றளவு விளிம்பு என்று எந்தவொரு அளவுகோலுக்கும் உட்படாத அதிசயிக்கத்தக்க அதிபிரமாண்டமான ‘வெளி’யில் இடம் கொண்டிருக்கும் அத்தனை பொருள்களுக்கும் உயிர்களுக்கும் மூலமாக இருப்பது கடவுள் என்னும் ஒரு ‘நபர்’தான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?


அனைத்திற்கும் ’ஒன்றே’ அல்லது ‘ஒருவரே’ மூலகாரணம் என்று தீர்மானிப்பதற்கான அடிப்படை என்ன?


பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் எழுந்த போட்டியால்...மூண்ட பெரும் போரால் ஏனையோர் அழிந்துவிட ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?

இதற்கு மிகச் சரியான பதிலை எவராலும் தர இயலாது. “தெரியாது” என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளவும் கடவுளை அனுமானித்தவர்களின் ‘அந்தஸ்து’ இடம் தருவதில்லை.

இதற்கு மாறானதொரு அனுமானத்தை நம்மால் முன்வைக்க முடியும்.


எத்தனை எத்தனை யுக காலங்கள் முயன்றாலும், மனித அறிவால் அளந்தறிய முடியாத [கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று முணுமுணுக்க வேண்டாம்] ’வெளி’யில் இடம் கொண்டுள்ள அனைத்திற்கும் மூலகாரணம் பேரறிவு சான்ற அணுக்களே என்று ஏன் சொல்லக் கூடாது?

பெரும் எண்ணிக்கையிலான அணுக்களைக் கட்டுப்படுத்த ‘ஒருவர்’ அதாவது, ‘கடவுள்’ தேவையாயிற்றே என்ற ஐயம் எழுவது இயல்பு.

ஒரு கடவுள் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு நியதியின்படி செயல்படுவாரென்றால், அது அணுக்களுக்கும் பொருந்தும்தானே?


ஒவ்வொரு அணுவும் சில நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, பிரபஞ்சப் பொருள்களையும் உயிர்களையும் உருவாக்குவதும் இயக்குவதுமான செயல்களைச் செய்கிறது எனக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளை உருவாக்கும் அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக்கூட்டங்கள் வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம்; கடவுள் என்னும் ஒற்றை நபர் அல்ல என்று நாம் அனுமானிக்கிறோம்.


இது வெறும் அனுமானம்தான். கடவுள் என்று ஒருவரை ஆன்மிகவாதிகள் அனுமானம் செய்தது போல.


காலப் போக்கில் எது உண்மை எது பொய் என்பதை அறிவியல்தான் நிரூபிக்க வேண்டும். அதுவரை, புரிந்து கொள்ள முடியாத எதையும், “புரியவில்லை” என்று ஒப்புக்கொள்வது அறிவுடையோர்க்கு அழகு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்னும் சிந்திக்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6 comments :

 1. ஐயா வணக்கம் :),
  யாரவது பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் வரவில்லை என்பதால் என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்.
  ஆன்மீகத்தை பொறுத்த வரை
  நீங்கள் எதை அனைத்திற்கும் மூலம் என்கிறீர்களோ அந்த மூலத்தைத்தான் கடவுள் என்கிறார்கள்.
  பரம "பொருள்" என்று கூறுவதையும் இதைத்தான்.
  அணு முதல் அண்டம் வரை எல்லாமே கடவுள் தான். நீங்களும் நானும் உட்பட. சிவன் வேறு ஜீவன் வேறு அல்ல.
  நான் ஏற்க்கனவே ஒருமுறை கூறியிருந்தேன் "நீங்கள் எங்கே கடவுள் இல்லை என்று சொல்லுங்கள் அவன் எங்கே இருக்கிறான் என்று நான் சொல்கிறேன்" என்று.
  அங்கு இங்கு என்று கூறாதபடி எங்கும் உள்ளன் கடவுள் (அணு)
  அணு வேறு கடவுள் வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான்.
  தங்கள் கருத்து :)

  ReplyDelete
 2. மிக்க நன்றி புரட்சிமணி.

  கடவுள் வேறு அணு வேறல்ல என்கிறீர்கள்.
  இரண்டும் வேறு வேறு என்கிறேன் நான்.
  பதிவில் நான் சரியாக விளக்கிச் சொல்லவில்லையோ என்று சந்தேகம் வருகிறது.

  ’ஒரு அணு ஒரு கடவுள்’ என்றால், நீங்கள் நினைப்பது போல இரண்டும் ஒன்றே என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது

  அனைத்திற்கும் முலமாகக் ’கணக்கற்ற அணுக்கள்’ இருக்கலாம் என்பதே என் அனுமானம்.

  கடவுள் ஒருவர் என்று சொல்லி, அவருக்கே அத்தனை நற்பண்புகளையும் உடைமையாக்கி, அவரே எல்லாம் வல்லவர் என்று சொல்வதைத்தான் நான் மறுக்கிறேன்.

  வரையறுக்க முடியாத எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் கணக்கில் அடங்காத எண்ணிக்கையில் அணுக்கள் இருக்கலாம்.

  படைப்பு, பண்பு, நன்மை, தீமை என ஒவ்வொன்றின் ஆக்கத்திற்கும் தனித்தனி [வகைவகையாக] அணுக் கூட்டங்கள் பரவிக் கிடந்து இயங்கலாம் என்றும் அனுமானிக்கிறேன்.

  நியதிகளுக்கு உட்பட்டு, தத்தமக்கு உரிய பணிகளை அவை செய்யக்கூடும் என்பதும் என் எண்ணம்.

  அன்பு கொண்டு பதிவை மீண்டும் ஒரு முறை படிக்குமாறு வேண்டுகிறேன்.

  கடவுள் எங்கு இல்லை என்று குறிப்பிடச் சொல்கிறீர்கள்.

  என் வலைப் பதிவிலுள்ள அனைத்துப் பதிவுகள் மூலமாக நான் சொல்ல நினைப்பது...........................

  கடவுள் என்று ஒருவர் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை அல்லது, உணர முடியவில்லை என்பதுதான்.

  கடவுள் இருப்பதையே நம்பாத நான், அவர் எங்கெல்லாம் இல்லை என்று எப்படிச் சொல்வேன் புரட்சிமணி?

  உரிய முறையில் விளக்கிச் சொல்லியிருப்பேன் என்று நம்புகிறேன்.

  இன்னும் நீங்கள் சொல்ல விரும்பினால் சொல்லுங்கள்.

  எனக்குத் தேவைப்படும் விளக்கங்களை...தாங்கள் வழங்கும் கருத்துகளை மனப்பூர்வமாய் ஏற்பேன்.

  பிழையிருப்பின் திருத்திக் கொள்வேன்.

  மீண்டும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 3. ஒருவரே [கடவுள்] அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார் என்று சொல்வது எதன் அடிப்படையில் என்று என் பதிவில் கேட்டிருக்கிறேன்.

  முழு முதலாக இருப்பது ‘ஒன்று’ அல்லது ’ஒருவரே’ என்று காலங்காலமாச் சொல்லிச் சொல்லி நம் மனதில் பதிந்துவிட்டது.

  அவரை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பதும் நம்முடைய மாற்ற முடியாத நம்பிக்கை ஆகிவிட்டது.

  என்னுடைய அனுமானத்தின்படி.........

  அணுக்கள் [இவற்றைப் படைத்தது யார் என்று தொடர் வினாக்கள் எழுப்பினால் யாருக்கும் பதில் தெரியாது] இயல்பாகத் தத்தமக்குரிய செயல்களைச் செய்கின்றன. அதுவே இயற்கை.

  கடவுளை வழிபடுவது போல, அணுக்களை வழிபட்டு அதற்கான பலனை யாரும் எதிர்பார்ப்பது தேவையற்றது.

  தன்னினும் மேம்பட்ட சக்தியிடமிருந்து எதையும் எதிர்பாராமல், மனிதன் தனக்குரிய கடமைகளை ஆற்றி வாழ்ந்து சாவதே இயற்கை; ஏராள எதிர்பார்ப்புகளுடன் கடவுள் என்னும ஒருவரை வழிபட்டு, வாடி வருந்திக் காலங்கழிப்பது முற்றிலும் செயற்கையானது.

  இப்படியெல்லாம் எனக்கு அனுமானிக்கத் தோன்றுகிறது, கடவுள் என்று ஒரு தனி நபரை நம்புவதைத் தவிர.

  தங்களுக்கு என் நிலைப்பாடு எற்புடையது அல்ல எனின், என்னை மன்னியுங்கள் புரட்சிமணி.

  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 4. ஐயா வணக்கம் :)
  காலதாமதமாக வருவதற்கு மன்னிக்கவும். சில வேலைகள் காரணமாக பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை.
  //’ஒரு அணு ஒரு கடவுள்’ என்றால், நீங்கள் நினைப்பது போல இரண்டும் ஒன்றே என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது//
  அதுவே உண்மை :)
  கல்லும் மண்ணும் கூட இறைத்தன்மையோடுதான் உள்ளது என்ன அதன் சக்தி நிலைகளில் சற்று வித்தியாசம் உள்ளது அவ்வளவுதான்.

  //கடவுள் ஒருவர் என்று சொல்லி, அவருக்கே அத்தனை நற்பண்புகளையும் உடைமையாக்கி, அவரே எல்லாம் வல்லவர் என்று சொல்வதைத்தான் நான் மறுக்கிறேன்.//
  இதில் நானும் உங்கள் கட்சிதான் :) சில பல மதங்கள் சுயநலங்களுக்காகவும் சில பல மதங்களில் ஆன்மீக விடயங்கள் சிதைந்தும் இருப்பதால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.

  மத்தபடி உங்களுக்கும் எனக்கும் வார்த்தையில் தான் வித்தியாசம் கருத்தில் இல்லை என்று நினைக்கின்றேன். (நீங்கள் அணு என்கிறீர்கள் நான் கடவுள் அல்லது இயற்க்கை என்கிறேன் :) )


  //கடவுள் என்று ஒருவர் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை அல்லது, உணர முடியவில்லை என்பதுதான்.கடவுள் இருப்பதையே நம்பாத நான், அவர் எங்கெல்லாம் இல்லை என்று எப்படிச் சொல்வேன் புரட்சிமணி?
  //
  நீங்கள் இருப்பதை நம்புகிறீர்கள் அல்லவா உணர்கிறீர்கள் அல்லவா? :) இதுவே இறைவனை உணர (அணுவை உணர) தொடக்க நிலை.
  யோகம் பழகி பாருங்கள் நீங்கள் உண்மையை உணரலாம். ஆன்மீக யோக நூல்களை படித்து பாருங்கள்.
  அணு எப்படி உலகம் முழுவது பரவி உள்ளதோ அப்படியே கடவுளும்.


  //தன்னினும் மேம்பட்ட சக்தியிடமிருந்து எதையும் எதிர்பாராமல், மனிதன் தனக்குரிய கடமைகளை ஆற்றி வாழ்ந்து சாவதே இயற்கை//

  இறைவனுக்கு என்னென்ன சக்திகள் உண்டு என்கிறீர்களோ(என்கிறார்களோ ) அது எல்லாமும் உங்களுக்கும் எனக்கும் சாத்தியமே. (சாவாமலும் வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு இது பற்றி வேறு சமயத்தில் பதிவிடுகிறேன்).

  //ஏராள எதிர்பார்ப்புகளுடன் கடவுள் என்னும ஒருவரை வழிபட்டு, வாடி வருந்திக் காலங்கழிப்பது முற்றிலும் செயற்கையானது.//

  வழிபாட்டை முதல் படியாக உளவியல் உளவியல் ரீதியாக மட்டும் அணுகுங்கள். அதன் உள்ளர்த்தம் புரியலாம். (வழிபாட்டில் சிலபல மூடத்தனத்தனங்கள் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.)
  நான் ஒரு அணு நீங்களும் ஒரு அணு. (என்னோட வார்த்தையில சொல்லனும்னா நானும் கடவுள் நீங்களும் கடவுள்). நீங்கள் என்னிடம் ஒன்று கேட்க்கிறீர்கள் நான் உங்களுக்கு கொடுத்தால் அது அணு கொடுத்ததாகத்தான் அர்த்தம் அல்லவா. :) (இது மிகவும் ஒரு சுலபமான விளக்கம்....சற்று சிந்தித்து பார்த்தால் இதன் உண்மை உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன். வழிபாடு மிக முக்கியம் என்று நான் கூறவில்லை. அது இல்லாமலும் இருக்கலாம்,வாழலாம். நன்றாகவும் வாழமுடியும்.இது பற்றி வேறு சமயத்தில் பதிவிடுகிறேன் )

  //தங்களுக்கு என் நிலைப்பாடு எற்புடையது அல்ல எனின், என்னை மன்னியுங்கள் புரட்சிமணி.//
  இதற்க்கு மன்னிப்பு தேவையில்லை. ஏன் எனில் நம்முடைய கருத்துக்கள் ஒன்றுதான் என்று நினைக்கின்றேன்.
  நீங்களும் கடவுள் தான் நானும் கடவுள் தான் (நீங்களும் அணுக்களால் ஆனவர்தான் நானும் அணுக்களால் ஆனவர்தான் :) )
  முடிந்த வரை மற்ற கடவுளை கண்டு ஏமாறாமல் இருப்போம் :)

  தங்களுக்கு இறைவனின் இருப்பபை பற்றி (அணுவின் இருப்பை பற்றி :) ) மாற்று கருத்து இருக்காது என நினைக்கின்றேன். பிற விடயங்களை நீங்கள் நம்புவது கடினம் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

  அக ஒளியை உங்களுள் காணும் வரையில் எதையும் உங்களால் நம்பமுடியாது. ஆனால் அதை கண்டபிறகு.....:) :)

  (உலக மதங்கள் எல்லாம் உங்களை தான் (பரமசிவம்) இறைவன், பரம அணு என்றழைக்கிறது (ஆமா சார் யூதம்,கிருத்துவம், இசுலாம், இந்து மதம் எல்லாம் )
  நீங்கள் என்னமோ :)

  எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் நேரமின்மையால் மீண்டும் மற்றுமொரு நாளில் சந்திப்போம்.
  கருத்தை தெரிவிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு மிக்க நன்றி ஐயா :)

  ReplyDelete
 5. நன்றி புரட்சிமணி.

  தங்களின் கருத்துகள் மிக ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு.

  அணுவும் கடவுளும் ஒன்றுதான் என்கிறீர்கள். இக்கருத்து, என்னை இன்னும் தீவிரமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.

  தங்களின் மன உணர்வுகளையும் தாங்கள் வெளியிட்ட கருத்துகளையும் நான் மிகவும் மதித்துப் போற்றுகிறேன்.

  அவை பற்றித் தொடர்ந்து சிந்தித்துத் தெளிவு பெற முயல்வேன்.

  பிடிவாதம் காரணமாகவோ, பிரபலமடைவதற்கோ நான் கடவுளை மறுக்கவில்லை.

  கருணை மிக்கவராக ஒரு கடவுள் இருந்தால், மகிழ்ச்சி அடையாதார் யார்?

  இளம் வயதிலிருந்து, சொந்த வாழ்க்கையிலும் நான் அறிந்த பிறர் வாழ்க்கையிலிருந்தும் பெற்ற மிகக் கசப்பான அனுபவங்களே கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆழமாகவும் விரிவாகவும் சிந்திக்கத் தூண்டின. அதன் வெளிப்பாடே என் பதிவுகள்.

  மீண்டும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 6. ஐயா // நீங்களுமா இப்படி!
  :-)

  ReplyDelete