அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஜோதிடம் ஒரு கலையா, இல்லை, கொலை ஆயுதமா???

 இது, ஜோதிடப் பித்தேறிய பெற்றோருக்கான சிறுகதை!!! [திருத்தப்பட்டது]

ரகர் வந்து போன சிறிது நேரத்தில், வெளியே கிளம்பினார் வேல்சாமி.

“தரகர் சொன்ன வரனுக்கும் அக்காவுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கப் போறீங்களா அப்பா?- கேட்டவள் அவரின் கடைசி மகள் யாழினி.

“ஆமாம்மா”.

“கொஞ்சம் உட்காருங்க”.

உட்கார்ந்தார் வேல்சாமி.

“மனசைத் திறந்து சொல்லுங்கப்பா. மூனும் பொண்ணாப் பெத்திருக்கீங்களே, ஏம்ப்பா”.

“அது வந்தும்மா...........” உடைந்து சிதறிய வார்த்தைகள் தொண்டையை அடைத்துக் கொண்டன.

“அம்மா சொல்லியிருக்காங்கப்பா.  உங்க ரெண்டு பேர் ஜாதகப்படி, முதல் குழந்தை ஆண்பிள்ளைதான்னு நம்புனீங்க. அது நடக்கல. பெரிய அக்கா சாரு பிறந்ததுக்கு அப்புறமும் பையன் வேணும்னு ஆசைப்பட்டீங்க. ஜோசியரைப் பார்த்தீங்க. அடுத்தது பையன்தான்னு அவர் அடிச்சிச் சொன்னாரு. ஆனா, பையனுக்குப் பதிலா, அகல்யா அக்கா பிறக்கவும் ஆடிப் போனீங்க. அப்புறமும் ஆண் வாரிசு ஆசை உங்களுக்குப் போகல. ஒரு வி.ஐ.பி.ஜோதிடரைத் தேடிப் போய் உங்க ஆதங்கத்தை வெளிப்படுத்தினீங்க. அடுத்தது ஆண் சிங்கம்தான்னு அவர் உத்தரவாதம் தந்தாரு. என்ன ஆச்சு?.............................”

பேசுவதை நிறுத்தி, பெத்த அப்பன் முகத்தை ஒருவித விஷமப் புன்னகையுடன் ஆராய்ந்தாள் யாழினி.

“மேலே சொல்லும்மா”. பின்னாலிருந்து அம்மாவின் குரல். அவருக்குப் பின்னால் சாருவும் அகல்யாவும்.

“.....நீங்க எதிர்பார்த்த ஆண் சிங்கத்துக்குப் பதிலா ஒரு பொட்டச் சிறுக்கி  நான் பொறந்து தொலைச்சிட்டேன். இதெல்லாம் ஒரு ’ஃப்ளாஷ் பேக்’தான். நான் சொல்ல வந்தது என்னன்னா, ஜோசியத்தை நம்பி மூனு பொம்பளப் புள்ளைகளைப் பெத்து ஏமாந்த நீங்க, அதே ஜோசியத்தை நம்பி அவங்களக் கரையேத்த நினைக்கிறீங்களே, இது நடக்குமா அப்பா?

கல்யாணம்கிற ஓட்டப் பந்தயத்துல, ராசிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், செவ்வாய் தோஸம், புதன் தோஸம், மூலம், கேட்டை, கூமுட்டை, வரதட்சணைன்னு பல தடைகளையும் தாண்டி ஜெயிச்சி வந்தாத்தான்  ஒரு கன்னி கழுத்தில் ஒரு ராஜகுமாரன் மாலை சூட்டுவான். நடுவுல தடுக்கி விழுந்துட்டா அவ நித்திய கன்னிதான். உங்க மூனு பொண்ணுகளும் நித்திய கன்னிகளாவே இருந்துடட்டும்னு நினைக்கிறீங்களா?”

சொல்லி முடித்தாள் யாழினி.

”ஜோதிடமே பொய்யின்னு சொல்றியா சாலினி?” -கேட்டார் வேல்சாமி.

“திருமணம் செய்துக்கிறதுக்கான தகுதியும் விருப்பமும் இருந்தும்கூட, திருமணம் ஆகாத முதிர் கன்னிகள், முதிர் காளைகளின் எண்ணிக்கை கூடிட்டே போகுது. அவங்கள்ல பல பேர் மனநிலை பாதிக்கப்பட்டவங்களாக இருக்காங்க. கணிசமானவங்க தற்கொலை செய்துட்டிருக்காங்க. திருமண வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து தப்பான வழிகளில் சுகம் தேடிக் கெட்டுப் போனவங்களும் நிறைய. இதுக்கான காரணங்களில், முதல் காரணம் இந்த ஜாதகப் பொருத்தம்தான். அதனால, ஜோதிடம் பொய்யின்னு நான் சொல்ல வரல. அதைப் பத்தின கவலையும் எனக்கில்ல. ஜாதகப் பொருத்தம் பார்க்கிறதுதான் தேவையில்லைன்னு நான் சொல்ல வர்றேன். ஒரு பொண்ணா...அதுவும் உங்க மகளா இருந்துட்டு இப்படி அதிகப்பிரசிங்கித்தனமா பேசினதுக்கு என்னை மன்னிச்சுடுங்கப்பா.” என்றாள் சாலினி.

வேல்சாமி, சிறிது நேரம் மவுனத்தில் புதையுண்டார்.

கையிலிருந்த ஜாதகத்தைப் பரண் மீது கடாசினார்.

”உங்க குடும்பம் கவுரவமானதுன்னு எனக்குத் தெரியும். உங்க மூத்த பொண்ணையும் எனக்குப் பிடிச்சிருக்கு. ஜாதகப் பொருத்தம் இல்லேங்கிறதைப் பத்தி எனக்குக் கவலை இல்லைன்னு சொன்ன அந்த சேலத்துப் பையன் வீட்டாரிடம் என் சம்மத்தத்தைச் சொல்லிட்டு வர்றேன்.”

புத்துணர்ச்சியுடன் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டார் வேல்சாமி.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000




.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக