புதன், 8 ஆகஸ்ட், 2012

கடவுளைக் காட்டிய மகான்?!?!

               கடவுளைக் காட்டிய மகான்?!?!

மனித மூளையில் கடவுள் பற்றிய சிந்தனை அரும்பிய நாளிலிருந்து இந்நாள் வரை, ‘கடவுள் உண்டா, இல்லையா?’  என்னும் விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அனைவரும் ஏற்கும்படியான ‘முடிவு’ இதுகாறும் எட்டப்படவில்லை.

“அனைத்தையும் இயக்கவல்ல, ஆறறிவைக் காட்டிலும் மேம்பட்ட அறிவு படைத்த,  ’விவரிப்பு’க்கு அப்பாற்பட்ட  ஏதோ ஒன்றன் ’இருப்பை’க் ’கடவுள்’ என நான் ஏற்கிறேன்; அவரை வழிபடுகிறேன். அதனால் விளையும் பயன் பற்றி நான் கவலை கொள்ளவில்லை” என்று ஒரு கடவுள் நம்பிக்கையாளர், அதாவது ஓர் ஆத்திகர் சொன்னால், அவர் மீது எவ்வகையிலும் நாம் குற்றம் சுமத்த இயலாது.

அவர் பிறரிடம்,  ”சிந்தியுங்கள். உங்களுக்கும் நம்பிக்கை பிறக்கலாம்” என்று பரிந்துரை செய்யும் போதும் அவர் குற்றமிழைத்தவர் ஆகமாட்டார். “கடவுளை  வழிபடாவிட்டால் துன்பங்களிலிருந்து விடுபட முடியாது; பல பிறவிகள் எடுத்துப் பாவங்கள் இழைத்து இறுதியில் நரகம் சேர்வாய்” என்பதான பிரச்சாரங்களில்  இறங்குகிற போது, கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தும் வியாபாரி ஆகிறார் அவர்.

“கடவுளை நான் பார்த்திருக்கிறேன்” என்று மக்களிடம் அப்பட்டமாகப் பொய்யுரைக்கும் போது அவர் மக்களுக்குத் தீங்கிழைக்கும் குற்றவாளி ஆகிறார்.

பொய்களை மெய் போலச் சொல்லிச் சொல்லி, பிறர் மூளையில் அதைப் பதியச் செய்து, அறிவை ஊனமுறச் செய்வதும் ஒரு குற்றச் செயல் அல்லவா??

இம்மாதிரிக் குற்றச் செயல் புரிந்தோர் இம்மண்ணில் கணிசமாக வாழ்ந்திருக்கிறார்கள்; இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர்,  ’மகான்கள்’ என்று போற்றப்படுகிறார்கள்.

 பாரத தேசத்தின் மிகப் பெரிய மகானாகப் போற்றப்பட்டவர் அவர் [மதம், மதவாதிகள் பெயர்கள் தவிர்க்கப் படுகின்றன]. ”விழிமின்! எழுமின்!” என்று இளைஞர்களிடையே விழிப்புணர்வைத் தூண்டிய இவரின் சீடரைக் கொண்டு இவரை நினைவு கூர்வது மிக எளிது.

இவர் கடவுளைக் கண்களால் கண்டவர் என்று இவரைப் பின்பற்றுவோர் சொன்னார்கள்; இன்றும் சொல்கிறார்கள்.

கடவுளை மனதில் இருத்தி, தன்னை இழந்த நிலையில் இவர் தியானத்தில் மூழ்கியிருந்த போது, ஒரு குதர்க்கவாதி இவர் தொடை மீது நெருப்புத் துண்டத்தை வைத்துச் சோதிக்க, சிறிது நேரம் கழித்தே இவர் விழித்துப் பார்த்தாரென்று சொல்லி, இவரின் ஆழ்ந்த பக்தியுணர்வை இன்றளவும் சிலாகிப்பவர்கள் உண்டு!

இவரைச் சந்தித்த ஒரு நாத்திகன், [‘குதர்க்கவாதி’ என்றே வைத்துக் கொள்ளுங்களேன்] ”நீங்கள் கடவுளைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். உண்மையா?” என்றான்.

“ஆம்” என்றார் மகான்.

“எனக்குக் காட்ட முடியுமா?”

“முடியும். என் பின்னால் வா”.

அவர் முன்னே செல்ல, குதர்க்கவாதி பின்னால் சென்றான்.

இருவரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற ஓர் ஆற்றை அடைந்தார்கள்.

ஆற்றுக்குள் இறங்கினார் மகான்.

அவரைப் பின் தொடர்ந்த குதர்க்கவாதி, “கடவுளைக் காட்டுவதாகச் சொல்லி ஆற்றுக்குள் இறங்குகிறீரே?” என்று தன் ஐயத்தை வெளிப்படுத்தினான்.

”கடவுளை ஆற்று நீருக்குள் பார்க்கலாம்” என்ற மகான், “நீருக்குள் முழுகிப் பார்” என்றார்.

மிரட்சியோடு நீருக்குள் மூழ்கிய அவனை மேலே எழ முடியாதவாறு அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.

நேரம் செல்லச் செல்ல குதர்க்கவாதிக்கு மூச்சு முட்டியது. தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடினான். மகானோ தன் பிடியைத் தளர்த்தவே இல்லை.

’இந்நிலை இனியும் நீடித்தால் இவன் உயிர் பிரியும்’ என்று நினைத்த அவர், தன் பிடியைத் தளர்த்தினார்.

’குபீர்’ என்று மேலெழும்பிய குதர்க்கவாதி, சிறிது நேரம் மூச்செறிந்து ஆசுவாசப் படுத்திக் கொண்ட பின்னர், “கடவுளைக் காட்டுவதாகச் சொல்லி என்னைக் கொன்றுவிடப் பார்த்தீரே?” என்றான் குரலில் சூடு பறக்க.

அவன் கேள்வியை அலட்சியப் படுத்திய மகான், “நான் உன்னை விடுவித்ததும் அசுர வேகத்தில் மேலெழும்பினாயே, அது ஏன்?” என்றார்.

“தாமதித்திருந்தால் என் உயிர் போயிருக்கும்” என்றான் அவன்.

“ நீ உன் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இத்தனை வேகம் காட்டினாய். இல்லையா?”

“ஆம்”

“இதே வேகத்தைக் கடவுளைக் காணும் முயற்சியில் நீ காட்டினால் அவரைக் காணலாம்” என்றார் அவர்.

குதர்க்கவாதி தலை குனிந்து நின்றான் என்றோ, மகானிடம் மன்னிப்புக் கோரினான் என்றோ உண்மைச் சம்பவம் என்று சொல்லப் படுகிற இக்கதை முற்றுப் பெறுகிறது.

இக்கதை மிகப் பல முறை மேடைகளில் சொல்லப்பட்டது. மிகப் பலர் கேட்டு ரசித்தார்கள். மகானின் மதி நுட்பத்தைப் போற்றினார்கள்.

அவர்கள் எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

குதர்க்கவாதிக்குக் கடவுளைக் காட்டுவதாகச் சொன்ன மகான்  ஏன் காட்டவில்லை?

மிகக் கடுமையாக முயற்சி செய்தால் கடவுளைக் காணலாம் என்று சொல்வதற்கு ஒரு மகான் தேவையா?

அவ்வாறு முயன்று யாரேனும் கடவுளைக் கண்டதுண்டா? மகான் அதற்கு ஆதாரம் காட்டினாரா?

”ஓர் அடர்ந்த காட்டுக்குள் தனியாகச் செல்கிறாய். ஒரு புலி விரட்டுகிறது. தப்பி ஓடுவதில் நீ எத்தனை வேகம் காட்டுவாய்? அப்படியொரு வேகத்தைக் காட்டினால்........”

”அருகில் யாருமில்லை என நினைத்து ஓர் இளம் பெண்னைக் கட்டியணைத்துவிட்டாய். அவள் அபயக் குரல் எழுப்ப, எங்கிருந்தோ பத்து பேர் வந்துவிட்டார்கள். அவர்களிடம் பிடிபடாமலிருக்க நீ ஓடுகிறாய். அப்போது காட்டுகிற வேகத்தை..............”

இப்படி இன்னும் நிறையச் சொல்லலாம். ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்தால் போதும். அதீத ஞானம் அவசியமில்லை. ஞானிகளும் மகான்களும் நமக்குத் தேவையில்லை.

#################################################################################


























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக