ஞாயிறு, 28 அக்டோபர், 2012

நரிகளிடம் கற்போம் ! புறாக்களைப் போற்றுவோம் !!

அதிசயம்! இது பேராச்சரியம்!! 

சிறுகதைகள் தொடர்பாக மட்டுமே பதிவு எழுதிவரும் நான், இன்றைய ‘வார மலரில்’ [28’10’12] டாக்டர் கோவிந்தராஜ் [சென்னிமலை] அவர்களின் தொடர் கட்டுரையைப் படிக்க நேர்ந்ததன் விளைவாக, மிதமிஞ்சிய ஆர்வத்துடன், ஒரு மாறுபட்ட இடுகையை உங்களுடன் பகிர்கிறேன்..........

’நரி, நாய் இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், ஒரு வாலிப ஆண் நரி, ஒரு இளைய பெண் நரியை, ஏதோ ஒரு வகையில் ஈர்த்துப் புணர்ந்துவிட்டால், ஆயுசுக்கும் அவள்தான் அதற்கு ஆதர்ச மனைவி.

இப்படி ஜோடி சேர்ந்த பின்பு ’மிஸ் யூனிவர்ஸ்’ நரியே வந்தால்கூட, நம் ஆண் நரியார், தடம் பிறழாமல் மனைவியே கதியென்று ஏகபத்தினி விரதனாக வாழ்வார்!’

இப்படி, மனிதன் உட்படப் பிற உயிரினங்கள் பின்பற்ற வேண்டிய நரி இனத்தின் ‘கற்பொழுக்கத்தை’க் கண்டறிந்து சொன்ன டாக்டர், மேலும் ஓர் அதிசயத்தை முன் வைத்து, வியப்பின் எல்லைக்கே நம்மை இட்டுச் செல்கிறார்.

‘இணை சேர்ந்துவிட்ட பெண் நரியைப் பிற ஆண் நரிகள் ஒரு போதும் அணுகா. அப்பப்பா.....கிரேட் ஆச்சரியம்!’ [நாயைப் போலவே, புணர்ச்சியின் போதான ’இழுபறி’ அவஸ்தை நரிக்கும் உண்டு என்பது கொசுறு தகவல்!]

நீண்ட நேர வியப்பிலிருந்து விடுபட்ட பிறகு எனக்குள் எழுந்த  கேள்விகள்.......

இணை சேர்ந்த ஜோடியில் ஒன்று, ஏதோ காரணத்தால் இறந்துவிட்டால், தனிமையில் தவிக்கும் மற்றொன்று,  ’இணையை இழந்த புறாவைப் போல’ ஒரு புதிய இணையைத் தேடிக் கொள்ளும்தானே?

நரி இனம் போல, இவ்வாறு நல்லொழுக்கத்துடன் வாழும் மற்ற விலங்கினம் எது, அல்லது எவை? [விரும்பினால் / இயன்றால் ஒரு பட்டியல் போடுங்களேன்]

ஒட்டு மொத்த மனிதர்களும் நரிகள் போலவும் புறாக்கள் போலவும் வாழும் நாள் வருமா? எப்போது?

************************************************************************************************


சனி, 20 அக்டோபர், 2012

பழைய குமுதத்தில்[?] திருடிய [படித்த], ‘சிரிப்பு’க் கதை!

என் சொந்த நடையில்...’live’ ஆக...

கதைத் தலைப்பு:  “உங்களுக்குப் பக்கத்தில்.....”

கதாசிரியர்:             “எங்கிருந்தாலும் வாழ்க!”

அன்று முகூர்த்த நாள்.

மக்கள் வெள்ளம் பேருந்து நிலையத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

அங்கு நிற்கும் பஸ்களைவிட, நிற்பது போல் ‘பாவ்லா’ காட்டிவிட்டுப் பறந்துகொண்டிருப்பவையே அதிகம்.

எப்படியோ தொத்திக் கொண்டால் போதும் என்று, எத்தனையோ உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டு மனம் சலித்துப் போன மகானுபவர்களைப் பார்த்து நானும் ஒரு முடிவுக்கு வருகிறேன்.

பயணத்தை ஒத்திப் போடுவதுதான் அது. 

வீடு நோக்கி நடக்கலானேன். அப்போது.....

“சார்” என்னும் அழைப்பு, ‘சடக்’கென மிதிக்கப்பட்ட ‘ஏர் பிரேக்’காக என்னைத் தடுத்து நிறுத்துகிறது.

திரும்பிப் பார்க்கிறேன்.

என்னை அழைத்தது ‘குயில்’ என நான் நினைத்திருக்க, வண்ண ’மயில்’ ஒன்று என்னருகே, மிக நெருக்கமாக நின்றுகொண்டிருக்கிறது!

“சார், நீங்க சென்னைக்கா?”. செழித்த கன்னங்குழியச் சிரித்துக் கொண்டே கேட்கிறது அந்தப் பஞ்சவர்ணக் கிளி!

“சென்னைக்கென்ன, உன் முகவரி தெரிஞ்சா அங்கேயும் வரக் காத்திருக்கிறேன்” என்று சொல்ல நினைக்கிறேன்.

இப்படித் தத்துப்பித்தென்று எதையாவது நினைப்பது எனக்குச் சாதாரணம். அதை வெளியே சொல்வது அசாதாரணம்.

கிளி தொடர்ந்து கொஞ்சுகிறது. “உங்களோடு சேர்த்து, சென்னைக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தருவீங்களா? ப்ளீஸ்.....”

நான் கூட்டத்தைக் கண்டு மிரண்டு போய் வீடு திரும்ப நினைக்கும் போது உறங்கிக் கொண்டிருந்த என் ஆண்மை விழித்துக் கொள்கிறது. அலைகடலெனப் புரண்டுகொண்டிருந்த ஜனக் கூட்டத்தை ஒரு முறை அலட்சியமாகப் பார்த்துக் கொள்கிறேன்.

“ஒரு டிக்கெட்தானே, கவலைப் படாதீங்க” என்று சொல்லிக் கொண்டே சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டு, ‘கோதா’வில் இறங்கத் தயாராகிறேன்.

“இங்கிருந்து சென்னைக்கு எத்தனை கிலோமீட்டர் சார்?” மயில் அகவுகிறது.

“இருநூத்திச் சொச்சம்”.

“வெரி லாங் ஜேர்னி. நல்ல வேளை உங்க துணை கிடைச்சுது”. அவள் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

“ஐயோ, துணை கிடைச்சதுன்னு சொல்றாளே! கடவுளே, ரெண்டு டிக்கெட்டுக்கு வழி பண்ணிடு. உனக்கு லட்சார்ச்சனை பண்றேன்” என்று என் குல தெய்வத்தை மானசீகமாய்த் தொழுகிறேன்.

“சார், இன்னொரு முக்கியமான விசயம்.....” என்று என் கவனத்தை ஈர்த்தவள், “தூரப் பயணம் இல்லீங்களா. ஒரு ஓரமா இடம் பிடிச்சிட்டா வசதியா இருக்கும்” என்கிறாள்.

 ‘வசதியா இருக்கும்’ என்ற வாசகத்தை மட்டும், கிறங்கும் குரலில் இரண்டு முறை சொல்கிறாள்.

இனம் புரியாத இன்ப உணர்வு, ‘ஜிவுஜிவு, என்று என் உடம்பு முழுக்கப் பரவிக் கொண்டிருக்கையில்.....................

“டிக்கெட் வாங்கின உடனே, நீங்க பஸ் ஏறி, ஜன்னல் ஓரத்தில் இடம் பிடிச்சி உங்களுக்குப் பக்கத்திலேயே ஒரு இடம் போட்டுடுங்க” என்கிறாள்.

எனக்குள்  திடீர்க் குழப்பம்.

’ஒரு வயசுக் குமரி, முன்பின் தெரியாத வாலிபனான என் பக்கத்தில் இடம் போடச் சொல்கிறாளே, மன நிலை பாதிக்கப் பட்டவளோ?’

அவளைக் கூர்ந்து ஆராய்கிறேன்.

தெளிவோடுதான் காணப்படுகிறாள். “என்ன சொன்னீங்க? எனக்குப் பக்கத்திலா?” என்கிறேன்.

“ஆமாங்க. உங்களுக்குப் பக்கத்தில்தான்”

‘பக்கத்தில்’ என்ற வார்த்தைக்கு, செம அழுத்தம் கொடுத்துச் சொல்கிறாள்.

அடுத்த வினாடியே,  பீர் குடித்த ரேஸ் குதிரையாக நான் திணவெடுத்து நிற்கிறேன். ”இரண்டு டிக்கெட்டுகள் வாங்கியே தீருவேன்” என்று சபதமும் எடுக்கிறேன்.

”சார், பஸ் வருது” அவள் அலறுகிறாள்.

பேருந்திலிருந்து இறங்கி நின்ற நடத்துனரைக் கண்டதும் எனக்குள் ‘குபீர்’ உற்சாகம்.

கண்டக்டர், என் பால்ய நண்பன்!

“டேய் வாசு நீயா?” என்னை மறந்து கூச்சலிடுகிறேன்.

“ஆமாடா. எங்கே போகணும்?” என்கிறான் வாசு.

“சென்னைக்கு. ரெண்டு டிக்கெட்” என்று இரு விரல் காட்டிவிட்டு, ”இடம் பிடிக்கிறேன். நீ மெல்ல ஏறு” என்று உரிமையுடன் என் தேவதையிடம்  சொல்லிவிட்டுப் பேருந்தில் பாய்கிறேன்.

அடுத்து நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் பொறாமையில் வெந்து புழுங்குவீர்கள்.

இருவர் மட்டுமே அமரக்கூடிய ஒரு சீட்டே காலியாக இருக்கிறது!

கைக் குட்டையால் தூசு தட்டி இடம் போட்டுவிட்டு அவள் வருகையை எதிர்பார்த்துத் திரும்புகிறேன்.

என் உடம்பெங்கும் லேசாக வியர்க்கிறது; மெலிதான பதற்றம்; தடுமாற்றம்!

ஆமா, அவள் ஒரு கிழவியைக் கைத்தாங்கலாக அழைத்து வருகிறாளே, எதற்கு?

இருக்கையை நெருங்கியதும், “பாட்டி, நீ ஜன்னலோரமா உட்கார்ந்துக்கோ. நான் சொன்னேனே அந்த ஜெண்டில்மேன் இவருதான். சென்னை வரைக்கும் உனக்குத் துணையா இருப்பாரு” என்றவள், என்னைப் பார்த்து, ”சென்னையில்தான் என் அண்ணா வீடு இருக்கு. பாட்டி அங்கேதான் வர்றாங்க. அவங்களைத் தனியே எப்படி அனுப்புறதுன்னு கவலைப் பட்டுட்டிருந்தேன். அந்த ஆண்டவன்தான் உங்களை இப்போ அனுப்பி வெச்சிருக்கார். ரொம்ப நன்றி பிரதர். பை......” என்றவள் என் பதிலை எதிர்பாராமல் நடையைக் கட்டினாள்.

என் நிலை.............?

உங்கள் மனம் போனபடி கற்பனை செய்து சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கள்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு: தொடர்ந்து எழுதப்படும் ‘கதை விமர்சனம்’, படிப்போரைச் சலிப்படையச் செய்யும் என்பதால், மாற்றம் வேண்டி இச்சிறுகதை!

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000










செவ்வாய், 16 அக்டோபர், 2012

குமுதம், விற்பனையில் ’நம்பர்1’ ?

இரண்டாம் இடத்தில் விகடனா, குங்குமமா?

குமுதம், விகடன், குங்குமம் ஆகிய மூன்று முன்னணி வார இதழ்களுமே தத்தம் அட்டையில், ‘நம்பர் 1’ வார இதழ் என்று போட்டுப் பீத்திக் கொள்வதால், தமிழ் வாசகர் உலகம் நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருக்கிறது!

”எனக்கே முதலிடம்” என்று இவர்கள் ‘டமாரம்’ அடிப்பதை நினைத்து அறிவு ஜீவிகள் சிரிப்பாய்ச் சிரிப்பார்களே என்ற உறுத்தல் இவர்களில் எவருக்குமே இல்லை.

மற்ற மொழிப் பத்திரிகைகள் எப்படி?

எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தானோ?!

A B C [Audit Bureau of Circulation / பத்திரிகைகளைத் தணிக்கை செய்து, அவற்றின் விற்பனை பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிடும் நிறுவனம்] தரும் புள்ளிவிவரங்களை முழுமையாக வெளியிடும் நாகரிகமும் இவர்களிடம் இல்லை.

அப்புறம் எப்படி இந்த இதழ்களின் தர வரிசையைத்  தெரிந்து கொள்வது?

தமிழ் வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகள் பற்றி, அடுத்தடுத்து நான் எழுதிய பதிவுகளுக்குக் கிடைத்த ‘பக்கப் பார்வைகளை’க் [ஹிட்ஸ்] கவனித்த போது, ஏதோ புரிவது போலிருந்தது.

குமுதம் இதழைக் கடுமையாகச் சாடி, ‘குமுதமே! திருந்து...திருத்து!’ என்னும் தலைப்பில் நான் வெளியிட்ட பதிவுக்கான ‘பார்வை’, முதல் நாளில் மட்டும் 1800 ஐக் கடந்தது; மறு நாளும் 1200 ஐத் தாண்டியது!

குமுதம் குறித்த மற்ற பதிவுகளுக்கும் 1500க்குக் குறையவில்லை.

இதே வேளையில், விகடன் கதைகள் குறித்த எந்தவொரு பதிவுக்கான  ஹிட்ஸும் 800 ஐத் தாண்டியதில்லை.

குங்குமம் பதிவுகளுக்கான ‘பார்வைகள்’ 500க்குள்.

கல்கியையும் பாக்கியாவையும் இணைத்து எழுதிய பதிவுக்கும் அதே எண்ணிக்கைதான்.

பிற தலைப்பிலான பதிவுகள் 300 ஐத் தாண்டுவதற்கே மூச்சுத் திணறின!

ஆக, என்னுடைய வலைத்தளப் பதிவுகளுக்கான ஹிட்ஸைக் கொண்டு இதழ்களின் விற்பனையைக் கணித்தால்..........

தமிழ் வார இதழ் உலகின் ‘முடி சூடா மன்னன்’ ஆகக் குமுதம் திகழ்வதை அறிய முடிகிறது!

குமுதத்திற்கு அடுத்த இடத்தில் விகடனும், அதற்கு அடுத்த இடத்தில் குங்குமமும் இருப்பதாகத் தெரிகிறது.

விற்பனையை வைத்து, இதழ்களை வரிசைப் படுத்துவதற்கு இன்னொரு வழிமுறையும் உண்டு. அது?

இதழில் இடம்பெறும் விளம்பரங்கள்.

கீழ் வரும் பட்டியலைக் கவனியுங்கள்.

குமுதம் [17.10.12]-----------------------26 பக்கம் [நிறுவனத்தின் பிற   பத்திரிகைகளுக்கான விளம்பரங்கள் நீங்கலாக]

விகடன் [17.10.12].......................11 பக்கம்

குங்குமம்[15.10.12].....................15    “

ராணி [  .09.12]..............................9    “

கல்கி [30.09.12].............................8   “

பாக்யா[செப்28-அக்04]...............  3   “

விளம்பரம் பெறுவதிலும் குமுதத்தின் சாதனையைப் பிற இதழ்கள் நெருங்கவே முடியவில்லை என்பதை இப்பட்டியல் புலப்படுத்துகிறது. [ஒரு இதழின் விற்பனையைக் கணக்கிட்டுத்தான் வணிக நிறுவனங்கள் விளம்பரம் தருகின்றன]

மிக அதிக ஹிட்ஸ், மிக அதிக விளம்பரம் பெறும் இதழ் என்ற வகையில், குமுதம் மட்டுமே தமிழ் வார இதழ்களில் ’நம்பர் 1’ தகுதியைப் பெற்றுள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

ஹிட்ஸ் பெறுவதில், குங்குமத்தை முந்திய விகடன், விளம்பரம் பெறுவதில் பிந்திவிட்டது.

உண்மையில், நெ.2 இடத்தைப் பெறுவது இந்த இரண்டில் எது என்பதை அறிய, மேற் சொன்ன இரண்டு ‘வழி’கள் போதா என்பது தெரிகிறது.

ராணியும் கல்கியும் சம அளவில் விளம்பரம் பெறுகின்றன எனினும் [ராணியில் விளம்பரங்கள் சீரான எண்ணிக்கையில் உள்ளன. கல்கியின் சில இதழ்களில் மிகக் குறைந்து காணப்படுகின்றன]..........................

ராணி, பட்டிதொட்டிகளில்கூடக் கிடைக்கிறது; கல்கி, நகர்ப்புறங்களில், குறிப்பிட்ட சில கடைகளில் மட்டுமே கிடைக்கிறது என்பதைப் பார்க்கும் போது, விற்பனையில் 4 ஆவது இடம் ராணிக்கே என்று உறுதியாகச் சொல்லலாம்.

பாக்யாவில், விளம்பரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனினும், அதிக எண்ணிக்கையிலான கடைகளில் அது விற்பனைக்குத் தொங்கவிடப்பட்டுள்ளதைக் காணும்போது, அதுவும் கல்கியை மிஞ்சிவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

எது எப்படியோ, மற்ற இதழ்களை வரிசைப் படுத்துவதில் தெளிவற்ற நிலை இருந்தாலும்....................

தமிழ் வார இதழ்களில் ’நம்பர் 1’ இடம் குமுதத்துக்கே என்று தயங்காமல் தமுக்கடித்துச் சொல்லலாம்!

=========================================================================================================================

குறிப்பு
: ’நம்பர் 1’ குமுதத்துக்கு ஜால்ரா போட்டுத் தமிழ்மணம் 'சூடான இடுகை’ வரிசையில் முதலிடம் பிடிக்கலாம் என்னும் ஆசையெல்லாம் இந்த ‘அறுவை’க்கு இல்லை. நம்புங்கள்.

=========================================================================================================================















வெள்ளி, 12 அக்டோபர், 2012

குமுதம்[17.10.12] இதழைக் ’குப்பைத் தொட்டி’ ஆக்கிய எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

'நம்பர்1' குமுதத்தில் 'நம்பர்1' எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் சிறுகதை!

ராஜேஷ்குமார், தமிழின் நம்பர் 1 புனைகதை எழுத்தாளர் மட்டுமல்ல; ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதினங்கள் [நாவல்கள்] எழுதிச் சாதனை நிகழ்த்தியவர்;

இவரது பங்களிப்பில் கணக்கற்ற சிறுகதைகளும் உண்டு

இவர் கதைகளை வெளியிடாத பருவ இதழ்களே இல்லை எனலாம்.

அந்த அளவுக்குப் ‘பிரபலம்’ ஆனவர்.

"பிரபலம் என்பதால் ஏதேனும் அனுகூலம் உண்டா?"

நல்ல கேள்வி!

பத்திரிகைகள், இவர்களிடம் கதைகளைக் ‘கேட்டு வாங்கி’ப் போடும்.

உதவி ஆசிரியர்கள், இவர்களின் படைப்புகளைப் பிரித்துப் பார்க்கவே அஞ்சுவார்கள். பார்த்த மறு வினாடியே ‘பரிந்துரைத்து’ ஆசிரியருக்கு அனுப்பி வைப்பார்கள்.

ஆசிரியரும் படித்துப் பார்க்காமலே அச்சுக்கு அனுப்புவார்.

‘திருத்தியே ஆகவேண்டிய’ பிழை தென்பட்டாலும், பிரபலத்தின் அனுமதியோடுதான்’திருத்தம்’ செய்வார். அவர் இசைவு தர மறுத்தால், இவர் ‘தேமே’ன்னு விழிப்பாரே தவிர, படைப்பை ஒருபோதும் ‘நிராகரிக்க மாட்டார்!

பிரபலம் ஆகத் துடிக்கும் ‘கத்துக்குட்டி’ எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் இவர்களுக்கான சன்மானம் மிக அதிகம். 

சில நேரங்களில், படைப்போடுகூட, இவர்களின் புகைப்படமும் இடம் பெறுவதுண்டு.

கத்துக்குட்டிகளின் இம்மாதிரி ஆசை கனவுகளில் மட்டுமே நிறைவேறும்.

ஆக, பிரபலம் ஆகிவிட்டால், வணிக இதழ்’க்காரர்கள் வழங்கும் சலுகைகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதென்ன வணிக இதழ்?

விற்பனையையும், வருமானத்தையும் பிரதான நோக்கமாகக் கொண்ட பத்திரிகைகளைத்தான் ’வணிக இதழ்கள் என்கிறார்கள். ’மசாலா பத்திரிகைகள் என்றும் சொல்வார்கள்.

இந்தப் பிரபலங்கள், ஒருபக்கக் கதையெல்லாம் எழுத மாட்டார்கள். நாவல்களும் நீண்ட சிறுகதைகளுமே படைப்பார்கள். அது அவர்களின் ‘கவுரவத்தை’ப் பாதிக்குமாம்.

எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் குமுதம் ஆசிரியராக இருந்த போது, சிவசங்கரி, இந்துமதி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற பிரபலங்களிடம் ஒரு பக்கக் கதைகளைக் கேட்டு வாங்கிப் போட்டாராம்! [என் தாத்தா தந்த தகவல் இது]

அதன் பிறகு எந்தவொரு பிரபலமும் ஒ.ப.கதை எழுதியதாக வரலாறு இல்லை.

இத்தகைய பிரபல வணிக இதழ் எழுத்தாளர்களில் முதல்நிலை பெற்ற ராஜேஷ்குமாரின் உன் இதயம் பேசுகிறேன்’ சிறுகதையைப் [குமுதம் 17.10.2012] பலரும் படித்திருக்கக் கூடும்.

நம்பர் 1 எழுத்தாளரின் சிறுகதை, தரத்தில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறதா என்று ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

யாழினி, கோவையைச் சேர்ந்த ஒரு செல்வந்தரின் பெண் வாரிசு.

தன் மனம் கவர்ந்த ஒருவனை மணக்கிறாள்.

பெற்றோர் மற்றும் சகோதரனின் எதிர்ப்பு காரணமாக தனியே வசிக்கிறாள்.

”அவரை மணந்த பிறகு ஒரு நாளும் என் கண்கள் கலங்கியதில்லை. சந்தோசமா இருக்கேன்”. என்று இவள் சொல்வதிலிருந்தே இவள் கணவன் எத்தனை நல்லவன் என்பது புரியும்.

இந்தக் கதையின் ஆரம்ப நிகழ்வில், ‘உன்னோட கணவர் நல்லவர். நீ சந்தோசமான வாழ்க்கை வாழ்வதை உனக்குக் கல்யாணம் ஆன ஒரு மாசத்திலேயே நான் தெரிந்து கொண்டேன்” என்று யாழினியின் தந்தையும் சொல்கிறார்.

கதை முடியும் தறுவாயில், இவளுடைய அண்ணனும் இவளின் கணவனைத் தேடிப் போய், ”மாப்ளே, அண்ணன்னு நான் ஒருத்தன் இருக்கும் போது, என் தங்கை நகைகளை நீங்கள் அடகு வைக்கலாமா?” என்று கேட்டுப் பண உதவி செய்ய முன்வருகிறான்.

ஆக, யாழினி நல்ல பெண்.

அவள் கணவனும் நல்லவன்.

தந்தையும் அண்ணனும்கூட நல்லவர்களே.

உண்மை இதுவாக இருக்கையில்......................

யாழினி, தான் ஒரு நல்லவரைக் காதலிப்பதாகச் சொன்ன போதே, அந்தக் காதலனைப் பற்றித் தீவிரமாக விசாரித்துத் தந்தையும் அண்ணனும் பச்சைக் கொடி காட்டியிருக்கலாமே?

எதிர்ப்புத் தெரிவித்தது ஏன்? ஏன்? ஏன்?

கதாசிரியர் ராஜேஷ்குமார் குமுதத்தில் ஒரு ‘விளக்க அறிக்கை’ வெளியிடுவாரா?

கதை படிப்பவரை மண்டை காய வைக்கிற இன்னொரு புதிர்...............

யாழினியின் தாய் ‘தற்கொலை’ செய்து கொள்கிறாரே, அது ஏன்?

மருமகன் நல்லவன் என்பதைத் கல்யாணமாகி ஒரே மாதத்தில் தந்தையும் அண்ணனும் புரிந்து கொள்ள முடிகிற போது, தாயை மட்டும் தற்கொலை செய்து கொள்ள வைப்பது தவறு என்பது பிரபல எழுத்தாளருக்குப் புரியாமல் போனது எப்படி?

ஓடிப்போன யாழினி, தன் தந்தையின் நிதி நிறுவனத்திற்கு, நகை அடகு வைத்து ஐந்து லட்சம் கடன் வாங்க வருவதாகக் கதை தொடங்குகிறது.
மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதும், குறைந்த வட்டிக்குக் கடன் வழங்குவதுமான நிறுவனம் என்பதால் அங்கு வந்தாளாம். [கோவையில் இது போன்ற வேறு நிறுவனமே இல்லையா?]

தந்தையும் அண்ணனும் அவளை மிகக் கடுமையாகத் திட்டி, கடன் வழங்காமல் விரட்டுகிறார்கள்.

வேறு நிறுவனம் தேடி யாழினி போகும் போது, காரில் பின்தொடர்ந்து சென்ற தந்தை, அவளுக்குக் கல்யாணமான ஒரு மாதத்திலேயே மாப்பிள்ளை நல்லவர் என்பதைப் புரிந்துகொண்டதாகச் சொல்லி, மகள் மீது அன்பைப் பொழிகிறார்; அவளுக்குப் பண உதவி செய்யவும் முன் வருகிறார்.

அதே போல, அவள் அண்ணனும் உதவ முன் வருகிறான்.

இப்படி யாழினி மீது அன்பைப் பொழிகிற இருவருமே, அவள் முன்னிலையில் அவளை அளவு கடந்து வெறுப்பது போல் பாசாங்கு செய்து, நெருப்பாய்க் கொதிக்கும் வார்த்தைகளை உமிழ்வது ஏன் என்றே புரியவில்லை.

"உன் மீது நான் பாசம் வைத்திருப்பதை [காதல் கல்யாணத்திற்குப் பிறகு] உன் அண்ணன் அறிந்தால் எமோஷனல் ஆயிடுவான். நம் வீட்டிலிருந்த உன் ஃபோட்டோக்களையெல்லாம் அவன் எரிச்சிட்டான்” என்று தந்தை மகளிடம் புலம்புவதும், ”என்னமோ தெரியல. யாழினி மேல அப்பாவுக்கு அப்படியொரு கோபம்” என்று அண்ணன்காரன், அப்பாவுக்குத் தெரியாமல் தங்கை மீது கரிசனம் காட்டுவதும் எதன் பொருட்டு?

வாசகரை மறை கழன்ற கேஸுகளாக நினைத்துக் கொண்டு, அரை வேக்காட்டுப் பாத்திரங்களை உருவாக்கி நடமாடவிட்டுக் கதை பண்ணுவது யாரைத் திருப்திப்படுத்த?

குமுதம் ஆசிரியரைத்தானே?

வாசகர்களின் இரண்டு காதுகளிலும் கதாசிரியர் பூச்சுற்றப் பார்க்கிறீர்! அது நடக்கவே நடக்காது.

ஒரு தந்தையும் மகனும் மனம் விட்டுப் பேசுவதற்கு எது தடையாக இருந்தது என்பதற்குக் கதையில் எந்தவொரு விளக்கமும் இல்லை.

கதையில், வாசகரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் திடீர்த் திருப்பங்களைத் தர வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு உண்மை நிலையை மறைக்கிறார் என்பது  மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை.

மர்மக் கதைகளில் திடீர்த் திருப்பங்கள் தந்து தந்து நிகழ்ச்சிகளில்
விறுவிறுப்பு ஏற்றிப் பழக்கப்பட்ட பிரபலம், ஒரு குடும்பக் கதையிலும் இதே தந்திர உத்தியைக் கையாண்டிருப்பது, சிந்திக்கத் தெரிந்த வாசகனுக்கு அளவற்ற எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

சரளமான நடையில் கதை சொல்லிச் செல்கிறார் என்பதைத் தவிர, இப்படைப்பில் மனம் திறந்து பாராட்டும்படியாக ஒன்றுமே இல்லை என்பதே நான் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவாகும்.

பிரபல எழுத்தாளரான ராஜேஷ்குமார் எழுதிய இதே கதையை ’அறுவை மருத்துவன்’ என்னும் என் பெயரில் அனுப்பியிருந்தால் குமுதம் பிரசுரித்திருக்குமா என்பதே இறுதியாக நான் கேட்கும் கேள்வி.

குமுதமே, பதில் சொல்வாயா?

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

பிம்குறிப்பு:

இதைப் படித்து முடித்துவிட்டு, இவ்வாரக் குமுதத்தில் வெளியாகியுள்ள ஒ.ப.கதைகளைப் படிக்கும் போது, மனதுக்கு ஆறுதலாக இருந்தது!

அவை பற்றிய விமர்சனப் பதிவு நாளை வெளிவரக்கூடும்!

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
































.




வியாழன், 11 அக்டோபர், 2012

விகடன்[10.10.12] 'பெருமாள் முருகன்' சிறுகதைக்கு 50% மதிப்பெண்!

இது ஒரு ’சீரியஸ்’ பதிவு! நக்கல், நையாண்டிக்கு இங்கு இடமில்லை!

நாளைய பதிவு: குமுதத்தைக் ‘குப்பைக் கூடை’ ஆக்கிய எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

நோயைக் குணப்படுத்த சிகிச்சை தேவை. ஆயினும், சிகிச்சை தொடங்குவதற்கு முன்னால், நோயின் தன்மை பற்றியும் அதனால் பாதிக்கப்பட்ட உடம்பின் நிலை பற்றியும் அறிவதற்கு ஆழமான பரிசோதனை தேவை.

நுண்ணிய பரிசோதனையின்றி அளிக்கப்படும் சிகிச்சை பயனற்றுப் போகலாம்; எதிர் விளைவையும் உண்டு பண்ணலாம்.

மூட நம்பிக்கைகள், தீய பழக்க வழக்கங்கள், சாதிமதப் பிணக்குகள் போன்ற கொடிய நோய்களால் நலிவுற்ற சமுதாயத்தைத் திருத்துவதற்கு முன்னால், அந்நோய்கள் பற்றிய முறையான பரிசோதனைகள் தேவை.

இத்தகைய பரிசோதனைகளை நிகழ்த்துவதற்குச் சமுதாயத்தின் மேடு பள்ளங்களையும், அதன் நலிவுற்ற பகுதிகளையும் அறிந்திருப்பது இன்றியமையாத் தேவையாகும்.

இப்பரிசோதனைக்குச் சமுதாய நிலையை ’உள்ளது உள்ளபடியே’ படம் பிடித்துக் காட்டுகிற நாவல், சிறுகதை போன்ற நவீன இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன.

உள்ளது உள்ளபடியே  விவரித்துச் சொல்வதை ‘எதார்த்தவாதம்’ [realism] என்பார்கள்.

இதனை, ‘நடப்பியல்’, ’உள்ளதன் தன்மை’ என்றெல்லாமும் சொல்வதுண்டு.

’நடப்பியல்’ சார்ந்த படைப்புகள் தமிழில் அரிதாகவே வெளிவருகின்றன.

அத்தகைய அரிய படைப்புகளில் இவ்வார விகடன் இதழில் [10-10-2012] வெளியாகியிருக்கும் பெருமாள் முருகனின் ‘மண்டப ரகசியம்’ சிறுகதையும் ஒன்று.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, அரசியல்வாதிகள் கையாளுகிற அத்தனை தீய வழிகளும் ‘கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல்’களில் கையாளப்படுகின்றன என்பதைப் பட்டவர்த்தனமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தச் சிறுகதை.

பேரவைப் பதவிகளுக்குப் போட்டியிடும் மாணவ வேட்பாளர்கள், வாக்காள மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்குவதுடன், தேர்தல் நடை பெற ஒரு வாரம்  இருக்கும் போதே, அவர்களைக் கடத்திச் சென்று, மண்டபங்களில் தங்க வைத்து, ’விருந்து’ கொடுத்துத் திருப்திப்படுத்துவது பல்லாண்டுக் கால ‘நடைமுறை’யாக உள்ளது.

இது ஒரு ‘தொற்று நோய்’.

இந்த நோயைக் கல்வி நிலையங்களில் பரவச் செய்தவர்கள் அரசியல்வாதிகள்.

குடிக்கச் ‘சரக்கு’, உண்பதற்கு வகை வகையாய் இறைச்சி விருந்து, கண்டு மகிழ்வதற்குப் ‘பலான’ வீடியோ படங்கள் என்று சுகபோகத்தில் திளைக்கச் செய்து வாக்காளனின் சிந்திக்கும் அறிவை மழுங்கடித்துக் காரியங்கள் சாதிக்கும் இந்தக் கலையை மணவர்களுக்குக் கற்றுத் தந்தவர்கள் இவர்களே.

மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் என அனைவராலும் நன்கு அறியப்பட்ட, வேரோடு களையப்பட வேண்டிய ‘அவலம்’ இது.

தொடரும் இந்த அவலத்துக்குக் கதை வடிவம் தந்திருக்கிறார் நட்சத்திர எழுத்தாளர் பெருமாள் முருகன்.

கதைச் சுருக்கம்.....

புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த குமரேசன், ‘ராகிங்’ செய்வதற்குப் பதிலாக, ‘மூத்த மாணவர்கள்’ தந்த ‘அன்பான’ வரவேற்பால் அசந்து போகிறான்.

அவர்கள் வழங்கிய பரிசுப் பொருள்களைத் தன் வீட்டாரிடம் காட்ட எல்லோரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

தானும் தன் வாக்காள நண்பர்களும் ஒரு வார காலத்துக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, உபசரிக்கப் பட இருப்பதை அறிந்து ஆனந்தம் அடைகிறான்.

பெரிய டம்ளரில் டீ. குடிக்கப் பானங்கள். கமகமக்கும் ‘கறி’யுடன் சாப்பாடு. படம் பார்க்கத் தொலைக்காட்சிப் பெட்டி. நண்பர்களுடனான ஆட்டம் பாட்டம். இப்படி ஒரு வாரம் இன்பத்தில் திளைக்கப் போவதை நினைத்து, இதுவல்லவா வாழ்க்கை என்று குதூகலிக்கிறான்.

’மாவட்டச் செயலாளர்’ வருகை புரிந்து, ’சரக்கு’ முதலான எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவதாகச் சொல்லிப் போகிறார்.

சரக்கு உறைப்பாக இருக்கிறது. குமரேசன் இரண்டு மூன்று ரவுண்டு போகிறான். வேண்டும் மட்டும் கறி உணவு சாப்பிடுகிறான். கிறக்கம் மீறி சுருண்டு படுக்கிறான்.

காலையில் விழித்தெழுந்த போது, நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. பெரிய அளவில் குவிந்திருந்த வாந்தியை இவனைச் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள் இவன் நண்பர்கள். இந்த நிலை எல்லா நாளும் தொடர்கிறது.

இறுதி நாளில், “நீ வாந்தியே எடுக்கல. மத்தவங்க எடுத்ததை உன்னைச் சுத்தம் செய்ய வெச்சிட்டாங்க” என்று உண்மையைப் போட்டு உடைக்கிறான் இவனின் நண்பன் செல்வம்.

சினந்து மூச்சிறைக்கிறான் குமரேசன். இது கதை.

”இதோ, மாணவர்களைச் சீரழித்து வரும் ஒழுக்கக் கேட்டைப் பலர் அறியப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறேன். இவர்களைத் திருத்துவது உங்கள் கடமை” என்று சொல்வது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்தச் சிறுகதை.

ஆம். கல்லூரி மானவர்களைச் ‘சிக்’கெனப் பற்றிக் கொண்டுவிட்ட இந்தச் சீரழிவைக் காட்சிப்படுத்துவதோடு கதாசிரியர் ’திருப்தி’ அடைந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த அவலத்தைத் துடைத்துப் போடுவதற்கான வழி முறை எதையும் அவர் குறிப்பிடவில்லை. [அதைச் செய்யும்படி அவரை நாம் கட்டாயப் படுத்த முடியாது என்பது அறியற்பாலது].

தனி மனிதரிடமும், பொது மக்களிடமும் உள்ள குற்றம் குறைகளையும் அவர்களுக்குள்ள பிரச்சினைகளையும் தன் படைப்புகள் மூலம் எடுத்துரைப்பது நல்ல பணிதான். அதைச் செய்யும் படைப்பாளரும் பாராட்டுக்குரியவர்தான்.

அவரைக் காட்டிலும், சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ‘தீர்வு’ சொல்கிற படைப்பாளர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.

இதைக் கருத்தில் கொண்டுதான், பெருமாள் முருகனின் இக்கதைக்கு 50% மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு நம் பாராட்டுகள். விகடனையும் போற்றுகிறோம்.

இனி, ‘தீர்வு’ தரும் பல படைப்புகளையும் படைத்திட, பெருமாள் முருகனை வேண்டுகிறோம்..

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000








சனி, 6 அக்டோபர், 2012

குமுதம் ‘ச்சீய்..!’ கதைகளுக்குப் போட்டியாய் ஒரு ‘ச்சீய்...ச்சீய்’க் கதை!

குமுதம், தன் ’நம்பர்1’ இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே இந்தச் ‘ச்சீய்..!’ கதைகள்.

குணாளன்!

பெயருக்கேற்ப, நல்ல குணங்கள் உள்ள இருபத்தைந்து வயது வாலிபன்.

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். பொழுது போகாத நேரங்களில், ’காந்தி’யின் ‘பிரமச்சரியம்’, திரு.வி.க.வின் ‘பெண்ணின் பெருமை’ போன்ற மன மாசுகளைப் போக்கும் நல்ல புத்தகங்கள் படிப்பான்.

வாரப் பத்திரிகைகளும் படிப்பதுண்டு.

’குமுதம்’ படிக்கும்போது, சினிமாச் செய்திகள், கவர்ச்சிப் படங்கள், விரசம் கலந்த ‘அரசு பதில்கள்’, ஒற்றக் கூத்தனின் ‘ஆட்டமா, தேரோட்டமா?’ போன்ற மனதைக் கெடுக்கும் ’குப்பை கூளங்களை’க் கிழித்தெடுத்துவிட்டு, மிச்சமிருப்பதைப் பின் அடித்துக் கொண்டு படிப்பான்.

இப்படிப்பட்ட குணாளனின் கண்களில், குமுதத்தில் ‘கோலப்பன்’ எழுதிவரும் ‘ச்சீய்..!’ கதை கண்ணில் பட்டது.

தலைப்பே ‘ச்சீய்...’ன்னா, உள்ள இருக்கிற மேட்டரும் ’நாத்தம்’ புடிச்சதாத்தான் இருக்கும்கிற முடிவோட,  முகம் பார்க்கும் கண்ணாடி தேடினான்.

வீடு முழுக்கச் சல்லடை போட்டும் அது கிடைக்கவில்லை. [வீட்டில் நிலைக்கண்ணாடியும் இல்லை].

பொறுமை இழந்து, “பாட்டி, முகம் பார்க்குற கண்ணாடி எங்கே?”ன்னு கேட்டான். குழந்தைப் பருவத்திலிருந்தே அவன், தாத்தா பாட்டி வீட்டில் வளர்பவன். பாட்டிக்கு வயது 70. தாத்தாவுக்கு 80]

”பக்கத்து வீட்டுக் காலேஜ் கொமுரி வாங்கிட்டுப் போனா. இன்னும் திருப்பித் தரல” என்று பொய் சொன்னாள் பாட்டி!

கதையைத் தலைகீழாப் போடுறது; பத்து வரிக் கதையை ரெண்டு வரியா துக்கிளியூண்டு எழுத்தில் அச்சிட்டு மண்டை காய வைக்கிறது; வரிகளை வட்ட வட்டமாச் சுழிச்சி முகம் சுழிக்க வைக்கிறது. இப்படி, விதம் விதமான உத்திகளைக் கையாண்டு, இதழ் விற்பனையைக் கூட்டுறது குமுதத்துக்குக் கைவந்த கலை என்பது நினைவுக்கு வரவே, நண்பன் விவேக்கைப் பார்க்கக் கிளம்பினான் குணாளன்.

கண்ணாடியில் ‘ச்சீய்...’படித்துக்கொண்டிருந்த விவேக், இவனுக்காகச் சத்தம் போட்டுப் படித்தான்.

கேட்டதும் குமுறும் எரிமலையானான் குணாளன்.

”எத்தனை நல்ல உள்ளங்களைக் கெடுக்குது இந்தச் ‘ச்சீய்..!’. இப்படி ஆபாசக் கதை போட்டு அட்டூழியம் பண்றதைக் குமுதம் நிறுத்தணும். தவறினா, குமுதம் பத்திரிகையைத் தடை செய்யணும்னு பெரிய போராட்டமே நடத்தணும்” என்று வெடித்தான்.

“நீ மட்டும்தான் இப்படிக் குமுறிக் கொந்தளிக்கிறே. இந்தச் ‘ச்சீய்...’க் கதை அஞ்சாறு வாரமா வருது.. குடும்பத் தலைவர்கள், தலைவிகள், பொது நலவாதிகள்னு யாருமே வாய் திறக்கலையேடா. இனியும் பெணாத்தாதே. உன் வேலையை மட்டும் பாரு” என்று நண்பனைக் கடிந்துகொண்டான் விவேக்.

அவனுக்குப் பதில் தரும் வகையறியாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த நம் குணாளன், “இனியும் இந்தக் குமுதம் என் வீட்டு வாசப்படிகூடத் தாண்டக் கூடாது. என் தாத்தா பாட்டிகிட்டேயும் சொல்லிடுறேன்” என்று நண்பனிடம் சூளுரைத்துவிட்டுத் தன் வீட்டுக்குக் கிளம்பினான்.

வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.

கதவைத் தட்ட அவன் கை நீண்ட போது, உள்ளே தாத்தாவும் பாட்டியும் பேசுவது கேட்டது.

எழுபது வயதான பாட்டி, என்பது வயதுத் தாத்தாவிடம் சொன்னாள்: “குணா, கண்ணாடி எங்கே, கண்ணாடி எங்கே?ன்னு கேட்டுட்டே இருக்கான்”.

”மறந்தும் கொடுத்துடாதே” என்று கடுமையாக எச்சரித்தார் தாத்தா.

’அந்த அசிங்கக் கதையை நான் படிச்சுடக் கூடாதுன்னு தாத்தா நினைக்கிறார். அவருக்குத்தான் என் மேல எவ்வளவு அக்கறை?’ன்னு நினைச்சி சந்தோசப்பட்டான் குணாளன்; மெய் சிலிர்த்தான்!

ஆனா, அப்புறம் தாத்தா சொன்னதைக் கேட்டதும் அந்தச் சந்தோசம் போன இடம் தெரியவில்லை.

தாத்தா சொன்னது....................

“கோலப்பன்னா கோலப்பன்தான். இந்த ’எழுத்துச் சித்தன்’ என்னமா எழுதுறான்! படிக்கும் போதே ‘அது’க்கான மூடு வந்து சூட்டக் கெளப்புது. இன்னும் எத்தனை கதை எழுதுவானோ தெரியல. அதுவரைக்கும் நம் பேரனுக்குக் கண்ணாடியைக் கண்ணில் காட்டிடாதே. குமுதம் வாங்குறதையே அவன் நிறுத்திடுவான்”.

“நிறுத்தினா என்ன?” என்றாள் பாட்டி.

“நிறுத்தினா என்னவா, பல வருசங்களுக்கு அப்புறம், இந்தச் ‘ச்சீய்..!’ கதைகளைப் படிச்சித்தான் ‘அது’ பண்ணனும்னு எனக்கு ’மூடு’ வந்திருக்கு.. இன்னும் எத்தனை வாரம் எழுதுவானோ? அதுவரைக்கும் கண்ணாடியைப் பேரன் கண்ணில் காட்டிடாதே” என்றார் தாத்தா.

”நானும் செம மூடில்தான் இருக்கேன். சீக்கிரம் ஆரம்பிச்சுடுங்க. குணாளன் வர்ற நேரமாச்சு” என்று தாத்தாவை அவசரப்படுத்தினாள் பாட்டி.

“இன்னிக்கி வேண்டாம். ’உச்சத்தை’த் தொட முடியாது. அடுத்த இதழோட குமுதம்காரன், ‘வயாகரா’ இலவச இணைப்பா அனுப்புறானாம். அதுவரைக்கும் மனசைக் கட்டுப்படுத்தி வை” என்றார் தாத்தா.

அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த குணாளன், ”அடக் கடவுளே, இதெல்லாமும் உன் திருவிளையாடல்தானா?” என்று சொல்லித் தலைதலையாய் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தான். அவன் சுய நினைவு பெற நீண்ட நேரம் ஆனது!

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo









வியாழன், 4 அக்டோபர், 2012

'கிறுக்கு'ப் பிடிச்ச குமுதமும் [10-10-2012] ‘கில்லாடி’ தேவிபாலாவும்!

இந்த வாரக் குமுதத்தில் ஒரு ’தழுவல்’ [திருட்டு?] கதை’யும் இருக்கிறது!

எழுத்தாளர் தேவிபாலா, ’அரைப் பக்கக் கதை’யை ’ஆறு பக்கம்’ ஆக்குகிறார்! 

”சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்த ஒரே மிருகம் மனிதன்தான். சிரிப்பாய்ச் சிரிக்கிற வாழ்க்கை வாழ்பவனும் இவன்தான்”னு சொல்லுவாங்க.

மனிதனுக்குச் சொன்ன இந்தக் கருத்துரை ‘குமுதம்’ இதழுக்கும் பொருந்தி வருது!

”கதைகள் மூலம் வாசகரைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த இந்தக் குமுதம்தான், ’அரைவேக்காட்டுக் கதைகளை’ப் பிரசுரம் பண்ணி, வாசகரின் அறிவை மழுங்கடிக்கவும் செய்யுது”ன்னு சொன்னா அதை மறுத்துரைப்பார் எவருமில்லை.

பந்தயத்தில் தோற்பவர் மொட்டை போட வேண்டும் என்பது நிபந்தனை. வென்றவர் தோற்றவர் இருவரும் சலூன் போகிறார்கள். மொட்டை போடப் பணம் தருவது யார் என்பதில் பிரச்சினை. இருவருக்கும் இடையே தகராறு. சலூன்காரர் சொல்கிறார்: “நான் ஒரு சலூன்காரரிடம் போட்ட பந்தயத்தில் தோத்துட்டேன். தோற்றவர் இலவசமா ஒரு மொட்டை போடணும்கிறது நிபந்தனை. நீங்க பணம் தர வேண்டாம்” [கதாசிரியர்: அண்ணாதாசன்].

இப்படியொரு, நினைத்ததும் சிரிக்கத் தூண்டும் நகைச்சுவைக் கதை.

லஞ்சம் வாங்குற மாமனாரைக் கண்டிக்கிறான் மருமகன். மாமனார் சொல்லுறார்: “ வாங்குற சம்பளம் குடும்பச் செலவுக்குக் கட்டுபடி ஆகல. உங்களை வேற ஐந்து லட்சமும் ஐம்பது பவுனும் கொடுத்து வாங்கியிருக்கேன். இன்னும் மூனு பொண்ணுக கல்யாணத்துக்குக் காத்திருக்கு. லஞ்சம் வாங்காதேன்னு சொல்றீங்களே, இது நியாயமா மாப்ள?”

இப்படிச் சமுதாயத்தின் புரையோடிய புண்களைக் அழுத்தமாய்க் கிழித்துக் காட்டும் கதைகள் [படைத்தவர்: விஜயகுமார்].

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைச் சாடிக்கொண்டிருக்கும் ஒருவர், தன் மகனுக்கு வங்கியில் வேலை கிடைத்திருப்பதை அறிந்த மறு வினாடியே வேலை நிறுத்தத்தை ஆதரித்துப் பேசுகிறார் [’இறைவன்’ என்பவரின் படைப்பு].

மனிதனின் பச்சோந்தித்தனத்தைப் படம்பிடிக்கிறது இக்கதை.

இவை, குமுதத்தில் முந்தைய ஆண்டுகளில் வெளி வந்த கதைகள்.

இப்படி, அவ்வப்போது அசத்தலான படைப்புகளை வெளியிட்டு வந்த குமுதத்துக்கு அண்மைக் காலங்களில் புத்தி பேதலித்துவிட்டது!

ஒரு கல்லுரி மாணவன். காதல் தோல்வி காரணமாக, அருகிலிருக்கும் மலை உச்சியிலிருந்து குதித்து உயிர்விடக் கிளம்புகிறான். இவனின் பிறந்த ஊரிலிருந்து ஃபோன் வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் இவன் ஒழுங்காகப் படிக்காததை நினைத்து, இவனை நம்பி வாழ்ந்த சகோதரி தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதைப் போலக் கண்கலங்க வைக்கும் கதைகளை எப்போதாவதுதான் வெளியிடுகிறது குமுதம்.

மற்றபடி, 99 விழுக்காட்டுக் கதைகள் வாசகருக்கு எரிச்சலூட்டுபவையே.

                                     *                                 *                                      *

இந்த வாரக் குமுதம் கதைகளைப் பார்ப்போம்.

ஒரு ‘பக்கோடா’ கதை. படைப்பாளி: -ஜெயாப்பிரியன்’.

குடிப்பழக்கம் இல்லாத ஜெகன், ’டாஸ்மாக்’ அருகில் உள்ள கடையில் பக்கோடா வாங்குவான்.

அன்று,“பக்கோடா ‘சப்’னு இருக்கே?”ன்னு கடைக்காரர்கிட்ட கோபப்படுறான்.

”குடிப்பழக்கத்தால கெட்டுப் போன குடிகாரர்களின் வயிறு மேலும் கெட்டுடக் கூடாதுன்னுதான் காரம் குறைவாப் போடுறோம். ருசியைவிட எங்களுக்கு மனிதாபிமானம்தான் பெரிசு”ங்குறார் கடைக்காரர்!

அடங்கொப்புறானே!  இப்படியொரு கடைக்காரர் எங்கய்யா இருக்கார்?
அவரை நேரில் சந்திச்சிக் கை குலுக்கணும்னு இந்த அறுவை துடிச்சிட்டிருக்கான்.  ஜெயாப்பிரியன், முகவரி கொடுமய்யா.

குடிக்கிறவனுக்குத் தொட்டுக்கச் ‘சுருக்’னு எதுனாச்சும் வேணும். ’சப்’னு பக்கோடா போட்டா அந்தக் கடையை எந்தக் குடிகாரனும் சீந்த மாட்டானே. இந்த உப்புப் பொறாத விசயம்கூடத் தெரியாம ஏய்யா கதை எழுதி எங்க கழுத்தை அறுக்கிறீங்க?

குமுதம் எடிட்டரை எப்படி வளைச்சுப் போடுறதுன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடு தலீவா. 

                          *                                        *                                               *

அடுத்து வருவது, ஒரு ‘சூப்பர் ஐடியா’ கதை. வழங்கியவர்: எஸ்.முகம்மது யூசுப்.

மருமக வந்ததும் ஒரு அம்மாக்காரி நல்லாவே சமைக்கிறதில்லையாம். ஏதாவது குறை இருக்குமாம். அதுக்கு முந்தி அற்புதமா சமைப்பாங்களாம்.

“ஏன் இப்படி?”ன்னு அவங்க வீட்டுக்காரர் கேட்கிறார்.

அந்தம்மா சொல்றாங்க: “மகனும் மருமகளும் தனிக் குடித்தனம் போகப் போறாங்க. நான் ருசியா சமைச்சுப் போட்டா,  ‘எங்க அம்மா சமையல் மாதிரி இல்லே’ன்னு மகன் பெண்டாட்டியைக் குறை சொல்லுவான்”.

எழுத்தாளர் யூசுப்பு! ஹலோ எடிட்டர்!

குமுதம் படிக்கிற எல்லாருமே கூமுட்டைகள்தான்னு முடிவு பண்ணிட்டீங்களா?

இனியும் இந்த மாதிரி கதைகள் எழுதி எங்களை எரிச்சலூட்டினா, கூடை கூடையா அழுகின நாமக்கல் முட்டை தயாரா இருக்கு, உங்களை நாறடிச்சுடுவான் இந்த அறுவை! ஜாக்கிறதை!

தெரியாமதான் கேட்குறேன், ஏய்யா, கல்யாணம் ஆகிற வரைக்கும் அந்த அம்மா தன் மகனுக்கு ருசியா சமைச்சுப் போட்டிருப்பாங்கதானே, புதுப் பொண்டாட்டி மயக்கத்தில் அதெல்லாம் மறந்துடிச்சா?

                                        *                                         *                                 *

இனி இடம் பெறுவது, ஒரு தழுவல் கதை [திருட்டுக் கதைன்னு சொல்ல வேண்டாம்].

ஷாமு’ என்பவர் எப்பவோ எழுதினதைத் தழுவி எழுதினவர்: -வி.சகிதாமுருகன். கதை: ‘பரிசோதனை’

ஒரு டாக்டர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்து போன ஒரு நோயாளியிடம், “நோய் குணமாயிட்டுதா?”ன்னு கேட்கிறார்.

நோயாளி, “ஆமா”ங்கிறார்.

நர்ஸ் டாக்டரிடம், “இவரை மட்டும் இவ்வளவு அக்கறையா விசாரிக்கிறீங்களே?”ங்கிறா.

“அக்கறையெல்லாம் இல்ல. அவருக்கிருந்த வலி எனக்கும் இருக்கு. டெஸ்ட் பண்ணக் கொடுத்த மருந்து பலன் தந்ததான்னு தெரிஞ்சிக்கக் கேட்டேன்”கிறார்.

ஷாமு கதை: தன்னிடம் வந்த நோயாளியிடம், வயித்து வலி எப்படிக் குணமாச்சி?”ன்னு டாக்டர் கேட்க, அவர் தனக்கு முன்பு வைத்தியம் பண்ணின டாக்டர் பேரைச் சொல்லுறார். அவர் முகவரியை இவர் கேட்கிறார். இவருக்கும் அதே வயித்து வலிப் பிரச்சினையாம்!

இதெல்லாம் திரும்பத் திரும்ப, நகைச்சுவைத் துணுக்குகளா வந்ததுங்க.

குமுதம் ஆசிரியருக்கு ஒரு பக்கத்தை நிரப்ப மேட்டரே கிடைக்கல. என்ன செய்வாரு பாவம்! நிராகரிக்க வேண்டிய இந்த்த் துக்கடாக் கதையைப் பிரசுரம் பண்ணிட்டார்.

நடிகையின் கொடியிடையோ அடிவயிறோ தெரியுற மாதிரி ஒரு படம் போட்டிருக்கலாம். கெடக்குது விடுங்க.

                               *                                      *                                   *

நண்பரோட காரில் அலுவலகம் புறப்படுறார் ஒருத்தர்.

பூனை குறுக்கே வந்துச்சாம். வீட்டுக்குள்ளே போயிக் கொஞ்ச நேரம் கழிச்சி வர்றார். இப்படி மூனு நாள் நடக்குது.

இவருக்கிருந்த மூட நம்பிக்கையை வெறுத்த நண்பர், அதைப் பத்திக் கேட்க, இவர் சொல்றார்; “வீட்டில் எல்லாரும் ஊருக்குப் போய்ட்டாங்க. பூனை குட்டிகள் போட்டிருக்கு. வீட்டைப் பூட்டிட்டுப் போய்ட்டா, வெளியே வந்த பூனை குட்டிகளுக்குப் பால் தர முடியாது. பாவம் குட்டிகள். பசியால் துடிக்கும்”.

இந்தக் கதையைப் படிச்சுட்டு, நான் மெழுகா உருகிக் கரைஞ்சு போயிட இருந்தேன். நல்ல வேளை, என் உள் மனசிலிருந்து எழுந்த ஒரு சந்தேகம் அதைத் தடுத்துடிச்சி.

அந்தச் சந்தேகம்.....................

பூனை, மூனு நாளும் இவர் புறப்படுற நேரம் பார்த்து எப்படிங்க குறுக்கே வந்துது?

பூனையை வெச்சி எழுதின கதை: ‘சகுனம்’. எழுதியவர்: கீர்த்தி.

குமுதம் அதிகம் விற்குதுங்கிற மதமதப்பில், அதன் ஆசிரியர், மூளைக்கு வேலையே கொடுக்காம கதைகளைப் பிரசுரம் பண்றார். எல்லார்த்தையும் படிச்சதில் எனக்குத் தலைவலியே வந்துடிச்சி.

தேவிபாலா எழுதின ஒரு பெரிய சிறுகதை  மிச்சமிருக்கு. கோடாலித் தைலம் தடவிகிட்டு அதைப் பத்தியும் சொல்லிடறேன். கதை: ‘இரண்டில் ஒன்று’

’காமேஷ்’ங்கிற பெரிய படிப்பெல்லாம் படிச்சி, வெளி நாடெல்லாம் போய் வந்த பையனுக்குப் பெத்தவங்க பொண்ணுப் பார்க்கிறாங்க.

ஏராள பொண்ணுகளைப் பார்த்ததில் ’சரண்யா’, ’அபிநயா’ன்னு அழகான, படிச்சி  நிறையச் சம்பாதிக்கிற ரெண்டு குட்டிகள் தேறுது.

சரண்யா, சுமாரா சமைக்கத் தெரிஞ்ச, டூ வீலர்கூட ஓட்டத் தெரியாத, கட்டுப்பெட்டியா வளர்க்கப்பட்ட பொண்ணு.

அபிநயா, இவளுக்கு நேர் எதிர். அட்டகாசமா கார் ஓட்டத் தெரிஞ்ச, எல்லார்கிட்டேயும் ‘கலகல’ன்னு பேசுற, யாரும் தன்னை அடக்கியாளுறதை விரும்பாத ‘அலட்டல்’ நவநாகரிக யுவதி.

[சரண்யாவைத்தான் தேர்ந்தெடுப்பாங்கன்னு இப்பவே கண்டுபிடிச்சிருப்பீங்களே?]

“ஒரு மாணவி எனக்கு மனைவியா வரட்டும்.கத்துக் குடுக்குற டீச்சர் வேண்டாம்”னு கதாநாயகன் காமேஷ் சொல்லுறதா கதையை முடிக்கிறார் பிரபல நாவலாசிரியர் தேவிபாலா.

அரையே அரைப் பக்கத்தில் சொல்லி முடிக்கிற கதைங்க இது. இதே theme ல, சின்னதும் பெரிசுமான பல கதைகள் படிச்சிச் சலிச்சவன் நான். நீங்க மட்டும் படிச்சிருக்க மாட்டீங்களா என்ன?

காமேஷ், மூட்டை முடிச்சுகளோட லண்டன் போனது. திரும்பி வந்தது. அம்மா, இதய அறுவை பண்ணிட்டது. கல்யாணம் பத்தி விவாதம் பண்றது. வரன் தேடினது. பொண்ணுகளின் தகுதிகளை விளாவாரியா எடுத்துச் சொன்னதுன்னு, இந்தக் கதையை ஆறு பக்கத்துக்குத் தேவிபாலா தேத்துனது ஆச்சரியமோ ஆச்சரியமுங்க. 

புகழ் பெற்ற எழுத்தாளர் அல்லவா?

ஒரு வரிக் கதையை நூறு வரிக் கதையாவும், ஒரு பத்து வரிக் கதையைப் பக்கா நாவலாகவும் எழுதிடுவாருங்க!

பாவம் குமுதம் ஆசிரியர்! பிரபல எழுத்தாளர்கள் அவரை எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பார்த்தீங்களா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!











                              











திங்கள், 1 அக்டோபர், 2012

’விகடன்’ இதழில் [03-10-2012] ஒரு ‘வெங்காயக் கதை’!

ஒரு நட்சத்திர எழுத்தாளரின் சிறுகதை பற்றிய ஒரு ’கத்துக்குட்டி’யின் விமர்சனம்.

ஒரு நட்சத்திர எழுத்தாளர் படைத்த ’வெத்து'க் கதை!

‘நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு’ன்னு ஆனந்த விகடன் சிறுகதைகள் வெளியிடுவது யாவரும் அறிந்ததே.

‘பிரபல எழுத்தாளர்’னா நமக்குத் தெரியும்.

ஒருத்தர் எதைக் கிறுக்கினாலும் அதை வெளியிடப் பத்திரிகை இருந்தா, அவர் பிரபல எழுத்தாளர்!

எழுத்தாளர் சுஜாதாவின் ’சலவைக்குப் போட்ட துணிக் கணக்கை’ச் ‘சாவி’ வார இதழ் வெளியிட்டுதே, அது மாதிரி.

பிரபல எழுத்தாளர்னா, அவர் படிக்கிறது எழுதுறது மட்டுமில்ல, அவர் பயன்படுத்துற ’டூத் பேஸ்ட்’, ‘வெளிக்கு’ப் போற ’டாய்லெட்’; திங்குறது; தூங்குறது; ‘குசுவு’ போடுறது பத்தியெல்லாம்கூட, துணுக்குச் செய்தி வெளியிட்டு வாசகரைக் ’குஷி’ப்படுத்துவாங்க!

பிரபல எழுத்தாளர் சரி, அது யாருங்க ‘நட்சத்திர எழுத்தாளர்’?

ஆகாயத்தில் நட்சத்திரம் மின்னுற மாதிரி, கதை இலக்கிய வானில் நிரந்தர இடம் பிடிச்சவர் நட்சத்திர எழுத்தாளர். [மத்தவங்க எல்லாம் கம்பி மத்தாப்பு’ எழுத்தாளர்! படிச்ச சூட்டோட, கதையை மட்டுமல்ல எழுத்தாளரையும் மறந்துடுவோம்!]

பிரபலத்துக்கும் நட்சத்திரத்துக்கும் என்னங்க வித்தியாசம்?

பாலுணர்வைத் தூண்டும் படுக்கையறைக் கதை. செக்ஸ் கலந்த...கலக்காத சிரிப்புக் கதை; மர்மக் கதை; மசால் வடை....மன்னிக்கவும், மசாலாக் கதை; மாயாஜாலக் கதைன்னு நல்லது கெட்டது பார்க்காம எதைப் பத்தியும் எழுதிப் பணமும் புகழும் பண்றவர் பிரபல எழுத்தாளர்.

நட்சத்திர எழுத்தாளர் அப்படி இல்லீங்க.

கெட்டவங்களை நல்லவங்களா ஆக்குவதற்கும், சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்கும் இந்த உலகத்தைப் புரட்டிப் போடுவதற்குமான புரட்சிக் கதைகளைப் படைத்து வழங்குபவர் அவர்!

அவருடைய உன்னதக் கதைகளை ஒரு தடவை படிச்சாப் புரியாது. படிச்சிட்டே இருக்கணும். இதுக்குன்னு கணக்கெல்லாம் கிடையாதுங்க.

எத்தனை தடவை படிச்சாலும் புரியலேன்னா, கதையைக் குறை சொல்லக் கூடாது. நமக்குப் புரிஞ்சிக்கிற அளவுக்குப் புத்தி இல்லேன்னு அர்த்தம்.

ஒருத்தர் நட்சத்திர எழுத்தாளர்ங்கிறதுக்கு முக்கிய அடையாளம் அவர் கதை ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கணும்.

இப்போ அதில் எழுதறவங்க எல்லாம் ‘சிங்கிள் ஸ்டார்’ எழுத்தாளர்கள். ’திரீ ஸ்டார்’,  ’ஃபைவ் ஸ்டார்’ எழுத்தாளர்கள் எல்லாம் இனி எழுதுவாங்க. விலையைப் பார்க்காம விகடன் வாங்கிப் படிச்சிட்டே இருங்க.

இந்த வார விகடன் கதைக்கு வருவோம்.

’மனைவியோட அப்பாங்கிற தலைப்பில் க.சீ.சிவக்குமார் எழுதியிருக்கார்.

‘மாமனார்’னு தலைப்புக் கொடுக்காம, இப்படித் தலைப்பு வெச்சி, இந்தக் கதையின் குடும்பத் தலைவருக்கும் அவர் மாமனாருக்கும் உறவு சரியில்லேங்கிறதை எத்தனை நுட்பமா புரிய வெச்சிட்டார் பார்த்தீங்களா?

தலைப்பு புரிஞ்ச அளவுக்குக் கதை புரியலீங்க.

’பக்கத்தில் எங்கோ கரும்புச் சோவைகளில் தீயைப் பற்ற வைத்தது போல எங்கும் புகை மூட்டமாக இருந்தது’ன்னு சூழ்நிலை வர்ணனையோட கதை ஆரம்பமாகுது.

‘சுடரும் சேதாரமுமில்லாத பனி மூட்டம்தான்’ என்பது அடுத்த வரி. ஏதாவது புரியுதுங்களா?

இப்படிப் புரியாத வர்ணனைகளும் விளக்கங்களும் கதை முழுக்க வருதுங்க.

‘நாம மகிழ்ச்சியா இருக்க எதையாவது வெட்டணும்னா உடனே வெட்டிடணும்’-இப்படிப் பொன்மொழிகள் வரும்.

உறவு ஒரு வெங்காயம். பிரிவும் ஒரு வெங்காயம். சருகிதழ்கள் உள்முகம் குவிந்த ஒரு மலர் வெங்காயம்’- இப்படித் தத்துவங்கள் உதிரும்.

இதெல்லாம் புரிஞ்சிக்க உங்களுக்கு அதீத அறிவாற்றல் வேணும்.

எதுவும் புரியலேன்னா விளக்கிச் சொல்லத் தெரியாத இந்த ’அறுவை’யைத் திட்டுங்க; கதாசிரியரைக் கேள்வி கேட்டுக் குடையாதீங்க.

‘சுவரில் துப்பாக்கி தொங்குதுன்னு கதையில் எழுதினா, கதை முடியறதுக்குள்ள அந்தத் துப்பாக்கி ஒரு முறையாவது வெடிக்கணும்’னு ஒரு அயல் நாட்டு எழுத்தாளர் [எட்கார் ஆலன்போ?] சொன்னதா சொல்வாங்க.

கதைக்குத் தேவையில்லாத எந்தவொரு விளக்கமோ சம்பவமோ அதில் இடம்பெறக் கூடாதுன்னு இதுக்கு அர்த்தம்.

இந்தக் கதையில் அந்த மாதிரிச் சம்பவங்கள்தான் அதிகம் இருக்கு.

சிவக்குமார், தன்னையே இந்தக் கதையின் குடும்பத் தலைவரா உருவகம் பண்ணிட்டுக் கதை சொல்றார்.

குடும்பத் தலைவர் ஓர் ஓவியர். மாதச் சம்பளத்துக்கு வேலை பார்க்குறவர். தன்னைவிட அதிகம் சம்பாதிக்கிற மனசுக்கேத்த பெண்ணை மணக்கிறார்.

ரெண்டு பேரும் வேற வேற பெரிய நகரங்களில் வேலை பார்க்குறாங்க. மனைவியின் முன்னேற்றம் கருதித் தன் வேலையை விட்டுடறார். ஒரே நகரத்தில் வசிக்கிறாங்க.

ஒரு பொண்ணுக்குப் பெற்றோர் ஆகிறாங்க.

மனைவியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிட்டு, மகளுக்காக மாமனார் வீட்டில் தங்கி, தன் தொழிலையும் பார்த்துட்டு, விவசாயம் பண்ணுற மாமனாருக்குச் சிறு சிறு உதவியும் பண்றார்.

மகளைவிட மருமகனுக்கு வருமானம் குறைவானதால, மாமனார் இவரை அவமானப்படுத்துறாராம்.

வெளிநாடு போன பெண்டாட்டி, பணம் சம்பாதிச்சுட்டு ஊர் திரும்பிடுறா. அந்தப் பணத்தில் அவளுக்காக மாமனார் வீடு கட்டுறார். தோட்டத்தில், மனைவி மகளோட நம் குடும்பத் தலைவர் பேசிட்டிருந்தப்ப.........

“சத்து கெட்ட.....”ன்னு ஆரம்பிச்சி, இவரைக் கொச்சையா திட்டினாராம் மாமனார். ரெண்டு பேரும் கைகலக்குறாங்க. மனைவி சமாதானம் பண்ணுறா. இதுக்கப்புறம் அவரைச் சந்திக்க இவர் விரும்புறதில்ல.

வேலை நடந்துட்டிருந்த வீட்டைப் பார்க்க, இவர் மனைவி மட்டும் போவாங்க.[ஒரு நாள் அந்த வீட்டைப் பார்க்கப் போற அவங்களை இவர் வழியனுப்பிட்டு எங்கோ போற மாதிரி கதை ஆரம்பமாகுது]

இந்த நிலையில், திடீர்னு மாமனார் செத்துட்டதா தகவல் வருது. அவர் செத்ததுக்கான காரணமும் தெரியல.

பெரிய ‘சைஸ்’ விகடனில் அஞ்சாறு பக்கம் நீளுற கதையின் சுருக்கம் இதுதாங்க.

மாமனார் செத்துப் போனதற்கான காரணம் புரியலேன்னு ஆசிரியர் சொல்றார்.

இவர் விவரிக்கிற பல சம்பவங்கள் எதுக்குன்னே எனக்கும் புரியலீங்க.

கதையின் ஆரம்பத்தில், மனைவியோட பேருந்துப் பயணம் பண்ணி, ஒரு சிறு நகரத்தில் இறங்கினதா சொல்றார்.

இது வரைக்கும் எங்கே குடித்தனம் நடத்தினார்? இப்போ எங்கிருந்து புறப்பட்டார்? என்ற கேள்விக்கெல்லாம் விடை இல்ல.

மனைவியை ஆட்டோவில் ஏத்தி விட்டுட்டு, வாழைத் தோப்பு, செவ்வாழைத் தோட்டம்னு எதைஎதையோ கடந்து, பார்க்கிற காட்சிகளையெல்லாம் வர்ணிச்சிட்டு [கதைக்குச் சம்பந்தமே இல்லாம] பயணம் பண்ணிட்டே இருக்கார். பயணம் முடிஞ்சி எங்க போய்ச் சேர்ந்தார்னு தெரியல!

பிரபலம் ஆகாத ஓர் ஓவியன் சுயமா தொழில் செஞ்சி பிழைக்கிறது ஆகாத காரியம். பார்த்த வேலையை விட்டுட்டார்னு கதாசிரியர் சொல்றதைச் சீரணிக்க முடியல.

இவர் செஞ்ச வேலையைப் பத்தியோ, மனைவியின் கல்வித் தகுதி, தொழில் பத்தியோ மூச்சி விடல. மனைவி வெளிநாடு போனப்ப, மகளைப் பார்த்துக்க, இவரைப் பெத்தவங்களோ உடன்பிறப்புகளோ இல்லையா? மாமனார் அவமதிக்கிறார்னா, மகளை விடுதியில் சேர்த்துட்டு இவர் தனியே வசிக்கலாமே? என்பது மாதிரியான சந்தேகங்களுக்கும் விளக்கம் இல்லை.

அப்புறம் எப்படீங்க வாசகன் கதையோட ஒன்றுவான்?

அன்பான, அனுசரிச்சிப் போகக் கூடிய நல்ல மனைவி இருக்கும் போது, மாமனாரால் பட்ட அவமானத்தை அடிப்படையா வெச்சி, ஒரு சோகக் கதையை சிவக்குமார் எழுதியிருப்பது வரவேற்கத் தக்க செயலல்ல. இது ஒரு வெற்றிப் படைப்பும் அல்ல.

வெங்காயத்தைத் தோலுரிக்கிற மாதிரி, கதைக்கு வேண்டாத சம்பவங்களையும், நிகழ்ச்சி வருணனைகளையும் நீக்கிட்டுப் பார்த்தா கதையில் ஒன்னுமே இல்லேன்னுதான் சொல்லுவேன். ’கதைக் கரு’ன்னு ஒன்னு இல்லேங்குறது மறுக்க முடியாத உண்மை.

அதனாலதான் இதுக்கு, ‘வெங்காயக் கதை’ன்னு பெயர் சூட்டினேன்.

கதாசிரியர் மனம் புண்பட்டிருந்தா பரந்த மனத்தோட என்னை மன்னிக்கும்படிக் கேட்டுக்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++