வெள்ளி, 12 அக்டோபர், 2012

குமுதம்[17.10.12] இதழைக் ’குப்பைத் தொட்டி’ ஆக்கிய எழுத்தாளர் ராஜேஷ்குமார்!

'நம்பர்1' குமுதத்தில் 'நம்பர்1' எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் சிறுகதை!

ராஜேஷ்குமார், தமிழின் நம்பர் 1 புனைகதை எழுத்தாளர் மட்டுமல்ல; ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதினங்கள் [நாவல்கள்] எழுதிச் சாதனை நிகழ்த்தியவர்;

இவரது பங்களிப்பில் கணக்கற்ற சிறுகதைகளும் உண்டு

இவர் கதைகளை வெளியிடாத பருவ இதழ்களே இல்லை எனலாம்.

அந்த அளவுக்குப் ‘பிரபலம்’ ஆனவர்.

"பிரபலம் என்பதால் ஏதேனும் அனுகூலம் உண்டா?"

நல்ல கேள்வி!

பத்திரிகைகள், இவர்களிடம் கதைகளைக் ‘கேட்டு வாங்கி’ப் போடும்.

உதவி ஆசிரியர்கள், இவர்களின் படைப்புகளைப் பிரித்துப் பார்க்கவே அஞ்சுவார்கள். பார்த்த மறு வினாடியே ‘பரிந்துரைத்து’ ஆசிரியருக்கு அனுப்பி வைப்பார்கள்.

ஆசிரியரும் படித்துப் பார்க்காமலே அச்சுக்கு அனுப்புவார்.

‘திருத்தியே ஆகவேண்டிய’ பிழை தென்பட்டாலும், பிரபலத்தின் அனுமதியோடுதான்’திருத்தம்’ செய்வார். அவர் இசைவு தர மறுத்தால், இவர் ‘தேமே’ன்னு விழிப்பாரே தவிர, படைப்பை ஒருபோதும் ‘நிராகரிக்க மாட்டார்!

பிரபலம் ஆகத் துடிக்கும் ‘கத்துக்குட்டி’ எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் இவர்களுக்கான சன்மானம் மிக அதிகம். 

சில நேரங்களில், படைப்போடுகூட, இவர்களின் புகைப்படமும் இடம் பெறுவதுண்டு.

கத்துக்குட்டிகளின் இம்மாதிரி ஆசை கனவுகளில் மட்டுமே நிறைவேறும்.

ஆக, பிரபலம் ஆகிவிட்டால், வணிக இதழ்’க்காரர்கள் வழங்கும் சலுகைகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதென்ன வணிக இதழ்?

விற்பனையையும், வருமானத்தையும் பிரதான நோக்கமாகக் கொண்ட பத்திரிகைகளைத்தான் ’வணிக இதழ்கள் என்கிறார்கள். ’மசாலா பத்திரிகைகள் என்றும் சொல்வார்கள்.

இந்தப் பிரபலங்கள், ஒருபக்கக் கதையெல்லாம் எழுத மாட்டார்கள். நாவல்களும் நீண்ட சிறுகதைகளுமே படைப்பார்கள். அது அவர்களின் ‘கவுரவத்தை’ப் பாதிக்குமாம்.

எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் குமுதம் ஆசிரியராக இருந்த போது, சிவசங்கரி, இந்துமதி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற பிரபலங்களிடம் ஒரு பக்கக் கதைகளைக் கேட்டு வாங்கிப் போட்டாராம்! [என் தாத்தா தந்த தகவல் இது]

அதன் பிறகு எந்தவொரு பிரபலமும் ஒ.ப.கதை எழுதியதாக வரலாறு இல்லை.

இத்தகைய பிரபல வணிக இதழ் எழுத்தாளர்களில் முதல்நிலை பெற்ற ராஜேஷ்குமாரின் உன் இதயம் பேசுகிறேன்’ சிறுகதையைப் [குமுதம் 17.10.2012] பலரும் படித்திருக்கக் கூடும்.

நம்பர் 1 எழுத்தாளரின் சிறுகதை, தரத்தில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறதா என்று ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

யாழினி, கோவையைச் சேர்ந்த ஒரு செல்வந்தரின் பெண் வாரிசு.

தன் மனம் கவர்ந்த ஒருவனை மணக்கிறாள்.

பெற்றோர் மற்றும் சகோதரனின் எதிர்ப்பு காரணமாக தனியே வசிக்கிறாள்.

”அவரை மணந்த பிறகு ஒரு நாளும் என் கண்கள் கலங்கியதில்லை. சந்தோசமா இருக்கேன்”. என்று இவள் சொல்வதிலிருந்தே இவள் கணவன் எத்தனை நல்லவன் என்பது புரியும்.

இந்தக் கதையின் ஆரம்ப நிகழ்வில், ‘உன்னோட கணவர் நல்லவர். நீ சந்தோசமான வாழ்க்கை வாழ்வதை உனக்குக் கல்யாணம் ஆன ஒரு மாசத்திலேயே நான் தெரிந்து கொண்டேன்” என்று யாழினியின் தந்தையும் சொல்கிறார்.

கதை முடியும் தறுவாயில், இவளுடைய அண்ணனும் இவளின் கணவனைத் தேடிப் போய், ”மாப்ளே, அண்ணன்னு நான் ஒருத்தன் இருக்கும் போது, என் தங்கை நகைகளை நீங்கள் அடகு வைக்கலாமா?” என்று கேட்டுப் பண உதவி செய்ய முன்வருகிறான்.

ஆக, யாழினி நல்ல பெண்.

அவள் கணவனும் நல்லவன்.

தந்தையும் அண்ணனும்கூட நல்லவர்களே.

உண்மை இதுவாக இருக்கையில்......................

யாழினி, தான் ஒரு நல்லவரைக் காதலிப்பதாகச் சொன்ன போதே, அந்தக் காதலனைப் பற்றித் தீவிரமாக விசாரித்துத் தந்தையும் அண்ணனும் பச்சைக் கொடி காட்டியிருக்கலாமே?

எதிர்ப்புத் தெரிவித்தது ஏன்? ஏன்? ஏன்?

கதாசிரியர் ராஜேஷ்குமார் குமுதத்தில் ஒரு ‘விளக்க அறிக்கை’ வெளியிடுவாரா?

கதை படிப்பவரை மண்டை காய வைக்கிற இன்னொரு புதிர்...............

யாழினியின் தாய் ‘தற்கொலை’ செய்து கொள்கிறாரே, அது ஏன்?

மருமகன் நல்லவன் என்பதைத் கல்யாணமாகி ஒரே மாதத்தில் தந்தையும் அண்ணனும் புரிந்து கொள்ள முடிகிற போது, தாயை மட்டும் தற்கொலை செய்து கொள்ள வைப்பது தவறு என்பது பிரபல எழுத்தாளருக்குப் புரியாமல் போனது எப்படி?

ஓடிப்போன யாழினி, தன் தந்தையின் நிதி நிறுவனத்திற்கு, நகை அடகு வைத்து ஐந்து லட்சம் கடன் வாங்க வருவதாகக் கதை தொடங்குகிறது.
மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதும், குறைந்த வட்டிக்குக் கடன் வழங்குவதுமான நிறுவனம் என்பதால் அங்கு வந்தாளாம். [கோவையில் இது போன்ற வேறு நிறுவனமே இல்லையா?]

தந்தையும் அண்ணனும் அவளை மிகக் கடுமையாகத் திட்டி, கடன் வழங்காமல் விரட்டுகிறார்கள்.

வேறு நிறுவனம் தேடி யாழினி போகும் போது, காரில் பின்தொடர்ந்து சென்ற தந்தை, அவளுக்குக் கல்யாணமான ஒரு மாதத்திலேயே மாப்பிள்ளை நல்லவர் என்பதைப் புரிந்துகொண்டதாகச் சொல்லி, மகள் மீது அன்பைப் பொழிகிறார்; அவளுக்குப் பண உதவி செய்யவும் முன் வருகிறார்.

அதே போல, அவள் அண்ணனும் உதவ முன் வருகிறான்.

இப்படி யாழினி மீது அன்பைப் பொழிகிற இருவருமே, அவள் முன்னிலையில் அவளை அளவு கடந்து வெறுப்பது போல் பாசாங்கு செய்து, நெருப்பாய்க் கொதிக்கும் வார்த்தைகளை உமிழ்வது ஏன் என்றே புரியவில்லை.

"உன் மீது நான் பாசம் வைத்திருப்பதை [காதல் கல்யாணத்திற்குப் பிறகு] உன் அண்ணன் அறிந்தால் எமோஷனல் ஆயிடுவான். நம் வீட்டிலிருந்த உன் ஃபோட்டோக்களையெல்லாம் அவன் எரிச்சிட்டான்” என்று தந்தை மகளிடம் புலம்புவதும், ”என்னமோ தெரியல. யாழினி மேல அப்பாவுக்கு அப்படியொரு கோபம்” என்று அண்ணன்காரன், அப்பாவுக்குத் தெரியாமல் தங்கை மீது கரிசனம் காட்டுவதும் எதன் பொருட்டு?

வாசகரை மறை கழன்ற கேஸுகளாக நினைத்துக் கொண்டு, அரை வேக்காட்டுப் பாத்திரங்களை உருவாக்கி நடமாடவிட்டுக் கதை பண்ணுவது யாரைத் திருப்திப்படுத்த?

குமுதம் ஆசிரியரைத்தானே?

வாசகர்களின் இரண்டு காதுகளிலும் கதாசிரியர் பூச்சுற்றப் பார்க்கிறீர்! அது நடக்கவே நடக்காது.

ஒரு தந்தையும் மகனும் மனம் விட்டுப் பேசுவதற்கு எது தடையாக இருந்தது என்பதற்குக் கதையில் எந்தவொரு விளக்கமும் இல்லை.

கதையில், வாசகரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் திடீர்த் திருப்பங்களைத் தர வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு உண்மை நிலையை மறைக்கிறார் என்பது  மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை.

மர்மக் கதைகளில் திடீர்த் திருப்பங்கள் தந்து தந்து நிகழ்ச்சிகளில்
விறுவிறுப்பு ஏற்றிப் பழக்கப்பட்ட பிரபலம், ஒரு குடும்பக் கதையிலும் இதே தந்திர உத்தியைக் கையாண்டிருப்பது, சிந்திக்கத் தெரிந்த வாசகனுக்கு அளவற்ற எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

சரளமான நடையில் கதை சொல்லிச் செல்கிறார் என்பதைத் தவிர, இப்படைப்பில் மனம் திறந்து பாராட்டும்படியாக ஒன்றுமே இல்லை என்பதே நான் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவாகும்.

பிரபல எழுத்தாளரான ராஜேஷ்குமார் எழுதிய இதே கதையை ’அறுவை மருத்துவன்’ என்னும் என் பெயரில் அனுப்பியிருந்தால் குமுதம் பிரசுரித்திருக்குமா என்பதே இறுதியாக நான் கேட்கும் கேள்வி.

குமுதமே, பதில் சொல்வாயா?

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

பிம்குறிப்பு:

இதைப் படித்து முடித்துவிட்டு, இவ்வாரக் குமுதத்தில் வெளியாகியுள்ள ஒ.ப.கதைகளைப் படிக்கும் போது, மனதுக்கு ஆறுதலாக இருந்தது!

அவை பற்றிய விமர்சனப் பதிவு நாளை வெளிவரக்கூடும்!

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
































.




6 கருத்துகள்:

  1. சரிதான்..ஆனால் க்ரைம் நாவல் என்றால் நம் நினைவுக்கு வருவது ராஜேஷ் குமார்தான் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.....

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஹாஜா மைதீன்.

    ராஜேஷ்குமார் கிரைம் நாவல் எழுதுவதில் கில்லாடிதான். அவரின் இந்தச் சிறுகதை தரமானதல்ல என்பதுதான் என் மதிப்பீடு.

    பதிலளிநீக்கு
  3. பாவம் பிரபலங்கள் உங்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படுகிறார்கள்.கூடிய சீக்கிரம் குமுதம் ஆனந்த விகடன் படிக்க உங்களுக்கு தடை விதிக்கப் படலாம்.

    பதிலளிநீக்கு
  4. //குமுதம், விகடன் படிக்கத் தடை விதிக்கப்படலாம்//

    புனை பெயரில் ஒளிந்துகொண்டல்லவா அவர்களைப் படுத்துகிறேன்!!!

    நன்றி முரளிதரன்.

    பதிலளிநீக்கு