சனி, 19 ஜனவரி, 2013

அழிவை நோக்கி microsoft நிறுவனம்???

அதன் வீழ்ச்சி பற்றி அதன் ஊழியர்களுக்கும் தெரியும்!!!
’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம், windows 8 புதிய பதிப்பு வெளியிட்டிருப்பது, கணினி பயன்படுத்துவோர் பலராலும் அறியப்பட்ட ஒன்று.

windowws 7  பதிப்பைப் பயன்படுத்திய நான், இலவசம்தானே என்ற நினைப்பில், இந்த நிறுவனம் இலவசமாக வழங்கிய, ‘முன்மாதிரி’ [release preview]  பதிப்பை என் கணினியில் நிறுவினேன்.

இதைப் பயன்படுத்துவதற்கான் காலக்கெடு, 15, ஜனவரி 2013 என்பது தெரிந்திருந்தும், win 8 ஐ நான் விலை கொடுத்து வாங்கி நிறுவவில்லை. நிறுவனம் என்னதான் செய்கிறது பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன்.

இப்போது, கணினி செயல்பட ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், restart [reboot] ஆகிறது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் reboot ஆகிறது.

இந்நிலை எதுவரை நீடிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, கணினியின் ‘help' க்குள் நுழைந்து மேய்ந்ததில், வாடிக்கையாளர்களால் ஏராள சந்தேகங்கள் எழுப்பப்பட்டு, பதில்களும் தரப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

win 8 ஐ வாங்கினாலும், ’முன்மாதிரி’ப்ப் பதிப்பிலிருந்து நேரடியாக அதை நிறுவ முடியாது என்பது தெரிந்தது. பின்வரும் வினாவையும் அதற்கான பதில்களையும் படியுங்கள்.

Question 
Peter341951 asked on 

Evaluation version of Windows 8

I have the evaluation version of Windows 8 but have been advised to buy the REAL THING. I have done so today but it will not arrive by post for several days!! Meanwhile every few hours my PC warns me to buy it. I have phoned a so called HELP LINE who were useless. Anyone any ideas?? Perhaps someone out there has also had this problem??
Microsoft seem quite happy to take our money but the back-up is poor to non existent!!!!!
Peter Russell-Smith
  •  
  •  
  •   
  •  
  •   
  •  
  •   
Alex T Jr
Found this helpful1
Answer
Alex T Jr replied on 

It has been noted for quite some time that the Preview versions will expire as of January 15, 2013 and will restart every 2 hours after the expiration date hits.  There is nothing that can be done to stop this, even though you purchased the full copy you will have to wait for it to come in and from there install it fresh.  There is no upgrade option available from the Preview builds to the final release.
They have been pushing notifications to people since the New Year began about the deadline coming.  There is nothing more they can do other than notify people of the deadline.  It is up to the user to take the steps necessary to prevent any disturbance in service.
Regards,
Me
Irrelevant by choice
Your lack of preparation doesn't constitute an emergency for me.
  •  
  •  
  •   
  •  
  •   
Andre Da Costa
Found this helpful1
Answer
Andre Da Costa replied on 

MVP Community Moderator  Community Star
In order to install Windows 8 Pro upgrade, you will first need to reinstall your original version of Windows that was running on your computer prior to installing the Windows 8 Release Preview. Whether that is (Windows XP, Vista or Windows 7). After installing it, you can then do an upgrade to Windows 8 Pro. The Windows 8 Release Preview does not support upgrades to Windows 8 Pro.
 
Reinstall Windows XP:
Reinstall Windows 7:
Learn more:
techingiteasy.wordpress.com
Windows Expert - Consumer
  •  
  •  
  •   
  •  
  •   
Alex T Jr
Found this helpful1
A


microsoft நிறுவனத்தின் இத்தகைய போக்கை ஒருவர் மிகக் கடுமையாகச் சாடியிருக்கிறார். அதையும் படியுங்கள். [win 8 ஐ மேம்படுத்துவதற்கு, release prev. பயன்படுத்தியவர்கள் உதவியிருக்கிறார்கள் என்பதை மனதில் இருத்திக்கொண்டு படியுங்கள்].


TonyrJohnson replied on 

 
I do not think this is true. Obviously it was an evaluation version and anyone using it took risks and by using it helped MS develop a better product. I have been using eval since it came out and I have not received any emails or online updates from MS saying it will expire and then reboot every two hours. In fact this approach is uncommon in software, most companies convince people to upgrade based on better products not by in effect blackmailing them by rebooting their PC;s, its probably not even legal to do this, ie take control of a customers machine and reboot it. MS is a dying company, everyone knows this including MS staff., and customer service is the worst I have ever encountered. Its a shame.
  •  
  •  
  •   
  •  
  •   

win 8 ஐ விலை கொடுத்து வாங்குவது ஒரு பிரச்சினை இல்லை.

நிறுவனம் இனியும் என்னதான் செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் காத்திருக்கப் போகிறேன்.

எனக்குக் கணினி நுட்பமெல்லாம் தெரியாது.

win 8 நிறுவ விரும்புவோர்க்கு இப்பதிவு பயன்படக்கூடும் என்ற நம்பிக்கையில்தான் இதை வெளியிடுகிறேன்.

இறுதியில் ஒரு வேண்டுகோள்:

நிறுவுவதற்கு முன், பழனி.கந்தசாமி அய்யா போல இதைப் பயன்படுத்துவோரின் அலோசனையைக் கண்டிப்பாகக் கேளுங்கள்.

win 8 , help இல் நுழைந்து, இயன்றவரை, இதை நிறுவுவதில் நேரும் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வருகைக்கு நன்றி.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
















வியாழன், 17 ஜனவரி, 2013

’குமுதம்’ பொங்கல் சிறப்பு மலர்[ரூ100] கதைகள்! ஒரு ‘சுருக்...நறுக்’ விமர்சனம்!!

மருட்டும் ஜெயமோகன்! மதி மயங்கும் வாலி! சிந்திக்கத் தூண்டும் இமயம்!

[ஐந்து கதைகளுக்கான 5 விமர்சனங்களை, இடைவெளி கொடுத்துப் பதிவு செய்திருக்கிறோம். எனவே, ஐந்தையும் ஒரே மூச்சில் படிக்க இயலாதவர்கள், முடிந்தவரை படித்துவிட்டு, எஞ்சியிருப்பதை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம். சரிதானே?]


விஞர் வாலி, ஜெயமோகன், தோப்பில் முகமது மீரான், இயக்குநர் மகேந்திரன், இமயம் என்னும் ஐம்பெரும் எழுத்தாளர்களின் சிறுகதைகள், குமுதம்[2013] பொங்கல் சிறப்பிதழுக்குக் கனம் சேர்த்திருக்கின்றன்.

இவற்றில், ‘தரத்திலும் கனமான’  கதைகள் எவை என்பதை அறிந்துகொள்ளத் துடிக்கும் உங்களின் கட்டுக்கடங்காத ஆர்வத்தை நிறைவு செய்யவே, இந்தச் சுருக்கமான, சுவையான [?] மதிப்புரை.

முதல் கதை:                   .       நப்பின்னை  

பேரு, புகழ்-வீடு, வாசல்-அப்படீன்னு காசு பணத்தோட இருக்கிற [கதையில் இப்படி அவரே குறிப்பிடுகிறார்!] கவிஞர் வாலியின் படைப்பு இது.

இது நூறு சதவீதம் ஒரு காதல் கதை.

ஆனால், இரண்டு பக்க அளவில் நீண்ட பெரிய முன்னுரை.

அது இல்லாமல் படித்தாலுமே கதை புரிகிறது. முன்னுரையின் தேவை என்ன என்பது எம் மரமண்டைக்குப் புரியவில்லை.

கதாசிரியன், தன்னையே முன்னிலைப்படுத்திக் கதை சொல்லும் உத்தியைக் கையாண்டிருக்கிறார் கவிஞர். அது தன் சொந்த அனுபவத்தையே கதையாக்கியிருக்கிறாரோ என்று நம்ப வைக்கிறது.

ஆனால், ‘இது உண்மைக் கதை’ என்றோ, ‘உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை’ என்றோ குறிப்பிடப்படவில்லை.

வாலி, நப்பின்னை என்ற பெண்ணைக் காதலிக்கிறார். இவரின் நண்பரும் பிரபல எழுத்தாளருமான சுஜாதாவின் உதவியிருந்தும் தோல்வியைச் சந்திக்கிறார்!

விளைவு?

“காவேரியில் குளித்துக் காதலைத் தலை முழுகினேன்” என்கிறார்.

சென்னை செல்கிறார்; சினிமாவில் பாடல்கள் எழுதிப் புகழ் பெறுகிறார்; பிரபலம் ஆகிறார்; நிறையச் சம்பாதிக்கிறார்.

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கு வருகிறார்.

கோயிலில், வயது முதிர்ந்த கோலத்தில் நப்பின்னையைச் சந்திக்கிறார்.

“தப்பா நினைக்கக் கூடாது” என்று பீடிகை போட்டுவிட்டு, “இவன் [வாலி] இவ்வளவு பெரிய ஆள் ஆவான்னு தெரியாம போச்சே. தெரிஞ்சிருந்தா இவனையே கல்யாணம் பன்னிண்டிருப்பேன்னு வருத்தப்பட்டது உண்டா?”ன்னு கேட்கிறார் வாலி.......................

கதை சொல்வதை இங்கே நிறுத்திவிட்டுக் கதையை வாசித்துவரும் உங்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்.

வாலி கேட்ட கேள்விக்கு, வயது முதிர்ந்த நப்பின்னை என்ன பதில் சொல்லியிருந்தால், அது யதார்த்தமாக இருக்கும்?

நாம் தரும் பதில்கள்:

பதில் ஒன்று:

“நீங்க பிரபலம் ஆவதை நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்களே. நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அதனால, வருத்தப்பட ஒன்னும் இல்ல.

பதில் இரண்டு:

“நான் இப்போ இன்னொருத்தருடைய மனைவி. அடுத்தவன் பெண்டாட்டியண்ட இப்படிக் கேள்வி கேட்கக் கூடாதுங்கிற குறைந்த பட்ச நாகரிகம் கூட உங்களுக்கு இல்லையே. சே.....”

பதில் மூன்று:

“என்னை மட்டுமல்ல, இன்னும் பல பேரை நீங்க காதலிச்சிருக்கலாம். அத்தனை பேர்கிட்டேயும், ’நான் எத்தனை பிரபலமானவன். என்னைக் கட்டிக்கலையேன்னு வருத்தப்படுறீங்களா?’ன்னு கேட்பீங்களா? கேட்டா, ஏடாகூடமா எதுவும் நடக்கலாமே. அதைப் பத்தி யோசிச்சீங்களா  வாலி அவர்களே?”

பதில் நான்கு:

”நீங்க பிரபலக் கவிஞர்  சரி, உங்களைக் கல்யாணம் பன்னிண்டிருந்தா என்னைக் கண்கலங்காம பார்த்துண்டிருப்பீங்க என்பது என்ன நிச்சயம்.”

பதில் ஐந்து:

“உங்களண்ட, ’அன்னிக்கி உங்க காதலை நான் ஏத்துக்கலேன்னு இப்பவும் நீங்க வருத்தப்படுறீங்களா?’ன்னு நான் கேட்டிருந்தா நீங்க என்ன நினைப்பீங்க? ’இன்னும் கொஞ்சம் டிரை பண்ணியிருந்தா இவள் படிஞ்சிருப்பாள்’னுதானே? பிரபலம்னு சொல்லிக்கிறீங்க, இப்படிப் புத்தி கெட்டுப் போய் அலையறீங்களே, ஏன்?”

ஆழ்ந்து யோசித்தால், இன்னும் பல பதில்கள் கிடைக்கலாம்.

இப்போது, சிறுகதையின் முடிவில், நப்பின்னை வாயிலாக, வாலி தரும் பதிலைப் படியுங்கள்.

நப்பின்னை:

‘உங்களுக்குக் காசு வந்துட்டா, எனக்குக் காதல் வருமா? காதல் என்ன- காசைப் பார்த்து வரக்கூடியதா?............பெண்கள் காசிருக்கிறவனைப் பார்த்துக் காதலிக்க மாட்டா. காசு இல்லாதவனைத்தான் காதலிப்பா......காதல் காசில்லாதவன் மேல்தான் வரும். நான் வர்றேன்......”

கதை முடிந்தது.

தாமும் குழம்பி நம்மையும் குழப்புகிறாரே வாலி?!

காதல்கிறது, இரு மனங்கள் ஒன்று சேருவதால வர்றது [’...அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்பது குறுந்தொகைப் பாடல் வரிங்க] 
அது வேறு எதையும் [காசு இருக்கோ இல்லியோ] பொருட்படுத்தாது என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கவிஞர் இப்படிச்சொல்கிறாரே, சரியா?

சரியன்று.

கதை முடிவில், காதல் பற்றிய தவறான ஒரு விளக்கத்தைத் தந்து, ஒரு அபத்தமான சிறுகதையைப் படைத்திருக்கிறார் வாலி என்பதே எம் முடிவு.

முடிவு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், நப்பின்னையை வர்ணிப்பதிலும், தம் காதல் கைகூடாத போதெல்லாம் அவர் மனம் படும் அவஸ்தையை வெளிப்படுத்துவதிலும் அசத்தியிருக்கிறார் வாலி.

சில எடுத்துக்காட்டுகள்:

“அக்கினிக் குழம்பை ஆறவைத்து அள்ளி வழித்து, ஆதி அந்தம் ஆக்கை முச்சூடும் அப்பினாற்போல ஒரு இளஞ்சிவப்பு.

”நாளுக்கு நாள்-எடை கூடிவரும் ஸ்தனங்களின் பாரத்தை ஏலாது, உடைவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்த வண்ணம் ஒசிந்து கிடக்கும் இடை”

“வாழைப்பட்டை போன்ற துடைகளை வருடுகின்ற பாக்கியம் சீட்டிப் பாவாடைக்கு மட்டுமே சித்தித்தது.”

”நப்பின்னையை நினைத்துக் கவிதைகளைக் கிறுக்கித் தள்ளினேன். எதிலும் திருப்தி இல்லாமல் கிழித்துப் போட்டேன். கழுதைக்குப் பசி தீர்ந்தது. என் காதல் பசி தீர்ந்தபாடில்லை.”

கவிஞர் வாலி அவர்களே,

தாங்கள் சிறந்த கவிஞர் என்பதை நாம் எப்போதும் மறந்ததில்லை!

                  *                    *                    *    

கதை இரண்டு:                    நிலம்     

எழுதியவர்:          ஜெயமோகன்   

சேவுகப்பெருமாள்னு மண் வெறி பிடிச்ச ஒருத்தனை மையமா வெச்சிக் கதை பின்னியிருக்காரு ஜெயமோகன்.

நூறு ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரன் அவன்.

எல்லாம் பூர்வீகம் அல்ல; அவன் சுயமாகச் சம்பாதித்தது.

அரிவாளைக் காட்டி மெரட்டுறது. கேஸைப் போட்டு வாட்டுறது. அடிச்சித் தொரத்திட்டு அதச் சேத்துக்கிறது. இப்படிச் சேர்த்த சொத்து இது. இதை, சேவுகப் பெருமாளின் மனைவியே சொல்லியிருக்கிறாள்.

”அரிவாளை மட்டும் காட்டி இன்னொருத்தன் நிலத்தை அபகரிச்சிட முடியுமா? கேஸைப் போட்டு வாட்டினான்னா, எதை வெச்சிக் கேஸு போட்டான்?”- இப்படி எழும் கேள்விகளுக்குக் கதையில் பதில் இல்லை.

 ’வெளியே கிளம்பினா எப்பவும் கைவசம் அரிவாள் இருக்கும்’ என்கிறது கதை.

நூறு ஏக்கருக்குச் சொந்தக்காரனாயிற்றே, அவன் கையில் அரிவாளுக்குப் பதிலாக ஒரு கள்ளத் துப்பாக்கியைக் கொடுத்து நடமாட விட்டிருந்தால், கதையில் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். இப்படியொரு சிந்தனை ஏனோ ஜெயமோகன் மனதில் உதிக்கவில்லை!!!

எல்லாம் பொட்டக் காடுங்களாம்.கோமணம் மாதிரி நெலமாம். நாலு ஆடு நின்னு கடிக்கக்கூட இலை இருக்காதாம். எங்கே போறதுன்னாலும் மோட்டார் பைக்தானாம். சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் வசதி படைச்ச ஆள் அல்லவாம்.

சிங்கிள் பைசா வருமானம் இல்லாத இந்த மண் மேடுகளையா பிறத்தியானை மிரட்டிப் பறிச்சான் சேவுகப்பெருமாள்னு நாம் கேட்கிற கேள்வியைக் கதாசிரியர் தனக்குத்தானே ஏன் கேட்டுக் கொள்ளவில்லை என்பது புரியாத ஒரு புதிர்!

“மண்ணுக்காகச் சாவுறதில் ஒரு கம்பீரம் இருக்குடி”ன்னு சேவுகப்பெருமாள் அவரோட பெண்டாட்டிகிட்டே ஆக்ரோசமாகப் பேசுகிறார். “கொல்றவனுக்கும் சாகத் துணியறவனுக்கும்தான் நெலம். தொடை நடுங்குற சனத்துக்கு கூலி வேலைதான் விதி.” இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ.....

பேசிப் பேசி, வெறி பிடிச்சி அலையுற ஒரு பைத்தியகாரனை இந்தத் தமிழ் மண்ணில் பார்ப்பது சாத்தியமே இல்லை.

இது முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கதாபாத்திரம்.

இப்படியொரு கதை மாந்தனை உருவாக்கி, இந்தக் கதையின் மூலம் வாசகருக்கு ஜெ.மோகன் அறிமுகம் செய்ததன் பயன் என்ன?

அவர் சிந்தித்தாரா?

இவரைப் போல இன்னும் பல ஆவேசப்பெருமாள்கள் இந்த மண்ணில் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா?

இல்லையென்றால்...........

குமுதம்காரர்கள் கதை கேட்டார்கள் என்பதற்காக அவசரகதியில் இந்தச் சிதைவுக் கதையை உருவாக்கினாரா?

எழுத்தாளரே, இதைப் படைத்ததன் நோக்கம்தான் என்னய்யா?

சேவுகப்பெருமாளின் மனைவி ராமலட்சுமி, ரொம்பவே மெனக்கெட்டுப் புருஷனைச் சம்மதிக்க வெச்சி கோயிலுக்குப் புறப்படுறது. எதிர்ப்படுறவங்களோட, கதைக்குச் சம்பந்தமே இல்லாம எதையெதையோ பேசுறது. பொத்தைமுடி ஏறும்போது, தென்படும் காட்சிகளை விவரிக்கிறது. குரங்குகளுக்குத் தேங்காய் உடைச்சித் தர்றது.  பெருமாளுக்குக் குழந்தை இல்லாததால அவனை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ராமலட்சுமி வற்புறுத்தறது. ஊத்துத் தண்ணி குடிச்சிக் களைப்பாறுறது. அய்யனார் கோயிலை வர்ணிக்கிறது........

கோயிலில் உள்ள பண்டாரத்தோட இவங்களைப் பெசவிட்டுக் கதையை இழுத்தடிக்கிறது.........

இப்படி....இப்படி......எதையெதையெல்லாமோ இடை இடையே செருகி, ’கரு’வே இல்லாத ஒரு ஒன்னேகால் பக்கக் கதையைப் பெரிய சிறுகதையாக்கிக் குமுதம் பொங்கல் சிறப்பு மலருக்கு வழ்ங்கியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.


ராமலட்சுமி, புருஷனை அழைத்துக்கொண்டு, ஒரு மலையில் குடியிருக்கிற அய்யனாரைப் பார்க்கப் போனதன் நோக்கம் என்ன என்ற கேள்விக்கும் எத்தனை முயன்றும், வலுவான காரணத்தைக் கண்டறியவே இயலவில்லை.

”என் புருஷனுக்கு எதுக்கு சாமி இந்த மண்ணாசை?”ன்னு ராமலட்சுமி பண்டாரத்திடம் கேட்கிறாள். அவர் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார்: “பிள்ளை இல்லாததனாலத்தான்.....”

இந்தக் கதைக்கு எழுத்தாளர் தந்திருக்கும் ‘முடிவு’ இதுதான்.

இதன் மூலம், ’பிள்ளை பெற்றுக்கொண்டவர்கள் நல்லவர்கள். பிள்ளை பெறாதவர்கள் எல்லாம் பிறர் மண்ணை அபகரிக்க முயலும் கல்நெஞ்சக்காரர்கள்’ என்கிறார் ஜெயமோகன்.

’நிலம்’ சிறுகதை, குறைந்தபட்சம் ஒரு கையெழுத்துப் பத்திரிகையில் பிரசுரம் ஆகக்கூடத் தகுதி பெறாத கதை!

'பிரபலம்’ என்பதற்காகப் பத்திரிகைகள் கதைக்குக் கையேந்துவதும், அவர்களில் பெரும்பாலோர், மனம் போன போக்கில் பக்கம் பக்கமாய்க் கிறுக்கித் தருவதும் தமிழ்ப் புனைகதை உலகுக்கு உண்டான சாபக்கேடு!


                  *                  *                *

கதை மூன்று:      உள்ளங்களை வாசித்தறிந்தவர்

எழுதியவர்:    தோப்பில் முகம்மது மீரான்

அல்லா பிச்சை மோதீன், பத்தம்பது வருசமா பள்ளிவாசலில் பாங்கு சொல்லி வருபவர்.

மைக் வந்த பிறகும் அதன் மூலமாகப் பாங்கு சொல்ல மறுத்தவர். “மைக் வழியாக வெளியேறும் என் குரல் ஜனங்களிடம் ஷைத்தான்தான் கொண்டு எட்ட வைப்பது”என்று சொல்லி வருபவர்.

ஆளை மாற்ற இளவயசுக்காரர்கள் முடிவெடுக்கிறார்கள். ஆனால்....

புதிதாக மைக் பிடித்தவர்கள் ஏதேனும் பாதிப்புக்கு உள்ளாகிப் பின்வாங்குகிறார்கள்.

தன்னைத் தேடி வரும் நோயாளிகளுக்கு, ஓதி ஊதித் தண்ணீர் கொடுப்பார் மோதீன். நோய் குணமாகும்.

ஒரு குழந்தை விழுங்கிய ‘ஆணி’ இவர் ஓதி ஊதிக் கொடுத்த தண்ணீரைக் குடித்ததும் பேதியில் வெளியேறுகிறது.

இப்படிப் பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. கதை முடிவில், ......

ஒரு பின்னிரவு நிலா வெட்டத்தில், அல்லாபிச்சை மோதீன், ஒரு வெள்ளைக் குதிரை மீதேறி, மேற்குத் திசை நோக்கிக் காற்றாய்ப் பறந்து போவதாக் கூறுகிறார் கதாசிரியர்.

அவர் ஏறிப் பறந்து போன குதிரையின் கால்கள் தரையில் பாவிக்கவில்லையாம். எங்கே போனார் என்று தேடியவர் கண்களுக்கும் அவர் அம்புடவில்லையாம்.

இக்கதை, முழுக்க முழுக்க மதம் சார்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு.

எனவே, இதன் மீதான விமர்சனம் தவிர்க்கப்படுகிறது.

            *                 *                   *
கதை நான்கு:                       வாசனை

எழுதியவர்:              இயக்குநர் மகேந்திரன்

வாலியைப் போலவே, கதைக்கு ஒரு முன்னுரை சேர்த்திருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற இரானிய சினிமாவின் பிதாமகன்களில் ஒருவரான, ’மஹ்சன் மக்மல்பஃப்’ என்பவர் சென்னை வந்திருந்தாராம். கடையில் பழச்சாறு அருந்திய போது, ஒரு ஏழைச் சிறுவன் அதைக் குடிக்கக் கேட்டானாம். அப்புறம், அடுத்தடுத்து அந்த ஏழைச் சிறுவன் செய்தவை அந்த இயக்குநரைப் பிரமிப்பில் ஆழ்த்தியதாம்.  ”அவனிடம் ஒரு கதை இருக்கிறது. பின் தொடருங்கள்” என்று மகேந்திரனிடம் சொன்னாராம்.

மகேந்திரனால் அவனைப் பின் தொடர இயலவில்லையாதலால், இந்தச் சிறுகதை மூலம் அவர் அவனுக்கு மரியாதை செலுத்துகிறாராம்.

சுவையான முன்னுரைதான்.

கதையும் சுவையாக இருந்தால் நல்லது. இல்லையே!

ஏழு பக்கக் கதையில், அந்தச் சிறுவனைப் பற்றிய கதை ஒரே ஒரு பக்கத்தில் அடங்கிவிடுகிறது.

இரானியப் பிதாமகனிடம்,  ஒரு கோப்பை ஜூஸ் பிச்சையாக வாங்கிய சிறுவன் செய்தது இதுதான்.........................

பிதாமகன் சொல்கிறார், படியுங்கள்.

“என்னிடம் வாங்கிய பழச்சாற்றை இன்னமும் குடிக்காத அவன், பழச்சாறு குவளையுடன் சாலையைக் கடந்து சென்றான். ஒரு திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்து உட்கார்ந்தான். ஒரு ராஜாவைப் போல, கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தான். வாகனங்களையும் போவோர் வருவோரையும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டே பெருமையுடன் பானத்தைப் பருகத் தொடங்கினான். அந்த ஏழைச் சிறுவனின் உள் மனசின் கவுரவ மனம் என்னை ஸ்தம்பிக்க வைத்தது.........”

இந்தப் புகழ்ந்துரைதான் மகேந்திரனைக் கதை எழுதத் தூண்டியதாம்.

இங்கே, நம் மனதில் எழும் சந்தேகத்திற்குத் தடை விதிக்க முடியவில்லை.

சிறுவனின் உள் மனசின் கவுரவம், பழச்சாற்றைப் பிச்சை கேட்கும்போது எங்கே போனது?

இதை ஒரு உண்மைச் சம்பவம் என்று நம்புவதற்கு  இந்த முரண்பாடு தடையாக இருக்கிறதல்லவா?

இதற்கு இயக்குநரின் பதில் என்னவாக இருக்கும்?

பழக்கடை முன்னால் இறைந்து கிடக்கும் குப்பைகளைக் கூட்டி அப்புறப்படுத்திவிட்டு, அதற்குச் சன்மானமாக, கடைக்காரர் தந்த ஜூசை, அவன் பெருமையுடன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு பருகியதாகச் சொல்லியிருந்தால் அதை நம்புவதில் நமக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. சரிதானே?

சிறுவனின் கதையைச் சொல்வதாகச் சொல்லிவிட்டு, இயக்குநர் சொல்வதென்னவோ...............

வாசனின் கதைதான்.

இவர் கற்பனை செய்த கதையின் தலைவன் அவன்தான்.

[பிதாமகனை மனதில் கொண்டுதான் அப்பாத்திரத்தை உருவாக்குகியிருக்கிறார் மகேந்திரன்]

வாசன், நல்ல பேஸ்கட்பால் வீரன். அவன் செய்யும் சாகசங்களைப் பார்த்துக் குமரிகள் பலரும் மயங்குகிறார்கள்.

அவர்களில் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியும் ஒருத்தி.

அவளுடன் ஜூஸ் பருகிய போதுதான், சிறுவன் ஜூஸ் பிச்சை கேட்ட சம்பவமும் நடக்கிறது.

அவனைப் பார்த்து, “பிச்சைக்காரனுக்கு திமிரைப்பார்” என்றாளாம் இளவரசி.

அதனால் அவளை வெறுத்து ஒதுக்கிய வாசன், சிறுவனையும் அழைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா போகிறான். தொழில் அதிபர் ஆகிறான். திருமணமும் செய்துகொள்கிறான். மகள் பிறக்கிறாள். தான் படிக்க வைத்து டாக்டராக்கிய ஏழைக்கே தன் மகளையும் மணம் முடித்து வைக்கிறான்.

திரைப்பட இயக்குநர் அல்லவா? சஸ்பென்ஸெல்லாம் கொடுத்து, ஒரு நீண்ட சிறுகதையைத் தயாரித்திருக்கிறார் மகேந்திரன்.

அவருக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்..........

இயக்குநர் அவர்களே, திரைப்படத்திற்குக் கதை எழுதுவது வேறு. தரமான சிறுகதை எழுதுவது வேறு.

              *                 *                    *

கதை ஐந்து:                கொலை சேவல்

எழுதியவர்:                        இமயம்

ஐந்து பிரபலங்கள் எழுதிய கதைகளில் ‘தேர்ச்சி மதிப்பெண்’ பெறுவது இந்த ஒன்று மட்டும்தான்!

பாலுணர்வுப் பிரச்சினைகளில் சிக்குண்டு, அவற்றிலிருந்து விடுபடவே இயலாத நிலையில், மூட நம்பிக்கைகளுக்குப் பலியாகும் ஒரு கிராமத்துப் பெண்ணின் அவல நிலையைப் படிப்பவர் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் படம் பிடித்திருக்கிறார் இமயம்.

கணவனை இழந்தவள் கோகிலா.

அவள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த விறகுக் கடையில் வேலை பார்ப்பவன் செல்வம். கோகிலாவை நிழல் போல் தொடர்ந்து உதவிகள் செய்கிறான்.  அவனுக்குச் சோறு போட்டு ஆதரித்ததோடு, தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளவும் அனுமதிக்கிறாள் கோகிலா.

இரண்டு பேருக்கும் உறவாகிவிடுகிறது.

ஓராண்டு கழிய, அடுத்தடுத்து நடந்த விபரீதங்கள் கோகிலாவை நிலைகுலைய வைக்கின்றன.

கோகிலாவின் பெரிய மகள் லதாவுடனும் உறவு கொள்கிறான் செல்வம்.

“எங்கூடவும் படுப்ப. என் மக கூடவும் படுப்பியாடா கவுட்டுப் பயலேன்னு அவனை விரட்டியடிக்கிறாள். அப்புறமும் சோதனைகள் தொடர்கின்றன. லதா செல்வம் வீட்டுக்கே ஓடிவிட, இருவருக்கும் மணம் முடிக்கிறாள் கோகிலா.

அதன் பிறகும் ஒரு அசிங்கம் நடந்துவிடுகிறது. கோகிலாவின் இன்னொரு மகளான கவுரியைக் கூட்டிக் கொண்டு ஓடிவிடுகிறான் செல்வம்.

ரொம்பவே மனம் ஒடிந்து போகிறாள் கோகிலா. லதாவின் பரிதாப நிலை அவளை மிகுந்த கவலைக்குள்ளாக்குகிறது. இளையவளையும் செல்வத்தையும் திருத்த முடியாத சோகத்துடன் காவல்துறையின் உதவியை நாடியும்கூட, அந்த இருவரையும் வழிக்குக் கொண்டுவர இயலவில்லை.

நிராதரவான நிலையில், சாந்தாவின் துணையோடு ‘செய்வினை’ செய்து, எதிரியைச் சாகடிக்கும் ஒரு பூசாரியின் உதவியை நாடுகிறாள். செல்வத்தை மட்டும் சாகடிப்பது அவள் நோக்கம்.

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துயரங்களுக்கான காரணங்களை, ஓரளவுக்கேனும் சிந்தித்து அறிய இயலாத பாமர மக்களை........

 கருப்பையா என்னும் அசைவ சாமியின் பிரதிநிதியாகத் தன்னை  நம்ப வைப்பதன் மூலம் பிழைப்பு நடத்துபவன் அந்தப் பூசாரி.

உயிருள்ள சேவலை, கருப்பையா சாமி கோயிலில் நடப்பட்டுள்ள வேலின் முனையில் குத்திப் பலி கொடுத்தால், பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்ற கிராமப் புறத்து மக்களின் மூட நம்பிக்கையைத் தன்னலத்துக்காகப் பயன்படுத்தி வருபவன் அவன்.

பூசாரி, பச்சை நிற சீலைக்காரியிடம், “செய்வினை, புடி இல்லாத கத்தி மாதிரி. படிப்பணம் மூனு வாட்டி கட்டணும். தவறிட்டா செய்வினை, செஞ்சவங்க பக்கமே திரும்பிடும்” என்று மிரட்டுவதைக் காட்சிப்படுத்துவதன் மூலமும்,

கோகிலாவிடம், “நீ நல்ல காரியமா வந்திருக்கிற. அதுவும் இன்னிக்கி நிறைஞ்ச வெள்ளிக் கிழமை. இனிமே நீ ஊருக்குப் போயிட்டு வர முடியாது. அதனால, கோயிலுக்குப் பின்னால போ.ஒரு பய கடை போட்டிருப்பான். சாமி பொருளும் அவன்கிட்ட வாங்கிக்க. நாட்டுக் கோழியும் அவன்கிட்டயே கேட்டுப்பாரு. கொடுப்பான். என் மவன்தான் அவன்” என்று பூசாரி சொல்வதாகக் கதையை முடித்திருப்பதன் மூலமும் அவன் எப்படிப்பட்டவன் என்பதை வாசகருக்குப் புரிய வைக்கிறார் கதாசிரியர்.

கதை சொல்லும் பாங்கு மெச்சத் தகுந்ததாக உள்ளது. சலிப்பு ஏற்படுத்தாத விறுவிறுப்பான நடை.

காவல்துறைப் பெண் ஆய்வாளர்,  செல்வத்தைப் பார்த்து,  “ஒரு வருசத்திலியே அக்காவையும் இயித்துகிட்டுப் போவ. தங்கச்சியையும் இயித்துகிட்டுப் போவியாடா தேவிடியா மவன. உனக்கு சாமான் அம்மாம் பெருசாடா?” என்று கேட்கிற இடமும், கவுரியிடம்,  “ரெண்டு நாள் டைம் தர்றேன். அதுக்குள்ளாற அவன் கட்டுன தாலியை அவுத்துக் கெடாசு. இல்லன்னா அவனுக்குச் சாமானே இல்லாம பண்ணிடுவேன்” என்று எச்சரிக்கிற இடமும் சங்கடப்படுத்தினாலும்,  வாசகர்கள்,  எழுத்தாளர் இமயத்தைப் பாராட்டுவதில் தயக்கம் காட்ட  மாட்டார்கள்.

நாமும் மனதார அவரைப் பாராட்டுகிறோம்.

                        *                 *                  *
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++























                         

சனி, 12 ஜனவரி, 2013

விகடனில் [16.1.13] ஒரு ‘கருச்சிதைவு’க் கதை!!!

’பிரபஞ்சன்’ அவர்களே, இப்படியொரு கதை இனி வேண்டாம்!

ந்த வார விகடனின் [16.01.13] சிறுகதைப் பக்கங்களை நிரப்பும் வாய்ப்பைப் பெற்றவர் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள்.

கதைத் தலைப்பு:         நாளைக்கும் வரும் கிளிகள்

தலைப்பைப் படித்தவுடன், இது கிளிகள் பற்றிய கதை என்று நினைத்தால், நீங்கள் நட்சத்திர எழுத்தாளர்களின் கதைகளைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு அருகதை அற்றவர் என்று பொருள்!!!

”மாமா” என்று பலராலும் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு மருத்துவரை நிருபர் பேட்டி காண்பது பற்றிய கதை இது. கிளிகளும் வந்து போகின்றன. அவ்வளவுதான்.

கதைச் சுருக்கம் பார்ப்போம். நடுநடுவே எழும் சந்தேகங்களுக்கும் விடை தேடுவோம்.

நிருபர், ’மாமா’ எனப்படும் அந்தப் பிரமுகரைப் பேட்டி காணப் போகிறார்.

அவரைத் தெரியாதவர்களே இல்லையாம். சிறு குழந்தைகள்கூட அறிவார்களாம். நிருபர் விசாரிக்காமலே, ஒரு இளநீர்க் கடைக்காரி, “மாமாவைத்தானே பார்க்க வந்தீங்க?”ன்னு கேட்டு, முகவரியும் சொன்னாளாம்!

அந்தப் பிரமுகரின் பெயர்......?

அவரே சொல்கிறார், கவனியுங்கள்.....

“நான் சந்துரு. சந்திரசேகரன். ஜனங்க மாமான்னு கூப்பிடறாங்க. ஏன்னு தெரியல. தாயின் சகோதரருக்கு மாமான்னுதானே பேர். சரின்னு நான் ஏத்துகிட்டேன்.”

குழந்தைகள், தங்களுக்குப் பிடிச்ச பெரியவங்களை “மாமா”ன்னு கூப்பிடுறது நமக்குத் தெரியும் [’நேரு மாமா’ மாதிரி]. மத்த வயசுக்காரங்க கூப்பிடுவாங்களா? யோசனை பண்ணிப் பண்ணி எனக்கு மண்டை காயுது. உங்களுக்கு எப்படியோ?

கதையைத் தொடர்வோம்............

“நான் எம்.டி. படிச்ச டாக்டர். இருபது வருஷ அனுபவம் எனக்கு உண்டு. கேன்சர், ஹெச்.ஐ.வி. போன்ற எந்தவொரு நோயாக இருந்தாலும் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதில்லை. நோயாளிகள் சாய்ந்து கொள்ளத் தோள் தேடுபவர்கள். அன்புக்கு அன்பாகச் சொல்லப்படும் ஒரு வார்த்தைக்கு ஏங்குகிறார்கள். நான் அவர்களுக்கு ஆத்ம மருத்துவம் செய்கிறேன்.......... உள்நோக்கிப் பார்த்துக் கொள்ளச் சொல்லிக் கொடுக்கிறேன்...” என்று நிருபரிடம் சொல்கிறார் சந்துரு மாமா.

இங்கே நமக்கு மீண்டும் ஒரு சந்தேகம்...........

‘ஆத்ம மருத்துவம்’னு ஒரு புதிய மருத்துவ முறையைக்[?] கையாள்றதா மாமா சொல்றார். கதை முடியும் வரை அதைப்பற்றி அவர் விளக்கம் தரவே இல்லை. நிருபரும் கேட்கவில்லை. இவர் அவரைக் கேட்க விடவும் இல்லை. ஏன்?

பேட்டி காண வந்த நிருபர்.....

 “நீங்கள் ஒரு பிரமுகராக அறியப்பட்டது எப்படி?"

"இப்படியொரு மருத்துவ முறையைக் கையாண்டு எவ்வளவு பேரைக் குணப்படுத்தியிருக்கிறீர்கள்?"

"எவரையும் குணப்படுத்தியது இல்லையென்றால் இந்த மருத்துவத்தை நீங்கள் தொடர்வது ஏன்?"

"நோய் குணமாகாது என்று தெரிந்தும் நோயாளிகள் உங்களைத் தேடி வருவது எப்படிச் சாத்தியமாகிறது?"

"வெறும் ஆறுதல் மொழிக்காக என்றால், அது நம்பும்படியாக இல்லையே?"

இவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்டிருக்க வேண்டாமா? கேட்கவில்லையே!

நிருபருக்குக் கேள்விகள் கேட்க வாய்ப்பே  தராத மாமா, அவர் கேட்க நினைப்பதாகத் தானே கேள்வி எழுப்பி, கதைக்குச் சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ சொல்லிக்கொண்டு போகிறார். 

[தொடக்க நிலையிலேயே, ‘நிகழ்ச்சி அமைப்பில்’ கோட்டை விட்டுவிட்டீர்களே பிரபஞ்சன்!]


மாமாவும் நிருபரும் உணவருந்துகிறார்கள். மூன்றாவதாக ஒரு இலை போடப்பட்டு, அதில் உணவும் பரிமாறப்படுகிறது. அனால், அதை உண்ண எவரும் வரவில்லை.

மாமா சொல்கிறார்: “என் மனைவி அதைச் சாப்பிடுகிறார்”

“பிரபஞ்சன் அவர்களே, ஆத்ம மருத்துவம் செய்துதானே மாமா பிரமுகர் ஆனார்? .அவரைப் பேட்டி எடுக்கத்தானே நிருபரை அழைத்து வந்தீர்கள்? 

ஆத்ம மருத்துவம் செய்து பிரபலம் அடைந்த மருத்துவர், அந்த மருத்துவ முறையில் சாதித்துப் பிரபலம் ஆனது எப்படி என்பதை வாசகருக்கு விளக்கிச் சொல்லத்தானே இந்தக் கதையை எழுதினீர்கள்? கதையின் ‘கரு’வும் அதுதானே?

ஆனால், உங்கள் நோக்கம் இக்கதையின் மூலம் ஓரளவுகூட நிறைவேறவில்லையே! கதை தடம்புரண்டுவிட்டதே! தன் மருத்துவ முறையை விளக்க வேண்டிய மாமா, இறந்துபோன மனைவி பற்றிப் பேசுகிறாரே, நீங்கள் விரும்பித்தான் அவரை இங்கே பேசவிட்டீர்களா?

உங்கள்...மன்னிக்கவும், நம் மருத்துவர் மாமா நிருபரிடம் தொடர்ந்து சொல்கிறார்:

“மதியம் ஒரு மணிக்கு நீங்கள் இங்கே இருந்தால், இரண்டு பச்சைக் கிளிகள் இங்கே வந்து நான் வைக்கும் பழங்களைச் சாப்பிட்டுப் போவதைப் பார்க்கலாம். சமையல்காரி வைத்தால் சாப்பிடாது.”

அப்புறம் தன் அக்கா மகள் பற்றியும் ஒரு ‘சுருக்’ கதை சொல்கிறார்!

மாமா வாயிலாகச் சொல்கிற இந்த உட்கதைகளையெல்லாம் நீங்கள் மனதார நம்பியும் விரும்பியும்தான் முதன்மைக் கதையில் சேர்த்தீர்களா படைப்பாளரே?

இதற்கு உங்கள் பதில் தேவையில்லை. இதெல்லாம் உங்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள். ஆனால், நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டிய கேள்வி ஒன்று உண்டு. அது?

நீங்கள் சொல்ல வந்த முதன்மைக் கதைக்கும் மேற்கண்ட சம்பவங்களுக்கும் சம்பந்தமே இல்லை; இது ஒரு முழுமை பெற்ற படைப்பும் அல்ல.

இந்த உண்மையை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்தானே?

தமிழ்ப் புனைகதை உலகுக்கு மிகச் சிறந்த பல படைப்புகளைத் தந்து, புகழீட்டி வாழும் பிரபல எழுத்தாளர் நீங்கள். எடுத்துக்கொண்ட கதைப் பொருள் என்னவென்றே புரியாத நிலையில், குறைப் பிரசவமாய் இந்தக் கதையைப் படைத்துவிட்டீர்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறோம்.


இனியும் இப்படிப்பட்ட ஒரு கதையைப் படைத்திட வேண்டாம் என்பதே தங்கள் முன் நாம் வைக்கும் கோரிக்கை.

மன்னியுங்கள்.

*****************************************************************************************************************************