செவ்வாய், 8 ஜனவரி, 2013

வாழ்த்துச் செய்தி அனுப்பும் வழக்கம் இல்லாதவரா நீங்கள்?

இந்த ஒரு பக்கக் கதையைத் தவறாமல் படியுங்கள்!

கதைத் தலைப்பு:     “ஏங்க, உங்களைத்தானே?”

“ஏங்க, உங்களைத்தானே?”

“சொல்லு.”

“என்ன செய்துட்டிருக்கீங்க?”

“பொங்கல் வரப்போகுதில்லையா, வாழ்த்து எழுதிட்டிருக்கேன்.”

“நீங்க வாழ்த்தலேன்னா பொங்கல் கோவிச்சுக்காது. கட்டடக் காண்ட்ராக்டர் நம்ம பையனுக்கு வேலை போட்டுத் தர்றதா சென்னை போய்ட்டு வந்து சொன்னீங்களே, அவருக்கு அதை நினைவுபடுத்தி ஒரு ஃபோன் பண்ணுங்க. இல்லேன்னா மெஸேஜ் அனுப்புங்க.”

“பெரிய மனுஷங்க சொன்ன சொல்லைக் காப்பாத்துவாங்க. ஃபோனு கீனுன்னு நச்சரிச்சா கடுப்பாயிடுவாங்க. காரியம் கெட்டுடும். நீ சும்மா இரு.”

”ஏங்க, உங்களைத்தானே?”

“சொல்லு.”

என்ன செய்துட்டிருக்கீங்க?”

“பிறந்த நாள் வாழ்த்து எழுதிட்டிருக்கேன்.”

”நீங்க வாழ்த்தலேன்னா யாரும் அற்பாயுசில் போயிட மாட்டாங்க. பொழப்புக் கெட்ட மனுஷன் நீங்க. நம் செந்தில் விசயமா காண்ட்ராக்டருக்கு ஒரு தகவல் அனுப்பத் துப்பில்ல. வாழ்த்து அனுப்பறாராம் வாழ்த்து. எதிர்த்த வீட்டுக்காரர் பட்டணம் போறாராம். காண்ட்ராக்டரைச் சந்திச்சி நினைவுபடுத்திட்டு வரச் சொல்லுங்க.”

“வர்றவன் போறவன்கிட்டே எல்லாம் சொல்லி அனுப்பறானேன்னு அவர் கோவிச்சுக்குவார். தொணதொணக்காதே. வாயை மூடிட்டிரு.”

”ஏங்க, உங்களைத்தானே?”

“வெளிநாடு போறவருக்குப் பயணம் சிறக்கணும்னு வாழ்த்து எழுதிட்டிருக்கேன்.”

“இதோ பாருங்க, இனியும் இப்படிக் கிறுக்குத்தனமா ஏதாச்சும் பண்ணிட்டிருந்தீங்கன்னா என்கிட்ட ரொம்பவே வாங்கிக் கட்டிக்குவீங்க. உடனே புறப்பட்டுப் போயி, அவரைச் சந்திச்சிப் பேசிட்டு வாங்க.”

“அவர் என் பால்ய நண்பர். வாக்குத் தவறாதவர். கண்டிப்பா உதவுவார். இனியும் இதப்பத்தி நீ பேசினா நான் பொல்லாதவன் ஆயிடுவேன்.”

“ஏண்டி, உன்னைத்தானே?”

“சொல்லுங்க. உங்க முதுகுப் பக்கம்தான் அரிசியில் கல் பொறுக்கிட்டிருக்கேன்.”

நீ கல் பொறுக்கலேன்னா அரிசி வேகாதாக்கும். இந்தா, காண்ட்ராக்டர் ஃபோன் மெஸேஜ் அனுப்பியிருக்கார். படி.”

“நீங்களே படிங்க.”

“அன்புள்ள வேலாயுதத்துக்கு, நலம்; நலமறிய அவா. நீங்கள் அனுப்பிய வாழ்த்துகள் எல்லாம், நான் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தன. உங்கள் மகனின் வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அவனை அழைத்துக்கொண்டு உடனே நேரில் வாருங்கள்.”

“வாழ்த்துச் செய்தி அனுப்பறது வீணான வேலைன்னு இத்தனை நாளும் நினைச்சிட்டிருந்தேன். அது ரொம்பப் பெரிய தப்பு. என்னை மன்னிச்சுடுங்க.”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1 கருத்து: