வெள்ளி, 29 மார்ச், 2013

தமிழில், அதிக ‘விலைமதிப்புள்ள’தும் ‘வருவாய்’ ஈட்டுவதுமான வலைத்தளங்கள் எவை?

நாளிதழ்கள்: No.1: தினமலர்; No.2: தினகரன்; No.3: தினமணி; No.4: தினத்தந்தி. வார இதழ்கள்: விகடன்... குமுதம்... குங்குமம்... கல்கி...
===================================================
digsitevalue.com வழங்கும் புள்ளிவிவரத்தை [18.03.2013] ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியல்.
=========================================================================================

தள முகவரி--alexa தரவரிசை--கூகிள் தரமதிப்பு--தினசரி, பார்வையாளர்--நாள் வருவாய்--விலை மதிப்பு

நாளிதழ்கள்:

1.dinamalar.com----------2211--------------------6/10-----------------------------37800------------------------------$950-------------------&959222

2.dinakaran..com----------9145--------------------5/10-----------------------------15645------------------------------$290-------------------$291851

3.dinamani.com----------16466--------------------6/10-----------------------------13420------------------------------$168-------------------$140183

4,dailythanthi.com-------27012--------------------5/10-------------------------------8140-------------------------------$85-------------------$83785


வார இதழ்கள்:

1.vikatan.com--------------14960--------------------6/10-----------------------------10340---------------------------$315---------------$319639

2.kumudam.com--------116392--------------------5/10-----------------------------5643------------------------------$64-----------------$49420

3.kungumam.co.in-------717708--------------------4/10-----------------------------940--------------------------------$6-------------------$5731

4.kalkionline.com-------995080--------------------5/10-------------------------------544--------------------------------$5-------------------$3954

==========================================================================================

தேவைப்படுவோர், digsitevalue.com இல் நுழைந்து தத்தம் வலைத்தளத்தின் ‘விலை மதிப்பை’ [website value]யும் பிற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். வளைந்த புள்ளிக்கோலத்தைக் ‘கிளிக்’ செய்து ‘refresh' செய்துகொள்வது முக்கியம்.

இன்னும் அதிக விவரம் தர விருப்பம். நேரமில்லை.வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன்.

=========================================================================================

முக்கிய குறிப்பு; என் தளத்திற்கான புள்ளி விவரத்தில்.....

website value: $16186 என்றிருக்கிறது. குங்குமம், கல்கி ... இதழ்களைவிட அதிகம்! நம்ப முடியவில்லை!

daily revenue- $21 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தொகை எனக்குக் கிடைத்ததில்லை; கூகிள் எடுத்துக்கொள்கிறதா? புரியவில்லை!

இந்தத் ‘தொழில் நுட்பம்’ பற்றியெல்லாம் எனக்கு ஒன்னுமே தெரியாதுங்க. ஏதோ ஆசையில் போட்ட பதிவு இது.

இம்மாதிரிப் புள்ளிவிவரத்தைத் தொழிநுட்பப் பதிவர்கள் வழங்கியிருந்தால் என்னை மன்னித்திடுக.

தங்கள் வருகைக்கு நன்றி

=========================================================================================



செவ்வாய், 26 மார்ச், 2013

’அதுக்கு’ ’இது’தானா இடம்!? [ஒரு பக்க ‘அனுபவ’க் கதை!!]

புகழ் பெற்ற , திருச்செங்கோடு மலைக்கோயிலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தில் முகிழ்த்த கதை இது!!!

ப்போது எனக்கு முப்பது வயது.

இயல்பாகவே, இறை வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத நான், அன்பு மனைவியின் தட்ட முடியாத வேண்டுதலின் பேரில், திருச்செங்கோடு மலைக் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தது.

வாகனங்கள் செல்லுவதற்கான சாலை வசதியெல்லாம் அப்போது இல்லை. படிகளில் பயணம் செய்துதான் மலை உச்சியிலுள்ள மாதொருபாகனைத் தரிசிக்க வேண்டும்.

கால் வலியைச் சற்றே குறைக்க, படிகளை எண்ணிக்கொண்டே ஏறுவது ஒருவகை நம்பிக்கை.

“ஒன்னு...ரெண்டு...மூனு...”

நினைவு சிதறாமல் எண்ணியபடி மேலே சென்று கொண்டிருந்தேன்.

எண்ணிக்கை சில நூறுகளைக் கடந்தபோது.....

“ம்...ம்...ம்...விடுங்க.” மனதைக் கிறங்கடிக்கும் இளம் பெண்ணின் சிணுங்கல் ஓசை கேட்டது.

அதிர்ச்சியுடன், பார்வையைச் சற்றே உயர்த்திய போது, களைப்பாறுவதற்கான ‘ஓய்வு மண்டபம்’ கண்களில் பட்டது. மலையின் உச்சி வரை இவ்வகை மண்டபங்கள் உள்ளன.

எதிர்ப்பட்ட மண்டபத்தின் உள்ளே, ஒரு வாலிபனின் அரவணைப்பில் ஓர் இளம் பெண் நெளிந்துகொண்டிருந்தாள்.. அவளின் கன்னங்களை வருடி, இதழ்களில் முத்தமிடும் கட்டத்தை அவன் அணுகிவிட்டிருப்பது தெரிந்தது..

படி எண்ணுவதை அறவே மறந்தேன். அடுத்த அடி வைக்கவும் மனமில்லாமல், நின்ற இடத்தில் நின்ற போது.....

”இங்கே வேண்டாம். அந்த மண்டபத்துக்குப் போயிடலாம்” என்று அவள் சொல்ல, அவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.

“இவர்களின் காமக் களியாட்டத்துக்குப் புனிதமான இந்தக் கோயில்தானா கிடைத்தது” என்று முணுமுணுத்துக்கொண்டே, சற்று இடைவெளி கொடுத்து அவர்களைப் பின்தொடர்ந்தேன்.

வழியில், சரிவான பாறையில் வடித்தெடுத்த அந்தப் பிரமாண்ட ஐந்து தலை நாகத்துக்குக் குங்குமப் பொடி தூவினேன்.

பக்கவாட்டில், அறுபது அறுபது விளக்குகள் கொண்ட அறுபதாம் படியைக் கடந்த போதும், கை நீட்டும் பிச்சைக்காரர்களுக்குச் சில்லரை போட்ட போதும்கூட, என் பார்வை அந்த இணையை விட்டு விலகாமலே இருந்தது.

“ஒரு சாமி கோயிலில், தட்டுறதும் தொட்டுத் தடவுறதும் இடிக்கிறதுமா ஜல்சா பண்ணிட்டுப் போறான். கலி முத்திப் போச்சி.” இறங்கி வந்துகொண்டிருந்த கும்பலில் ஒரு பெரியவர் மனம் நொந்து சொன்னது கேட்டது.

தொடர்ந்த மலையேறும் பயணத்தில், ’தேவரடியார் மண்டபம்’ குறுக்கிட்டது. அதனுள் நுழைவதைத் தவிர்த்துப் பக்கவாட்டுப் பாதையில் செல்வதே பக்தர்களின் வழக்கம்.

அந்த இளஞ்ஜோடியோ, தயங்காமல் அதனுள் நுழைந்தது.

உள்ளேயிருந்து வந்த தொடர்ச்சியான  ‘இச்...இச்...இச்...” ஓசை என் செவிகளில் பாய்ந்து என்னைச் சுட்டெரித்தது.

“ஈனப் பிறவிகள்” என்று மனத்தளவில் சாடிக்கொண்டே நகர முற்பட்டபோது, எனக்குப் பின்னாலிருந்து பேச்சுக் குரல்.

“தள்ளிகிட்டு வந்திருக்கான்.”

“இளசு...புதுசு.”

”நல்ல சான்ஸ். வாங்கடா.”

பக்கவாட்டுக் குன்றுகளின் மறைவிலிருந்து நான்கு முரடர்கள் வெளிப்பட்டார்கள்.

தண்ணியடித்துவிட்டுக் களவாடிய பணத்தை வைத்துச் சூதாடும் கும்பல் அது. குன்றுகளுக்கும் புதர்களுக்கும் இடையே உள்ள மறைவிடங்கள்தான் அவர்களின் பாசறை.

என்னையும் தாக்கக்கூடும் என்பதால், அவர்களின் பார்வையில் தட்டுப்படாமலிருக்க, மண்டபத்தைக் கடந்து, படிகளை ஒட்டிய ஒரு பெரிய குன்றின் மறைவில் பதுங்கி, நடக்கவிருப்பதைக் கண்காணித்தேன்.

நான் பயந்தது போல ஏதும் நடந்துவிடவில்லை.

ரவுடிகளின் காலடிச் சத்தம் கேட்டோ என்னவோ, அந்த ஜோடி மண்டபத்திலிருந்து வெளியேறி, விரைந்து படியேறியது.

ரவுடிகளும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

“புத்தி கெட்ட புள்ளைகளா இருக்கே. இவர்களின் இன்ப விளையாட்டுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?” என்று அலுத்துக் கொண்டேன்.

 அன்று பார்த்துப் பக்தர்களின் வருகையும் மிகக் குறைவாக இருந்தது. அவர்களிலும் இளைஞர்களைக்  காண முடியவில்லை. அச்சத்தில் என் ஒட்டுமொத்த உடம்பும் லேசாக நடுங்கத் தொடங்கியது. நீண்ட இடைவெளி கொடுத்து, மிக மெதுவாகப் படிகளில் பயணித்தேன்.

அந்த இளஞ்ஜோடிக்கு நேரப்போகும் ஆபத்தைத் தாறுமாறாகக் கற்பனை செய்துகொண்டே படியேறிய போது மேலேயிருந்து கூச்சல் கேட்டது.

கோயிலுக்குள் இருந்த ஒரு கும்பல், மலடிக் குன்றை நோக்கி விரைந்துகொண்டிருப்பது கண்டு, அவர்களுடன் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

குன்றின் அருகே....

காதலர்களைக் காணோம்; ரவுடிகளையும் காணோம்.

நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர், தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ நாங்க பத்து பேர் குன்றைச் சுத்திட்டுத் திரும்பும் போது, அந்த ஜோடி எங்களைக் கடந்து போச்சு. குழந்தைப் பேறு இல்லாததால, மலடிக் குன்றைச் சுத்தப் போறாங்கன்னு நினைச்சோம்; அங்கிருந்து குதிச்சித் தற்கொலை பண்ணிக்குவாங்கன்னு எதிர்பார்க்கல.’

சொல்லிவிட்டு, அவர்கள் விட்டுச் சென்ற கடிதத்தைப் படித்தார்: “வெவ்வேறு சாதியில் பிறந்துவிட்ட எங்கள் காதலுக்கு, அர்த்தமில்லாத கட்டுப்பாடுகள் கொண்ட இந்தச் சமுதாயத்தில் இடமில்லை. கொஞ்ச நேரமேனும் , இந்தச் சமுதாயத்தைத் துச்சமாக மதித்து நடந்து கொண்டதில் ஒருவித அற்ப சந்தோசம். அந்தத் சந்தோசத்துடன் இந்தக் கேடுகெட்ட உலகத்தைவிட்டே போகிறோம்.”

“இவர்களுக்குக் காமக் களியாட்டம் புரிய வேறு இடம் இல்லையா?” என்று எரிச்சலுடன் முன்பு முணுமுணுத்த வார்த்தைகளை நெஞ்சுருக நினைத்துப் பார்க்கிறேன்.

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட நிலையிலும், இந்தச் சம்பவம் என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு; மலையின் உச்சியில், செங்குத்தான பகுதியில் அமைந்துள்ளது ‘மலடிக் குன்று’.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அதை வலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது திருச்செங்கோடு வட்டார மக்களின் நம்பிக்கை.

அது சாத்தியமோ இல்லையோ, காதலில் தோல்வியுற்றவர்களும், பிற தோல்விகளைக் கண்டவர்கள் பலரும் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டது மிகப் பெரிய சோகம்.

நான் மலைக் கோயிலுக்குச் சென்று மிகப்பல ஆண்டுகள் ஆயிற்று. இப்போதைய நிலவரத்தை  அறியேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++














சனி, 23 மார்ச், 2013

"கடவுள் இல்லை” -அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அறிவிப்பு!!!

ஊடகங்களில் இப்படியொரு செய்தி வெளியானால், இம்மண்ணுலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

னக்கு நானே எழுப்பிக் கொண்ட கேள்வி இது.

பதிலும் என்னுடையதே.

இந்தக் கேள்வி-பதிலின் நோக்கம் அனைவரையும் சிந்திக்கத் தூண்டுவது மட்டுமே; எவரொருவர் மனதையும் புண்படுத்துவது அல்ல.

டவுள் என்று ஒருவர் இல்லையென்பது உறுதி செய்யப்பட்டால், இப்போதைய நம் வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்கள் நிகழுமா?

’நிகழும்’ என்று நம்புவோர் மிகப் பலர்?

தர்ம சிந்தனை புதை குழிக்குப் போக, அதர்மம் தலைவிரித்தாடும்.

திருட்டு, கொள்ளை, கொலைச் சம்பவங்கள் பெருகும். [இப்போது என்ன வாழுகிறது என்று யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்].

இளம் பெண்களைக் கடத்துவதும் கற்பழிப்பதும் அதிகரிக்கும்.

நல்லவர்களும் கெட்டவர்களாக மாற, சுய நலம் மேலோங்க, இந்த உலகமே கலவர பூமியாக மாறி, மனித இனம் போரிட்டு அழிந்து போகும்.

மிகப் பலரின் இந்த நம்பிக்கை பலிக்குமா?

நிச்சயமாக இல்லை.

கடவுளுக்குப் பயந்துகொண்டு மனிதன் குற்றம் புரியாமல் இருந்ததில்லை. [கடவுள் நம்பிக்கையாளர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்; மேலே படியுங்கள்.]

ஒருவனுக்கு உரியதைப் பறிக்க, அல்லது திருட இன்னொருவன் அஞ்சுவதற்குக் காரணம், கடவுள் பயமல்ல; பொருளுக்கு உரியவனால் அல்லது அவனைச் சார்ந்தவர்களால் தாக்கப்படுவோம் என்ற முன்னெச்சரிக்கையே காரணம்.

காவலரிடம் பிடிபடுவோம்; நீதிமன்றம் தண்டிக்கும் என்று நம்புவதும் தலையாய காரணம் ஆகும்.

அகப்பட்டுக் கொள்வதற்கான சூழ்நிலை இல்லாதிருந்தும், ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பானாயின், அதற்கு, ‘பட்டினி கிடந்து மாய்ந்தாலும் இன்னொருவன் உழைப்பில் வந்தது நமக்கு வேண்டாம்’ என்று நினைக்கும் அவனின் மனப் பக்குவமே காரணம்.

இத்தகைய மன உறுதி ஒருவனுக்கு வாய்ப்பது, அவனுடைய சுய சிந்தனையால்; அவனைச் சார்ந்தவர்களின், சான்றோர்களின், அறிஞர்களின் வழிப்படுத்தலால்தான்.

எல்லாம் கடவுளால் என்று சொல்வதும் வலியுறுத்துவதும் மனித இனத்துக்குச் செய்யும் துரோகம் ஆகும்; மனிதனின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் முயற்சி ஆகும்.

சிந்திப்பதும் செயல்படுவதும் மனித முயற்சியாலேயே சாத்தியப்படும் போது, கடவுளைத் துணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; இல்லவே இல்லை.

’பிறப்பு ஏன்? இறப்பு ஏன்? துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கை ஏன்?’ என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது இயலாது என்பதை உணரும்போது, கடவுளைச் சரணாகதி அடைகிறான் மனிதன். அவ்வாறு சரணாகதி அடைந்தாலும், மேற்குறிப்பிட்டது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை என்பதை அவன் உணர மறுக்கிறான்.

குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவனின் மூளையில் கடவுள் நம்பிக்கை திணிக்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் தாத்தா செத்துப் போக.....

‘செத்துப் போறதுன்னா என்ன/” என்று கேட்கும் குழந்தையிடம், “செத்துப் போறதுன்னா, தாத்தா சாமிகிட்ட போய்ட்டார்” என்று காலங்காலமாக நம்மவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயமற அறியப்படாத, அல்லது, உணரப்படாத கடவுளைக் குழந்தையின் மனதில் திணித்து, வளரும் அதன் அறிவை ஏன் முடமாக்க வேண்டும்/

‘நம்மோட இந்த உடம்பு செயல்பட முடியாம அழியறதுதான் சாவு” என்று எதார்த்தமாகச் சொல்லலாம்.

“அழுகிப் போனா நாறும். புதைக்கிறோம், இல்லேன்னா எரிச்சிடுறோம்”என்றும் சொல்லலாம்.

இம்மாதிரி எதார்த்தமான பதில்கள் குழந்தைகளை அச்சுறுத்தும்; வாழ்வின் மீதான பற்றுதலைக் குறைக்கும் என்பதால்.....

குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு, “இதைப் பத்தியெல்லாம் பெரியவங்க சொல்லியிருக்காங்க. நீ பெரியவன் ஆகும் போது எல்லாம் புரிஞ்சிக்கலாம்; நீயே கண்டுபிடிச்சிச் சொல்லலாம்” என்றிப்படிச் சமாளிப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.

தன் குழந்தை இன்னொரு குழந்தையை அடித்தால்.....

“அடிக்கிறது தப்பு. அது பாவம். சாமி தண்டிக்கும்” என்று பயமுறுத்துவதைத் தவிர்த்து, “நீ அடிச்சா அவன் திருப்பி அடிப்பான். அவனால முடியலேன்னா, உன்னைவிடப் பலசாலியைக் கூட்டி வந்து அடிப்பான். நீயும் துணைக்கு ஆள் தேட வேண்டி வரும். இரு தரப்பாரும் மாறி மாறி அடிச்சிக்க ஆரம்பிச்சா, யாருமே சந்தோசமா வாழ முடியாது” என்று சொல்லித் திருத்துவதே அறிவுடைமை ஆகும்.

இவ்வாறெல்லாம், எதார்த்த நிலையைப் புரிய வைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள், கடவுளை நம்பி, மேலும் பல மூட நம்பிக்கைகளுக்கு உள்ளாகி, மனச் சிதைவுக்கு ஆளாகாமல், சிறந்த சிந்தனையாளர்களாக உருவெடுப்பார்கள்; நல்லவர்களாக வாழ முயல்வார்கள்.

ஆக, மனிதர்கள் நல்லவர்களாக வாழ்வது மனிதர்களால்தான்; கடவுளால் அல்ல.

எனவே, ’கடவுள் என்று ஒருவர் இல்லை’ என்று அறிவிக்கப்பட்டாலும் இப்போதைய இயல்பு வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000






















வியாழன், 21 மார்ச், 2013

அவள் அழகியல்ல! ’செக்ஸி’யானவளும் அல்ல!! ஆனால், புத்திசாலி!!!

அவன், தன் தங்கைக்காகக் காம இச்சையைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தான்! அது அன்று உடைந்து சிதறியபோது.....

கதைத் தலைப்பு:                            வேகத் தடை

ரந்தாமன், பல ஆண்டுகளாகக் கட்டிக் காத்த பிரமச்சரியம் கொஞ்ச நாட்களாகவே ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது.

“முதலில் தங்கையின் கழுத்தில் தாலி. அப்புறம்தான் இந்த அண்ணனின் கல்யாணம்” என்று சங்கல்பம் செய்துகொண்டதோடு, ’பெண்  சகவாசமே’ வேண்டாம் என்று ‘முழுப் பட்டினி’ கிடந்ததெல்லாம் இப்போது முட்டாள்தனமாகப் பட்டது.

தீர்த்தகிரி அடிக்கடி சொல்வான்:  “டேய் பரந்தாமா, உன்னையும் என்னையும் மாதிரி தலைச்சனாய்ப் பிறந்து, பெத்தவங்களையும் பறி கொடுத்த ஆண்பிள்ளைகளுக்குக் கல்யாணம் என்பது கானல்நீர். பொம்பளை சுகத்துக்கு ‘அந்த மாதிரி’ பொண்ணுகளைத்தான் தேடிப் போகணும்.”

நண்பனின் பேச்சு எத்தனை எதார்த்தமானது என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்தது பரந்தாமனுக்கு.

தீர்த்தகிரி சொல்லி, டைரியில் குறித்து வைத்த மோகனாவின் முகவரியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.

ஒரு தடவை, அவள் வீட்டு வாசல்படி வரை போய்விட்டு, மனசாட்சி முரண்டு பிடிக்கவே வீடு திரும்பினான்.

'சேலத்துக்காரர்கள், தங்கை பொன்மணியைப் பெண் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களின் பதில் பாதகமா இருந்தா விரதத்துக்கு அழுத்தமாய் ஒரு முற்றுப்புள்ளி’ என்று முடிவெடுத்திருந்தான்.

அவர்களின் பதில் பாதகமாகவே இருந்துவிட்டது.

“உடம்பை வித்துப் பிழைச்சாலும் மோகனா ரொம்ப டீஸண்ட்டானவள்..மாதம் தவறாம மெடிக்கல் செக்கப் செஞ்சுடுவா. வி.டி., எயிட்ஸுன்னு பயந்து சாகாம அவளைக் கையாளலாம்” என்று தீர்த்தகிரி அளித்த சான்றிதழ், பரந்தாமனிடமிருந்த கொஞ்சநஞ்ச தயக்கத்தையும் விரட்டியடித்தது.

கைபேசியை எடுத்தான்.

“ஹலோ...மோகனாவா...?”

“ஆமா...நீங்க....?”

“நான் பரந்தாமன்...தீர்த்தகிரி ஃபிரண்டு”

“சொல்லுங்க சார்.”

“அது வந்து...வந்து...”

வஞ்சனையில்லாமல் சிரித்தாள் மோகனா. “பாவம் சார் நீங்க. பயந்து பயந்தே வாலிப் பருவத்தை வீணடிச்சுட்டீங்க. தீர்த்தகிரி உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கார். யூ ஆர் வெல்கம்.” தேன் தடவிய குரலில் பரந்தாமனைக் கிறங்கடித்தாள் மோகனா.

பரந்தாமன் தங்கையை அழைத்தான்.

‘ஒருத்தரைப் பார்க்கணும். வெளியே போய் வர்றேம்மா.”

“அவர் யாருண்ணா?”

“அவர் நீ தெரிஞ்சிக்க வேண்டிய ஆளல்ல.”

“நீங்க எப்பவுமே இப்படிப் பூடகமா பேசினதில்ல. இன்னிக்கி உங்க நடவடிக்கை எல்லாமே வித்தியாசமா இருக்கு. காலையில் டிபனுக்கு ரசம் கேட்டீங்க. எப்பவும் என்னோடு சேர்ந்துதான் சாப்பிடுவீங்க. இன்னிக்கி நீங்க பாட்டுக்குத் தனியாவே சாப்பிட்டீங்க......”

திடுக்கிட்டான் பரந்தாமன். “அது வந்து...ஏதோ ஞாபகத்துல...” வார்த்தைகளை மென்று விழுங்கினான்.

“எல்லார்த்தையும்விட பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா? இன்னிக்கி என் பிறந்த நாள். என் பிறந்த நாள் அன்னிக்கித் தவறாம கோயிலுக்கு அழைச்சிட்டுப் போவீங்க. அதையும் செய்யல.” அழுகையைக் கட்டுப்படுத்தி வெறுமனே சிரித்தாள் பொன்மணி.

“நீங்க உங்க ஃபிரண்டோட போனில் பேசினதை அரைகுறையாக் கேட்டேன். உங்க குழப்பத்துக்கான காரணத்தை ஓரளவு புரிஞ்சிட்டேன். இப்போ நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்.......” தொடராமல் சற்றே இடைவெளி கொடுத்தாள் பொன்மணி.

பேசினாள்: ”ஒடிசலான தேகம்; ஒடுங்கிய கன்னம். இரண்டு உதடுகளையும் ஒட்டவிடாம தடுக்கிற தூக்கலான பல்லுங்க. அட்டக் கறுப்பு. இதுதான் நான். அழகு ரசனையுள்ள எவனும் கத்தை கத்தையாப் பணம் கொடுத்தாலும் என்னைக் கட்டிக்க மாட்டான். அப்படியே ஒருத்தன் சம்மதிச்சாலும், கொடுக்க நம்மகிட்டப் பணம் இல்ல. அதனால, இனி எனக்கு மாப்பிள்ளை தேடுறதை நிறுத்திடுங்க...” சொல்லி நிறுத்தி, பரந்தாமன் மீது பார்வையைப் படர விட்டாள்.

அவன் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தான்.

தொடர்ந்தாள் பொன்மணி:  “வீட்டை ஒட்டியிருக்கிற நம் காலி மனையில் சின்னதா ஒரு செட் போட்டு ’டெய்லரிங் கடை’ போட்டுக் கொடுங்க. என்னால முடிஞ்சவரை உங்க குடும்பத்துக்கு ஒத்தாசையா இருந்து காலம் கழிச்சுடுவேன். உடனே ஒரு தரகரைப் பார்த்து உங்களுக்குப் பெண் தேடச் சொல்லுங்க.”

மவுனமாய்த் தலையசைத்தான் பரந்தாமன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000





வெள்ளி, 15 மார்ச், 2013

காதலில் தோற்றவர்களுக்காக ஒரு [காமக்] கதை!

”இந்தச் சொற்ப நேர அற்ப சுகத்துக்காகவா பெற்றவர்களை வெறுத்தாய்!? சொந்தபந்தங்களைப் பகைத்தாய்!?” என்று மனசாட்சி கேட்டது.

கதைத் தலைப்பு:           அதுக்கப்புறம்.....

அவனும் அவளும் உயிருக்குயிராய்க் காதலித்தார்கள்.

இருவர் வீட்டிலும் எதிர்ப்பு; கண்டிப்பு; கொலை மிரட்டல்!

"விஷம் குடித்துச் செத்துப் போகலாம்” என்றாள் அவள்.

”என்னுடைய முடிவும் அதுதான்” என்றான் அவன்.

நகரின் ஒதுக்குப் புறமான ஒரு விடுதியைத் தேடிப் போய் அறை எடுத்துத் தங்கினார்கள்.

“அடுத்த பிறவியிலாவது எங்களை இணைத்து வை ஆண்டவனே.” என்று இருவரும் கண்ணீர் விட்டுக் கடவுளை வேண்டிக்கொண்டார்கள்.

சாவதற்கு முன் அவன் அவளை ஆசை தீரப் பார்த்தான்; அவளும் பார்த்தாள்.

ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கிக் கொண்டே இருந்தார்கள்.

இருவர் கண்களிலும் வற்றாத அருவியாய்க் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.

அவள் கண்ணீரை இவனும் இவன் கண்ணீரை அவளும் துடைத்தபோது இருவருக்குமே மேனி சிலிர்த்தது. தணியாத தாபத்துடன் இறுக அணைத்துக் கொண்டார்கள்.

வெறி கொண்டு அழுத்தமான முத்தங்களைப் பரிமாறினார்கள்.

உருண்டார்கள்; புரண்டார்கள்.

ஈருடல் ஓருடல் ஆயிற்று. திட்டமிடல் இன்றியே ’புணர்ச்சி’ இன்பம் துய்த்தார்கள்; ’எல்லாமே’ ஒரு சில நிமிடங்கள்தான். இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.

மவுனம் சுமந்தார்கள்.

”இந்தச் சொற்ப நேர அற்ப சுகத்துக்காகவா பெத்து வளர்த்தவங்களை வெறுத்தாய்? சொந்தபந்தங்களைப் பகைத்தாய்?  காதல் காதல்னு நாயாய் அலைந்தாய்?” என்று அவன் மனசாட்சி கேள்விகள் கேட்டு அவனை வாட்டி வதைத்தது.

அவள் பக்கம் திரும்பி, குனிந்த தலையுடன், ”என்னை மன்னிச்சுடு” என்றான்.

“ஏன்? எதற்கு?” என்றெல்லாம் அவள் கேள்வி எழுப்பவில்லை.

அவளுக்குத் தெரிந்திருந்தது, ‘அந்தச் சில நிமிடங்கள்’ கழிந்ததும், அவன் தன் மீது கொண்டிருந்த காதல் அஸ்தமனம் ஆகிவிட்டது என்று.

”வா போகலாம்” என்று எழுந்து நடந்தான் அவன். அவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.

விடுதியை விட்டு வெளியேறியதும், இருவரும் வேறு வேறு திசையில் நடந்தார்கள்.

அவர்கள் வாங்கிவந்திருந்த விஷப்புட்டி திறக்கப்படாமலே, அவர்கள் தங்கியிருந்த அறையின் ஒரு மூலையில் சீந்துவாரற்றுக் கிடந்தது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முக்கிய குறிப்பு: காதல் தெய்வீகமானது என்று நீங்கள் நம்புபவராக இருந்து, என்னைத் திட்ட நினைத்தால் கொஞ்சம் நாசூக்கான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். இது என் அன்பு வேண்டுகோள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++














வியாழன், 14 மார்ச், 2013

ஆன்மா எங்கே...எங்கே...எங்கே??? [ஒரு பக்க ஆன்மிகக் கதை!!]

எச்சரிக்கை! இந்தப் பதிவைப் படித்தால் 100% உங்கள் நிம்மதி பறி போகக்கூடும்!!

கதையின் தலைப்பு:           சில கேள்விகள்

ழக்கம்போல அன்று மாலை, திரு.வி.க.பூங்காவில் காற்று வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு அறிமுகமே இல்லாத ஒரு நடுத்தர வயது ஆள் என்னருகே வந்து அமர்ந்தார்.

நான் பார்த்தும் பார்க்காதது போல் நோட்டமிட்டதில், அந்த ஆள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தது.

நான் சற்றும் எதிர்பாராத வகையில், “ஆன்மா பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றார்.

“எனக்கு எதுவும் தெரியாது” என்றேன் நான்.

"எதுவுமே தெரியாதா?” மிதமிஞ்சிய வியப்புடன் கேட்டார்.

”தெரியலேன்னா என்ன நஷ்டம்?” இது நான்.

“ஆன்மா, அழிவில்லாதது. அழிஞ்சி போற உடம்பிலிருந்து விடுதலையாகிப் புதிய புதிய பிறவிகள் எடுக்கும்; நம்ம கர்ம வினைக்கேற்ப இன்பதுன்பங்களை அனுபவிச்சிட்டே இருக்கும். இது புரிஞ்சாத்தான், நாம் ஒவ்வொரு பிறவியிலும் நல்ல காரியங்கள் செஞ்சி புண்ணியம் சேர்த்துப் பிறவிகளிலிருந்து விடுதலை பெற்று, இறைவன் திருவடியில் ஐக்கியம் ஆக முடியும்.”

“’ஆன்மா’ன்னு ஒன்னு இருக்கிறதை எப்படி நம்புறது?” கேட்டேன்.

“நான் சொல்றேன்” என்றவர், என்னுடைய கையைப் பற்றி, ”இந்தக் கை யாருடையது?” என்றார்.

“என்னுடையதுதான்.”

“இந்தக் கால்?” என் காலைத் தொட்டார்.

“அதுவும் என்னுடையதுதான்.”

“தலை உங்களுடையது. உள்ளே இருக்கிற மூளை?”

சலிப்புடன், “என்னுடையதே” என்றேன்.

எழுந்து, எனக்கு எதிரே நின்று, “இந்த உடம்பு?” என்றார்.

எரிச்சலுடன்,  ”என்னுடைய உடம்புதான்” என்றேன்.

“இப்படிச் சொன்னது யாரு?”

“நான்தான்.”

“என் கை, என் கால், என் மூளை, ’என் உடம்பு’ன்னெல்லாம் நீங்க சொல்றதிலிருந்தே உங்களுடைய அங்கங்களும் ஒட்டு மொத்த உடம்பும் வேறு; நீங்க வேறுன்னு புரியுதில்லையா?.” சொன்னது யார்னு கேட்டப்போ, ‘என் வாய்’னு சொல்லாம, ‘நான்’னு சொன்னீங்க இல்லையா, அந்த ‘நான்’தான் ஆன்மா.”

நான் சற்றே யோசித்தேன்.

“என் கன்னத்தில் ஒரு அறை விடுங்க”என்றேன்.

அவர் குழப்பமாகப் பார்த்தார்.

“நான் சொன்னதைச் செய்யுங்க.”

அவர் நோகாமல் என் கன்னத்தில் ஓர் அறை விட்டார்.

“என் கன்னத்தில் அறைஞ்சது யாரு.”

“நான்தான்.”

“அந்த ‘நான்’ ஆன்மாதானே?”

“ஆமா.”

“யாருடைய ஆன்மா, என்னோடதா இல்ல.....”

அவர் அவசரமாகக் குறுக்கிட்டார்; “என்னோட ஆன்மா.”

”என்னோட ஆன்மான்னு ’நீங்க’ சொல்றதால நீங்க வேறு; உங்க ஆன்மா வேறுன்னு ஆகுது. அப்புறம் எப்படி நான் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்னுன்னு சொல்றீங்க.”

” என்னங்க நீங்க, ‘என் ஆன்மா’ன்னு சொல்லாம எப்படிப் புரிய வைக்கிறது?”

“அதையேதான் நானும் சொல்றேன், இந்த உடம்பு யாருதுன்னு கேட்டீங்க. என் உடம்புன்னு சொன்னேன். அப்படிச் சொன்னதால, உடம்பு வேறு நான் வேறுன்னு ஆயிடாது. மூளையை உள்ளடக்கிய ஒட்டு மொத்த உடம்புதான் நான். நான் உங்களோட வர்றேன்னு சொன்னா, என்னுடைய உடம்பு வருதுன்னுதான் அர்த்தமே தவிர, என் ஆன்மா வருதுன்னு அர்த்தமில்ல. மூளையை உள்ளடக்கிய ஒட்டு மொத்த உடம்பைத்தான் ‘நான்’னு சொல்றோம். உடம்பு அழிஞ்சா, நான் கிற உணர்வும் அழிஞ்சி போகுது. அவ்வளவுதான். ஆன்மா அது இதுன்னு ஏன் குழப்புறீங்க?”

‘ஆன்மா இருக்குன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“பெரியவங்க சொல்லியிருக்காங்க; ஆன்மிகவாதிகள் சொல்லியிருக்காங்க; அவதாரங்கள் சொல்லியிருக்காங்கன்னு உங்க மாதிரி ஆட்கள் சொல்லிச் சொல்லிச் சொல்லியே மக்களை முட்டாள்கள் ஆக்கிட்டிருக்கீங்க.” வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்துச் சொன்னேன்.

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுப்பா. நம்ம முன்னோர்களை அவமதிச்சதா ஆகும். நிதானமா கேளு. உனக்குப் புரியும்படியா விளக்கிச் சொல்றேன்.”

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். ஆளை விடுங்க. என் பெண்டாட்டி காணோமேன்னு பார்த்துட்டிருப்பா. எனக்கும் பசிக்குது.” சிமெண்ட் இருக்கையிலிருந்து எழுந்தேன்.

“போகாதே, இரு. நான் சொல்றதை......” என் கைகளை இறுகப் பற்றினார் அவர்.

“விடுங்க.” மல்லுக் கட்டினேன்.

அவர் பிடியைத் தளர்த்தவே இல்லை.

“விடுய்யா...என்னை விடு...விடு...விடு...” அலறினேன்.

என் அலறல் நீடித்தபோது..........

“ஏங்க, எதுவும் கனவு கண்டீங்களா? “ என்று கேட்டு, யாரோ என் தோள்களைப் பற்றி உலுக்குவதை உணர முடிந்தது.

அந்த யாரோ என் அருகில் படுத்திருந்த என் மனைவிதான்.

“கனவுதான். பூங்காவில் காத்து வாங்கிட்டிருந்தப்போ, நாலு தடியனுங்க, ‘உங்களுக்குக் கருத்தடை ஆப்ரேஷன் செய்யப் போறோம்னு என்னைக் குண்டுக் கட்டாத் தூக்கிட்டுப் போனாங்க. என்னை விட்டுடுங்கடான்னு அலறினேன்” என்றேன், அவளையும் குழப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன்.

“எழுபது வயசான உங்களுக்குக் கருத்தடை ஆப்ரேஷனா?” என்று கேட்டுச் சிரித்தாள் 66 வயதான என்னவள்.

நானும் சிரித்து வைத்தேன்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




























புதன், 13 மார்ச், 2013

நீங்கள் ’சாதனை’ ஏதும் நிகழ்த்தாதவரா? உங்களுக்காகவே இந்தக் கதை!!

இது, ’குமுதம்’ இதழின் ‘தரம்’ உயர்த்திய சிறந்த கதைகளில் ஒன்று!!!

கதைப் பெயர்:         சாதனை

எழுதியவர்:             ஒ.ப.கதைப் பிரியனான நான்தான்!

“என்னோட ஸ்கூல்மேட் ஒருத்தருக்குக் கலைமாமணி விருது கிடைச்சிருக்கு.”- செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த வாசுதேவன் சொன்னார்.

“அப்படியா? உங்களோட காலேஜில் ஒன்னாப் படிச்ச ஒருத்தருக்கு ஏதோ நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைச்சிருக்கிறதாச் சொன்னீங்களே?” என்றார் அவர் மனைவி தேவி.

“அது போன மாசம். அதையும் பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிஞ்சிட்டேன். அது மட்டுமில்ல, என்னோட படிச்ச ஒரு பொண்ணு, இந்த வருசம் செஸ் போட்டியில், ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வாங்கியிருக்கு. இப்படி, இன்னும் யாரெல்லாமோ எதையெல்லாமோ சாதிச்சிருக்காங்க. என்னோட படிச்சவங்க சாதனைகள் நிகழ்த்துறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா, அவங்களோட படிச்ச நான் எதுவுமே சாதிக்கல.” மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் வாசுதேவன்.

"வணிகவரித் துறையில் அதிகாரியா இருக்கீங்க. ஏராளமான வாய்ப்பிருந்தும் லஞ்சமே வாங்காம கடமையைச் செய்யுறீங்க. பாராட்டையும் விருதையும் எதிர்பார்க்காத இந்தச் சாதனைக்கு வேறு எந்தச் சாதனையும் ஈடாகாதுங்க.”- தேவியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


23.09.2009 ‘குமுதம்’ இதழில் வெளியானது. பக்கம்: 89.

குமுதம் ஆசிரியருக்கு நன்றி.

வருகை புரிந்த உங்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


செவ்வாய், 12 மார்ச், 2013

ஒரு கிராமப்புறத்துக் கிழவியின் கதை! [அசத்தும் நாட்டுப்புற நடையில்!!]

”காத்தாலேயிருந்து மரத்தடியிலேயே கிடத்தி வெச்சிருக்கியே, என்ன நோக்காடு வந்துது?-இது மருமகள்! “நீ செத்துத் தொலைச்சா கருமாதிச் செலவுக்குக்கூடக் காசில்ல.”-இது மகன்!!

கதைத் தலைப்பு:                       சுமை

சேலம்- கோவை நெடுஞ் சாலையில், சங்ககிரியை அடுத்த ஆறாவது கிலோ மீட்டரில், பல்லக்காபாளையம் செல்லும் உராட்சிப் பாதை கிளைவிடும் இடம். சாலையின் விளிம்பில், முகம் வைத்து நீண்டு கிடக்கும் பனை ஓலை வேய்ந்த அந்தத் தேனீர்க் கடை நல்லப்பனுடையது.

கடையை ஒட்டி, வரிசையில் குந்தியிருந்த ஐந்தாறு குடிசைகளுக்கும் சேர்த்துக் குடை பிடித்துக்கொண்டிருந்தது ஒரு பெரிய ஆலமரம்.

அதன் நிழலில், தன்னைப் போலவே காலாவதி ஆகிப்போன ஒரு கயிற்றுக் கட்டிலில் சிறு பிள்ளையைப் போல முடங்கிக் கிடந்தாள் அத்தாயி. கிழவிக்கு அன்று உடம்பு சுகமில்லை.

பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்த ஆடு மேய்க்கும் சிறுமிகளில் ஒருத்தி, “ஆயா...ஒம் மருமூவ கூப்புடுது” என்றாள்.

சோறு உண்ணத்தான் மருமகள் அழைக்கிறாள் என நினைத்துவிட்ட அத்தாயி, “இப்போ சோறு வேண்டாம். ஒரு தம்ளாரு சுடு தண்ணி மாத்தரம் கொண்டாரச் சொல்லு” என்றாள்.

சில வினாடிகளில் மருமகள் வந்தாள். சூடான நீரோடு அல்ல; சுடச்சுட வார்த்தைகளோடு.

“நானும் பார்த்துட்டிருக்கேன். சாணி பொறுக்கப் போகாம காத்தாலேயிருந்து மரத்தடியிலேயே கிடத்தி வெச்சிருக்கியே, என்ன நோக்காடு வந்துது? ஊரு ஒலகத்தில் வயசானவங்க இல்ல? அவங்களுக்கெல்லாம் நோய் நொடி வர்றதில்ல? இதா ஆச்சி அதா ஆச்சி, உயிர் போகப் போகுதுங்கிற மாதிரி கட்டிலே கதின்னு படுத்துக் கிடக்கிறே. யார் யாருக்கோ சாவு வருது; இந்தச் சனியனுக்கு ஒரு சாவு வருதா?” என்று பொரிந்து தள்ளினாள்.

ஒரு சாணக் கூடையை அத்தாயி மீது வீசிவிட்டுப் போனாள்.

நெடுஞ்சாலையில் சாணம் பொறுக்கிக்கொண்டிருந்தாள் அத்தாயி.

கூடையிலிருந்து சிதறிய சாணத்தில் ஊன்றிய கால்கள் சறுக்கிவிட, இடம் பெயர்ந்து, சாலையின் நடுவே மல்லாந்து விழுந்தாள் கிழவி. 

கடூரமான ‘கிறீச்’ ஒலியோடு சாலையைத் தேய்த்து நின்றது ஒரு லாரி.

”ஏம்ப்பா நல்லப்பா, இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கிற  இந்தக் கிழவி, சாணி திரட்டி வந்து வறட்டி தட்டிப் போட்டுத்தான் உன் வீட்டு அடுப்பு எரியணுமா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தான் டீ ஆற்றிக்கொண்டிருந்த நல்லப்பன்.

கடை எதிரே, லாரி ஓட்டுநரின் ஆதரவில் தன் தாய் நிற்பதைக் கண்டான்.

மவுனமாய்க் கிழவியை அழைத்துப் போய்க் கட்டிலில் கிடத்தினான்.

“காடு வா வாங்குது; வீடு போ போங்குது. இந்த வேலைக்கெல்லாம் போகச் சொல்லி உன்னை யார் அடிச்சது? நீ லாரியில் அடிபட்டுச் செத்துத் தொலைச்சிருந்தா, இப்போ கருமாதிச் செலவுக்குக்கூடக் கையில் காசில்ல. வேளா வேளைக்குக் கொட்டிகிட்டுச் சும்மா கிடந்து தொலையேன்.”

பேசி முடித்துவிட்டு நகர்ந்தான் நல்லப்பன்.

அதோ.....மருமகள் வந்துகொண்டிருக்கிறாள்!

********************************************************************************************************************************************





சனி, 9 மார்ச், 2013

முதலிரவில் ஒரு தாலாட்டு! [ஒரு பக்கக் குடும்பக் கதை]

"நல்ல நேரம் கெட்ட நேரம், ஆன மாதம் ஆகாத மாதம் எல்லாம் பணக்காரங்களுக்குத்தான்; ஏழைகளுக்கு ஏது?”

மீனாட்சியின் நடவடிக்கை  குணசீலனுக்குப் புரியாத புதிராய் இருந்தது.

தொட்டுத் தழுவிப் படுக்கைக்கு இட்டு வந்தால், தட்டிக் கொடுத்துப் படுக்க வைத்துவிட்டு வெளியெ போகிறாளே! கொஞ்சம் முன்னால், ‘என்னைத் தொடு; இன்பத்தில் துவட்டி எடு” என்று அழைப்பு விடுத்த அவளின் ஏக்கப் பார்வை எங்கே போனது?

குழப்பத்துடன் படுக்கையில் புரண்டான் குணசீலன்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த மீனாட்சி, “தெரு முனைக் கடையில் காய்ச்சல் மாத்திரை வாங்கியாந்தேன்” என்று ஒரு தம்ளரில் சுடு நீரோடு மாத்திரையும் நீட்டினாள்.

“எனக்குக் காய்ச்சல்னு யார் சொன்னது?” எரிந்து விழுந்தான் குணசீலன்.

“உன் உடம்பு சொல்லிச்சி. நம்மளோடது திடீர்க் கல்யாணம்; சொந்த பந்தங்கள் எதிர்த்ததால போலீஸ் ஸ்டேசனில் மாலை மாத்திகிட்டோம். முதலிரவிலாவது என்னைப் பட்டுச் சேலையில் பார்க்கணும்னு ராத்திரி பகலா ஆட்டோ ஓட்டினே. உடம்பு கெட்டுப் போச்சு. முதலிரவை இன்னொரு நாள் வெச்சுக்கலாம்.”

‘இன்னிக்கி ரொம்ப நல்ல நாள்னு சோதிடர் சொன்னாரு. அதில்லாம விடிஞ்சா ஆடி மாசம் பொறக்குது.”

மீனாட்சி, முகத்தில் குறும்பு கொப்பளிக்கச் சிரித்தாள். “ஆடி மாசத்தில் ராத்திரியே வராதா?”

”அப்படியில்ல. ஆடி மாசம் ’அதுக்கு’ ஆகாத மாசம்னு சொல்லுவாங்க.”

“ஆன மாசம் ஆகாத மாசம்; கெட்ட நேரம் நல்ல நேரம்; ராகு காலம் எமகண்டம் இதெல்லாம் பணக்காரங்களுக்குத்தான். உழைச்சிச் சம்பாதிக்கிற நமக்கு எதுக்கய்யா? சந்தோசம் நம்மைத் தேடி வராது; நாமதான் அதைத் தேடி அலையறோம். அது கிடைக்கும்போது தவற விட்டுடக் கூடாது. உடம்பு குணமானதும் ‘அது’ வெச்சுக்கலாம்”

குண்சீலனை இழுத்து அணைத்து, மடியில் கிடத்தி மாத்திரையை ஊட்டினாள் மீனட்சி; அவன் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள்; நெஞ்சில் இதமாகத் தட்டிக் கொடுத்தாள்; “ஆராரோ...ஆரிரரோ...” என்று கிறங்கடிக்கும் குரலில் சிரித்துகொண்டே தாலாட்டுப் பாடினாள்.

ஐம்புலன்களின் ஆர்ப்பாட்டம் இல்லாத, உணர்ச்சிப் போராட்டம் இல்லாத ஒருவித இன்ப சுகத்தில் மிதந்து உறங்கிப் போனான் குணசீலன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
















புதன், 6 மார்ச், 2013

தினமலர் வாழ்க!!

Alexa வின் முன்னணி 500 வலைத்தளங்களுக்கான பட்டியலில் [இந்தியா] இடம் பெற்ற ஒரே தமிழ்த்தளம்!!!

Alexa வலைத்தளத் தகவல் நிறுவனம், உலக அளவிலான 500 முன்னணி வலைத் தளங்களுக்கான [வலையகம்?} பட்டியலையும், இந்திய அளவிலான 500 தளங்களுக்கான பட்டியலையும் வழங்கியிருப்பது பதிவாளர்கள் அறிந்ததே.

தற்செயலாக அவற்றைப் பார்வையிட்டேன்.

உலக அளவிலான பட்டியலில், தமிழ்த்தளம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.

இந்நிலை நான் எதிர்பார்த்ததுதான்.

இந்திய அளவிலான பட்டியலை முதல் தடவையாக மேய்ந்தபோது, சில இந்தித் தளங்களும் ’மலையாள மனோரமா’வும் இடம் பெற்றிருக்க, தமிழ்த்தளம் ஒன்றுகூடத் தட்டுப்படாதது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.

மீண்டும் ஒரு முறை கவனமாகத் தேடிய போது, கணிசமான தமிழர்களால் ‘தின மலம்’ எனத் தூற்றப்படும் ’தினமலர்’ தளம் [dinamalar.com] கண்ணில் பட்டது, தினமலர் பற்றிய குற்றச்சாட்டுகள் மறந்து போக, சாதனை நிகழ்த்திய ஒரு தமிழ்த்தளம் அது என்ற வகையில் என்னுள் மகிழ்ச்சி பரவியது. அதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பதிவு.







dinamalar.com

World No.1 Tamil Daily News Website | Tamil News Paper | Tamil Newspaper | Breaking News Headlines | Current Events | India News | World News | Tamilnadu News | Tamil E-paper - Dinamalar 
Click to open menuThis site is claimed.
This site's metrics are not certified.
Dinamalar.com is a leading Publication portal from India. It offers various news like political, general, cinema, sports, spiritual, Temple news in Tamil language. It offers textual content, imagery content and video content through round the clock (24x7) update. Dinamalar.com, No.1*, Indian Publication Portal as per Alexa.com ranking. 40% traffic comes from India and 60% are NRI traffic. To cover International Tamilian news we have more than 40 overseas special correspondents.

Statistics Summary for dinamalar.com

There are 2,147 sites with a better three-month global Alexa traffic rank than Dinamalar.com. Visitors to the site view an average of 7.6 unique pages per day. The fraction of visits to the site referred by search engines is about 7%. Dinamalar.com is located in India. Visitors to the site spend roughly 57 seconds on each pageview and a total of eleven minutes on the site during each visit. Show Less
Alexa Traffic RankReputation
Global 2,148
Global Rank 
India Flag 229
Rank in IN 
Sites Linking In 
10 Reviews






சனி, 2 மார்ச், 2013

தாம்பத்திய சுகமும் ஆண்கள் போடும் தப்புக் கணக்கும்! [ஓர் உரையாடல் கதை]

ஆண்கள், ‘அது’ விசயத்தில் பெறும் ‘திருப்தி’ தற்காலிகமானதே!!

திய உணவு இடைவேளையில், பாலுவும் கேசவனும் அலுவலக வளாகத்திலிருந்த வேப்ப மர நிழலில் சென்று அமர்ந்தார்கள்.

வழக்கமாக அவர்கள் மதிய உணவு உண்பது அங்கேதான்.

“விஷயம் தெரியுமா?” என்றான் பாலு.

“சொல்லு” என்றான் கேசவன்.

“நம்ம ஸ்டெனோ சுகுமாரனோட வொய்ஃப், அவங்க வீட்டு மாடியில் குடியிருந்த பேச்சிலரைக் கூட்டிட்டு ஓடிட்டாளாம்”

“நிஜமாவா?”

“உன்கிட்டே நான் ஏன் பொய் சொல்லணும்."

“அவன் செக்ஸ் விசயத்தில் கில்லாடி ஆச்சே! ‘அது’ விசயத்தில், பொண்ணுகளைத் திருப்திபடுத்தறது எப்படின்னு வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் கிளாஸ் எடுப்பான். உடலுறவின் போது கையாள வேண்டிய டெக்னிக்ஸ், லேகியம், நைட்பில்ஸ் பத்தியெல்லாம் நிறையப் பேசுவான். ’அது’ விஷயத்தில் எல்லாம் தெரிஞ்ச அவன் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?”

வியப்பின் விளிம்பைத் தொட்டிருந்தான் கேசவன்.

உடல் ரீதியா ஒரு பெண்ணைத் திருப்தி படுத்த முடியுமா என்பது இந்நாள்வரை கண்டறியப்படாத ரகசியம். பெண்ணுக்குப் போதும் என்ற மனம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகலாம். இது சுகுமாரனுக்குத் தெரிஞ்சிருந்தா எச்சரிக்கையா இருந்திருப்பான்.”

“உடலுறவில் திருப்தி அடையறது ஆண்களுக்கு மட்டும்தான் சாத்தியமானது. இல்லையா?”

“அப்படித்தான் எல்லா ஆண்களும் நினைச்சிட்டிருக்காங்க. அதுவும் தப்பு. ஆணின் உடம்பிலேயிருந்து உயிர்ச்சத்து வெளியேறியதும் கிடைக்கிற திருப்தி தற்காலிகமானது. வயசைப் பொருத்து, சந்திக்கிற பெண்ணைப் பொருத்து, சூழ்நிலையைப் பொருத்து, மிகச் சில மணி நேரங்களிலேயே மீண்டும் காமம் அரும்ப ஆரம்பிச்சிடும். அதைத் தணிக்க அவனுக்குப் பெண் தேவைப்படுகிறாள். பெண்ணாகட்டும் ஆணாகட்டும் செக்ஸில் திருப்தி என்பது சாத்தியமில்லாத ஒன்னு என்பதே என் அபிப்ராயம்.”

“சரிதான். இந்தத் திருப்தியற்ற நிலைதான், மனுஷங்களைக் காலமெல்லாம் செக்ஸ் வெறி பிடிச்சி அலைய வைக்குது” என்றான் கேசவன்.

ஒரு முறை அழகான ஒரு பெண்ணை அனுபவிச்சவன், இன்னும் அழகான பெண் கிடைச்சா அனுபவிக்கலாமேன்னு நினைக்கிறது இயற்கை. ஒரு தடவை பத்து நிமிஷம் கூடல் செஞ்சவன், அடுத்த தடவை இன்னும் அதிக நேரம் செய்யணும்னு நினைக்கிறதும் இயல்புதான். இம்மாதிரி எண்ணங்களுக்கு அணை போட்டுத் தடுத்து நிறுத்துவது சமுதாயக் கட்டுப்பாடும், நாம் வகுத்துக் கொண்ட ஒழுக்க நெறிகளும்தான். அவற்றைப் பின்பற்ற நினைக்கிற மனசும் ஒரு முக்கிய காரணம்” என்றான் பாலு.

“உண்மைதான். இன்னும் வேணும் இன்னும் வேணும்னு அலையறதுக்கும் போதும்னு அடங்கி வாழறதுக்கும் மனசுதான் காரணம்.”

“மனசைப் பக்குவப்படுத்திப் பயிற்சியும் கொடுத்தா, பத்து நிமிஷம் அனுபவிச்ச சுகத்தைப் பத்து மணி நேரம் அனுபவிச்சதாப் பாவிச்சி சந்தோஷம் காணமுடியும். ஒரே ஒரு தடவை அனுபவிச்ச இன்பத்தை மனசில் தேக்கி வெச்சி, ஒட்டு மொத்த வாழ்நாளையும் அது பற்றிய நினைப்பிலேயே கழிச்சிட முடியும். ஆனா மனுஷங்க, இப்படியான எண்ணங்களை வளர்த்து இதுக்கான முயற்சிகளில் ஈடுபடுறதில்லை. வாழ்ந்து முடிக்கிறதுக்குள்ள அனுபவிச்சித் தீர்த்துடணும்னுதான் அலையறாங்க. விதி விலக்கானவங்க ஒரு சிலர்தான். இதுல ஆண் பெண்ணுங்கிற பேதங்களுக்கும் இடமில்லை. இன்னிக்கி முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. நாளை பேசுவோம்” என்று எழுந்தான் பாலு.

"என் வீட்டில் எனக்குப் பெண் பார்த்துட்டிருக்காங்க. கல்யாணம் பண்ணிக்கிறதை நினைச்சா பயமாயிருக்கு” என்றான் கேசவன்.

“பயப்பட ஒன்னும் இல்ல. இம்மாதிரியான நல்ல சிந்தனைகளை உன் வருங்கால மனைவிக்குச் சொல்லிப் புரிய வெச்சுடு. வாழ்க்கை சந்தோசமா கழியும்.”

கேசவனின் முதுகில் தட்டிக் கொடுத்தான் பாலு.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo











வெள்ளி, 1 மார்ச், 2013

கடவுள் சிந்திப்பது எப்படி?!

அவ்வப்போது, இயல்பாக நான் கேட்டுக்கொள்ளும் கேள்வி இது. இதற்கு உள்நோக்கம் ஏதுமில்லை.

யிர்களுக்குப் புலன்கள் உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும் [மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ, ஓர் உயிரினத்தைப் பொறுத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால் [மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவன் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான அவருக்கும் மூளை தேவைதானே?

மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............[இந்த ’மிக’வுக்கு வரம்பேதுமில்லை] சக்தி வாய்ந்த கடவுளின் மூளை எத்தன்மையது?

அது உருவம் உள்ளதா, அருவமானதா?

மூளையைத் தவிர்த்து வேறு ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா?

அந்த ‘ஏதோ’ எப்படியிருக்கும்?!

இதற்கு விடையில்லை; பயனேதும் இல்லை என்பது தெரிந்திருந்தும், கடவுளை நினைக்கும்போதெல்லாம், எனக்கு நானே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன்!!!

நீங்கள் எப்படி?

உங்கள் நேரத்தை வீணடித்திருந்தால் மன்னித்துவிடுங்கள்.

வருகைக்கு நன்றி.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$