தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Apr 3, 2013

'இது’க்குமா கூட்டணி! இதற்காகவா ‘ஆறாவது’ அறிவு!! அடப்பாவிகளா!!!

பின்வரும், ‘இறைவியின் சீற்றம்’ என்னும் கதை, இறை நம்பிக்கையாளர்களை என் மீது சீற்றம் கொள்ளச் செய்யும்! அவர்களின் மனசாட்சியோ அதைத் தடுக்கும்!!

‘இறைவியின் சீற்றம்’,  04.07.11 இல் பதிவிடப்பட்டது. நீண்ட காலம் நெஞ்சில் ஊறிக் கிடந்த எண்ணங்களின் வெளிப்பாடு அது.  அது சம்பாதித்தது, வெறும் ’37’ பக்கப் பார்வைகள்[ஹிட்ஸ்] மட்டுமே.

என்னுடைய மற்ற சில பதிவுகளுக்கான [கவர்ச்சி மிக்க தலைப்புகளுடன்] பக்கப் பார்வைகளை’ப் பார்வையிட்டுவிட்டுக் கதையைப் படியுங்கள்.உள்ளீடுபக்கக்காட்சிகள்
6457
5121
28 செப்., 2012, 11 கருத்துகள்
4050
19 ஜன., 2013, 15 கருத்துகள்
3637
14 பிப்., 2013, 6 கருத்துகள்
3218
24 டிச., 2012, 2 கருத்துகள்
3210
3064
2243
2070
1723


இக்கதையை, மீள்பதிவு செய்வதற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்!


இதோ கதை..........

தலைப்பு:                       இறைவியின் சீற்றம்

றைவனும் இறைவியும் [அரூபமாக], வாகனப் போக்குவரத்தையும் மனித நடமாட்டத்தையும் நோட்டமிட்டவாறு, ஒரு நகரத்தின் அகன்ற பெரிய தெருவில் நடந்துகொண்டிருந்தார்கள்.

திடீரென, இறைவனைத் தன்பால் இழுத்து நிறுத்திய இறைவி, “அங்க பாருங்க” என்று ஒரு குப்பைத் தொட்டியின் அருகே, சிக்குப் பிடித்த பரட்டைத் தலையும் உடம்பு முழுக்க அழுக்குத் திட்டுகளுமாக, நைந்து கிழிந்த ஆடையுடன் காட்சியளித்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.

முகம் சுழித்த இறைவன், “சே, மனித நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி முக்கால் நிர்வாணமாக நிற்கிறாளே, பெண்ணா இவள்?” என்று கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டார்.

பார்த்தவுடனே முழுப் பைத்தியம்கிறது தெரியுது. பெண்ணான்னு கேட்கிறீங்களே, இவளைப் பைத்திய ஆக்கியது யாருன்னு கேளுங்க” என்றார் இறைவி.

அசடு வழிந்த இறைவன், “சரி, சரி. சொல்லு” என்றார்.

“உங்க ஆசீர்வாதத்தோடு நாலு காலிப் பசங்கதான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினாங்க.”

வெகுண்ட இறைவன், கண்கள் சிவக்க, “என்ன உளறுகிறாய்?” என்றார்.

“உளறவில்லை. நடந்ததைச் சொல்றேன். ஆத்திரப்படாம கேளுங்க” என்ற இறைவி, குரலில் விரக்தி தொனிக்கச் சொல்லத் தொடங்கினார்.

“இவளுக்கு அப்போ பதினாறு வயசு. மக்கள் நடமாட்டம் குறைந்த தெருவில் இவள் தனியே போனபோது, நான்கு காலிகள் இவளைக் கடத்திப் போனாங்க. தனி அறையில் அடைச்சி, அவங்களோட காம வெறிக்கு இவளை இரையாக்க முயற்சி பண்ணினாங்க...........

.....ஐயோ.....என்னைக் காப்பாத்துங்களேன்னு அலறித் துடிச்சிக் கூக்குரல் எழுப்பினா இவ. காப்பாத்த யாருமே வரல........

.....கடவுளே...ஏ...ஏ...ஏ.....ஓ...ஓஒ...ஓஓ...கடவுளே.....நீயாவது என்னைக் காப்பாத்துன்னு வெறியர்களின் பிடியிலிருந்து விடுபடப் போராடிகிட்டே அழுது புலம்பி அபயக் குரல் எழுப்பினா.....

....துடிதுடிச்சி ஓடோடிப் போய்க் காப்பாத்தவேண்டிய நீங்களும் காப்பாத்தல; என்னையும் தடுத்துட்டீங்க....

.....சூதுவாது அறியாத ஒரு அப்பாவிப் பெண்ணைச் சீரழிச்சி, சித்ரவதை பண்ணி நடுத் தெருவில் அலைய விட்டுட்டானுக.....

....தனக்குக் கடவுள் தந்த பரிசை நினைச்சி நினைச்சி, எந்நேரமும் சிரிச்சிட்டே தெருத் தெருவா அலையுற இந்தப் பைத்தியக்காரியைப் பாருங்க. ரெண்டு கண்ணாலயும் நல்லாப் பார்த்து ரசிங்க” என்றுகுரல் தழுதழுக்க, விழிகளில் அருவியாய் நீர் பெருகி வழிந்திட வெகு சிரமப்பட்டுச் சொல்லி முடித்தார் இறைவி.

இறைவன் மவுனமாக நடக்கத் தொடங்கினார்.

ஒரே தாவலில் அவரை வழி மறித்த இறைவி, “இப்படிக் கொடூரமா தண்டிக்கப்படுற அளவுக்கு இவள் செஞ்ச குற்றம்தான் என்ன?” என்றார்.

“கடந்த பிறவிகளில் இவள் செய்த பாவம்.”

“அப்படி என்ன பெரிய பாவம்?”

“அதைச் சில வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது ஒரு நீண்ட சங்கிலித் தொடர். எப்பெப்போ செய்த பாவங்களுக்கு எந்தெந்தப் பிறவியில் தண்டனை அனுபவிக்கணுங்கிறது ஏற்கனவே விதிக்கப்பட்டது. நீ கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் அவளோட கணக்கைப் புரட்டிப் புள்ளிவிவரம் தர்றது என்னோட வேலையில்லை. இந்தப் பைத்தியக்காரி பாவம் பண்ணினவள். அதுக்கான தண்டனையை இப்போ அனுபவிக்கிறா. அவ்வளவுதான்.”

நகர முற்பட்டார் இறைவன்.

“நில்லுங்க.”

இறைவியிடமிருந்து கடும் சீற்றத்துடன் வெளிப்பட்ட வார்த்தை, இறைவனை மேலும் நகரவிடாமல், ஆணி அடித்தாற் போல நிற்க வைத்தது.

“இவள் செய்த பாவத்துக்குத் தண்டனை அனுபவிக்கிறாள்...சரி. இந்தப் புத்தம் புது மலரை, நாள் கணக்கில் அனுபவிக்கிற அதிர்ஷ்டம் அந்த நாலு நாய்களுக்கும் வாய்ச்சுதே, அதுக்கு அவங்க கடந்த பிறவிகளில் புண்ணியம் செஞ்சாங்களா?” அப்படி என்ன பெரிய புண்ணியம்? இதுக்காவது அவங்க கணக்கைப் புரட்டிப் பார்த்துப் பதில் சொல்வீங்களா?” என்றார் இறைவி.

இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன், கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, நின்ற இடத்திலேயே மோனத்தில் புதையுண்டார்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
9 comments :

 1. //நாலு நாய்களுக்கும் வாய்ச்சுதே, அதுக்கு அவங்க கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம் என்னய்யா?” என்றார் இறைவி.
  இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன்,//

  ரொம்ப சுலபமான கேள்விதான். கடவுள் சார்பாக என்னுடைய பதில் இதோ.
  "அடுத்த ஜென்மத்தில் இந்த நாலு பேரும் பெண்ணாய் பிறந்து இதே மாதிரி கற்பழிக்கப்படுவார்கள்."
  கரெக்டா?

  ReplyDelete
 2. இருக்கலாம் Alien.

  நன்றி.

  ReplyDelete
 3. மனிதர்களுக்குள் மனிதம் இருந்தால் அவர்களுக்குள் கடவுளை பார்க்கலாம். பாவ,புண்ணியங்கள் தெய்வ நம்பிக்கை எல்லாம் ஒழுக்க வாழ்விற்கு மனிதன் வகுத்து கொண்ட பாதைகள்.

  ReplyDelete
 4. /ஒழுக்க வாழ்விற்கு மனிதன் வகுத்துக்கொண்ட பாதைகள்//

  நல்ல சிந்தனை; நன்றி உஷா.

  இப்பதிவின் நோக்கம், இம்மாதிரி கொடூரங்களுக்கான ‘மூலம்’ எது என்று சிந்திக்கத் தூண்டுவதுதான்; கடவுளைச் சாடுவதோ கடவுள் நம்பிக்கையாளர்களைச் சீண்டுவதோ அல்ல.

  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 5. இன்றைய பல செய்திகளுக்கேற்றவாறு... மீள் பதிவிற்கான காரணம் புரிகிறது...

  குற்றம் செய்தவர்கள் சமுதாயம், உற்றார், உறவினர், குடும்பம் மற்றும் பல - இவர்களிடமிருந்து தப்பிக்கலாம்...

  அவர்களின் செல்வாக்கு, சாதுர்யம், சாமர்த்தியம், பண பலம், ஆள் பலம், இன்னும் பல குறுக்கு வழிகளின் மூலமும் தப்பிக்கலாம்...

  ஆனால் மனச்சாட்சி (ஒவ்வொருத்தரின் தெய்வம்) ஒன்றே அணுஅணுவாய் அவர்களை கொல்லும்... மதிப்பு, மரியாதை, இன்பம், புகழ், பெருமை, மன அமைதி, நிம்மதி, உறக்கம், இன்னும் பலவற்றை கண்டிப்பாக கொல்லும்... அதற்குப் பின் அவர்கள் நடை பிணம்...

  குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...?

  ReplyDelete
 6. நான் நாத்திகன் அல்ல. என்றாலும் கதை நன்றாக இருக்கிறது அய்யா!

  ReplyDelete
 7. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,

  நண்பரே, மிகத் தெளிவானதொரு விளக்கம் தந்துள்ளீர்கள்.

  தாங்கள் சொல்லியுள்ளவை அனைத்தும் உண்மையே.

  என் மனப்பூர்வ நன்றி.

  ReplyDelete
 8. முரளி,

  ஆத்திகராக இருந்தும் கதையைப் பாராட்டியிருக்கிறீர்களே,எத்தனை உயர்ந்த பாராட்டு இது!

  மனப்பூர்வ நன்றி முரளி.

  ReplyDelete
 9. அன்புள்ள முரளிக்கு,

  யோசிக்காமல் உங்களை ‘ஆத்திகர்’ என்று குறிப்பிட்டுவிட்டேன்.

  ஒருவர், இவ்விருவரும் அல்லாத ‘ஒரு நல்ல மனிதராக’ மட்டுமே இருக்க முடியும். நீங்களும் அப்படிப்பட்டவராக இருக்கக்கூடும்.

  நான் எல்லோருக்கும் நல்லவனாக [அது சாத்தியமோ இல்லையோ]வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவன்.

  ReplyDelete