செவ்வாய், 9 ஏப்ரல், 2013

இது ஒரு பாலியல் ‘தொழில்காரி’யின் கதை!

தப்பு என்று தெரிந்தும் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டாள்! அது தப்பாமல் அவளுக்கொரு தண்டனையும் பெற்றுத் தந்தது!!

ரைவாசி திறந்திருந்த தட்டிக் கதவு தட்டப்பட்டது.

“வாங்க.” வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து அழைத்தாள் கனகா. கதவு தட்டியவர் திரும்பிப் போய்விடக்கூடாதே என்ற கவலை அவளுக்கு.

‘சரக்கு’ ஏத்திக்கொண்டு சைக்கிள் மிதித்து, ’சரக்கு’ லாரியில் அடிபட்டுச் செத்தான்  மாணிக்கம். அவளுக்கு அவன் புருஷன்; அவளின் ‘பலான’ தொழிலுக்குப் புரோக்கரும் அவனே. அவன் பரலோகம் போனதால் தொழில் வெகுவாகப் பாதித்தது.

வீடுவீடாகப் போய்ப் பத்துப்பாத்திரம் தேய்த்தவளைப் ‘பரத்தை’ ஆக்கியதே அவன்தான். குடித்துப் பழகிய கொஞ்ச நாளில் குடிப்பதே  தொழில் என்றான பிறகு, பெண்டாட்டி சம்பாதனை குடும்பச் செலவுக்கும் ‘குடி’ச் செலவுக்கும் போதுமானதாக இல்லை. ‘குட்டி’ தேடும் ’குஷால்’ பேர்வழிகளை அடிக்கடி தன் குடிசைக்கு அழைத்து வந்தான்.

ஆரம்பத்தில், அவனைக் கண்டித்த அவள், ஒரு நாள் முழுக்க வேர்வை சிந்திச் சம்பாதிக்க முடியாததை ஒரு மணி நேரத்தில் சம்பாதித்துவிடும் கலை அது என்பது புரிந்தபோது இணங்கிப் போனாள்.

அப்புறம் அதுவே பழகிப் போனது.

நல்ல துணிமணி, மூன்று வேளையும் வயித்துக்கு உணவு  என்று வாழ்க்கை ஓடியது.

அவளுடைய போதாத காலமோ என்னவோ, மாணிக்கம் செத்துப் போனான்.

புதிய நபர்களின் வரவு  தடைபட்டது. தெருவில், பலான தொழில்காரிகளின் எண்ணிக்கை கூடியதால், வாடிக்கையாளர்களின் வருகையும் மட்டுப்பட்டது. கனகா கவலையில் மூழ்கினாள்.

சரிந்துகொண்டிருந்த மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்துவது எப்படி என்று அடிக்கடி யோசிக்கலானாள். அப்படி ஒரு நாள் யோசித்துக்கொண்டிருந்த போதுதான் அவள் குடிசையின்  தட்டிக் கதவு தட்டப்பட்டது.

வெளியே தயங்கி நின்றவருக்கு, “உள்ளே வாங்க” என்று மீண்டும் அழைப்பு விடுத்தாள் கனகா.

அவளைத் தேடி வந்தவர் ஒரு நடுத்தர வயதுக்காரர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் போலவும் தெரிந்தார்.

சல்லடைப் பார்வையால் கனகாவின் வயதையும் உடல் வாகையும் வனப்பையும் ஆராய்ந்தார்.

முகத்தில் திருப்தி பரவி நிலை கொள்ள, அங்கிருந்த ஒரேயொரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து, “வெய்யில் வறுத்தெடுக்குது. குடிக்கத் தண்ணி கொடு” என்றார்.

தடுப்புச் சுவரைக் கடந்து உள்ளே போன கனகா, ‘ஆள் புதுசு. இவரை அனுப்பிச்சது யாராயிருக்கும்?’ என்று யோசித்தாள். ’அவர் போகும்போது கேட்டுக்கலாம்’ என்று முடிவெடுத்தாள்.

அவருக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுத்து உபசரித்தாள்.

தரையில் பாய் விரித்தாள்; “என்னைப் பிடிச்சிருக்குதானே?” பவ்வியமாய்க் கேட்டாள்; முந்தானை விலக்கிக் கவர்ச்சி காட்டினாள்; ‘இனி என்னைக் கையாளலாம்’ என்பது போல மேலாடை நெகிழ்த்து, மெல்லிய புன்னகையை அவர் மீது படர விட்டாள்.

மாதக் கணக்கில் பெண் வாசனையே நுகராதவர் போல, அவளைத் தாவி அணைத்தார் அவர்; செயலில் வேகம் காட்டினார். கனகா அவருக்கு ஈடுகொடுத்தாள். தான் கற்று வைத்திருந்த சாகசங்களால் அவரைத் தன்வயம் இழக்கச் செய்தாள்.

நிமிடங்கள் கரைந்தன.

தாபம் தணிந்ததும், ‘இருந்த’ நேரத்தைக் கணக்குப் பார்க்காமல், சில நூறுகளைக் கனகாவிடம் நீட்டினார் அவர். அவளும் திருப்தியுடன் பெற்றுக் கொண்டாள்.

அவர் வெளியேற முனைந்த போது, கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டாள் கனகா: “ எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடிச்சீங்க?”

”தெரு முனையில் நின்னுட்டு ’நோட்டம்’ விட்டுட்டிருந்தேன். ஒரு பொடியன், ’சார் பொம்பளை வேணுமா?’ன்னு கேட்டான்;  இந்த இடத்தையும் காட்டினான்” என்று சொன்னதோடு, சிறிது தொலைவில், ஒரு வேம்பின் நிழலில் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனைச் சுட்டிக் காட்டிவிட்டு நகர்ந்தார்.

அந்தச் சிறுவன்..........

பத்து வயதுகூட நிரம்பாத, கனகாவின் செல்வ மகன்!

அதிர்ச்சியில் கனகாவின் சப்த நாடிகளும் அடங்கின. அவள் இதயம் கட்டுப்பாடு இழந்து தாறுமாறாய்த் துடிக்கலாயிற்று. நெஞ்சு கனத்தது; மூச்சுத் திணறியது.

”ஐயோ.....அவனா?..... என் புள்ளையா?....என் உதிரமும் சதையுமான நான் பெத்த புள்ளையா எனக்கு ஆள் பிடிச்சி அனுப்பினான்? ஈனத் தொழில் செஞ்சி, நான் சம்பாதிக்கிற பாவத்தில் இனி அவனுக்கும் பங்குண்டா?.....கடவுளே, என்னை எதுக்கய்யா ஒரு மனுஷியா பிறக்க வெச்சே?.....என்னை எதுக்.....” நாடித் துடிப்பு அடங்கும்வரை, இப்படி ஈனஸ்வரத்தில் ஏதேதோ முனகிக்கொண்டிருந்தாள் கனகா.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000















15 கருத்துகள்:

  1. இதை விட தண்டனை (கொடுமை) அந்தப் பெண்ணிற்கு இல்லை...

    பதிலளிநீக்கு
  2. அடுத்தவர் காம பசி தீர்த்து தன் வயிற்று பசி போக்கியவளின் கதை அருமை சகோ பசி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி புரட்சி தமிழன்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தீய வழியின் முடிவு அழிவாகத்தானே இருக்கும்? மகன் மூலமாக கிடைத்த தண்டனை நல்ல முடிவு!

    பதிலளிநீக்கு
  5. //தப்பு என்று தெரிந்தும் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டாள்//

    தப்பு தப்பு என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். ஆனால் ஏன் தப்பு என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

    ஒரு software engineer தன விரலையும் மூளையையும் பயன்படுத்தி சம்பாதிக்கிறார். ஒரு கட்டிட தொழிலாளி தன் கையை பயன்படுத்தி சம்பாதிக்கிறார். அதேபோல் தான் இந்த பாலியல் தொழில் செய்கிற பெண்களும் தன உடம்பை பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? அடுத்தவரை காட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தாமல் இருவரும் விருப்பப்பட்டு செய்தால் தவறில்லை என்று தான் நான் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. பரிதாபப்படவேண்டிய பெண்... இவ்வளவு தாய்ப்பாசமும்,கணவனால் இச்சூழ்நிலைக்கு ஆளான அபலையுமான இவளது நிலை பரிதாபத்துக்குரியதே...

    இது தண்டனையல்ல...:(

    பதிலளிநீக்கு
  7. நன்றி Alien.

    சமுதாய அமைப்பும் அதன் சட்டதிட்டங்களும், நம் விருப்பப்படி வாழ அனுமதிக்கவில்லை.

    மற்றபடி, எந்த வகையிலும் பிறருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் [அது சாத்தியமா என்பது பரிசீலிக்கத் தக்கது]ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து இன்பம் துய்ப்பதில் தவறே இல்லை என்பதுதான் என் தனிப்பட்ட கருத்தும்.

    ‘தப்பு என்று தெரிந்தும் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டாள்’ என்று நான் குறிப்பிட்டிருப்பது, இன்றைய மக்களின் [பரத்தையர் உட்பட] மன நிலையைக் கருத்தில் கொண்டுதான்.

    பல்வேறு காரணங்களால், திருமணம் செய்துகொள்ள இயலாத ஆண்களுக்கான புகலிடம் பரத்தையர் இல்லம்தான்.

    இவற்றை நன்னெறிப்படுத்துவது அரசின் தலையாய கடமை.

    அயல் நாடுகளில், மணம் புரியும் வாய்ப்பில்லாத அல்லது, விரும்பாத பெண்களின் தாபம் தணிக்கப் ‘பரத்தர்கள்’இருப்பதாகக் கேள்விப்படுகிறோம்.

    எதிர்காலத்தில், அனைத்து நாடுகளிலும்,’பரத்தர் விடுதி’கள் பல உருவானால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.

    பிறப்பு ஏன்? இன்ப துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை ஏன்? இறப்பு ஏன்?
    மறுபிறவி உண்டா? கடவுள் உண்டா?-இப்படியெல்லாம் நமக்குக் கேள்வி கேட்க முடிகிறது.திட்டவட்டமான பதில்கள் கிடைத்ததா என்றால் இல்லை.

    ’பிறந்தோம்; வாழ்வோம். அப்புறம் என்னவோ நடக்கட்டும். வாழ்ந்து முடிக்கும் வரை பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருப்போம்’-ஒட்டுமொத்த உலகமும் இக்கொள்கையை ஏற்று அதன்படி வாழ்ந்து காட்டினால், வாழ்வில் அமைதி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

    ஏற்பது இல்லறமா, துறவறமா, பரத்தமை வாழ்க்கையா என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல.

    இன்னும் யோசிக்கலாம். இப்போதைக்கு இது போதும்.

    மீண்டும் நன்றி Alien.

    பதிலளிநீக்கு
  8. //முடிவு அருமை//

    NADINARAYANAN MANI க்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. //பரிதாபப்பட வேண்டிய பெண்//

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை புரிந்து, பாராட்டிய.....

    ’நிகழ்காலத்தில் சிவா’

    அவர்களுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //மற்றபடி, எந்த வகையிலும் பிறருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்...//

    அருமையாக கூறினீர்கள். என்னுடைய கருத்தும் இதுதான்...
    ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மனபக்குவம் வேண்டும். இன்றைய சமுதாயத்தில் இதை ஏற்றுக்கொள்வது கடினம்தான்.

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு படைப்பு! முடிவு நெகிழ வைத்தது! நன்றி!

    பதிலளிநீக்கு