ஞாயிறு, 5 மே, 2013

ஐன்ஸ்டீனும் “ஐயோ”ன்ஸ்டீனும்!! [இது ஓர் ’அனுதாப’ப் பதிவு]

வலைப்பக்கம் தொடங்கியதிலிருந்து, பெரும்பாலும், கதைகளையும் கடவுளையும் கட்டிக்கொண்டு அழுபவன் நான்! எங்கோ எப்போதோ படித்த, விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பற்றிய அரிய சிறு தகவலை ஆர்வம் காரணமாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

விஞ்ஞானி ஐன்ஸ்டீன், அணுசக்தி பற்றிய ஆய்வுகளிலேயே வாழ்நாளைக் கழித்தவர்.

ஒரு முறை உலாவப் போன அவர், தன் வீடு இருக்கும் இடத்தையே மறந்து, பிறரிடம் விசாரித்து வீடுபோய்ச் சேர்ந்ததாகச் சொல்வார்கள்! [ஆபிரஹாம் லிங்கன் பற்றியும் இப்படிச் சொல்லப்படுவதுண்டு] எந்நேரமும் அறிவியல் ஆய்வுகளில் மனம் ஒன்றிக் கிடந்தது இம்மறதிக்குக் காரணம் என்பர்.

இவர், கீழ்க்காணும் கட்டளைகளைத் தன் மனைவிக்குப் பிறப்பித்திருந்தாராம்!!!

1] என் உடைகள் சலவை செய்யப்பட்டு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

2] நான் சொல்லும்போது என் அறைக்கு வந்து உணவு பரிமாற வேண்டும்.

3]என் படுக்கை அறையும் படிப்பு அறையும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

4] என் எழுத்து மேஜையை யாரும் தொடக் கூடாது. அதன்மீது எந்தவொரு பொருளையும் வைக்கக் கூடாது.

5] எந்நேரமும் நான் உன்னுடன் இருப்பதும், அடிக்கடி உன்னை வெளியில் அழைத்துச் செல்வதும் சாத்தியமில்லை.

6]  அளவு கடந்த அன்பை என்னிடம் எதிர்பார்க்காதே.

7] என் படிப்பறையிலிருந்து, அல்லது, படுக்கை அறையிலிருந்து நான் சொன்ன உடனே வெளியேறிவிட வேண்டும்.

8] குழந்தைகள் முன்னால் என்னைப் பற்றித் தரக்குறைவாகப் பேசக் கூடாது.

இவ்வாறெல்லாம் மனைவிக்குக் கட்டுப்பாடுகள் விதித்து, அவற்றை நடைமுறைப் படுத்தியதால்தான் அவரால் அணுசக்தியைக் கண்டுபிடிக்க முடிந்ததாம்!

”அந்த அம்மா பாவம்! வாழ்நாளெல்லாம் எப்படித்தான் இவருடன் குடும்பம் நடத்தினாரோ?!” என்று அனுதாபப்படுகிறீர்களா? அதற்கு அவசியமே இல்லாமல்போனதும் ஒர் ஆச்சரியம்தான்!

ஆம். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அந்த அம்மையார், ஐன்ஸ்டீனுக்கு “டா...டா...” காட்டிவிட்டுப் போய்விட்டாராம்!!

இப்போது, ஐன்ஸ்டீனுக்காக, “ஐயோ பாவம்” என்று ஆதங்கப்படுகிறீர்களா? அதுவும் தேவையில்லை.

அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகளை நினைக்க எங்கேங்க நேரம் இருந்தது?

#########################################################################################################


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக