வியாழன், 25 டிசம்பர், 2014

மலராய், மருக்கொழுந்தாய், இளம் மானாய், மயிலாய் மகிழ்வித்த அவள்.....

1997 ஆம் ஆண்டில், ‘பாக்யா’ இதழில் வெளியானது என்னுடைய இந்தச் சிறுகதை. கொஞ்சம் மாற்றியமைத்து, கொஞ்சம் சுருக்கி வெளியிடுகிறேன்.      

                      சுகுணா தூங்குகிறாள்[‘பாக்யா’ இதழ்]

“இன்ஸ்பெக்டர் இளங்கோ ஃபோன் பண்ணினார். கரூர் பக்கம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை ஆஸ்பத்திரியில் வெச்சிருக்காங்களாம். போய்ப் பார்க்கச் சொன்னார். கிளம்பலாமா சுகுணா?”

சதை வற்றி, சருமம் கறுத்து, கண்கள் குழிந்து, வாடி வதங்கிய கீரைத் தண்டுபோல் தரையில் சுருண்டுகிடந்த முன்னாள் அழகியான என் மனைவியிடம் மிகுந்த தயக்கத்துடன் கேட்டேன்.

அவளிடமிருந்து பதில் இல்லை.

அவள் உண்ணும் உணவும் உறங்கும் நேரமும் சுருங்கிவிட்டது போல உரையாடுவதும் சுருங்கிவிட்டது.

ஊட்டிவிட்டால் மட்டுமே நான்கு கவளம் உள்ளே போகிறது. தாகம் எடுக்கிறதோ இல்லையோ தண்ணீர் பருகுவதுகூடக் குறைந்துவிட்டது.

ஒட்டுமொத்த உடம்பும் உலர்ந்த நிலையில், வறண்டுபோன தொண்டையைக் கடந்து வார்த்தைகள் வெளிவருவது அரிதாகிவிட்டது.

“இன்ஸ்பெக்டர் இளங்கோ ஃபோன் பண்ணினார். கரூர் பக்கம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை ஆஸ்பத்திரியில் வெச்சிருக்காங்களாம். உடம்பு சிதைஞ்சிருந்தாலும் பார்வைக்கு நம்ம பொண்ணு மாதிரி தெரியுதாம். போய்ப் பார்க்கச் சொன்னார். கிளம்பலாமா சுகுணா?” -குனிந்து, அவளின் காது மடலில் உதடு பொருத்தி, வார்த்தைகளில் உரமேற்றி மீண்டும் ஒரு முறை சொன்னேன்.

என் வார்த்தைகளை அவள் உள்வாங்கியிருக்க வேண்டும்.

“என்ன சொன்னீங்க? இளங்கோ ஃபோன் பண்ணினாரா? நம்ம சுதாவைக் கண்டுபிடிச்சிட்டாங்களா?” என்று எழுந்து உட்கார்ந்தாள்.

ஆறு மாதம் போல செத்துச் செத்துப் பிழைத்து உருக்குலைந்து போயிருந்த அவளின் மெலிந்த தேகத்தில் அத்தனை பலம் எங்கிருந்து வந்ததோ, என் தோள் பற்றி உலுக்கி, “புறப்படுங்க போகலாம்” என்றாள்.

“முகம் கழுவி சேலை மாத்திட்டு வாம்மா.”

இரண்டே நிமிடங்களில் தயாரானாள்.

காரில் புறப்பட்டோம். வழக்கத்திற்குச் சற்றே கூடுதலான வேகம்.

“ஏங்க, நம் பொண்ணுக்கு விபரீதமா ஏதும் நடந்திருக்காதுதானே?”

தினம் தினம் எனக்கு நானே கேட்டுக்கொண்டு, விடை தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. என்னவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

சொன்னேன்: “கடவுள் நம்மைக் கைவிட மாட்டார்.”

“கை விட்டுட்டா அப்புறம் அந்தக் கடவுளை நான் கும்பிடவே மாட்டேங்க.”

படுத்த படுக்கையாகக் கிடந்தாலும் தினமும் பத்து நிமிடமாவது தியானம் பண்ணத் தவறாத என் சுகுணாதான் இப்படிச் சொன்னாள். மகளைத் தொலைத்த துக்கத்தில், ‘உண்டு, இல்லை’ என்று தலை மட்டும் அசைத்தவள் இன்றுதான் முழு வாக்கியம் பேசுகிறாள்.

ஆறு மாதம் முன்பு, கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது ரவுடிகளால் காரில் கடத்தப்பட்டாள் எங்கள் ஒரே மகளான சுதா. அன்றிலிருந்து சுகுணா வேண்டாத தெய்வம் இல்லை. செலுத்தாத காணிக்கை இல்லை.

“கடவுளே, இந்தப் பிறவியில் மனசறிஞ்சி நாங்க யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யல; பாவ காரியங்கள் பண்ணல. பூர்வ ஜென்மங்களில் பண்ணியிருந்தா, அதுக்கான தண்டனையை இப்பவே எங்களுக்குக் கொடுத்துடு. மிச்சம் மீதியிருந்தா அடுத்து வர்ற பிறவிகளில் அனுபவிச்சித் தீர்த்துடுறோம். நாங்க உயிருக்கு உயிரா நேசிக்கிற எங்க சுதாவை மட்டும் தண்டிச்சிடாதே. எந்தவித பங்கமுமில்லாம எங்களோடு சேர்த்துடு.” தினமும் இப்படி வேண்டினாள்.

மாதம் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணுவதாகவும் அனாதை இல்லங்களுக்கு உதவுவதாகவும் கடவுளின் சந்நிதிகளில் சத்தியம் பண்ணினாள்.

ஆரம்பத்தில், கண்ட கண்ட தெய்வங்களிடம் கோரிக்கை வைப்பதே வேலையாகிப் போனவள், நாட்கள் செல்லச் செல்ல, ஒட்டுமொத்த நம்பிக்கையும் உடைந்து சிதற, முழு நேரமும் படுக்கையில் ஒடுங்கிவிட்டாள். நான் நடைப்பிணம் ஆனேன்.

எங்கள் சுதா கடத்தப்பட்டபோது, அவள் தோழி தரங்கிணி மட்டுமே உடனிருந்தவள். கடத்திய ஆட்களை அடையாளம் சொல்லியிருக்கிறாள். காரின் எண் பார்க்கத் தவறிவிட்டாள்.

அவர்கள் ரவுடிகள் என்பது போலீசாரின் அனுமானம். ஆனால், வேறு துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இங்கே விபத்து; அங்கே அனாதைப் பிணம் என்று சொல்லி எங்களை அலைக்கழித்த காவல்துறை இப்போது மௌனம் சுமந்திருந்தது.

நானும் சுகுணாவும் உறவினர்களின் துணையுடன் ஊர் ஊராகத் தேடினோம். பலன் மட்டும் பூஜ்யம்.

மனம் பேதலித்து, என் சுகுணா மரணப் படுகுழியில் விழுந்துகொண்டிருந்தாள். “தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்குதுங்க.” வார்த்தை வார்த்தையாய் முனகி, கொஞ்ச நாளாய் என்னைக் குலை நடுங்கச் செய்கிறாள்.

மகளைத் திருடு கொடுத்துத் தவிக்கும் நிலையில் என் மனைவியையும் இழந்துவிடுவேனோ?

எந்த வகையிலும் ஆறுதல் பெற முடியாத அவல நிலையில், கனத்த சோகம் சுமந்து, என் மிக நெருங்கிய நண்பரான காவல்துறை அதிகாரி இளங்கோவைச் சந்தித்தேன்.

ருத்துவமனை.

கைத்தாங்கலாக சுகுணாவை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றேன்.

ஒவ்வொரு வார்டாக ஒதுக்கி, ஆப்ரேசன் தியேட்டரை நோக்கி நடந்தோம்.

“சொல்லுங்க, சுதா எப்படீங்க இருக்கா?” குரலில் பரிதாபம் பொங்கக் கேட்டாள் சுகுணா.

“அவளைப் பார்க்கத்தானே போறோம்...வா சுகுணா.”

அவளின் தோள்களை அழுந்தப் பற்றி அணைத்து, தியேட்டருக்குள் அழைத்துப் போனேன். அங்கே, என் காவல்துறை நண்பருக்கு நண்பரான டாக்டர் காத்திருந்தார்.

“சுகுணா, மனதைத் தேத்திக்கோ. நம்ம சுதா செத்துட்டாம்மா...”

சொல்லிக்கொண்டே, ஸ்ட்ரெச்சரை நெருங்கி, போர்த்தப்பட்டிருந்த வெள்ளைத் துணியை விலக்கி, பிணத்தின் இடது முழங்கையை ஒட்டியிருந்த சற்றே பெரிதான மச்சத்தைத் தொட்டுக் காட்டினேன்.

அதைப் பார்க்கும் நிலையில் சுகுணா இல்லை. அவள் மயக்க நிலையில் துவண்டு என் தோளில் சரிந்திருந்தாள்.

ப்போதெல்லாம், “என் மகளைக் கடத்திப் போய் எங்கே வெச்சிருக்காங்களோ.....  காலிப் பசங்க அவளை எப்படியெல்லாம் சித்ரவதை செய்யுறாங்களோ.....ஐயோ....” என்று சொல்லி, உருகி மருகி என் சுகுணா நொறுங்கிப் போவதில்லை.

முழுப்பட்டினி என்ற நிலையைத் தாண்டி, ‘பரவாயில்லை’ என்று சொல்லுமளவுக்குச் சாப்பிடுகிறாள். ஒரு நாளைக்கு நான்கைந்து மணி நேரமாவது தூங்குகிறாள். இனி, அவள் பிழைத்துவிடுவாள். ஆனால், நான்.....

தினம் தினம் தனிமையில் கிடந்து அழுகிறேன். மலராய், மருக்கொழுந்தாய், இளம் மானாய், மயிலாய் வலம் வந்து எங்களை மகிழ்வித்த எங்கள் செல்ல மகள், கயவர்களின் பிடியில் என்ன பாடு படுகிறாளோ என்று எண்ணி எண்ணி மனம் பேதலித்துக்கொண்டிருக்கிறேன்.  சிதைந்து, சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருக்கிறேன்.....

........ஒரு அனாதைப் பிணத்தின் இடது முழங்கை அருகே செயற்கையாய் ஒரு மச்சத்தை உருவாக்கி, டாக்டரின் உதவியோடு அருமையாக ஒரு நாடகம் நடத்தி, என் சுகுணாவை நம்ப வைத்துத் தேற்றினேனே, அது போல என்னைத் தேற்ற யாரிருக்கிறார்கள்?

=============================================================================================











புதன், 24 டிசம்பர், 2014

இந்தக் கதையை எழுதிய நான் முட்டாளா, புத்திசாலியா?

கதை அனுப்பி 100 நாட்கள் ஆகியும் பிரசுரம் ஆகவில்லை[இப்போதெல்லாம் பத்திரிகைக்காரங்க கதையைத் திருப்பி அனுப்புவதில்லை]. பலமுறை முயன்று தொ.பே.யில் ஆசிரியருடன் தொடர்பு பெற்று, கதையின் பெயரைச் சொல்லி,  “கதையை நிராகரிச்சிட்டீங்களா? ரொம்ப வித்தியாசமான படைப்பா தோணலையா?” என்றேன். “இப்படியெல்லாமா நடக்கும்? வாசகனை முட்டாள் ஆக்குற கதை” என்று சொல்லி, தொடர்பைத் துண்டித்துவிட்டார் ஆசிரியர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பதிவுக்கு ‘Moderation' இல்லை. விரும்பினால், மனம் திறந்த உங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். வருத்தப்பட மாட்டேன்.

கதைத் தலைப்பு:                     புதிய பாதை

“வாங்க......வாங்க.” கை கூப்பி வரவேற்றார் அருணகிரி.

புன்னகை பூத்த முகத்துடன் உள்ளே நுழைந்தவர் மாசிலாமணி; அருணகிரிக்குக் கொஞ்சம் தூரத்துச் சொந்தம்..

“உட்காருங்க.”

மஞ்சள் பையிலிருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து அருணகிரியிடம் நீட்டிவிட்டு இருக்கையில் அமர்ந்தார் மாசிலாமணி.

அதில் பார்வையை ஓடவிட்ட அருணகிரி, “என்னங்க இது, ‘மகளின் மூன்றாம் ஆண்டு  திருமண நிறைவு விழா’ன்னு போட்டிருக்கீங்க! உங்க மகளுக்குக் கல்யாணம் ஆகி மூனு வருசம் முடிஞ்சிருக்கு, சரி. இதுக்குப் போயி யாராவது பத்திரிகை அடிச்சி விழா கொண்டாடுவாங்களா? இதெல்லாம் சம்பந்தப்பட்ட குடும்பத்தார் மட்டும் வீட்டோடு கொண்டாடுறதில்லையா?” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

“சம்பந்தி வீட்டார் சம்மதத்தோட, ரொம்ப நெருக்கமான, கொஞ்சமே கொஞ்சம் சொந்த பந்தங்களை மட்டும் அழைச்சி,  இந்தக் கல்யாணத்தைக் கோயிலில் சிக்கனமா நடத்தி முடிச்சேன்......”

குறுக்கிட்டார் அருணகிரி. “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“சொல்றேன். இப்பெல்லாம், கல்யாணம் முடிஞ்ச சூட்டோடு ரொம்பப்பேர் விவாகரத்துப் பண்ணிடுறாங்களாம். கணக்குப் பார்க்காம செலவு பண்ணினவங்கெல்லாம் தலையில் முக்காடு போட்டுட்டு முடங்கிக் கிடக்குறாங்க. அதனாலதான், நானும் சம்பந்தியும் செலவை ரொம்ப மட்டுப்படுத்தினோம்.”

“சொல்லுங்க.”

“என் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி மூனு வருசம் ஆயிடிச்சி. சின்னச் சின்ன மனத்தாங்கல்கள் இருந்தாலும் மாப்பிள்ளையும் பொண்ணும் சந்தோசமா குடும்பம் நடத்துறாங்க. ஒரு வாரிசும் இருக்கு. இனி, குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஏதும் தலையெடுக்காதுன்னு நம்பிக்கை வந்திடிச்சி.”

சிறிது இடைவெளி கொடுத்துச் சொன்னார் மாசிலாமணி. “ ஆயிரக் கணக்கில் பத்திரிகை அடிச்சி, சொந்தபந்தம், அக்கம்பக்கம், அறிமுகம் ஆனவங்க ஆகாதவங்கன்னு  பெரிய கூட்டத்தைத் திரட்டிக் கோலாகலமா கல்யாணத்தை நடத்தாம, கமுக்கமா நடத்திட்டமேன்னு சம்பந்தி வீட்டாருக்கும் என் வீட்டார்க்கும் மனக்குறை இருந்திச்சி. அந்த மனக்குறையைப் போக்கும் வகையில் மூன்றாண்டு நிறைவு விழா." 

சொல்லி முடித்து, “விழாவுக்கு எல்லாரும் அவசியம் வந்துடுங்க” என்றார்விழாவை விமரிசையா நடத்துறோம்” என்றார் மாசிலாமணி.

“புத்திசாலிதனமா நீங்க நடத்துற இந்தப் புதுமையான விழாவுக்கு வராமல் இருப்போமா?” சிரித்துக்கொண்டே சொன்னார் அருணகிரி.

##########################################################################################################












திங்கள், 22 டிசம்பர், 2014

இன்றைய என் பதிவில் நேர்ந்தது பெரும் பிழை...மன்னியுங்கள்.

இன்று நண்பகல்[22.12.2014] நான் வெளியிட்ட, ‘ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் என் அடிவயிற்று எரிச்சலும்’ என்னும் பதிவில் மிகப் பெரிய ஒரு பிழை நேர்ந்துவிட்டது. [என் துணைவியார் சுட்டிக் காட்டியதால்  திருத்தப்பட்டுவிட்டது].

நாமக்கல்லில், 21.12 1914 இல் ஆஞ்சநேயருக்குப் ‘பாலாபிஷேகம்’ நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தேன். இது தவறான தகவல் ஆகும். 21.12.2014 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே இந்த இடுகையை http://kadavulinkadavul.blogspot.com/2014/12/blog- post_22.html[‘கிளிக்’ செய்க] வாசித்தவர்கள் என்னை அன்புகொண்டு மன்னித்திடுமாறு மிக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

நேர்ந்த பிழைக்கு மிகவும் வருந்துகிறேன்.

கீழ்த்தரமான கண்டனக் கருத்துகளுக்கு அஞ்சி, கருத்துப் பெட்டியை மூடி வைக்காமல் இருந்திருந்தால் நண்பர்கள் இந்தப் பிழையைச் சுட்டிக் காட்டியிருப்பார்கள். 

இனி என்றும்[பதிவு எழுதுவதை நிறுத்தும்வரை] ‘கருத்துப் பெட்டி’ திறந்தே இருக்கும் [தேவைப்பட்டால் மட்டுமே மட்டுறுத்தல்...] என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவனக்குறைவால் நேர்ந்த பிழை இதுவாகும். 'ஹிட்ஸ்’ஸுக்காக நான் கையாண்ட உத்தியோ இது என்று தயவுசெய்து சந்தேகப்பட வேண்டாம்.

அனைவருக்கும் என் நன்றி.

=============================================================================================

ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் என் அடிவயிற்று எரிச்சலும்!!!

நம் நாட்டு அரசியல் சட்டப்படி, அத்தியாவசிய உணவுப் பொருளான பாலை அதிக விலைக்கு விற்பது குற்றம்; அதில் தண்ணீர் கலப்பது குற்றம்; தரையில் கொட்டுவது [விவசாயிகளின் போராட்டத்தில்...] குற்றம். உண்மை இதுவாயிருக்க, ஒரே நேரத்தில் பத்தாயிரம் லிட்டர் பாலை ஒரு கற்சிலையின் மீது கொட்டியிருக்கிறார்களே, இது குற்றமில்லையா?

ஐந்தறிவு ஜீவன்களில் ஒன்றான குரங்கின் ரூபத்தில் இருந்தாலும், ராமாயணக் கதையில் முக்கிய பங்கு பெற்றதால் பன்னெடுங் காலமாக, அதையும் ஒரு தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் நம் மக்கள்.

காசு பணம் கொடுத்து ஏழைகளின் துன்பம் போக்குதல்; உடல் உழைப்பை ஈந்து உரியவர்களுக்கு உதவுதல் என்றிப்படிப் பிறருக்கு உதவுவதன் மூலம் மனச் சாந்தி பெறுவதற்கான வழிகள் எத்தனையோ இருக்கக் கடவுளை வழிபடுவதன் மூலமாகத்தான் அதை முழுமையாகப் பெற முடியும் என்று நம்புகிறவர்கள் நம்மில் மிகப் பலர்.

கடவுளை நம்பட்டும்; வழிபடட்டும். அதை ஆட்சேபிக்க எவருக்கும் உரிமையில்லை.

வழிபாடு என்னும் பெயரால் எத்தனையோ மூடத்தனமான செயல்களில் நம்மவர்கள் ஈடுபடுகிறார்கள். படட்டும். அவற்றைத் தடுக்கவும் பிறருக்கு உரிமையில்லை.

ஆனால்.....

பாலாபிஷேகம், பழ அபிஷேகம், சந்தன அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் என்பன போன்ற படு மூடத்தனமான செயல்களில் ஈடுபட்டு, அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளான மேல் குறிப்பிட்டவை போன்ற பொருள்களைக் கணக்கு வழக்கில்லாமல் அழித்தொழிக்கிறார்களே, இது என்ன நியாயம்?

இந்த அழிப்பு வேலை தினசரி எண்ணற்ற கோயில்களில் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே.

வறுமை தாண்டவமாடும் ஏழைகள் பெரும்பான்மையாக உள்ள இந்த இந்தியத் திருநாட்டில் இது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.

இது குற்றம் என்பதை அறிந்தவர்கள்கூட கண்டிப்பதில்லை. அரசுகளும் கண்டுகொள்வதில்லை. காரணம்.....

இது கடவுளின் பெயராலும், பக்தியின் பெயராலும் நடைபெறுவதால்தான்.

இம்மாதிரிக் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக் கோயில்களில் அரங்கேறிக்கொண்டிருக் கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று..........

21.12.2014 இல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றிருக்கிறது.

அதை என் வாயால் சொல்ல வேண்டாம். ஒரு தினசரி அதைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. படியுங்கள்.

செய்தித் தலைப்பு:  

            நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 10ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்
செய்தி:

‘அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயருக்குப் பத்தாயிரம் லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்....’ என்று தொடர்கிறது செய்தி.

ஆக, காலங்காலமாகச் சிலர்[ஜாதிப் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை] பக்தியின் பெயரால் ஆரம்பித்து வைத்த இந்தக் குற்றச் செயலுக்கு 21.12.2014இல் நாமக்கல்லிலும் ஆயிரக்கணக்கான நம் பக்தர்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள்.

இந்தக் குற்றச் செயல், இதே நாளில் இன்னும் ஏராளமான கோயில்களில் நடைபெற்றிருக்கிறது.

பத்திரிகைச் செய்தியைப் படித்ததிலிருந்து [ஐயோ...பத்தாயிரம் லிட்டர் பால் வீணானதே!!!]என்று  என் அடிவயிறு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

இந்த எரிச்சல் மருந்துகளால் தீராதது. காலம் காலமாக மக்களின் துயர் போக்கி அருள்பாலிக்கிற ஆஞ்சநேயக் கடவுள்தான் இந்த எரிச்சலையும் போக்கியருள வேண்டும்.

ஜெய் ஆஞ்சநேயா!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx









வெள்ளி, 19 டிசம்பர், 2014

‘உயிர்’ என்றால் என்ன? அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்.

Aleksand[e]r Oparin, in full Aleksandr Ivanovich Oparin என்னும், பிரபல சோவியத் உயிரியல் விஞ்ஞானியின் 'origin of life' [தமிழாக்கம்: நா.வானமாமலை, NCBH, சென்னை] நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட பதிவு இது.

“புலன்களால் அறிய முடியாதது உயிர்.  இதுவே ‘ஆன்மாவின் சலனம்’; ‘கடவுளின் சிறு பொறி’;  ‘சூட்சுமம்’ என்றெல்லாம் அழைக்கப்படும்”. - இப்படிச் சொல்வது ‘கருத்துமுதல் வாதம்’[Idealism] ஆகும். இக்கொள்கையாளர்களைக் ‘கருத்துமுதல் வாதிகள்[Idealists]’ என்பார்கள்.

“பொருள் என்பது சலனம் அற்ற ‘ஜடம்’ ஆகும். அந்த ஜடத்திற்குள் உயிர் புகுந்தால் அது ‘உயிர்ப்பொருள்’[உயிருள்ள பொருள்] ஆகிறது. உள்ளே உயிர் இருக்கும் வரைதான் ஜடமானது வாழவும் வளரவும் செய்யும். உயிர் பிரிந்துவிட்டால் மீண்டும் ஜடமாகி அழுகி நாறி அழிந்து போகிறது. ‘கடவுளின் இச்சையினால் திடீரென்று உயிர் தோன்றுகிறது. செத்த சடலத்தில் கடவுளின் உயிர் மூச்சு  நிரம்பியதும் அது உயிர்ப் பிராணி ஆகிறது.  இந்த உயிரை அடக்கி ஆளும் வல்லமை மனிதனுக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.” என்பது இவர்கள் தரும் கூடுதல் விளக்கம் ஆகும்.

அனைத்து மதங்களும் உயிரைப் பற்றி மேற்கண்ட கொள்கைகளையே கொண்டுள்ளன.

'பிராணிகளின் உடலிலுள்ள பொருளுக்கு உயிரில்லை. உயிர் என்னும் சக்தி அதனுள் புகுந்தால்தான் அவை உயிருள்ளவை ஆகின்றன’ என்பது பிளாட்டோவின் கருத்து. அரிஸ்டாட்டிலும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். இரண்டாயிரம் ஆண்டுகளாக இக்கருத்து நிலைபெற்றிருந்தது. மதக் கோட்பாடு களுக்கு ஒத்துப் போகாத எந்தவொரு கொள்கையும் தலையெடுக்க முடியாத நிலை நீடித்தது.

ஆனாலும், இவர்களோடு ஒத்துப் போகாத ஒரு பிரிவினரும் தம் கருத்துகளை அன்றுதொட்டுச் சொல்லிக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்களைத்தான்,
 ‘பொருள்முதல் வாதிகள் [Meterialists]’ என்கிறார்கள். அதாவது, ‘பொருள் முதல் வாதம்’[Meterialism] என்னும் கொள்கை உடையவர்கள்.

‘பொருளற்ற சூட்சுமம்’ என்பதெல்லாம் வெறும் கற்பனை. ‘வெறுமை’ என்பது எப்படிச் சாத்தியமற்றதோ[?], அது போல், சூட்சும நிலை என்பதும் சாத்தியமற்றதே. புலன்களால் அறிய முடியாத ‘பொருளற்ற ஒன்று’ இருப்பதாகச் சொல்வது வெறும் அனுமானமே. பொருளின் மிக...மிக...மிக நுண்மையான ஒரு வடிவமே உயிர். இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு, அது சிதைவுகளையும் மாறுதல்களையும் பெறுகிறது.

மிக மிகப் புராதன காலத்தில், இன்று காணப்படும் நுண்ணுயிர்களைப்[Micro Organism] போல, மிக நுணுக்கமான சின்னஞ் சிறிய உயிர்களே இருந்தன. அவை மட்டுமே வாழ்ந்த ஒரு காலமும் இருந்தது. அவை மிக மிக நுண்ணிய பொருள்கள்.

பொருள் இல்லாமல், ‘சூட்சுமமானது’ என்று சொல்லப்படுகிற உயிர் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.

பொருள், காலப்போக்கில், மிகப் பல சிறு சிறு மாறுதல்களைப் பெற்று, குறிப்பிட்ட ஒரு கால நிலையில் உயிர் என்று சொல்லப்படுகிற ‘நுண் பொருளாக’ மாறுகிறது என்பது இவர்களின் கருத்தாகும்.

விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

‘கரி, நீர்வாயு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகிய ஐந்து மூலப் பொருள்களும் ஒன்றுகூடி பொருளாகத் தோற்றம் தருகின்றன. இந்தச் சிக்கலான ‘அணுக்கூட்டு’தான்[Molecule] பின்னர் உயிர்த்தன்மை பெற்றது.’

‘உயிர் என்பது பொருளின் சலனத்தில் ஒரு சிறப்பான வடிவம்.’

’மிகச் சிறிய நுண்ணுயிர்கள்கூட, உயிரற்ற பொருள்களோடு ஒப்பிடும்போது மிகச் சிக்கலான அமைப்பு உடையவை. அவை திடீரென்று தோன்றிவிட முடியாது’

அனைத்துப் பொருள்களையும் உயிர்களையும் கடவுள் நினைத்த மாத்திரத்தில், நினைத்த படியெல்லாம் படைத்தார் என்பது 100% கற்பனையே.

‘உருவம் உடைய பொருள்களே உண்மையானவை[எத்தனை சிறிய அணுவாக இருந்தாலும் அதற்கும் உருவமுண்டு. உருவமற்றவை என்று சொல்லப்படுகிற, உயிர்[ஆன்மா], ஆவி [கடவுள் உட்பட!] போன்றவற்றைப் புலன்களால் அறிவது என்பது சாத்தியமே இல்லை.

‘சூட்சுமம்’ பற்றிப் பேசுபவர்களில் யாரேனும் அது பற்றி விளக்கியிருக்கிறார்களா என்றால், “இல்லை” என்பதே பதிலாக இருக்க முடியும்.

கழகத் தமிழ் அகராதி. சூட்சுமம் என்பதற்கு, ‘நுண்மை, கூரறிவு’ என்று பொருள் சொல்கிறது.

நுண்மை - நுட்பம்.

அறிவு - அறிதல், அது, சிந்திப்பதற்குக் காரணமாக இருப்பது. முற்ற முழுக்க மூளையின் இயக்கத்திற்கு உட்பட்டது. எனவே........

‘கூர் அறிவு’  என்பதற்கு, புலன்களால் அறிய முடியாத சூட்சுமம் என்று பொருள் கொள்ள வாய்ப்பே இல்லை.

'நுட்பமான உத்தி’ என்கிறது தமிழ் விக்சனரி. இது குழப்பமானதொரு விளக்கமாகும்.

‘நுண்ணுடம்பு’ பற்றிப் பேசாத பக்தி இலக்கியங்கள் இல்லை. ஆனால், அந்த நுண்ணுடம்பு பற்றி விளக்கிச் சொன்னவர் எவருமே இல்லை.

நுண்ணுடல், சூக்கும தேகம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, மக்களின் மூளையில் வெகு ஆழமாக அதைப் பதிய வைத்துவிட்டார்கள்.

சூட்சுமத்தை ஆங்கிலத்தில், ‘subtlety' என்கிறார்கள். கூகிளில் தேடியதில் தெளிவான விளக்கம் பெறுவது சாத்தியப்படவில்லை.

'www.thefreedictionary.com/subtlety' தரும் விளக்கங்கள்:
n., pl. -ties.
1. the state or quality of being subtle.
2. acuteness or penetration of mind; delicacy of discrimination.
3. fine-drawn distinction; refinement of reasoning.
4. something subtle.

penetration of mind = மனதின் ஊடுருவல்.

ஊடுருவல்! எப்படி?... தெளிவில்லையே!

acuteness = கூர்மை. மனக் கூர்மையா? கூர்மை மனதா? புரியவில்லையே!

something subtle ?    இப்படியொரு விளக்கமா?!

www.vocabulary.com/dictionary/subtlety:   Subtlety is the quality of being understated, - இதிலும் போதுமான விளக்கம் இல்லை.

உயிரைப் பற்றிய ஆய்வு ஒருபுறம் இருக்கட்டும். நாம் சிந்திக்கிறோமே அந்தச் சிந்தனைக்குக்கூட வடிவம் உள்ளதா என்றொரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

இதற்கும் அறிவியல் பதில் தருகிறது.

‘சிந்திப்பதென்பது முழுக்க முழுக்க மூளையின் செயலாகும். மூளை இல்லையேல் சிந்திப்பதும் சாத்தியமில்லை.’

ஆக, பொருள்முதல் வாதிகள் முன்வைக்கும் வாதங்களும், விஞ்ஞானிகள் தரும் விளக்கங்களும் ‘உயிர் என்பது சூட்சுமமானதும் தனியே இயங்கக்கூடியதுமான  ஒன்றல்ல; அதுவும் ஒரு பொருளே’ என்னும் கருத்தை உறுதி செய்கின்றன. எனினும்...........

“பொருள்களின் தோற்றம் நிகழ்ந்தது எவ்வாறு? பொருள்களின் பரிணாம மாறுதல்களால் உயிர் தோன்றியது எப்படி?” என்ற வினாக்களுக்கு இந்நாள்வரை விடை இல்லை!

வருங்காலத்திலேனும் விஞ்ஞானத்தால் விடை காண முடியுமா என்றால், “முடியும்’ என்று சொல்லும் துணிவு எவருக்கும் இல்லை.

“மனித இனம் இம்மண்ணில் நிலைபெற்றிருக்கும்வரை விடை தேடும் முயற்சி தொடரும்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

அறிவியல் பதிவு எழுதும் அளவுக்கு அறிவியலறிவு படைத்தவனல்ல நான். ‘உயிரின் தோற்றம்’[NCBH, முதல் பதிப்பு, பிப்,2008] என்னும் இந்த நூல் தந்த தைரியத்தில் எழுதினேன்.

நூலில் சிதறிக் கிடக்கும் குறிப்பிடத்தக்க கருத்துகளைத் தொகுத்து, சுருக்கி, கொஞ்சமே கொஞ்சம் என் கருத்துகளையும் கலந்து என் நடையில் தந்துள்ளேன்.

பிழை காணின் பொறுத்தருள்க.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

































செவ்வாய், 16 டிசம்பர், 2014

கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘அந்நியம்’ சிறுகதையின் தொடர்ச்சி.....

கதையின் ‘முதல் பகுதி’யைப் படிக்காதவர்களுக்கு: http://kadavulinkadavul.blogspot.com/2014/12/blog-post_15.html [‘கிளிக்’குக!]


‘அந்நியம்’ சிறுகதையின் தொடர்ச்சி.....

அந்த நிர்ப்பந்தத்தில் நிலைகுலைந்து போன அவன் வீறிட்டு அலறினான். வீடே இரண்டு பட்டது.

அம்மா ஓடி வந்து பேரனை அள்ளிக்கொண்டாள். மணிக்கு உள் மனதில் ஏதோ முள்ளாய்க் குத்தியது.

கணவனின் எண்ண ஓட்டங்களைக் கண்களில் கண்ட சரசு, “அப்படித்தாங்க அவன். புதுசா யார்கிட்டேயும் போக மாட்டான். நீங்க போயிக் குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்”என்றாள்.

முள் குத்திய இடத்தில் இப்போது அரிவாள் அறுத்தது.

“நான் புதுசா? மகனுக்கு அப்பன் புதுசா? எனக்கு என் குழந்தையின் முகம் அந்நியமா? என் குழந்தைக்கு நானே அந்நியமா?”- மணியின் மனசுக்குள் புகை மண்டலம் மண்டியது.

ரு வாரம் ஆயிற்று. இரு வாரம் ஆயிற்று. மகன் தந்தை உறவில் ஒரு சின்ன வளர்ச்சி.

மணியைக் கண்டால் அவன் முன்பு போல் அலறுவதில்லை; அழுவதில்லை.

ஆனால், அவன் கண்களை விட்டு மிரட்சியும் அந்நியமும் மீளவில்லை.

மணியின் மனசிலிருந்த உற்சாகம் காணாமல் போனது.

எல்லோரிடமும் கலகலப்பாகவே பேசினான். பேச்சின் கீழே சாரமில்லை.

மனைவியோடு சிரித்துக்கொண்டுதான் இருந்தான்; சிரிப்பின் கீழே ஈரமில்லை.

அன்று இரவு சங்கமக் களைப்பிற்குப் பிறகு அவள் கேட்டேவிட்டாள்.

“ஏன் ஒரு மாதியாவே இருக்கீங்க?”

அவன் கலைந்த லுங்கியைக் கட்டிக்கொண்டு ஜிவ்வென்று எழுந்து உட்கார்ந்து சிகரெட் புகைக்கு நடுவே கனவில் பேசுகிற மாதிரி பேசினான்.

“சரசு, சொந்த ஊரில் சோத்துக்கு வழியில்லேன்னுதான் கடல் கடந்து போனேன். ஒரு பெரிய திமிங்கலம் பிடிக்கணும்கிறதுதான் நோக்கம். இப்ப திமிங்கலத்தை நான் பிடிச்சிருக்கேனா திமிங்கலம் என்னைப் பிடிச்சிருக்கான்னுதான் தெரியல. செண்ட்டு, பளபளப்பு, சோப்பு, புடவை...இதுதான் ஊருக்குத் தெரியற வாழ்க்கை. ஆனால், உள்ளுக்குள்ளே ஒரு கீரல் இருக்கே! அது யாருக்காவது தெரியுமா? யாருக்காக உழைக்கிறேனோ அவங்க பக்கத்தில் நான் இல்லை. உங்களுக்கு வாழ்க்கை காசோலையிலே...எனக்கு வாழ்க்கை தபால்லே...பணம் எனக்கு ரொம்பச் சினேகமாயிருக்கு. மகன் எனக்கு ரொம்ப அந்நியமாயிருக்கான். இது என்ன வாழ்க்கை சரசு?”

சரசு மவுனமானாள்.

ரவாயில்லையே! இப்போதெல்லாம் அவன் சிரிக்கிறான்.

“வாடா” என்று அப்பா அழைத்தால் அந்தக் கோரிக்கையை அவன் பரிசீலிக்கிறான்.

ஆரம்பத்தில் அப்பா ஊட்டிவிட்டால் துப்பியவன் இப்போ வேண்டா வெறுப்போடு சாப்பிட்டான்.

அம்மாவோடுதான் படுப்பேன் என்று அடம் பிடித்தவன் இப்போது அப்பாவின் பக்கமும் திரும்பிப் படுக்கிறான்.

அவன் தூங்கும்வரை அப்பா தட்டிக் கொடுப்பதை அவன் சகித்துக்கொள்கிறான்.

மணியின் நெஞ்சுக்குள் இப்போது ஆறுதலாக ஒரு மாறுதல்.

ஆனால், இந்த ஆறுதல் எவ்வளவு தூரம்? எவ்வளவு நேரம்?

நாளை இந்நேரம் சென்னை.

நாளை மறு நாள் பம்பாய். அங்கிருந்து துபாய்.

நேற்று வந்த மாதிரி இருக்கிறது. நேரம் போனது தெரியவில்லை.

அன்று இரவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது “அப்பா” என்று அழைக்கச் சொல்லி மகனைக் கெஞ்சினாள் சரசு.

அவன் பகிரங்கமாய் மறுத்தான்.

அடித்துவிட்டாள்; தடம் பதிய அடித்துவிட்டாள்.

மனைவியைத் திட்டினான் மணி.

மகனை எவ்வளவோ சமாதானப்படுத்தினான். அவன் அழுதுகொண்டே உறங்கிப் போனான். மகனை அணைத்துக்கொண்டே மணியும் உறங்கிப் போனான்.

புழுதி பறக்க வாடகைக் கார் வந்து நின்றது.

வரும்போது நிறையப் பெட்டிகள். இப்போது ஒன்றே ஒன்றுதான்.

பெட்டியைக் காரில் வைக்கச் சொல்லிவிட்டு அவன் விடை கேட்டபோதுதான் அம்மாவும் சரசுவும் அழுதார்கள்.

இருவருக்கும் தனித்தனியே ஆறுதல் சொன்னான்.

தான் மட்டும் கசியும் கண்களை மறைத்துக்கொண்டான்.

தூணைக் கட்டிக்கொண்டு தூரத்தில் நின்றுகொண்டிருந்த மகன் மட்டும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

இவன் முத்தமிடப் போனான். அவன் தூணுக்குப் பின்னே தலையிழுத்தான்.

காரைச் சுற்றி, அவனை வரவேற்ற கூட்டம் வழியனுப்பவும் காத்திருந்தது.

காருக்குள் அமர்ந்தபடி கண்ணீர்த் திரையினூடே அம்மாவையும் சரசுவையும் மறுபடியும் பார்த்தான்.

மங்கலாய் மகன் தெரிந்தான்.

“போய்ட்டு வர்றேன். லெட்டர் போடுங்க. எல்லாருக்கும் வணக்கம்! கண்ணு வரட்டுமா?” கார் ஒரு குலுக்கலோடு புறப்பட்டது.

கார் சந்து தாண்டிவிட்டது. சாலை கடக்கவில்லை.

“அப்பா.....”

காற்றைக் கிழித்தது கன்றின் குரல்.

சாலையில் எழுந்த புழுதியில் கார் மறைந்து போனது.

*****************************************************************************************************************************************************








திங்கள், 15 டிசம்பர், 2014

கவிஞர் வைரமுத்து தொடாத துறையா ‘சிறுகதை’?!

கவிஞர் வைரமுத்து ‘குமுதம்’ இதழில் சிறுகதைகள் எழுதவிருக்கிறார்[குமுதம், 22.12.2014].  இது, இதுவரை அவர் ‘தொடாத துறை’ என்கிறது குமுதம்[15.12.2014]. கவிஞர் இதுவரை சிறுகதை எழுதியதே இல்லையா?

 “எழுதியிருக்கிறார்” என்பதே என் பதில்.  1995 ஆம் ஆண்டில் அவர் சிறுகதை எழுதியிருக்கிறார். எனவே, சிறுகதைத் துறையைக் கவிஞர் ஏற்கனவே தொட்டுவிட்டார் என்பதே உண்மை[தொடரவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்].

இதோ ஆதாரம்..........

வைரமுத்து எழுதிய சிறுகதையின் தலைப்பு: ‘அந்நியம்’.

வெளியான வார இதழ்:                                  'ராணி', 16.04.1995.

கதை...........

“என்னப்பா ஆளே மாறிப் போய்ட்டே.....”

“நம்ம மணிப்பயதான். தோல் செவந்து போயில்ல வந்திருக்கான்.”

“பெட்டியை வாங்கு! பெட்டியை வாங்கு!”

“ஏம்பா! அங்கே தண்ணியே கிடையாதுங்கறாக...எப்படிக் குளிக்கிறீங்க?”

“பய பளபளப்பாத்தான் ஆயிட்டான்.”

இந்த வரவேற்பு அவன் எதிர்பார்த்ததுதான். தொண்ணூத்தி ஒன்றில் போனவன் தொண்ணூத்து ஐந்தில் வந்திருக்கிறான்.

“நல்லா இருக்கியாம்மா.” அம்மாவின் உள்ளங்கை பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டான்.

அவள் பதிலை எதிர்பார்க்காமலேயே மனைவியின் திசையில் பார்வையைப் பரப்பினான்.

ஒரு கண்ணில் கண்ணீரையும் ஒரு கண்ணில் ஆசையையும் தேக்கி வைத்திருந்த சரசு, நிலைப் படியோரம் நின்றுகொண்டே அவனைப் பார்வையால் பருகிக்கொண்டிருந்தாள்.

“துபாய்னா சும்மாவா...? நம்மூர்ல தண்ணிக் கிணறு இருக்கிற மாதிரி அங்கே எண்ணைக் கிணறு இருக்காம்ல...கொட்டாதா காசு?”-கேள்விப்பட்டதை வைத்து ஒரு கிழவன் கயிறு திரித்தான்.

எல்லோரும் அவனிடம்தான் மாறுதல் பார்த்தார்கள். எந்த மாறுதலையும் அவன் பார்க்கவில்லை.

அதே முகங்கள்! அதே சுருக்கங்கள்! வெளிச்சம் இருந்தாலும் இருட்டுப் பள்ளத்தில் கிடக்கிற கண்கள்! அதே ஓட்டு வீடு! காரை பெயர்ந்த அதே சுவர்! அதில் எழுதப்பட்டிருந்த உங்கள் ஓட்டு என்ற வாசகத்தில் அழிந்த நிலையில் அதே’ங்’

அங்கு வந்திருந்த யாரையும் அவன் ஏமாற்றவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு கொடுத்தான்.

ஒருவருக்குப் பேனா. ஒருவருக்கு சிகார் லைட்டர். ஒருவருக்கு நக வெட்டி. பக்கத்து வீட்டுக் கிழவிக்குப் புடவை...என்று எடுத்துக் கொடுத்தான்.

அந்த நிமிடங்களில் அந்தந்த முகங்களில் சந்தோச ரேகைகள் சரஞ்சரமாய்ப் பரவுகின்றனவே...அந்த ஆனந்தம் சுகமானது; சுத்தமானது.
ண்ணு...! டேய் எழுந்திரு...அப்பா வந்திருக்காரு பாரு...எழுந்திரு...” சரசு விடாமல் எழுப்பினாள்.

நான்கு வயது மகன் புரண்டு படுத்தான்.

தொடர்ந்து அவன் தூக்கம் கலைத்துத் துன்புறுத்தவும் செய்தாள்.

“டேய்! அப்பா பொம்மை வாங்கிட்டு வந்திருக்கார்டா, நாய் பொம்மை...கை தட்டினா குலைக்கும்.”

மகனின் விலாவில் விரல் பாய்ச்சினாள்.

“வேணாம் சரசு. குழந்தை தூங்கட்டும். காலையில் எழுந்து அப்பாவைப் பார்த்தா அவனுக்கு ஆச்சரியமா இருக்குமில்ல. அப்படியே தூங்கட்டும்.”

மனைவியைத் தடுத்துவிட்டு மகனின் நெற்றி தடவினான். அவனது முடியைக் கோதிக் கொடுத்தான். அவன் பக்கத்தில் படுத்து பிஞ்சுக் கைகளை நெஞ்சி வைத்துக்கொண்டான். குனிந்து உறக்கம் கலைக்காமல் முத்தமிட்டான்.

இது என்ன புது இன்பம்? இதுவரை அடைந்திராத இன்பம்? அவசரமில்லாத பரவசம்? படுத்திருக்கும் ஜீவன் தன் உயிரின் உயிர் என்கிற உற்சாகமா?

தொட்டில் குழந்தையாய்க் கிடக்கையில் விட்டுவிட்டுப் போனவன் நான்கு ஆண்டுகள் கழித்து இன்று வளர்ந்த பிறகு வந்திருக்கிறானே...அந்த ஆசையின் அடர்த்தியா?

தன் மகனின் முகம் தொட்டுத் தொட்டு மனைவியின் முகம் பார்த்து மகிழ்கிறானே!

உண்மையில்...மனசுக்குள் இப்போது துருத்திக்கொண்டிருப்பது துக்கமா, சந்தோசமா?

சில பொம்மைகளையும் சில சாக்லெட் பெட்டிகளையும் மகனின் தலையணை அடிவாரத்தில் வைத்துவிட்டு...“எப்படி வளர்ந்துட்டான்ல...!...உன் நிறம்...என் சாயல்...” என்றான் மனைவியின் உள்ளங்கையைக் கிள்ளிக்கொண்டே.

அந்தக் கிள்ளல் அவளுக்கு இதுவரைக்கும் இருண்டு கிடந்த பிரதேசங்களில் எல்லாம் பொசுக்கென்று வெளிச்சம் போட்டது.

கன் வாங்கி வந்த நான்கு பவுன் சங்கிலியில் மகிழ்ந்து போனாள் அம்மா. “கல்யாணத்தன்னிக்கி கழுத்தில் கெடந்துச்சி. பிறகு எங்கே தங்கத்தைப் பார்த்தேன்?” என்று மலரும் நினைவுகளில் அழுதாள்.

ரவின் பிற்பகுதி.

மணிக்கும் சரசுவுக்கும் அப்போதுதான் தனிமை கிடைத்தது.

“இது உனக்கு சோப்பு...இது உனக்குப் பவுடர்...ஒரு ஜோடி தங்க வளையல்...மோதிரம்...எல்லாம் உனக்குத்தான்! இதோ பார்! சேக்கு வீட்டுப் பொம்பளைங்க மட்டும் போட்டுக்கிற செண்ட்டு...”- ஒரு பளபளப்பான பாட்டிலை நீட்டினான்.

அவள் வாங்கினாள். பூச்சி மருந்து அடிக்கிற மாதிரி முகத்துக்கு நேரே பீச்சினாள்.

அவன் பதறிப் போய்த் தடுத்தான்; சிரித்தான்.

செண்ட் போடும் இடங்களைச் சொல்லிக்கொடுத்தான். அவள் சிணுங்கினாள்.

தேக்கி வைத்த ஆசைகள் அணை உடைத்தன. வெள்ளம்; வெள்ளம்; விடிய விடிய வெள்ளம்.

“டேய்! அப்பாடா...அப்பா...அதோ பார் அப்பா...போடா...போ!”

பையன் பயந்தான்.

“வாடா கண்ணு...வா...அப்பா வந்திருக்கேன். வா வா வா...!”

பையன் அழுதான். முதலில் குடையைக் கண்டு மிரளும் மாடு மாதிரி!

“உனக்குப் பொம்மை, சாக்லேட்டு எல்லாம் வாங்கி வந்திருக்காரு...அப்பாடா...அப்பா!”

மகனைக் கணவன் கையில் திணித்தாள்.

குழந்தை தத்தளித்தான். தன் உடம்பெங்கும் ஓர் அந்நிய ஆதிக்கம் பரவுவதாய் நினைத்தானோ என்னவோ!..........[தொடரும்]

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

மன்னியுங்கள் நண்பர்களே. அவசரப் பணி ஒன்று குறுக்கிட்டுவிட்டது. மீதிக் கதையை நாளை எழுதி முடிப்பேன்.

தடங்கலுக்கு வருந்துகிறேன்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000






ஞாயிறு, 14 டிசம்பர், 2014

கல்யாணமாம் கல்யாணம்!... மேட்டுக்குடி கல்யாணம்!!

இது புத்தம் புதிய கதை. தரமான படைப்புகளைத் தேடி அலையும் முன்னணி இதழ்கள்[5 லட்சம் பிரதிகளுக்கு மேலே விற்பனையாகும் வார இதழ்கள் மட்டும்] என்  அனுமதி பெறாமலே இதை வெளியிட்டுக்கொள்ளலாம். சன்மானம்? “ஊஹூம்.....வேண்டாங்க.”

கதை.....

“உங்க முதலாளி வீட்டுக் கல்யாணம் எப்படி இருந்திச்சி?” வீடு திரும்பிய தங்கமுத்துவிடம் அவன் மனைவி பரிமளா கேட்டாள்.

“பிரமாதம். கார்கள் மட்டும் பத்தாயிரம் தேறும். மண்டபத்தில் இடமில்லாம வெளியே போட்டிருந்த பந்தலிலும் கூட்டம் நிரம்பி வழிஞ்சுது. ஒரு பெரிய அரசியல் கட்சி மாநாடு தோத்துடும்.”

“அம்மாடி...! அவ்வளவு ஜனங்களா? சாப்பிட்டியாய்யா?”

“பஃபேயில் நீள...நீள...கியூ. ஒரு மணி நேரம் தட்டேந்தி வரிசையில் நின்னுதான் சாப்பிட முடிஞ்சுது. வகை வகையான உணவுப் பண்டம். பல அய்ட்டங்களை நான் கண்ணால பார்த்ததே இல்லை. ஒன்னு விடாம வாங்கிச் சாப்பிட்டேன். ஒன்னைவிட ஒன்னு ருசி. கை கழுவின அப்புறம் பெரிய கப்பில் ஃபுரூட் சாலெட், மலை வாழைப் பழம், ஸ்வீட் பீடான்னு எதையும் விட்டு வைக்கல.....”

வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த பரிமளா, “ வாய் ஊறுதுய்யா” என்றாள்.

“நினைச்சா எனக்கு இன்னமும் ஜொள்ளு ஊறுது. வயசுப் பொண்ணுக நிறைய வந்திருந்தாங்க. எல்லாம் வெய்யில் படாம வளர்ந்த குட்டிக. கண்ணுக்குக் குளிர்ச்சியா கொழு கொழு தளதளன்னு.....”

‘நறுக்’ என்று அவனின் தோள்பட்டையில் அவள் கிள்ள, “ஆ...” என்று அலறினான் தங்கமுத்து.

“ரொம்பவே வழிஞ்சிருக்கே. வேற என்ன பார்த்தே? சொல்லு” என்றாள் பரிமளா.

“அசத்தலான வரவேற்பு வளைவு, மேடை அலங்காரம், இன்னிசைக் கச்சேரி...இப்படிச் சொல்லிட்டே போகலாம். நல்ல வேளை, என்னோட நீ வரலை.”

“வந்திருந்தா.....”

“பொம்மணாட்டிங்க கட்டியிருந்த காஸ்டிலியான பட்டுப் புடவைகளைப் பார்த்து ரொம்பத்தான் ஏங்கியிருப்பே. அவங்க போட்டிருந்த தங்க நகைகளைச் சேகரிச்சா நாலு கோணிச் சாக்கு தேறும்.”

“ம்ம்ம்.....” நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்திய பரிமளா, “எல்லாம் சரி, பொண்ணு மாப்பிள்ளை ஜோடிப் பொருத்தம் எப்படி?” என்றாள்.

“அவங்களை யாரு பார்த்தா?”

“கல்யாணத்துக்குப் போய்ட்டு பொண்ணு மாப்பிள்ளையைப் பார்க்கலையா? நல்ல கூத்தய்யா.” வாய்விட்டுச் சிரித்தாள் பரிமளா.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வியாழன், 11 டிசம்பர், 2014

குமுதம் ஆசிரியருக்குப் பிடித்த கதை உங்களுக்குப் பிடிக்காதா என்ன?!

                                                   டெஸ்ட்

ன் வீட்டில் முழுநேர வேலைக்காரியாகக் கன்னியம்மா பதவியேற்று முழுசாக ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் இரண்டு பரீட்சைகளில் ஜெயித்து இன்று மூன்றாவது சோதனையைச் சந்திக்கவிருக்கிறாள்.

பத்து நூறு ரூபாய்ப் பச்சை நோட்டுகளை, வெளியே துருத்திக்கொண்டிருக்கும் வகையில் பர்ஸுக்குள் திணித்து, சோபாவின்மீது வீசிவிட்டு, “புறப்படுவோமா?” என்றேன்.

“என்னங்க இது விஷப்பரீட்சை? அம்பதா நூறா? ஆயிரம் ரூபாய்ங்க! கன்னியம்மா அபேஸ் பண்ணிட்டு மாயமா மறைஞ்சிட்டான்னா? வேண்டாங்க” என்று தனது நியாயமான அச்சத்தை வெளிப்படுத்தினாள் என் மனைவி பாப்பு.

“பயப்படாம வா.” என்றேன்.

ரண்டரை வயது ராஜீவுக்குப் பெற்றோர்களான நாங்கள் இருவருமே அலுவலகம் சென்று சம்பாதிப்பவர்கள். நாங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையைப் பராமரிக்கும் ஆயாவாக இருந்து, மீதி நேரத்தில் இதர காரியங்களில் ஒத்தாசை செய்ய ஒரு வேலைக்காரி எங்களுக்கு நிரந்தரத் தேவையாகிவிட்டாள்.

திருட்டுப் புரட்டு இல்லாத யோக்கியமான பெண் கிடைத்தால் தேவலை என்று செங்கல்பட்டு மாமாவிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரால் அனுப்பி வைக்கப்பட்டவள்தான் இந்தக் கன்னியம்மா.

கன்னியம்மா கண்ணியமானவள்தானா என்பதைக் கண்டுபிடித்துவிடத்தான் இந்தச் சோதனைகள்! இது மூன்றாவது சோதனை.

முதல் டெஸ்டாக, வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாளே, வேண்டுமென்றே சட்டைப் பாக்கெட்டில் நூறு ரூபாய் நோட்டை வைத்து, சட்டையைத் துவைக்கக் கொடுத்தேன். முனை முறியாமல் நோட்டை என்னிடம் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டாள் கன்னியம்மா, “சட்டையில் இருந்ததுங்க” என்று சொல்லி.

மற்றொரு நாள், டைனிங் டேபிளருகே ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளைப் பொட்டலம் போல் மடித்துப் போட்டுவிட்டு வந்து காத்திருந்தேன்! பத்திரமாய்த் திரும்பி வந்தது. “அங்கே இருந்ததுங்க”என்றாள்.

இன்று கடைசிச் சோதனை.
[பக்கங்களில், இதழின் பெயரைத் தேதியுடன் அச்சிடும் வழக்கம் அன்று இல்லை]

ழக்கமான நேரத்துக்குக் கொஞ்சம் முன்னதாகவே வீடு திரும்பினோம். பர்ஸ் போட்ட இடத்தில் போட்டபடி கிடந்தது. திறந்து பார்த்த போது பணம் அப்படியே இருந்தது. பூரித்துப் போனோம்.

கன்னியம்மா கொண்டுவந்து தந்த காப்பியை உறிஞ்சிவிட்டுத் தலை நிமிர்ந்தபோது, ஒரு துணி மூட்டையுடன் எங்கள் முன் வந்து நின்றாள் அவள்.

“நான் ஊருக்குப் போறேனுங்க” என்றாள்.

“என்னம்மா சொல்றே?”

“ஐயா அம்மா ரெண்டு பேருமே வேலைக்குப் போறீங்க. கண்ட எடத்துல நூறு ஆயிரமுன்னு பணத்தை வைச்சுடறீங்க. ஏதோ என் கண்ணுல படறப்ப எடுத்துக் குடுத்துடறேன். ஒரு கெட்ட நேரத்துக்கு என் கண்ணுல படாம வேறே யாராச்சும் எடுத்துட்டுப் போயிடுறாங்கன்னு வைச்சுக்குங்க. உடனே, வேலைக்காரி என் மேலதான் உங்களுக்குச் சந்தேகம் வரும். நான் தப்புச் செய்யலேன்னாலும், போலீஸ் அது இதுன்னு கூப்பாடு போடுவீங்க. எதுக்கு இந்த வம்பெல்லாம்? ஜாக்கிறதையா இருக்கிறவங்க கிட்டேதான் வேலை பார்க்கணும்.”

எங்கள் அனுமதியை எதிர்பாராமல் அவள் புறப்பட்டுவிட்டாள்.

=============================================================================================

20.05.1982 இதழில் வெளியானது.

=============================================================================================




செவ்வாய், 9 டிசம்பர், 2014

அம்மம்மா.....! ‘அம்மா’வா அன்று இப்படிப் பேசினார்?!

'குமுதம்’ இதழில், 1982 முதல் 2012 வரையிலான காலக் கட்டத்தில் நான் எழுதிய 18 ஒ.ப.கதைகள் வெளியாயின. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் அனுப்பிய படைப்புகளில் ஒன்றுகூட வெளியாகவில்லை[குமுதத்தின் தரம் உயர்ந்து என் படைப்புகளின் தரம் தாழ்ந்துவிட்டது!]

அந்த இதழில் வெளியான என் முதல் கதையைப் பதிவாக வெளியிட்டு ஆறுதல் பெற நினைத்தேன். கதை வெளியான குமுதம் இதழைப் புரட்டியபோது, ஒரு செய்தி கண்ணில் பட்டது. கதையை விடச் செய்தி பல மடங்கு சுவையானது என்பதால் அதை இங்கு பதிவு செய்கிறேன்[‘மூடர் உலகம்' என்னும் என் வலைப்பதிவு Remove செய்யப்பட்ட சோகத்திலிருந்து இன்னும் விடுபடாத நிலையில்!!!].


செய்தியின் தலைப்பு:
ஜெயலலிதா அரசியலில் குதிக்கப் போகிறாரா?

சென்னையில் கைத்தறிக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியின் இருபத்தெட்டாவது நாள் விழாவில் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம்:

“தமிழக அரசியலில் காலாவதியாகிவிட்ட சில அரசியல்வாதிகள் சில பத்திரிகைகளை நடத்துகிறார்கள். அந்தப் பத்திரிகைகளில் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பாரதி விழாவுக்குச் சென்று கலந்துகொண்டேன். உடனே ஒரு பத்திரிகையில், ஜெயலலிதா மந்திரியாகப் போகிறார் என்று செய்தி வெளியிட்டார்கள்.

திரைப்படக் கல்லூரி முதல்வர் நீலகண்டன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவரைப் பார்த்துவர மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். உடனே அந்தப் பத்திரிகையில் மறுநாள் ஒரு செய்தி வெளி வருகிறது. நீலகண்டனுக்குப் பதில் திரைப்படக் கல்லூரி முதல்வராக ஜெயலலிதாவை நியமிக்கப் போகிறார்கள் என்று. அப்படி எதுவுமே நடக்கவில்லை.

இப்போது நான் கைத்தறிக் கண்காட்சிக்கு வந்திருக்கிறேன். இதைக் காரணமாக வைத்து நாளைக்கே ஒரு செய்தி போட்டாலும் போடுவார்கள்.  அனகாபுத்தூர் ராமலிங்கத்துக்குப் பதிலாகக் கோ-ஆப்டெக்ஸ் ஆலோசனைக் குழுத் தலைவராக ஜெயலலிதா நியமிக்கப்படப் போகிறார் என்று. இப்போதே அனகாபுத்தூர் ராமலிங்கத்திற்கு ஒரு உறுதியைத் தருகிறேன். எனக்கு அந்தப் பதவி மீது ஆசை கிடையாது.

ஒரு பத்திரிகையில் இன்னொரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி முதல்வர் பதவி வேண்டாம். கொடுத்தால் மந்திரி பதவி கொடுங்கள். இது மாதிரிப் பதவியெல்லாம் வேண்டாம் என்று நான் கூறிவிட்டேனாம்.

உறுதியாகக் கூறுகிறேன். எனக்கு எந்தப் பதவி மீதும் ஆசை கிடையாது.......”  -‘மக்கள் குரல்’
                                                                                                                   

மேற்கண்டவாறு, ‘மக்கள் குரல்’ பத்திரிகையை மேற்கோள் காட்டிக் குமுதம் வார இதழ்[20.05 1982, பக்கம் 1] செய்தி வெளியிட்டிருந்தது.

‘அம்மா’ இப்படிப் பேசியிருப்பார்களா? நம்ப முடிகிறதா?

பொய்ச் செய்தி வெளியிட்டது குமுதமா, மக்கள் குரலா?

=============================================================================================


சனி, 6 டிசம்பர், 2014

நன்றி கொன்ற ‘பசி’

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுதவுள்ளேன். இது பழையதொரு இடுகை. முன்னோட்டம் பார்ப்பதற்காக வெளியிடப்படுகிறது

இந்தக் கதையில் எடுப்பான ‘தொடக்கம்’ இல்லை; காதலோ காமமோ இல்லை; ‘விறுவிறு’ நடை இல்லை; ‘புதிர்’ [suspense] இல்லை.....! “பின்னே என்னதான் இருக்கு?” என்கிறீர்களா? 

ஏதோ இருக்கு! பொறுமைசாலிகள் படிக்கலாம்!


                                                              பசி
    ['பசி'யின் படைப்பாக, மார்ச் 1997 'ஓம் சக்தி' மாத இதழில் வெளியானது]

ன்று கண்ணப்பரின் மாளிகையில் ஏழைகளுக்கு அன்னதானம்.

ஆண்டுக்கு ஐந்தாறு தடவையேனும் விசேச நாட்களில் அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்ட அவரை, அமைச்சர் ஒருவர், “கலியுக வள்ளல்” என்று பாராட்டி நிகழ்வைத் தொடங்கி வைத்துவிட்டுப் போனார்.

உள்ளூர்ப் பிரமுகர்கள் பலரும் நேரிலும் பேசியிலும் புகழ்ந்து தள்ளினார்கள்.

யார் என்ன புகழ்ந்தும் கண்ணப்பருக்கு மன நிறைவு இல்லை. அவையெல்லாம் மனப்பூர்வமான பாராட்டுகள் அல்ல என்பது அவருக்குத் தெரியும். யாருக்கு அன்னதானம் செய்கிறாரோ அந்த ஏழைகளால் வாயார, மனதாரப் புகழப்படுவதையே அவர் மனம் நாடியது.

தன் உதவியாளர் சுந்தரத்துடன் உணவுக்காகக் காத்திருந்த பிச்சைக்காரர் வரிசையை ஒட்டி நடந்தார்.

அத்தனை பிச்சைக்காரர்களும் எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்த வகை வகையான உணவுப் பண்டங்களை ஜொள் ஒழுகப் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர, கண்ணப்பரை யாருமே கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் தம் புகைப்படம் பொறித்த வண்ண வண்ணச் சுவரொட்டிகளைத் தெருத்தெருவாய் ஒட்டச் செய்திருந்தார் அவர்.

“சுந்தரம்.” உதவியாளரை அழைத்தார் கண்ணப்பர்.

“ஐயா.”

“இந்தப் பிச்சைக்காரங்களுக்குக் கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இல்லை. கவனிச்சீங்களா? அவனவன் திங்கிறதுக்கு அலையுறானே தவிர  என்னை யாருமே கண்டுக்கல.”

யோசித்தார் சுந்தரம். “என்னோட வாங்க” என்று சொல்லி நடந்தார். அவரைப் பின்தொடர்ந்தார் கண்ணப்பர்.

மளிகையின் சுற்றுச் சுவருக்குள் பரந்து விரிந்து கிடந்த புல்வெளியில், சிதறல் சிதறலாக அமர்ந்து பிச்சைக்காரர்கள் பசியாறிக்கொண்டிருந்தார்கள்.

இருவரும், அவர்களைக் கடந்து காம்பவுண்டின் கேட்டை அடைந்தார்கள்; நின்றார்கள்.

வெளியேறிக்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரன், “ஐயா, வாய்க்கு ருசியா விருந்து படைச்சீங்க. வயிறு நிறையச் சாப்பிட்டேன். நீங்க தீர்க்காயுசா இருக்கணும்” என்று இரு கரம் கூப்பி வாழ்த்திவிட்டுப் போனான்.

அடுத்து வந்த ஒருவன், “புண்ணியவானே, ரொம்பப் பெரிய மனசு உங்களுக்கு. உங்க குடும்பம் தழைக்கணும்” என்றான்.

இப்படியாக, உண்டு முடித்த அத்தனை பேருமே வரிசையில் நின்று கண்ணப்பரை வாழ்த்திவிட்டுப் போனார்கள்.

கண்ணப்பரின் முகத்தில் திருப்தி படர்ந்திருப்பதைக் கண்ட சுந்தரம் சொன்னார்: “பசியோட இருப்பவன் முன்னால வகை வகையா தின்பண்டங்களைக் குவிச்சி வெச்சா அவன் கவனமெல்லாம் பண்டங்கள் மேலேதான் இருக்கும். பசி தணிஞ்சப்புறம்தான் நன்றி, விசுவாசம், பாராட்டு, பக்தி எல்லாம்.”

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@










நெஞ்சைத் தொட்ட ஓர் ஆன்மிகக் கதை!

ஆன்மிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் இந்தக் கதை ரொம்பவே பிடிக்கும். காரணம், அதன் ‘முடிவு’!

கதை:                                  மனதில் சுமந்தவர்

ஓர் ஆற்றங்கரையில் ஒரு குருவும் சீடனும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர்.

பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் மலைச் சிகரங்கள் சூழ்ந்த, நெடிதுயர்ந்த மரங்களும். மணம் பரப்பும் செடிகளும், கொடிகளும் நிறைந்த ரம்மியமான சூழலில் தவம் இய்ற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

மக்களும் இவர்களைத் தேடி வருவர்; உபதேசம் பெறுவர்.

இது தவிர, ஊர் ஊராகச் சென்று பக்திச் சொற்பொழிவுகளும் செய்து வந்தார்கள்.

ஒரு சமயம், ஒரு கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள அண்டையிலிருந்த ஓர் ஊருக்கு இருவரும் கிளம்பினார்கள்.

ஆறு குறுக்கிட்டது. அதைக் கடக்க இருந்த நேரத்தில் ஓர் அழகான பெண் அங்கு வந்தாள்; சொன்னாள்:



“சுவாமிகளே, நான் கோயில் திருவிழாவுக்குச் செல்ல வேண்டும். என்னால் ஆற்றைக் கடக்க முடியாது. தண்ணீரைக் கண்டால் ரொம்பவே பயம். உங்களில் ஒருவர் என்னைத் தூக்கிச் சென்று அக்கரையில் சேர்த்தால் மிகவும் நன்றி உள்ளவளாக இருப்பேன்” என்றாள்.

சீடன் திடுக்கிட்டான்.

சற்றே யோசித்த குரு, அந்தப் பெண்ணைத் தன் இரு கைகளாலும் தூக்கிச் சென்று அக்கரையில் சேர்த்தார்.

சீடன் மனதைக் குழப்பம் ஆக்கிரமித்தது.

 ‘நம் குரு ஒரு இளம் பெண்ணைத் தொட்டுவிட்டாரே. இது தவறில்லையா?’ என்று அவன் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவனுக்குக் கோவில் விழா, சுவாமி தரிசனம், அன்னதானம் என எதிலும் மனம் லயிக்கவில்லை.

இருவரும் ஆசிரமம் திரும்பினார்கள்.

இரவு வந்தது. உறங்கச் சென்றார்கள்.

மனக் குழப்பம் சீடனை உறங்கவிடாமல் தடுத்தது.

அவன் புரண்டு புரண்டு படுத்துத் துன்பப்படுவதைக் கவனித்தார் குரு; கேட்டார்:

“என்னப்பா, என்ன பிரச்சினை? உன் நடவடிக்கை சரியில்லையே. என்ன ஆயிற்று உனக்கு? சொல்” என்றார்.

சீடன் சொன்னான்: “ஆம் குருவே. இளம் பெண்களை நாம் தொடக்கூடாதல்லவா? நீங்கள் மதியம் ஒரு பெண்ணை.....” முடிக்காமல் நிறுத்தினான்.

குரு நகைத்தார்; சொன்னார்: “நான் அவள் உடலைத் தொட்டுத் தூக்கினேன்; இறக்கி விட்டவுடன் அடியோடு அவளை மறந்துவிட்டேன். நீ இன்னும் அவளை மனதில் சுமந்துகொண்டிருக்கிறாயே?”

சீடன் மனதில் தெளிவு பிறந்தது.

=============================================================================================

இது, என்.சிவராமன் தொகுத்த, ‘ஆன்மிகக் குட்டிக் கதைகள்’ என்னும் தொகுப்பிலிருந்து 'சுட்டு’த் திருத்தியது!

=============================================================================================

புதன், 25 ஜூன், 2014

கடவுளுக்கு நன்றியுணர்ச்சி உண்டா? [பத்துக் கேள்விகளும் பதில்களும்]

கேள்வி1: உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
பதில்: கீழ்க்காணும் வாசகத்தைப் பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுப்பேன். வேறு கொண்டாட்டம் ஏதுமில்லை.
வாசகம்: ‘கடவுளே, நீர் இருப்பது உண்மையானால்..........இனவிருத்தி செய்யவும், இன்பதுன்பங்களை அனுபவிக்கவும் என்னைப் படைத்தீர். என்னைப் பொருத்தவரை நூறாண்டுகள் வாழ்ந்து உம்முடைய நோக்கத்தை நிறைவு செய்திருக்கிறேன். நீர் எனக்கு நன்றியுடையவர் ஆகிறீர். அந்த நன்றியை எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறீர் என்பதை நான் அறியச் சொல்வீரா? உணர்த்தவாவது செய்வீரா?’

கேள்வி 2: என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
பதில்: 150 ஆண்டுகள் வாழ்வதற்கான வழிவகைகளை!

கேள்வி 3: கடைசியாகச் சிரித்தது எப்போது?
பதில்: நான்கு நாட்கள் முன்பு, பேருந்து நிலையத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரன் கை நீட்டியபோது, சட்டைப்பையில் சில்லரை இருக்க, “சில்லரை இல்லப்பா” என்று சொன்னதை நினைக்கும்போதெல்லாம் என் அடிமனதிலிருந்து சிரிப்பொலி எழுகிறது. சிரிப்பது நானல்ல; என் மனசாட்சி!

கேள்வி 4: 24 மணி நேரம் ‘பவர்கட்’ ஆனால் நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்?
பதில்: பவர்கட்டா? நீங்கள் இந்த மண்ணுலகைச் சொல்கிறீர்கள். நான் உணவு உண்ட நேரமும் உறங்கிய நேரமும் போக, எந்நேரமும் வான வெளியில் சஞ்சரிப்பவன். அங்க ஏதுங்க பவர்கட்? கோடானுகோடி நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?!

கேள்வி 5: உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: வேறு எதனையும்விட வலிமை வாய்ந்தது காம உணர்ச்சி. அதைக் கட்டுப்படுத்தி வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் நிறையவே சாதிக்கலாம்.

கேள்வி 6: உலகத்தில் உள்ள பிரச்சினையில், உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
பதில்: பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்களாய் இருப்பவை ‘வயிற்றுப்பசி’யும் ‘சதைப்பசி’யும்தான். இவற்றைத் தீர்ப்பதே என் விருப்பம்.


கேள்வி 7: நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பதில்: என்னிடமேதான். என்மீது என்னைவிட அக்கறை கொண்டவர் வேறு எவர் இருக்க முடியும்?


கேள்வி 8: உங்களைப் பற்றித் தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

பதில்: நான் மிக மிகச் சாதாரணன். என்னைப் பற்றித் தவறான தகவலைப் பரப்புவதால், பரப்புவருக்கு எந்தவிதப் பலனும் விளையாது. இதைப் பற்றிய கவலை எனக்கு எப்போதும் இருந்ததில்லை.


கேள்வி 9: உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

பதில்: ஆரத்தழுவி முதுகில் தட்டிக்கொடுப்பேன். ஆறுதல் வார்த்தைகளைவிடவும் இது அதிகப் பலன் தரும்.


கேள்வி 10: உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

பதில்: எதுவும் செய்யலாம். உற்ற நண்பனிடம்கூடக் கேட்கக் கூடாத கேள்வி இது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

‘பத்துக் கேள்வி’களுக்குப் பதில் எழுதத் தூண்டிய நண்பர் ‘கில்லர்ஜி’ அவர்களுக்கும், ‘கேள்வி-பதிலை’த் தொடங்கி வைத்த மதுரைத் தமிழன் அவர்களுக்கும் என் நன்றி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சனி, 24 மே, 2014

இந்தக் கதையைப் படித்துக் கண்கலங்க வேண்டாம். சும்மா படிங்க!

முன்னணி வார இதழில், பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது இந்த ஒரு பக்கக் கதை. பிரசுரமான இதழ், வெளியான தேதி போன்ற விவரங்கள் தொலைந்துபோயின. தற்செயலாய்க் கண்ணில் பட்ட கையெழுத்து பிரதியின் மறு வடிவம் இது.


கதை:                              அப்பாவுக்காக ஒரு தப்பு

பீரோவில் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவது போல் பாவனை செய்துகொண்டே, +2 மாணவன் குணசீலனை நோட்டம் விட்டார் நூலக உதவியாளர் ஆறுமுகம்.

அலைபாயும் திருட்டுப் பார்வையுடன் சட்டைப் பையிலிருந்து ஒரு பிளேடை எடுத்து, படித்துக்கொண்டிருந்த பத்திரிகையின் ஒரு தாளில் கால் பக்க அளவுக்குத் துண்டித்தான் குணசீலன். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்தத் துண்டுக் காகிதத்தை மடித்துச் சட்டையின் உள் பாக்கெட்டில் செருகினான்; எழுந்து நடந்தான். ஆறுமுகம் பின்தொடர்ந்தார்.

குணசீலன் முதல்தர மாணவன். தினமும் தவறாமல் செய்தித்தாள் படிப்பான். ஆசிரியர்களிடம் நல்ல பெயர். இவனா இப்படிச் செய்தான்? ஆறுமுகத்தால் நம்ப முடியவில்லை.

நூலக அறையிலிருந்து வெளியேறவிருந்த குணசீலனைத் தடுத்து நிறுத்தி, நூலகரிடம் அழைத்துப் போனார் ஆறுமுகம். “அந்த வினா விடைத் திருடன் இவன்தான் சார்” என்றார்.

“சார்...இல்லை சார்...அது வந்து சார்...” நினைத்ததைச் சொல்ல இயலாமல் நாக்குழறினான் குணசீலன்.

“உனக்கு ரொம்ப நல்ல பையன்னு பேராச்சே. நீயா இப்படி நடந்துகிட்டே? எல்லாருக்கும் பயன்படுற வினா - விடைப் பகுதியை வெட்டி எடுக்கலாமா? தலைமை ஆசிரியரிடம் சொல்லி உன்னை.....”

“சார், நான் வினா விடையைத் திருடல சார். அது வந்து.....”

“கையும் களவுமா பிடிபட்டும் இப்படிப் பொய் சொல்றியேடா.”

“நான் பொய் சொல்லல சார். என் அப்பா கள்ளச் சாராயம் காய்ச்சி போலீசில் பிடிபட்டுட்டார். இந்தப் பத்திரிகையில், அவர் ஃபோட்டோவோட செய்தி வந்திருக்கு. இதைப் பார்த்தா எல்லாரும் என்னைக் கேவலமா பார்ப்பாங்களேன்னுதான் இந்தத் தப்பைப் பண்ணிட்டேன்.” அழுதுகொண்டே பத்திரிகையில் துண்டித்த பகுதியின் மறு பக்கத்தைச் சுட்டிக் காண்பித்தான் குணசீலன்.

ஃபோட்டோவில், சாராயப் பானையைத் தலையில் சுமந்துகொண்டிருந்தார் குணசீலனின் அப்பா. அவரைச் சுற்றிப் போலீஸ்காரர்கள். படத்துக்குக் கீழே விரிவான செய்தி.

“சே! ஒரு உத்தமமான புத்திசாலிப் பையனுக்கு இப்படி ஒரு அப்பனா?”

நூலகரின் கண்கள் லேசாகக் கலங்குவது தெரிந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&







வெள்ளி, 23 மே, 2014

‘விஞ்ஞானியும் மெய்ஞானியும்’ - ஒரு நடுநிலை ஒப்பீட்டாய்வு! [புதுப்பிக்கப்பட்ட பதிவு]

இந்தப் பதிவு ரொம்பப் பழசு. இதை எழுதியபோது நான் பதிவுலகுக்குப் புதுசு! என் அரைகுறை ‘அறிவியல்&தத்துவ’ ஞானம் இதில் வெளிப்படக்கூடும். எள்ளி நகையாட வேண்டாம்! விரும்பினால் மேலே படியுங்கள்.

ஆய்வு [???]....................... 

விஞ்ஞானி.....மெய்ஞானி.....

இந்த இருவர் பற்றியும் அறியாதார் எவருமிலர்.

அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானியும், ஆன்மிக வளர்ச்சிக்கு மெய்ஞ்ஞானி எனப்படுபவரும் பாடுபடுவதாக மனித சமுதாயம் நம்புகிறது.

இந்த இருவரின் குண இயல்புகள் பற்றிப் பலரும் சிந்தித்திருக்கக்கூடும்.

ஆனால், ஒப்பிட்டு ஆராய்ந்தவர்கள் எத்தனைபேர் என்பதை யானறியேன்.

இந்த  ஆய்வால் பயன் ஏதுமுண்டா? வெட்டி வேலையா?

முடிவு எதுவாயினும் ஒரு முறை முயன்று பார்ப்போமே!.

விஞ்ஞானி:
அணு முதல் அண்டம் வரையிலான எந்த ஒன்றின் தோற்றம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் அறிவியல் சாதனங்களின் துணையுடன் [துணை இல்லாமலும்] ஆராய்ந்து அறிவதில்  நாட்டம் கொண்டவர்.

மெய்ஞ்ஞானி:
‘ஆழ்ந்த சிந்தனையின் மூலமே பிரபஞ்சப் புதிர்களை விடுவித்துவிட முடியும் என்று நம்புபவர்.

விஞ்ஞானி: 
தான் அனுமானித்தது, ஆய்வின் மூலம், ‘உண்மை’ என உறுதிப் படுத்தப்பட்ட பின்னரே ஆதாரங்களுடன் அதை உலகுக்கு அறிவிப்பவர்.

மெய்ஞ்ஞானி: 
தான் அனுமானித்தவற்றோடு, புனைவுகளும் கற்பனைகளூம் கலந்து, ‘இதுவே உண்மை’ எனப் பறை சாற்றுபவர்; தொடர் பிரச்சாரங்கள் மூலம் அதை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைத்திட முயல்பவர். [படிப்பவர்களுக்குப் புரியும் என்பதால் உதாரணங்கள் தரப்படவில்லை]

விஞ்ஞானி:
பிறர், தமக்குள் எழும் ஐயங்களை இவர் முன் வைக்கும் போது, உரிய விளக்கங்களைத் தர இயலவில்லை என்றால், “எனக்குத் தெரியாது”, அல்லது, “புரியவில்லை” என, கவுரவம் பார்க்காமல் இயலாமையை ஒத்துக் கொள்பவர்.

மெய்ஞ்ஞானி: “தெரியாது”, “புரியவில்லை” போன்ற சொற்களை இவர் ஒருபோதும் உச்சரித்தறியாதவர். “நீ அஞ்ஞானி...அற்பஜீவி...” என்றோ, “நாம் சொல்லும் உண்மையை உணரத்தான் முடியும்; உணர்த்த முடியாது” என்றோ சொல்லி வாய்ப்பூட்டு போடுபவர்.

விஞ்ஞானி: 
மிகக் கடுமையாய் உழைத்தும் உண்மைகளைக் கண்டறிய இயலாதபோது, அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல், தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்.

மெய்ஞ்ஞானி
ஒன்றும் புரியாத நிலை வரும்போது,  “எல்லாம் அவன் சித்தம்...அவனின்றி அணுவும் அசையாது...அவனன்றி வேறு யாரறிவார்...” என்று சொல்லிக் கடவுளைச் சரணடைபவர்.

விஞ்ஞானி:
இவர்களில் சிலர், ‘கண்டுபிடித்தே தீருவது’ என்ற தணியாத ஆவேசத்துடன் அலுக்காமல் உழைப்பவர்கள்; சேர்த்து வைத்த பொருளை இழப்பவர்கள்; ஆய்வுக்குத் தம் உடலையே அர்ப்பணித்து உயிரிழக்கவும் துணிபவர்கள்.

மெய்ஞ்ஞானி
இவர்களில் சிலர், மனப்பூர்வமாக உண்மைகளைக் கண்டறியவும், கடவுள் நம்பிக்கையை மக்களிடையே பரப்பவும் தம் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது பாடுபடுபவர்கள்.

இந்த ஒப்பீடு - நோக்கம் எதுவாக இருப்பினும் - எவருடைய மனதையும் நோகடிக்க அல்ல.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கதையாம்! குமுதம் கதையாம்!! இறையன்புவின் சிறுகதையாம்!!! {குட்[டு]டி விமர்சனம்}

வெ.இறையன்பு[I.A.S.]வின் ‘மயக்கம்’ என்னும் சிறுகதையை இந்த வாரக் குமுதத்தில் [28.05.2014] படிக்கும் வாய்ப்புப் பெற்ற பல லட்சம வாசகரில் நானும் ஒருவன். 

இக்கதையின் மூலம், பிள்ளை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோரை எச்சரிக்க நினைக்கிறார் கதாசிரியர். அந்த நோக்கம் கொஞ்சமே கொஞ்சம்தான் நிறைவேறியுள்ளது எனலாம். காரணம், கதைப்பின்னலில் ஆசிரியர் கையாண்ட சொதப்பல்கள்.

கதை நிகழ்வை ஆராய்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு துக்கடாக் கேள்வி.

உங்களின் பக்கத்து வீட்டுக்காரர் அலுவலகம் சென்றுவிட்ட நிலையில், அவரின் பன்னிரண்டு வயதுள்ள மகன், தன் தாய் மயங்கி விழுந்துவிட்டதாக உங்களிடம் வந்து சொல்கிறான். அந்த அம்மாவுக்கு உதவி செய்ய அங்கு வேறு யாருமில்லை. நீங்கள் உங்கள் மனைவியுடன் விரைகிறீர்கள்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறீர்கள். மயக்கம் தெளியவில்லை. இந்த நிலையில் உங்களின் அடுத்த கட்டச் செயல்பாடு என்னவாக இருக்கும்?

உங்கள் குடும்ப மருத்துவருக்கோ, அல்லது, பரிச்சயமான வேறு ஒருவருக்கோ ஃபோன் செய்து, இக்கட்டான நிலையை விளக்கி அவரை வரவழைக்க முயல்வீர்கள்.

கூடவே, அந்தப் பெண்ணின் கணவருக்கு ஃபோன் மூலம் [பன்னிரண்டு வயது மகனுக்கு எண் தெரிந்திருக்கும்] தகவல் சொல்வீர்கள்.

அவரோடு தொடர்புகொள்ள இயலாதிருந்தாலோ, அவரால் உடன் புறப்பட்டு வருவது சாத்தியமில்லை என்றாலோ, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வீர்கள்.

எதிர்பாராத விபத்துகளின் போது, வழக்கமாக மக்கள் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் கதாசிரியர் இறையன்புவின் நினைவுக்கு வராமல் போனது  ஏன் என்று புரியவில்லை.

இப்போது கதைக்குச் செல்லலாம்.

‘ராஜா’ என்பவர் ஒரு கம்பெனியில் ‘ஃபிட்டர்’ ஆக வேலை பார்ப்பவர்; பந்தா பேர்வழி. கம்பெனியில் அவரை, ‘பந்தா ராஜா’ என்று அழைப்பார்களாம்.

ராஜா, தன் அண்டை அயல் வீட்டுக்காரர்களிடமும் தன் வேலை பற்றி எதுவும் சொல்வதில்லையாம். நீட்டா உடை உடுத்து, மெருகு குலையாமல் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பாராம்.

பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தன் மகனைப் படிக்க வைப்பதோடு மிகவும் செல்லமாக வளர்க்கிறார். மகன் பிடிவாதக்காரனாக வளர்கிறான்.

“நாம படுற கஷ்டம்கூடத் தெரியாம அவன் நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல. நீங்களும் அவனுக்கு உணர்த்துற மாதிரி தெரியல” என்கிறாள் ராஜாவின் மனைவி சரளா. 

அவனைத் திருத்த முயன்று தோல்விகளைச் சந்திக்கிறாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள்.........

ராஜா வேலைக்குச் சென்ற சற்று நேரத்தில், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சரளா மயங்கி விழுகிறாள். மகன் கிஷோர், பக்கத்து வீட்டுக்காரர் பத்மநாபனிடம் சென்று சொல்கிறான்.

இந்தக் கட்டத்தில்தான் கதாசிரியர், நிகழ்ச்சி அமைப்பில் தவறிழைத்துவிட்டார் என்பதை மேலே குறிப்பிட்டேன்.

“தம்பி, எதுக்கும் நாம போயி உன் அப்பாவைக் கூட்டிட்டு வர்றது நல்லது. ரொம்ப சீரியஸாத் தோணுது. அவரு இல்லாம நாம எந்த முடிவும்  எடுக்க முடியாது” என்று கிஷோரிடம் சொன்ன பத்மநாபன் தன் லேன்ஸர் காரில் கிஷோரையும் அழைத்துக்கொண்டு ராஜாவிடம் தகவல் சொல்லப் போகிறாராம்.

எப்படிப் போகிறது பாருங்கள் கதை!

மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில், ஒரே ஒரு ஃபோன் அழைப்பில் தகவல் தருவதை விடுத்து, லேன்சர் காரில் பறக்கிறாராம்!

கம்பெனிக்குச் சென்று, காத்திருந்து, கம்பெனி மேலாளரிடம் அனுமதி பெற்று ராஜாவைச் சந்தித்து அழைத்து வருகிறார் பத்மனாபன்.

ஃபிட்டர் கோலத்திலிருந்த தன் அப்பாவைப் பார்த்து மனம் திருந்துகிறான் கிஷோர். பன்னிரண்டு வயதுவரை, தன் தந்தை ஒரு ‘ஃபிட்டர்’ என்பது தெரியாமல் அவன் வளர்க்கப்பட்ட அதிசயம், கௌதம சித்தார்த்தனை நமக்கு நினைவுபடுத்துகிறது!

ராஜா வீடுவந்து சேர்ந்தபோது, மயக்கம் போட்ட சரளா, பத்மநாபன் மனைவியுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மயக்கத்திற்கான காரணம் என்னவென்பதை கதையின் முடிவுவரை ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கிஷோர் திருந்தவதற்கென்றே சரளாவை மயக்கம் போட வைத்தார் இறையன்பு. அவன் திருந்திவிட்டான். அப்புறம் மயக்கத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதால் ஆகப்போவதென்ன என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஒருவர் ‘பிரபல’ எழுத்தாளர் ஆகிவிட்டால், அவர் படைப்பிலுள்ள பிழைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் கண்டுகொள்வதேயில்லை!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வியாழன், 22 மே, 2014

இந்த வாரக் குமுதம் சிறுகதையும் ஒரு குட்[டு]டி விமர்சனமும்!

பிரபல எழுத்தாளர் வெ.இறையன்பு[I.A.S.]வின் ‘மயக்கம்’ என்னும சிறுகதையை இந்த வாரக் குமுதத்தில் [28.05.2014] படிக்கும் வாய்ப்புப் பெற்ற பல லட்சம் பேரில் நானும் ஒருவன். 

இக்கதையின் மூலம், பிள்ளை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோரை எச்சரிக்க நினைக்கிறார் கதாசிரியர். அந்த நோக்கம் கொஞ்சமே கொஞ்சம்தான் நிறைவேறியுள்ளது எனலாம். காரணம், கதைப்பின்னலில் ஆசிரியர் கையாண்ட சொதப்பல்கள்.

கதை நிகழ்வை ஆராய்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு துக்கடாக் கேள்வி.

உங்களின் பக்கத்து வீட்டுக்காரர் அலுவலகம் சென்றுவிட்ட நிலையில், அவரின் பன்னிரண்டு வயதுள்ள மகன், தன் தாய் மயங்கி விழுந்துவிட்டதாக உங்களிடம் வந்து சொல்கிறான். அந்த அம்மாவுக்கு உதவி செய்ய அங்கு வேறு யாருமில்லை. நீங்கள் உங்கள் மனைவியுடன் விரைகிறீர்கள்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறீர்கள். மயக்கம் தெளியவில்லை. இந்த நிலையில் உங்களின் அடுத்த கட்டச் செயல்பாடு என்னவாக இருக்கும்?

உங்கள் குடும்ப மருத்துவருக்கோ, அல்லது, பரிச்சயமான வேறு ஒருவருக்கோ ஃபோன் செய்து, இக்கட்டான நிலையை விளக்கி அவரை வரவழைக்க முயல்வீர்கள்.

கூடவே, அந்தப் பெண்ணின் கணவருக்கு ஃபோன் மூலம் [பன்னிரண்டு வயது மகனுக்கு எண் தெரிந்திருக்கும்] தகவல் சொல்வீர்கள்.

அவரோடு தொடர்புகொள்ள இயலாதிருந்தாலோ, அவரால் உடன் புறப்பட்டு வருவது சாத்தியமில்லை என்றாலோ, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வீர்கள்.

எதிர்பாராத விபத்துகளின் போது, வழக்கமாக மக்கள் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் கதாசிரியர் இறையன்புவின் நினைவுக்கு வராமல் போனது  ஏன் என்று புரியவில்லை.

இப்போது கதைக்குச் செல்லலாம்.

‘ராஜா’ என்பவர் ஒரு கம்பெனியில் ‘ஃபிட்டர்’ ஆக வேலை பார்ப்பவர்; பந்தா பேர்வழி. கம்பெனியில் அவரை, ‘பந்தா ராஜா’ என்று அழைப்பார்களாம்.

ராஜா, தன் அண்டை அயல் வீட்டுக்காரர்களிடமும் தன் வேலை பற்றி எதுவும் சொல்வதில்லையாம். நீட்டா உடை உடுத்து, மெருகு குலையாமல் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பாராம்.

பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தன் மகனைப் படிக்க வைப்பதோடு மிகவும் செல்லமாக வளர்க்கிறார். மகன் பிடிவாதக்காரனாக வளர்கிறான்.

“நாம படுற கஷ்டம்கூடத் தெரியாம அவன் நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல. நீங்களும் அவனுக்கு உணர்த்துற மாதிரி தெரியல” என்கிறாள் ராஜாவின் மனைவி சரளா. 

அவனைத் திருத்த முயன்று தோல்விகளைச் சந்திக்கிறாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள்.........

ராஜா வேலைக்குச் சென்ற சற்று நேரத்தில், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சரளா மயங்கி விழுகிறாள். மகன் கிஷோர், பக்கத்து வீட்டுக்காரர் பத்மநாபனிடம் சென்று சொல்கிறான்.

இந்தக் கட்டத்தில்தான் கதாசிரியர், நிகழ்ச்சி அமைப்பில் தவறிழைத்துவிட்டார் என்பதை மேலே குறிப்பிட்டேன்.

“தம்பி, எதுக்கும் நாம போயி உன் அப்பாவைக் கூட்டிட்டு வர்றது நல்லது. ரொம்ப சீரியஸாத் தோணுது. அவரு இல்லாம நாம எந்த முடிவும்  எடுக்க முடியாது” என்று கிஷோரிடம் சொன்ன பத்மநாபன் தன் லேன்ஸர் காரில் கிஷோரையும் அழைத்துக்கொண்டு ராஜாவிடம் தகவல் சொல்லப் போகிறாராம்.

எப்படிப் போகிறது பாருங்கள் கதை!

மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில், ஒரே ஒரு ஃபோன் அழைப்பில் தகவல் தருவதை விடுத்து, லேன்சர் காரில் பறக்கிறாராம்!

கம்பெனிக்குச் சென்று, காத்திருந்து, கம்பெனி மேலாளரிடம் அனுமதி பெற்று ராஜாவைச் சந்தித்து அழைத்து வருகிறார் பத்மனாபன்.

ஃபிட்டர் கோலத்திலிருந்த தன் அப்பாவைப் பார்த்து மனம் திருந்துகிறான் கிஷோர். பன்னிரண்டு வயதுவரை, தன் தந்தை ஒரு ‘ஃபிட்டர்’ என்பது தெரியாமல் அவன் வளர்க்கப்பட்ட அதிசயம், கௌதம சித்தார்த்தனை நமக்கு நினைவுபடுத்துகிறது!

ராஜா வீடுவந்து சேர்ந்தபோது, மயக்கம் போட்ட சரளா, பத்மநாபன் மனைவியுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மயக்கத்திற்கான காரணம் என்னவென்பதை கதையின் முடிவுவரை ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கிஷோர் திருந்தவதற்கென்றே சரளாவை மயக்கம் போட வைத்தார் இறையன்பு. அவன் திருந்திவிட்டான். அப்புறம் மயக்கத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதால் ஆகப்போவதென்ன என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஒருவர் ‘பிரபல’ எழுத்தாளர் ஆகிவிட்டால், அவர் படைப்பிலுள்ள பிழைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் கண்டுகொள்வதேயில்லை!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@













புதன், 21 மே, 2014

ஒரு ‘முதிர்கன்னி’யின் முன் அனுபவங்கள்! [கண்ணீர்க் கதை]

ஜாதகம், வரதட்சணை என்று அலையும் மனப்பக்குவம் இல்லாத பெற்றோர்களையும், மண்ணுலக ‘தேவதை’களுக்காகத் தவமிருக்கும் மணமாகாத இளவட்டங்களையும் குறி வைத்து எழுதப்பட்ட கதை இது. அனைவரும் படிக்கலாம்!


கதை..........

ழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர் ‘பெண் பார்க்கும்’ சடங்கு ஆரம்பமாகியிருந்தது. பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, ‘குழம்பி’ குடித்து,  மணப்பெண் பத்மாவதியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.

பத்மாவதி ஒரு முதிர்கன்னி; வயது முப்பத்தி மூன்று; ஒரு வெல்ல மண்டிக் கணக்குப்பிள்ளையின் மூன்றாவது மகள்; அழகு விஷயத்தில்  சராசரிக்கும் கீழே. அது இருந்திருந்தால் காதல் கத்தரிக்காய் பண்ணி எவனையாவது தொத்திகொண்டிருப்பாள். ஒரு பெண் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையில் விலை போக முடியுமா? பாவம் பத்மாவதி!

முகத்தில் ‘ரெடிமேட்’ புன்னகை தவழ, சற்றே குனிந்த தலையுடன் அனைவரையும் கும்பிட்டுவிட்டு அறையொன்றில் அடைக்கலம் புகுந்தாள் பத்மாவதி.

“மாப்ள, பொண்ணு பிடிச்சிருக்கா?” கேசவனின் காதைக் கடித்தார் அசோகன்; மணமகனின் தாய்மாமன்.

“அதுகிட்டத் தனியாப் பேசிட்டுச் சொல்றேன் மாமா” என்றான் கேசவன்.

அவன் விருப்பத்தை அறிந்த பெண் வீட்டார், பத்மாவதி இருந்த அறைக்குள் அவனை அனுமதித்தார்கள்.

செயற்கைப் புன்னகையுடன் அவனை வரவேற்ற அவள், அவனை ஒரு இருக்கையில் அமரச் சொல்லி, இன்னொன்றில் தானும் அமர்ந்தாள்.

“உன்கூட மனம் திறந்து பேச விரும்பறேன். முதல்ல நான் கொஞ்சம் கேள்விகள் கேட்குறேன். அப்புறம் நீயும் கேளு. வந்து.....நீ யாரையும் காதலிச்......”

“கொஞ்சம் பொறுங்க.....” குறுக்கிட்டாள் பத்மாவதி; சொன்னாள்: “ஏழெட்டு வருசமா அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு வர்றார்.  எனக்கு வயசு முப்பத்தி மூனு. இதுவரைக்கும் ஐம்பது பேரு என்னைப் பெண் பார்த்துட்டாங்க. கேள்வி மேல் கேள்விகள் கேட்டாங்க. நானும் பதில் சொல்லியிருக்கேன். கசப்பான அந்த என் அனுபவங்களை ஒன்னுவிடாம எழுதி வெச்சிருக்கேன். உங்க வீட்டுக்குப் போயி சாவகாசமா படிச்சிப் பாருங்க. மேலே எதுவும் கேட்கத் தோணினா  ஃபோன் பண்ணுங்க. பதில் சொல்றேன். என்னைக் கட்டிக்கறீங்களோ இல்லியோ, மறக்காம இதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இது விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.” வறண்ட புன்னகையுடன் ஒரு சிறிய ‘டைரி’யைக் கேசவனிடம் நீட்டினாள்; அவனுக்கு விடை கொடுக்கும் விதத்தில் எழுந்து நின்று கை கூப்பினாள் பத்மாவதி.

*************************************************************************************

செவ்வாய், 20 மே, 2014

தமிழன் வாழ்க! தமிழ் ஒழிக!!

ஓர் உண்மைச் சம்பவத்தை இங்கே கதையாக்கியிருக்கிறேன். இதனால் எல்லாம் நம் தமிழ்ச் சமுதாயத்தில் என்ன மாறுதல் நிகழ்ந்துவிடப் போகிறது? ‘ஏதுமில்லை’ என்பது தெரிந்திருந்தும் இதைப் பதிவாக வெளியிட்டிருக்கிறேன். காரணம், எழுதியதை அழிக்க மனம் இல்லை என்பதுதான்!


கதை:                                       க்ருஷிஹா

“அப்பா, உங்க பேத்திக்கு நல்ல பேர் சொல்லுங்க.” அயலூரில் வேலை பார்க்கும் சிவக்குமார் கோவையிலுள்ள தன் தந்தைக்குத் தொ.பே. செய்தான்.

“வான்மதின்னு வெச்சுடலாம். அழகான தமிழ்ப் பேரு” என்றார் மயில்சாமி.

“இது வேண்டாம். யாரும் வைக்காத பேரா இருக்கணும்.”

“எனக்குத் தெரிய யாரும் இந்தப் பேரை வைக்கல.”

“வெச்சிருக்காங்க. வேற பேர் சொல்லுங்க.”

“யோசிக்கணும்.....”

சிறிது நேரம் யோசித்த பின்னர் மகனுடன் தொடர்பு கொண்டார் மயில்சாமி. “கவிமுகில் புதுமையான பேரு. குழந்தையைக் கவின்னோ முகில்னோ கூப்பிட்டுக்கலாம்” என்றார் குரலில் குதூகலம் பொங்க.

“அப்பா, சொல்ல மறந்துட்டேன். நியூமராலஜிபடி கூட்டினா மூனு வரணும்” வெறுமனே சொல்லி வைத்தான் சிவக்குமார்.

ஆங்கில எழுத்து மதிப்பின்படி கூட்டினால் மூன்று வருகிற தமிழ்ப் பெயர்களை அப்போதே பட்டியலிட்டு, ‘நாவுக்கரசி’ என்னும் பெயரைத் தேர்வு செய்தார் மயில்சாமி; மகனிடமும் சொன்னார்.

அப்பா பரிந்துரைத்த பெயர்களை மனைவி நிதர்ஸனாவிடம்  ஒப்பித்தான் சிவக்குமார்.

“வான்மதி...கவிமுகில்...நாவுக்கரசி...கர்மம்...கர்மம்... இதெல்லாம்தான் புதுமையான பேர்களா? அவர்கிட்ட எதுக்குக் கேட்டீங்க?” சுடச்சுட வார்த்தைகளைச் சிதறவிட்டாள் நிதர்ஸனா.

“அது வந்து... குடும்பத் தலைவராச்சேன்னு ஒரு ஃபார்மாலிட்டுக் கேட்டுத் தொலைச்சிட்டேன்.”

“சரி விடுங்க. க்,ச்,ட் இல் ஆரம்பிக்கிற பேர்தான் வைக்கணும்னு குடும்ப ஜோதிடர் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டார். அதனால, ‘க்ருஷிஹா’ங்கிற பேரை செலக்ட் பண்ணிட்டோம்னு அவர்கிட்ட இப்பவே சொல்லிடுங்க” என்றாள் நிதர்ஸனா.

zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz






திங்கள், 19 மே, 2014

"காதல் கொடூரன்!".....அந்தக்காலக் குமுதத்தின் அதிரடி 'Crime' கதை!!

சஸ்பென்ஸ் கதைப் பிரியர்களுக்காக ‘வெறியர்’களுக்காகப் பழைய குமுதத்தில்[28.02.1991] சுட்டது இந்த ஒரு பக்கக் கதை! அரிய படைப்பு!! படிக்கத் தவறாதீர்!!!


கதை.............

ற்றொரு கொலைக்குத் தயாராகிவிட்டான் சுந்தர்.....அழகான பெண்களாகத் தேர்ந்தெடுத்துக் காதல் வலையில் சிக்க வைத்துக் கொலை செய்துவிடும் ‘காதல் கொடூரன்’ அவன்!

இன்று கீதா!

முதல் சந்திப்பிலேயே அவனிடம் மனதைப் பறிகொடுத்தவள்; இரண்டாம் சந்திப்பில், "I love you" சொன்னவள்; அவன் அரவணைப்புக்காக மூன்றாம் சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவள்.

கீதாவை முதல் முறை சந்தித்த போதே தன் அப்பாவிடம், “கீதா ரொம்ப அழகுப்பா” என்றான் சுந்தர்.

“ஐயய்யோ...ஆபத்துடா...உலகம் தாங்காதுடா மகனே. அழகான பெண்கள் அத்தனை பேரும் துரோகிங்க; ஆபத்தானவங்க. கூசாம அவங்களைக் கொல்லணும்டா சுந்தர்” என்றார் அப்பா. அழகழகான பெண்களின் துரோகத்தால் விரக்தியின் விளிம்பைத் தொட்டவர் அவர்!

“கீதா உட்காருன்னா உட்காருரா. எழுன்னா எழுந்திரிக்கிறா. படுன்னா படுத்துருவா. இன்னிக்கி அவளைத் தீர்த்துடுறேன்” என்று தன் அப்பாவிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு பளபளக்கும் கூரிய கத்தியுடன் கிளம்பினான் சுந்தர்.

லியட்ஸ் பீச் இருட்டியிருந்தது.

சுந்தருக்காகக் காத்திருந்த கீதா, பலி ஆடு போல, அவனைப் பின் தொடர்ந்து நடந்தாள். ஒரு படகின் மறைவில் இருவரும் அருகருகாக அமர்ந்தார்கள்.

கீதாவின் கவர்ச்சி அங்கங்களைப் பார்வையால் விழுங்கிக்கொண்டே அவளின் வழவழப்பான சங்குக் கழுத்தைத் தன் இடக்கரத்தால் வளைத்தான் சுந்தர்.

‘க்ளுக்’.....அவளிடமிருந்து வெளிப்பட்ட மென் சிரிப்பு அவனை உற்சாகப்படுத்தியது. பேண்ட் பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுக்க முனைந்தபோது...........

அவன் நெஞ்சில் ‘சுரீர்’ வலி. சுந்தர் அலறினான்...”ஆ...ஆ...ஆ...”

இப்போது, கீதாவின் கையில் ரத்தம் சொட்டும் கூரிய கத்தி இருந்தது.

கத்தியை மறைத்துக்கொண்டு வீடு திரும்பினாள் கீதா.

தன் அம்மாவின் புகைப்படத்தின் முன்னால் நின்று சொல்லிக்கொண்டிருந்தாள்....“அம்மா, உனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டு வர்றேன். சுந்தர் ஐந்தாவது ஆள். ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்கள். இனியும் என் கொலை தொடரும்.”

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

இது ‘பத்மா ரவிசங்கர்’ படைப்பு.

சுவை கூட்டுவதற்காக, கதையில் சில மாற்றங்கள் செய்தமைக்குக் கதாசிரியரிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo