சனி, 24 மே, 2014

இந்தக் கதையைப் படித்துக் கண்கலங்க வேண்டாம். சும்மா படிங்க!

முன்னணி வார இதழில், பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது இந்த ஒரு பக்கக் கதை. பிரசுரமான இதழ், வெளியான தேதி போன்ற விவரங்கள் தொலைந்துபோயின. தற்செயலாய்க் கண்ணில் பட்ட கையெழுத்து பிரதியின் மறு வடிவம் இது.


கதை:                              அப்பாவுக்காக ஒரு தப்பு

பீரோவில் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவது போல் பாவனை செய்துகொண்டே, +2 மாணவன் குணசீலனை நோட்டம் விட்டார் நூலக உதவியாளர் ஆறுமுகம்.

அலைபாயும் திருட்டுப் பார்வையுடன் சட்டைப் பையிலிருந்து ஒரு பிளேடை எடுத்து, படித்துக்கொண்டிருந்த பத்திரிகையின் ஒரு தாளில் கால் பக்க அளவுக்குத் துண்டித்தான் குணசீலன். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்தத் துண்டுக் காகிதத்தை மடித்துச் சட்டையின் உள் பாக்கெட்டில் செருகினான்; எழுந்து நடந்தான். ஆறுமுகம் பின்தொடர்ந்தார்.

குணசீலன் முதல்தர மாணவன். தினமும் தவறாமல் செய்தித்தாள் படிப்பான். ஆசிரியர்களிடம் நல்ல பெயர். இவனா இப்படிச் செய்தான்? ஆறுமுகத்தால் நம்ப முடியவில்லை.

நூலக அறையிலிருந்து வெளியேறவிருந்த குணசீலனைத் தடுத்து நிறுத்தி, நூலகரிடம் அழைத்துப் போனார் ஆறுமுகம். “அந்த வினா விடைத் திருடன் இவன்தான் சார்” என்றார்.

“சார்...இல்லை சார்...அது வந்து சார்...” நினைத்ததைச் சொல்ல இயலாமல் நாக்குழறினான் குணசீலன்.

“உனக்கு ரொம்ப நல்ல பையன்னு பேராச்சே. நீயா இப்படி நடந்துகிட்டே? எல்லாருக்கும் பயன்படுற வினா - விடைப் பகுதியை வெட்டி எடுக்கலாமா? தலைமை ஆசிரியரிடம் சொல்லி உன்னை.....”

“சார், நான் வினா விடையைத் திருடல சார். அது வந்து.....”

“கையும் களவுமா பிடிபட்டும் இப்படிப் பொய் சொல்றியேடா.”

“நான் பொய் சொல்லல சார். என் அப்பா கள்ளச் சாராயம் காய்ச்சி போலீசில் பிடிபட்டுட்டார். இந்தப் பத்திரிகையில், அவர் ஃபோட்டோவோட செய்தி வந்திருக்கு. இதைப் பார்த்தா எல்லாரும் என்னைக் கேவலமா பார்ப்பாங்களேன்னுதான் இந்தத் தப்பைப் பண்ணிட்டேன்.” அழுதுகொண்டே பத்திரிகையில் துண்டித்த பகுதியின் மறு பக்கத்தைச் சுட்டிக் காண்பித்தான் குணசீலன்.

ஃபோட்டோவில், சாராயப் பானையைத் தலையில் சுமந்துகொண்டிருந்தார் குணசீலனின் அப்பா. அவரைச் சுற்றிப் போலீஸ்காரர்கள். படத்துக்குக் கீழே விரிவான செய்தி.

“சே! ஒரு உத்தமமான புத்திசாலிப் பையனுக்கு இப்படி ஒரு அப்பனா?”

நூலகரின் கண்கள் லேசாகக் கலங்குவது தெரிந்தது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&







19 கருத்துகள்:

  1. வெட்கப்பட வேண்டிய தகப்பனுக்கு, பெருமைப்பட கூடிய மகன்.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. கையெழுத்து பிரதி எனில் உங்கள் கதைதானே ...அதாவது நீங்கள் எழுதியதுதானே ?அருமை !
    கமெண்ட் பெட்டி திறந்துள்ளீர்கள் ,நன்றி

    பதிலளிநீக்கு
  3. தங்களின் கருத்துரையை கண்டேன்... 6) உலகம் முழுவதும் நம் தளம் தெரிய வேண்டாமா...? ---> இந்த தலைப்பில் உள்ளதை ஒரு முறை வாசிக்கவும் ---> இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனபாலன். மேலும் விளக்கம் தேவைப்பட்டால் கேட்கிறேன்.

      நீக்கு

  4. வணக்கம்!

    காமக் கிழத்தனின் நற்கதை அத்தனையும்
    சோம மதுவெனச் சொல்லு

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  5. //“சே! ஒரு உத்தமமான புத்திசாலிப் பையனுக்கு இப்படி ஒரு அப்பனா?” //

    இதிலென்ன குற்றம்? அந்தப்புள்ளையும் சாராயம் காய்ச்சுனாதான் நியாயமா இருக்குமா? புத்திக்கும் சமூகத்துக்கு உபயோகமா இருக்குறதுக்கும் ரொம்ப தொடர்பு இருக்குதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குற்றம் இல்லென்னுதான் கதையும் சொல்லுது.

      புத்தி இருந்தாத்தான் சமூகத்தைப் பத்திச் சிந்திக்க முடியும்; அதுக்கு உபயோகமா இருக்க முடியும்.

      நன்றி பக்கிரிசாமி.

      நீக்கு
    2. நண்பர் பக்கிரிசாமிக்கு,

      புத்திசாலியாக இருப்பவன் சமுதாயத்திற்குப் பயன்படணும்கிறது கட்டாயம் இல்லையே? தன்னளவில் படித்து முன்னேறலாம்; தன் குடும்பத்துக்குப் பயன்படலாம்.

      “ஒரு நல்ல பையனுக்கு இப்படியொரு அப்பனா?” என்று முடித்திருந்தால், “நல்லவனாக இருப்பதற்கும் சமுதாயத்திற்கு உபயோகமா இருப்பதற்கும் என்ன தொடர்பு?” என்று கேட்பீர்களா?

      தங்கள் கேள்விக்கும் கதைக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லையே. தயவு செய்து யோசியுங்கள் நண்பரே.

      நீக்கு
    3. //புத்திசாலியாக இருப்பவன் சமுதாயத்திற்குப் பயன்படணும்கிறது கட்டாயம் இல்லையே? தன்னளவில் படித்து முன்னேறலாம்; தன் குடும்பத்துக்குப் பயன்படலாம். //

      இது செய்தாலே போதுமானதுதானே. ஒவ்வொரு குடும்பமும் உயர்ந்தால் சமூகமும் உயர்ந்ததாகிவிடுமே

      நீக்கு
    4. நன்றி தனபாலன். நன்றி பக்கிரிசாமி.

      நீக்கு
  6. இந்த கதையை நானும் படித்து இருக்கிறேன்! சிறப்பான கதை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  7. வணக்கம் காமக்கிழத்தன் ஐயா.

    என்னுடைய வேண்டுகோளை ஏற்று உங்களின் வலையைச் சரி செய்தமைக்கு மிக்க நன்றி. இப்பொழுது மிகவும் நன்றாகத் தெரிகிறது.
    நான் இந்தியா சென்றிருந்த பொது தான் உங்களின் வலையில் படித்தேன். ஆனால் இங்கே (பிரான்ஸ்) என்னால் உங்களின் வலையைத் திறக்க முடியவில்லை. அனேகமாக வெளிநாட்டவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    உங்களின் கருத்துப் பெட்டியை மூடி வைத்திருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தீர்கள். நீங்கள் கருத்துக்களை மட்டுப் படுத்தும் படி செய்தால் வீண்வாதங்களுக்குறிய பின்னொட்டங்களை தவிர்க்கலாம். அதனால் வீணாகும் நேரத்தைத் தவிர்க்கலாம்.
    நான், நீங்கள் எழுதுவது போன்ற சின்ன சின்ன கதைகளை விரும்பிப் படிப்பவள்.
    தவிர நீங்கள் அனுபசாளிகள். உங்களிடமிரந்து நான், என்னைப் போன்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
    உங்களின் ஒவ்வொரு தலைப்பையும் தமிழ்மணத்தில் பார்த்தவிட்டு ஆவலாகப் படிக்க ஓடிவருவேன். ஆனால் படிக்க முடியாது. நான் வெளியிட்ட பதிவை நான் நியாயமாக எப்பொழுதோ வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் இது தவறோ என்ற குழப்பம் இருந்ததால் வெளியிடவில்லை.
    உங்களின் இன்றைய கதையைப் போலவே மற்ற கதைகளும் நன்றாக இருக்கும். இனி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை வாசித்து மகிழ்வேன்.
    தொடர்கிறேன் காமகிழத்தன் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அருணா செல்வம்.

      தனிப்பதிவு போட்டு, என்னை அறியாத பலருக்கும் அறியச் செய்த உங்களுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.

      அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில், suspense கொடுத்து விறுவிறுப்புக் குன்றாமல் பதிவு எழுதுகிறீர்கள். மனம் ஒன்றிப் படித்திருக்கிறேன்.

      சலிப்புக்கு இடம் தராமல் தரமான படைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படித்துக்கொண்டிருந்தால் எழுதுவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஓய்வு நேரங்களில் படியுங்கள்; எழுதுங்கள்.

      மட்டுறுத்தல் செய்யலாம் என்ற உங்கள் யோசனை ஏற்கத்தக்கது. பின்னர் அதை நடைமுறைப்படுத்துவேன்.

      என் பதிவுகளில் சில உங்களை ஈர்க்கலாம். வேறு சில, என் மீது வெறுப்பைத் தோற்றுவிக்கலாம். நல்லனவற்றை உள்வாங்கிக்கொண்டு அல்லனவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

      உங்கள் உதவியை என்றும் மறவேன்.

      நன்றி அருணா. மிக்க நன்றி.



      நீக்கு