சனி, 24 ஜனவரி, 2015

'முற்போக்கு மாதர் சங்கம்’.....ஓர் அதிரடி புரட்சிக் கதை! [100% கற்பனை]

எழுத்துரிமை குறித்தும், கருத்துச் சுதந்திரம் பற்றியும் கடந்த ஒருவார காலமாக அனல் தெறிக்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் முற்போக்கு அரசியல்வாதிகளும் எழுத்தாளர்களும். அளவு கடந்த எழுத்துச் சுதந்திரத்துடன் படைக்கப்படும் கதைகளின் போக்கைக் காட்சிப்படுத்தவே இந்தக் கதை.

“என்னடி.....நானும் பார்க்கிறேன், ஆம்பிளை சுகத்துக்கு ஏங்கித் தவிக்கிற அரைக் கிழவி மாதிரி ஒரு வாரம் போல எதையோ மனசுக்குள்ள புதைச்சி வெச்சிகிட்டுப் பட்டும் படாம பேசிட்டிருக்கிறே, என்ன நடந்துது? பூசி மெழுகாம போட்டு உடை.” தன் உயிர்த் தோழியான சவிதாவிடம் கவிதா சொன்னாள்.

“உடைச்சுடுறேன்” என்று அந்தப் பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு புங்க மர நிழலுக்குக் கவிதாவை அழைத்துப் போனாள் சவிதா.

“நமக்குக் கல்யாணம் ஆகி வருசம் நாலு ஆகிப் போச்சு. நீ ஒரு மலடின்னு என் வீட்டில் எல்லாரும் நினைக்கிறாங்க. இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்துறாங்க. நான் மறுத்தா தற்கொலை பண்ணிக்கவும் என் அப்பாவும் அம்மாவும் தயாரா இருக்காங்க. எனக்கும் வேற வழியில்ல. இன்னும் ஆறு மாசம் பார்க்கலாம். நீ கருத்தரிக்கலேன்னா இன்னொரு கல்யாணம்தான்கிறான் என் புருஷன்”என்றாள் சவிதா, கலங்கிய அவள் கண்களில் கனத்த சோகம் திரண்டிருந்தது.

“டாக்டரைப் பார்த்தீங்களா?”

“அவன் சம்மதிக்கல. நான் ஆண்மையுள்ளவன். உன்னை மாதிரி இன்னும் பத்து பொம்பளைகளைக் கட்டிகிட்டு நூறு பிள்ளைகளைப் பெத்துக்க முடியும்னு சொல்றான்.” நெஞ்சில் தேக்கி வைத்திருந்த வேதனையில் ஒரு சிறு துளியை வார்த்தைகளால் வெளியேற்றினாள் சவிதா.

“அதுவா விஷயம்......” என்று சிறிது நேரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்த கவிதா, “கவலைப் படாதடி. ஆறு மாசம் என்ன, ஒரே மாசத்தில் நீ கருத்தரிக்க ஏற்பாடு பண்றேன்” என்றதோடு, சவிதாவின் கன்னம் வருடிக் கண் சிமிட்டவும் செய்தாள்.

ஆச்சரியம் பொங்க அவளைப் பார்த்த சவிதா, “ஒரு மாசத்திலா? எப்படி? சொல்லு...சொல்லுடி” என்று கட்டுப்படுத்த முடியாத ஆர்வத்துடன் கவிதாவின் தோள்களைப் பற்றி உலுக்கினாள்.

“சொல்லுறேன். நீ என் யோசனைக்குக் கட்டுப்படணும். கற்பு, கட்டுப்பாடு, கௌரவம் அது இதுன்னு சொல்லிப் பின்வாங்கக் கூடாது. சம்மதமா?”

சவிதாவின் வதனத்தில் லேசான அதிர்ச்சி படர்ந்தது. கவிதாவின் மை தீட்டிய கண்களில் எதையோ தேடினாள். அந்தத் தேடல் பயனற்றது என்பதைப் புரிந்துகொண்டு சொன்னாள்: “அது வந்து......வந்து.....”

குறுக்கிட்ட கவிதா, “என்னடி வந்து போயி. குழந்தை இல்லேன்னா, இந்த அறிவியல் யுகத்திலும் பொண்டாட்டி மேலயே பழி போடுறானுக பொட்டப் பயலுக. மறு கல்யாணமும் பண்றானுக. பொம்பளை ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு புருஷனோட வாழ முடியுமா? கல்யாணம் கட்டிக்க முடியாது. கண்டவனோட போயிப் பிள்ளை பெத்துக்கவும் முடியாதபடி காவல் காக்குறானுக. இது ஆணாதிக்க சமுதாயம். அவங்களை வெளிப்படையா எதிர்த்து நிற்கப் பொம்பளைகளால் முடியாது. தந்திரத்தாலதான் அவனுகள ஜெயிக்க முடியும்.”

விழிகளில் வியப்புத் தேக்கிக் கவிதாவையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் சவிதா.

“எனக்குத் தெரிஞ்சி ‘முற்போக்கு மாதர் சங்கம்’[இது 100% கற்பனை; எந்தவொரு அமைப்பையும் குறிப்பதல்ல]னு ஒன்னு இருக்கு. மத்த மாதர் சங்கங்கள் மாதிரி, வெத்து அரட்டை அடிக்கிறதும் வெங்காயச் சாம்பார் வைக்கச் சொல்லித் தர்றதும், பொதுத் தொண்டு செய்யறதும் இதனோட வேலை அல்ல. புகுந்த வீட்டாரால் பழிவாங்கப்படுற, குழந்தைப் பேறில்லாத பெண்களுக்கு உதவுவது மட்டுமே இந்தச் சங்கத்தின் நோக்கம்........”

கொஞ்சம் இடைவெளியில் குரலைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்தாள் கவிதா. “யார் வேணுன்னாலும் இதில் உறுப்பினர் ஆயிட முடியாது. பல சோதனைகளுக்கு அப்புறம்தான் சேர்த்துக்குவாங்க. இதுல உறுப்பினராச் சேர்ந்தவர் தனக்குத் தெரிஞ்சவங்களுக்குச் சிபாரிசு பண்ணலாம். என் சிபாரிசுல இன்னிக்கே இதில் நீ மெம்பர் ஆயிடுறே.”

“ம்ம்ம்” வெறுமனே தலையை மட்டும் அசைத்தாள் சவிதா.

“முன்கூட்டியே அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு, நீ கருத்தரிக்கத் தோதான நாள்ல நாம் அங்க மறுபடியும் போவோம். நம்மை எதிர்பார்த்து, திடகாத்திரமான ஏழெட்டு ஆண்மையுள்ள ஆம்பிளைங்க காத்திருப்பாங்க. அவங்கள்ல ஒருத்தனைத் தேர்ந்தெடுத்து அவனோட நீ சேர்க்கை வெச்சிக்கலாம். இதற்கான ஏற்பட்டைச் சங்க நிர்வாகிகள் செய்துடுவாங்க. இதுக்காகக் கட்டணமும் வசூலிப்பாங்க.”

வேறு யாரும் இப்படிச் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டாள் சவிதா. கவிதா இது மாதிரி விசயங்களில் பொய் சொல்லுகிறவள் அல்ல. தயக்கத்துடன் கேட்டாள் சவிதா: “என்னதான் ரகசியமா செயல்பட்டாலும் போலீசுக்குத் தெரியாம போயிடுமா?”

குவிந்து நிமிர்ந்த மார்புகள் குலுங்கச்  சிரித்தாள் கவிதா. “இந்தச் சங்க நிர்வாகிகள் எல்லாம் வி.வி.வி ஐ.பிகளோடு பெண்டாட்டிகள்தான். அவங்கள்ல பல பேர் இங்க வந்து கர்ப்பம் தரிச்சவங்க.”

“அப்படியா?!” அந்தக் குளு குளு புங்க மர நிழலில் அரை நிமிடம் போல வாய் பிளந்து நின்றாள் சவிதா.

தொடர்ந்தாள் கவிதா. “இன்னிக்கும் ராப்பகலா நடக்கிற திருவிழாக்களில் சர்வ சுதந்திரமான ஆண் பெண் சேர்க்கை நடக்கிறதா பிரபல எழுத்தாளர்களே எழுதறாங்க; பேசுறாங்க. அங்க போயி, பிடிச்ச ஆம்பிளையோட கூடி மலடிகள் பிள்ளை பெத்துக்கிறதாகவும் சொல்றாங்க. அது உண்மையாகவே இருந்தாலும், கண்ட கண்ட கழுதைகளோடவும் நாய்களோடவும் இணைஞ்சா எயிட்ஸ் நோய் வர்றதுக்கு நிறையவே வாய்ப்பிருக்கு. ஒருத்தனோட போனா, கார்த்திகை மாதத்து வெறி நாய்கள் மாதிரி பின்னாடியே ஏழெட்டு பேர் துரத்திட்டு வருவான். அவனுககிட்டே இருந்து தப்பிப் பிழைக்கிறது சுலபமில்ல.”

“நிஜம்தான்” என்றாள் சவிதா.

“இங்க அம்மாதிரி பயத்துக்கெல்லாம் இடமில்ல. எல்லாமே சுத்தம். சங்கத்துக்குப் போகலாமா?” என்றாள் கவிதா.

“எனக்கென்னவோ பயமா இருக்கு” என்றாள் சவிதா.

“பயப்படாதடி. மூனு வருஷம் குழந்தை இல்லாம இருந்த நான் இங்க போய்த்தான் குழந்தை பெத்துகிட்டேன்னு சொன்னா நம்புவதானே? மனசைத் திடப்படுத்திகிட்டு என்னோட வா” என்று நடந்தாள் கவிதா. கைகோத்து அவளைப் பின்தொடர்ந்தாள் சவிதா.

=============================================================================================

மிக முக்கிய குறிப்பு:

வரம்பு கடந்த எழுத்துரிமையும் கருத்துச் சுதந்திரமும் எப்படியெல்லாம் எழுத்தாளனைக் கதை படைக்கத் தூண்டும் என்பதை வாசகர்களுக்கு உணர்த்தவே இந்தக் கதை.


100% கற்பனை என்றாலும், இம்மாதிரி எழுதுவதைக் கடுமையாக எதிர்ப்பவன் நான்.


இப்படைப்பை வெளியிட்டதற்காக மிக மிக வருந்துகிறேன்.


வருகை புரிந்தோருக்கு என் நன்றி.

=============================================================================================







17 கருத்துகள்:

  1. பெருமாள் முருகனும்
    ஊர் பெயர் குறிப்பிடாது
    இப்படி ஒரு புரட்சிகரமான கருத்தை
    வெளியிட்டு இருக்கலாமோ
    என சிந்திக்க வைத்தது

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே ஒரு வில்லங்கமான விடயத்தை கையிலெடுத்து விட்டீர்கள் இருப்பினும் ஒரு பெண்ணின் மன நிலையிலிருந்து தாங்கள் எழுதியது கண்டு வியக்கின்றேன் விடயம் தவறு என்றாலும் இதிலும் ஒரு ஓரத்தில் தர்மம் இருக்கத்தான் செய்கிறது இது தவறென்றால், இந்த தவறுக்கு காரணம் ஆண்வர்க்கம்தானே... என்னே ஒரு சவுக்கடி எனக்கு வலிக்கவில்லை இதில் பந்தப்பட்ட உணர்வுள்ளவனுக்கு வலிக்கும் வலிக்கட்டுமே,,, உப்புத்தின்றவன் தண்ணீர் குடிக்கட்டும், தப்பு செய்தவன் தண்டனை பெறட்டும்.
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  3. தங்களின் மனவுணர்வு புரிகிறது. ஏற்கிறேன்.

    நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி,

      இந்தக் கதை எழுதியதற்கான சூழ்நிலை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  4. புங்கமர நிழல் என்பது கதைக்களத்தின் குறியீடு தானே..!?
    //பொட்டப் பயலுக..// திருநங்கைகளை அவமானப் படுத்திவிட்டீர்..!!
    //கண்ட கண்ட கழுதைகளோடவும் நாய்களோடவும் இணைஞ்சா// Fetish..!!
    கேசை போட்றலாம்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறியீடுகள் என்ற வார்த்தைக்கு முதலில் பொருள் புரிந்துகொள்ளும்.

      பொட்டப்பயல்களுக்கும் திருநங்கைகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் தெரிந்துகொள்ளும்.

      //கண்ட கண்ட கழுதைகளோடவும் நாய்களோடவும் இணைஞ்சா// Fetish..!!....இங்கே என்னெ சொல்லியிருக்கிறீர் என்பதையும் நீர் முதலில் புரிந்துகொள்ளும்.

      கேஸைப் போடறது அப்புறம்.

      நீக்கு
  5. இரு தடவைகள் படித்தேன். தப்பா புரியக்கூடாதுல்ல.

    எழுத்தாளர் ஒருவர் எழுதுவதற்கும், பிறர் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டைக்காட்டுகிறது.

    கதையின் கரு இன்றைய முற்போக்குச் சிந்தனையின் வடிவமே. பாராட்டுக்கள். முற்போக்குச் சிந்தனையென்றால் அது மேலை நாட்டில் வந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகி, இப்போது நம்மிடையே சிலர் தூக்கிப்பிடித்துக்கொண்டு, மாற விரும்பாத மக்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் தாக்குதல்களுக்குமுள்ளாவதே முற்போக்குச் சிந்தனையெனவழைக்கப்படுகிறது.

    இப்படிப்பட்ட முற்போக்குச் சிந்தனையைப்பரப்ப எழுதப்பட்ட கதையை ஏன் எதிர்க்கிறீர்கள்? ஏன் வருத்தப்படுகிறீர்கள்? என்றுதான் எனக்குப்புரியவில்லை.

    ஆணுக்கு ஒரு நீதி; பெண்ணுக்கு ஒரு நீதி என்று வைத்தது ஆணுலகம். பெண்ணுலகமன்று.

    ஒருவனுக்கு ஒருத்தி என்பது சமூகம் குடும்பம் என்ற அடிப்படை யூனிட்டை வைத்துததான் எழமுடியும் என்று மனிதசமூகவியலாளரின் ஆராய்ச்சி. அதை முன்னொர்கள் ஏற்றதனால், ஒருவனுக்கு, ஒருத்தி, அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுக்கோப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். காலப்போக்கில் அக்கட்டுக்கோப்பை, கற்பு கள்வொழுக்கம் என்று பெண்ணுக்கு மட்டுமே வைத்துப்பெண்ணை அடிமை செய்தான் ஆண். அதை இன்று தட்டிக்கேட்பது முற்போக்குச் சிந்தனை. இதற்கேன் வருத்தம்? இதற்கேன் எதிர்ப்பு என்று புரியவில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படிப்பட்ட முற்போக்குச் சிந்தனையைப் பரப்ப எழுதப்பட்ட கதையை ஏன் எதிர்க்கிறீர்கள்? ஏன் வருத்தப்படுகிறீர்கள்? என்றுதான் எனக்குப்புரியவில்லை//

      எழுதுவதோடு எழுத்தாளனின் பணி முடிந்துவிட்டதாக நான் ஒருபோதும் நினைப்பதில்லை; அதன் விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்ப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறேன்.

      இந்தக் கதை முற்போக்குச் சிந்தனையைப் பரப்ப எழுதப்பட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், நம் பெண்களில் பெரும்பாலோர்?

      பெண்ணுரிமைக்குப் போராடும் சில பெண்களையே எதிர்ப்பவர்களாயிற்றே இவர்கள்!

      இவர்களுக்கு[குறிப்பாகச் சில மாதர் சங்கங்களுக்குப்] பயந்துகொண்டு மேற்கண்ட குறிப்பை நான் வெளியிடவில்லை. இப்படியொரு நிலை உருவாகக் கூடாது; அவ்வாறு உருவாவது தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

      இந்தக் குறிப்பையும் பல மணி நேரப் பரிசீலனைக்குப் பிறகு சற்று முன்னர்தான் சேர்த்தேன்.

      கொஞ்சமும் பண்பாடு பிறழாமல் கருத்துகளை முன்வைக்கிறீர்கள். மிக்க நன்றி மலரன்பன்.

      நீக்கு
  6. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுக்கோப்பு நீங்கள் எங்கு மஹாபுனிதம் என நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ அங்கும் தகர்க்கப்படலாம். ஆண்-பெண் மக்கட்தொகை விழுக்காடு தாறுமாறாகிப்போனால், இக்கொள்கை தவிடு பொடியாகிவிடும். அதாவது ஒரு ஆணுக்கு, பத்து பெண்கள் சமூகத்தில் என்று வரும்போதும், அல்லது ஒரு பெண்ணுக்குப் பத்து ஆண்கள் என்று வரும்போதும் இது நிகழம். எனவே ஒருவனுக்கு ஒருத்தி என்பது இயற்கையில் கையில். நம் கைகளில் எப்போதென்றால், பெண் சிசுக்களைக்கொல்லாமலிருந்தால். நேற்று ஹரியானாவில் மோடி பெண்குழந்தை பற்றிய விழாவில் வெகுண்டெழுந்து பேசியது இதைப்பற்றித்தான். பெண் சிசுக்கள் கொல்லப்பட கொல்லப்பட ஹரியானாவில் ஆண்களுக்கு மணம் செய்து குடுமபம் நடத்த பெண்களில்லை என்ற நிலை.

    எனவே பரமசிவம்! காலத்தின் கையில் நம் சமூக பொது, மற்றும் தனிநபர் ஒழுக்கங்கள் கட்டப்படுகின்றன. எனவே நாங்கள் என்றுமே பத்தினிகள் அல்லது ஏக பத்தினி விரதன்கள் என்று எக்காலமுமே நிரந்தரமாக மார்தட்ட முடியாது. கற்பும் ஒழுக்கமும் அவரவர் வாழ்க்கையும் சமூகமும் தற்காலிகமாகத் தரும் ஒரு பாதுகாப்பு நிலைகள்.

    அடுத்து உங்கள் கதை பற்றி_

    பதிலளிநீக்கு
  7. கதை நடப்பது பட்டணத்தில். படித்த பெண்கள். மாதர் சங்கம் ஒரு ஆண்பிடித்துத்தரும் வேலையைச்செய்ய அவசியமில்லாமல் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. முன்பு சென்னை கமலா செல்வராஜ் மட்டுமே இன்ஃப்ர்டைலிட்டி க்ளினிக் நடத்தினார். இன்று தெருவுக்குத் தெரு உண்டு. கணவனுக்கு விந்தில்லையென்றால், பிற ஆணின் விந்தை விந்து வங்கியிலிருந்து பெற்றுக்கருத்தரிக்கலாம். அந்த ஆண் யார் என்று மருத்துவருக்கேத் தெரியாது. ஒருவேளை மனைவிக்குத்தான் பிர்ச்சினையென்றால், தன் கணவனின் விந்தை இன்னொரு பெண் சுமந்து கருத்தரித்து பிள்ளை பெற்றுத்த்ரலாம். அப்பெண்கள் சரகேட் மதர்ஸ். அவர்களுக்கு தான் எவரின் விந்தை சுமக்கிறோமென்று தெரியாது. அவர்கள் வாடகைக்குச் சுமப்பார்கள்.

    இல்லை, கணவனின் விந்தை மனைவி சுமக்கவியலாமல், அவளுக்குப் பிர்ச்சினை இருக்கும்போது அதையெடுத்து மனைவியின் கருப்பப்பையில் நேராகச்செலுத்தும் வண்ணம் வசதியுண்டு.

    இப்படிப்பட்ட சூழலில் கதையில் வரும் மாதர் சங்கம். ஒரு இன்பெர்டலிட்டை க்ளினிக்கோடு டை அப் பண்ணத்தான் செய்யுமே ஒழிய ஆண்களை வரவழைத்துச்செய்பதாக இருக்காது.

    ஒருவேளை விஞ்ஞான வசதிகள் வளர்ந்திராமல் போயிருந்தால், இப்படிப்பட்ட ஆண் பெண் கூட்டமைப்பைச் செய்துதருவதில் தவறில்லை. தற்போது இன்பெர்டலிட்டி வசதிகளைச்செய்யு முன், கணவன் மனைவி இருவரின் ஒப்புதலைப்பெறுவார்கள். சிசரேனியனுக்கு முன்னர் கணவனின் ஒப்பந்தத்தைப் பெறுவது போல.

    இப்படி கருத்தொருமித்து செய்வது எதுவே தவறாகாது.

    நீங்கள் பெருமாள் முருகன் கதையை வைத்து இக்கதையை எழுதி முடிச்சுப்போட்டு, எதிர்க்கிறீர்கள் இல்லையா? அங்குதான் தவறு. எப்படி? இப்படி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலரன்பன்,

      நான் மேலே குறிப்பிட்டது போல, படைப்பாளன் கடமை படைப்பதோடு நின்றுவிடக் கூடாது. படைப்பை வாசிப்பவனின் மனநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதன் விளைவு அவனுக்கு நன்மை பயப்பதாகவே அமைய வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே என் முடிந்த முடிபு.

      நீங்கள் எங்கிருந்து எழுதுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.

      இங்கு நேரம் இரவு பதினொன்றைக் கடந்திருக்கிறது. வழக்கமாக நான் உறங்கச் செல்லும் நேரம்.

      வாய்ப்பமைந்தால், அடுத்த பதிவை வெளியிட்ட பிறகு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம்.

      moderation இல் இருக்கும்[இருந்தால்] உங்கள் கருத்தையும் வெளியிட்டுவிடுகிறேன்.

      மீண்டும் சந்திப்போம்.

      மிக்க நன்றி...நன்றி மலரன்பன்.

      நீக்கு
  8. பெ மு வின் கதை வெள்ளைக்காரன் காலத்தில் திருச்செங்கோட்டில் நடந்தததாக எழுதப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மின்சாரமே இல்லை. நகரங்கள் ஒரு சிலவே. சிறுநகரங்கள் கூட கிராமங்களைப்போலவே. மக்களும் கிராமீய வாழ்க்கையே வாழ்ந்தனர் என்பது அக்கதையின் மூலம் மட்டுமன்று; உண்மையும் அதே. 100 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையோடு இன்று பட்டணத்தில் நடைபெறும் கதையோடு எப்படி முடிச்சு போட முடியும்? கதையில் வரும் குழந்தைப்பேறில்லாத்தம்பதிகளுக்கு இன்றுள்ள விஞ்ஞான வாய்ப்புக்கள் கிடைத்திருந்தால், எவருமே திருச்செங்கோட்டு பாவாத்தாவையும் செங்கோட்டையனையும் மாதொருபாகனையும் முருகனையும் குழந்தை வரம் தாவென்று கேட்டிருக்க மாட்டார்கள். மாறாக, திருச்செங்கோட்டு நகரத்தில் உள்ள மலிந்து கிடக்கும் பெர்டிலிட்டி க்ளினிக்கில் போய் பெற்றுக்கொள்வார்கள். இன்று ஓரிர்ண்டே இருக்கலாம். பிற்காலத்தில் பெருகும்.

    எதையும் எவரும் எதிர்க்கவில்லை. ஆனால் நீங்கள் எதிர்ப்பதற்குக் காரணம் நூறாண்டுகளுக்கு முன் உள்ள சிந்தனையப் பிடித்துக்கொன்று போற்றுவதால்.

    பதிலளிநீக்கு
  9. மலரன்பன் கருத்துரையில் சொன்னது போல் பல இடங்களில் நடக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது? எங்கெல்லாம்? போராட்டக்காரர்கள் ஆதாரம் கேட்டிருக்கிறார்கள்.

      பிரச்சினையின் ஆரம்பமே இதுதான்.

      நன்றி தனபாலன்.

      நீக்கு