ஞாயிறு, 11 ஜனவரி, 2015

வாழ்க...வாழ்க! ஜாதிச் சங்கங்கள் வாழ்க!!

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, அப்படியொருவர் இருப்பதாக மனிதர்கள் நம்ப ஆரம்பித்து ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவரை இவர்கள் 100% நல்லவர் என்றே நினைத்தார்கள். அவரை மிஞ்சிய சக்தி எதுவுமில்லை என்றும் எண்ணினார்கள். ஆனாலும், அந்த நல்லவரும் வல்லவருமான கடவுளை இவர்கள் ஒருபோதும் முழுமையாக நம்பியதில்லை.

நம்பாத காரணத்தால்தான், கடவுளுக்கே உரிய சில செயல்பாடுகளை இவர்கள் தமக்குரியவையாய் ஆக்கிக்கொண்டார்கள்.

தம்மை நிந்திப்பவர்களைத் தண்டிக்க வேண்டியவர் கடவுள் மட்டுமே. தண்டிப்பதா, மன்னிப்பதா என்று முடிவெடுக்க வேண்டியவரும் அவரே.

இந்த உண்மை, மத வெறி பிடித்த மனித மிருகங்களுக்கு மறந்துபோனதன் விளைவாகக் கடவுள் மறுப்பாளர்கள் அல்லது, மாற்று மதத்தவர்கள் மீதான தாக்குதல்கள் அரங்கேறின; சித்ரவதைகள் தொடர்ந்தன; இவற்றின் விளைவு ஏராள உயிர்ப்பலிகள்.

கடவுள் மறுப்பாளர்களைச் சாடுவது அல்லது அவர்களுக்கு எதிராகப் போராடுவது போன்ற காரியங்களில் மதவாதிகளும் பக்தகோடிகளுமே ஈடுபட்டு வந்தார்கள். இன்று நிலைமை மாறியிருக்கிறது. எப்படி?

’மாதொரு பாகன்’ என்னும் நூலின் ஆசிரியரான பெருமாள் முருகன், திருச்செங்கோடு அர்த்தனாரி ஈஸ்வரரின் மாண்பையும், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா 14-ஆம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண்களின் கற்பையும் கொச்சைப்படுத்திவிட்டதாக நாமக்கல் மாட்டத்தில் போராட்டங்கள் தலையெடுத்திருக்கின்றன.

நூலாசிரியர் பெருமாள் முருகன், வருத்தம் தெரிவித்ததோடு, சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு மறுபிரசுரம் செய்வதாக, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் கடிதமும் கொடுத்திருக்கிறார். திருப்தி அடையாத போராட்டக் குழுவினர், எழுத்தாளர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்; அவர் கைது செய்யப்பட வேண்டும்; விற்பனையான புத்தகங்களைப் பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து உண்ணா நோன்பு இருக்கப் போகிறார்களாம். இது இன்றைய செய்தி.

இந்தப் போராட்டத்தில், பக்தகோடிகளும் பொது மக்களும் மதவாதிகளும் கலந்துகொள்வதாகச் செய்திகள் வருகின்றன.

இதில் ஜாதிச் சங்கங்களும் பங்கு பெற்றுள்ளன!

கொங்கு வேளாளர், செங்குந்த முதலியார், விஸ்வகர்மா, நாட்டு வேளாளர்கள், நாடார் உள்ளிட்ட ஜாதிகள்!

பெருமாள் முருகன், கல்லூரிப் பேராசிரியர்; இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர்; “நான் பிறந்து வளர்ந்த ஊர் திருச்செங்கோடு. அந்த ஊர் மக்களையும் கடவுளையும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கில்லை; என் எழுத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

இவர் எந்தவொரு அமைப்பையும் சாராதவர். ஒரு குடும்பத்தலைவர்; எளியவர்; உயர் பண்புகள் கொண்டவர்.

இவர் தண்டிக்கபட வேண்டியவர் என்றால், மாதொருபாகனே அந்தத் தண்டனையை வழங்கட்டும்.

விரும்பினால் போராட்டக்காரர்கள் அவரிடமே ‘முறையீடு’ வைக்கட்டும். முறையீடு வைப்பது இந்த வட்டார மக்களிடம் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம்தான்.

அதைவிடுத்து, புத்தக எரிப்பு; கண்டன ஊர்வலம்; உண்ணாநோன்பு; அரசிடம் கோரிக்கை என்பவை எல்லாம் தேவைதானா?

“ஆம்” என்றால், மாதொருபாகனை வழிபடும் போராட்டக்காரர்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை இல்லை என்றாகிறது.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo








12 கருத்துகள்:

  1. மாதொரு பாகன் விஷயத்தில் தேவையற்ற கொந்தளிப்புக்கள் எழுவதாகவே தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்செங்கோட்டுக்காரர்கள் பற்ற வைத்தார்கள். நாமக்கல்லிலும் பரவியிருக்கிறது.

      இன்னும் பரவுமா, அணையுமான்னு தெரியல.

      நன்றி சுரேஷ்.

      நீக்கு
  2. அரசியல் கட்சிகள் போல் ஜாதி கட்சி தலைவர்களும் நடந்து கொள்வது வடிகட்டின சுயநலம் !
    +1

    பதிலளிநீக்கு
  3. நாட்டுக்கு அவசியமற்ற விசயங்களில் எப்பொழுதுமே மக்களுக்கு ஈர்ப்பு சக்தி உண்டு நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. பலருக்கு இதுவும் ஒரு பொழுதுபோக்கு!

    நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  5. நூல் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன.நான்கு ஆண்டுகளாக அதிகமாக அறியப்படாததை உலகமே அறிந்து கொள்ள வைத்துவிட்டது இந்தப் போராட்டங்கள். நல்ல விளம்பரம் கிடைத்து விட்டது.விற்பனை அதிகரிக்கும் பதிப்பாளருக்கு கொண்டாட்டம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிப்பாளருக்குக் கொண்டாட்டம் என்பதோடு, இலக்கியவாதிகளால் மட்டும் அறியப்பட்ட பெருமாள் முருகன் பொது மக்கள் மத்தியிலும் பிரபலம் ஆகிவிட்டார்.

      கற்பை இவர் கொச்சைப்படுத்திவிட்டார் என்கிறார்கள் அல்லவா[நானும் இதை வெளிப்படையாக எழுத விரும்பவில்லை. அது புதிய பிரச்சினைகளை உருவாக்கிவிடக் கூடாது], அந்தக் கொசைப்படுத்துதலை இந்த வட்டார மக்கள் மிகப் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டுதான் இருந்தார்கள்; இருக்கிறார்கள். வாய்மொழியாக இருந்ததைப் பெருமாள் முருகன் தன் நாவலில் பதிவு செய்துவிட்டார். அவர் குற்றவாளியாகவும் ஆக்கப்பட்டுவிட்டார்.

      போராட்டம் தொடரும்போல் தெரிகிறது. ஒரு பொதுவுடைமைக் கட்சி மட்டும் இவருக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறது. இலக்கிய அமைப்புகள் ஏதும் களம் இறங்கியதாகத் தெரியவில்லை.

      இனி நடக்கப் போவது என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

      நன்றி முரளி.

      நீக்கு
    2. கொசைப்படுத்துதலை... > கொச்சைப்படுத்துதலை...

      நீக்கு
  6. அருணா செல்வத்துக்கு நன்றி.

    உங்கள் கருத்துரை என் தவற்றால் delete ஆகிவிட்டது. தவறாக எண்ணிவிடாதீர்கள்.

    மீண்டும் நன்றி அருணா.

    பதிலளிநீக்கு