செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

பதிவர் அமுதவன் படைத்த அமுத நாவல்!..... ஒரு பாராட்டுரை!

கண்ணெதிரே நடக்கிற அல்லது கற்பனையில் உருவாகிற ஒரு காட்சியையோ நிகழ்ச்சியையோ வார்த்தைகளால் வடித்தெடுப்பது, எந்தவொரு ‘சராசரி’ எழுத்தாளனுக்கும் சாத்தியமே. ஆனால், நாடி நரம்புகளில் ஊடுருவும் இனம் புரியாத உணர்வுகளுக்கு வடிவம் கொடுப்பது தேர்ந்த படைப்பாளர் களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

தேர்ச்சி பெற்ற அத்தகைய எழுத்தாளர்களில் நம் சக பதிவர் அமுதவனும் ஒருவர்.

‘ரகசியமாய் ஒரு பரிசு’[மாலைமதி - 08.04.1993] என்பது இவர் எழுதிய புதினம்.

மாணவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட, ஓர் ஆசிரியைக்கும், “டீச்சர், என்னை பெயிலாக்கிடுங்க. பாஸ் ஆயி வேற யார்கிட்டயும் படிக்க எனக்கு இஷ்டமில்ல. எப்பவும் உங்ககிட்டதான் படிக்கணும்னு தோணுது. இது சத்தியம்” என்று ஆவேசமாய்ப் பேசும் அவரது மாணவனுக்கும் இடையிலான உறவைக் கொஞ்சமும் கொச்சைப்படுத்தாமல் கதையாக்கியிருக்கிறார்.

இந்த நாவலின் நாயகியான ‘டீச்சர்’ பெயர் சந்திரிகா.

காலையில் வகுப்பு தொடங்கியதும், “எல்லோரும் சாப்பிட்டு வந்தீங்களா?” என்று கேட்டுப் பட்டினியாய் வந்தவர்களுக்குத் தன் மதிய உணவைக் கொடுத்துப் பசியாற வைக்கிற ஒருவரைப் பார்த்திருக் கிறோமா? இல்லைதானே? அப்படியொருவரை மானசீகமாய்ப் படைத்துத் தன் புதினத்தின் தலைவி ஆக்கியிருக்கிறார் அமுதவன்.

“பசி இருந்தா பாடம் ஏறாது. பசி மட்டும்தான் ஞாபகத்தில் மிஞ்சியிருக்கும். ஏழைக் குழந்தைகள் பட்டினியோட படிச்சா படிப்பு ஏறாதுன்னுதான் காமராஜர் இலவச உணவுத் திட்டத்தையே கொண்டுவந்தார்” என்று ஓரிடத்தில் அவரைச் சொல்லவும் வைக்கிறார்.

தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணுக்குக் கிட்டத்தட்ட வந்து முக்கி முனகுபவர்களுக்குக் கூடுதலாக ஐந்தோ ஆறோ மார்க்குகள் போட்டு அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பவள் இந்தச் சந்திரிகா.

“என்ன மூளை பார்த்தியா? பார்வைக்கு எத்தனை சாதுவாய் இருக்கும் இந்தப் பிள்ளை எவ்வளவு திறமையை ஒளித்து வைத்திருக்கிறது பார்” என்று வகுப்பறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தவும் செய்வாள் இவள்.

இன்னும் இப்படி எத்தனையோ நல்ல குணங்களின் இருப்பிடமான இவளை அத்தனை மாணவர் களுக்கும்  மெத்தப் பிடித்துப்போனதில் ஆச்சரியம் இல்லை. குறிப்பாக, தாமோதரன் என்னும் மாணவனைக் காந்தமாய்க் கவர்ந்து ஈர்க்கிறாள்.. அந்த ‘ஈர்ப்பு’, விட்டு விலக முடியாத நேசமாகவும் மாறுகிறது.

அந்த நேசம், “டீச்சருக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது” என்று சொன்ன சக மாணவன் மீது பாய்ந்து மூர்க்கமாய்க் கீழே தள்ளி, அடித்துத் துவைக்கும் அளவுக்குத் தாமோதரனை ஆவேசம் கொள்ள வைத்தது என்பதையும், டீச்சரிடமே, “டீச்சர்...டீச்சர்...இது நியாயமா டீச்சர்” என்று கேட்டு, எதிரிலிருந்த தூணில் ‘மடேர்...மடேர்’ என்று முட்டி மோதி மயங்கி அவனை விழ வைத்தது என்பதையும் உணர்ச்சிபூர்வமாய் விவரித்திருக்கிறார் கதாசிரியர்.

தன் குடும்பத்தாருடன் தாமோதரனையும் பிக்னிக் அழைத்துப் போகிறாள் சந்திரிகா.

பஸ்ஸில் அவளுக்குப் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பை எதிர்பார்த்து ஏமாறுகிறான் தாமோதரன்.

பின் சீட்டில் அமர்ந்து அவளின் பின்னலையும், சந்தன நிற சங்குக் கழுத்தையும் சோளி அழுத்திய தோள்பட்டையையும் ரசித்து, ‘இது தப்பில்லையா?’ என்று மறுகுவதையும் காட்சிப்படுத்துவதன் மூலம் அவன் அவள் மீது கொண்டிருந்த நேசம் ஆசையாகப் பரிணாமம் பெற்றுவிட்டதை விரசம் கலவாத வார்த்தைகளால் விவரித்திருக்கிறார் அமுதவன்.

பிக்னிக் முடிந்து ஊர் திரும்ப இருந்தபோது, “ஊருக்குத் திரும்பணுமேன்னு வருத்தமா இருக்கு டீச்சர்” என்கிறான் தாமோதரன். முன்னதாக, “பூஜை அறையிலிருந்து வந்தபோது நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க” என்று அவன் சொல்லியுமிருக்கிறான். இதன் வாயிலாக, அவனின் நேசத்தில் காமம் கலந்துவிட்டதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறாரோ என்று எண்ண வைக்கிறது.

வகுப்பறையில் ஒரு முறை, மனம் கவர்ந்த தலைவரைப் படம் வரையும்படி மாணவர்களிடம் சந்திரிகா சொன்ன போது, இவன் மட்டும் அவளின் உருவத்தை வரைந்து கொடுக்க, அதைக் கடிந்துகொண்ட சந்திரிகா, பின்னொரு கட்டத்தில், “நீ வரைஞ்ச படத்தை அப்படியே கிழிச்சி பீரோவில் வச்சிகிட்டேன்” என்று அவளைச் சொல்ல வைத்ததன் மூலம் சந்திரிகாவின் மனதில் இடம்பெற்றுவிட்ட உணர்ச்சிப் போராட்டத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

ஆனாலும், இருவருக்குமிடையேயான இந்த விரும்பத்தகாத உறவு தொடர்வைதைப் பக்குவப்பட்ட அவள் மனம் விரும்பவில்லை. இரு கைகளாலும் அவன் முகத்தை ஏந்திச் சொல்கிறாள்:

“இதோ பாரு தாமு, இதெல்லாம் ஒருவிதமான் பிரமை. மன பிரமை. நம்மை மீறிக்கொண்டு எங்கேயோ சென்று உரசும் உரசல். மனத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லையென்றால், இப்படித்தான் எங்கேயோ தறிகெட்டு ஓடும். ஆனால், உன்னை நான் தப்புச் சொல்ல மாட்டேன். ஆயிரத்தில் ஒரு மாணவனுக்கும் டீச்சருக்கும் இம்மாதிரியான மன ஈடுபாடு உருவாவது சாத்தியம்தான்.  என்னவென்றே புரியாத ஒரு நெருக்கம்...பாசம்...அன்னியோன்னியம். இந்தப் பருவத்தில் உள்மனதில் என்னென்னவோ பிம்பங்கள் விழும். ..என்னென்னவோ நினைப்புகள் வரும். இவையெல்லாம் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய நினைவுகள்தான். காலப்போக்கில் இவையெல்லாம் மறிப்போகும்.என்றாலும் அந்தந்த நேரத்தில் இவைதான் சாசுவதம் போலத் தோன்றும். என்றைக்குமே அழியாத, அழிக்க முடியாத சித்திரங்கள் போல் காட்சி தரும். இவை எல்லாமே தற்காலிகமானவை தாமு. கொஞ்ச நாட்கள் இருந்து மாறிவிடக் கூடியவை. இதுக்காக மனதைப் போட்டு அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. பேசாமல் இருந்தால் அதுபாட்டுக்கு வடிந்துவிடும்.

சந்திரிகாவுக்குத் திருமணம் ஆக இருப்பதை அறிந்து, அவளைச் சந்தித்து, தூணில் மோதி மயங்கிச் சாய்ந்த தாமோதரன் பின்னர் மயக்கம் தெளிந்த நிலையில், “இதற்கெல்லாம் ஒருவகையில் நானும் காரணம். எது எப்படியோ எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று சந்திரிகா சொன்ன போது, “எனக்குப் பைத்தியம் பிடிச்சுரும் டீச்சர்...எங்கேயாவது விழுந்து செத்துப் போயிருவேன்” என்கிறான் தாமோதரன்.

அப்படியெல்லாம் நடக்க விடமாட்டேன். உன் உணர்வுகளைக் கௌரவித்துத்தான் உன்னை அனுப்பப் போறேன். உனக்கு நான் ஒரு பரிசு தருவேன். கொஞ்சம் சம்பிரதாயங்களையும் பண்பாடுகளையும் மீறிய பரிசுதான். உலகம் ஒப்புக்கொள்ளாது. ...” என்று சொல்லி, அவன் முகத்தைக் கைகளில் ஏந்தி, அவன் நெற்றி கண்கள் கன்னம் என்று முத்தமிடுகிறாள்; “உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இது இருக்கட்டும். நாம் இப்போது பிரிவோம்...இனிமேல் சந்திக்கவே வேண்டாம்” என்கிறாள் டீச்சர் சந்திரிகா.

இப்படி இவள் சொல்வதோடு நிறுத்தியிருந்தால் கதையும் முடிகிறது.

அவ்வாறு செய்யாமல், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தாமோதரனை, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி எல்லாம் முடித்த பல்கலைக்கழகப் பேராசிரியராக்கிக் கதையைத் தொடங்குகிறார் அமுதவன்[இதுவரையிலான கதை, இடையிடையே பின்னோக்கு உத்தி மூலம் சொல்லப்பட்டது].

வகுப்பு மாணவர்களில் ஒருத்தியாகச் சந்திரிகாவை எதிர்ப்படுகிறான் அவன்.

சில சந்திப்புகளுக்குப் பிறகு, அவள் விதவையாகி, பல்கலைக் கழக மாணவியானதை அறிகிறான்.

தன்னுடைய டீச்சரே தனக்கு மாணவியாக வர நேர்ந்திருக்கும் விசித்திரம் அவனுக்கு ஆச்சரியம் அளித்தது.

இரவெல்லாம் யோசித்துப் பார்த்தபோது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.

‘மாணவப் பருவத்தில் ஏற்பட்ட அந்த உறவு இனிமேல் வெவ்வேறு வடிவங்கள் எடுக்கலாம்.’

‘கணவனை இழந்து நிற்கும் டீச்சரின் துயரத்தில் பங்கேற்கப் போகிறோம் என்ற சாக்கில் ஆண் பெண் உறவில் போய் முடியலாம்....’

‘டீச்சர் எம்.ஏ. முடிக்கட்டும்...பெரிய வேலைக்குப் போகட்டும்.’

‘டீச்சருக்கும் தனக்கும் இருந்த உறவு எந்த வகையிலும் கொச்சைப்பட்டுப் போக வேண்டாம்.’

‘அந்த ரகசியப் பரிசுக்கு எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது. காலங் காலங்களுக்கும் அது எனக்குள்ளேயே இருந்து எனக்குள்ளேயே மடியட்டும்.’

‘இவ்வாறான எண்ணங்களுக்குப் பிறகு, ஒரு வெள்ளைத் தாளை எடுத்துத் தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை எழுத ஆரம்பித்தான் தாமோதரன்.’ என்று முடிகிறது நாவல்.

படித்து முடித்தவுடன், ‘எத்தனை அருமையான நாவல்!’ என்று மனம் சிலாகித்தது; ‘எது எப்படியோ சந்திரிகாவும் தாமோதரனும் இணைந்து வாழ வாப்பில்லாமல் போனதே’ என்று வருந்தவும் செய்தது.

=============================================================================================

சூழ்நிலை காரணமாக, கருத்துரைகளுக்கு மறுமொழி வழங்க ஒரு நாள் தாமதம் நேரலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

============================================================================================











9 கருத்துகள்:

  1. கொஞ்சமும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்பது இதுதானோ? நன்றி பரமசிவம்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அப்பாவியின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் என் நன்றி.

      நீக்கு
  3. திரைக்கதை எழுதுவதில் வல்லமை படைத்தவர் கையில் இக்கதை இருந்தால், அழகான ஒரு திரைப்படமே எடுக்கலாம்...

    அமுதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அமுதவன் சார், சிறந்த எழுத்தாளர் என்பதை அவரது வலை தளம் மூலம் அறிந்திருக்கிறேன். கத்தி மேல் நடப்பதைப் போல கதைக் களத்தை எடுத்திருக்கிறார். கொஞ்சம் தவறினாலும் ஆபாசமாகப் போய்விடக் கூடிய அபாயம் உண்டு. உங்கள் மதிப்புரையைப் பார்க்கும்போது அற்புதமாக எழுதி இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. அமுதவன் சாருக்கு வாழ்த்துகள்.
    இத்தனயும் நீங்கள் இன்னும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறீர்களா ?
    பசி சார், நீங்கள் ஒரு பொக்கிஷம் . புதையல்களை அள்ளி எடுத்துக் கொடுக்கிறீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று தாமதமாகத்தான் உங்களின் இந்தக் கருத்துரையைப் பார்த்தேன்.

      அமுதவன் அவர்களின் இந்த நாவல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இரண்டு முறை படித்தேன்.

      எனக்கு ஒரு நூல் பிடித்திருந்தால், இரண்டாம் முறை படிக்கும்போது பதிவுக்குத் தேவையான இடங்களைப் பென்சிலால் அடிக்கோடிட்டுச் செல்வேன். பின்னர் அதைப் பதிவாக்கிவிடுவேன்.

      பொக்கிஷம் எல்லாம் இல்லை. நல்ல நூல்களைக் கண்டறிந்து படிக்கும் ஆர்வம் நிறைய உள்ளது. அவ்வளவுதான்.

      உங்களின் பாராட்டுக்கு என் மனமுவந்த நன்றி முரளி.

      நீக்கு