வியாழன், 5 பிப்ரவரி, 2015

வெடித்துச் சிதறப் போகிறது வெண்ணிலா!! எப்போது?! [அறிவியல் பதிவு]

அந்தவொரு காலக்கட்டத்தில் மனிதன் வாழ்ந்திருந்தால், அவன் எம்பிக் குதித்து[!!!]த் தொட்டுவிடும் தூரத்தில்தான் ‘சந்திரன்’ என்னும் துணைக் கோள் இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். காரணம், சொல்பவர்கள் விஞ்ஞானிகள்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வான வெளிதனில், அதி பிரமாண்டமான ஒரு பொருள் பூமியின்மீது மோதியதால் சிதறிய ஒரு பகுதிதான் நிலவாக உருவெடுத்ததாம். அப்போது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் துக்கடா 14,650 கிலோ மீட்டர்தானாம்!
அப்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமெல்லாம் தேவைப்படவில்லை; வெறும் ஆறு மணி நேர அவகாசத்தில்[பகல் மூன்று மணி நேரம்; இரவு மூன்று மணி நேரம்.] ‘கரகர’வென்று ஒரு முறை சுழன்று முடித்துவிடும்.

இன்று பூமிக்கும் சந்திரனுக்குமான இடைவெளி 2லட்சத்து 36,000 கி.மீ. என்கிறார்கள்.

பூமித் தாயிடம் பிணங்கிக்கொண்டு சந்திரன் இத்தனை தொலைவு விலகிப் போகக் காரணம் என்ன?

விஞ்ஞானிகள் சொல்வதைக் கவனமாகப் படியுங்கள்.

‘சந்திரன் பூமியைச் சுற்றும்போது சும்மா சுற்றுவதில்லை; கடல் நீரைத் தன் பக்கம் ஈர்க்கிறது. இதன் விளைவாக, சில நேரங்களில் கடல் நீர், சற்று உள்வாங்கியும் சில நேரங்களில் கரை கடந்தும் இருக்கும். இதைத்தான் ஆங்கிலத்தில் tides என்கிறார்கள். கடலின் நீர் மட்டம் அதிகரிப்பதற்கும் குறைவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் சந்திரனின் ஈர்ப்புச் சக்தி ஒரு முக்கிய காரணம்.

இதே காரணத்தால்தான், சந்திரன் பூமியிடமிருந்து விலகி விலகிச் செல்கிறது[எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே வெளிச்சம்!]. இடைவெளியும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க, பூமியின் சுழற்சி வேகமும் குறைந்துகொண்டே வருகிறது. அதன் விளைவாக, அது தன்னைத்தானே சுற்றும் நேரமும் அதிகரிக்கிறது.

இடைவெளி 14,650 ஆக இருந்தபோது தனக்குதானே சுற்றிவரத் தேவைப்பட்ட 6 மணி நேரம், 90கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இடைவெளி அதிகரித்த நிலையில் 18 மணி நேரமாக ஆனது. அதுவே, 62கோடி ஆண்டுகளுக்கு முன்பு 22 மணி நேரமாக இருந்தது. இன்று 24 மணி நேரம்.

100 ஆண்டுகளுக்கு 3கி,மீ.அளவில் சந்திரன் விலகிக்கொண்டே இருக்கிறது. ஒரு நாளின் அளவும் 0.02 வினாடிகள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்நிலை தொடரும்போது, 700 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியின் ஒரு நாள் காலம் 50 மணி நேரமாக ஆகும்.

500 கோடி ஆண்டுகளிலேயே சூரியன் மிக மிகப் பெரிதாக மாறிவிடும். இதன் காரணமாக, விலகி விலகிப் போய்க்கொண்டிருக்கிற சந்திரன், மீண்டும் , இந்தப் பூமியை நோக்கிப்[பயப்பட வேண்டாம். நாம் சம்பாதிக்கும் புண்ணியத்தால் அப்போது நாமும் நம் சந்ததியாரும் சொர்க்கத்தில் சுகபோக வாசிகளாக இருப்போம்!] பயணம் புறப்பட்டுவிடும்.

ஒரு கட்டத்தில், பூமியின் மீது மோதி வெடித்துச் சிதறி நிர்மூலம் ஆகும்!

##########################################################################################################

‘விஞ்ஞானச் சிறகு’[பிப்ரவரி - 2015] என்னும் அறிவியல் மாத இதழில், சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கத்தைக் கொஞ்சம் முறை மாற்றித் தொகுத்து, சற்றே எளிமைப்படுத்தியுள் ளேன்.

சிதம்பரம் ரவிச்சந்திரனுக்கு என் மனமுவந்த நன்றி.

########################################################################################################## 









10 கருத்துகள்:

  1. சந்திரன் விலகி விலகிப்போவதற்க்கு காரணம் தெரியாதா ? நண்பா நமது அரசியல்வாதிகள்தான் எண்ணம் நலமெணில் எல்லாம் நலமே... எங்கே ?
    மாறுபட்ட பதிவுக்கு நன்றி நண்பரே,,,,
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் அரசியல்வாதிகளைக் கண்டு சந்திர சூரியர்களே அஞ்சுவார்கள் என்பது உண்மைதான்.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. சிறப்பான அறிவியல் பதிவு! எளிமையாக விளக்கிய விதம் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு