வியாழன், 26 மார்ச், 2015

காந்தியும் காமமும்!

##காந்தி...‘மகாத்மா’ அல்ல; உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் சாதனைகள் புரிந்த ‘மிகச் சிறந்த’ ஒரு ‘மனிதர்’ மட்டுமே!##


"இளமையில், மிகையான காம உணர்ச்சி உள்ளவர்கள், அதைக் கட்டுப்படுத்தி ஒரு நெறியில் செலுத்தினால், பிற்காலத்தில் சிறந்த சாதனையாளர்களாப் புகழ் பெறக்கூடும்” என்பார் தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசன் [‘கரித்துண்டு’, நாவல்].

இதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக, ‘மஹாத்மா’ என்று அழைக்கப்பட்ட காந்தியைச் சொல்லலாம்.
‘மஹா...ஆத்மா’ என்று சொல்லி அவரைக் கடவுளின் அம்சமாக்கி, தீபம் ஏற்றி வழிபடத் தக்கவர் ஆக்கிவிட்டார்கள் கடவுள் பற்றாளர்கள்.

“அவரைப் போல எல்லாம் நம்மால் வாழ முடியாது” என்ற எண்ணத்தை மக்களின் மனதில் ஆழப் பதித்துவிட்டார்கள்.

காந்தி கடவுள் நம்பிக்கை உள்ளவரே தவிர, ஒருபோதும் தன்னைக் கடவுளின் அம்சமாகக் கருதியதில்லை. மிகச் சாதாரண மனிதப் பிறவியென்றே நினைத்தார்; மற்ற மனிதர்களுக்கு உள்ள பலவீனங்கள் தனக்கும் உள்ளன என்றே சொல்லி வந்தார். தன்னுடைய சுய வரலாறான ‘சத்திய சோதனை’யில் தனக்கிருந்த குறை நிறைகளை அப்பட்டமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

குறிப்பாக, இளமையில் தன்னைப் பாடாய்ப்படுத்திய மிகையான காம உணர்ச்சி பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட அசாதாரண முயற்சிகள் பற்றியும் ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறார்.

மோக உணர்ச்சி தன்னை ஆட்டிப்படைத்த போதெல்லாம் மணல் மூட்டை சுமந்து உடம்பு சோர்வடையும்வரை ஓடுவாராம்!

குளிர்ந்த நீரில் நேரம்போவது தெரியாமல் அமர்ந்திருப்பாராம்.

'காமம் பொல்லாதது. அதை அடக்கி ஆள்வது அவ்வளவு எளிதல்ல’ என்பதை அவர் எப்போதும் உணர்ந்தே இருந்தார்.

அதனால்தான், தெனாப்பிரிக்கா புறப்படும் போது, “மதுவையும் மங்கையரையும் தீண்ட மாட்டேன்” என்று தன் அன்னையிடம் சத்தியம் செய்துவிட்டுப் போனார்.

சத்தியம் செய்யும் அளவுக்குப் பெண்ணாசை அவரை மருள வைத்திருந்தது!

ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பும் நேரம் வரை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார்.

ஆனால், திரும்பும் வழியில், அவர் பயணித்த கப்பல், ஒரு தீவை அடைந்த போது, கப்பல் கேப்டன் ஒரு விடுதிக்கு அவரை அழைத்துச் சென்று, ஒரு விலை மகளிடம் அனுப்பி வைக்க, அவர் மனம் சஞ்சலப்படுகிறது.

ஆசையைக் கட்டுப்படுத்த இயலாமல் தாயிடம் செய்த சத்தியத்தையும் மீற இயலாமல் அவர் மனம் நிலை தடுமாற, சினம் கொண்ட விலைமகள் அவர் கன்னத்தில் அறைகிறாள்! அறையைப் பெற்றுக்கொண்ட அதிர்ச்சியுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கப்பலுக்குத் திரும்புகிறார் காந்தி.

கஸ்தூரிபாயை மணந்த பிறகும்கூட, பொல்லாத இந்தக் காம இச்சையைத் தன் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டுவர அவரால் இயலவில்லை.

தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தருணத்திலும்கூட, தன் மனைவியை மருவிச் சுகம் கண்ட ஒரு சதைப் பித்தராகவே அவர் இருந்திருக்கிறார்.

இந்தத் தன் பலவீனம் குறித்துப் பின்னர் வெகுவாக வருத்தப்பட்டிருக்கிறார் அவர். [‘சத்திய சோதனை’படியுங்கள்]

உலகமே வியந்து போற்றும் அளவுக்கு உன்னதமான தலைவராக உருவெடுத்த நிலையில், இது போன்ற தன் பலவீனங்களைச் சுயசரிதம் மூலம் உலகுக்கு அறிவித்த ஒரு ’மாமனிதர்’ காந்தியாகத்தான் இருக்க முடியும்.

அதனால்தான், மிகச் சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான கவியரசு கண்ணதாசன்,  ‘வனவாசம்’ என்னும் தன் சுய வரலாற்றின் முன்னுரையில், ‘எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள காந்தியடிகளின் சத்திய சோதனை படியுங்கள். எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள என் சுயசரிதை படியுங்கள்’ என்பார்.
காந்தியைப் போலவே, தான் செய்த தவறுகளை மறைக்காமல் சொன்னவர் கண்ணதாசன்.

‘மனித நாகரிகம் கருதி, நான் செய்த அசிங்கங்கள் அவ்வளவையும் எழுத இயலவில்லை’ என்கிறார்.

‘இளம் பருவத்தில், அழகும் கவர்ச்சியும் மிக்க பெண்களைப் பார்த்துவிட்டால், கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் விரகதாபத்துடன் அவர்கள் பின்னாலேயே அலைந்திருக்கிறேன்’ என்று தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.

இத்தனை பெண் பித்துக் கொண்டவராக இருந்தும் எழுத்துத் துறையில் இவர் நிகழ்த்திய சாதனை பிரமிக்க வைப்பது பேராச்சரியம்!

நாற்பது வயதுக்குள்ளாக, உடலுறவு ஆசையை முற்றிலுமாய்க் கட்டுப்படுத்தி, மனைவி கஸ்தூரிபாயின் சம்மதத்துடன் துறவு மேற்கொண்டு நாட்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார் காந்தி.

துறவு மேற்கொள்வது சாத்தியப்படாது என்பது புரிந்த நிலையில், ஒரு வரம்புக்கு உட்பட்டு, மது மங்கையர் சுகத்தை அனுபவித்துக் கொண்டே எழுத்துலகில் சாதனைகள் நிகழ்த்தியவர் கண்ணதாசன்.

வரம்பு கடந்த காமம், கால நேரம் கருதாமல் அலைக்கழித்த போதும், மனம் தளராமல் அதனுடன் போராடிக் கட்டுப்படுத்தி, கொண்ட குறிக்கோளை நிறைவேற்றிப் புகழ் ஈட்டியவர்கள் இவர்கள்.

காந்தியின் சத்திய சோதனையையும் கண்ணதாசனின் மனவாசத்தையும் படித்தவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட அனைத்துத் தகவல்களும் தெரிந்தே இருக்கும்.

தெரிந்தவர்களுக்கும் இனிப் படித்துத் தெரிந்துகொள்ள இருப்பவர்களுக்கும் இப்பதிவின் மூலம் நான் முன் வைக்கும் வேண்டுகோள்..........

‘பலவீனங்களுடன் பிறந்து, சாதனைகள் நிகழ்த்திய ஒரு சாதாரண மனிதர் இவர்’ என்று கண்ணதாசனை நம் வருங்காலச் சந்ததியருக்கு அறிமுகப்படுத்துவது போலவே, காந்தியையும், ‘ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து செயற்கரிய செயல்கள் செய்த ஒரு மாமனிதர் இவர்’ என்றே அறிமுகப்படுத்துங்கள்.

மறந்தும் அவரை ‘மஹாத்மா’ என்று போற்றிப் புகழாதீர்கள்.

அவ்வாறு செய்தால், வருங்காலச் சந்ததியினர், அவரைப் பின்பற்றுவதற்குப் பதிலாகத் தீபம் ஏற்றி வழிபட மட்டுமே செய்வார்கள்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:
வரைவில் உள்ள அனைத்துப்  பதிவுகளும்[பழைய வலைப்பதிவுகளில் வெளியானவை] உரிய கால இடைவெளிகளில் பதிவிடப்படும்.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக