அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 26 மார்ச், 2015

வதைபட்ட தாய்க்குலமும், வரலாற்றின் கறை படிந்த பக்கங்களும்!

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்றார் கவிமணி. இந்திய வரலாற்றின் ‘ரத்தக்கறை படிந்த  பக்கங்களை’ அவர் படித்ததில்லை போலும்!

‘மன்னர்கள் புரிந்த மாபெரும் குற்றங்களும், அவர்களின் மூடத்தனமான வெறிச் செயல்களும், அவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களும் வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணைதான் வரலாறு'என்கிறார் மேலைநாட்டு அறிஞர் ஒருவர்.

இந்திய அரசியல் வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட சில நிகழ்வுகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.
நாடெங்கும், நீண்ட நெடுஞ்சாலைகள் அமைத்து  நிழல் தரும் மரங்கள் நட்ட அசோகச் சக்ரவர்த்தியை நம் எல்லோருக்கும் தெரியும்.

இவர் கலிங்கப் போருக்குப் பிறகு மனம் திருந்திய மாமனிதர்.

போருக்கு முந்தைய அசோகர்?

இவர், பிந்துசாரரின் 101 புதல்வர்களில் ஒருவர்; சகோதரர்களைக் கொன்று குவித்து ஆட்சியைக் கைப்பற்றியவர்; அதனால், ‘சண்ட அசோகன்’ எனப் பெயர் பெற்றதோடு குற்றம் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கியவர்; எதிரிகள் பலரையும் வென்ற மாபெரும் வீரர். ஆனால்............

இந்த அசோகனின் தோற்றம் மட்டும் விகாரமானது!

இவரின் அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகிகள் இருந்தார்கள். அவர்களில் யாரோ சிலர் இவரது தோற்றத்தைப் பழித்தார்களாம். அந்தச் சிலரை அடையாளம் காண முடியாததாலோ என்னவோ அங்கிருந்த அத்தனை பெண்களையும் யமனுலகுக்கு அனுப்பினாராம் அசோகச் சக்ரவர்த்தி!

இவரிடம், பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இருந்தது. அந்த விழா வெகு வமரிசையாகக் கொண்டாடப்படும். விமரிசையாக என்றால் எப்படி?

பிறந்த நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுப்பது!

இவனா[ரா] கலிங்கப் போருக்குப் பிறகு அஹிம்சாவாதியாக மாறினான்[ர்]? நம்ப முடியவில்லைதானே?

எதற்கும்  ‘பாகைநாடன்’ எழுதிய ‘கறை படிந்த காலச் சுவடுகள்’ [மூவேந்தர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2004]  ஆய்வு நூலை உடனே வாங்கிப் படித்துவிடுங்கள்.
                     *                      *                          *                                     
அடுத்து வரும் செய்தி உங்களைக் குலை நடுங்க வைக்கும் என்பது 100% உறுதி!

கி.பி.937 இல் காஷ்மீரை ஆண்டவன் ‘வந்தி’ என்னும் பெயர் கொண்டவன். கொடியருள் கொடியனான இவனிடம் இருந்த கொடூரமான ஒரு பழக்கம்.....

கருவுற்ற பெண்களின் வயிற்றை அறுத்து உள்ளுறுப்புகளை ரசிப்பது; வேதனையில் தாய் துடிப்பதையும் குழந்தை உயிருக்குப் போராடுவதையும் கண்டு ஆனந்தத்தில் மிதப்பது.               

                      *                      *                        *
அடுத்து, தமிழ் மன்னன் ராசராசன் காலத்தில் [கி.பி.1008] நடந்த ஒரு நிகழ்வு.

ராசராசனுக்கும் சாளுக்கிய மன்னனுக்கும் போர் நடந்தது. சோழன் வென்றான். சாளுக்கியன் தலைநகர் எரியூட்டி அழிக்கப்பட்டது.

அந்தப்புரத்துப் பெண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். [போர் முடிவுக்கு வந்த பின்னர் வெற்றி ஈட்டிய மன்னர்கள் அ.பு. பெண்களைக் கடத்துவதும், அழகிகளைத் தம் அந்தப்புரத்தில் சேர்ப்பதும் வழக்கமாக இருந்தது]

அப்புறம் நடந்ததுதான் நம் நெஞ்சைப் பதற வைக்கிறது!

சாளுக்கியத் தளபதியின் மகளைப் பிடித்து வந்து அவளின் மூக்கைத் துண்டிக்கிறான் ராசராச சோழன். [ராமாயணம் படித்திருப்பானோ?]

எதிரியைப் பழிவாங்க வேண்டும் என்னும் உச்சக்கட்ட வெறி, எதிரி இனத்துப் பெண்களை இப்படி வதை செய்தால்தான் அடங்கும்போல் தெரிகிறது.

இவனின் பழி வாங்கும் வெறி இத்துடன் முற்றுப் பெறவில்லை. எதிரி நாட்டுப் பெண்களின் மார்க்கச்சுகளை அவிழ்த்து ஓடவிட்டிருக்கிறான்.  
                   *                       *                         *
இந்த ராசராசனை ரொம்ப நல்ல பிள்ளை ஆக்குகிறார்கள், 15 ஆம் நூற்றாண்டு வாக்கில், பாண்டிய மன்னர்களுடன் போர் புரிந்த ஆந்திர நாயக்க மன்னர்கள்.

தோற்றுப் போன மன்னனின் கண் முன்னால், பொது இடங்களில் வைத்து, பலபேர் முன்னிலையில், அவனின் குடும்பப் பெண்களை நிர்வாணமாக்கிக் குண்டர்களை ஏவி கற்பழிக்கச் செய்திருக்கிறார்கள்! [‘நாயக்கர் வரலாறு’ படியுங்கள்]

குடும்பப் பெண்களின் கண் முன்னால், தோற்ற மன்னனின் தோலை உரித்ததெல்லாம் [உயிரோடு] சர்வ சாதாரணமான அன்றைய  நிகழ்ச்சிகள்.
                        *                       *                        *
கி.பி.1341 இல் மதுரையை ஆண்டவன் கியாஸ் உதீன் என்பவன்.

இவனின் சகலையும், இஸ்லாமிய வரலாற்றாசிரியருமான ‘இபின் பதூதா’ இவனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித உருவில் வந்த பேய்’ என்கிறார்.

‘இவன் , பெண் கைதிகளை அவர்களின்  தலை முடியினால் கழுமரத்துடன் கட்டுவான். அவர்களின் குழந்தைகளை அந்தத் தாய்மார்களின் மார்பின்மீது வைத்துச் சித்திரவதை செய்வான்; வெட்டிக் கொல்லுவான்’ என்கிறார் இபின் பதூதா.

இப்படிப் பெண்ணினம் வதைக்கப்பட்டதற்கான ஏராள ஆதாரங்கள் வரலாற்று நூல்களில் உள்ளன.

இன்றளவும், இனக்கலவரம் மதக்கலவரம் என்னும் தீ, இம்மண்ணில் கொழுந்துவிட்டு எரிந்த...எரிகிற போதெல்லாம் கொலை கொள்ளைச் சம்பவங்களுக்கு இணையாகப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் சாசுவதமான ஒன்றாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்...........

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்ற கவிமணியின் கூற்று ஏற்கத்தக்கதா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு:
வரைவில் உள்ள அனைத்துப்  பதிவுகளும்[பழைய வலைப்பதிவுகளில் வெளியானவை] உரிய கால இடைவெளிகளில் பதிவிடப்படும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக