Saturday, March 7, 2015

இந்தப் பதிவு உங்கள் மனதைப் புண்படுத்துமா, பண்படுத்துமா?!

‘கடவுளின் கடவுள்’ என்னும் வலைப்பக்கத்தை[blog] வடிவமைத்து மிகுந்த உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், நான் ‘வாங்கிக் கட்டிக்கொள்ள'க் காரணமாக இருந்த பதிவுகளில் ‘கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!என்பதும் ஒன்று.
                     
பண்பற்ற செயல் என்பது புரிந்திருந்தும், கருத்துகள் வாசிப்பவர் மனதில் ஆழப் பதிந்திடச் சற்றுக் கடுமையான சொற்களை அப்போது பயன்படுத்தினேன்.  இப்போது அவற்றை முற்றிலுமாய் நீக்கியிருக்கிறேன்.


தலைப்பு:  கோயிலுக்கா போகிறீர்கள்?.....கொஞ்சம் நில்லுங்கள்!

[“நீங்கள் கோயிலுக்குப் போகும் வழக்கம் உள்ளவரா? கீழ்க்காணும் கேள்விகளை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பதில் அளிப்பது உங்கள் ‘மனசாட்சி’யாக இருக்கட்டும்!]
கேள்வி 1:
“கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தவர். அவர் எல்லாம் வல்லவர்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். அணுவிலும் அவர்தான் இருக்கிறார். ஏன்.....உங்களுக்குள்ளேயும் அவர் நிரந்தரமாய்த் தங்கியிருக்கிறார். உங்களைப் படைத்த அவருக்கு உங்களைப் பாதிக்கிற கஷ்ட நஷ்டங்கள் பற்றி அத்துபடியாய்த் தெரிந்திருக்கும். உண்மை இதுவாக இருக்கும் போது, நீங்கள் முறையிட்டால்தான் உங்கள் குறைகளை அவர் போக்குவார் என்று நினைப்பது சரியா? கொஞ்சம் சிந்திப்பீர்களா? ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்ற ‘வழக்குமொழி’யெல்லாம்  வேண்டாம்.

கேள்வி 2:
உங்களுக்கோ உங்களின் சொந்தபந்தங்களுக்கோ நேரிட்ட துன்பங்களைக் களையும்படி நீங்கள் எத்தனை முறை அவரிடம் முறையிட்டிருக்கிறீர்கள்? எத்தனை முறை அவர் உங்கள் வேண்டுகோள்களுக்குச் செவி சாய்த்திருக்கிறார்? ஒரு பட்டியல் போட்டுப் பார்க்கலாம். செய்வீர்களா?

கேள்வி 3:
உங்கள் வேண்டுதல்களில் ஒன்றுகூட நிறைவேற்றப்படாத பட்சத்தில், கடவுளின் கருணை உள்ளம் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டதில்லையா? தெளிவு பெற முயன்றதில்லையா?

கேள்வி 4:
உங்கள் கோரிக்கைகளில் பல நிறைவேறாமல் மிகச் சில மட்டுமே நிறைவேறும் நிலையில், அவ்வாறு நடப்பது கடவுளின் கருணையால்தான் என நீங்கள் நம்புவது உண்டா? “ஆம்” எனில், பல கோரிக்கைகளை அவர் நிராகரித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன?

கேள்வி 5:
அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுள்தான் என்றால், நம்மைத் தாக்குகிற துன்பங்களுக்கும் அவரே காரணம். எனவே, அவரைப் போற்றித் துதி பாடுவது தேவையற்றது என்ற எண்ணம் உங்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லையா? ஏன்?

கேள்வி 6:
துன்பங்கள் நேர்வது கடவுளால் அல்ல என்று நீங்கள் நம்பினால், நம்மை இம்சிக்கிற துன்பங்கள் தாமாக வந்தன என்று அர்த்தமாகிறது. நமக்கு உண்டான துன்பங்கள் விலகும் போது அவை தாமாக விலகின எனக் கொள்ளாமல் கடவுளின் கருணையால் அவை நிகழ்ந்தன என்று நம்புகிறீர்கள். அவ்வாறு நம்புவது அறிவுடைமை ஆகுமா?

கேள்வி 7:
ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்தின் துன்பம் களையுமாறு பிறருடன் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்திருக்கிறீர்களா? அம்மாதிரியான வழிபாடுகளால் எத்தனை முறை பலன் கிட்டியிருக்கிறது?

வாட்டி வதைக்கும் வறுமை, தீராத நோய்கள், மதச் சச்சரவுகள், இன மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை காரணமாக, உயிர்கள் கடும் துன்பத்திற்கு ஆட்பட்டுச் சித்திரவதைக்குள்ளாவதையும் சீரழிந்து செத்தொழிவதையும், இது போன்ற இன்ன பிற அவலங்களையும் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை என்பதற்காகக் கடவுளை நொந்துகொண்டதுண்டா? அவ்வாறு நொந்துகொள்வது தவறாகுமா?

கேள்வி 8:
“கோயிலுக்குப் போயி ஆண்டவனை வழிபட்டா, ஒருவித நிம்மதி பிறக்குது; மனசு சுத்தமாகுது.” இது மிகப் பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. நீங்களும் இதை நம்புகிறீர்களா?

நம்மில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுளைக் கும்பிடுபவர்கள்தாம். அத்தனை பேர் மனமும் சுத்தமானவையா என்ன? [வழிபடாதவர்களின் மனங்கள் தூய்மையானவை என்று நான் சொல்லவில்லை].

கோயிலுக்குப் போவதைக் கைவிட்டு[இக்கருத்து, தனி விவாதத்திற்குரியது] ஒரு மருத்துவமனைக்குப் போகலாம். அங்குள்ள நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது நம் உள்ளம் இளகும்; உருகும்; கெட்ட எண்ணங்கள் அகன்று அது தூய்மை பெறும்.

அனாதை இல்லங்களைப் பார்வையிடலாம். நம்மால் முடிந்த அன்பளிப்புகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து ஆறுதல் சொன்னால். நெஞ்சில் அன்பு சுரக்கும்; மகிழ்ச்சி நிரம்பும்.

மனநலம் பாதிக்கப் பட்டவர்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்திக்கலாம். அவர்களின் பரிதாப நிலை கண்டு கண்ணீர் உகுக்கும் போது மனதில் கருணை பிறக்கும்.

இன்னும், முதியோர் இல்லம்; குழந்தைகள் காப்பகம் என்று நம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகிற இடங்கள் நிறையவே உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைத் தவிர்த்து, கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கினால் நிம்மதி கிட்டும்; மனம் தூய்மையடையும் என்று சொல்லப்படுபவை ஏற்கத்தக்கனவா? 

மேற்கண்ட வினாக்கள், கடவுள் வழிபாடு குறித்துச் சிந்தித்தபோது என்னுள் முகிழ்த்தவை. இவற்றிற்கான பதில்களை  நடுநிலை உணர்வுடன் தேடுவது சிறந்த சிந்தனையாளரான உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படக்கூடும்.

நன்றி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments :

Post a Comment

எழுதுகையில், கருத்துப் பிழைகளும் மொழிப் பிழைகளும் நேர்தல் இயற்கை. பிழை காணின், அன்புகொண்டு திருத்துங்கள். இயலாதெனின், பொறுத்தருளுங்கள்.