வியாழன், 23 ஏப்ரல், 2015

பக்தர்களைச் சீண்டும் ‘குட்டிக்கதை’ இது! சிந்திக்கவும் தூண்டும்!!

நான் பதிவுகள்[2011] எழுதத் தொடங்கியதன்  நோக்கமே கடவுளைத் திட்டுவதுதான். குட்டிக்குட்டிக் கதைகள் சொல்லிப் பக்தர்களின் தலையில் குட்டுவது எனக்கு மெத்தப் பிடிக்கும். நான் ‘கெட்ட’ புத்தியுடன் படைத்த ‘நல்ல’ கதைகளில் இதுவும் ஒன்று. 


சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு, அடையாள அட்டையிலிருந்த தொ.பே. எண்ணுக்குத் தகவல் தந்தான் தங்கராசு.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர், மருத்துவரைப் பார்த்துவிட்டு, தங்கராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். நான் கடவுளை நம்புறவன். அவராப் பார்த்து உங்களை அனுப்பியிருக்கார்.  ரொம்ப நன்றிங்க.” என்று சொல்லித் தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

குரல் தழுதழுக்கச் சொன்னான் தங்கராசு: 
“என் ரெண்டு வயசுக் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. கடவுளை வேண்டாத நாளில்லை. அவர் கண் திறக்கல. அவருக்கு உங்க மேல ரொம்பப் பிரியம் போலிருக்கு. நீங்க கேட்காமலே உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பியிருக்கார். நீங்க சொன்னா அவர் கேட்பாரு. தயவு பண்ணி என் பிள்ளையைக் கண்டுபிடிச்சிக் கொடுக்கச் சொல்லுங்க.”

என்ன சொல்வதென்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்தார் சிறுவனின் தந்தை!

=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக