ஞாயிறு, 31 மே, 2015

நமக்குத் தேவை ‘கடவுள் அவதாரங்கள்’ அல்ல...அசல் மனிதர்களே!

கீழ்க்காணும் சம்பவம்  ஏதோவொரு பருவ இதழில் எப்போதோ வெளியானது. நெஞ்சின் அடியாழத்தில் பதிந்துவிட்ட அதனை இப்போது உங்களுடன் பகிர்கிறேன்.

‘கோடம்பாக்கம் லட்சுமி’ என்பவர் இதழுக்கு அளித்த பேட்டி வாயிலாக அறிந்த சம்பவம் இது.


‘லட்சுமி’யின் மகன் பாஸ்கருக்குச் சிறிய வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவும் குணம்  அதிகம். அக்கம்பக்கத்தவர்க்கு ஏதும் அவலம் நேர்ந்தால் கண் கலங்குவான். பெயிண்டிங் & எலக்ட்ரிகல் வேலை செய்பவன். எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பான்.

பாஸ்கரின் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி கோடம்பாக்கம் பம்பிங் ஸ்டேசன் இருந்தது. அன்று மாலை ஐந்து மணி சுமாருக்கு பம்பிங் ஸ்டேசன் சாக்கடைக் கிணற்றில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள்,  விஷ வாயு தாக்கி மயக்கமுற்றார்கள். ஒருத்தர் எப்படியோ மூச்சை அடக்கி வெளியே வந்துவிட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர், உள்ளே இருந்தவரைக் காப்பாற்ற நினைத்து உள்ளே இறங்க, அவரும் மயக்கமடைந்தார்.

அப்போது பாஸ்கர் வேலை முடிந்து வீடு திரும்பியிருந்தான்.

அவனுக்குத் துணிச்சல் அதிகம். ‘டகார்’னு கிணற்றில் குதித்தான்.

மயக்கமாக இருந்த ஆளைச் சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கினான். மேலே இருந்தவங்க, கயிறு கட்டி அந்த ஆளை மேலே தூக்கிவிட்டார்கள்.
மயக்கம் போட்டுக் கிடந்த இன்னொரு ஆளையும் அலாக்காகத் தூக்கினான் பாஸ்கர். மேலே இருந்தவங்க அவரையும் மேலே தூக்கிக்கொண்டார்கள்.

சின்னப் படிகளில் சிரமப்பட்டு மேலே ஏறி வந்த பாஸ்கர் கால் நழுவிச் சாக்கடைக் கிணற்றில் விழுந்தான். குழாயில் இடித்து மண்டையில் ஆழமான காயம். விஷ வாயுவின் தாக்கம் வேறு. மயக்கம் போட்டான்.

மருத்துவமனைக்குத் தூக்கிப் போனார்கள். காப்பாற்ற முடியவில்லை. ஒரு முழு மனிதனாக வாழத் தொடங்கிய அந்த இளைஞன் மரணத்தைத் தழுவினான்.

சென்னைப் பெருநகர் ‘கழிவு நீர் அகற்று வாரியம்’ பாஸ்கரின் தாய் லட்சுமிக்கு ஏதோ ஒரு தொகை வழங்கியது. 

பேட்டியின் முடிவில்.....

#“பறி கொடுத்த மகனின் உயிருக்கு இந்தப் பணம் ஈடாகுமா?” என்று கேட்டுக் கண் கலங்கினார் லட்சுமி”# என்று படித்ததாக நினைவு.

=============================================================================================


வெள்ளி, 29 மே, 2015

பதிவுலகில் நான் செய்த ‘முதல் பாவம்’!

கடவுளின் ‘இருப்பு’ குறித்துக் கேள்விகள் கேட்பதோ, அவரைச் சாடுவதோ பாவம் என்றால் அந்தப் பாவத்தை நிறையச் சுமந்துகொண்டிருப்பவன் நான். தமிழ்மணத்தில் இணைப்பு[2011]ப் பெற்ற பின்னர் நான் எழுதிய முதல் பதிவு இது. அதாவது, நான் செய்த முதல் பாவம்!                 


 யிர் வாழ்வதற்கு இன்றியமையாத் தேவை உணவு.

ஒவ்வோர் உயிரும் தனக்குரிய உணவை எவ்வாறு பெறுகிறது?

இன்னோர் உயிரைத் தாக்கி அழித்துத்தானே?!

ஓர் உயிர், தாக்கப்படும் போது அது அனுபவிக்கும் வேதனை அளவிடற்கரியது. 

தாக்கப்படும் உயிர் உறும் துன்பமும், தன்னைக் காத்துக் கொள்ள அது நிகழ்த்தும் போராட்டமும், காண்போர் நெஞ்சைக் கலங்க வைப்பவை அல்லவா? 

ஒரு மான், தான் ஈன்ற குட்டிக்குப் பால் தந்து, தன்னை மறந்த சுகத்தில் லயித்துக் கிடக்கும் போது, அசுரப் பசி கொண்ட ஒரு வேங்கையோ அரிமாவோ அதன் மீது பாய்ந்து குரல் வளையைக் கவ்வி, குருதியை உறிஞ்சிக் குடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சைப் பதற வைக்கும்தானே?

இப்படிப் பதற வைக்கும்...நெஞ்சைப் புண்ணாக்கும் அவல நிகழ்ச்சிகள்தான் இவ்வுலகில் எத்தனை...எத்தனை!

நினைத்தாலே நெஞ்சு நடுங்கும்படியான இத்தகைய கொடூர நிகழ்வுகள் நொடிதோறும் நிகழக் காரணமானவர் யார்? 

கடவுள்தானே?

உயிர்கள் செய்யும் முதல் பாவத்திற்கும்[இந்த முதல் பாவமே பல பிறவிகளுக்கும் இன்பதுன்பங்களுக்கும் காரணமாகின்றன என்கிறார்கள்] அடுத்தடுத்த பிறவி[?]களில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கும் கடவுளே காரணமாகிறார்!

“உயிர்களைத் தீங்கு செய்யத் தூண்டுவது கடவுளல்ல; அதைச் செய்வது ஒரு தீய சக்தி[சாத்தான்]” என்று  சப்பைக்கட்டுக் கட்டுவது ஆன்மிகவாதிகளின் வழக்கம்.

தீய சக்தி ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதை யார் படைத்தது?
கடவுள்தானே?[படைத்தல் அவருக்கு மட்டுமே சாத்தியமானது]

அவ்வாறாயின்.............................................

தீய சக்தி கடவுளால் படைக்கப்பட்டு அவர்தம் ஆசியுடன் கடமை ஆற்றுகிறதா?

அல்ல எனின்.......................................

தானாகத் தோன்றிய, அல்லது கடவுளுக்குப் போட்டியாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கிற தீய சக்தியை அழிக்கும் முயற்சியில் கடவுள் ஈடுபட்டிருக்கிறாரா?

அவருக்கும் அந்தச் சக்திக்கும் இடையே போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதா? 

அந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும்?

இருவரில் ஜெயிக்கப் போவது யார்?

ஒருவேளை..... வெற்றி தீய சக்தியின் பக்கம் என்றால், அப்புறம் அதுவேதான் கடவுளா?

அதைத்தான் உயிர்கள் வழிபட நேருமா?

அப்புறம் கடவுள்?!

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கேள்விகள் கேட்கலாம்தான். யாரிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என்பதுதான் புரியவில்லை!

*****************************************************************************************************************************************************









புதன், 27 மே, 2015

‘அவனா இவன்?’.....அன்று அண்ணா சொன்ன குட்டிக்கதை!

த்தாலி நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியன். அவன் கிறிஸ்து மார்க்கத்தைச் சேர்ந்தவன். உலகமெல்லாம் கிறிஸ்துவ மதம் பரவ வேண்டும்; ஓவியக்கலை வளர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை எல்லாம் ஓவியமாக வரைந்தான்.

பலவற்றை ஓவியமாக்கிய பிறகு, ஏசுநாதருடைய அருள் ஒழுகும் கண்கள் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை வரைய வேண்டும் என்னும் ஆவல் ஏற்பட்டது.

பல குழந்தைகளின் முகங்களைப் பார்த்தான். எந்தவொரு குழந்தையின் முகமும் அவனுடைய கற்பனைக்கு ஏற்றபடி அமையவில்லை.

கடைசியாக, ஓர் ஏழையின் வீட்டில் தவழ்ந்துகொண்டிருந்த குழந்தையின் முகம் அவனுக்குப் பிடித்திருந்தது. அதை மாடலாக வைத்து ஓவியத்தை வரைந்து முடித்தான்.

ஏசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் என்பவனையும் படமாக வரைய நினைத்தான் ஓவியன். எங்கு தேடியும் பொருத்தமான முகமுடைய ஆளைக் கண்டறிய இயலவில்லை.

ஒரு கொலைகாரனைப் போய்ப் பார்த்தான். அவன் கண்களில் குரூரம் இருந்தது. யூதாஸின் கண்களில் குரூரம் இல்லை என்பதால், அவனையும் தவிர்த்தான்.

பல வருடங்கள் தேடியும் பலனில்லை.

ஒரு நாள், மெத்த மெலிந்துபோய்ப் பசி நிறைந்த கண்களுடன், பார்வையில் வெறுப்பைக் கக்கும் ஓர் ஆளைச் சந்தித்தான். அவனிடம், “யூதாஸ் படத்துக்கு ஏற்றவன் நீதான்” என்று சொல்லி, அவனை அமர வைத்து ஓவியத்தை வரைந்து முடித்தான்.

“எவ்வளவு தேடியும் பொருத்தமான நபர் கிடைக்கவில்லை. நல்ல வேளை நீ அகப்பட்டாய்” என்று ஓவியன் நன்றி சொன்னபோது, அந்த ஆள் கேட்டான்: “என்னைத் தெரிகிறதா?”

“இல்லையே” என்றான் ஓவியன்.

“நீங்கள் ஏசுவின் குழந்தை முகம் வரைவதற்கு ‘மாடல்’ ஆக இருந்தவனும் நானேதான். குழந்தையாக இருந்தபோது ஏசு போல இருந்த நான் வளர்ந்து ஆளான நிலையில் யூதாஸ் போல ஆகிவிட்டேன்” என்றான் அந்த ஆள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

‘அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100’, பாலாஜி பப்ளிகேஷன்ஸ், சென்னை - 14; இரண்டாம் பதிப்பு, 1964.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஞாயிறு, 24 மே, 2015

சபிக்கப்பட்டவர்களும் சில சாமியார்களும்!

இந்தக் கதையில் ‘செக்ஸ்’ இல்லை; ‘சஸ்பென்ஸ்’ இல்லை; இன்ப முடிவு இல்லை!.....இவையெல்லாம் இல்லாமல் ஒரு கதையா?! ஹி...ஹி...ஹி!!!


மிகுந்த மன வருத்தத்துடன் உரையாடிக்கொண்டிருந்த டாக்டர், “மனம் தளர வேண்டாம். உங்க மகனைத் தினமும் லேசான உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்க. மூச்சுப் பயிற்சி ரொம்ப ரொம்ப முக்கியம். ரத்தக் குழாய்களில் அதிக அளவு பிராண வாயு சேரும்போது ஒட்டு மொத்த உடல் உறுப்பும் பலப்படும்.....

.....மனசுக்குப் பிடிச்ச பாடல்களைக் கேட்கணும்; படங்கள் பார்க்கணும்; இயற்கை அழகை ரசிக்கணும்....

.....பயத்துக்கு இடம் தரவே கூடாது. இருக்கிற கொஞ்சம் வாழ்நாளையும் அது விழுங்கிடும். அளவு கடந்த தன்னம்பிக்கை வேணும்.  ‘நான் வாழ்வேன். நீண்ட நாள் வாழ்வேன்’னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருக்கணும். அப்படிச் சொல்லிட்டு ஆக்ரோஷத்தோட சத்தம் போட்டுக் கத்தினாலும் தப்பில்ல. மன இயல் ரீதியா இந்த முயற்சியில் ஜெயிச்சு உயிர் பிழைச்சவங்க இருக்காங்க” என்று ஆணித்தரமான குரலில் வலியுறுத்தினார் செல்வராசுவிடம்.

டாக்டர், தன்னைத் தேற்றுவதற்காகவே இப்படிச் சொல்கிறார் என்று நினைத்தார் செல்வராசு. அவரின் அறிவுரையைப் புறக்கணித்தார்.

மகனின் உடல்நிலையை விசாரிக்க வந்த சொந்தபந்தங்களிடம், மனம் உடைந்து போய், “எல்லாம் நான் செய்த பாவம்...என் தலைவிதி...என்று ஏதேதோ புலம்பித் தீர்த்தார்.

நண்பர் ஒருவர், கடவுளின் அவதாரம் என்று சொல்லித் திரியும் உலகறிந்த ஓர் ஆன்மிகப் பிரச்சாரகரின் பெயரைச் சொல்லி, “அவரின் அருட்பார்வை பட்டால் தீராத நோய்கூடத் தீர்ந்து போகும். அவர் கரம் பட்டால் போன உயிரும் திரும்பி வரும். உன் மகனை அந்த மகானிடம் அழைச்சிட்டுப் போ” என்றார்.

“அவருடைய ஆசிரமம் ரொம்பத் தொலைவில் இருக்கு. வாடகைக் காரில்தான் போகணும். ரொம்பச் செலவாகும். இருந்த பணமெல்லாம் எற்கனவே செலவு பண்ணிட்டேன்.” குரலில் கனத்த சோகம் பொங்கச் சொன்னார் செல்வராசு.    
“கடன் வாங்கு” என்றார் நண்பர்.

கடனுக்கு அலைந்து, கணிசமான தொகை சேர்ந்ததும், மகனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார் செல்வராசு.

உரிய கட்டணம் செலுத்தி, சில நாட்கள் காத்திருந்த பிறகு, அந்த ‘அவதாரி’யைத் தரிசிக்கும் ‘பேறு’ கிடைத்தது.
எட்ட இருந்தே தன் அருட்பார்வையால் அவருக்கும் அவர் மகனுக்கும் அந்த மகான் ஆசி வழங்க, அவரது சீடர் ஒருவர், “இங்கேயே தங்கியிருந்து தியான வகுப்புகளில் கலந்துக்கணும். சுவாமிகளின் ஆன்மிகச் சொற்பொழிவுகளைத் தவறாம கேட்கணும்” என்று நெறிப்படுத்தினார்.

அவர் சொன்னபடியெல்லாம் செய்தார் செல்வராசு. பலன் இல்லை. மகனின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை; பின் இறக்கமே தென்பட்டது.

ஒரு சீடரை அணுகி, “சாமி, என் மகனைத் ’தொட்டு’ ஆசீர்வாதம் பண்ணுவாரா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார். 

"அதுக்குத் தனியா பணம் கட்டணும்.”

கட்டினார் செல்வராசு.

மகனின் முன்னந்தலையைத் தொட்டு, “கடவுள் கருணை காட்டுவார். கவலைப் படாதே” என்று அவதாரம் அருள் வாக்கு நல்கிய போது செல்வராசு மெய்சிலிர்த்தார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகியது!

ஆயினும் என்ன, அடுத்த சில நாட்களிலேயே அவர் மகன் மரணத்தைத் தழுவினான்.

கதறி அழுதவாறு, மகானிடம் சொன்னார்: “என் மகன் என்னைத் தவிக்க விட்டுப் போய்ட்டான் சாமி.”

“வருத்தப் படாதே. நல்லதே நடந்திருக்கு. உன் மகனின் பொய்யுடம்புக்குத்தான் அழிவு. அவனுடைய மெய்யுடம்பு ஆன்மாவைச் சுமந்து ஆண்டவனின் திருவடியைச் சென்றடையும். இது எம் தரிசனத்தால் நேர்வது. உன் மகன் கொடுத்துவைத்தவன்” என்றார் அந்த ஆன்மிகச் செம்மல்.

”நன்றி பகவானே.” நெடுஞ்சாண்கிடையாக சாமியாரை விழுந்து கும்பிட்டுவிட்டு, மகனின் சடலத்துடன் ஊர் திரும்பினார் செல்வராசு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செவ்வாய், 19 மே, 2015

காதலுக்கு ஒரு கும்பிடு! [கலக்கல் ‘புதிர்’க் கதை]

பருவ வயதில் அனைத்துப் பெண்களும் அழகிகளே. இந்தக் கதையின் நாயகி அழகு குறைந்தவாளாகச் சித்திரிக்கப்படுவது 100% கற்பனையே!


ந்தக் கல்லூரி வளாகத்தின் வடக்குத் திசையில், சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த புங்க மரத்தடியில் குப்புசாமி காத்திருந்தான்.

முந்தைய தினம் ரதிரேகாவிடம் தந்த காதல் கடிதத்திற்கு   அன்று பதில் கிடைக்கும் என்று நம்பினான். காயா, பழமா? நாணயத்தைச் சுண்டிவிட்டு, பூவா தலையா பார்த்துக்கொண்டிருந்தான் குப்புசாமி.

ரதிரேகா! எவ்வளவு அழகான பெயர்!
அந்தக் கல்லூரியில் படிக்கும் அத்தனை குமரிகளுக்கும் அவரவர் அழகுக்கேற்ப மதிப்பெண் போட்டு, நீண்ட பட்டியல் தயாரித்து, நாள் கணக்கில் யோசித்து இந்த ரதிரேகாவைத் தேர்ந்தெடுத்தான் குப்புசாமி. அவளை நினைத்து உருகுவதாக அட்டகாசமான ஒரு காதல் கடிதம் தீட்டினான்.

ஆய்வுக்கூடத்தில், மற்றவர்கள் தத்தம் கருமமே கண்ணாய் இருந்தபோது, ஓசைப்படாமல் அவள் கையில் கடித்தத்தைத் திணித்து, “நாளை பகலுணவு இடைவேளையில் உனக்காகப் புங்க மரத்தடியில் காத்திருப்பேன்” என்று அவன் கிசுகிசுத்தபோது, அவள் பார்த்த பார்வை இருக்கிறதே, அப்பப்பா! அப்போதே முக்கால் கிணறு தாண்டிவிட்டதாக நினைத்தான் குப்புசாமி.

குப்புசாமி தப்பு வழியில் போகிற பையன் அல்ல; தானுண்டு தன் படிப்புண்டு என்றுதான் இருந்தான். வயதுக் கோளாறு காரணமாகக் கொஞ்ச காலமாய்க் கன்னியரைப் பற்றிய நினைப்புக்கு மனதில் இடம் தந்துவிட்டான்.

அந்த ஆண்டுதான் கல்லூரியில் காலடி வைத்த வேலுச்சாமி, “இருபத்தொரு வயதில் பதினேழு பேருக்குக் காதல் கடிதம் எழுதிட்டேன்; பதினெட்டாவதா ஒருத்திக்கு எழுதப்போறேன்” என்று தம்பட்டம் அடித்தது, குப்புசாமிக்குள் அடங்கிக் கிடந்த காதல் பிசாசை உசுப்பிவிட்டுவிட்டது.

தன் வகுப்புத் தோழி மோகனாவுக்கு மட்டும் முப்பத்தேழு ‘மோக மடல்கள்’ தீட்டிவிட்டதாக முரளிமோகன் பீற்றித் திரிந்தது இவனுக்குள் ‘காதல் பித்தம்’ சுரக்கக் காரணமாய் அமைந்துவிட்டது.

கையில் விரித்துப் பிடித்த கடிதமும் கழுத்தில் உயர்த்திவிட்ட காலருமாக, “சரிதா என் காதலை ஏத்துகிட்டா. என்னை உயிருக்குயிரா காதலிக்கிறா” என்று சொல்லிச் சொல்லி செல்வராசு கர்வப்பட்டது, ‘நானும் காதலிக்கப்பட மாட்டேனா?’ என்ற ஏக்கத்தை இவனுக்குள் வளரச் செய்துவிட்டது.

காதல் சுழலில் சிக்கிய நண்பர்களின் கதைப்பும் அளப்பும் இவன் உள்ளத்தில் பெரும் உணர்ச்சிப் போராட்டத்தை உண்டுபண்ணிவிட்டன.

குப்பு தீவிரமாக யோசித்தான். தானும் காதலித்துப் பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தான்; ரதிரேகாவுக்குக் காதல் கடிதம் தந்தான்; புங்க மரத்தடியில் காத்திருந்தான்.

அதோ...தோழியர் குழாமிலிருந்து விடுபட்டுப் புங்க மரத்தைக் குறி வைத்து விரைந்து வந்துகொண்டிருப்பது.....ரதிரேகாவேதான்!

அவளின் ஒரு கையில் படபடத்துக்கொண்டிருக்கும் அந்தக் காகிதம்? இவனுக்கு அவள் தீட்டிய தீஞ்சுவை மடலோ?!

இதோ....குப்புவைத் தொட்டுவிடும் தூரத்தில் ரதிரேகா. குப்புசாமியின் நெஞ்சில் அதீத படபடப்பு! “ரதி...அது வந்து...” என்று ஏதோ சொல்ல முயன்றான்.

அதற்குள், ரதிரேகா தன்னிடமிருந்த கடிதத்தைக்[குப்பு எழுதியதுதான்] கசக்கிச் சுருட்டி, “இந்த மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?” என்று சொல்லி இவன் முகத்தில் அதை வீசி அடித்துவிட்டு, வந்த வேகத்தில் திரும்பிப் போனாள்.

குப்புசாமி லேசான அதிர்ச்சிக்கு ஆளானான். சுதாரித்துக்கொண்டு, சில நொடிகளில் இயல்பு நிலைக்குத் திரும்பினான்.

இவன் முகத்தில் ஏமாற்றம் சிறிதுமில்லை. அங்கு மகிழ்ச்சி முகாமிட்டிருந்தது.

“அடேய் குப்பு, அழகுக்கு மதிப்பெண் போட்டு நீ தயாரித்த பட்டியலில் இந்த ரதிரேகா கடைசி ஆள். ஒரு சோதனை முயற்சியாக இவளைத் தேர்ந்தெடுத்துக் கடிதம் கொடுத்தாய். இவளே உன்னை நிராகரித்துவிட்டாள் என்றால், வேறு எவளும் உன்னைச் சீந்தப் போவதில்லை. இனியும் காதல் கத்தரிக்காய்னு மனசு கிடந்து தவிக்காது. ‘என்னையும் ஒருத்தி காதலிப்பாளோ?’ என்ற எதிர்பார்ப்புக்கு இனி இடமில்லை.....

நிம்மதியாய்ப் படி. உயிரைக் கொடுத்துப் படி. நிறையச் சாதிக்கணும்; சம்பாதிக்கணும்; அப்பா பட்ட கடனை அடைக்கணும்; அம்மாவுக்கு நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியாய் வைச்சிக்கணும்; தம்பி தங்கைகளை முன்னுக்குக் கொண்டுவரணும்.....

‘இந்த மூஞ்சிக்குக் காதல் ஒரு கேடா?’ன்னு கேட்டா இல்லையா, இந்த மூஞ்சியை வைச்சிகிட்டு லட்சம் லட்சமாய்ச் சம்பாதிச்சிடு குப்பு. அப்புறம் பாரு, இந்த ரதிரேகா என்ன, உன்னைக் கட்டிக்கத் தேவலோகத்து ரதியே வரிசையில் நிற்பா” என்று சொல்லி, தன்னைதானே உற்சாகப்படுத்தியபின் தரையில் அமர்ந்து புத்தகம் விரித்துப் படிக்கலானான் குப்புசாமி.

*****************************************************************************************************************************************************


ஞாயிறு, 17 மே, 2015

‘ஆத்மா’ இருப்பது உண்மையா? புத்தரின் பதில்!

சமர்ப்பணம்: அண்மைக் காலங்களில் நூற்றுக்கணக்கில்[???] தற்கொலை புரிந்து, வான வெளியில் ஆவிகளாய், பூதங்களாய், பேய்களாய்  அலைந்துகொண்டிருக்கும் அப்பாவித் தொண்டர்களுக்கு!!!
“ஆத்மா சாவதில்லை” என்கிறார்கள்.

நம் எண்ணக் கூட்டங்களும் அனுபவங்களும் ஆத்மாவில் பதிவாகின்றனவா? இவை ஒன்று திரண்டு ஒரு நூல்பந்தைப் போல ஆகி, மனிதன் சாகும்போது மனித உடம்பிலிருந்து பிரிந்துவிடுகிறதா?

பிரிந்து எங்கே செல்கிறது? அந்தரத்தில் சுற்றி அலைந்துவிட்டு, என்றோ ஒரு நாள் வேறொரு உடம்புக்குள் புகுகிறதா? இதற்கான காலக்கெடுவெல்லாம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா?

இன்னொரு உடம்புக்குள் அது புகுவது எப்படி? ஏன் புகுகிறது?

நம் அறிவியல் இதற்கெல்லாம் விளக்கம் தரவில்லை. ஞானிகளும் யோகிகளும்[சொல்லப்படுகிறவர்கள்]தான் இது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

மெய்யறிவு பெற்ற புத்தரைக் கேட்போம்.

அவர் சொல்கிறார்: “நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பு பாய்ந்த ஒருவன், புண்ணைக் குணப்படுத்துவதற்கு மருத்துவரை அணுகாமல், ‘இது எங்கிருந்து வந்த அம்பு? வடக்கிலிருந்தா, தெற்கிலிருந்தா? இதை எய்தது யார்? அவர் உயரமானவரா, குள்ளமானவரா? கறுப்பனா, வெள்ளையனா?’ என்றிவ்வாறு விசாரித்துக்கொண்டிருந்தால் விடை கிடைப்பதற்குள் அவன் இறந்துவிடுதல் நிச்சயம். எனவே, சுக வாழ்வுக்குப் பயன்படாத எவை பற்றியெல்லாமோ யோசித்துக்கொண்டிராமல் நிம்மதியாய் வாழ்ந்து முடிப்பதற்கான வழிகளைத் தேடுவோம். இதுவே அறிவுடை ஆகும்”

=============================================================================================

நன்றி: டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி. நூல்: ‘எண்ணங்கள்’, 31 ஆம் பதிப்பு, 1995; கங்கை புத்தக நிலையம், சென்னை.]




வெள்ளி, 15 மே, 2015

‘லக் சூ ரா உச் கே நீச், லக் சந் ரா உச் கே உச்’..... இவற்றிற்கு என்ன பொருள்?

ஜோதிடர்கள், நம்மை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குக் கையாளும் ‘குழூக்குறிகள்’ இவை. இவற்றைப் பயன்படுத்தித்தான் ‘அவர்கள் சொல்லுவதெல்லாம் உண்மையே’ என்று  நம்ப வைக்கிறார்கள். ஜோதிடர்கள் செய்யும் இந்தக் கூட்டுச் சதியை அம்பலப்படுத்துகிறது  சு.மகேந்திரன் ​MA., M.Phil., (PhD) என்பார் எழுதிய ‘அறிவியல் பார்வையில் ஜோதிடம்’https://docs.google.com/document/d/1SM2FGK...M/preview என்னும் அறிவியல் கட்டுரை. படியுங்கள்.
#முன்னுரை:  
 ​கல்வி நிலையங்கள் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கத் தவறிவிட்டனஅறிவியல் வளர்ச்சியையும் மிஞ்சும் அளவிற்கு மூடநம்பிக்கைகள் அறிவியல் முலாம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளனஅறிவியல் துறைகளில் பட்டங்கள் பெற்றவர்களில் பலரும்கூட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பதைக் காண முடிகிறது

அறிவியல் துறை வளர்ச்சி பெற்று மண்ணையும் விண்ணையும் அளந்து பகுத்தாய்ந்துவரும் தற்காலத்திலும்சோதிட நம்பிக்கை நிலைப்பு பெற்று வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டுஅறிவியல் பார்வையில் சோதிடம் பற்றி ஆராய்வது மிகவும் தேவையானதாகும். 
   
பழங்காலத்தவர்கள் கோள்களை எப்படிக் கண்டுபிடித்தனர்
 ​
வானத்தில் விண்மீன்கள் இடம்பெயராமல் நிலையாக ஒரே இடத்தில் 
காட்சியளிப்பவைவிண்மீன்களைப் போன்றே தோற்றமளிக்கும் சில விண்பொருள்கள்(நகரும் விண்மீன்கள்ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வதைக் கண்டனர்அவற்றைக் கோள்கள்(கிரகங்கள்எனப் பெயரிட்டழைத்தனர்இந்தக் கோள்கள் பொதுவான விண்மீன்களைக் காட்டிலும் சற்றுப் பெரியவையாகக் காட்சியளிப்பதால் அவற்றை ஆண்டுக்கணக்கில் உற்றுநோக்க அவர்களுக்கு எளிதாக இருந்தனமற்ற விண்மீன்களைப் போன்றே சூரியனும் ஒரு விண்மீன்தான்எனினும் புவி சூரியனைச் சுற்றுவதால் புவியிலிருந்து பார்க்கும் போது சூரியன் ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வது போன்று தோன்றுவதால் சூரியனையும் ஒரு கோள் என்றனர்சந்திரன் புவியின் துணைக்கோள் என்றாலும் அதுவும் புவியிலிருந்து நோக்கும்போது இடம்பெயரும் வண்பொருள் என்பதால் அதனையும் கோள் என்றனர்ஆக புவியிலிருந்து பார்க்கும்போது கண்ணுக்குத் தெரிந்த இடம்பெயரும் விண்பொருள்களைக் கோள்கள் (கிரகங்கள்என்றனர்

சோதிடம் எப்படி உருவானது
 ​மனிதன் காலங்காலமாக வானத்திலுள்ள விண்மீன்களையும் கோள்களையும் 
பார்த்து வருகிறான்அப்போது பூமியில் தற்செயலாக சில நிகழ்வுகள் உண்டாகின்றன
சூரியன்சந்திரன்கோள்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க விண்மீன் கூட்டங்களுக்கு நேராக இருந்த போது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நடந்தது என்ற தற்செயல் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டுஅதே போல அந்த இடங்களில் அந்தக் கோள்கள் இருக்கும்போது அந்த நிகழ்வு நடக்கும் என்ற கற்பனையால் உருவானதுதான் சோதிடம் ஆகும்அதாவது சூரியன்சந்திரன்கோள்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க விண்மீன் கூட்டங்களுக்கு நேராக இருந்த போது பிறந்து வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுஅதே போல அந்த இடங்களில் அந்தக் கோள்கள் இருக்கும்போது பிறந்தவர்களின் வாழ்க்கையும் இருக்கும் என்ற கற்பனையால் சோதிடம் உருவானதுவிண்வெளி நிகழ்வுகளை நம்பிக்கையின் அடிப்படையில் மனித வாழ்க்கையின் நன்மை தீமைகளோடு தொடர்புபடுத்திக் கற்பனை செய்துகொண்டனர்

மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு வானில் வலம்வரும் சூரியன் சந்திரன் 
நிகழ்வுகளும்நகர்வுகளும் காரணம் எனக் கருதினர்வானில் சூரியன்சந்திரன் மற்றும் தெரிந்த சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி மனிதனின் பிறப்புவளர்ப்புகல்விதிருமணம்குழந்தைப்பேறுகெட்ட நிகழ்வுகள் போன்றவற்றை கணிக்கத் தொடங்கினர்பின் அதுவே ஒரு துறையாக உருவெடுத்து வளர்ந்தது.

சோதிடத்தின் பின்னணி1
  
வானியலும் சோதிடமும்
 “வானியல் (​Astronomy​என்பது விண்பொருட்கள் (அதாவது ​இயற்கைத் 
பேரடைகள்பற்றியும்அவற்றின் ​இயற்பியல், ​வேதியியல், ​கணிதம் மற்றும் 
படிப்படியான வளர்ச்சி பற்றியும்மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை உற்றுநோக்குவதிலும்விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும்2.  

பழங்காலத்தவர்களின் வானியல் சிந்தனையும்கோள்களின் நகர்வு பற்றிய கணக்கியல் சிந்தனையும் வியக்கத்தக்கவை. “​வானியல் (ASTRONOMY) என்பது வேறுசோதிடவியல் (ASTROLOGY) என்பது வேறுஇரண்டும் ஒன்றல்லமுன்னது அறிவியல்பின்னது மூடவியல் ஆகும்அதாவது போலி அறிவியல் ஆகும் (PSEUDO SCIENCE)”3. வானியல் சிந்தனையோடு கலந்துவிட்ட மூடநம்பிக்கைதான் சோதிடம். ​
ஆனால் இரண்டுமே கோள்களையும் விண்மீன்களையும் அடிப்படையாகக் கொண்டவைகோள்களின் நகர்வையும், ​இருப்பிடத்தையும் உற்றுநோக்குவதன் மூலமாகவும்கணக்கீடுகள் மூலமாகவும்கருவிகள் மூலமாகவும் கண்டறிந்து சொல்வது வானியல்வானியல் கணக்கீடுகளைப் பயன்படுத்திபிறந்த நேரத்தில் கோள்கள் எந்தெந்த விண்மீன் கூட்டங்களுக்கு நேராக இருந்தன என்பதைக் கொண்டு தனிமனிதர்களின் எதிர்காலத்தைச் சொல்ல முடியும் என்று சொல்வது சோதிடம்எடுத்துக்காட்டாக, 29 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை வருவதைக் கணக்கிட்டுச் சொல்வது வானியல்அமாவாசையில் பிறந்தவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்வது சோதிடம்சூரியக் கிரகணம்சந்திரக் கிரகணம் ஆகியவை எப்போது தோன்றும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்வது வானியல்தான்வானியலையும்சோதிடத்தையும் ஒன்றெனக் கருதிக் குழப்பிக்கொள்ளக் கூடாது4
பஞ்சாங்கமும், சாதகக்குறிப்பும் வானியல் கணக்கீடுகளையும், சோதிட 
மூடநம்பிக்கைகளையும் ஒருங்கே கொண்டுள்ளவை ஆகும். 


சோதிடம் என்பது அறிவியலா
 ​
அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக 
அறிவடிபடையில் அறிவதுஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்துநேர்பட நிகழ்வுகளைத் துல்லியமாய்ப் பார்த்துதரவுகளைப் பெற்றுபலமுறை பரிசோதித்து முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறைஇதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு உருவாக்கப்படும்சோதிடம் அறிவியல் அணுகுமுறைப்படி நிறுவப்பட முடியாததுகாரணம் அதற்கு அறிவியல் அடிப்படை கிடையாது5சோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் நம்பிக்கையின் அடிப்படையிலும்,ஊகத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டவைஅவை பரிசோதனைக்கு உட்படுத்தி அறிவியல் முறையில் ஆராய்ந்து நிறுவப்பட்ட ஆய்வு முடிவுகள் அல்லஎனவே சோதிடம் என்பது அறிவியல் அல்லஅது போலி அறிவியல்அதாவது மூடநம்பிக்கை 
ஆகும்

சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் சோதிடத்தில் சேர்ந்து கொண்டனஎனினும் 
துன்பப்படும் வேளையில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தந்துசில மனிதர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்கும் ஓர் உளவியல் மருத்துவம் போலச் சோதிடம் உள்ளது"கோள்களின் கதிர்வீச்சு எல்லா உயிரினங்களின் நடத்தையிலும், வளர்ச்சியிலும் தாக்கத்தைச் செலுத்துகிறது" என்பது ஆழமான, நுட்பமான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது ஆகும். 
  
சோதிடத் தொழில்

நம் பிரச்சினைகளுக்கு யாராவது வழிகாட்டமாட்டார்களாஉதவிக்கரம் 
நீட்டமாட்டார்களாஎன்ற பரிதவிப்பிலும்நம் வெற்றி தோல்வி நம் கையில் இல்லையாரோதான் காரணம் என்ற தன்னம்பிக்கைக் குறைவாலும்மக்கள் சோதிடர்களை நாடிச் செல்கின்றனர்சோதிடர்கள் தங்களிடம் வருபவர்களின் மனநிலை அறிந்து அதற்கேற்ப ஆறுதலும்அவர்களுக்குத் தற்காலிக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பேச்சுத்திறமையால் ஏற்படுத்திஅவர்களது இயலாமையைப் பயன்படுத்திப்பரிகாரம் ஏதாவது சொல்லிப் பணம் சம்பாதிக்கப் பயன்படும் தொழிலாகச் சோதிடம் உள்ளது6
 சோதிடர்கள் தாம் கூறும் குறியைக் குறிகேட்பவர் நம்ப வேண்டும் என்பதற்காகச் சாதகரின் உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்பெற்றோரின் உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்பாட்டன் பாட்டி முதலியோர் உயிருடன் உள்ளனராஇறந்துவிட்டனராபோன்ற விவரங்களையும்வாழ்க்கையில் நடந்து முடிந்த சில இன்பதுன்ப நிகழ்வுகளையும் மிகச் சரியாகச் சொல்வர்அந்தக் குறிகேட்பவரோ இந்தச் சோதிடர் சொல்வது அத்தனையும் மிகச் சரியாக உள்ளதே எனக் கருதிமிகவும் வியந்துபோய் அந்தச் சோதிடரைக் கடவுள் போலவே நம்பிவிடுகிறார்அது எப்படி என்றால்அந்தக் குறிகேட்பவர் ஏற்கெனவே பல சோதிடர்களை அணுகியிருப்பார்அந்தச் சோதிடர்கள் தந்திரமாக தமது பேச்சுத் திறமையால் குறிகேட்பவரின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திஅவரின் வாயைக் கிளறி அறிந்துகொண்ட விவரங்களைச் சாதகக் குறிப்பின் ஒரு பகுதியில் ​துருவக் கணிதம் அல்லது வள்ளுவர் கணிதம் என்ற தலைப்பிட்டோ, தலைப்பிடாமலோ சோதிடர்களுக்கு மட்டுமே புரியும்படியான எண்கள் மற்றும் இரகசிய எழுத்துக்கள் மூலமாக (அதாவது குழூஉக்குறி மூலமாக) குறித்துவிடுவர். அல்லது சாதகரின் வாழ்க்கைப் பின்னணியை நன்கறிந்த உள்ளூர் சோதிடர் அவற்றை இரகசிய எழுத்துக்கள் மூலமாக சாதகக்குறிப்பில் குறித்துவிடுவார். அவற்றைப் பார்த்துதான் பின்னர் சந்திக்கும் சோதிடர்கள் நடந்து முடிந்த விவரங்களைச் சரியாகக் கூறிவிடுகின்றனர்.  

எடுத்துக்காட்டாக, 
     லக் சூ ரா உச் கே நீச், 
     லக் சந் ரா உச் கே உச் 
என்பதன் பொருள்: லக்-லக்கினம்-சாதகர், சூ-சூரியன்-தந்தை, சந்-சந்திரன்-தாய், 
ரா-ராகு-பாட்டன், கே-கேது-பாட்டி, உச்-உச்சம்-உயிருடன் உள்ளார், 
நீச்-நீச்சம்-இறந்துவிட்டார். அதாவது, சாதகருடைய தந்தைவழி பாட்டன் உயிருடன் 
உள்ளார், பாட்டி இறந்துவிட்டார். சாதகருடைய தாய்வழி பாட்டனும் உயிருடன் உள்ளார், 
பாட்டியும் உயிருடன் உள்ளார் என்பது மேற்கண்ட குழூஉக்குறி எழுத்துக்களின் 
பொருளாகும். 

முடிவுரை: 
 ​ஒன்றை அதன் உண்மைத் தன்மைக்கு எதிராகச் சரி என்றோ அல்லது பலன்களுக்கு எதிராகப் பலன் தரும் என்றோ நம்புவதை மூடநம்பிக்கை எனலாம்# 
****************************************************************************************************************************************************
முனைவர் சு.மகேந்திரன் அவர்களுக்கு நன்றி.
கட்டுரையை, உள்ளவாறே பதிவு செய்திருக்கிறேன். திருத்தம் ஏதும் செய்யவில்லை.