தேடல்!

மனிதர்களின் ஆறறிவுக்கும் மேலான பேரறிவு உடையோனே கடவுள் என்கிறார்கள். பேரறிவுக்கும் மேலான பெரும் பேரறிவு இருக்கும்தானே?!

May 31, 2015

நமக்குத் தேவை ‘கடவுள் அவதாரங்கள்’ அல்ல...அசல் மனிதர்களே!

கீழ்க்காணும் சம்பவம்  ஏதோவொரு பருவ இதழில் எப்போதோ வெளியானது. நெஞ்சின் அடியாழத்தில் பதிந்துவிட்ட அதனை இப்போது உங்களுடன் பகிர்கிறேன்.

‘கோடம்பாக்கம் லட்சுமி’ என்பவர் இதழுக்கு அளித்த பேட்டி வாயிலாக அறிந்த சம்பவம் இது.


‘லட்சுமி’யின் மகன் பாஸ்கருக்குச் சிறிய வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவும் குணம்  அதிகம். அக்கம்பக்கத்தவர்க்கு ஏதும் அவலம் நேர்ந்தால் கண் கலங்குவான். பெயிண்டிங் & எலக்ட்ரிகல் வேலை செய்பவன். எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பான்.

பாஸ்கரின் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி கோடம்பாக்கம் பம்பிங் ஸ்டேசன் இருந்தது. அன்று மாலை ஐந்து மணி சுமாருக்கு பம்பிங் ஸ்டேசன் சாக்கடைக் கிணற்றில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள்,  விஷ வாயு தாக்கி மயக்கமுற்றார்கள். ஒருத்தர் எப்படியோ மூச்சை அடக்கி வெளியே வந்துவிட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர், உள்ளே இருந்தவரைக் காப்பாற்ற நினைத்து உள்ளே இறங்க, அவரும் மயக்கமடைந்தார்.

அப்போது பாஸ்கர் வேலை முடிந்து வீடு திரும்பியிருந்தான்.

அவனுக்குத் துணிச்சல் அதிகம். ‘டகார்’னு கிணற்றில் குதித்தான்.

மயக்கமாக இருந்த ஆளைச் சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கினான். மேலே இருந்தவங்க, கயிறு கட்டி அந்த ஆளை மேலே தூக்கிவிட்டார்கள்.
மயக்கம் போட்டுக் கிடந்த இன்னொரு ஆளையும் அலாக்காகத் தூக்கினான் பாஸ்கர். மேலே இருந்தவங்க அவரையும் மேலே தூக்கிக்கொண்டார்கள்.

சின்னப் படிகளில் சிரமப்பட்டு மேலே ஏறி வந்த பாஸ்கர் கால் நழுவிச் சாக்கடைக் கிணற்றில் விழுந்தான். குழாயில் இடித்து மண்டையில் ஆழமான காயம். விஷ வாயுவின் தாக்கம் வேறு. மயக்கம் போட்டான்.

மருத்துவமனைக்குத் தூக்கிப் போனார்கள். காப்பாற்ற முடியவில்லை. ஒரு முழு மனிதனாக வாழத் தொடங்கிய அந்த இளைஞன் மரணத்தைத் தழுவினான்.

சென்னைப் பெருநகர் ‘கழிவு நீர் அகற்று வாரியம்’ பாஸ்கரின் தாய் லட்சுமிக்கு ஏதோ ஒரு தொகை வழங்கியது. 

பேட்டியின் முடிவில்.....

#“பறி கொடுத்த மகனின் உயிருக்கு இந்தப் பணம் ஈடாகுமா?” என்று கேட்டுக் கண் கலங்கினார் லட்சுமி”# என்று படித்ததாக நினைவு.

=============================================================================================