Friday, May 8, 2015

அவள் 'அந்த'த் தொழிலுக்குப் புதுசு![புனைகதையில் ஒரு புரட்சி]

முதல் பார்வையிலேயே கனகா திசை மாறி வந்தவள் என்பதைப் புரிந்து கொண்டான் முருகேசன். தூக்கலான ஒப்பனையும், தூண்டில் போடும் விழி வீச்சும் அவள் விலைமகள்தான் என்பதற்குக் கட்டியம் கூறினாலும், பார்வையில் பதுங்கி வெளிப்படும் ஒருவிதப் பயமும், படபடப்பும் அவள் ‘அந்த’த் தொழிலுக்குப் புதியவள்தான் என்பதை அப்பட்டமாய் எடுத்துரைத்தன.

அவள் பார்வையில் ‘விரசம்’ முலாம் பூசியிருக்கவில்லை. அந்த இளம் விலைமகளுக்குள்ளே ஓர் அப்பாவி இளவட்டப் பெண் அஞ்சி நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பரிதாபப்பட்டான் முருகேசன்.

இவன் கடைக்கு வந்து தேனீர் அருந்திவிட்டு, ஓரங்கட்டி நிற்பது; ஜாடை செய்யும் வாடிக்கையாளருடன் எட்டத் தெரியும் காவிரிப் பாலத்தை ஒட்டிய புதர் மறைவில் 'ஒதுங்குவது’; மீண்டும் கடைக்கு வந்து காத்திருப்பது என்ற அவளின் ஐந்தாறு நாள் நடவடிக்கையைக் கண்காணித்த பிறகு முருகேசன் ஒரு முடிவுக்கு வந்தான்.
அன்று, அவளுடன் பேச்சுக் கொடுத்தான்.

”இத்தனை சின்ன வயசில் இந்தக் கேவலமான தொழிலுக்கு ஏன் வந்தே?”

“அப்பா அம்மா ரெண்டு பேரும் கூலிக்குக் கிணறு தோண்டுறவங்க. ஒரு நாள் மண் சரிஞ்சி அதில் அமுங்கிச் செத்துப் போனாங்க. அனாதையா நின்னேன். தூரத்துச் சொந்தக்காரியான ஒரு கிழவிதான் எனக்கு ஆதரவா இருந்தா. அவளால உழைச்சிச் சம்பாதிக்க முடியல; என்னை இப்படிப் பழக்கி விட்டுட்டா. போன மாசம் செத்துப் போனா” என்றாள் கனகா.

“எவ்வளவு நாளா இந்த அசிங்கத்தில் புரளுறே?”

“ஒரு மாசம் போல.”

“ரேட் எவ்வளவு?”

“கூப்பிடுறவங்ககூட எல்லாம் போயிட மாட்டேன். என் மனசுக்கு நல்லவங்களாத் தெரிஞ்சா மட்டுமே போவேன். ரேட்டுன்னு ஒன்னு இல்ல. அவங்க கொடுக்கிறதை வாங்கிக்குவேன்.”

“ஒரு நாளைக்கு எவ்வளவு தேறும்?”

“நூறு...நூத்தம்பது...இருநூறைத் தாண்டாது.”

சிறிது நேரம் அவள் முகத்தில் எதையோ தேடினான் முருகேசன்; சொன்னான்: “ஒரு நாளைக்கு இருநூறு ரூபா தர்றேன். மூனு வேளையும் சாப்பிட்டுக்கோ. என்னோடவே தங்கிக்கோ. இங்கே நான் மட்டும்தான் இருக்கேன். ஒரு கண்டிசன்..... வழக்கமா செய்யுற ஈனத் தொழிலை விட்டுடணும். சம்மதமா?”

‘சம்மதம்’ என்பதாகத் தலையசைத்தாள் கனகா.

அன்று இரவே அவனுடன் தங்கினாள். அப்புறமும் அது தொடர்ந்தது.

மாதங்கள் சில  கழிந்தன.

ஒரு நாள் இரவு, உறங்கச் சென்ற போது கனகா கேட்டாள்: “கேட்குறேன்னு என்னைத் தப்பா நினைச்சுடாதே. வயிறு காயாம சாப்பாடு போட்டுத் தினம் இருநூறு ரூபாயும் தந்துடறே. ஆனா, இன்னிக்கி வரைக்கும் ஒரு தடவைகூட என்னோட படுக்கலையே, ஏன்?” குரலில் மிதமிஞ்சிய வியப்பு படர்ந்து கிடந்தது.

“காரணத்தோடுதான். நாளை கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் நம்ம கல்யாணம். கல்யாணத்துக்கு அப்புறம்தான் படுக்கிறது, உன்னைப் பாடாய்ப் படுத்துறது எல்லாம்.” விழித்திரையில் குறும்பு வழியக் கண் சிமிட்டினான் முருகேசன்.

கனகா விழித்தாள்; “உனக்கென்ன பைத்தியமா?” என்றாள்.

“சுயபுத்தியோடதான் சொல்றேன்.” வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னான் முருகேசன்.

“நான் கெட்டழிஞ்சவ.”

“நானும்தான். ஏமாந்தவங்க சட்டைப்பையைத் தடவிப் பிழைப்பு நடத்திட்டிருந்தவன் நான். ஒரு நாள் பிடிபட்டேன். என்னிடம் பணம் பறி கொடுத்த ஒரு பெரியவர், அடி உதையிலிருந்து என்னைக் காப்பாத்தி, அவருடைய ஓட்டலில் எனக்கு வேலையும் கொடுத்தார். நாலஞ்சி வருஷம் எந்தத் தப்பும் செய்யாம யோக்கியனா வாழ்ந்து காட்டினேன். ‘உழைச்சி முன்னேறிக்கோ’ன்னு சொல்லி ஐம்பதாயிரம் ரொக்கமும் கொடுத்தார். அதை மூலதனமாக்கித்தான் இந்தக் கடையை நடத்திட்டிருக்கேன்......

.....கெட்டுத் திருந்தினவன் நான். நீயும் கெட்டுப் போனவள். திருந்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன். திருந்திட்டே. இனியும் சுத்தமானவளா உன்னால் வாழ்ந்து காட்ட முடியும். அந்த நம்பிக்கையில்தான் உன்னைப் பெண்டாட்டியா ஏத்துக்க முடிவு செஞ்சேன்” என்றான் முருகேசன்.

கனகா நீர் மல்கும் கண்களால்  தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். விழிகளில் ஆனந்தம் பொங்க அவள் மேனியெங்கும் முத்தங்கள் விதைத்தான் முருகேசன்.

zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

No comments :

Post a Comment

எழுதுகையில், கருத்துப் பிழைகளும் மொழிப் பிழைகளும் நேர்தல் இயற்கை. பிழை காணின், அன்புகொண்டு திருத்துங்கள். இயலாதெனின், பொறுத்தருளுங்கள்.