வெள்ளி, 8 மே, 2015

கடவுளைப் போற்றாத ஒரு ‘புதுமை’ச் சித்தர்![புத்தம் புதிய பதிவு]

சித்தர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கை ‘உள்ளவர்கள்’ என்கிறது வரலாறு. ‘இல்லை’ என்கிறது இந்தச் சிறு கட்டுரை. தவறாமல் படியுங்கள்.


த ஆதிக்கங்களாலும், சாதிப் பிரிவினைகளாலும், மூடநம்பிக்கைகளாலும், புராணக் கட்டுக்கதைகளாலும் பகுத்தறிவு முடக்கப்பட்டிருந்த ஒரு காலக்கட்டத்தில், அவற்றைத் தம் ஆணித்தரமான கருத்துகள் மூலம் தகர்த்தெறியப் பாடுபட்டவர்கள் சித்தர்கள். மனித ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்ட இவர்கள் கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்கள் என்பதே நாம் அறிந்த செய்தி. கடவுளை மறுத்து இயற்கையைப் போற்றிய ஒரு சித்தரும் இம்மண்ணில் வாழ்ந்திருக்கிறார் என்பது நாம்[நான் என்பதே சரியாக இருக்கக்கூடும்] அறியாத அதிசயச் செய்தி.

1976 ஆம் ஆண்டில் தமிழறிஞர் கோவேந்தன் என்பார் பதிப்பித்து வெளியிட்ட நூலில்[‘சித்தர் பாடல்கள்’] ‘லோகாயதர்’ என்னும்  சித்தரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் கடவுள் மறுப்பாளர்.
‘பொருள்களே உண்மையானவை. இப்பொருள்களிலிருந்துதான் ‘உணர்வுகள்’ வெளிப்படுகின்றன  . ‘ஆத்மா’ என்பது மனித அறிவின் துடிப்புதான். [அப்படி ஒன்று தனியாக இல்லை]. இந்தத் துடிப்பு நின்றுவிட்டால் ஆத்மா இல்லாமல் போய்விடும். எல்லாம் கடந்த  நிலையில் ‘கடவுள்’ என்று ஒருவர் இருப்பதாகச் சொல்வது கற்பனையே’ என்கிறார் இந்த லோகாயதச் சித்தர். பாடல்.....

‘பொருளும் இருப்பும் இயற்கையும் முதன்மை-நாம்
போற்றும் உணர்வெண்ணம் இரண்டாம் தன்மை
கருதும்நம் ஆத்துமா அறிவின் துடிப்பு-அதனைக்
கடந்துமே கடவுள் எனல் கற்பனைப் பிடிப்பு’

‘கடவுளை நம்புவதால் பயனேதும் இல்லை. இயற்கைப் பொருள்களை ஆள்வதன் மூலமே நாம் வாழ முடியும். இயற்கையைக் காட்டிலும் மேலானது எதுவும் இல்லை’ என்று கீழ்வரும் பாடல் மூலம் உறுதிபடக் கூறுகிறார் இந்தப் பகுத்தறிவுச் சிற்பி.

‘இயற்கையே மானுடர் வாழ்விற்கு வழியாம்-அவ்
இயற்கையே எண்ணத்தின் மேலான விழியாம்
இயற்கையை வென்றதும் மானுடம்தானே-இவ்
இயற்கைக்கு மேலொன்றும் இல்லை என்பேனே’

‘[பொருள்களில்] மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பதே இயற்கை. அத்தகைய மாற்றத்தால் உருவானவன் மாந்தன். காலப் படிக்கட்டில் பல்வேறு புதுமைகளை இவன் நிகழ்த்திக்கொண்டிருக்கிறான்’ என்னும் பொருள்பட...

‘மாறிக் கொண்டிருப்பது மாளா இயற்கை-தன்
மாற்றத்தில் படைத்தது மாந்தர் இனத்தை
.................................................காலப்படியில்-மனிதன்
எத்தனை புதுமைகள் செய்தான் முடிவில்’

என்னும் பாடலையும் படைத்திருக்கிறார் இவர். [இந்நூலில் மேலும் சில பாடல்கள் இடம்பெற்றுள்ளமை அறியற்பாலது]

நாத்திகரான லோகாயதச் சித்தரை  அறிமுகப்படுத்திய கோவேந்தன் அவர்களுக்குத் தமிழுலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.

=============================================================================================
நன்றி: ‘செம்மலர்’ [ஜனவரி, 1991] பொங்கல் மலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக