செவ்வாய், 30 ஜூன், 2015

குருதி குடிக்கும் கடவுளின் ஆவியும் பண்டைய மதங்களின் விபரீத நம்பிக்கைகளும்!!!

#கடவுளிடம் நம்பிக்கை இழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. உலக மக்கள் தொகையில், நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் கடவுளை நம்புகிறவர்கள் அல்ல#
இன்று உலகில், மிகக் குறைவான மதங்களே உள்ளன.

அவற்றில் குறிப்பிடத் தக்கவை, கிறித்தவம், இந்து, புத்தம், இஸ்லாம், ஜைனம், சீக்கியம், யூதம், ஷிண்டோ, தாவோ ஆகியன.

இந்த மதங்கள் தோன்றுவதற்கு முன்பே, இவை போலப் பிரபலமான பல மதங்கள் இருந்தன. அவை அனைத்தும் செத்து மடிந்துவிட்டன. [‘இறந்து போன மதங்கள்’-ஜோசப் இடமருகு. தமிழில்: த.அமலா, ‘மதமும் பகுத்தறிவும்’, சூலை, 2004].

அவற்றில் ஒன்று..........

அரேபியன் மதம்:

இம்மதம் பற்றிய ஒரு சுவையான தகவல்.....

அரேபியக் கடவுள்கள், பழிவாங்கும் மனப்பான்மை கொண்டவை. ஒருவனை யாரேனும் கொன்றுவிட்டால், கொல்லப்பட்டவனுடைய உறவினர்கள், கொன்றவர்களைப் பழி வாங்க வேண்டும். தவறினால், இறந்தவனின் ஆவி, ஒரு குள்ளனின் வடிவில் வந்து கல்லறையில் அமர்ந்து, “கொலையாளியின் ரத்தம் வேண்டும். அதைக் குடித்தால் மட்டுமே என் தாகம் தீரும்” என்று மிரட்டுமாம்!

இம்மதம் அழியக் காரணமாக இருந்தது, இஸ்லாம் மதம். இஸ்லாமைத் தோற்றுவித்த முகம்மது ஆற்றிய உரைகளின் மூலம்தான் இது பற்றி அறிய முடிகிறதாம்

இம்மதம் போலவே, மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த எகிப்தியன் மதம், கிரேக்க மதம், வைதிக மதம், அத்வைத மதம், விசிஷ்டாத்வைத மதம், திராவிட மதம், கபாலிக மதம், தாந்திரீக மதம் போன்றவையும் காலப் போக்கில் அழிந்து போயின.

தாந்திரீகம், மிகவும் விநோதமானது.

இம்மதம் சார்ந்தவர்கள், சிவலிங்கத்துடன் பெண்ணின் பிறப்பு உறுப்பையும் வழிபடுவார்கள்.

இவர்களுடைய சக்தி வழிபாட்டில், நிர்வாணக் கோலம் கொண்ட ஆணும் பெண்ணும், தங்களைச் சிவன், சக்தி என நினைத்தவாறு உடலுறவு கொள்வார்களாம்!

முகம்மதியர்கள், எகிப்தைத் தாக்கி அழித்த போது, எகிப்தியர்கள் பின்பற்றிய எகிப்தியன் மதம் பூண்டோடு அழிந்ததாக வரலாறு சொல்கிறது.

கிரேக்க மதத்தை அழித்தவர்கள் கிறிஸ்தவர்கள்.

கிரேக்கர்களை வென்ற ரோமானியப் பேரரசர், கிறித்துவ மதத்தை அரசு மதமாக அங்கீகரித்தாராம்.

இவ்வாறு, அழிந்து போன மதங்கள் பற்றி எத்தனையோ சுவையான செய்திகள்; கதைகள் வரலாற்று நூல்களில் பதிவாகியுள்ளன!

இன்றுள்ள மதம்களும்கூடப் பல உட்பிரிவுகளுக்கு இடம் தந்து,  ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு கடவுளின் பெயரால் கணக்கில் அடங்கா உயிர்களைப் பலியிட்ட...இடும் கொடுமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது போன்ற காரணங்களால், மக்கள் மீதான இவற்றின் பிடி தளர்ந்து கொண்டிருக்கிறது.

முன்பு போல், கடவுளின் மகிமை பற்றிய பொய்ப் பிரச்சாரங்கள் எடுபடுவதில்லை.

மக்கள், “ஏன்? எதற்கு? எப்படி?” என்றெல்லாம் கேள்விகள் கேட்கப் பழகிவிட்டார்கள்.

குடும்ப உறுப்பினர்களும் உறவுகளும் தூற்றுவார்களே என்று அஞ்சித்தான் பெரும்பாலோர் கடவுளை வழிபடுகிறார்கள்; கோயில்களுக்குச் செல்கிறார்களே தவிர, மனப்பூர்வமாகக் கடவுளை நம்புவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

“கடவுளின் கிருபையால், ஊமை பேசினார்; முடமானவர் எழுந்து நடந்தார்; மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய் குணமானது” என்பனவாக இட்டுக் கட்டப்படும் பொய்களை அவர்கள் நம்பத் தயாராயில்லை.

“சாகக் கிடந்தவரைப் பிழைக்க வைத்தார் எங்கள் கடவுள்” என்று ஏதாவதொரு மதவாதி சொன்னால், “தேதி குறிப்பிடு. ‘இவர் செத்துப்போவது 100% உறுதி’ என்று மருத்துவர் குழு சான்றளித்த ஒருவரை உன் கடவுளின் அருளால் பிழைக்க வை. இதை  ஊடகங்கள் வழியாக நாங்கள் பார்க்கவும் ஏற்பாடு செய்” என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆதாரபூர்வமாக நிரூபித்துக் காட்டினால் ஒழிய, கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம் என்று எதையும் இனி மக்கள் நம்ப மாட்டார்கள். அவ்வாறு நிரூபிப்பதும் மிக...மிக...மிக.....மிக... நீண்ட...நீண்ட...நீண்ட..... நெடு...நெடு...நெடுங்கால முயற்சிக்குப் பின்னரும் சாத்தியப்படுகிற ஒன்றல்ல.

எனவே, சில நூறு ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து மதங்களும் அழிவைச் சந்திப்பது உறுதி என்கிறார்கள் நடுநிலைச் சிந்தனையாளர்கள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000




ஞாயிறு, 28 ஜூன், 2015

‘தமிழ்நாடு’ மாநிலத்தின் பெயர் மாற்றப்படுமா? எப்போது?

தமிழ்நாடு அரசு குறைந்த விலையில் குடிநீர்ப் பாட்டில்களை விற்கிறது. இதற்கான செலவை அரசுதான் ஏற்கிறது. ஆனாலும், ‘அரசு குடிநீர்’ என்றில்லாமல், ‘அம்மா குடிநீர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வசதி குறைந்த நம் மக்களுக்குக் குறைந்த விலையில் தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் இத்திட்டம் செயல்பட அம்மாவின் அளப்பரிய கருணையே காரணம் என்பதால், ‘அம்மா குடிநீர்’ என்று பெயர் சூட்டியதில் எள்முனை அளவும் தவறு இல்லை எனலாம்.

அம்மா உணவகத்திற்கும் அரசுப் பணம்தான் செலவிடப்படுகிறது என்றாலும், அதன் உருவாக்கத்திற்கும்  அம்மாவின் அன்புள்ளமே காரணம் என்பதால் ‘அம்மா உணவகம்’ என்று அழைப்பதிலும் குறை காண வாய்ப்பே இல்லை.
மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துமாத்திரைகள் வழங்கி வருவது போற்றுதலுக்குரிய புனிதப் பணி என்பதால், ‘அம்மா மருந்தகம்’ என்றழைப்பதும் பொருத்தமானதே.
இனி, புதிதாகத் தொடங்கவிருக்கும் இவை போன்ற நற்பணிகளுக்கும் அம்மா பெயரையே சூட்டுவது தொடரும் என நம்பலாம்.

இவற்றோடுகூட, ஆவின், அரசுப் போக்குவரத்து போன்ற இன்ன பிற துறைகளின் பெயரோடும் ‘அம்மா’ என்னும் பெயரை இணைப்பது வரவேற்கத்தக்கது. அம்மா ஆவின், ‘அம்மா[அரசுப்] போக்குவரத்துக் கழகம், ’ ‘அம்மா[அரசு]மருத்துவமனை’, ‘அம்மா[தமிழ்நாடு] அரசு’.....என்றிப்படி! [அரசின் சாதனைகள் குறித்துப் பேசும்போது, “எனது அரசு” என்று அம்மா அவர்கள் குறிப்பிடுவது அறியற்பாலது].

மக்களின் நல்வாழ்வு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு நல்லாட்சி புரிந்துவரும் அம்மா, தமிழ் மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கவர் என்பதில் மாறுபட்ட கருத்துடையார் எவருமிலர்.

அம்மாவையும், அவரின் அரிய சிறந்த பணிகளையும் என்றென்றும் மறவாதிருக்க, இம்மாதிரி சிறிய சிறிய துறைகளுக்கு / நிறுவனங்களுக்கு அம்மாவின் பெயர் சூட்டினால் மட்டும் போதாது; தமிழ்கூரும் இந்த நம் மாநிலத்துக்கே அம்மாவின் பெயர் சூட்டுதல் ஏற்புடையதாக இருக்கும். எனவே.....

‘தமிழ்நாடு’ என்பதை, ‘அம்மா நாடு’ [தமிழ் வாழ்வதும் வளர்வதும் அம்மாவின் அருளால்தான் என்பதால், தமிழ் உணர்வாளர்கள் வருந்தத் தேவையில்லை] என மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளை  அம்மாவுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களும் தொண்டர்களும் மேற்கொள்ள வேண்டும்.

செய்வார்களா? எப்போது?
அம்மா நாமம் வாழ்க!

=============================================================================================






சனி, 20 ஜூன், 2015

தமிழ் வளர்க்கும் தமிழ்மணத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

சற்று முன்னர்[20.06.2015], தமிழ்மணத்தில் நான் இணைத்த பதிவின் தலைப்பு, ‘பொல்லாத விதியும் ஒரு கவர்ச்சி நடிகையின் உள்ளாடையும்!!!’http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_20.html என்பது. இப்படித் தலைப்பிட்டதற்கான காரணத்தையும் பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறேன். [பல நாட்கள் ஆழ்ந்து சிந்தித்ததன் விளைவு இப்பதிவு; கிஞ்சித்தும் ஆபாசமற்றது]
இதனை இணைத்துக்கொண்டதற்கான அறிவிப்பைத் தமிழ்மணம் வெளியிட்டது. ஆனால், முகப்புப் பக்கத்திலான பதிவுகளின் பட்டியலில் இது இடம்பெறவில்லை.

பதிவின் தலைப்போ அதன் உள்ளடக்கமோ தரமற்றது அல்லது ஆபாசமானது என்று தமிழ்மணம் கருதினால், அப்பதிவுக்கான இணைப்பை நிராகரித்துவிடலாம். அதை விடுத்து, பதிவை இணைத்துக்கொண்டதற்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டுப் பட்டியலில் சேர்க்காமலிப்பது ஏன் என்று புரியவில்லை. என்னுடைய கணிசமான பதிவுகள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

முகப்புப் பக்கம் தவிர்க்கப்பட்டுச் சில மணி நேரங்கள் கழித்துப் பின்வரும் பக்கங்களில் அது தெரிய வருவதில் பெரிதாகப் பயன் ஏதும் விளைவதில்லை.

ஏன் இந்தப் புரியாத நடவடிக்கை?

நேரம் ஒதுக்கி, இது குறித்து விளக்கம் அளிப்பார்களா தமிழ்மணம் நிர்வாகிகள்?
=============================================================================================

பொல்லாத விதியும் ஒரு ‘கவர்ச்சி நடிகை’யின் உள்ளாடையும்!!! [எச்சரிக்கை! நீ..ண்..ட பதிவு]

'விதி'யைப் பற்றி நீங்கள் அறிவீர்களோ இல்லையோ பிரபல 'கவர்ச்சி நடிகை' பூஜாவைப் பூர்ணமாக அறிந்து வைத்திருப்பீர்கள் என்பதில் எள்முனை அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை.

பஞ்சபூதங்களில் ஒன்றான 'காற்று'க்கு, பூஜாவைக் காட்டிலும் பூஜாவின் உள்ளாடையின் மீது ரொம்பவே பித்து.

அன்றொரு நாள், மக்கள் மனங்களில் 'காதலுணர்வு' மலர்ந்துகொண்டிருந்த மாலை மயங்கும் அரையிருட்டுப் பொழுதில், எதோவொரு  திக்கிலிருந்து 'புர்ர்ர்ர்ர்ர்ர்'ரென அசுர வேகத்தில் புறப்பட்ட சூறாவளிக் காற்று, குப்பைகூலங்கள், கூரை வீடுகளின் ஓலைக் கீற்றுகள், தகர டின்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் என்று எதிர்ப்பட்ட அத்தனை பொருள்களையும் வாரி இறைத்தும்  உருட்டியும்  விளையாடியவாறு பயணித்துக்கொண்டிருந்தது.
மொட்டை மாடிகளில் உலர்ந்துகொண்டிருந்த அத்தனை துணிமணிகளையும் ஆகாய வெளியில் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்தவாறு சீறிப் பாய்ந்துகொண்டிருந்தது.

அந்த அசுர வேகப் பாய்ச்சலிலும், பூஜாவின் உள்ளாடை மீது அது கொண்டிருந்த 'மோகம்' காரணமாகவோ என்னவோ, அது கொடியில் தொங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே சிறிது நேரம் தொட்டுத் தடவி ஊசலாட்டி மகிழ்ந்த பின்னர், அதைத் தன்  கரங்களில்  ஏந்தியவாறு அந்தரத்தில் ஆனந்தத் தாண்டவம் புரிந்தது.

அச்செயல், வாயுபகவானின் மறு அவதாரமான தன் தகுதிக்கு இழுக்குச் சேர்க்கும் என எண்ணி, அந்த ஆடையை ஏதோவொரு திசையில் வீசியெறிந்துவிட்டுச் சென்றது.

காற்றுக் கடவுளின் கரங்களிலிருந்து விடுபட்டு அங்குமிங்குமாகச் சிறிது நேரம் அலைக்கழிந்த ஆடையானது நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் வரிசை கட்டியிருந்த மரங்களில் ஒன்றான ஒரு புளிய மரத்தின் பக்கவாட்டுக் கிளையொன்றில் சிக்கி ஊசலாடியது.....

இது ஒரு நிகழ்வு.

இப்போது, இந்த நிகழ்வின் முடிவை மாற்றி ஒரு வினாவை முன்வைக்க இருக்கிறேன்.

'காற்றுக் கடவுளின் கரங்களிலிருந்து விடுபட்டு அங்குமிங்குமாகச் சிறிது நேரம் அலைக்கழிந்த அந்த ஆடை, மரக்கிளையில் சிக்காமல், இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு மனிதரின் முகத்தை  மூடி மறைத்துக்கொண்டது.

நிலை தடுமாறினார் அவர். அங்குமிங்கும் அலைந்து பக்கவாட்டிலிருந்த மரத்தின் மீது மோதியது வாகனம். பலத்த காயங்களுக்கு உள்ளான அந்த மனிதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மக்கள் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

அவர்களில் ஒருவர் சொன்னார்: "பலத்த காத்து வீசணும். அதுல பறந்து வந்த உள்ளாடை முகத்தை மறைக்க, அடிபட்டுச் சாகணுங்கிறது இந்த ஆளோட விதி."

கவனியுங்கள். ஆடை ஒன்று பலத்த காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, ஒரு மரக்கிளையில் சிக்கியது வெறும் நிகழ்வு. அதே ஆடை ஒரு மனிதனின் மரணத்திற்குக் காரணம் ஆனபோது அது ‘விதி’ ஆனது.

விதி?

விதிக்கப்பட்டது...நிர்ணயிக்கப்பட்டது. பெரியவர் இப்படித்தான் சாக வேண்டும் என்று முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதாக நம்மவர்கள் நம்புகிறார்கள். இது சரியா?

மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று[எப்போதும் இருந்துகோண்டே இருப்பதா, ஒரு காலக்கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டதா என்பது யாருக்கும் தெரியாது] வீசுவது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை அது ஒரு நிகழ்வு மட்டுமே; அதாவது, இயற்கை நிகழ்வு.


காற்றானது சூறாவளியாகவோ புயலாகவோ வீசுவதும் குறுக்கிடும் பொருள்களை உருட்டிப் புரட்டிச் சிதைப்பதும் அழிப்பதும் ஒரு தொடர் நிகழ்வு; இயற்கை நிகழ்வு. உயிரற்றவை போலவே உயிருள்ளவையும் அதில் சிக்கிச் சிதையவோ அழியவோ செய்கின்றன. இதற்கு மனிதனும் விதிவிலக்கல்லன்.

பெரு நெருப்பால், பெருக்கெடுத்துப் பாயும் வெள்ளத்தால் உயிர்கள்/ மனிதர்கள் பாதிக்கப்படுவதும் இயற்கையே.

இந்நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலானவை. 

மனித இனத்திற்குப் பாதிப்பு ஏற்படாதபோது இவற்றை வழக்கமான நிகழ்வுகள் என்று  ஏற்றுக்கொள்கிறோம். பாதிப்பு நேர்ந்தால் 'விதி' என்கிறோம்.

வேடிக்கையாக இல்லை!?

கீழ்க்காண்பது, 2013இல் நான் எழுதிய பதிவு. படியுங்களேன்.

ன்ன நேரத்தில், இன்ன இடத்தில், இது இதெல்லாம், இப்படி இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டது விதி.

15.07.2013 பிற்பகல் மணி 04.03க்கு இந்தப் பதிவு எழுதி முடிக்கப்படணும்கிறது இந்த ஒரு நிகழ்வுக்கான விதி.

இதை நான்தான் எழுதணும்கிறது காமக்கிழத்தனாகிய எனக்கென வகுக்கப்பட்ட விதி.

இதை இப்போ நீங்க படிச்சிட்டிருக்கீங்க இல்லியா, இது உங்களுக்கான  [தலை]விதி.

எதிர்பாராம மின்சாரம் ’கட்’ ஆகுது. “அடச் சே...”ன்னு எரிச்சலோட மேசை மேல ஓங்கித் தட்டுறீங்க. அங்கே உட்கார்ந்திருந்த ஒரு ‘ஈ’ நசுங்கிச் செத்துப் போகுது. இது ஈயோட விதி.

“டாக்டர் எஞ்சினீர்னு யார்யாரோ என்னைப் பெண் கேட்டு வந்தாங்க. ஆளு ஹீரோ  மாதிரி இருக்கார்னு இந்த ஆளை ஆசைப்பட்டுக் கட்டிகிட்டேன். இப்போ கல்யாணம் காட்சின்னு போனா கட்டிக்க ஒரு பட்டுப் புடவைகூட இல்ல. ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே சிங்கியடிக்கிறோம். எல்லாம் விதி...என் தலை விதி” என்கிறாள் என் எதிர்த்த வீட்டு அன்னபூரணி. இப்படித் தன் விதியைச் சொல்லிப் புலம்புற அன்னபூரணிகள் எல்லா ஊர்களிலும் இருக்காங்க.

“சென்னைக்குக் கார் எடுத்துட்டுக் கிளம்பினான். ரெண்டு தோசை போடுறேன், சாப்பிட்டுப் போடான்னு சொன்னேன். ஆம்பூர் போயி பிரியாணி சாப்பிடுறேனுட்டுப் போனான். பின்னால போன கார்க்காரன் இடிச்சதுல அந்த நிமிசமே எமலோகம் போய்ச் சேர்ந்துட்டான். தோசை சாப்பிட்டுட்டுப் பத்து நிமிஷம் கழிச்சிப் போயிருந்தா இந்த விபத்து நடந்திருக்குமா? விதி யாரை விட்டுவெச்சுது?” இப்படிப் புலம்பினது என் சிநேகிதனுக்குச் சினேகிதனோட அம்மா செல்லம்மா. இப்படி ஒரு செல்லம்மாவை உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம். மேலும் பல பேரைக் கேள்விப்பட்டும் இருக்கலாம்.

இப்படி, விதியை நினைக்காத, அதைப் பத்திப் பேசாத மனுசங்க இந்த உலகத்தில் இல்ல; இல்லவே இல்லை.

இப்போ, உங்க பகுத்தறிவு மூளையில், மனுசங்களுக்கு மட்டும்தான் விதியா, மத்த உயிர்களுக்கு இல்லையான்னு ஒரு கேள்வி தலை தூக்கியிருக்கும்.

அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு மான். வயிராற புல் மேஞ்சுது. தாகம் எடுத்ததால ஒரு நீர் நிலையத் தேடிப் போகுது. அந்தப் பக்கத்தில் சிங்கம், சிறுத்தை, ஓநாய் போன்ற கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருப்பது அதுக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையா நாலா புறமும் பார்த்துட்டே நீர்நிலையை அடைந்து, தண்ணீரில் வாயை வெச்சி உறிஞ்ச ஆரம்பிக்குது. தாகம் எல்லை மீறிப் போனதால தண்ணிக்குள்ள முதலை இருப்பதை மறந்துடிச்சி. தண்ணியில் வாயை வெச்ச அடுத்த நொடியே உள்ளேயிருந்து ’சரேல்’னு மேலெழும்பிய ஒரு முதலை மானின் தலையைக் கவ்விப் பிடிச்சி உள்ளே இழுத்துட்டுது. அன்னிக்கி தினத்தில் ஒரு முதலைக்கு இரையாகணும்கிறது அந்த மானுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதி. சுவையா மான் கறி சாப்பிட்ணும்கிறது முதலையோட விதி. இப்படி எல்லா உயிரையும் விதி ஆட்டிப்படைக்குது.

ஜடப் பொருள்களையும் அது விட்டு வைக்காது.

பூமி தன்னைத்தானே சுத்திட்டிருக்கு. சூரியனின் ஈர்ப்புச் சக்தியால அது சூரியனையும்  சுத்திச் சுத்தி வருது. என்னிக்கோ ஒரு நாள்,  சூரியனைச் சுத்துறதை நிறுத்திட்டு, தன்னைத்தானே சுத்துறதும் தடைபட்டுக் கீழே கீழே கீழே சரிஞ்சி துக்கிளியூண்டு புள்ளியா மாறி மறைஞ்சும் போச்சுன்னா, அதுக்கும் விதிதாங்க காரணம். யுக யுகாந்தரங்களுக்கு அப்புறம், சூரியனே வெடிச்சிச் சிதறி, வெட்ட வெளியில் சிறு சிறு தீப் பந்துகளா சுத்தி வர ஆரம்பிச்சா  அதுவும் விதியினுடைய சித்து விளையாட்டுதான். ஆக, பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு பொருளும் விதியின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பவே முடியாது.

”என்னப்பா காமக்கிழத்தா, விதி விதின்னு நீ பாட்டுக்குக் கதை அளந்துட்டே போற? ஐந்தறிவு ஜீவன்களும் ஜடப்பொருள்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். மனுசங்க தங்களுடைய ஆறாவது அறிவைக்கொண்டுதான் சிந்திக்கிறாங்க; செயல்படுறாங்க. அவங்களை எப்படி விதி கட்டுப்படுத்தும்?”னு நீங்க கேட்க நினைக்கிறீங்கதானே?

அதே கேள்வியைத்தான், கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம்னு ஏதேதோ பேசுற ஆன்மிகவாதிகள்கிட்டே  நானும் கேட்க நினைக்கிறேங்க.”

“என்னப்பா இது, விதிக்கு விளக்கம் தந்து, உதாரணம் எல்லாம் தந்த நீ இப்போ கட்சி மாறிப் பேசி குழப்புறே?”-இது நீங்க.

நான் கட்சியெல்லாம் மாறலீங்க. மேலே நீங்க படிச்சதெல்லாம் ஆன்மிகவாதிகள் சொல்லிட்டுப் போன வியாக்கியாணங்களை அடிப்படையா வெச்சி நான் சொன்னதுங்க. எனக்கு இந்த விதி சதி மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது. மனுசனுக்கு ஆறறிவு இருக்கு. சுயமா சிந்தித்துச் செயல்பட முடியுது. மூளையின் செயல் திறனைப் பொருத்து அவனுக்கு இன்ப துன்பங்கள் நேருதுன்னு நம்புறவன் நான்.

ஒரே ஒரு உதாரணம் மட்டும். [பாதி படிச்சதோட நீங்க ஓடிடக் கூடாதில்ல?]

மழை பெய்து தரையெல்லாம் ஈரமா இருக்கு காத்தும் வேகமா வீசுது. அந்தக் கட்டம் போட்ட சட்டைக்காரர் அவசர வேலையா போய்ட்டிருக்கார். ஒரு சாலையைக் கடக்க நேரும்போது, எதிரே ஒரு கார் வருது. ஈரத் தரை வழுக்குங்கிறது அவருக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையாத்தான் நடையை எட்டிப் போடுறார். ஆனாலும், ஈரத் தரையில் கால் சறுக்க, குப்புற விழறார். கார் அவரை மோதித் தள்ளி அரைச்சிட்டுப் போயிடுது.

கட்டஞ்சட்டைக்காரர், அறிவுபூர்வமா செயல்பட்டும் அவர் சறுக்கி விழுந்ததுக்குக் காரணம் திடீர்னு வேகமா வீசிய காத்து. அது அவரை ‘விசுக்’னு பாதையில் தள்ளி விட்டுடிச்சி.

ஒரு மனிதன் அறிவுபூர்வமா செயல்பட்டும்கூட, எதிர்பாராத சம்பவங்களால் உயிரிழக்கிறான்கிறதுக்கு இந்தச் சம்பவத்தை உதாரணம் காட்டினேன். இந்தச் சம்பவத்தைத் தற்செயலானதுன்னு ஆன்மிகவாதிகள் ஒத்துக்க மாட்டாங்க.

“திடீர்னு அதி வேகத்தில் காத்து வீசிச்சே, அது எப்படி? அதுதான் விதியின் செயல். கட்டஞ்சட்டைக்காரரைக் கொல்வதற்கு இங்கே அதி வேகக் காற்றைப் பயன்படுத்தியது விதி”ன்னு வாதிப்பாங்க.

‘காற்றின் வேகத்தை அனுமானித்து, தன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அவர் உயிர் பிழைத்திருந்தால்......’ இப்படி நாம் மடக்கினா, அதுக்கும் ரொம்ப சாமர்த்தியமா பதில் சொல்லிடுவாங்க.

அந்தப் பதில், “அவர் அன்னிக்கி சாகக் கூடாதுங்கிறது விதி. ‘இதை இப்படிச் செய். அதை அப்படிச் செய்’ என்று மனித அறிவை நெறிப்படுத்துவதே விதிதான். சுருக்கமா சொன்னா, ஐந்தறிவு, ஆறாவது அறிவு, பகுத்தறிவு, பகுக்காத அறிவு எல்லாமே விதிக்குக் கட்டுப்பட்டவைதான்” என்பதாக இருக்கும்.

இவங்க வாதத்தைச் சரின்னு ஏத்துகிட்டா,  கை அசைக்கிறது, கண் சிமிட்டுறது,  ஒன்னுக்கு ரெண்டுக்குப் போறது, பொறாமைப் படுறது, பொய் பேசுறது, புணர்ச்சி பண்றது ...இப்படி எல்லார்த்துக்குமே விதிதான் காரணம்னு சொல்லவேண்டி வரும்.

பிறக்கிற குழந்தைக்குத் தலையில் எத்தனை மயிர் இருக்கணும். வளர்ந்த ஒரு மரத்தில் ஒரு மைக்ரோ வினாடியில் எத்தனை இலை உதிரணும். உலகத்திலுள்ள  ஒவ்வொரு உயிரும் பெய்யுற மூத்திரம் என்ன என்ன எடையில் இருக்கணும் என்பதெல்லாம்கூட விதியின் மூலம் நிர்ணயிக்கப் படணும். இல்லையா?

இதெல்லாம் சாத்தியமா? அப்புறம் என்னங்க விதி? வெண்டைக்காய் விதி.

”எல்லாம் விதிப்படிதான் நடக்கும்னா, மனுசனுக்கு அறிவுன்னு ஒன்னு எதுக்கு?”

இப்படி ஒரு கேள்வியை முன் வைத்தால்?

“மனிதன் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, அவன் பல பிறவிகள் எடுத்து இன்ப துன்பங்களை அனுபவிக்கணும்கிறது விதி. பிறவித் துன்பத்திலிருந்து விடுபட விதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்கணும். அதுக்குக் கடவுளின் கருணை தேவை. கடவுளை உணர ஆறறிவு தேவை” என்பது அவர்கள் பதிலாக இருக்கலாம்.

“என்னதான் பகுத்தறிவுடன் செயல்பட்டாலும், விதிப்படிதான் எல்லாம் நடக்கும்னு சொல்றீங்க. விதியே நம்முடைய அத்தனை செயல்களுக்கும் காரணம்னா, நாம் செய்யுற பாவ புண்ணியங்களுக்கும் விதிதானே பொறுப்பு? அப்புறம் எதனால் மனுசனுக்குப் பிறவித் துன்பம்? ஏன் இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களைக் குழப்புறீங்க?”

இப்படிச் சவுக்கடி கொடுத்தால்.........

“இதெல்லாம் மகான்கள் சொல்லிப் போனது. அவங்களைப் பழிச்சிப் பேசினா பாவம் வந்து சேரும்” என்று பயமுறுத்துவார்கள்; ஆட்களை வைத்து அடிக்க வருவார்கள்.

ஆளை விடுங்க.

***************************************************************************************************************************************************
‘விதி’ என்று தலைப்பிட்டிருந்தால் இளவட்டங்கள் வாசிப்பார்களா என்ன?.....மன்னியுங்கள்.

‘நடிகை பூஜா’...100% கற்பனை.
***************************************************************************************************************************************************




புதன், 17 ஜூன், 2015

ஜாதிச் சங்கங்களுக்குத் தடையா? வேண்டவே வேண்டாம்!

இந்தத் தலைப்பு, தங்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் என்பதை நான் அறிவேன்.

அரசுகளும் அறிஞர்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் சாதிகளை ஒழிப்பதற்குப் பல வழிகளிலும் பாடுபட்டு வரும் நிலையில், இப்படிச் சொல்வது கண்டிக்கத்தக்கது; காட்டுமிராண்டித்தனமானது; தண்டனைக்குரியது என்று நீங்கள் சொல்ல நினைப்பதை என்னால் உணர முடிகிறது.

“ஜாதிகளை ஒழிக்க முடியாது” என்று சொல்பவர்கள்கூட, “ஜாதிகளை ஒழிக்க வேண்டாம்” என்பதை ஏற்க மாட்டார்கள்.

நான் சொல்வது ஏற்கத்தக்கதா இல்லையா என்பதை, இப்பதிவைப் படித்து முடித்த பிறகு நீங்கள் முடிவு செய்யலாம்.

‘ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்’ என்பது மக்கள் நலம் நாடுவோரின் நீண்ட கால விருப்பம்.

‘ஒழிக்க வேண்டும்’ என்பதற்கான காரணங்களை அறிந்தால், ‘ஒழிக்க வேண்டாம்’ என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது எளிதாக அமையும்.

‘வேண்டும்’ என வாதிடுவோர் முன் வைக்கும் முதன்மைக் காரணம்..........

அவ்வப்போது நடைபெறும் ஜாதிக் கலவரங்கள் காரணமாக அளவற்ற பொருட்சேதங்களும் உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன என்பதுதான்.
இதனையும், இது போன்ற பல தீய விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான், “ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்னும் முழக்கம், மக்களின் நலம் நாடுவோரால் அவ்வப்போது எழுப்பப்படுகிறது.

‘மக்களின் மனங்களில் ஜாதி வெறியை ஊட்டுபவை இந்தச் சங்கங்கள்தான். இவற்றைத் தடை செய்வதால், வெறி தணிந்து படிப்படியாக ஜாதிப் பற்றும் குறையும். கலப்பு மணங்களின் எண்ணிக்கை பெருகும். காலப்போக்கில், சாதிகளற்ற சமுதாயம் உருவாகும்’ என்பது இவர்களின் நம்பிக்கை.

இவர்களின் நம்பிக்கை செயல் வடிவம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்பது பற்றி ஏற்கனவே நீங்கள் சிந்தித்திருப்பீர்கள். ஒரு முடிவுக்கும் வந்திருக்கக்கூடும்.

நீங்கள் எடுத்த முடிவுக்கு உரம் சேர்ப்பதாகவோ, அதை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டுபண்ணுவதாகவோ என் எண்ணங்கள் அமையலாம் என்ற நம்பிக்கையில்தான் இப்பதிவை வெளியிடுகிறேன்.

இந்த மண்ணின் ஏதோ ஒரு பகுதியில், ஜாதிக் கலவரம் மூண்டு, அது பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரும்போது, எனக்குள் நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வி ஒன்று உண்டு. அது..........

இந்தக் கலவரங்கள் மூளுவதற்கு மூல காரணமாக இருப்பவர்கள் யார்? எவை?

ஒரு சிற்றுண்டிக் கடைக்காரருக்கும் போதையில் இருந்த வாடிக்கையாளருக்கும் இடையே ‘மீதிச் சில்லரை’ கொடுப்பதில் தகராறு. போதை மனிதர் ‘வக்காளி’, ‘தக்காளி’ என்று வாய்க்கு வந்தபடி பேச, கடைக்காரர் கை நீட்டிவிடுகிறார். அவரைத் திருப்பி அடிக்க முடியாத நிலையில் சொந்த ஊர் சென்று தன் ஜாதி ஆட்களுடன் வந்து கடையை அடித்து நொறுக்குகிறார் நம் குடிமகன். ஜாதி பேதமின்றி மற்ற கடைக்காரர்களின் சொத்துகளும் சூறையாடப்படுகின்றன.

கடைக்காரரின் ஜாதிக்காரர்கள் போதை ஆசாமியின் கிராமத்துக்குத் திரண்டு போய் அவர்களைத் திருப்பித் தாக்குகிறார்கள்.

குடியிருப்புகள் தரை மட்டம் ஆகின்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள கரும்புத் தோட்டங்கள் பற்றி எரிகின்றன. பம்ப் செட்கள் உருக்குலைகின்றன.

நூற்றுக் கணக்கில் போலீஸ் படை குவிக்கப்பட்டும் கலவரம் அடங்க நான்கு நாட்கள் தேவைப்படுகின்றன. [இவை உண்மை நிகழ்வுகள்]

இது, தனி மனிதர்களால் உருவான ஜாதிக் கலவரம்.

யாரோ ஒரு குடிகாரன் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவன் அல்லது ஜாதி வெறி ஊட்டி வளர்க்கப்பட்ட ஓர் அசாதாரணன் நாற்சந்தியில் உள்ள ஒரு ஜாதி சார்ந்த தலைவருக்குத் திருட்டுத்தனமாய் செருப்பு மாலை அணிவிக்க, வெடிக்கிறது ஜாதிக் கலவரம்.

இது ஒரு தனி மனிதருக்காக உருவாக்கப்பட்ட கலவரம். இப்படிப்பட்ட பல கலவரங்களால் மக்கள் வாழ்க்கை சிதைந்து சீர்குலைந்து போனதை, நம் சமுதாய வரலாறு சொல்லும்.

இன்னும், காதல் திருமணங்கள்,  கோயில்களில் நுழையத் தடை போன்ற காரணங்களாலும் ஜாதிக் கலவரங்கள் வெடித்திருக்கின்றன. இம்மாதிரி கலவரங்களுக்கும் ஜாதி வெறியர்கள் சிலரே மூல காரணமாக இருந்திருப்பதைக் கொஞ்சம் நுணுகி ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றிற்கும் தனி மனிதர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின் மீதோ நீதிமன்றத்தின் நடுவு நிலை மீதோ எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. எந்தவொரு ஜாதியிலும் சில பொல்லாதவர்களுக்கிடையே மிகப் பல நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் ஒரு போதும் உணர்ந்ததில்லை.

ஆக, தனிப்பட்ட நபர்களுக்காகவே  வெவ்வேறு ஜாதியைச் சார்ந்த பெரும்பான்மை மக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சீரழிந்து போயிருக்கிறார்கள் என்று உறுதிபடச் சொல்லலாம்.

தத்தம் ஜாதிக்குச் சலுகைகள் வேண்டி, உண்ணா நோன்பு மேற்கொள்ளுதல், ஊர்வலம் நடத்துதல் போன்ற போராட்டங்களில் பல்வேறு ஜாதியைச் சார்ந்த மக்களும் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர, இம்மாதிரி போராட்டங்களின் போது பிற ஜாதியாருடன் மோதலை உருவாக்கியதற்கான  ஆதாரங்கள் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. கொடிக் கம்பம் நடுதல் போன்ற நிகழ்வுகளில் சிறு சிறு குழுக்களாக மோதிக் கொள்வது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கிறது.

இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கும்கூட, அனுசரித்துப் போகும் மனப் பக்குவமும் பிறரை மதிக்கும் குணமும் இல்லாத சுயநல விரும்பிகளே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஜாதிச் சங்கங்கள் தடை செய்யப்பட்டாலும்கூட, இந்தச் சுயநலவாதிகள், ‘நம்ம  மாவட்டம்’, ‘நம்ம ஊரு’, ‘நம்ம தெரு’ என்று ஏதாவதொரு பின்னணியில் மக்களைத் திரட்டி, கலவரங்களில் ஈடுபடத் தயங்க மாட்டார்கள்.

அமைச்சராக இருந்த ஒருவர், ஜாதிச் சங்கங்களில் முக்கிய பதவி பெற முயன்று தோற்றுப் போய், சுயமாய் ஒரு ஜாதிச் சங்கம் ஆரம்பித்து, திருமண விழாக்களில், ஏன், இழவு வாசல்களிலும்கூட தன் கட்சிக்கு ஆள் பிடிக்கும் காட்சிகளையெல்லாம் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இம்மாதிரி சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து அமைதி விரும்பிகளான மக்களை விடுவிக்க அறிஞர்களும் பொதுநல விரும்பிகளும் முயல வேண்டுமே தவிர, ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை எனலாம்.

இம்மாதிரி நச்சுப் பிறவிகளைச் சட்ட நடவடிக்கைகள் மூலமோ, சமுதாயப் புறக்கணிப்பு வாயிலாகவோ திருத்த முயல்வதே புத்திசாலித்தனம் ஆகும்.

எவ்வகையிலேனும் இவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பொது வாழ்க்கையில் இவர்களின் தலையீடு மட்டுப்படுத்தப்பட்டால், ஜாதிச் சங்கங்களை ஒழிக்கும் பணி தேவையற்றதாகி, சங்கங்கள் தாமாகவே அழிந்து ஒழிந்து போகும். மக்களின் ஜாதிப் பற்று படிப்படியாக மறையத் தொடங்கும். ஜாதி பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்னும் நல்லவர்களின் கனவு நனவாகும் என்பது திண்ணம்.

இது என் நம்பிக்கை. வருகை புரிந்த உங்களின் நம்பிக்கையும் இதுவாகத்தான் இருக்க முடியும்.

*****************************************************************************************************************************************************










செவ்வாய், 9 ஜூன், 2015

விவேகானந்தரின் விளங்காத கடவுள் கொள்கையும் ராமகிருஷ்ணரின் பொய்யுரையும்![மீள் பதிவு]

#"நம் மக்களை வாழ வைப்பது மதமல்ல; தொழில் கல்வியே" என்று அடித்துக் சொன்னவர்; "ஏழைகளுக்கு உணவும் உடையும் வேண்டும். ஜாதிக் கொடுமைகள் ஒழிய வேண்டும்" என்றெல்லாம் மேடைதோறும் முழங்கியவர்;  இந்தியாவைப் புனித மண்ணாகக் கருதியவர்;  இளைய தலைமுறையினரின் சிந்தனையில் புதிய அலைகளை உருவாக்கியவர்...#  என்றிப்படி, விவேகானந்தர் பெற்ற சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால்.....

அவர் கொண்டிருந்த கடவுள் கொள்கை மட்டும் நம்மை மண்டை காய வைக்கிறது!

சிறுவனாக இருந்தபோதே நரேந்திரனுக்கு [விவேகானந்தர்] 'தியானம்' செய்வதில் ஈடுபாடு இருந்ததாம். கடவுளைக் காண வேண்டும் என்ற வெறி அவரை ஆட்டிப் படைத்ததாம்.

காணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே 'கடவுள் ஒருவரே' என்ற பிரம்மசமாஜ  கொள்கைகளைக் கடைபிடித்தார் என்கிறது அவர் வரலாறு.

ஒரு கட்டத்தில், அதில் திருப்தியடையாமல், "கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் உண்மையான வழிபாட்டுக்குச் செவி மடுத்து, பக்தன் முன் தோன்ற வேண்டும்" என்று நினைத்தார்.

" இறைவா, உன் உண்மையான வடிவத்தைக் காண என்னைத் தகுதி உடையவன் ஆக்கு" என்று தினம் தினம் அவரை வேண்டினார். பலன் இல்லை.

அறிஞர்கள், மதத் தலைவர்கள் என்று யாரைக் கண்டாலும், "கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார். பதில் இல்லை.

கடவுளைப் பார்த்தவர் என்று சொல்லப்படும் ராமகிருஷ்ணரைச்[பரமஹம்சர்] சந்தித்த போது அவரிடமும் இதே கேள்வியை முன் வைத்தார்.
ராமகிருஷ்ணர், ‘உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ; அதே போல, கடவுளை உனக்கும் காட்டுகிறேன்" என்றார்.

காட்டினாரா அவர்?

ஊஹூம்!

அந்தக் கடவுளின் அவதாரம் தொண்டைப் புற்றுநோயால் அவதிப்பட்டுத் தன் 33 ஆம் வயதில் இறந்த அந்த வினாடிவரை காட்டவில்லை! 39 வயதுவரை வாழ்ந்த இந்த வீரத் துறவி விவேகானந்தரும் அந்த மகான் மூலம் கடவுளைப் பார்த்ததாக அறிவிக்கவே இல்லை.

ஆனால், உணர்ந்ததாக மட்டுமே  சொல்கிறார்.

"உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ அதே போலக் கடவுளைக் காட்டுகிறேன்" என்று சொன்னாரே ராமகிருஷ்ணர்,  அது என்ன பொய்யா, மெய்யா?

பொய்...பொய்யே.

தன்  குரு  மூலம் 'கடவுளை உணர்ந்தேன்' என்கிறாரே விவேகானந்தர் , அது எப்படிச் சாத்தியமாயிற்று?

அவரே சொல்கிறார்.....

".....அன்று அவர் [ராமகிருஷ்ணர்]தொட்ட போது முற்றிலுமாய் என் புற உணர்வை இழந்தேன்...... வண்டிகள் வந்தன. ஆனால், மற்ற நேரங்களைப் போல் ஒதுங்க வேண்டும் என்று தோன்றவில்லை[எதிரே வந்த வண்டி நிற்காமல் வந்திருந்தால் அப்போதே பரலோகம் சேர்ந்திருப்பார் விவேகானந்தர்!]. அந்த வண்டி எதுவோ அதுவே நான் என்று தோன்றியது. என் கைகால்கள் உணர்வற்றவை போலிருந்தன. சில வேளைகளில் சாப்பிடும்போதே தரையில் சாய்ந்துவிடுவேன். என் தாய் பயந்தார். எனக்குப் பயங்கர நோய் வந்துள்ளது என்று நினைத்தார்...."

அவர் தாய் சொல்வது போல, விவேகானந்தர் மனநோய்க்கு ஆளாகியிருந்தார். அதன் காரணமாகத் 'தன் நிலை'  இழந்திருந்தார். இவ்வாறு தன்னிலை இழப்பதைக் கடவுளை உணர்ந்த ஒரு நிலை எனக் கருத முடியுமா? 

கடவுளை உணர்ந்ததாகச் சொல்லும் அவர், அவ்வாறு உணர்ந்த அனுபவத்தையாவது பிறர் அறிய / உணர விவரித்திருக்கிறாரா?

இல்லை.

'ஏழைகளுக்காகக் கடவுள் ஏதும் செய்ததில்லை; அவர் இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று காரசாரமாகப் பேசிய விவேகானந்தர் எப்படி மனம் மாறினார்?

“ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ, சமயத்திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது” என்றாரே , அப்புறம் எப்படி தான் காணுகிற ஒவ்வொரு பொருளும் கடவுளே என்றார்?

கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் ராமகிருஷ்ணர், புற்று நோய்க்கு ஆளானது ஏன்? அதிலிருந்து விடுபட முடியாமல் போனது எதனால்?

 “மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல” என்று சொல்லித் 'தலைவிதி' தத்துவத்தை எதிர்த்தவர், பின்னர் "மனிதனே கடவுள்" [மனிதனை மனிதனாகவே பார்க்கலாமே. கடவுளை எதற்கு இழுக்கிறார்?] என்கிறார். ஏன் இந்த முரண்பாடு?

மேற்கண்ட கேள்விகள் என்னுடையவை. பதில்கள் உங்களுடையவை; உங்கள் மனப்பக்குவத்திற்கேற்ப.

******************************************************************************************************************************************************
விவேகானந்தர் பற்றிய தகவல்களைப் பெற , பசுமைக்குமாரின் 'விடிவெள்ளி விவேகானந்தர்' [அறிவுப் பதிப்பகம், சென்னை] என்னும் நூலும், இணையப் பதிவுகளும் உதவியாக இருந்தன. சில தகவல்கள் ஏற்கனவே பலராலும் அறியப்பட்டவை.
******************************************************************************************************************************************************









வெள்ளி, 5 ஜூன், 2015

கோயில்களில் ஆபாசச் சிலைகள் வடித்தெடுக்கப்பட்டது ஏன்?! [பழசோ பழசு]

##கோயில்கள் ‘உடலுறவு மையங்கள்’ ஆக இருந்தன என்றால், அதிர்ச்சி அடைய வேண்டாம். மேலே படியுங்கள்##
சிவலிங்க வடிவத்தின் ‘தத்துவம்’ உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இறைவனின் பிறப்பு உறுப்பு இறைவியின் பிறப்பு உறுப்புடன் இணைந்த கோலம் அது.

இது வெறும் ‘புனைந்துரை’;  நாத்திக வாதிகளால் பரப்பப்பட்டது என்று நம் மக்களில் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை பொய்யானது.

இது, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கையாக இருந்தது என்பது மனம் கொள்ளத்தக்கது.

எகிப்தியர்களின் ‘ஓசிரசு’, ‘ஏசீசு’ போன்ற கடவுள்கள் மனிதப் பிறப்பு உறுப்புகளின் வடிவம் கொண்டவைதானாம்.

சிந்துவெளி நாகரிகத்தின்  பண்பாட்டில், உடலுறவு வழிபாட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருக்க வேண்டும். அவர்களுடைய ‘சிஸ்ன’ தேவ வழிபாடுதான் பிறகு சிவலிங்க வழிபாடாக உருமாற்றம் பெற்றது என்கிறார்கள்.

மனிதர்கள், ஆறாவது அறிவு பெற்ற காலக்கட்டத்தில், உலகின் தோற்றம் குறித்துச் சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.

உயிர்களில், ஆணும் பெண்ணும் இணைந்து இன்பம் துய்ப்பதன் விளைவாகப் புதிய உயிர் தோன்றுவதைக் கண்ட அவர்கள், ஆகாயம் என்னும் ஆண் கடவுளும், பூமி என்னும் பெண் கடவுளும் இணைந்து உடலுறவு சுகம் அனுபவித்ததன் விளைவே உலகத் தோற்றம் என்னும் முடிவுக்கு வந்தார்கள்.

அந்தக் கடவுளை வழிபடுவதற்கு காட்சிப் பொருளாக உள்ள ஓர் வடிவம் தேவைப்பட்டது. இறைவனின் பிறப்பு உறுப்பும் இறைவியின் பிறப்பு உறுப்பும் இணைந்த கோலத்தை வடிவமைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

பின்னர் அதைத் தாங்கள் எழுப்பிய கோயில்களில் இடம்பெறச் செய்தார்கள்; விழாக்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்.

உலக மக்களில், அவரவர் சமூக பண்பாட்டு நிலைக்கேற்ப உடலுறவு நடைபெறும் மையங்களாக அக்கோயில்கள் ஆயின.

பாபிலோனியாவில் உள்ள பல பழைய கோயில்களில் உடலுறவு நிகழ்ச்சி விழாவின் முக்கிய சடங்காகவும் ஆக்கப்பட்டது.

நம் நாட்டுக் கோயில்களிலும்  உடலுறவு நிகழ்ச்சிகள்  ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் அறிஞர்கள்.[ஆதாரம்: ‘யுக்தி தர்ஷன்’ என்னும் தலைப்பிலான மலையாள நூல். தமிழில், ’ ‘மதமும் பகுத்தறிவும்’, முதல் பதிப்பு ஜூலை 2004, சூலூர் வெளியீட்டகம், கோவை-641402]

கோயில்களில் உள்ள, காம இச்சையைத் தூண்டும் சிற்பங்களும் இசைப் பாடல்களும், முன்பிருந்த தேவதாசி முறையும் இக்கருத்துக்கு வலுச் சேர்க்கின்றன என்று சொல்கிறார்கள்.
ஆக, இறை தரிசனத்திற்காகக் கோயிலுக்கு வருவோருக்குக் காமக் கலையைக் கற்றுத் தருவதற்காகவே, அல்லது கற்றுத் தருவதற்காகவும் ஆபாசச் சிற்பங்கள் வடிக்கப்பட்டன என்பது தெரிகிறது. 

எது எப்படியோ, பழங்காலச் சூழலில், பகுத்தறிவு வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில்..........
கற்பனை செய்த கடவுள்களின் பிறப்பு உறுப்புகளை வழிபட்டதும், அவற்றைக் கோயில்களில் இடம் பெறச் செய்து விழாக்கள் எடுத்து ஆனந்தப் பரவசத்தில் மூழ்கியதும், பெரும் குற்றங்கள் எனக் கூற இயலாது என்பதே என் கருத்து.

உங்கள் கருத்து எதுவாயினும் வருகை புரிந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++






புதன், 3 ஜூன், 2015

புனித கங்கை தீப்பற்றி எரிந்த கதை!!!

இயற்கையை மனிதன் எந்த அளவுக்குக் காயப்படுத்தியிருக்கிறான் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்க முடியும்.

நாம் எல்லோரும், கங்கை ஒரு புனித நதி என்றும், அதில் குளித்தால் அத்தனை பாவங்களும் கரைந்துபோகும் என்றும் நம்புகிறோம். மத ரீதியாக வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக, கங்கை நதி இமய மலையில் உற்பத்தியாகும் இடத்திலிருந்து மூலிகைச் செடிகளைக் குளிப்பாட்டி அடித்துக்கொண்டு வருவதால் அந்த நீர் மருத்துவ குணங்கள் உடையதாக இருக்கிறது என்பதே உண்மை.

அந்தக் கங்கை ஒருமுறை தீப்பற்றி எரிந்த கதை எத்தனை பேருக்குத் தெரியும்?
சூழ்நிலை பாதிப்பால் ஆக்ராவில் இருக்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் தன் வெண்மை நிறத்தை இழந்து பழுப்பு நிறமாக மாறி வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், மனிதர்கள் செய்யும் அடாவடித்தனங்களால் நதிகளில்கூட தீப்பிடிக்கும் என்பதை உலகிற்கே நாம் காட்டிக்கொடுத்திருக்கிறோம்.

1980ஆம் ஆண்டில் ஒரு நாள் இது நடந்தது. யாரோ ஒருவர் கொளுத்திப் போட்ட தீக்குச்சியால் ஏற்பட்ட பெரு நெருப்பு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குக் கங்கை நதியின் மீது பரவிக் கொழுந்துவிட்டு எரிந்த துயரமான வரலாற்று நிகழ்ச்சி அது!

நதியோரமாக இருந்த இரண்டு தொழிற்சாலைகள் கங்கை நீரில் தங்கள் கழிவுகளைத் தாராளமாக கலந்துவிட்டுக் கொண்டிருந்தன. இந்தக் கழிவில் இருந்த வேதிப் பொருள்கள் கங்கை நதி நீரில் படலமாக மிதந்துகொண்டிருந்தன. தீப்பொறி பட்டதும் நதி நீர் 7 மீட்டர் உயரத்துக்குக் கொழுந்துவிட்டு எரிந்தது! இந்தத் தீயை அணைப்பதற்கு மூன்று மணி நேரத்துக்கு மேல் தீயணைப்புத் துறையினர் போராடினார்கள். இது நடந்தது புனித நகரமாகக் கருதப்படும் ஹரித்துவாருக்கு அருகில்தான்.
கங்கை மட்டுமல்ல, நம் நாட்டிலிருக்கும் அனைத்து நதிகளும் இது போன்ற ஆபத்தை எதிர்நோக்கித்தான் இருக்கின்றன.

மண்ணை அடி ஆழம்வரை சுரண்டி, கழிவுகளைக் கொட்டி நதிகளையெல்லாம் சென்னையின் கூவம் போல மனிதர்கள் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலை நீடித்தால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பழைய நதிகளின் படங்களை மாட்டி வைத்து, அவற்றின் முன்னால் ஆடிப்பெருக்குப் படையல் போடும் காலம் விரைவில் வரும் என்பதில் சந்தேகமில்லை.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இந்தக் கட்டுரையை வழங்கிய ‘சிதம்பரம் ரவிச்சந்திரன்’[விஞ்ஞானச் சிறகு, ஜூன், 2015] அவர்களுக்கு மிக்க நன்றி. 


திங்கள், 1 ஜூன், 2015

நீங்கள் ‘குங்குமம்’ வார இதழ் வாசகரா? இதைப் படிக்க வேண்டாமே!

“வேண்டாம்” என்று தடுத்தும் உள்ளே நுழைகிறீர்களா? நன்றி...நன்றி!


கதை:                                               தப்புக் கணக்கு

இதழ்:                                              குங்குமம்[08.06.2015]


“பெருமாயி, நீ செங்கல் எடுத்துட்டு வா. காளியம்மா, நீ கலவை போடு” என்று உத்தரவு போட்ட மேஸ்திரி பெரியசாமி, மீனாட்சியைப் பார்த்ததும் தொண்டையில் தேன் தடவிக்கொண்டு, “அதோ அந்த வேப்ப மர நிழலில் ஜல்லி உடைக்கிறது உன்னோட வேலை” என்றார்.
மனம் குமுறினாள் பெருமாயி. பெரியசாமியை எரித்துவிடுவதுபோல் முறைத்துவிட்டு நகர்ந்தாள்.

நண்பகல் சாப்பாடு முடிந்து, காளியம்மாவும் மீனாட்சியும் மணல் குவியலின் மீது சரிந்து அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, வெற்றிலை குதப்பிக்கொண்டிருந்த பெரியசாமியை நெருங்கினாள் பெருமாயி.

“நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன். கொஞ்ச நாளாவே வயசான எங்களுக்குக் கடுசான வேலையைக் குடுத்துட்டு அந்த மீனாட்சி கொமரிக்கு மணல் சலிக்கிறது, ஜல்லி உடைக்கிறதுன்னு இடுப்பு வளையாம நிழல்ல செய்யுற வேலைகளாத் தர்றியே, நியாயமா?” என்றாள் கோபத்துடன்.

“அடடா, உனக்குத் தெரியும்னு நினைச்சேன் பெருமாயி. மீனாட்சியை அடுத்த வாரம் பொண்ணுப் பார்க்க வர்றாங்க. அவ ஏற்கனவே கறுப்பு. வெயிலில் வேலை செஞ்சா இன்னும் கறுத்துட மாட்டாளா? அதான் நிழல்லையே வேலை வாங்குறேன். அதுக்குள்ள தப்புக் கணக்குப் போட்டுட்டியே!” என்றார் மேஸ்திரி வருத்தமாக.

“சேச்சே...உன்னை எனக்குத் தெரியாதா?” என அசடு வழிந்தாள் பெருமாயி.

*****************************************************************************************************************************************************
குங்குமம் இதழுக்கு என் மனம் நிறைந்த நன்றி.