தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Jul 21, 2015

‘கதைகள் எட்டு வகை’.....இளம் எழுத்தாளர்களுக்கான பதிவு!

‘இச் என முத்தமிட்டான் என்பதை இச்சினான் என்கிறார்கள். ‘ஃபோன் ஒலித்தது’ என்பதை, ‘ஃபோன் ரிங்கியது’ என்றும், ‘சர்’ என்று இறங்கினான்’ என்பதை, ‘சர்ரினான்’ என்றும் எழுதுகிறார்கள் இன்றைய எழுத்தாளர்கள். வாசகனைக் கவர்வதற்கு இவர்கள் கையாளும் புதிய உத்தி இது எனலாம். இவ்வகை உத்திகளை இன்று எழுதப்படும் கதைகளில் பரவலாகக் காண முடிகிறது.

‘மாலா நம் கதையின் நாயகி. இவளைக் கொஞ்சம் வர்ணித்துவிட்டுக் கதைக்குச் செல்லலாமே” என்று சொல்லித் தன் கதையைத் தொடங்குகிறார் ஓர் எழுத்தாளர்.

‘இந்தக் கதையைப் படிக்குமுன் நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாருங்கள் கை குலுக்குவோம். ஹலோ...ஐ யாம் அர்ஜுன். வாட்டசாட்டமாக இருக்கிறேனே என்று பார்க்கிறீர்களா? நான் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஆள் சார்.’ இப்படி எழுதி அசத்துகிறார் இன்னொருவர்.

‘சாருபாலா. என்ன அழகான பெயர்! அவளுடைய அண்ணாந்த கழுத்தில் இருக்கும் மிளகு மச்சம்! வியர்வையும் பவுடரும் கலந்த வியர்வை வாசனை! அவளது நாசியில் புகுந்து தொந்தரவு செய்யும் கேச இழைகள். உதடுகளில் ‘மெத்’தென்று சிக்கும் காது மடல்கள். விரல் நுனியில் பரபரப்பூட்டும் வயிற்றுக் குழைவு. அவனுடைய மார்பு முடிகளின் வேர்கள்வரை இறங்கும் அவளுடைய வெப்ப மூச்சு. சாருபாலாவை நினைக்கும்போதெல்லாம் இவை எல்லாமே ஊர்வலமாய் வந்து நினைவில் தங்கிவிடும்.’ இப்படி வாசகனின் உள் நெஞ்சுவரை ஊடுருவுகிறார் தேவிபாலா என்னும் பிரபல எழுத்தாளர்.

சிறுகதை மட்டுமன்றி நாவல்களிலும் இம்மாதிரி, மன உணர்வுகளை வருடிக் கொடுக்கும் நடையையும் உத்திகளையும் கையாளும் கதாசிரியர்கள் தமிழில் கணிசமாக இருக்கிறார்கள்.

இவர்களால், சிறுகதையின் வடிவம் சீர்மை பெற்றுவருவது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

உள்ளடக்கத்தின் நிலை என்ன?

நவீன சிறுகதைகளின் உள்ளடக்கத்தைச் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை, ‘நல்ல கதைகள்’ என்றும் ‘நச்சுக் கதைகள்’ என்றும்  ‘பொழுதுபோக்குக் கதைகள்’ என்றும் ஆய்வாளர்கள் தரம் பிரிப்பார்கள். 

கொஞ்சம் அழுத்தமாக ஆராயும்போது, இவற்றை மேலும் பல வகைகளாகப் பகுக்கத் தோன்றுகிறது.

ஒன்று:
கதையில் எதிர்பாராத முடிவைக் கொடுத்து வாசகனைக் கவர்தல் ஒருவகை. இம்மாதிரிக் கதைகள் நிறையவே வெளியாகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஒரு பக்கக் கதைகள்.

இரண்டு:
அரைத்த மாவை அரைத்தல். ஏற்கனவே வெளியான கதைகளின் நிகழ்வுகளை மாற்றியமைத்து, கதைமாந்தர்களுக்குப் புதுப்பெயர்கள் சூட்டிப் புதுக்கதை படைப்பது. சுற்றிவளைக்காமல் சொன்னால், ஒருவர் படைத்த கதையின் கருவை இன்னொருவர் திருடுவது. அதாவது, கதைத் திருட்டு! இம்மாதிரிக் கதைகளும் பெருமளவில் வெளியாகின்றன.

மூன்று:
அரைப் பக்கத்தில் அல்லது ஒரு பக்கத்தில் எழுதி முடிக்க வேண்டியதை எட்டு அல்லது பத்துப் பக்கங்களில் பூசி மெழுகுவது. இம்மாதிரி ‘இழுத்தடிப்பு’ வேலையைச் செய்பவர்கள் பெரும்பாலும் பிரபல எழுத்தாளர்களே!

நான்கு:
எத்தனை முறை படித்தாலும் புரியாத படைப்புகள். இப்படி எழுதியே தமிழில் ‘பிரபலங்கள்’ பட்டியலில் இடம் பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்!

ஐந்து:
பாசாங்குக் கதைகள். எதார்த்த வாழ்வில் இடம்பெறாத சோகங்களையும் துயரங்களையும் பூதாகரமாக்கிக் கதைகளை உருவாக்குவது. இவையும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

ஆறு:
பொழுதுபோக்குக் கதைகள். இவ்வகைக் கதைகளை இரண்டாகப் பிரிக்கலாம். கதை படிக்கும் வாசகனின் பொழுதை வீணடிப்பது ஒன்று. சூதாடுவது, பந்தயம் கட்டுவது என்பன போல. பின்விளைவு ஏதுமின்றி, வாசகனைச் சிறிது நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மற்றொன்று. இன்னிசை கேட்பது போலவும் இயற்கையை ரசிப்பது போலவும் என்று சொல்லலாம்.

ஏழு:
வாழ்க்கைப் பிரச்சினைகளையோ சிக்கல்களையோ போராட்டங்களையோ இயல்பாகப் படம் பிடிப்பது.
வேலை தேடிச் சோர்ந்துபோன ஒரு பட்டதாரி வாலிபன், பழைய பேப்பர்களும் பிளாஸ்டிக் பொருள்களும் சேகரித்து விற்றுக் கொஞ்சம் சம்பாதிக்க நினைக்கிறான்; காரியத்தில் இறங்குகிறான். முதல் நாளே அடி உதை விழுகிறது. உதைத்தவர்கள், ஏற்கனவே அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்கள். 

இவ்வகைக் கதைகளே மக்களுக்குப் படிப்பினையும் மிக்க பயன்களும் நல்குபவை. அரிதாகவே வெளியாகின்றன.

எட்டு:
பிரச்சினைகளை எதார்த்தமாகச் சொல்வதோடு, அவற்றிற்குத் தீர்வும் தர முயலும் படைப்புகள். இவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவை. 

ஓர் எடுத்துக்காட்டு மட்டும்.
ஓர் இந்து இளைஞன், பிரசவ வேளையில் உயிருக்குப் போராடும் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கத் துடிக்கிறான். ஊரெங்கும் மதக் கலவரம். சாதிசனம் என்று எவருமே உதவ முன்வரவில்லை. இந்த நிலையில், முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு முஸ்லீம் பெரியவர் தன் உயிரைப் பணயம் வைத்து உதவுகிறார். மாதங்கள் கழிகின்றன. பிள்ளைக்குப் பெயர்சூட்டு விழா. சொந்தபந்தங்கள் பல பெயர்களைச் சிபாரிசு செய்கின்றன. அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தி, கடவுளாக வந்து தன் மனைவியைக் காப்பாற்றிய முஸ்லீம் பெரியவரின் பெயரை - அவரிடமே முன்பு கேட்டறிந்தது - தன் பிள்ளைக்குச் சூட்டுகிறான் அந்த இந்து இளைஞன்.

அருமையான படைப்பு! குங்குமம் இதழில் வெளியானது இது. எழுதியவர் பெயர் மறந்துபோனது வருத்தத்தைத் தருகிறது.

ஜாதிமத வெறிகொண்டு அலையும் மிருகங்களுக்கெல்லாம் சரியான சாட்டையடி இந்தக் கதை.

முகவரி தெரியாத, பிரபலம் ஆகாத இளம் எழுத்தாளர்களின், இதுபோன்ற தரமான படைப்புகள் கணிசமாக வெளிவந்துகொண்டிருப்பதைக் காணுகிறபோது மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது; அழுத்தமானதொரு நம்பிக்கை பிறக்கிறது.

வீரமாமுனிவர், மாதவய்யா, பாரதி போன்ற முன்னோடிகளால் அடித்தளம் அமைக்கப்பட்டு, வ.வே.சு.ஐயரால் முறையாக வடிவமைக்கப்பட்டு, எழுத்துலக மேதைகளால் வளர்க்கப்பட்டு, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறுகதை இலக்கியம் இனியும் வாழும்; வளரும்!
***************************************************************************************************************************************************
ஓய்வு பெறவிருந்தபோது, சென்னை வானொலியில், ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரையின்[30 நிமிட இலக்கியப் பேருரை] இறுதிப் பகுதி இது.