தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Jul 30, 2015

பெண்கள் தெய்வங்கள் ஆனது எப்படி?!

#இறந்துபோன கணவனின் உடலோடு சேர்த்து அப்பாவிப் பெண்ணை நெருப்பில் பலியிடும் சடங்கு ‘சதி’ எனப்பட்டது. அப்படி,  பெண் பலி கொடுக்கப்படுவதால் ஆணுக்கு சொர்க்கம் கிடைக்கும்ன்ற மூட நம்பிக்கை இருந்தது. கணவனை இழந்த பெண், வேறு ஆணோடு பழகிக் குழந்தை பெற்றுவிட்டால் இனத் தூய்மை அழிந்து போய்விடும் என்றும் நினைத்தார்கள். எனவே, அவளைக் கணவனோடு சேர்த்துக் கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணமும்[சூது] அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கிறது. 

கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவில் சதி நடைமுறையில் இருந்திருக்கிறது. அந்தக் காலங்களில், கால்நடைகளைப் போலவே பெண்ணும் ஆணுக்கான உடைமைப் பொருள். ஆகவே, கால்நடைகளை யாகத்தில் பலி கொடுப்பதுபோல பெண்களையும் அவர்களின் உரிமையாளர்கள் இறந்துபோன பிறகு பலி கொடுத்திருக்கின்றனர். இப்படி உயிரோடு கொல்லப்பட்ட பெண்களுக்கு நினைவுக்கல் வைத்து வழிபட்டதால் அவர்கள் தெய்வம் ஆக்கப்பட்டார்கள்.

தாங்கள் தெய்வம் ஆக்கப்பட்டதில் ஆனந்தப் பரவசத்துக்கு உள்ளான அவர்கள், காலப்போக்கில் தாங்களாக முன்வந்து உடன்கட்டை ஏறச் சம்மதித்தார்கள்.

அவர்களை மேலும் சந்தோசப்படுத்தும் வகையில், இந்தப்  பூமியையும் ஆறுகளையும்கூடப் பெண் தெய்வங்களாக உருவகப்படுத்தி வழிபட்டார்கள் ஆண்கள்.

அலெக்சாண்டருடன் இந்தியாவுக்கு வந்த கிரேக்க வரலாற்று அறிஞர் அரிஸ்டோபுலஸ், சதியை நேரில் கண்டதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தட்ஷ சீல நகரில் இறந்துபோன கணவனுடன் நெருப்பில் இறங்கி உயிர்விட்ட பெண்ணைப்பற்றி அவரது நாட்குறிப்பில் பதிவு செய்து இருக்கிறார். அதிலும், கிழவனுக்கு மணம் முடித்துவைக்கப்பட்ட ஏழு, எட்டு வயது சிறுமிகள்கூட சதிக்கு உள்ளாகி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன.

சதிக்கு எதிரான போராட்டம் என்பது 12ஆம் நூற்றாண்டில்தான் மேலோங்கத் தொடங்கின. அதற்கு முன், வட இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் சதியில் இருந்து தப்பி ஓடிய சம்பவங்களும், பிடிபட்டுக் கடுமையாகத் தண்டனை வழங்கப்பட்டுப் பின்னர், எரித்துக் கொல்லப்பட்டதும் குறிப்புகளில் பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக, 1206இல் சதிச் சடங்குக்கு முன், அது பெண்ணுக்குச் சம்மதமா என்று கேட்கப்பட வேண்டும் என்ற சட்டம் டெல்லி சுல்தான்களால் அமல்படுத்தப்பட்டது. ஆனால், குடும்பத்தினர் பெண்ணை நிர்ப்பந்தம் செய்து சதியை எளிதாக நிறைவேற்றிக்கொண்டதால் அந்தச் சட்டத்தால் பெரிய பயன் எதுவும் இல்லையாயிற்று. 

ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகே, சதிச் சடங்கு குறித்துக் கடுமையான எதிர்வினைகள் உருவாகத் தொடங்கின.

ஜுகி என்ற நெசவாளர்கள் இனத்தில் உயிரோடு எரிப்பதற்குப் பதிலாக பெண்ணைக் கணவனோடு சேர்த்து மண்ணுக்குள் புதைத்துவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. இதுபற்றி, ரிஸ்லே தனது வங்காளப் பழங்குடியினர் பற்றிய தனது நூலில் எழுதியிருக்கிறார். சதியை ஒழிப்பதில் பிரிட்டிஷ் அதிகாரிகள் தீவிரக் கவனம் செலுத்தியிருக்கின்றனர். 

சதிக்கு எதிராகப் போராடியவர்களில், ராஜாராம் மோகன்ராய் மிக முக்கியமானவர். இவரது சகோதரர் இறந்துவிடவே அவரது மனைவி சதிச் சடங்கில் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் மோகன்ராயின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து, சதிக்கு எதிராகத் தீவிரமாக போராடத் தொடங்கினார். இதற்காக, ஒவ்வொரு நாளும் கல்கத்தாவின் மயானத்துக்குத் தனது ஆட்களுடன் சென்று சதி நடைபெறுகிறதா என்று கண்காணித்ததோடு, அதை ஒழிப்பதற்கான தடைச் சட்டத்தை உருவாக்கவும் முனைப்புடன் செயல்பட்டார்#  

நன்றி: ‘கல்வி அஞ்சல்’ kalvianjal.blogspot.com/2013/01/blog-post_6043

லாற்று நூல்களில் பதிவான மனம் பதற வைக்கும் சில சம்பவங்கள்:

கி.பி.1628இல் மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் ஒருவன் இறந்தபோது, அவனுடைய 
சவத்துடன் அவனின் 700 மனைவியர் உடன்கட்டை ஏறியதாக ஒரு முஸ்லீம் யாத்திரிகர் 
குறிப்பிடுகிறார்.

‘மதுரையை ஆண்ட திருமலை நாயக்கன், கி.பி. 1658இல் இறந்தபோது அவனுடைய 200 
மனைவிமார்களும் உடன்கட்டை ஏறினர்’ என Proenza என்னும் பாதிரியார் தம் கடிதத்தில் 
குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்னும் மன்னன் கி.பி.1710இல் இறந்தான். 
அவனுடைய 47 மனைவிமாரும் உடன்கட்டை ஏறினர்.

நன்றி: திருச்சி வே. ஆனைமுத்து எழுதிய, ‘தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி, பெரியார் 
நூல் வெளியீட்டகம், சென்னை. முதல் பதிப்பு:1980.
===================================================================================