Sunday, August 30, 2015

முட்டாள் தமிழா, ஜப்பானைப் பாருடா!!! [பழையது; பலமுறை படித்தற்குரியது]

சற்று முன்னர், இன்றைய ‘தினத்தந்தி’ நாளிதழில் [25.03.2014] ‘தினம் ஒரு தகவல்’ பகுதியில் வழங்கப்பட்டுள்ள தகவலைப் படித்துப் பிரமித்தேன்; அதிர்ந்தேன். தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை என்னை வேதனையில் ஆழ்த்தியது. தந்தித் தகவலை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள்.
[படம், இன்று இணைக்கப்பட்டது]

தலைப்பு:           ஆங்கிலம் இல்லாத ஜப்பான்


ம் நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள் உலகில் வாழ முடியாது என்பது போல் இங்கு ஆங்கிலம் போதிக்கப்படுகிறது. ஆனால், ஜப்பானில் அனைத்துமே ஜப்பான் மொழியில்தான்.

ஆங்கிலம் இல்லாத நாடுகளில், ‘நோ’, ‘தேங்க்ஸ்’, ‘எஸ்’ என்ற வார்த்தைகளை எப்போதாவது பயன்படுத்துவார்கள். ஆனால், ஜப்பானில் அதுவும் இல்லை. அந்த நாட்டில் ஆங்கில வார்த்தைகளைக் கேட்கவே முடியாது.

ஜப்பானில், அவர்களின் தாய்மொழி மட்டுமே தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி.

அங்கு பேச்சு மட்டுமல்ல, ஹைக்கூ முதல் ஆராய்ச்சி வரை அத்தனைக்கும் தாய்மொழி ஜப்பானைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இது எப்படி சாத்தியம்?

மருத்துவம், தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட ஆங்கில ஆராய்ச்சி நூல்களும், உலக அளவில் வெளிவரும் வார, மாத ஆராய்ச்சி இதழ்களும் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

இவர்களிடம், “ஆங்கிலம் தெரியாமல் எப்படித் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஜெயிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினால், “யாருக்கு ஆங்கிலம் அவசியம் தேவைப்படுகிறதோ அவர்கள் மட்டும் அதைக் கற்றுக்கொள்ளலாம். சிலருக்கு ஆங்கிலம் தேவை என்பதற்காக எல்லோருக்கும் அதைக் கட்டாயம் ஆக்கும் பழக்கம் இங்கு இல்லை” என்கிறார்கள்.

நாடு முழுவதும் ஒரேயொரு ஆங்கில நாளிதழைத் தவிர, பிற அனைத்தும் ஜப்பான் மொழியிலேயே வெளிவருகின்றன. தாய்மொழியிலேயே அனைத்தும் கிடைக்கும்போது கடைக்கோடிக் குடிமகனும் தன் முழுத் திறமையை எளிதாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறான்.

ஜப்பானில் கோயில்களை அரிதாகத்தான் பார்க்க முடியும்.

“நாங்கள் வருடத்துக்கு ஒரு முறை...புது வருடம் பிறக்கும்போதுதான் கோவிலுக்குச் செல்வோம். மற்றபடி, கோவிலுக்குச் சென்று பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பது இல்லை. கடவுள் நம்பிக்கையைவிட எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம்” என்கிறார்கள் ஜப்பானியர்கள்.நன்றி:      தினத்தந்தி[எஸ்.பி.செந்தில் குமார்]

[25.03.2014 இல், ‘நான்...நீங்கள்...அவர்கள்!!!’ என்னும் என் முடக்கப்பட்ட பழைய வலைப்பதிவில் வெளியானது இப்பதிவு]


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


ஜப்பானியரிடமிருந்து தாய்மொழிப் பற்றை நம்மால் கடன் வாங்க முடியுமா?!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Friday, August 28, 2015

கேள்வி நான்! பதில்...யாரோ!! [உரையாடல் கதை-2012]

‘தாய்க்குலம் ஜாக்கிறதை’ பதிவின் தொடக்கப் பிழை திருத்தப்பட்டது.


“எங்கடா போறே?”

“கோயிலுக்கு.”

“எதுக்கு?”

“எல்லாரும் எதுக்குப் போவாங்களாம்?”

“பொழுது போக்க, சிற்பக் கலையை ரசிக்க, ஃபிகர்களை சைட் அடிக்க, கொள்ளையடிக்க, மனப்பூர்வமா சாமி கும்பிட...இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கு. நீ எதுக்குப் போறே? எதிர்க் கேள்வி கேட்காம பதில் சொல்லு.”

“சாமி கும்பிடத்தான் போறேன்.”

“எதுக்கு சாமி கும்பிடணும்?”

“எல்லாரும்...அல்ல, என் கஷ்டங்கள் நீங்க.”

“கடவுளைக் கும்பிட்டா கஷ்டங்கள் நீங்கும்னு யார் சொன்னது?”

“பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“பெரியவங்கன்னா...?”

“ஞானிகள். ஆன்மிக வாதிகள்.”

“கஷ்டங்களைக் கொடுத்தது யார்னு அவங்ககிட்டே கேட்டிருக்கியா?”

“இல்ல.”

“நீயா யோசிச்சிருக்கியா?”

“இல்ல.”

“கடவுள்தான் கஷ்டங்களைக் கொடுத்தார்னு நான் சொல்றேன். ஒத்துக்கிறியா?”

“மாட்டேன்.”

“ஏன்?”

“கடவுள் கருணை வடிவானவர்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“கருணை வடிவானவர் கடவுள், சரி. நீ பிறக்குறதுக்கு முன்பே, ‘உன்னை மனுஷனா பிறப்பிக்கப் போறேன். இன்பங்களைவிடத் துன்பங்கள் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும்’னு உன்கிட்டே அவர் சொல்லியிருக்காரா?”

“ஹி...ஹி...பிறக்குறதுக்கு முன்பே எப்படிச் சொல்ல முடியும்?”

“முந்தைய பிறவிகள்ல  நீ மண்ணாவோ, மரமாவோ, எருமையாவோ, பன்றியாவோ இருந்திருப்பே. ஒவ்வொரு பிறவிக்கு இடையிலேயும் பேயாவோ, பிசாசாவோ ஆவியாவோ, ஆன்மாவாவோ அலைஞ்சிருப்பே. அப்பவே சொல்லலாமே?”

“அப்படியெதுவும் அவர் சொல்லி நான் கேட்டதா ஞாபகம் இல்ல.”

“சரி. நீ மனுஷனா பிறந்தப்புறமாவது, உன் கனவிலோ நனவிலோ ‘நான்தான் உன்னைப் படைச்சேன்’னு சொன்னாரா?”

“ஊஹூம்......இல்ல.”

“நிச்சயமா?”

“நிச்சயமா.”

“சத்தியமா?”

”சத்தியமா.”

“ஆக, மனுஷனா பிறக்குறதுதான் உன் விருப்பம் என்பதைச் தெரிஞ்சிட்டுக் கடவுள் உன்னைப் படைக்கல; உன் அனுமதியோடவும் அதைச் செய்யல; அவர் விருப்பத்துக்கு உன்னை இப்படிப் பிறப்பிச்சிருக்கார். இன்பங்களோட துன்பங்களையும் கொடுத்திருக்கார். இன்னிக்கிவரை, அவர் நினைச்சபடி நீ இன்ப துன்பங்களை அனுபவிச்சிருக்கே. இனியும் அவர் விரும்புகிறபடிதான் அனுபவிக்கணும். அவரைக் கும்பிடுவதாலோ, நெஞ்சுருகி, ஆடிப்பாடி அவர் புகழ் பாடுவதாலோ  நீ நினக்கிறபடியெல்லாம் எதுவும் நடந்துடாது. புரியுதா?”

“புரியுது.”
=============================================================================================


தாய்க்குலம் ஜாக்கிறதை!!!

தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் வேலை பார்த்த ‘வளர்மதி’ , காவல்துறையிடம் அளித்த புகாரின்பேரில் கைதாகவிருந்த  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே எஸ். இளங்கோவன் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார்.

உயர்நீதிமன்ற ஆணையின்படி, மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட அவர் நேற்று மதுரை சென்றிருந்தார்.

தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவர் வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த அ.தி.மு.க.வினர் கற்களையும் செருப்புகளையும் சரமாரியாக வீசினார்கள் என்பது இன்றைய[28.08.2015] நாளிதழ்ச் செய்தி.

அவர் காவல் நிலையம் சென்றடைந்தபோது, அங்கு காத்திருந்த பெண்கள் சிலர் துடைப்பம், செருப்பு, முட்டை போன்றவற்றால் அடிப்பதுபோல் பாவனை செய்ததோடு இளங்கோவனுக்கு எதிராக ஆபாச வார்த்தைகளால் முழக்கம் செய்திருக்கிறார்கள்.

அவற்றில் ஒரு காட்சியைத்தான் கீழே காண்கிறீர்கள்.
ஒரு கொலையைச் செய்தவன் குற்றவாளி என்றால் அவனைக் கொலை செய்ய முயலுகிற இன்னொருவனும் குற்றவாளியே. ஒருவன் இன்னொருவனை ஆபாச வார்த்தைகளால் திட்டுவது குற்றம் என்றால் திட்டியவனை வேறொருவன் அவ்வாறு திட்டுவதும் குற்றமே. குற்றம் புரிகிற எவருமே தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மோடி - ஜெயலலிதா சந்திப்பை இளங்கோவன் கொச்சையாக விமர்சித்தது குற்றம் எனின், அவர் மீது செருப்புகளையும் துடைப்பங்களையும் வீசுவதுபோல் பாவனை செய்து[சிலர் வீசியும் இருக்கலாம்] அசிங்கமாக முழக்கமிடுவதும் குற்றம்தானே?

தலைவர்களின் உருவப் படங்களைச் செருப்பால் அடித்துத் தீ வைத்து எரிப்பது[இதைச் செய்பவர்களும் தண்டனைக்குரி்யவர்கள்தான்] மட்டுமே கடந்த காலங்களில்[பெரும்பாலும்] இங்கு இடம்பெற்ற நிகழ்வாக இருந்தது. அண்மைக் காலங்களில், மேற்கண்டவாறு செருப்புகளையும் துடைப்பங்களையும் காட்டி அவமானப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன.

நம் தாய்மார்களே[“கூலிப்படை!” - இளங்கோவன்] இம்மாதிரி இழிசெயல்களில் பெரிதும் ஈடுபடுகிறார்கள்.

அம்மனின் அருளாசி பெற்ற தாய்க்குலம் என்பதாலோ என்னவோ இவர்கள் கைது செய்யப்படுவதும் இல்லை; தண்டிக்கப்படுவதும் இல்லை!

எனக்கென்னவோ இவர்களைக் காண்கிறபோதெல்லாம், இராவணனால் இலங்கைக்குக் கடத்திச்செல்லப்பட்ட சீதாப்பிராட்டிக்குக் காவல் புரிந்தார்களே அந்த அரக்கர் குலப் பெண்மணிகள்தான் நினைவில் வந்து வந்து போகிறார்கள்!!!
*****************************************************************************************************************************************************

Monday, August 17, 2015

அவள் அழுதாள்! தன்னந்தனியளாய் ஆனந்தம் பொங்க அழுதுகொண்டிருந்தாள்!!

                                                     ணந்தவன் மாண்டுபோனான்
                                                      மனைவி அழவில்லை
                                                      மற்றவர்கள் அழுதிருக்க
                                                     அவள் மட்டும் அழவில்லை.

                                                      ஊர் அழுதது
                                                      உறவு அழுதது
                                                      ஒப்புக்குக்கூட அவள் அழவில்லை.

                                                      நீலி என்றார்கள்
                                                      நெட்டூரி என்றார்கள்
                                                      கொண்டவனை மதிக்காத
                                                      கோடாரி என்றெல்லாம்
                                                       கூரம்பு பாய்ச்சினார்கள்.

                                                       மூன்று நாள் கழிந்ததும்
                                                       முழு அமைதியில் வீடு.

                                                       அந்த அமைதியில்
                                                       அமைதி தந்த தனிமையில்
                                                       அவள் அழுதாள்.
                                                        ஆறாய் நீர் பாய
                                                        அவனை நினைத்து
                                                        அவள் அழுதாள்.

                                                        அவள் நெஞ்சில்...தொடையில்...
                                                        வயிற்றில்...முதுகில்...

                                                         தினம் தினம் இரவில்
                                                         நித்தம் குடிவெறியில்
                                                         கொள்ளிக் கட்டையால்
                                                         வெண்சுருட்டு நெருப்பால்
                                                         அவன் பதித்த வடுக்களை
                                                         அவளால் மறக்க முடியுமா?

                                                          அவள் அழுதாள்                                              
                                                      .   தன்னை மறந்து அழுதாள்...
                                                          அழுதுகொண்டே இருந்தாள்!

                                                         அழுவதற்கும்கூட 
                                                          இப்போதுதான் அவளுக்குச் 
                                                          சுதந்திரம் கிடைத்திருக்கிறது!!

                                                  **********************************************************************************************************************
மார்ச் 1997 ‘ஓம் சக்தி’யில் ‘ஓம்காரநாத்’ எழுதிய கவிதை. கவிஞருக்கு நன்றி.
***********************************************************************************************************************


                                                                                                                 

                                                       

                                                         

Saturday, August 15, 2015

அறிஞர் அண்ணாவின் அதிமதுரத் தமிழ் நடை!

வானத்திலே பறந்திட்ட அழகு வானம்பாடி வ.ரா. 

எழுத்து வானத்தில், எட்டாத கருத்துயரத்தில், சிந்தனைச் சிறகு கட்டிப் பறந்திட்ட வானம்பாடி அவர்.
இந்த வானம்பாடியை வீழ்த்த வைதிக வல்லூறு வட்டமிட்டபடியே இருந்தது! பழமைக் கழுகும் பறந்தபடிதான் இருந்தது!

ஆனால், வானம்பாடியை எதுவும் வீழ்த்தவில்லை; வீழ்த்த முடியவில்லை!

தன் இச்சைபோல் பறந்துகொண்டிருந்தது அந்த வானம்பாடி!

வ.ரா., பிறப்பால் ‘அந்த’க் குலம்; பிறவற்றாலோ அவர் நம்மவர்; நல்லவர்.

அவர் அக்கிரகாரத்துக்கு ஓர் அபாய அறிவிப்பு!

வைதிகபுரிக்கு அவர் நடமாடும் எச்சரிக்கைப் பலகை!

புரோகித உலகில் அவருக்குப் பெயர் ‘பொல்லாதவர்’!

ஆனால், நமக்கு வ.ரா. ஓர் அரிய வரவு! நல்ல பரிசு! சுவையான விருந்து!

அவர் கருத்து, காலத்திற்கு ஏற்றது; நாட்டுக்கு உகந்தது; நமக்குத் தேவையானது!

அவர் எழுதுகோலைக் குலம் வளைத்ததில்லை!

அவர் எண்ணத்தைக் கோத்திரம் கருக்கியதில்லை!

அவர் கருத்தைச் சாத்திரம் சாய்த்ததில்லை!

அவர் எழுத்து வழுக்கு நிலமல்ல; சறுக்கல் சேறு நிறைந்ததுமல்ல!

எதையும் தெளிவாகச் சொன்னார்; தேவையான அளவு சொன்னார்; இடையில் நிறுத்தியதில்லை.

அவர் உள்ளதை உள்ளபடி கூறியதால் பலரிடம் அவருக்கு வெறுப்பும் பகையும்!

அத்தகைய ‘எழுத்து வானம்பாடி’யை நாம் இழந்துவிட்டோம்.

அவர் மறைவு நிறைவு செய்ய முடியாததுதான்!

எந்த இடத்தில் எவை வாராவோ, அவை அத்தனையும் வரும் என்று நாட்டுக்கு அறிவித்தார் வ.ரா.

விஷக்குளத்தில் கிடைத்த புத்தமுது அவர்!

கள்ளிக்கிடையே நமக்குக் கிடைத்த காட்டு ரோஜா அவர்!

பாலைவனத்தின் இடையிலுள்ள சோலை அவர்!

ஆம், புரோகிதபுரியிலே, நமக்குக் கிடைத்த எதிர்பாராத செல்வம் அவர்.

அவர் அக்கிரகாரத்தில் உதித்த அதிசயப் பிறவி. ஆனால், நாடோ, அவரை அவசியப் பிறவி என்று போற்றியது; இன்று அவர் பிரிவால் அது பொருமுகிறது! அழுகிறது!

அந்தத் துக்க ஊர்வலத்தில், நம் வீங்கிய இதயங்களும் வீதிவலம் வருமாக!
                                                                                                          -திராவிட நாடு, 02.09.1951
=============================================================================================

இதை எடுத்தாண்ட விகடன் பிரசுரத்தார்க்கு நம் நன்றியும் பாராட்டுகளும். நூல்: ‘தமிழ்ப் பெரியார்கள்’[விகடன் பிரசுரம்]. முதல் பதிப்பு: மே, 2015.

எங்கெங்கு காணினும் மூடரடா!!! [பழசய்யா...பழசு!]

‘மாணவர் உலகம், மழலையர் உலகம், குடிமகன்கள் உலகம் போல, இதுவும் ஒரு தனி உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உலக நாடுகள் அனைத்திலும் இவர்களே பெரும்பான்மையினர். எனவே, நாம் வாழும் இந்த உலகையே, ‘மூடர் உலகம்’ என்றழைத்தால் அதில் தவறேதும் இல்லை.

ஒட்டுமொத்த  மூடர்களின் எண்ணிக்கை பற்றிய ‘கணக்கெடுப்பு’[Survey] எதுவும் உலக அளவில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. அது சாத்தியப்பட்டிருந்தாலும் அதன் நம்பகத்தன்மைக்கு எவரும் உத்தரவாதம் தர இயலாது. காரணம், “நான் மூடன்” என்று மனம் திறந்து சொல்லும் பெருந்தன்மை மனித குலத்தவரில் பலருக்கு இல்லை என்பதுதான்.

இங்கு பெரும்பான்மையினர் அவர்களே என்பது நிரூபிக்கப்படவில்லை எனினும், அது சாத்தியமே என்று நம்புகிறார்கள் ஆய்வுலக அறிஞர்கள்.

"I can't give you a percentage, but I'd say it's pretty high because most of us, whether we admit to it or not, have our own superstitions." [-"percentage of people who believe superstitions" - Yahoo Answer] என்பது ஒரு கருத்து.

 "Nobody can give you a percentage, because there are so many different superstitions. Some people don't even realize that they're superstitious." [-Yahoo Answer]

இணையத் தேடலின் மூலம், நாடு வாரியான, குத்துமதிப்பான புள்ளிவிவரங்களை ஆங்காங்கே  காண முடிகிறது. அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.
1. “.....over 85% of us have at least one superstitious belief.....” [tombola, Britain's biggest bingo site]

2.“I'd say at least 90% of Americans do. Most are Christian (80-87%), and I'm sure there are superstitious folks within the remainder, so round it up to 90." [-Google Search]

3.
According to one survey, 80 percent of Chinese visit fortunetellers. [-Google...]
4. [Ipsos MORI and Ben Schott of 'Schott's Almanac' ஆகியோர் நிகழ்த்திய ஆய்வின்படி,  இங்கிலாந்தில், ‘விதி’, ’ஆன்மா’ போறவற்றை நம்புவோர் எண்ணிக்கை ஐம்பது விழுக்காட்டைத் தாண்டுகிறது. இவற்றையும், கடவுள். சொர்க்கம், மறுபிறப்பு போன்றவற்றையும் நம்பும் பெண்கள் இங்கே அதிகம்.

5. ஜப்பானில், எண் 4 கேடு தருவதாகப் பலரும் நம்புகிறார்கள். நம்மைப் போலவே அவர்களுக்கும் பூனை குறுக்கிடுதல் கெட்ட சகுனம்!
6. இந்தியர் நிலை குறித்துச் சொல்லவும் வேண்டுமோ? மூடநம்பிக்கைகளைக் கட்டிக் காப்பதில் இவர்கள் உலகின் நம்பர் 1 என்று சொல்லலாம். ஆனாலும் நம் ஆய்வாளர்கள், 61%, 51% என்றெல்லாம் குறைத்துச் சொல்லி முழுப் பூசணிக்காயைக் கொத்து புரோட்டாவில் மறைக்கிறார்கள்.

எது எப்படியோ, முன்பு எப்போதும் இருந்ததைக் காட்டிலும்,  ஆறாம் அறிவு வளர்ச்சி கண்டிருக்கும் இந்நாளிலும், மூடநம்பிக்கைகளுக்கு இரையாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.[The modern world is seeing an increasing number of people falling prey to irrational beliefs.....http://www.dailymail.co.uk/femail/article-1280741/Are-YOU-ruled-superstition-It-modern-world-driving-mad-irrational-fears-OCD-rise.html#ixzz37LLRLiD]

அரசியல், அறிவியல், சமயம், ஊடகம், இலக்கியம் என்று அனைத்து உயிர்நாடியான துறைகளிலும் மூடநம்பிக்கையார்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. அவர்களைத் திருத்துவதோ திருந்தச் செய்வதோ அத்தனை எளிதான செயலல்ல. தாம் ஈடுபடுவது மூடத்தனமான செய்கைகளில் என்பது தெரிந்திருந்தும், தங்களது கௌரவத்தையும் சமூக அந்தஸ்தையும் தக்க வைத்துக்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதே அதற்குக் காரணம்.

இவ்வுண்மையை, அறியாமையால் மூடத்தனங்களின் பிடியில் சிக்குண்டு அல்லல்படும் எளிய மக்களுக்கு உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.
============================================================================================================================

நன்றி: 'மூடர் உலகம்' வலைப்பதிவு. 
Thursday, August 13, 2015

தமிழுக்குத் தொண்டு செய்தோர் இப்படித்தான் சாக வேண்டுமா?! அடக் கடவுளே!!


*கைகால்களில் சொறிசிரங்கு பரவிப் பெரிதும் உடல் மெலிந்த நிலையில் தம் இறுதி நாட்களைக் கடத்தினார் கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை.

*தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாண சுந்தரனார், நலிந்து மெலிந்து கண்பார்வை கெட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார் தம் அந்திமக்காலத்தில்.

*வீங்கிய கால்களுடன் நடமாட இயலாமல் முடங்கிக் கிடந்து இயற்கை எய்தினார் டி.கே.சி.

*தனித்தமிழ் வளர்த்த மறைமலை அடிகள், தம் இறுதிக் காலத்தில், இதயம் பலவீனப்பட்டு, உணர்வற்றுக் கிடந்துதான் இறந்துபோனார்.

*ராஜாஜி மண்டபத்தில் நடந்த கவிமணியின் இரங்கல் கூட்டத்தன்று, “நான் முதலில் பேசிவிடுகிறேன். மற்றவர்கள் பேசி முடிக்கும்வரை நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது” என்று பேசினாராம் கல்கி. இது, அவர் வழக்கமாகப் பேசும் நகைச்சுவைப் பேச்சு என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், கவிமணியின் அனுதாபக் கூட்டத்துக்கு மறு நாளே, அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார் அவர்.

*1935ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பிறந்த எழுத்தாளர் சுஜாதா சில காலமாகவே சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் உடல் நிலை மோசமானதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்.,27 ) இரவு 9.30 மணியளவில் சுஜாதாவின் உயிர் பிரிந்தது. -Lakshman Sruthi.com

*80ஆவது வயதில் காலமான, பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரகப் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச்  சேர்க்கப்பட்டிருந்தார். -தினத்தந்தி, ஆகஸ்டு 13, 2015.

*எழுத்தாளர் சு.சமுத்திரம், கார் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய கட்டணம் செலுத்தாததால் சிகிச்சை மறுக்கப்பட்டு மரணமடைந்தார்.

*சிறுகதை மன்னன் புதுமைப் பித்தன், சயரோகத்தால் பாதிக்கப்பட்டு, அது தீவிரம் அடைந்த நிலையிலும் சிகிச்சை பெறப் பணம் இல்லாததால் நீண்ட நாட்கள் மரண வேதனையை அனுபவித்து மாண்டுபோனார்.

"காசநோய்க்கு இரையாகி மரணப்படுக்கையில் படுத்துக் கிடந்த புதுமைப்பித்தனிடமிருந்து எனக்கு ஒரு குறிப்பு வந்தது. "ஒளி அணைந்து வருகிறது. நீ வந்தால் ஒருவேளை தூண்டிவிடுவாய். கொஞ்ச நேரமாவது வெளிச்சமாக இருக்கும். வா...'’  -இந்தக் கடிதம் என் நெஞ்சை என்னவோ செய்தது. அவசரமாக ஓடினேன். புதுமைப்பித்தன் படுக்கையில் மூடிப் புதைத்துக்கொண்டு படுத்திருந்தார். என்னைக் கண்டதும், "வாடா.. ராசா! தமிழுலக இலக்கிய மேதை கிடக்கிற கிடையைப் பார்த்தியா?' என்றார். நான் ஒன்றுமே சொல்லாமல் நின்றேன். "எத்தனையோ பேர் செத்தவங்களுக்குக் கோபுரம் கட்டறாங்க பாரு, ஒத்தனாவது சாகிறவனுக்கு ஒத்தாசை பண்ண வாரானுகளா? ராசா.. நீயாவது என் பக்கத்திலே இருக்கீயே ! செய்யணும்கிறதைச் சாகிறதுக்கு முன்னாலேயே செஞ்சுப்புடு' என்றார் அவர். பிறகு இருமல். இருமலால் அவரது உடல் முழுவதும் பஞ்சாகப் பதறியது.....”  -கலா ரசிகர் எஸ்.சிதம்பரம், கட்டுரை: வே.முத்துக்குமார், 01.02.2015 நக்கீரன்.
*****************************************************************************************************************************************************

தகவல்கள் வழங்கிய சில நூல்களின் பெயர்கள் மறந்துவிட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். 

Wednesday, August 12, 2015

கனவில் கரைந்த என் காதல் கல்யாண ஆசை! [பழையது]

காளைப் பருவத்தில், காதலித்துக் கடிமணம் புரியும் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், அழகான பெண்களைச் சந்தித்த போதெல்லாம் என் பார்வை அவர்களின் கவர்ச்சிப் பிரதேசங்களில் சஞ்சரிக்க, உணர்ச்சி நரம்புகளில் காமம் சுரந்ததே தவிர, மனதில் காதல் அரும்பியதே இல்லை. “ஏன், எனக்கு மட்டும் இப்படி?” என்று கேட்டு நான் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு. இனி, மேலே படியுங்கள்..........


ங்கே ‘காளைப் பருவம்’ என்று நான் குறிப்பிடுவது கல்லூரிகளில் படித்த நாட்களை.

பட்ட மேற்படிப்பை முடிக்கவிருந்த தருணத்தில் அந்த இலட்சியம் என்னைச் சிக்கெனப் பற்றிக்கொண்டது.

கலப்பு மணம்! “என் ஜாதிப் பெண்ணின் கழுத்தில் கனவிலும் தாலி கட்ட மாட்டேன்” என்று என்னைச் சபதம் மேற்கொள்ள வைத்தது இந்த இலட்சியம்தான்.
இப்படியொரு இலட்சியத்தை நான் சுமப்பதற்குக் காரணமாக இருந்தவர் எங்கள் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகர்.

இரண்டாம் ஆண்டின் இறுதி வேலை நாளில் நடைபெற்ற ‘பிரியா விடை’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர்தான் இப்படியொரு இலட்சிய நெருப்பை, நான் உட்படப் பல மாணவர்களின் அடிமனதில் பற்ற வைத்தார்.

“சமுதாயத்தைச்  சீரழித்துக்கொண்டிருக்கும் பீடைகளில் சாதி வேறுபாடு மிக முக்கியமானது. அதை வேரோடு பிடுங்கி அழிக்கவேண்டுமென்றால் கலப்பு மணங்கள் பெருக வேண்டும். உங்களில் எத்தனை பேர் கலப்பு மணம் புரியப் போகிறீர்கள்? அந்த உயர்ந்த நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் எழுந்து நின்று மனம் திறக்கலாம்” என்று சொல்லி அமர்ந்தபோது மாணவர்கள் பலர் வீறுகொண்டு எழுந்து நெஞ்சு நிமிர்த்திச் சபதம் ஏற்றார்கள். அந்த ‘லட்சிய புருஷர்’களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

முதல்வர் மேடையிலிருந்து இறங்கி வந்து ஒவ்வொருவராகக் கை குலுக்க, மாணவிகள் [அவர்களில் யாரும் சபதம் ஏற்கவில்லை] கரவொலி எழுப்ப, அரங்கில் உற்சாகம் கரை புரண்டது.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் சக மாணவன் குணசீலனின் பேச்சால் கரை புரண்ட உற்சாகம் காற்றோடு கலந்து மறைய, அங்கு இனம் புரியாத சோகம் பரவியது.

அவன் சொன்னான்: “எனக்கும் கலப்பு மணம் புரிய ஆசைதான். ஆனால்.....” என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி, எல்லோருடைய முகங்களிலும் கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கவனித்துத் தொடர்ந்தான்.......

“நான் ச.......ஜாதியில் பிறந்தவன். என் ஜாதியைக் காட்டிலும் அந்தஸ்து குறைந்த ஜாதி இந்த நாட்டில் இல்லை.  தாழ்த்தப்பட்ட மற்ற ஜாதிக்காரர்கள்கூட எங்களை  மதிப்பதில்லை. மண உறவும் வைத்துக்கொள்வதில்லை. நான் கலப்பு மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டால் அது நிறைவேறுமா?”

முதல்வர் உட்பட அங்கிருந்தவர்களில் எவருக்குமே இதற்கான பதில் தெரிந்திருக்கவில்லை.

அனைவரும் சோகம் சுமந்து பிரியா விடை பெற்றோம்.

நான் கணக்கு வழக்கில்லாமல் காதல் கவிதைகள் படித்திருக்கிறேன். கொஞ்சம் கவிதைகளும் பல கதைகளும் எழுதியிருக்கிறேன்.

காதலிப்பது என்று கோதாவில் இறங்கியபோது அந்தக் கவிதைகளும் கதைகளும் எனக்குக் கை கொடுக்கவில்லை.

நான் ஆசைப்பட்ட அழகுப் பெண்களுடன் நெருங்கிப் பழக முற்பட்ட போதெல்லாம், அவர்களின் கவர்ச்சிப் பிரதேசங்களில் என் பார்வை படர, என் உணர்ச்சி நரம்புகளில் காமம் சுரந்ததே தவிர காதல் அரும்பியதே இல்லை.

அது தனிக்கதை. இப்போது வேண்டாம். கலப்பு மண லட்சியம் காணாமல் போன கதையை மட்டும் இப்போது சொல்லி முடித்துவிடுகிறேன்.

படிப்பு முடிந்து சொந்த ஊர் போய்ச் சேர்ந்தபோதே, நான் ஏற்றிருந்த ‘கலப்பு மண’ லட்சியம் என் அடிமனதின் எங்கோ ஒரு மூலையில் பதுங்கிவிட்டது. காரணம்.........

என் கல்யாண விசயத்தில் என் அப்பா போட்ட 'வெடிகுண்டு'.

“இதோ பாருடா பரமு, நிலத்தை அடகு வெச்சுக் கடன் வாங்கித்தான் உன்னைப் படிக்க வெச்சேன். சீக்கிரம் ஒரு வேலையைத் தேடிட்டு இந்தக் கடனை அடைக்கிற வழியைப் பாரு. நிலத்தை மீட்ட அப்புறம்தான் உனக்குக் கல்யாணம் காட்சியெல்லாம்.”

இதற்கப்புறமும் கலப்பு மணக் கனவைச் சுமந்து திரிவது மிகவும் சிரமமாகத் தெரிந்தது.

இரண்டு மாத கடின முயற்சியின் பலனாகக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். ஒரு மாத ஊதியம் வாங்கியவுடனே அடிமனதில் பதுங்கியிருந்த கலப்பு மண லட்சியம், வெண்ணிற ஆடைத் தேவதையாய் என்னைச் சுற்றிவர ஆரம்பித்தது.

அப்பாவுக்குத் தெரியாமல், ஒரு தரகரைச் சந்தித்து என் இலட்சியத்தை எடுத்துரைத்தேன்.

”முடிச்சுடலாம்” என்றவர், சில கேள்விகளை முன் வைத்தார்.

“பொண்ணு ரொம்ப அழகா இருக்கணுமா, இல்ல ‘தேவலாம்’ போதுமா?”

“வேறு ஜாதின்னா..... தாழ்த்தப்பட்ட வகுப்பா இருந்தாலும் பரவாயில்லையா?”

“வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணுமா, வேண்டாமா?”

எனக்குள், இலட்சியம் இருந்த இடத்தை இப்போது குழப்பம் கைப்பற்றியது.

“யோசித்துச் சொல்வதாகத் தரகரை அனுப்பி வைத்தேன்.

அப்புறமென்ன, கல்லூரியில் பாடம் நடத்திய நேரம் போக மிச்ச நேரமெல்லாம் இதே சிந்தனைதான்.

சபதம் போட்ட சக மாணவர்களில் எத்தனை பேருக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்? எல்லாமே கலப்பு மணமாக இருக்குமா? என்ற கேள்விகளும் அவ்வப்போது தலை காட்டின. குணசீலனை நினைத்தும் மனம் வருத்தப்பட்டது.

மாதங்கள் கரைந்துகொண்டிருந்தன.

ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலைப் பொழுதில் தந்தை அழைத்தார்.

“பரமு, உனக்காக நான் பட்ட கடனை நீ அடைக்க வேண்டியதில்லை. அதுக்கு ஒரு வழி பிறந்துடிச்சி” என்று செல்லமாக என் முதுகில் தட்டினார்; சொன்னார்:

“பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருப்பா. நமக்குத் தூரத்துச் சொந்தம். நீ மறுத்துப் பேச மாட்டேங்கிற நம்பிக்கையில் வாக்குறுதி குடுத்துட்டேன். வர்ற தையில் கல்யாணம். பொண்ணு அம்பது பவுன் நகையோட, அம்பதாயிரம் பொட்டிப் பணத்தோட நம்ம வீட்டு வாசல்படி மிதிக்கப் போறா. உன் எதிர்கால மாமனார் போன வாரமே உனக்காக ஒரு புல்லட் பைக் புக் பண்ணிட்டார். சந்தோசம்தானே?”

நான் ஒரு வாரம்போல மனத்தளவில் துக்கம் அனுஷ்டித்தது என்னவோ உண்மை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் மனதைத் தேற்றிக்கொண்டேன்.

அடுத்த பிறவியில் என் கலப்பு மண இலட்சியத்தை நிறைவேற்றுவதாகச் சபதம் செய்துகொண்டேன். [சிரிக்கிறீங்கதானே? வேண்டாங்க. கடவுள் நமக்குப் பல பிறவிகளைக் கொடுத்தது வேறு எதுக்கும் இல்லீங்க. இந்த மாதிரி நிறைவேறாத இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளத்தான்].

அப்புறம்?

அப்புறமென்ன, ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் [அந்தக் காலத்தில் இதுக்கு இருந்த மவுசு சொல்லி மாளாதுங்க] புது மனைவியோடு ஒவ்வொரு விடுமுறையிலும் உல்லாசப் பயணம்தான். “உல்லாச உலகம் எனக்கே சொந்தம்னு” அப்போ அடிக்கடி முணுமுணுத்த பாடலை இப்பவும் முணுமுணுக்கிறேன்னா பாருங்களேன்.........

இங்கே ஒரு குறுக்கீடு..........

“ஏய்யா, ‘கனவில் கரைந்த என் காதல் கல்யாண ஆசை!’னு தலைப்பே கொடுத்திட்டியே. அப்புறம் எதுக்கு இந்த வழவழா கொழகொழா கதை?"ன்னு நீங்க இப்போ கோபப்படுறீங்கதானே?

கொஞ்சம் பொறுங்க. நான் சொல்ல வந்ததைக் கடைசியா சொல்லி முடிச்சிடுறேன். அதைச் சொல்லத்தான் நீட்டி முழக்கிய இந்த என் இலட்சியக் கதை.

ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில், என் இளம் இல்லக் கிழத்தியோடு ஏற்காடு மலையைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்தேன்.

முதலில் லேடீஸ் சீட் போனோம். அங்கேதான் எதிர்பாராம குணசீலனை அவன் மனைவியுடன் சந்தித்தேன். கை குலுக்கிக் கொண்டோம்.

அவன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘உன் இலட்சியம் நிறைவேறிடிச்சிதானே?”

என்ன சொல்வது?

அசடு வழிய, “தோத்துட்டேன்” என்றேன்.

“அன்னிக்கே சொன்னேன் இல்லையா? எனக்கும் தோல்விதான். இவள் என் ஜாதிக்காரிதான்” என்றபடி தன் மனைவியைத் தொட்டுக்காட்டிச் சிரித்தான்.

படிப்பை முடித்த பிறகு ஏற்பட்ட அனுபவங்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டிருந்தபோது அதைக் கவனித்தேன்.

அவன் மனைவிக்கு ஒரு கால் ஊனம்.

“குணசீலன், நீ ஜெயிச்சுட்டே” என்றேன்.

முதலில் ஏதும் புரியாமல் விழித்தாலும் என் பாராட்டுக்கான காரணம் புரிந்தபோது, “இது இல்லேன்னா அது. அது இல்லேன்னா இது. வாழ்க்கையில் இலட்சியங்களுக்கா பஞ்சம்?” என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தான்; விழிகளில் அன்பு பொங்க ஊனமுற்ற தன் துணைவியின் தோள்களை வருடிக் கொடுத்தான். இப்போது...........

என்னைவிடச் சற்றே உயரம் குறைந்த அவன், நான் அண்ணாந்து பார்க்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்திருந்தான்.

பிரிய வேண்டிய கட்டம் வந்ததும் இரு கரம் குவித்து வணக்கம் சொன்னேன்.

அது வெறும் சம்பிரதாயமான வணக்கம் அல்ல; லட்சியப் பிடிப்புள்ள ஓர் உன்னத மனிதனுக்கு நான் செலுத்திய மரியாதையின் வெளிப்பாடு.

======================================================================
Tuesday, August 11, 2015

கடவுள் மறுப்பு! பகுத்தறிவு வளர்ப்பு! மனிதம் போற்றல்!

இந்தப் பதிவு உங்களின் கடவுள் நம்பிக்கையைச் சிதைப்பதற்காக அல்ல; சிந்திப்பதற்கு மட்டுமே.
100விழுக்காடு விலங்காக வாழ்ந்து கொண்டிருந்த மனிதன்சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பு உண்டாக்கக் கற்ற போதே அவனது ஆறாவது அறிவு செயல்படத் தொடங்கிவிட்டது.

அது படிப்படியாக  வளரஒரு தலைவனின் ஆளுமையின் கீழ் குழு 
சேர்ந்து [பல்வேறு குழுக்களாக]வாழக் கற்றுக்கொண் டான்; பாதுகாப்பான குடியிருப்புகளை உருவாக்குதல், உணவைப் பதப்படுத்துதல், 
வேட்டைக்கான கருவிகளைப் படைத்தல் என்றிப்படி .............

மனிதனின்வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக மாற்றவும் வசதிகள் 
நிறைந்ததாக ஆக்கவும் அந்த ஆறாவது அறிவு பயன்பட்டது.
எதார்த்த வாழ்வுக்காக மட்டுமே அது பயன்படும் நிலை நீடித்திருந்தால்.....

கடவுளைக் காட்டி மனிதனின் பகுத்தறிவு முடக்கப்படாமல் இருந்திருந்தால்..............

மனித இனத்தின் முன்னேற்றம் இன்று இருப்பதைக் காட்டிலும் மிகப் பல மடங்கு அதிகரித்திருக்கும்.
மனிதன் வேற்றுக் கிரகங்களில் குடியேறியிருக்கக்கூடும்அவனுடைய ஆயுள் நிச்சயமாகச் சில நூறுகளைக் கடந்திருக்கக்கூடும்!

அன்றிலிருந்து இன்றுவரை, கடவுளை நம்ப வைப்பதிலும்அவர் பற்றி விதம் விதமான கதைகளை இட் டுக்கட்டுவதிலும்அவை பற்றி விவாதிப்பதிலும், பிற மத அழிப்பு நடவடிக்கைகளிலும், இம்மாதிரியான பிற செயல்களிலும் மனித அறிவில் பெரும் பகுதி வீணடிக்கப் பட்டு
விட்டது.

ஆதிமனிதன் இயற்கையின் சீற்றங்கள் கண்டு அஞ்சினான்.
சீற்றங்கள் கண்டு அஞ்சியதில் வியப்பில்லைதவறுமில்லை.
ஏனென்றால்தன்னைத் தாக்கி அழிக்கவல்ல அதீத சக்திகளைக்  கண்டு அஞ்சுவது உயிரின் இயல்பு.
அஞ்சியதோடு நில்லாமல்அந்த அழிவு சக்திகளையே அவன் வழிபட ஆரம்பித்ததுதான் பெரும் தவறாக அமைந்துவிட்டது. [நீரையும் நெருப்பையும் காற்றையும் மனித இனம் கடவுள்களாக வழிபட்டதும்இன்றும் வழிபடுவதும் யாவரும் அறிந்ததே]

வலியவனால் தாக்கப்பட்ட போதுஎளியவன் அவனைப் பணிந்து  
வழிபட்டுத் தன்னைக் காத்துக்கொண்ட அந்த வாழ்க்கை அனுபவம்தான் மனிதன் கடவுளை வழிபடக் காரணமாக அமைந்தது என்பது 
அனைவரும் உணர வேண்டிய உண்மை.

அந்த அடிப்படையில்தான் ‘மேலானவர்’ என்று நம்பப்பட்ட கடவுளும் மனிதர்களால் பணிந்து துதிக்கப்பட்டார்.
அறிவைச் செலவழித்து ஆழ்ந்து சிந்திப்பது என்பது அரிய செயல்.
மூளை உழைப்பு என்பது கடினமான ஒன்று.

தனக்கு வேண்டியவற்றை, அயராமல் ஓயாமல் நம்பிக்கை இழக்காமல் 
சிந்தித்துச் சிந்தித்து, உழைத்துப் பெறுவதைக் காட்டிலும், குறுக்கு வழியிலும் குறுகிய காலத்திலும் தன்னை வருத் திக் கொள்ளாமல்  அடைய 
நினைப்பது மனித குணம் !

அதனால்...........

தன் விருப்பங்களை நிறைவேற்ற மனிதன் ‘கடவுள்’ என்ற ஒருவரை நாடியதில் ஆச்சரியம் இல்லை!

மக்களின் அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டிய கவுதம புத்தன் 
போன்ற அறிஞர்கள் கடவுளைப் பற்றி ஒருபோதும் கவலைப் 
படவில்லைஅவர்கள் கவலைப் பட்டதெல்லாம் மனித வாழ்வை... 
உயிர்களின் வாழ்வைப் பற்றித்தான்.

இப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்களையெல்லாம் கடவுள்கள் அல்லது 
கடவுளின் அவதாரங்கள் ஆக்கியது மாபெரும் தவறு. அதைச் செய்தவர்கள் மதவாதிகள். மனிதனின் ஆறறிவு வளர்ச்சிக்குத் தடைக் கற்களாய் அமைந்தவர்கள் இவர்களே.

இவர்கள் கடவுளைக் காட்டி, மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து 
விடுபடாதவாறு 
தடுத்ததுடன் நில்லாமல்தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பல  அறிஞர்களைத் தண்டித்தார்கள். இதனால், மனிதனின் ஆறறிவு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது.

சிக்கிமுக்கிக் கற்களால் நெருப்பு உண்டாக்கப்பட்ட காலத்திலிருந்து 
இன்றுவரைகடவுளை..... மதங்களைப் பற்றிய சிந்தனைக்கு இடம் தராமல்மனிதன் முழுமையாகத் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தியிருந்தால் ............

மனித இனம் பிற கோள்களிலும் குடியேறி  வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்.
மனிதனின் ஆயுள் காலம் சில நூறுகளைக்  கடந்திருக்கக்கூடும்

‘ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தென்ன பயன்? மனிதனை மனிதனாக வாழ வைத்திருப்பது கடவுள் நம்பிக்கைதானே? அந்த நம்பிக்கையை மனிதனின் அடிமனதில் ஆழப் பதித்தவர்கள் மதவாதிகள் அல்லவா?’ என்றெல்லாம் நீங்கள் நினைப்பது புரிகிறது. மன்னியுங்கள்...அது தவறு என்பது என் கருத்து.


மனிதனை மனிதனாக, அதாவது, நற்பண்புகளும் உயர் குணங்களும் உள்ளவனாக வாழத் தூண்டியது அவனுக்கு இயற்கையாக வாய்த்த பகுத்தறிவுதான்; மதமோ கடவுள் நம்பிக்கையோ அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.
**********************************************************************************