தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Aug 1, 2015

'முதல் இரவு'த் தம்பதியருக்குப் பத்து அறிவுரைகள்!


திருமணத்திற்குக் காத்திருக்கும் ஒவ்வொருவரும் ‘உடலுறவுக் கலை’யை ஓரளவேனும் கற்றறிந்திருப்பது அவசியம். மருத்துவர்கள் பரிந்துரைத்த, உடலுறவு தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களைப் படிக்கலாம். தம்பதியருக்கான கொஞ்சம் அறிவுரைகள்!
ஒன்று: 
‘கணவன் மனைவி’ என்றாகிவிட்ட நிலையிலும்,  தேவையான அறிமுகமும், நெருக்கமும் ஏற்பட்டு ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல் உடலுறவு கொள்வது சரியல்ல.

இரண்டு: 
தாம்பத்தியத்திற்கு லாயக்கானவர்தான் என்பதை நிரூபித்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின்போது இருபாலருக்கும் அளவுக்கதிகமான பதற்றமும் இருக்கும். அந்தப் பதற்றத்துடன் உறவு கொள்ளும் போது பெருத்த ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடலாம். தாழ்வு மனப்பான்மை, இருபாலரிடமும், குறிப்பாக, ஆடவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிடக்கூடும்.

மூன்று: 
முதலிரவன்று புதுமணத் தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசுதல் வேண்டும். அது ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்; உறவைப் பலப்படுத்தும். இருவரின் விருப்பு வெறுப்புகள், குடும்பச் சூழ்நிலைகள் பற்றியெல்லாம் அறிந்துகொள்வது அவசியத் தேவை.

நான்கு: 
பால், பழம் என எதையுமே தனித்தனியே உண்பது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். புகட்டுவது; ஊட்டிவிடுவது என்று ஒட்டி உறவாட வைக்கும் செயல்பாடுகளைத் தவிர்த்தல் வேண்டும். அவசரம் கூடாது; கூடவே கூடாது.

ஐந்து:  
காதலைக் கண்களால் பரிமாறிக்கொண்டாலே போதும்.  ஒரே அறையில் இருந்தாலும் தனித் தனியே படுத்துத் தூங்குவது சிறந்தது.

ஆறு:  
இருவருக்குமிடையேயான தயக்கங்களும்  கூச்சங்களும் பெருமளவு களையப்படுதல் மிக முக்கியம். அப்போதுதான் மனம் திறந்து எண்ணங்களைப் பகிர்தல் சாத்தியமாகும். 

ஏழு: 
திருமணமான முதல் நாளே  உறவைத் துவக்கும் தம்பதியருக்கு, நாள் முழுக்கச் சொந்தபந்தங்களுடன் உடனுறைந்த காரணத்தால் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எட்டு: 
திருமணம் ஆன 3 நாட்களுக்குப் பிறகு புணர்ந்து மகிழ்தலே சிறந்தது என்கிறார் ‘காமசூத்திரம்எழுதிய வாத்ஸாயனர்.

ஒன்பது: 
முதலிரவு அன்றே முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்னும் ‘அதீத வேட்கை’ கூடாது. காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம்.

பத்து: 
பிரபல நடிக நடிகையர், தாம் சந்தித்த ஆணழகர்கள் அழகிகள் போன்றோருடன் தம் துணையை ஒப்பிட்டு ஆராய்தல் தவறாகும். "நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்பது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டித் தூர எறிந்து விடவேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், அது மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையைக் காண முடியாது; வெறுமைதான் மிஞ்சும். 

மேற்சொன்ன அறிவுரைகளைப் பின்பற்றி, உகந்த சூழல்[இரவோ பகலோ] உருவாகும்வரை காத்திருந்து உடலுறவு கொண்டால், நிறைவான புணர்ச்சி இன்பத்தைத் தம்பதியர் இருவரும் நுகர முடியும் என்பதில் எள்ளளவும் ஐயத்திற்கு இடமில்லை.

 மேற்கண்டவற்றில் பெரும்பான்மையான கருத்துகள், viyappu.com' உரிமையாளரிடமிருந்து இரவல் பெற்றவை. அவருக்கு நன்றி.
*****************************************************************************************************************************************************