தேடல்!

மனிதர்களின் ஆறறிவுக்கும் மேலான பேரறிவு உடையோனே கடவுள் என்கிறார்கள். பேரறிவுக்கும் மேலான பெரும் பேரறிவு இருக்கும்தானே?!

Dec 4, 2015

‘இந்து தர்மம்’ காப்போர் கவனத்திற்கு!

‘காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டவரால் சொல்லப்பட்ட இந்துமதம் பற்றிய கருத்துகளைத் ‘தெய்வத்தின் குரல்’[5000 பக்கங்கள்] என்னும் தலைப்பில் வெளியிட்டது வானதி பதிப்பகம். அதன் சாரத்தை, 256 பக்கங்களாகச் சுருக்கினார் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ இராமசாமி. ‘இந்து தர்மம்’ என்னும் தலைப்பில் அது நூலாக வெளியானது. 

மேற்கண்ட இரு நூல்களுமே தமிழில் எழுதப்பட்டவை. 

இவர்கள் சமஸ்கிருதத்தைத் ‘தேவ பாஷை’ என்று போற்றுபவர்கள். தமிழ் ‘நீச பாஷை! 

இந்து தர்மத்தைக் காப்பதற்கு இவர்களுக்கு இந்த நீச பாஷை தேவைப்படுகிறது. ஆனால், இதை மதித்துப் போற்றும் குணம் இவர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இவர்களின் கைகளில் சிக்கித் தமிழ் படும்பாடு சொல்லி மாளாது. படிக்கப்படிக்க மனம் பதைபதைக்கிறது. 
எடுத்துக்காட்டாக, ‘இந்து தர்மம்’ நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.

#குருவைத் தேடிக்கொண்டு புறப்பட்ட ஆச்சார்யாள் வடக்காக வெகுதூரம் போய் நர்மதைக் கரையை அடைந்தார். அங்கே கோவிந்த பகவத் பாதர் நிஷ்டையில் இருந்தார். சாஸ்த்ர ப்ரகாரம் ஆசார்யாளுக்கு அவர் சந்நியாஸ ஆசரமம் கொடுத்து உபதேசம் பண்ணினார். கோவிந்த பகவத்பாதான் ஆசார்யாளிடம் வ்யாஸா ஆஜ்ஞைப் படியே தாம் வந்து உபதேசம் பண்ணியதாகச் சொன்னார். வ்யாஸருடைய ப்ரஹ்மஸூத்ரத்தின் ஸரியான தாத்பர்யத்தை விளக்கி ஆசார்யாள் பாஷ்யம் பண்ணி சுத்த வைதிகத்தையும் கத்தாத்வைதத்தையும் ப்ரகாசப்படுத்த  வேண்டும் என்ற ஆஜ்ஞையையும் தெரிவித்தார். ஆசார்யாள் வ்யாஸருடைய சூத்திரத்தின் தாத்பர்யமெல்லாம் ப்ரகாசிக்கும்படியாக பாஷ்யம் பண்ணி குருவின் சரணத்தில் வைத்து அவருக்கு நிரம்பக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு சில காலம் கூட இருந்தார். எந்நாளும் ஸனாதன தர்மத்தில் நிற்பதற்கான பாஷ்யங்களை........

ஆசார்யாள்......தாமே ஸொந்தமாக எழுதிய ஞான நூல்களான ‘ப்ரகர்ண’ங்களில் ஸித்தாந்த வாதமாக .....

ஆசார்யாள் வாஸம் செய்துகொண்டு இருந்தபோதே.... அவருக்குப் பதினாறு வயஸ்கூடப் பூர்த்தியாகாத ஸமயம். லோகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் ஆசார்யாளுடைய ஸூத்ரபாஷ்யத்தின் பெருமையைத் தெரியப் பண்ணவேண்டும் என்று ஸூத்ரகர்த்தாவான வ்யாஸர் நினைத்தார்.........#

‘இந்து தர்மம்’ 2010ஆம் ஆண்டில் பதினான்காம் பதிப்பைக் கண்டிருக்கிறது. இயன்றவரை நல்ல தமிழில் இதைப் பதிப்பிக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் இந்நாள்வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லாமல்போனது ஏன்?

‘தமிழ் இருந்தாலென்ன, அழிந்தாலென்ன; இந்து தர்மம் காப்பதே நம் கடமை’ என்று எண்ணுகிறார்களோ?!
=============================================================================================