Saturday, February 27, 2016

பாவி மனிதா, இந்தப் பறவைகளைப் பார்! பாடம் படி!!

எச்சரிக்கை!.....இது, பழைய குப்பை! ‘நான்...நீங்கள்...அவர்கள்!’ தளத்தில் வெளியானது. விரும்பினால் கிளறலாம்.

னிதன் மிருகமாக இருந்தவரை ‘காமம்’ என்பது ஓர் ‘உணர்ச்சி’யாக மட்டுமே இருந்தது. ஆறறிவு பெற்ற பிறகு அது ‘வெறி’யாக மாறிவிட்டது. குழந்தை வளர்ப்பு அப்போது ‘சுகம்’ அளித்தது; இப்போது பெரிய சுமையாக வருத்துகிறது!

‘பி.மன்தேய்ஃபெல்’ ஓர் இயற்கை விஞ்ஞானி. பறவைகளின் வாழ்வியல் குறித்தும், அவற்றின் ‘இனப்பெருக்கம்’ பற்றியும் ஆராய்ச்சிகள் செய்து பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். அவர் மனதில் ஒரு கேள்வி முளைத்தது.

‘கூடுகள் கட்டியோ, மரப்பொந்துகளை வசிப்பிடம் ஆக்கியோ குஞ்சு பொறித்துக் குடும்பம் நடத்தும் பறவைகளுக்கு, அத்தகைய வசிப்பிடம் தடை செய்யப்படும்போது அவை முட்டை இடுமா?’ என்பதே அந்தக் கேள்வி. சோதித்துப் பார்க்க நினைத்தார்.

அவரே சொல்கிறார்......

“எங்கள் காட்சி சாலையில் [மாஸ்கோ] இருந்த கிளிகளையெல்லாம் முதலில் கூண்டுகளிலிருந்து நீக்கினோம். அவை ஆங்காங்கே இருந்த மரங்களில் தங்கிக்கொண்டன. மரக்கிளைகளில் இருந்த பொந்துகளை அடைத்தோம்; கிளிகள் [அவுஸ்ரேலியக் காட்டுக் கிளிகள்] கட்டிய கூடுகளையும் அவை கட்டக்கட்ட அழித்துக்கொண்டே இருந்தோம்.

இனப்பெருக்கம் செய்யும் பருவம் அப்போது தொடங்கியிருந்ததால், கிளிகள் தரையில் முட்டையிடும் என்றும் நம்பியிருந்தோம்.

ஆச்சரியம் என்னவென்றால், எந்தவொரு பெட்டைக் கிளியும் முட்டை வைக்கவே இல்லை.

அதனினும் பேராச்சரியம் யாதென்றால், எந்தவொரு ஜோடியும் ‘உடலுறவு’ கொள்ளவே இல்லை!

பாதுகாப்பான இடத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துத் தம் வாரிசுகளைச் சிறந்த முறையில் வளர்த்து ஆளாக்க முடியாத சூழ்நிலை உருவாகும்போது, சில பறவையினங்கள், வாரிசுகளை உருவாக்க இயலாத காரணத்தால் அழிந்து போயின.”

பொந்துகளின் அடைப்பை நீக்கிவிட்டு, ‘கூடு அழிப்பு’ வேலையையும் நிறுத்திய பிறகு, மீண்டும் தாம் கட்டிய கூடுகளையும் பொந்துகளையும் வசிப்பிடம் ஆக்கிக்கொண்டு, கிளிகள் தத்தம் இணையுடன் கூடிக் குலவினவாம்! முட்டையிட்டுக் குஞ்சுகள் பொறித்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்தனவாம்!

இன்னொரு நிகழ்வையும் சொல்லி நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறார் மன்தேய்ஃபெல்.

இவர் ஒருமுறை கப்பல் பயணம் தொடங்கியபோது, கயிற்றுச் சுருள்கள் இருந்த இடத்தில், ஒரு ஜோடி ‘சிஃப் - சாஃப்’ பறவை கூடு கட்டிக் குஞ்சு பொறித்திருந்ததாம். கப்பல் புறப்பட்டுப் பயணம் தொடர்ந்தபோது அந்தப் பறவைகளும் கப்பலைத் தொடர்ந்து சென்றதோடு, பசித்த குஞ்சுகளுக்கு கப்பலில் காணப்பட்ட பூச்சிகளைப் பிடித்து உணவாக்கினவாம்.

இவ்வாறாக, ஒரு நூல் முழுக்கப் பறவைகளின் குணாதிசயங்களைச் சுவை மிகுந்த நடையில் விவரித்திருக்கிறார் இந்த இயற்கை விஞ்ஞானி.

மேற்கண்ட அவுஸ்ரேலியக் காட்டுக் கிளிகள் மற்றும் சிஃப் - சாஃப் பறவைகளின் பாச உணர்வைப் படித்து சிலிர்த்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, ஆறறிவு படைத்த நம்மவர்கள் பத்து மாதம் சுமந்து பெற்ற மழலைகளைக் குப்பைத் தொட்டியில் வீசுவதும், விற்றுப் பணம் பண்ணுவதும், பிள்ளைகளைத் துறந்து திருட்டு சுகம் தேடி ஓடிப் போவதும் இன்ன பிற அட்டூழியங்களும் நினைவுக்கு வருகிறதுதானே?

வரத்தான் செய்யும்.

‘மனிதனுக்கு ஆறறிவு வாய்த்ததால் விளைந்த தீங்குகளில் இதுவும் ஒன்று’ என்று மனதைக் கல்லாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!
=============================================================================================

உதவிய நூல்: பி.மன்தேய்ஃபெல் எழுதிய ‘இயற்கை விஞ்ஞானியின் கதை’. அகல், சென்னை - 14.

qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
No comments :

Post a Comment

எழுதுகையில், கருத்துப் பிழைகளும் மொழிப் பிழைகளும் நேர்தல் இயற்கை. பிழை காணின், அன்புகொண்டு திருத்துங்கள். இயலாதெனின், பொறுத்தருளுங்கள்.