செவ்வாய், 22 மார்ச், 2016

பெண்களின் ‘கற்பு’ பற்றிப் பிரபலமான சில பெண்களின் [காரசாரமான]கருத்துரைகள்!

ஆண்களின் மதிப்பீட்டில், ஒரு ‘நல்ல’ பெண்ணுக்குக் கற்பே முதல் தகுதியாக இருக்கிறது. அழகு, குணம், கல்வி போன்றவற்றிற்கு அடுத்தடுத்த இடங்கள்தான். இன்று கற்பு பற்றிய மதிப்பீடுகளும் வெகுவாக மாறிவிட்டன. இந்நிலையில், பெண்களின் கற்பு குறித்த, ஐந்து புகழ்பெற்ற பெண்களின் கருத்துரைகள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன. பழைய ‘வாசுகி’ மாதமிருமுறை இதழுக்கு[1-15 டிசம்பர்,2001] நம் நன்றி.
அருள்மொழி[வழக்கறிஞர்]:
“பெரியார் சொன்ன விளக்கம்தான் என்னுடையதும். அதாவது, கற்பு என்பது பெண்களை ஏமாற்றி அடிமைப்படுத்தி வைக்க ஆண்கள் கண்டுபிடித்த அயோக்கியத்தனமான வார்த்தை.

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள மாதிரி, ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை. அதாவது, பேச்சு மாறாமலிருப்பது. இது, ஆண் பெண் இருவருக்கும்தான்.

கவிஞர் நிர்மலா சுரேஷ்:
‘கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை’ என்கிறது கலித்தொகை. அப்படிப் பார்த்தால், தெருவில் நடக்கிற பெண்களை எத்தனையோ பேர் பார்க்கிறார்கள்; ரசிக்கிறார்கள். பிறர் நெஞ்சில் புகுவது பெண்ணின் தவறல்லவே. ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் காலங்காலமாகச் சொல்லிவருகிறார்கள். ஒருத்திக்கு ஒருவன் என்பதுதான் சரி.

தாமரை[பாடலாசிரியர்]:
கற்பு என்பது தனி மனிதப் பாலியல் ஒழுக்கம். இது, இருபாலருக்கும் பொதுவானது. பாலியல் ஒழுக்கத்திற்குச் சமூகத் தேவை உள்ளது. அதைக் கடைபிடித்துதான் ஆகவேண்டும். கற்பைக் காலம் காலமாகப் பெண்ணுக்கு மட்டுமே சுமத்தியதால்தான் ஆணாதிக்கம் ஆரம்பமானது. என்றைக்குக் கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதாக ஆக்கப்படுகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான ஆண் - பெண் சமத்துவம் சாத்தியப்படும்.

சுமதி[வழக்கறிஞர்]:
கற்பு நேர்மையைக் குறிக்கும். பெண்ணின் ஆற்றலையும் எதிர்ப்பையும் மீறி அவள் கற்பழிக்கப்படுவது ஒரு கொலைக்குச் சமம் ஆகும். கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; வீடுகளில் மட்டுமல்லாமல், பொது இடங்களிலும் பணியிடங்களிலும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது கற்பு.

டாக்டர் ஷர்மிளா[‘பாலியல் கேள்வி - பதில்’களில், டாக்டர் மாத்ருபூதத்திற்கு உதவியதன் மூலம்   பிரபலமானவர்]
கற்பு என்பது உடல்  சார்ந்ததல்ல; முழுக்க முழுக்க மனம் சார்ந்தது. மனத்தளவில் எத்தனை பேர் கற்புடையவர்களாக வாழ்கிறார்கள்?

தனக்கு வரப்போகிறவள் கற்பரசியாக இருக்க வேண்டும் என்று ஆண் நினைப்பதுபோலவே, தனக்கானவன் கற்பரசனாக இருக்க வேண்டும் என்று நினைக்கப் பெண்ணுக்கும் உரிமையுண்டு.

வாழ்க கற்பு!
*****************************************************************************************************************************************************






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக