திங்கள், 28 மார்ச், 2016

எழுத்தாளர் ‘கல்கி’ நாத்திகரா?

#ராகு என்றால் ஒரு கிரஹம் அல்லது பாம்பு அல்லது ஒரு பாம்புக் கிரகம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதற்கு அகோரமான பசி ஏற்படும்போது, பகலாயிருந்தால் சூரியனையும் இரவாயிருந்தால் சந்திரனையும் ‘அப்பம்’ என்று எண்ணி விழுங்கிவிட முயலும். இப்படி, விழுங்கப் பார்த்து முடியாமல் போய், கக்கிவிடுவதற்குத்தான் சூரிய சந்திரகிரஹணங்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 
சூரியன் என்றால் லேசா என்ன? சூரியனுடைய குறுக்களவு, சுற்றளவு, வெப்பத்தின் டிகிரி முதலியவையும உங்களுக்குத் தெரிந்த விஷயங்களே. சூரியனது குறுக்களவு 10,00,000..... மைல். எவ்வளவு பூஜ்யம் என்பது ஞாபகமில்லை. பூஜ்யம் எவ்வளவு போட்டால்தான் என்ன? 

இதே முறையில் எல்லாக் கிரகங்களின் அளவையும் கணக்காகச் சொல்லிவிடலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூமியிலிருந்து சூரியனுடைய தூரமோ ஒன்று போட்டு பதினாறு பூஜ்யம் மைல் என்று நினைக்கிறேன். 

இவ்வளவு தூரத்திலிருக்கும் சூரிய பகவான் வருஷந்தோறும் நாம் கொடுக்கும் பொங்கல், வாழைப்பழம் முதலியவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே வெயிலில் மண்டை வெடிக்கிறது. இப்படிப்பட்ட சூரிய பகவானை விழுங்க முயல்பவனின் கதி என்னவாகுமென்று சொல்ல வேண்டியதில்லை.

வாசகர்களின் காதோடு ஒரு ரகசியம் சொல்கிறேன். இந்தக் கதையில் உண்மையாக உங்களுக்கு நம்பிக்கை கிடையாது. எனக்கும் நம்பிக்கை கிடையாது. 

முறையே, பூமி, சந்திரன் என்னும் இவற்றின் நிழலினால் எப்படி சூரிய சந்திர கிரஹணங்கள் உண்டாகின்றன என்பதை நாலாம் வகுப்பிலேயே நாம் படித்திருக்கிறோம் அல்லவா? ஆனால், கிரஹணத்தன்று மட்டும் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் நமக்கு மறந்துவிடுகிறது. அன்று, கடல் நீரிலோ குளங்குட்டையிலோ தலை முழுகித் தர்ப்பணம் முதலியவை செய்ய நீங்களும் நானும் தவறுவதில்லை. இது குறித்து நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. வான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற எம்.ஏ. பட்டதாரிகள்கூட இப்படித்தான் செய்கிறார்கள்.

ராகு, கிரகணங்கள் ஆகியவை பற்றிய உண்மை இப்போது நமக்கு விளங்கிவிட்டது. ஆனால், இந்த ராகு காலம்?

இதன் ரகசியம்தான் எனக்குப் பிடிபடவில்லை.

ராகுவுக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்?

ராகு காலங்களில், ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் வரும் ராகு காலம் மிகவும் பொல்லாததாம். ஒரு முறை, ஞாயிற்றுக் கிழமை மாலை ஒரு காரியத்துக்காகப் புறப்பட்டுச் சென்றேன். புறப்படும்போதே ‘ராகு காலத்தில் கிளம்புகிறோம்!’ என்று நெஞ்சு அடித்துக்கொண்டது. அதற்கேற்றாற்போல் காரியமும் நடக்கவில்லை. ராகுகாலப் பலன்தான் என்று தீர்மானித்தேன்.

ஆனாலும் நான் ஒரு சந்தேகப் பிரகிருதி என்பது உங்களுக்குத் தெரியும். மறுபடியும் யோசனை வந்துவிட்டது. நான் புறப்பட்ட நேரத்திற்கும், நான் பார்க்கச் சென்றவர் ஊரில் இல்லாததற்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும்? ராகு காலத்திற்கு முன்னால் போயிருந்தாலும் அவர் இருந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

அப்புறம், வேறொரு நாள் வேண்டுமென்றே ராகு காலத்தில் கிளம்பிச் சென்றேன். அன்று அவர் இருந்தார்; வேலையும் திருப்திகரமாக நடந்தது.

அதற்குப் பிறகு, பல முறை ராகு காலத்தில் காரியம் தொடங்கிப் பார்த்தேன். சில முறை நடந்தது; சில முறை நடக்கவில்லை. ஆகவே, காரிய சித்திக்கும் கிளம்பும் நேரத்திற்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை என்பது விளங்கிற்று. இந்தக் கட்டுரையைக்கூட ராகு காலத்தில்தான் எழுதத் தொடங்கினேன்.....# 

மேற்கண்டது, எழுத்தாளர் ‘கல்கி’ எழுதிய, ‘ராகு காலம்’ [நூல்: ‘ஏட்டிக்குப் போட்டி’] என்னும் கட்டுரையின் ஒரு பகுதி. இதை வாசித்தவர்களின் மனதில், ‘கல்கி ஒரு நாத்திகரோ?’ என்னும் கேள்வி எழுந்திருக்கக்கூடும். இதற்குப் பதில் தேடும் முயற்சியில் நீங்கள் ஈடுபடத் தேவையில்லை. தொடர்ந்து வாசியுங்கள்.

#‘.....இதற்குள்ளாக, நேயர்களில் பாதிப்பேர் என்னை நாஸ்திகன் எனத் தீர்மானித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் நான் கடவுள் கட்சியைச் சேர்ந்தவன்தான். நான் பிறந்ததிலிருந்து கடவுளின் கட்சியில் இருந்துவிட்டு, இப்போது அவருக்கு ஆபத்து வரும் சமயத்தில் அவரைக் கைவிட்டு விடுவதென்றால் என் மனம் இடம் கொடுக்கவில்லை. அது நம்பிக்கைத் துரோகம் அல்லவா? .....இருக்கும்வரை கடவுள் கட்சியிலேயே இருந்துவிட்டு உயிரை விடலாம் என்று உறுதியாக இருக்கிறேன்..... ’- கல்கி#
======================================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக