ஞாயிறு, 15 மே, 2016

ஊத்திக் கொடுத்த ‘அம்மா’!

“இப்பதிவின் நோக்கம் எவருடைய மனதையும் நோகடிப்பதல்ல...அல்லவே அல்ல” என்று உறுதி மொழிகிறேன்.


ள்ளாடியவாறு குடிசைக்குள் நுழைந்த மாரிமுத்து, “இந்தா இன்னிக்கி வருமானம்” என்று தன் கையிலிருந்த சில ரூபாய் நோட்டுகளைக் கண்ணம்மா இருந்த திக்கில் வீசிவிட்டுத் தரையில் கிடந்த பழைய கோரைப்பாயின் மீது மல்லாந்து சரிந்தான்.

“நாள் தவறாம குடிச்சிட்டு வர்றே. உன்னோட வருமானத்தில் பாதி டாஸ்மாக்குக்குப் போயிடுது. மூனு பொட்டப் புள்ளைகளை ஆளாக்கிக் கரையேத்தணும். குடிக்காதேன்னு சொன்னா அடிக்க வர்றே. நீ திருந்தவே மாட்டியா?” என்று குழைவான குரலில் சொல்லி வருந்தினாள் கண்ணம்மா. 

“பகல் முழுக்க மூட்டை சுமக்கிறேன். உடம்பு வலியை மறக்கக் குடிக்கிறேன். பழகிப் போச்சு. வம்பு பண்ணாம உன் வேலையைக் கவனி” என்றான் மாரிமுத்து.
நேரம் நடுநிசியைக் கடந்துகொண்டிருந்தது. குடிசைக்குள், சிம்னி விளக்கின் உபயத்தில் லேசான வெளிச்சம் பரவியிருந்தது.

நாசியில் ஊடுருவிய ‘சரக்கு’ வாசனை, உறக்கத்திலிருந்த மாரிமுத்துவுக்கு விழிப்பைத் தந்தது; எழுந்து அமர்ந்தான்.

கண்ணெதிரே விரிந்த காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மூன்று பெண் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் கைகளில் அலுமினியக் குவளைகள். தன் கையிலிருந்த டாஸ்மாக் மதுப்பாட்டிலைத் திறந்து, மூன்று குவளைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றினாள் கண்ணம்மா; “ம்ம்ம்...குடிங்கடி” என்று அவர்களை அதட்டினாள்.

‘திடுக்’ கென எழுந்து, கண்ணம்மாவிடமிருந்த பாட்டிலையும், மகள்களின் கைகளிலிருந்த குவளைகளையும் பறித்து வீசிய மாரிமுத்து, “ஏண்டி, உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?” என்று சீறினான்.

"சுய புத்தியோடதான் இருக்கேன். “போதையில் போட்டதைத் தின்னுப்புட்டு நீ படுத்துட்டே. நீ குடுத்த பணத்தில் பிள்ளைகளின் அரை வயிறுதான் நிறைஞ்சுது. பாதித் தூக்கத்தில் கண்முழிச்சி, பசிக்குதுன்னு அழுதாங்க. எனக்கு என்ன செய்யுறதுன்னு புரியல. நீ குடிச்சுட்டு மிச்சம் வெச்ச பாட்டில் கண்ணில் பட்டுது. சரக்கை ஊத்திக் கொடுத்தா பசியை மறந்து தூங்கிடுவாங்கன்னு நினைச்சித்தான் இப்படிச் செஞ்சேன். நீ உடம்பு வலியை மறக்கக் குடிக்கிறே இல்லியா, அது மாதிரி. நான் செஞ்சது தப்புன்னா என்னை மன்னிச்....."

குறுக்கிட்டு, “என்னை மன்னிச்சுடு கண்ணம்மா. புள்ளைகள் மேல சத்தியமா இனி குடிக்கவே மாட்டேன்” என்றான் மாரிமுத்து.

தான் நள்ளிரவில் போட்ட நாடகத்துக்கு உடனடிப் பலன் கிடைத்ததில் கண்ணாம்மாவுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.
===============================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக