வெள்ளி, 10 ஜூன், 2016

கன்னடத்தில் எழுதிப் பிரபலமான ஒரு ‘சுயமரியாதை’த் தமிழனின் மரணம்!

வேமண்ணாவின் இயற்பெயர் வி.சி.வேலாயுதம். தமிழரான இவர் 1940களில் பிழைப்புக்காகப் பெங்களூருவில் குடியேறினார். அங்குள்ள ராஜா நூல் ஆலையில் பணியாற்றியபோது பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். 
1960களில், கோலார் தங்கவயல் உள்ளிட்ட இடங்களுக்குப் பெரியார் வருகை புரிந்தபோது அவரைச் சந்தித்து வேமண்ணா உரையாடினார். பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்ட அவர், அவரின் அறிவுரைப்படி பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முறைப்படி கன்னடம் பயின்றார். 

பின்னர், மிதமிஞ்சிய ஆர்வம் காரணமாக எழுத்தாளரானார்; கடின உழைப்பால் பிரபலம் அடைந்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் பெரியாரின் 30க்கும் மேற்பட்ட நூல்களைக் கன்னடத்தில் மொழியாக்கம் செய்தார்; அவரின் வாழ்க்கை வரலாற்று நூலையும் கன்னடத்தில் எழுதினார். இந்த நூலை ‘ஹம்பி’ பல்கலைக்கழகம் பாடமாக வைத்துள்ளது.

இவரின் பணிகளைப் பாராட்டி ஏராளமான அமைப்புகள், ‘கன்னட ரத்னா’, ‘பெரியார் முழக்கம்’ உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளன.

89 வயதான வேமண்ணாவுக்கு இரண்டு நாட்கள் முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது; மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.

பெங்களூரு சுப்பிரமணிய நகரில் சுயமரியாதை முறைப்படி எவ்விதச் சடங்குமின்றி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் தமிழ் அமைப்பினர் மட்டுமல்லாமல், ஏராளமான கன்னட அமைப்பினரும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
***********************************************************************************************************************
நன்றி: ‘தி இந்து’, 10.06.2016.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக