தேடல்!

கடவுளின் பெயராலும் புனித நூல்களின் பெயராலும் மூடநம்பிக்கைகளைத் திணிப்பவர்கள் புத்திசாலிககள். நம்புகிறவர்கள் படுமுட்டாள்கள்!!!

Sep 15, 2016

கர்னாடகக் கலவரம் குறித்த, கவிஞர் முத்துநிலவனின் கருத்துடன் சில முரண்பாடுகள்

‘கர்னாடகாவில் நடக்கும் வன்முறைக்கு எதிர்வினை புரியாமல் தமிழ்நாடு அமைதி காப்பதா என்று நம்மவர் சிலர்[அவர்களில் நானும் ஒருவன்தான்] ஷோல்டரைத் தூக்குகிறார்கள்’என்று, ‘பெங்களூரு - இன்னா செய்தாரை ஒறுத்தல்...?’ என்னும் தலைப்பிலான பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் முத்துநிலவன் அவர்கள்.
கர்னாடகாவில் காலங்காலமாக நம் இனத்தான் அடிஉதை படுவதைப் பொறுக்கமாட்டாமல் நம்மில் சிலர்[சிலர் மட்டுமே] ஷோல்டரைத் தூக்குவது கவிஞருக்கு  இளக்காரமாகப்படுகிறது.

"தமிழா எழு! கன்னட வெறியரை வீழ்த்த எழு” என்று சூளுரைப்பவர்களைத் ‘தமில்க்கவிஞர்கள்’ என்று கிண்டலடிக்கிறார்!

இருக்கட்டும். இவ்வகையில் அவர் மகிழ்ச்சி பெறுவதைத் தடுக்க நாம் யார்?

பதிலடி தருவதென்றால் என்னவெண்று புரியவில்லை என்கிறார். உண்மையிலேயே புரியவில்லையா?!

இங்கே நம்மவர் ஒரு சில வாகனங்களை மட்டுமே சிதைத்த மறு நாளே கன்னடத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கும் லாரிகளுக்கும் தீயிட்டுக் கொளுத்தியதோடு, ஓட்டுநர்களை அம்மணமாக்கியும் கைகூப்பிக் கெஞ்ச வைத்தும் துடிக்கச் செய்தானே அதுக்குப் பேர்தாங்க ‘பதிலடி’. 

அறிவிலித்தனத்துக்குப் பதிலடியாக நாமும் அறிவிலிகள் ஆகக் கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் முத்துநிலவன் அவர்கள்.

தமிழன் இதற்கு முன்பு[இப்போது அறிவிலி ஆனதாகவே வைத்துக்கொள்ளுங்கள்] எப்போதாவது அறிவிலி ஆகியிருக்கிறானா என்பது பெங்களூரின் பழைய வரலாற்றைப் புரட்டினால் தெரியும். 

பெங்களூரில் என் மகன் 20 ஆண்டுகளுக்கு மேலாகக் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். மிகப் பலமுறை அங்கு சென்று திரும்பிய அனுபவம் எனக்கு உள்ளது[உடனடியாக என் புகைப்படத்தை இந்த வலைப்பக்கத்திலிருந்து நீக்க வேண்டும். காரணம் பயம்தாங்க]. அப்போது பெற்ற அனுபவங்களுடன் கேட்டறிந்த/ படித்தறிந்த தகவல்களைக் கொண்டு இதை எழுதுகிறேன்.

1991இல் இன்றைய முதல்வரும் அப்போதைய முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்கள், இதே காவிரிநீர்ப் பிரச்சினைக்காக உண்ணா நோன்பு[அமைதியான முறையில்] மேற்கொண்ட போது, அங்கே மிகப் பெரும் கலவரம் மூண்டது. அதன் விளைவுகளை, கவிஞர் மேற்கோள் காட்டியிருக்கும் பிரபல எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்களே வர்ணித்திருக்கிறார். படியுங்கள்[மணிகண்டன் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்].....

#தொண்ணூறுகளில் காவிரிப் போராட்டம் தலையெடுத்த போது கோபியில் வசித்தவர்களுக்கு அதன் ஆழ அகலங்கள் தெரிந்திருக்கும். தஞ்சை வாசிகளுக்கும் தெரிந்திருக்கக் கூடும். போலீஸ் தடியடிகளிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து ரத்தம் தெறிக்க ஓடியவர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தோட்டமும் காடும் சல்லிசாகக் கிடைக்கிறது என தாளவாடி மலையைத் தாண்டிச் சென்று கன்னட தேசத்தில் பயிர் செய்தவர்கள் அறுவடைச் சமயத்தில் அத்தனையையும் விட்டுவிட்டு ‘தப்பித்தால் போதும்’ என்று இரண்டு மூன்று துணிமணிகளை வாரியெடுத்துக் கொண்டு வந்த கதையெல்லாம் இன்னமும் பண்ணாரி காட்டு காற்றில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன# http://www.nisaptham.com/2016/09/blog-post_6.html

இந்தக் கலவரம் மூள்வதற்கு முன்போ பின்போ தமிழன் அறிவிலியா நடந்துகொள்ளவில்லை; புத்திசாலியாகத்தான் நடந்துகொண்டான்; அதன் விளைவாக, அடிஉதை பட்டதோடு ஏராள பொருள் இழப்புக்கும் ஆளானான் என்பதை நண்பர் அறியவில்லை போலும். நாதியற்று உதைத்து விரட்டப்பட்டவர்களில் என் உறவினர்கள்/ ஊர்க்காரர்கள் சிலரும் அடங்குவர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியின் போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குடிநீத் தேவைக்கான திட்டம் வகுக்கப்பட்டுச் செயல்படுத்த முயன்றபோதுகூட, தமிழன் புத்திசாலியாகத்தான் நடந்துகொண்டான். கன்னடத்தான், வழக்கம்போல, அடி உதை என்று ஆரம்பித்த நிலையில்தான், தமிழக இளைஞர்கள் சிறு சிறு தாக்குதல்களைத் தொடங்கினார்கள்.

தமிழினத் தலைவரான கலைஞர்,  “அவர்களும் நாமும் சகோதரர்களே” என்பதாக அறிக்கைகள் விட்டு, முளைவிட்ட போராட்டத்தை ஆரம்ப நிலையிலே வேரோடு கிள்ளி எறிந்துவிட்டார்கள்; நடுவணரசு தலையிட்டால் தன் பதவி பறிபோகும் என்று பயந்துவிட்டதாக நான் சொல்லவில்லை.

அடுத்து,

நீங்கள் மேற்கோள் காட்டுகிற எழுத்தாளர் வா. மணிகண்டனின் பதிவுகளிலிருந்தே கன்னடர்களின் மனப்போக்கைப் படம் பிடிக்கிற சில கருத்துகளையும் இங்கே தருகிறேன்.

#...கன்னட பதிவு எண் கொண்ட ஈருருளியில் சென்றிருந்தேன்..... 
....வீட்டில் நிற்கும் கார் ஞாபகம் வந்தது. தமிழ்நாட்டு பதிவு எண் வண்டி அது. எலெக்ட்ரானிக் சிட்டியில் அந்தப் பையனை இறக்கிவிட்டு வந்து பதிவு எண் வெளியில் தெரியாதபடிக்கு மூடி வைத்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். நாளைக்கு முதல் வேலையாக வீட்டில் கன்னட கொடி ஒன்றை நட்டு வைக்க வேண்டும்.

விவசாய பூமிகளை அழிப்பதும், டிராக்டர்களை அடித்து நொறுக்குவதும், தமிழ் விவசாயிகளின் கால்நடைகளை நாசம் செய்வதும் நிகழ்ந்தால் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கரைந்து போய்விடும்# http://www.nisaptham.com/2016/09/blog-post_6.html

இப்படியெல்லாம் மணிகண்டன் அவர்களைச் சொல்ல வைத்தது எது? அவர் பெற்ற அனுபவங்களா, கேட்டறிந்த தகவல்களா?

அவர்,  தம்முடைய இன்னொரு  பதிவில்,

#டிரினிட்டி மெட்ரோ நிலையத்திற்கு முன்பாக லிவிங் ஸ்மைல் வித்யா அமர்ந்திருந்தார். போக்குவரத்து வசதி இல்லாமல் அமர்ந்திருக்கிறாரோ என நினைத்துப் பேசினேன் ‘அய்யோ தமிழில் பேசாதீங்க’ என்று சிரித்தபடியே சொன்னார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அங்கு ஓரிடத்தில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாரக்ளாம். அதிகமாகப் பேசிக் கொள்ளாமல் நகர்ந்துவிட்டேன்#  என்கிறார். http://www.nisaptham.com/2016/09/blog-post_84.html

இந்த அச்ச உணர்வு அங்குள்ள தமிழர்களுக்கு எப்போதும் உண்டுதானே? வேறு எந்தவொரு மாநிலத்திலும் வேறு எந்தவொரு இனத்தானும் இப்படியொரு இழிநிலைக்கு ஆளாகியிருக்கிறானா? இல்லையே!

தமிழில் பதிவெண் கொண்டிருந்த என் மகனின் கார் ஒரு பைக்கின்மீது உரசிச் சிறு சேதம் விளைவித்ததற்காகக் கார்க் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியது ஒரு கன்னட வெறிக் கும்பல். போலீசுக்கும் போகவில்லை. போனால் உதைப்பான் என்ற பயம். பயம் தவிர வேறில்லை. இந்தப் பயம் அங்குள்ள தமிழருக்கு எப்போது இருந்துகொண்டிருக்கிறது என்பதை நண்பர் மணிகண்டன் அறிவார் என்று நம்புகிறேன்.

இந்தப் பயம் தமிழனின் மனதில் நிரந்தரமாய் இடம்பெற்றுவிடக் காரணமானது தமிழனின் அறிவின்மையா, கர்னாடகத்தானின் தமிழன் மீதான பொறாமையா?

பம்பாயில் தமிழன் தாக்கப்பட்டபோதுகூட,  அறிவிலியாகத் தமிழன் நடந்துகொள்ளக்கூடாது என்று  அகிம்சாவாதிகள் தமிழனுக்கு அறிவுரை சொல்லியிருப்பார்கள். அதனால்தான் அவன் எதிர்த்துப் போராடவில்லை; அடி உதை பட்டே பழகிவிட்டான்.

தமிழில் பெயர்ப்பலகை வைக்கக் கூடாது; புதிய திரைப்படம் குறிப்பிட்ட நாட்கள் வரை வெளியிடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளைத் தமிழன்மீது கன்னடத்தான் திணித்திருப்பது வேறு எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அட்டூழியம். கட்டுப்படுத்தும் துணிவு அவனுக்கு எப்படி வந்தது?

எதிர்வினை இல்லை என்பதால்தான்.

அந்த எதிர்வினையை அங்குள்ள தமிழனால் நிகழ்த்த முடியாது என்பது உண்மைதான். அங்குள்ள அத்தனை அரசியல்வாதிகளும், ஆட்சி புரிபவர்களும் இன வெறியர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதே காரணம். இங்கோ காந்திய நெறி பரப்புவோரின் அகிம்சா போதனை!

தமிழ் இளைஞனைக் கன்னடத் தடியர்கள் அடித்து மண்டியிட வைத்ததே இந்தக் கலவரங்களுக்கான மூல காரணம். எவரும் மறுக்க முடியாது. நடிகர்களைக் கிண்டல் செய்ததால்தான் அடித்தார்கள் என்று சமாதானப்படுத்துவது எவ்வகையில் நியாயம்?

நம்மில் சிலர், அடித்தவனை அங்கே போய் அடிக்க வேண்டுமே தவிர இங்குள்ளவர்களைத் தாக்கக் கூடாது என்கிறார்கள். இங்கிருந்து பல்லாயிரக்கணக்கில் திரண்டுபோய், போலீசாரின் கட்டுக்காவலையும் கடந்து, குற்றவாளிகளைத் தேடிப்பிடித்துத் தண்டிப்பது சாத்தியமே இல்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் அதனால், கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியுமா? அது தமிழனின் தன்மானத்தைப் பாதிக்காதா?

இவ்வாறெல்லாம் சிந்தித்ததன் விளைவுதானோ என்னவோ, நம் இளைஞர்கள் லேசான தாக்குதலைத் தொடங்கினார்கள். பெருந்தன்மையாளர்களின் அறிவுரை /அறவுரை அவர்களையும் முடக்கிவிட்டது.

அறிவுரைகளும் அறவுரைகளும் தேவைதான். யாருக்கு?

உதைபடுபவனுக்கல்ல; உதைப்பவனுக்குத்தான்.

கீழ்க்காணும் முகவரி கொண்ட பதிவையும் படியுங்கள். பதிவருக்கு என் நன்றி.
ttps://villavan.wordpress.com/2016/09/15/கர்நாடகாவிடம்-இருந்து-நா/
=================================================================================
கன்னடர் நிலையை ஆதரித்து ‘நான் மணி’ என்பவர், நீண்ட பதிவொன்றை எழுதியிருக்கிறார்; ‘தொடரும்...’ போட்டிருக்கிறார். [முகவரி தர விரும்பவில்லை]

இதற்கான துணிவை இவர்[எந்த இனத்தவரோ தெரியாது] பெற்றது எவ்வாறு என்பது ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்...’என்னும் குறளை மேற்கோள் காட்டும் நண்பர்களுக்குப் புரியாதா என்ன?!

ஜெய் கன்னடர்! ஜெய் கர்னாடகா!!
================================================================================
ஒரு முறை மட்டுமே பிழை திருத்தம் செய்தேன். பிழை காணின், வழக்கம்போல் பொறுத்தருள்க.

10 comments:

 1. அய்யா வணக்கம்.
  “இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்
  சிலர்பலர் நோலா தவர்” குறள்-270.
  இதைத் தவம் என்னும் அதிகாரத்தில் வைத்ததாலேயே “நோற்றல்” எனும் சொல்லுக்கு “தவம் செய்தல்” என்று பொருள் கொள்ளாமல், உடல் உழைப்பு என்று கொண்டால் வேறுநல்ல பொருள் கிடைக்கும்.
  விதிவிலக்குகள் விதிகளாவதில்லை. தாங்கள் சொல்லும் நிகழ்ச்சிகள் நடந்திருக்கும். வாட்டாள் நாகராஜ்கள் நிறையவே இருக்கிறார்கள்.
  மொத்தக் கருநாடகரும் வெறிபிடித்து அலையவில்லைதானே?
  நம் ஊர்களில் சாதிச் சண்டை, இனச்சண்டைகளின் போது (பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் முதல்மண்டகப்படி பிரச்சினைகளில்) அடித்துக் கொள்ளும்போது நம் நாகரிகம் எங்கே போனது?
  அடிப்படையில் இனப்பிரச்சினையாக்கிக் குளிர்காயும் சிலர் கர்நாடகத்திலும், மகாராட்டிரத்திலும் வேறுசில மாநிலங்களிலும் உண்டு. நாம் அதற்கு இரையாக வேண்டாம் என்பதுதான் என் கருத்துச் சுருக்கம். வன்முறை வன்முறையை வளர்க்கும் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மற்றபடி என் கருத்தே இறுதியானது என்று எப்போதும் நான் சொல்வதில்லை. தகுந்த ஆதாரம் கிடைத்தால் மாற்றிக்கொள்ளலாம்...நீங்களும்தான். நன்றி.

  ReplyDelete
 2. மிக்க நன்றி நண்பர் முத்துநிலவன்.

  ReplyDelete
 3. கர்நாடகா காரன் அடித்தால் நாம் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று பலபேர் சொல்கிறார்கள். எப்போதுமே அவன் முதலில் முந்திக்கொள்கிறான். நாம் அடிவாங்கியபிறகு எதிர்வினையாற்றினால் கைதுசெய்யப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களை போல் கீழ்த்தரமாக நடந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஆனால் அவனுக்கு பயத்தை உண்டாக்கியிருக்கவேண்டும். அவனுடைய அனைத்து நிறுவனங்களையும் முடக்கியிருக்கனும். இதுவரைக்கும் கருநாடகாவில் தமிழர்களை அடித்தவனை கைது செய்திருக்கிறார்களா?. ஆனால் நாம் கைது செய்திருக்கிறோம் ராமேஸ்வரத்தில். வித்தியாசம் புரிகிறதா?. நாம் நெய்வேலியில் மறியல் பண்ணா துரத்துறான். ஆனால் இருமாநில மக்களுக்குள்ளும் நிஜமான விரோதம் இல்லை. இது அரசியல்வாதிகளாலும், கார்பொரேட்களாலும் தூண்டப்படுவது. ஏன் காவிரி தீர்ப்பு வந்தவுடன் கர்நாடகத்தில் என்ன நடக்கும் என்று இருமாநில அரசுகளுக்கும் தெரியாதா?. இது முதல்முறை நடப்பதா? 1991-ல் இருந்தே நாம் பார்ப்பது தானே?. ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் கலவரம் நடக்கவேண்டும் என்று இரு மாநில அரசுகளும் திட்டமிட்டன. செயல்படுத்தியும் விட்டன. இதே காவிரி பிரச்சினைப் பற்றி விவசாயிகள் ஒருசில நாட்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தியபோது நாம் என்ன ஆதரவு கொடுத்துவிட்டோம். ஆனால் கபாலிக்கு பொங்கினோம். இவந்தான் தமிழன். இதுதான் தமிழ்நாடு. தமிழன் மிகவும் சுயநலமாகி பலஆண்டுகள் ஆகிறது. தமிழன் திராவிடனாகிவிட்டான். ஆனால் மற்ற திராவிடர்கள் தமிழனை மிதிக்கிறார்கள். இதுதான் நடக்கிறது. இப்படித்தான் நடக்கும் நம் ஆட்சி திராவிடன் கையில் இருக்கும்வரை. விஜயன்

  ReplyDelete
 4. காவிரியில் உரிய நீரைத் திறந்துவிடக் கோரியும், கருநாடகத்தில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரியும் நாளை நடக்கவிருக்கும் கடையடைப்பை அமைதியாக வெற்றிபெறச்செய்வோம்! நமது மாநில அரசே “பள்ளிகல்லூரி அடைப்பு” செய்திருப்பதாகச் செய்தி வருகிறது. இன்னொரு பக்கம் சீமானின் தம்பி ஒருவர் தீக்குளித்துவிட்டதாகவும் செய்தி வருகிறது.. ஆரம்பிச்சிட்டாங்க பார்த்தீர்களா அய்யா...!?

  ReplyDelete
 5. நன்றி...நன்றி நண்பரே

  ReplyDelete
 6. சகோ .முத்துநிலவன் அவர்களே தன்னிலை விளக்கம் அளித்து விட்டார் !
  கன்னடர்களுக்கு இவ்வளவு வீரம் வரக் காரணமே ,நம்மிடையே 'வீரப்பன் 'இல்லாது போனதுதான் !

  ReplyDelete
 7. south karnataka peoples were suffered a lot in the history be tamil kings from rajarajan to tanjore sarapoji. even Madras presidency british did not accepted their right share for the kauveri water. South Karnataka people (mysore region) able to comeup only after the construction of KRS dam. Because of having the sad memories from the history , it has become nature for them to fight for their rights.

  Are the same south karnataka people fight against kerala or AP peoples? please think and post.

  ReplyDelete
 8. உண்மை பகவான்ஜி. கருத்துரைக்கு என் நன்றி.

  ReplyDelete
 9. Anonymous,

  மிக விரிவாக விவாதிக்க வேண்டிய வரலாறு சார்ந்த குறிப்பைத் தந்திருக்கிறீர்கள். இப்போது விவாதிக்க இயலாது.

  இருப்பினும், என்னை மதித்துத் தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete