வெள்ளி, 2 செப்டம்பர், 2016

'காதல் படுத்தும் பாடு!’.....எழுத்தாளர் சுஜாதா

காதலின் பெயரால் பெண் சுகம் தேடும் காமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பசப்பு மொழிகளுக்கு எளிதில் வசப்படும் குமரிகளுக்கும் பஞ்சமில்லை. ஒட்டுமொத்த சமூகமும் துரிதகதியில் விழிப்புணர்வு பெறவேண்டிய காலக்கட்டம் இது.

வெறும் உடல் கவர்ச்சிக்குப் பலியாகவிருந்த ஒரு புத்திசாலி இளைஞனைப் பற்றித் தனக்கே உரிய சாகச நடையில் சொல்லியிருக்கிறார் இறவாப் புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா. அதைத்தான் இங்கு பதிவாக்கியிருக்கிறேன்.


விதியின் சின்ன விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். நான் போன வாரம் பம்பாய் கம்ப்யூட்டர் மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது.....
க்ராஸ் மைதானத்தில், எக்ஸிபிஷனில் ஹாலுக்கு ஹால் நடந்து அலுத்துப்போய், ஓர் ஓரமாக நின்றுகொண்டிருந்தபோது, ஒரு ஆள் என் அருகில் வந்து,  “நீங்கதானே.....” என்று தயங்க, “ஆமாம் நான்தான்” என்றேன்.

“நீங்க ஸ்ரீரங்கம்னு கேள்விப்பட்டேன். போட்டோவில் பார்த்திருக்கேன்...”

“சந்தோஷம். நீங்களும் கம்ப்யூட்டரா...?”

“ஆமாம். நானும் உங்களைப் போலவே ஸ்ரீரங்கம்.”

“ஸ்ரீரங்கத்தில் எங்கே?”

“அம்மா மண்டபத்தில் இருந்தேன். ஸ்ரீரங்கத்தில் மறக்க முடியாதது ராயகோபுரம். அந்தக் கோபுரத்துக்கு முன்னால் ஒரு தடவை என்னைக் கம்பத்தில் கட்டி உதை உதைன்னு உதைச்சிட்டாங்க!”

“அப்படியா?” எந்த வருஷம்?”

“1949.”

“வாட் எ சர்பிரைஸ்! அந்தச் சம்பவத்தை நான் பார்த்திருக்கேன். பந்தல் கால்ல கட்டி வெச்சு ...அந்தத் திருடன் நீங்கதானா! இப்ப என்ன பண்றீங்க?”

“கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் சய்ண்டிஸ்டா இருக்கேன்.  நீங்ககூட என்னை அடிச்சீங்களா?”

“சே சே...இல்ல. நல்லவேளை, போலீஸ்காரர் உங்களை அழைச்சுட்டுப் போய்ட்டார். அச்சரிய ஆச்சரியம்! ஸ்ரீரங்கத்தில் திருட ஆரம்பிச்சி  இப்போ கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் சயிண்டிஸ்டா? ஆச்சரியம்!”

“நான் திருடவும் இல்ல, ஒன்னுமில்லங்க.”

“அப்படியா? பின்னே எதுக்கு உங்களைத் துரத்தி வந்து அடிச்சாங்க?”

“அதைச் சொன்னால் கதை பண்ணிடுவீங்க. அன்னிக்கி நான் லட்சுமணராவ் பொண்ணை...மாலினி மாலின்னு வாட்ட சாட்டமா இருப்பா தெரியுமா?

“தெரியாது” என்றேன் அவசரமாக.

”அவளை ரெண்டு மூனு தடவை பார்த்துப் பேசியிருக்கேன். அன்னிக்கும் அவளைப் பார்க்கத்தான் மொட்டை மாடிக்குப் போனேன். ராத்திரி நேரம். அவளோட அப்பா அங்க பாய் விரிச்சிப் படுத்திருந்தது தெரியாம போச்சு. “மாலினி”ன்னு நான் ஆசையோடு கூப்பிட, அவள் அப்பா கண்விழிச்சிப் பார்க்க, மாலினியும் சமயோசிதமா, “திருடன்...திருடன்”னு சத்தம் போட நான் தப்பி ஓடி மாட்டிகிட்டேன். மாலினியைப் பார்க்கத்தான் வந்தேன்னு நான் சொல்லியிருந்தா அவள் அப்பா அவளை நிமிர்த்தியிருப்பாரே...”

“ஆக, அவளைக் காட்டிக் கொடுக்காம இருக்கத்தான் தர்ம அடி வாங்கிட்டீங்களா?” என்றேன் நான்.

“ஆமா” என்று அசட்டுச் சிரிப்பை உதிர்த்த அவர், “அதுக்கப்புறம் அந்தத் தெருப்பக்கமே நான் தலை வெச்சுக்கூடப் படுக்கல. படிப்பு படிப்புன்னு வெளியூர்லயே காலங் கழிச்சேன். வேலை வேலைன்னு எங்கெங்கோ சுத்திட்டு இப்போ கலிபோர்னியாவில் இருக்கேன்.” 

அவர் என் கண்களுக்கு ரொம்பவே வித்தியாசமான ஆளாகத் தெரிந்தார்.
===============================================================================
சுஜாதாவின், ‘ஓரிரு எண்ணங்கள்’ என்னும் நூலிலுள்ள ‘கோபுர வாசல்’ கட்டுரையின் இறுதிப் பகுதி இங்கு பதிவாகியிருக்கிறது. மூன்றாம் பதிப்பு; விசா பப்ளிகேசன்ஸ், தி.நகர், சென்னை.

பதிவின் தலைப்பு அடியேன் கொடுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக