வெள்ளி, 30 டிசம்பர், 2016

நாமக்கல் ஆஞ்சநேயரும் 54 ஆயிரம் உளுந்து வடையும் நானும்!!!

“எந்தவொரு பொருளோ உயிரோ தானாகத் தோன்றுவது சாத்தியமில்லை. அதைப் படைத்திட ஒரு படைப்பாளன் தேவை. அவனே[அவரே!] கடவுள்” என்பார்கள் ஆன்மிகவாதிகள்.

அனைத்தையும் கடவுளே படைத்தார் என்பதை இப்போதைக்கு ஏற்போம். 

கல்லையும் மண்ணையும் கடவுள் படைத்தாரென்றால், கல் கல்லாகவும் மண் மண்ணாகவும் பயன்படத்தான்; படைக்கப்பட்ட கல்லையும் மண்ணையும் தன்னின் மாற்று வடிவங்களாகக் கருதி மனிதன் வழிபடுவதற்காக அல்ல. மனிதனைப் படைத்ததும் அவன் மனிதனாக வாழ்வதற்குத்தான்.

எனவே, உண்டு செரித்து உடம்பை வளர்த்து இன விருத்தி செய்து வாழ்ந்து மரிப்பதற்கென்றே படைக்கப்பட்ட மனிதர்களைக் கடவுளின் அவதாரங்கள் என்றும் புதல்வர்கள் என்றும் தூதர்கள் என்றும் போற்றியதும் போற்றுவதும் நகைப்புக்குரிய செயலாகும்.

ஐந்தறிவு உயிர்களையும் உயிரற்ற பிண்டங்களையும் கடவுளாக்கி வழிபடுவதும் இது போன்றதே.

இதிகாசக் கற்பனைக் கதாபாத்திரமான அனுமனுக்கு உயிர் கொடுத்துக் கடவுளாக்கிச் சிலையும் வைத்து, அஷ்டமி துஷ்டமி அமாவாசை பௌர்ணமிகளில் சிறப்புப் பூஜை செய்து, விலை மதிப்புள்ள மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், வெண்ணெய், தேன் போன்ற விலை மதிப்புள்ள பொருள்கள் வீணாக்கப்படுகின்றன.

மேற்சொன்னவை போன்ற பொருள்கள் மாந்தரின் உணவுப் பொருள்களாகவும் மருந்துப் பொருள்களாகவும் அன்றாட வாழ்வில் பயன்படுபவை.

இவை படைக்கப்பட்டது மனிதர்களுக்காகத்தான்; கடவுளுக்கோ கடவுள்களுக்கோ அல்ல.

நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தியாம்.
தினமலர், 29.12.2016
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 54 ஆயிரம் வடைமாலை சாத்தப்பட்டுச் சிறப்பு அபிஷேகம் நடந்ததாம்.

[ஐம்பதல்ல நூறல்ல, 54 ஆயிரம்! அதென்ன கணக்கு? கணக்கிட்டது யார்? நம் முன்னோர்கள். அனைத்து மூடநம்பிக்கைகளையும் அழியாமல் கட்டிக் காப்பவர்கள் காலஞ்சென்ற நம் முன்னோர்களே. வாழ்க அவர்களின் திருநாமம்.]

54 ஆயிரம் பொத்தல் உளுந்து வடைகள் சரம் சரமாய்க் கோக்கப்பட்டு அனுமனுக்குச் சாத்தப்பட்டதாம். பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாம்.

வடையும்  மனிதர்களுக்கான ஓர்   உணவுப்பொருள்தான். இதை அனுமன் என்னும் கடவுளுக்குப் படைப்பதன் நோக்கம் என்ன?

வடையில் புனிதத்தை ஏற்றுகிறார்களா? அதைப் பெறுவதன் மூலம் பக்தகோடிகள் புண்ணியம் சேர்க்கிறார்களா?

இப்படிக் கேள்விகள் எழுப்பினால் நேரடியான பதில் கிடைக்காது; ‘இதெல்லாம் ஐதீகம்’ என்பதே பதிலாக இருக்கும்; அடிஉதையும் கிடைக்கக்கூடும்.

கடவுள் ஒருவரே என்றார்கள். அவர் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என்று சொல்லி விதம் விதமாய் வகை வகையாய்க் கற்றுக்குட்டிக் கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். அர்த்தமற்ற சடங்குகளைச் செய்து மூடநம்பிக்கைகளை வளர்த்தார்கள்.

மற்ற மதங்கள் எப்படியோ, மூடநம்பிக்கைகளை வளர்த்துத் தம் மதத்தைக் காக்கவும் வளர்க்கவும் நினைக்கிறார்கள் இந்துமதவாதிகள். விளைவு என்னவாக இருக்கும்?

இது வாழுமா, அழியுமா?

காலம் பதில் சொல்லும்.
***********************************************************************************************************************










  

புதன், 28 டிசம்பர், 2016

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு என் அன்புமிகு வேண்டுகோள்!

ஒரு நடிகையின் மகளாகப் பிறந்து, ஒரு நடிகையாகப் புகழ் பெற்று, உங்களின் புரட்சித் தலைவருக்குப் பின் புரட்சித் தலைவியாகி, தமிழகத்தின் முதல்வராகி, அம்மாவாகி, இதய தெய்வமாகவும் தெய்வத்தின் தெய்வமாகவும்  உங்களால் வழிபடப்பட்டவர் செல்வி ஜெயலலிதா.
கடவுள் என்றொருவர் இருக்கிறாரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். மனிதப் பிறவியான ஜெயலலிதாவைத் தெய்வம் ஆக்கினீர்களே அது பகுத்தறிவுக்கு முரணான செயல் என்பதை நீங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

அவரின் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதாவது, ‘தெய்வத்தை நோய் தாக்குமா?’ என்று கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தால் அவர் கடவுளல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் சிந்திக்கவில்லை.

அவர் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில்[74 நாட்கள்], உங்களின் அவரைக் காப்பாற்றுவதற்காகக் கண்ட கண்ட குட்டித் தெய்வங்களிடமெல்லாம் நேர்ந்துகொண்டீர்கள்.

ஆயிரக்கணக்கானவர் ஒன்றுகூடிப் புனித நீர் சுமந்தீர்கள்; அக்கினிச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்தீர்கள்; மண்சோறு சாப்பிட்டீர்கள்; சாமியார்களை வரவழைத்து, அக்கினிக் குண்டம் வளர்த்து விடிய விடியப் பூஜைகள் செய்தீர்கள். பலன் மட்டும் பூஜ்யம்.

உலகில் எந்தவொரு தலைவருக்காகவும் தொண்டர்கள் இந்த அளவுக்குத் தங்களை வருத்திக்கொண்டதில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் பட்ட பாட்டுக்குப் பலன் ஏதும் விளையவில்லை என்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

கடவுள் என்றொருவர் இருக்கிறாரோ இல்லையோ, அவரைப் பிரார்த்திப்பதால் எந்தவொரு பயனும் விளைவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இனியேனும் நீங்கள் கொண்டாடுகிற உங்களின் தலைவர் அல்லது தலைவி மனிதப் பிறவியே என்பதை நம்புங்கள்; தலைமைப் பண்புகள் அவருக்கு இருக்குமாயின், மனதாரப் போற்றுங்கள்; பின்பற்றுங்கள். மறந்தும்.....

இதய தெய்வம்...மனித தெய்வம் என்றெல்லாம் ஊரறியப் பறை சாற்ற வேண்டாம்.

இது என் அன்பான வேண்டுகோள்!
===============================================================================

செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஏன் பிறந்தாய் மானிடா, நீ ஏன் பிறந்தாய்!?

பிறந்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி உயிர் வாழ்கிறோம்.

ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான உணர்ச்சிப் போராட்டங்களுக்கிடையே கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத உயிரினங்களுக்கு உணவாகி அழிந்துபோகிறோம்.

போராட்டம் நிறைந்த, பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில், ஆணும் பெண்ணுமாகச்  சதையோடு சதை தேய்த்துச் சந்ததிகளை உருவாக்குகிறோம். 

தலைமுறை தலைமுறையாக..... 

மனித இனத்தில் மட்டுமன்று, மற்ற உயிரினங்களிலும் இதே நிகழ்வுகள்தான்.

இந்நிகழ்வுகளுக்கெல்லாம் வித்திட்டது எது,  எவை,  எவர், எவரெல்லாம் என்பனபோன்ற கேள்விகளுக்கு இன்றளவும் விடையில்லை. விடை கிடைக்கிறதோ இல்லையோ விடை தேடும் முயற்சியில் மனித இனம் தொடர்ந்து ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இதை மறுத்து, அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுளே  என்று எவரும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டாம். அப்படியொருவர் இருந்தால்....

உயிர்களுக்கு நிலையற்ற வாழ்வும் அற்ப சுகங்களும்  தந்து அளப்பரிய துன்பங்களில் உழலச் செய்வாரா?

சிந்தியுங்களேன்!
                                      *                                 *                                  *
இப்பதிவை எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்த ‘ஔவை’யின் பாடலைக் கீழே பதிவு செய்கிறேன். இது உங்களின் சிந்தனையை விரிவுபடுத்துவதாக அமையும் என்பது என் நம்பிக்கை.

‘வருந்தி            அழைத்தாலும்        வாராத           வாரா
பொருந்துவன போமென்றால் போகா -  இருந்தேங்கி 
நெஞ்சம்   புண்ணாக   நெடுந்தூரம்    தாம்நினைந்து
துஞ்சுவதே     மாந்தர்    தொழில்’                                            [துஞ்சுதல் - இறத்தல்]   
===============================================================================  



ஞாயிறு, 18 டிசம்பர், 2016

“நான் சுகவாசி அல்ல” - பெரியார்

கடவுளையும் மூடநம்பிக்கைகளையும் மட்டுமல்ல,  சுகபோகங்களையும் வெறுத்து வாழ்ந்தவர் பெரியார். தம் [அ]சுகபோக வாழ்வு குறித்து அவரே சொல்கிறார். படியுங்கள்.
#சாதாரணமாக நான் ஈசிசேரில் உட்காருவதே கிடையாது. எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் இருக்கிறதென்றாலும் ஈஸிசேர் கிடையாது. இருந்தாலும் அதை நான் உபயோகிக்க மாட்டேன்.

சாய்ந்த நிலையில் கால்களை நீட்டிக்கொண்டு உட்காரும் பழக்கம் எனக்கு இல்லை; அதை நான் விரும்புவதும் இல்லை. இம்மாதிரிப் பழக்கமெல்லாம் சுகவாசிகளுக்கு உரியவை. 

என் வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்றபோதிலும், பிரயாணக் காலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய்ப் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக்கொண்டுதான் செல்வேன். ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துக்கொள்ளப் பார்த்துவிட்டுக் கடைசியில் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால், அதிகம் தூங்கமாட்டேன். இப்படிப்பட்ட ரகளையின் காரணமாக நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம்.

இப்படி எனக்கு, ‘தூங்குவது’ என்ற பழக்கம்கூட வெறுப்பாகிவிட்டது. தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதே இல்லை. 

இப்படிச் சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும்  எனக்கு வெறுப்பாகிக்கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது.............

.............எனது வார்த்தைகளும் எழுத்துகளும் செய்கைகளும் தேசத் துரோகம் என்றும், வகுப்புத் துவேஷம் என்றும் பிராமண துவேஷம் என்றும், மான நஷ்டம் என்றும், அவதூறு என்றும், ராஜ துரோகம் என்றும், நாஸ்திகம் என்றும், மத தூஷணை என்றும் சிலர் சொல்லவும் ஆத்திரப்படவும் ஆளானேன்.

அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள் என்பவர்கள் என்னை வையவும் என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அவர்கள் அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும் என்று நானே யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்; நாம் ஏன் இவ்வளவு தொல்லைகளையும் அடைய வேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணமும் புகழும் சம்பாதிக்கிறோமா?

நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியதுண்டா? ஒரு தலைவராவது உதவியது உண்டா?

‘இமயமலை வெயிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல்’ இருக்கிறது என்பதாகக் கருதி விலகிவிடலாமா என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்குறைய ஆயுள் காலம் தீர்ந்துவிட்டது. இனி நாலோ ஐந்தோ, அல்லது, அதிகமிருந்தால் பத்து வருட காலமோ இருக்கலாம்.  இந்தக் கொஞ்ச காலத்தை ஏன் நம் மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்றெல்லாம் யோசித்து மறுபடியும் இதிலேயே உழன்றுகொண்டிருக்கிறோமே தவிர வேறில்லை#
===============================================================================

நன்றி: ‘பெரியார் சாதித்தது என்ன?’, தொகுப்பு: செந்தமிழ்க்கோ; குடியரசு பதிப்பகம். 2ஆம் பதிப்பு, 2009.



புதன், 14 டிசம்பர், 2016

புரட்சித் தலைவி அம்மா ஆலயம்!

ஒரு புண்ணியவான், புரட்சித் தலைவிக்கு ஆலயம் கட்டியிருப்பதாக இன்று[14.12.2016] செய்தி [www.newsfast.in/news/temple-for-amma ]படித்தேன்; செய்தி: www.dinamani.com/.../தஞ்சாவூரில்-ஜெயலலிதாவுக்க...

#மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள கொங்கணேசுவரர் கோயில் அருகே ஆட்டோ நிறுத்துமிடம் உள்ளது. இதையொட்டி, புரட்சித் தலைவி அம்மா ஆலயம் என்ற பெயரில் இக்கோயில், மொத்தம் 130 சதுர அடியில் ரூ. 1.50 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.
கோயிலுக்கான சுவர் எழுப்பப்பட்டு, மேற்கூரை வேயப்பட்டு, பீடங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இதில், ஒன்றரை அடி உயரத்தில் மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்படவுள்ளது. பீடத்தின் மேல்புறம் மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயிலை அமைத்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த மாமன்ற முன்னாள் உறுப்பினரும், மாமன்ற முன்னாள் அதிமுக கொறடாவுமான எம். சுவாமிநாதன் தெரிவித்தது:
இக்கோயில் கட்டும் பணி டிச. 7-ம் தேதி இரவு தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணி நடைபெற்று கட்டுமானம் முடிந்துவிட்டது. அடுத்து சிலை வடிவமைப்பதற்கான ஆணை சுவாமிமலையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் சிலை வந்துவிடும். ஜெயலலிதா பிறந்த நாளான பிப். 24-ம் தேதி சிலை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பீடத்தில் தாற்காலிகமாக 5 அடி உயரமும், 4 அடி அகலமும் உடைய புகைப்படம் வைக்கப்படவுள்ளது. தேக்கு வேலைப்பாட்டுடன் கூடிய இப்புகைப்படம் ரூ. 17,000 செலவில் தயார்செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இருபுறமும் அண்ணா, எம்.ஜி.ஆர். புகைப்படங்களும் வைக்கப்படவுள்ளன. இக்கோயில் திறப்பது குறித்து தெற்கு மாவட்டச் செயலர் வைத்திலிங்கத்திடம் கூறியுள்ளேன். ஓரிரு நாளில் கோயில் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்#
செய்தி படித்துச் சிலிர்த்தேன்!

திருப்பதி ஏழுமலையானும் கேரளாவின் ஐயப்பனும் கோடி கோடியாய்ச் சம்பாதிப்பதை நினைத்து, இவர்களைப் போல ஒரு கொழுத்த பணக்காரச் சாமி தமிழகத்தில் இல்லையே என்று எண்ணி எண்ணி மனம் புழுங்கிக்கொண்டிருப்பவன் நான். அங்கெல்லாம் கணக்கு வழக்கில்லாமல் கொண்டுபோய்க் கொட்டுபவன் இளிச்சவாய்த்  தமிழன்தான்.

புரட்சித் தலைவிக்கென்று  தமிழ்நாட்டில் ஒரு  கோயில் எழுப்பப்பட்டதால், ஆந்திராவுக்கும் மலையாள தேசத்திற்கும் செல்லும் பக்தர் கூட்டம் இனி ஒட்டுமொத்தமாய்த் திசை மாறும்; அம்மா ஆலயத்தில் சங்கமம் ஆகும்;  இங்கே கட்டுக்கட்டாய் பணமும் கொத்துக் கொத்தாய்த் தங்க நகைகளும் குவியும். ஏழுமலையானும் ஐயப்பனும் பரம ஏழைகள் ஆவார்கள். புரட்சித் தலைவி அம்மா உலகின் நம்பர் 1 பணக்காரச் சாமி ஆவார். நம் போன்றவர் ஆத்மா சாந்தி அடையும். 

ஆகையினால் தமிழர்களே, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆலயப் பணிக்கும் அதன் வளர்ச்சிக்கும் இன்றே உங்களை அர்ப்பணித்திடுங்கள்.

வாழ்க தமிழன்! வெல்க தமிழினம்!!
===============================================================================



வெள்ளி, 9 டிசம்பர், 2016

இப்படியும் ஒரு நோயா?!...அடக்கடவுளே!!

“அகற்றப்பட்ட என்னுடைய காலின் கட்டை விரல் வலிக்கிறது!” -சொன்னவர் மறைந்த கவிஞர் இன்குலாப். இது நடந்த நிகழ்ச்சி.
படம்: google
#றைந்த கவிஞர் ‘இன்குலாப்’ அவர்களுக்குச் சர்க்கரை நோய் முற்றிய நிலையில் ஒரு கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஒரு காலை இழந்த நிலையிலும் தீரத்துடன் அவரின் போராட்டம் தொடர்ந்தது...இருத்தலுக்கான போராட்டம்.

சில மாதங்களுக்கு முன்பு நானும் நண்பர் வைகறையும் கவிஞரைச் சந்திக்கச் சென்றோம். அவர் முகம் வாடியிருந்தது. அவரே சொன்னார்: “சமீப காலமாக ஒரு சித்ரவதையை அனுபவிக்கிறேன். அகற்றப்பட்ட என்னுடைய காலின் கட்டை விரல் வலிக்கிறது!”

“என்ன சொல்கிறீகள் இன்குலாப்? இல்லாத காலின் கட்டை விரலில் வலியா?” என்றேன்.

“ஆமாம்! இல்லாத காலின் கட்டை விரல்தான் வலிக்கிறது...தாங்க முடியாத வலி. கால் அரிக்கிறது. கையைக் கொண்டுபோனால் அங்கே கால் இல்லை. வெற்றிடம்! ஆனாலும் அரிப்பு தாங்க முடியவில்லை...துடிக்கிறேன்” என்றார் வேதனையோடு.

“டாக்டரிடம் காண்பித்தீர்களா?”

“என் மகளே ஒரு மருத்துவர்தானே! மூளையில் முன்னரே பதிவான வலியாம் அது! அதுக்குப் பேரு ‘ஃபாண்டம் பெயின்’ என்கிறார்கள். அவயவத்தை இழந்த பின்னரும் வலி தொடர்வானேன்? அப்படியானால், உடல் உறுப்பு என்பதெல்லாம் மூளையின் நீட்சியா? நமது இருத்தலை உணரவைக்கும் சிருஷ்டியின் சூட்சுமமா? என்ன...என்ன இதெல்லாம்?”

கண்களில் ஆயாசத்துடன் இன்குலாப் கேட்டார். விடை தெரியாத கேள்விகள்!#

கவிஞர் இன்குலாப்பைச் சந்தித்து உரையாடியவர் ‘தஞ்சாவூர்க் கவிராயர்’.

கவிராயருக்கும் இப்பேட்டிக் கட்டுரையை வெளியிட்ட ‘தி இந்து’[09.12.2016] நாளிதழுக்கும் நம் நன்றி.

இப்பதிவு, கட்டுரையின்  ஒரு பகுதி மட்டுமே.
===============================================================================


புதன், 7 டிசம்பர், 2016

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவாக.....

எத்தனை பெரிய மனிதராயினும் மரணம் எய்திய ஒருவருக்காக இரங்கல் தெரிவிப்பதும் பிரார்த்தனை செய்வதும் வரவேற்கத்தக்க மனித நாகரிகம் எனினும் அவற்றால் பயனேதுமில்லை என்பது என் எண்ணம். அத்தகையோர் நினைவாக மரண பயத்தைக் குறைக்கவும், மரணத்தைத் தள்ளிப் போடுவதற்குமான ஆய்வுகளில் ஈடுபடுவது மனித குலம் ஆற்ற வேண்டிய அரிய பணியாகும்.

அம்மையார் தமிழகத்திற்கு ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து இப்பதிவை முன்வைக்கிறேன்.

கடவுள் என்று ஒருவர் இருப்பதை நம்பாதவர்கள்கூட, மரணத்தை எண்ணி அஞ்சவே செய்கிறார்கள். அவர்களில் எளியவனான நானும் ஒருவன். அடிக்கடி மரணம் குறித்துச் சிந்திப்பதாலோ என்னவோ, அது குறித்துக் கொஞ்சம் பதிவுகள் எழுதியிருக்கிறேன். அவற்றுக்கான சிறு பட்டியலையும் [பழையவை] தந்திருக்கிறேன். அவற்றை ஏற்கனவே படித்தவர்களும் படிக்க விரும்பாதவர்களும் அவற்றைப் புறம்தள்ளி மேலே தொடரலாம்.

அ] http://kadavulinkadavul.blogspot.com/2013/05/blog-post_5539.html

ஆ] http://kadavulinkadavul.blogspot.com/2011/08/27.html

 இ] http://kadavulinkadavul.blogspot.com/2011/09/28.html
தோன்றுவதும் அழிவதுமாகப்  பெரும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானாலும்கூட, பிரபஞ்ச வெளியில் ஏதேனும் ஒன்றோ பலவோ இருந்து கொண்டே இருக்கும். வகை வகையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். இந்நிலையில், நாம் மட்டும் இனி எக்காலத்துக்கும் இல்லாமல் போகிறோமே அது ஏன் என்று எண்ணி எண்ணி மயங்கி மயங்கி அஞ்சி அஞ்சி வாழ்கிறது மனித குலம்.

இந்தவொரு அச்சத்திலிருந்து என்றாவது ஒரு நாள் விடுபட இயலுமா?

“இயலும்” என்று அறிவியல் சொல்லும் காலம்  வருமா?

யாருக்கும் தெரியாது.

அதுவரை......................

‘உயிர்’ பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் இன்றியமையாத் தேவைகளாகும்.

இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைகின்ற அனைத்து ‘வாழ்வன’ வற்றையும் ‘உயிர்கள் என்று அழைக்கிறோம்.

உயிர்களின் தோற்றம் பற்றி ஓரளவுக்கு அறிவியல் கற்ற அனைவருக்கும் தெரியும்.

ஆணின் ‘உயிரணு’வும் பெண்ணின் ‘சினை முட்டையும் ’ இணைந்து புதிய ஓர் ’உயிர்’ உருவாகிறது.

புதிய உயிர்கள் உருவாவதற்குக் காரணமான உயிரணு, சினை முட்டை ஆகியவை என்றும் அழியாத ‘நிலைபேறு’ கொண்டவை அல்ல.

சினை முட்டையில் சங்கமம் ஆகும் உயிரணுவைத் தவிர, ஆண் வெளியேற்றும் விந்துவிலுள்ள கோடிக்க கணக்கான உயிரணுக்கள் தோன்றிய சில கணங்களிளேயே அழிந்து போகின்றன.

பெண்ணின் உடம்பில் உற்பத்தியாகும் சினை முட்டைகளும் அழியும் தன்மை கொண்டவையே.

ஆக, அழியும் தன்மை கொண்ட ஓர் உயிரணுவும் ஒரு சினை முட்டையும் பெண்ணின் கருப்பையில் இணைந்து, ஓர் உடம்பைப் பெற்று, மண்ணில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பிறந்து வளர்ந்து வாழ்வதன்  மூலம், ‘தற்காலிகமாக’  அவை ’அழிவிலிருந்து’ தப்பிப் பிழைக்கின்றன.

வாழ்ந்து முடித்து..................................
அழிவிலிருந்து தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்த அவை, உடம்பு அழியும்போது நிரந்தரமாக அழிந்து போகின்றன.
பல கோடி உயிரணுக்களும் சினை முட்டைகளும் தோன்றிய சில கணங்களிலேயே அழிந்து போக, விதிவிலக்காக, அவற்றினும் மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உயிரணுக்களும் சினை முட்டைகளும் இரண்டறக் கலப்பதன் மூலம் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கின்றனவே தவிர, அவை அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை.

ஆக, தோற்றம் கொண்ட அனைத்து உயிரணுக்களும் சினை முட்டைகளும் ஏதோ ஒரு நிலையில் அழிந்து போவதென்பது தவிர்க்கவே இயலாத ஒன்று என்பது தெளிவாகிறது.

இதுவே இயற்கை நியதி.

உண்மை இதுவாக இருக்கையில், ‘உயிர் என்றும் அழியாதது; உடம்பு அழியும் போது அது அங்கிருந்து வெளியேறுகிறது என்று நம்புவது அடிப்படை ஆதாரங்களற்ற அனுமானம்தான்.

இம்மாதிரியான அனுமானங்களைச் செய்வதற்கும் அவற்றை நம்புவதற்கும் அடிப்படைக் காரணம்........................

ஏதேனும் ஒரு வடிவில் நிரந்தரமாய் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆசைதான்.

ஆசைப்படுவதில் நியாயம் இருக்கிறது. அது ‘உண்மை’ ஆவது சாத்தியமா?

 அறிவியலால் அது சாத்தியப்படும் காலம் வருமா?

அதற்குக் 'காலம்’தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுவரை,  கடவுள், பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறுபிறப்பு என்று எதைஎதையோ நம்பி எண்ணற்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி, இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை  வீணடிக்காமல், தமக்கும் பிறருக்கும் நன்மை தரும் வகையில் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.
***********************************************************************************************************************