வெள்ளி, 30 டிசம்பர், 2016

நாமக்கல் ஆஞ்சநேயரும் 54 ஆயிரம் உளுந்து வடையும் நானும்!!!

“எந்தவொரு பொருளோ உயிரோ தானாகத் தோன்றுவது சாத்தியமில்லை. அதைப் படைத்திட ஒரு படைப்பாளன் தேவை. அவனே[அவரே!] கடவுள்” என்பார்கள் ஆன்மிகவாதிகள்.

அனைத்தையும் கடவுளே படைத்தார் என்பதை இப்போதைக்கு ஏற்போம். 

கல்லையும் மண்ணையும் கடவுள் படைத்தாரென்றால், கல் கல்லாகவும் மண் மண்ணாகவும் பயன்படத்தான்; படைக்கப்பட்ட கல்லையும் மண்ணையும் தன்னின் மாற்று வடிவங்களாகக் கருதி மனிதன் வழிபடுவதற்காக அல்ல. மனிதனைப் படைத்ததும் அவன் மனிதனாக வாழ்வதற்குத்தான்.

எனவே, உண்டு செரித்து உடம்பை வளர்த்து இன விருத்தி செய்து வாழ்ந்து மரிப்பதற்கென்றே படைக்கப்பட்ட மனிதர்களைக் கடவுளின் அவதாரங்கள் என்றும் புதல்வர்கள் என்றும் தூதர்கள் என்றும் போற்றியதும் போற்றுவதும் நகைப்புக்குரிய செயலாகும்.

ஐந்தறிவு உயிர்களையும் உயிரற்ற பிண்டங்களையும் கடவுளாக்கி வழிபடுவதும் இது போன்றதே.

இதிகாசக் கற்பனைக் கதாபாத்திரமான அனுமனுக்கு உயிர் கொடுத்துக் கடவுளாக்கிச் சிலையும் வைத்து, அஷ்டமி துஷ்டமி அமாவாசை பௌர்ணமிகளில் சிறப்புப் பூஜை செய்து, விலை மதிப்புள்ள மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், வெண்ணெய், தேன் போன்ற விலை மதிப்புள்ள பொருள்கள் வீணாக்கப்படுகின்றன.

மேற்சொன்னவை போன்ற பொருள்கள் மாந்தரின் உணவுப் பொருள்களாகவும் மருந்துப் பொருள்களாகவும் அன்றாட வாழ்வில் பயன்படுபவை.

இவை படைக்கப்பட்டது மனிதர்களுக்காகத்தான்; கடவுளுக்கோ கடவுள்களுக்கோ அல்ல.

நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தியாம்.
தினமலர், 29.12.2016
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 54 ஆயிரம் வடைமாலை சாத்தப்பட்டுச் சிறப்பு அபிஷேகம் நடந்ததாம்.

[ஐம்பதல்ல நூறல்ல, 54 ஆயிரம்! அதென்ன கணக்கு? கணக்கிட்டது யார்? நம் முன்னோர்கள். அனைத்து மூடநம்பிக்கைகளையும் அழியாமல் கட்டிக் காப்பவர்கள் காலஞ்சென்ற நம் முன்னோர்களே. வாழ்க அவர்களின் திருநாமம்.]

54 ஆயிரம் பொத்தல் உளுந்து வடைகள் சரம் சரமாய்க் கோக்கப்பட்டு அனுமனுக்குச் சாத்தப்பட்டதாம். பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாம்.

வடையும்  மனிதர்களுக்கான ஓர்   உணவுப்பொருள்தான். இதை அனுமன் என்னும் கடவுளுக்குப் படைப்பதன் நோக்கம் என்ன?

வடையில் புனிதத்தை ஏற்றுகிறார்களா? அதைப் பெறுவதன் மூலம் பக்தகோடிகள் புண்ணியம் சேர்க்கிறார்களா?

இப்படிக் கேள்விகள் எழுப்பினால் நேரடியான பதில் கிடைக்காது; ‘இதெல்லாம் ஐதீகம்’ என்பதே பதிலாக இருக்கும்; அடிஉதையும் கிடைக்கக்கூடும்.

கடவுள் ஒருவரே என்றார்கள். அவர் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என்று சொல்லி விதம் விதமாய் வகை வகையாய்க் கற்றுக்குட்டிக் கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். அர்த்தமற்ற சடங்குகளைச் செய்து மூடநம்பிக்கைகளை வளர்த்தார்கள்.

மற்ற மதங்கள் எப்படியோ, மூடநம்பிக்கைகளை வளர்த்துத் தம் மதத்தைக் காக்கவும் வளர்க்கவும் நினைக்கிறார்கள் இந்துமதவாதிகள். விளைவு என்னவாக இருக்கும்?

இது வாழுமா, அழியுமா?

காலம் பதில் சொல்லும்.
***********************************************************************************************************************










  

6 கருத்துகள்:

  1. அதில் ஏற்றுவதால் வடையின் சுவை கூடலாமோ ?

    பதிலளிநீக்கு
  2. சுவை கூடுகிறதோ இல்லையோ பக்தர்களின் மண்டையில் மூடநம்பிக்கையின் சுமை கூடும்!

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. வட போச்சேன்னு யாரும் வருத்தப் பட்டிருக்க மாட்டார்கள் :)

    பதிலளிநீக்கு
  4. வடை கிடைக்கலையேன்னு என் துணைவியார் வருத்தப்பட்டார். அத்தனை கூட்டமாம்!

    பதிலளிநீக்கு