Tuesday, November 21, 2017

போற்றி...போற்றி! ஏழுமலையான் திருவடி போற்றி!!

குங்கமப்பூ ஸ்பெயினிலிருந்தும், கஸ்தூரி நேபாளத்திலிருந்தும், புனுகு, கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம்[?], நிரியாசம்[?] போன்றவை சீனாவிலிருந்தும் மேலும் சில வாசனைத் திரவியங்கள் பாரீசிலிருந்தும்.  ரோசாப்பூ[ஒரு பூவின் விலை ரூ80] ஐரோப்பாவிலுள்ள  ஆம்ஸ்ட்ராங்கிலிருந்தும் வரவழைக்கப்படுகின்றன['பாக்யா', அக்டோபர் 06-12; 2017] வார இதழ்ச் செய்தி].

பெரும் பொருட் செலவிலான இந்த இறக்குமதிகள் யாருக்காக? எதற்காக?
திருப்பதி ஏழுமலையான் என்னும் குபேரக் கடவுளுக்காக; அவருக்கு அபிஷேகம் செய்வதற்காக.

ஏழுமலையான் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய். இவற்றை இருப்பில் வைப்பதற்குப் போதுமான இடம் இல்லையாம்.

மேட்டுக்குடிக் கடவுளான இவருக்குச் சாத்தியிருக்கும் சாளக்கிராமத் தங்க மாலை 12 கிலோ எடை கொண்டதாம். மூன்று திடகாத்திரமான அர்ச்சகர்கள் சேர்ந்துதான் சாத்த முடியுமாம்.

சூரிய கடாரியின்[?] எடை 5 கிலோ என்கிறார்கள். ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்புக் கொண்டதாம்.

இத்தனை பெரிய கோடி கோடி கோடீஸ்வரக் கடவுளுக்கான அபிஷேகத்துக்கு உள்ளூர் வாசனைப் பொருள்களைப் பயன்படுத்துவது மரியாதைக் குறைவு அல்லவா? அதனால்தான் பல்வேறு உலக நாடுகளிலிருந்து செய்யப்படுகிறது இந்த இறக்குமதி. தினமும் அபிஷேகம்தான். ஓர் அபிஷேகத்துக்கு மட்டும் ரூபாய் ஒரு லட்சம் ஆகிறதாம்.

இந்தப் பணக்காரக் கடவுள், அபிஷேகத்தின்போது மூன்றாவது கண்ணைத் திறந்து பார்ப்பது போன்ற அதிசயங்களையும் நிகழ்த்துகிறாராம். குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும்போது இவருக்கு வியர்ப்பதாகவும், பட்டு பீதாம்பரத்தால் அதை அர்ச்சகர்கள் துடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படி அபூர்வ சக்திகள் வாய்த்த கடவுளாக இவர் இருப்பதால்தான், 'உள்சாத்து' வஸ்திரம் அணிவிப்பதற்காக ரூபாய் 20 ஆயிரம் செலுத்தி, 10 ஆண்டுகள் வரை காத்திருக்கிறார்கள் பக்தகோடிகள். 'மேல்சாத்து' வஸ்திரம் சாத்துவதற்காக, 12500 ரூபாய் செலுத்தி 3 ஆண்டுகள் காத்திருக்கிறார்கள்.

சாத்து வஸ்திரம் போர்த்துவதற்காகப் பெருந்தொகை செலவழிப்பதோடு மிகப் பல ஆண்டுகள் காத்திருக்கும் பக்தர்களும், அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை என்று தத்தம் இறைப்பணியைச் செவ்வனே செய்துவரும் அர்ச்சகர்களும்[?] வேண்டுகோள் வைத்தால்.....

மூன்றாம் கண்ணைத் திறந்து பார்க்கிற ஏழுமலையான் கண்டிப்பாக வாய் திறந்து பேசவும் செய்வார்.

பேசினால் என்னவெல்லாம் பேசுவார்?

"நான் கடவுள். உங்களின் பாரம்பரியமான உபசரிப்புகள் போதா. மண்ணுலக வாசனைத் திரவியங்களைத் தவிர்த்துத் விண்ணுலக வாசிகளின் தயாரிப்பான அமிழ்தத்தால் என்னைக் குளிப்பாட்டுங்கள். அவர்கள் அணியும் ஆபரணங்களால் என்னை அலங்கரியுங்கள்" என்று சொல்வாரா?  அல்லது.....

"அனைத்தையும் படைத்தவன் நான். விருப்பு வெறுப்பு அற்றவனும்கூட. புகழ்மொழிக்கும் வழிபாட்டுக்கும் நேர்த்திக்கடன்களுக்கும் மயங்குபவனல்ல. அபிஷேக ஆராதனைகளாலும் அலங்கரிப்புகளாலும் என்னை  மகிழ்வித்துப் பயனடையும் எண்ணத்தைக் கைவிட்டு, சக மனிதர்களையும் பிற உயிர்களையும் நேசிக்கப் பழகுங்கள்" என்பாரா?

என்னதான் பேசுவார் கடவுள்?

ஒரே ஒருதடவை வேண்டுகோள் வைக்கலாமே! செய்வார்களா?
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


Monday, November 20, 2017

உயிரே...என் உயிரே! நீ போகுமிடம் சொல் ஆருயிரே!!

கடவுள் குறித்த ஆய்வுகளைக் காட்டிலும் ‘உயிர்’ பற்றிய ஆய்வுகளே மனித குலத்தின் மேன்மைக்குப் பெரிதும் பயன்படுவனவாக அமையும்.
கடவுள் உண்டா  என்னும் கேள்விக்கு இன்றுவரை விடை இல்லாதது போலவே, மரணத்திற்குப் பிறகு உடம்பிலிருந்து, உயிர், ஆவி, ஆன்மா என்னும் இவற்றில் ஏதோ ஒன்று வெளியேறுகிறதா என்ற கேள்விக்கும் விடையில்லை.

‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மண்டையோட்டின் குறிப்பிட்ட பகுதி இன்னமும் சரியாக உருவாகாமல் இருப்பதை கவனிக்க முடியும். அந்தப்பகுதி இன்னமும் தோலாகத்தான் இருக்கிறது, எலும்பு உருவாகவில்லை. இந்தப் பகுதி யோகாவில் ‘பிரம்மரந்த்ரா’ அல்லது ‘ரந்த்ரா’ என அழைக்கப்படுகிறது. அதற்கு சிறிய துவாரம் அல்லது வழி என்று பொருள். கருவில் குழந்தை வளரும்போது இந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் அந்த குழந்தைக்குள் இறங்குகிறது. இறங்கிய உயிர் இந்த(குழந்தையின்) உடல் தன்னை தாங்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறது. அந்த அளவிற்கு அதற்கு விழிப்புணர்வு இருக்கிறது. தன் இருப்பிற்கு அந்த உடல் தகுதியானதல்ல என்று அது கருதினால் தான் வந்த வழியாகவே திரும்பிப் போய்விடும்’[இன்னொரு உடம்பிலிருந்து விடுபட்ட ஒன்றா அது? சிந்திக்கும் ஆற்றல் பெற்றதா? புதிய உடம்பில் புகும்வரை பரந்த வெளியில் அலைந்துகொண்டிருக்குமா? எங்கு? எங்கெல்லாம்? இப்படி அலையும் உயிர்களின் எண்ணிக்கை என்ன? கணக்கிட்டது யார்? யாரெல்லாம்? இப்படி இன்னும் பல கேள்விகள் உள்ளன].  [http://isha.sadhguru.org/blog/ta/udalil-uyir-nulaiyum-ragasiyam/] என்று அறிவியல் அடிப்படையிலான நிரூபணம் ஏதுமின்றி, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் கதையளந்து, தம்மைப் பிரபலப்படுத்திக்கொள்வதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!

கடவுள் என்று ஒருவர் இருப்பதையோ, சாவுக்குப் பிறகு, மேற் சொன்னவற்றுள் ஏதோ ஒன்று உடம்பிலிருந்து வெளியேறுகிறது என்பதையோ நம்பாதவர்கள்கூட, மரணத்தை எண்ணி அஞ்சவே செய்கிறார்கள்.

பெரும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானாலும்கூட, பிரபஞ்ச வெளியில் ஏதேனும் ஒன்றோ பலவோ இருந்து கொண்டே இருக்கும். வகை வகையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். நாம் மட்டும் இனி எக்காலத்துக்கும் இல்லாமல் போகிறோம். பார்த்த எதையும் இனி பார்க்கவே முடியாது; அனுபவித்த எதையும் இனி அனுபவிக்கவே முடியாது. இம்மாதிரியான அவலங்களுக்கு நாம் உள்ளாவது ஏன்? யார் காரணம்? எது காரணம்? இப்படிப் பலவாறாக எண்ணி மயங்கி அஞ்சி அஞ்சி வாழ்கிறது மனித குலம்.

இந்தவொரு அச்சத்திலிருந்து என்றாவது ஒரு நாள் விடுபட இயலுமா?

“இயலும்” என்று அறிவியல் சொல்லும் காலம்  வருமா?

யாருக்கும் தெரியாது.

அதுவரை......................

‘உயிர்’ பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தவிர்க்க இயலாதவை.

இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைகின்ற அனைத்து ‘வாழ்வன’ வற்றையும் ‘உயிர்கள் என்று அழைக்கிறோம்.

உயிர்களின் தோற்றம் பற்றி ஓரளவுக்கு அறிவியல் கற்ற அனைவருக்கும் தெரியும்.

ஆணின் ‘உயிரணு’வும் பெண்ணின் ‘சினை முட்டையும் ’ இணைந்து புதிய ஓர் ’உயிர்’ உருவாகிறது.

புதிய உயிர்கள் உருவாவதற்குக் காரணமான உயிரணு, சினை முட்டை ஆகியவை என்றும் அழியாத ‘நிலைபேறு’ கொண்டவை அல்ல.

சினை முட்டையில் சங்கமம் ஆகும் உயிரணுவைத் தவிர, ஆண் வெளியேற்றும் விந்துவிலுள்ள கோடிக்க கணக்கான உயிரணுக்கள் தோன்றிய சில கணங்களிளேயே அழிந்து போகின்றன.

பெண்ணின் உடம்பில் உற்பத்தியாகும் சினை முட்டைகளும் அழியும் தன்மை கொண்டவையே.

ஆக, அழியும் தன்மை கொண்ட ஓர் உயிரணுவும் ஒரு சினை முட்டையும் பெண்ணின் கருப்பையில் இணைந்து, ஓர் உடம்பைப் பெற்று, மண்ணில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பிறந்து வளர்ந்து வாழ்வதன்  மூலம், ‘தற்காலிகமாக’  அவை ’அழிவிலிருந்து’ தப்பிப் பிழைக்கின்றன.

வாழ்ந்து முடித்து..................................

அழிவிலிருந்து தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்த அவை, உடம்பு அழியும்போது நிரந்தரமாக அழிந்து போகின்றன. பல கோடி உயிரணுக்களும் சினை முட்டைகளும் தோன்றிய சில கணங்களிலேயே அழிந்து போக, விதிவிலக்காக, அவற்றினும் மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உயிரணுக்களும் சினை முட்டைகளும் இரண்டறக் கலப்பதன் மூலம் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கின்றனவே தவிர, அவை அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை.

ஆக, தோற்றம் கொண்ட அனைத்து உயிரணுக்களும் சினை முட்டைகளும் ஏதோ ஒரு நிலையில் அழிந்து போவதென்பது தவிர்க்கவே இயலாத ஒன்று என்பது தெளிவாகிறது.

இதுவே இயற்கை நியதி.

உண்மை இதுவாக இருக்கையில், ‘உயிர் என்றும் அழியாதது; உடம்பு அழியும் போது அது அங்கிருந்து வெளியேறுகிறது என்று நம்புவது அடிப்படை ஆதாரங்களற்ற அனுமானம்தான்.

கரு உருவாகும் போது ஆன்மா என்ற ஒன்று அதனுள் புகுந்து விட்டது; உடம்பு அழியும் போது அதிலிருந்து வெளியேறுகிறது எனச் சொல்வதற்கும் கூட அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லை. [இது பற்றி இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன். ஆன்மாவும் மறுபிறப்பும் http://kadavulinkadavul.blogspot.com/2011/10/blog-post.html , ஆன்மாவுடன் ஓர் உரையாடல் http://kadavulinkadavul.blogspot.com/2011/11/blog-post_16.html ]

இம்மாதிரியான அனுமானங்களைச் செய்வதற்கும் அவற்றை நம்புவதற்கும் அடிப்படைக் காரணம்........................

ஆசைதான். ஏதேனும் ஒரு வடிவில் நிரந்தரமாய் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆசைதான்.

ஆசைப்படுவதில் நியாயம் இருக்கிறது. அது ‘உண்மை’ ஆவது சாத்தியமா?

 அறிவியலால் அது சாத்தியப்படும் காலம் வருமா?

அதற்குக் ’காலம்’தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுவரை,  கடவுள், பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறுபிறப்பு என்று எதைஎதையோ நம்பி எண்ணற்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி, இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை  வீணடிக்காமல், தமக்கும் பிறருக்கும் நன்மை தரும் வகையில் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.
*******************************************************************************************************************
மிகப் பழைய பதிவு. புதுப்பிக்கப்பட்டது.

Saturday, November 18, 2017

பெண்களுக்குக் ‘கற்பு’ ஏன்? கண்ணதாசன் கண்டறிந்த உலக நீதி!!!

#ஒருவன், தனக்குச் சொந்தமான நிலத்தை உழவு செய்து ‘வித்து’ இடுகிறான்[பயிர் செய்கிறான்]. அந்நிலத்தில் விளையும் பொருள் அந்த நில உரிமையாளனுக்குத்தான் சொந்தம்[இது உலக நீதி]. அது போல.....

மனைவி என்பவள் கணவனின் ‘உடைமை’. மனைவி என்னும் நிலத்தில் ‘வித்து’ இடுபவன் கணவன். எனவே, மனைவி பெற்றெடுக்கிற குழந்தைகள் கணவனின் குழந்தைகள் ஆகின்றன. அதனால்தான்.....

“நீ யாருடைய பிள்ளை?” என்று கேட்டால் தந்தை பெயரைச் சொல்கிறோம். இன்னும் சொல்லப்போனால், தந்தை யார் என்பதைத் தாயார் சொல்லித்தான் அறிகிறோம்; அவரைத் தந்தையாக ஏற்கிறோம். தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பன் யார் என்பது தெரியாவிட்டால்[?!] தாயார் பெயர் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை#

‘ஆணுக்குப் பெண் அடிமையல்ல’ என்னும் உண்மையை ஏறத்தாழ உலகம் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், பெண் என்பவள் ஆணுக்குச் சொந்தமான விளைநிலம் ஆவாள்’ என்னும் பத்தாம்பசலித்தனமான கருத்துக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல; மறைந்த கவிஞர்[இவர் சிறந்த கவிஞர் என்பதில் சந்தேகமில்லை] கண்ணதாசன்தான்.

தன்னுடைய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் நூலில் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியாரின்  கருத்தை மேற்கோள்  காட்டி அதைப் பாராட்டவும் செய்கிறார் கவிஞர்.

‘மனைவியானவள் கணவனின் உடைமை ஆதலால், அவள் கற்பு நெறி பிறழாமல் வாழ்வது அவசியம்; அது உலக நீதி’ என்றும் வலியுறுத்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
இப்படிப் பல அபத்தமான கருத்துகளின் தொகுப்புத்தான் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’[‘கண்ணதாசனின் அர்த்தமற்ற இந்துமதம்’என்னும் தலைப்பில் நூல் இருப்பதை அறிவேன். அதை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை].

இந்நூலில், பெரும்பான்மை மக்களின் மனங்களில் ஆழமாய்ப் பதிந்துவிட்ட மூடநம்பிக்கைகளுக்குப் பகுத்தறிவு முலாம் பூசியிருக்கிறார் கவிஞர்.

எளிய இனிய கவித்துவ நடையைக் கையாண்டு, மூடநம்பிக்கைகளைத் திணிப்பதில் கண்ணதாசன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் சொல்லலாம். பல்லாயிரக்கணக்கில் இந்நூல் விற்பனையாகியிருப்பதே இதற்குச் சான்று[இப்பதிவுக்குப் பயன்பட்டது ‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’, அறுபத்து ஒன்பதாம் பதிப்பு: ஃபிப்ரவரி, 2005].

தற்காலிக அல்லது, இறுதி மூச்சுவரை நீடிக்கிற துன்பங்களைத் தாங்குவதற்கான மன உறுதியைப் பெறுவதில் நம் மக்களுக்கு நாட்டமில்லை; அது குறித்துச் சிந்திப்பதும் இல்லை. கடின உழைப்பின் மூலம் பெற வேண்டியவற்றைக் கடவுளை வழிபடுதல், ஜோதிடனின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றுதல் என்று குறுக்கு வழிகளில் பெற நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருப்பதுதான் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ போன்ற நூல்கள் பல்லாயிரக் கணக்கில்  விற்பனையாவதற்கான காரணம் ஆகும்.

கண்ணதாசன் போன்ற ஆன்மிகப் பரப்புரையாளர்களையே பெரும்பாலான ஊடகங்களும் ஆதரிக்கின்றன; மிகச் சிறுபான்மையினராக உள்ள பகுத்தறிவாளர்களைச் சீந்துவதே இல்லை. 

ஊடகங்களைத் திருத்தும் முயற்சியில் சிறுபான்மைச் சிந்தனையாளர்கள்[எண்ணிக்கை என்ன?] ஈடுபடுவார்களா? அவர்களின் முயற்சி எள்ளளவேனும் பலன் தருமா?

ஆழ்ந்து சிந்தித்தால் கவலைதான் மிஞ்சுகிறது.

காலம் ஒரு நாள் மாறும்[?]. காத்திருப்போம்.

[அர்த்தமுள்ள இந்துமதத்தால் விளையும் அனர்த்தங்கள் குறித்து வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் எழுதுவேன்].

நன்றி.
=====================================================================================

Thursday, November 16, 2017

காந்தி கண்ட கனவும் சிங்கப்பூர்ப் பெண்களும்!....[பத்து வரிப் பதிவு]

‘அழகான இளம் பெண்கள், நகையணிந்து நட்ட நடு இரவில் அச்சமின்றித் தன்னந்தனியாக நடந்து செல்லும் நிலை உருவாகும்போதுதான் நம் நாடு சுதந்திரம் பெற்றதாகக் கருத முடியும்’ என்றார் காந்தியடிகள்.

காந்தி கண்ட கனவை அவர் வாழ்ந்த இந்தப் புண்ணிய பாரதம் நனவாக்கவில்லை. குட்டி நாடான சிங்கப்பூர் அதைச் சாதித்திருக்கிறது. வாழ்க சிங்கம் நிகர் ‘சிங்கை’ ஆடவர்கள்!

சிங்கப்பூரில்.....

#பெண்கள், குறிப்பாக, நகையணிந்த  இளம் பெண்கள் தத்தம் பணி முடித்து, நடந்தோ வாகனங்களை ஓட்டிக்கொண்டோ நள்ளிரவில் கொஞ்சமும் அச்சமின்றி வீதிகளில் செல்கிறார்கள்#
=====================================================================================
நன்றி: பேரா.பா.சீதாராமன், ‘சிங்கையில் 50 நாட்கள்’, ஸ்ரீவிவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தர்மபுரி. முதல் பதிப்பு: 2008.

Tuesday, November 14, 2017

அடச்சீ...த்தூ...இவர்களா உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க உதவும் கடவுள்கள்?!?!

“ஜோதிடம் ஓர் அறிவியல் கலையே” என்று  வாதிடும் இன்றைய ஜோதிடர்கள் பலரும், நவக்கிரகங்களைக் கடவுள்களாக உருவகித்தே ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுகிறார்கள். 

நவக்கிரகங்கள் கடவுள்களா?

இந்தக் கடவுள்களின் அவதாரம் பற்றிய வேதபுராணக் கதைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். படித்து முடித்து, இவர்களெல்லாம் கடவுள்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

சூரியன்:
இந்தக் கடவுள், காசியப முனிவருக்கும் ‘அதிதி’ என்கிற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்ததால், ‘ஆதித்தன்’[சூரியனின் வேறு பெயர்] என்ற பெயரைப் பெற்றான் [பாரதம்]. அதிதி 12 சூரியன்களைப் பெற்றதாகவும்  ஒரு சூரியனே மாதந்தோறும் வேறு வேறு கோலம் பூணுவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

[சூரியன் தோன்றுவதற்கு முன்பே காசியபர் போன்ற மானுடர்கள் தோன்றியது எப்படி என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு?]

மார்க்கணடேய புராணம் சொல்லும் இன்னொரு கதை.....

இருள் மயமான இந்த அண்டத்தைப் பிரமன் பிளந்தான்[எதற்கு?]. அப்போது ‘ஓம்’ என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலியிலிருந்துதான் சூரியன் தோன்றினான். 

[கற்பனையானவை எனினும் மேற்கண்ட கதைகள் சுவாரசியமானவை என்பதில் சந்தேகமில்லை].

சந்திரன்:
வில்லிபுத்தூரார் சொல்கிறார்: “எங்கள் இறைவனாகிய திருமாலின் இருதயத்திலே பிறந்தவன் இவன்; நாள்தோறும்[?!?!?!?!?!] வானில் உள்ள நட்த்திர மங்கையரைக் கூடிக் குலபுபவன்.....”

இவனின் பிறப்பை விவரிக்கும் இதனினும் சுவையானதோர் அதிசயக் கதை.........

‘அத்திரி’ என்னும் பெயர் கொண்ட முனிவர் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரிடமிருந்து வெளிப்பட்ட ‘விந்தணு’அவரின் உள்ளுறுப்புகள் வழியாக மேல் நோக்கிச் சென்று அவரின் கண் வழியாக வெளிப்படலாயிற்று.

அதனைக் கண்ணுற்ற இந்திரன், ஒரு பெரிய யோகியின் விந்தணு வீணாவதைத் தவிர்க்க, அதைத் தன் கரங்களில் ஏந்தி[கர்மம்...கருமாந்தரம்...] ப் பக்குவமாய் ஒரு பாத்திரத்தில் சேமித்துத் தன் [இந்திர]விமானத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தான். அவ்விந்தணுவே காலப்போக்கில் சந்திரனாய் உருக்கொண்டது.

செவ்வாய்:
‘அங்காரகன். எனப்படும் செவ்வாய்க்கு, ‘மங்களன்’, ’ ‘குஜன்’ முதலான வேறு பெயர்களும் உண்டு.

சிவபெருமான் உமையம்மையைப் பிரிந்திருந்த காலத்தில், ஒரு நாள், அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து வேர்வை வெளிப்பட்டுப் பூமியில் விழுந்தது. அந்த வியர்வையே பின்னர் சந்திரனாக உருவெடுத்தது. இவனை நிலமகள் வளர்த்து ஆளாக்கினாள்.
[மனித உயிர்கள் தோன்றுவதற்கு விந்தணு தேவைப்படுகிறது. ஆனால், தேவர்களின் பிறப்புக்கு வெறும் வியர்வையே போதும் போலிருக்கிறது!]

பாரத்துவாச முனிவரின் விந்தணுவிலிருந்து சந்திரன் தோன்றினான் என்பதும் மற்றுமொரு புராணக்கதைதான்!

புதன்:
‘தாரை’ என்பவள் குருபகவானின் மனைவி. இவள் சிலகாலம் சந்திரனின் அழகில் கிறங்கி மயங்கி, அவனுடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்தாள்; கருவுற்றாள்.

கருவுற்ற நிலையில் மீண்டும் குருபகவானோடு இணைந்து இல்லற இன்பம் துய்க்கலானாள்[அடத் தூ.....!]. இந்நிலையில் புதனைப் பெற்றெடுத்தாள்.

‘குழந்தை யாருக்குப் பிறந்தது?’ என்ற ஐயம் பலருக்கும் எழவே, “இக்குழந்தைக்குச் சந்திரனே தந்தையாவான்” என்று அறிவித்தாளாம் தாரை.

[தேவருலகில் எந்த அளவுக்குப் பெண்ணுரிமை போற்றப்பட்டிருந்தது பார்த்தீர்களா?]

இந்த உண்மையைப் பலரும் அறியும் வகையில் பிரமதேவனே அறிவிப்புச் செய்ததாகவும் புராணங்கள் சொல்லுகின்றன.

பிருகஸ்பதி [எ] வியாழ பகவான்:
தேவர்களுக்கெல்லாம் ஆசானாக விளங்கிய ‘குரு’வைத்தான் இவ்வாறு அழைப்பார்கள். இச்சொல்லுக்கு ‘அறிவில் சிறந்தவன்’ என்பது பொருள்.

பிரமதேவனின் பிரியத்திற்குரிய புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவரின் மகன் இவன். தாய் பெயர் சிரத்தா தேவி.

பிருகஸ்பதி பொன் வண்ண மேனி கொண்டவராம். நான்கு திருக்கரங்களை உடையவராம்[இரண்டு போதாதா?].

சுக்கிரன்:
இவர் பிருகு முனிவரின் திருமகனாக உதித்தவர்; அசுரர்களின் குரு.

முழுமுதல் கடவுளான சிவபெருமானின் திருவயிற்றில் தங்கியிருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த அதிசயப் பிறவி இவர்![ஹே.....என்ன அதிசயம்!] இயல்பான தன் உடலிலிருந்து வெளி்யேறி, அந்தணன், அரசன், வேடன், மலைப்பாம்பு என்று பல உருவங்கள் பெற்று அலைந்து திரிந்து ஞானம் பெற்று, காலனின் ஆணையால் அசுரர்களுக்குக் குருவானான் என்பது கதை.

சனி:
இவன் சூரியனின் மகனாவான்.

சூரியன், சஞ்ஞிகை என்பாளை மணந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றான்.
சூரியனிடமிருந்து வெளிப்பட்ட சூட்டைத் தாங்கும் சக்தியில்லாத சஞ்ஞிகை, தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி அங்கே விட்டுவிட்டுத் தன் தந்தையிடம் சென்றாள்.

அந்த நிழல் பெண்ணுடன்  சூரியன் புணர்ந்ததால்[நம் காதில் பூ!] பிறந்தவனே ‘சனி’ ஆவான்.

ராகு & கேது:
‘விப்பிரசித்தி’ என்னும் அசுரனுக்கும் ‘சிம்ஹிகை’ என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு.

அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்ததால் கிடைக்கப் பெற்ற அமுதத்தை அசுரர்கள் பருகுவதைத் தடுக்க நினைத்தார் திருமால். மோகினியாக வடிவெடுத்து, இனிமையாகப் பேசி, எல்லோரையும் வரி்சையில் அமரச் சொன்னார். வரிசையில் முந்துவதற்கு அசுரர்கள் முண்டியடித்த நிலையில் தேவர்களுக்கு மட்டும் அமுதம் வழங்கினார். இதைக் கண்ணுற்ற ராகு, தேவ உருக்கொண்டு அமுதம் பெற்றுப் பருகினான். உண்மை வெளிப்பட்டபோது, திருமாலின் சக்ராயுதத்தால் அவன் தலை துண்டிக்கப்பட்டது.

தலையுடன் இரண்டு கைகளும் சேர்ந்து விழுந்தன. மற்றொரு பகுதி ஒரு தேசத்தில் விழுந்தது. அமுதம் பருகிய காரணத்தால் ராகு சாகாமல் இரு வேறு உருவங்களில் ராகுவாகவும் கேதுவாகவும் வளர்ந்தான்.

இவன் சூரிய சந்திரர்கள் மீது பகை கொண்டு அவர்களைப்பீடிக்கத் தொடங்கினான். கிரகணம் என்பது இதுதான்.

உண்மையில், ராகு கேது என்னும் பெயர்களில் கிரகங்கள் இல்லை. இவற்றைச் ‘சாயாக் கிரகங்கள்’ என்று சொல்லி ஜோதிட வல்லுநர்கள்[கில்லாடி ஜோதிடர்கள்!] சமாளிக்கிறார்கள்.
********************************************************************************************************************

Sunday, November 12, 2017

என்னுடைய ‘10+01’ பதிவுகளைக் களவாடிய ‘பக்கா’ பதிவுத் திருடன்!!!

‘ஷீரடி சாயிபாபா’ கடவுளுக்கும் மேலானவரா???  http://kadavulinkadavul.blogspot.com/2013/11/blog-post_15.html என்னும் தலைப்பிலான இப்பதிவு, 15.11.2013இல் இந்த என் வலைப்பக்கத்தில் வெளியானது. ‘காமக்கிழத்தன்’ என்னும் புனைபெயரில் என்னால் எழுதப்பட்டது; 2704 பார்வைகளைப் பெற்றது.

மேற்குறிப்பிடப்பட்ட என் பதிவு, ‘யார் கடவுள்’http://yarkadavull.blogspot.in/2014/04/blog-post_8607.html என்னும் வலைப்பக்கத்தின் உரிமையாளரால் திருடப்பட்டுள்ளது[copy-paste]. என்னுடைய மேலும் 10 பதிவுகளையும் இவன் திருடி வெளியிட்டிருக்கிறான். தளத்தில் இவனைப் பற்றிய குறிப்பு ஏதுமில்லை. மகா கெட்டிக்காரத் திருடன் போலிருக்கிறது! 

கூகிள் தேடலின்போது தற்செயலாய் இதை அறிய நேர்ந்து எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன். ஒரு பதிவு சுடப்படுகிறது என்றால் அது தரத்தில் மிக உயர்ந்தது என்றுதானே கொள்ளுதல் வேண்டும்!?

வந்தது வந்தீர்கள், தரமான 11 பதிவுகளில் மேலே குறிப்பிடப்பட்ட ஒன்றை மட்டுமேனும் வாசித்து மகிழுங்களேன்.

கான்கள் மற்றும் அவதாரங்களின் மகிமைகள் பற்றிச் சொல்லக் கேட்பது மட்டுமல்ல, அவர்களை மனதால் நினைத்தாலே என் உடம்பு முழுக்க ஒருவித ‘தகிப்பு’ பரவும். “அவர்களின் ‘மலம்’ சந்தனமாய் மணக்குமா? சிறுநீர் பன்னீராய்க் கமகமக்குமா? வேர்வைத் துவாரங்களில் ஆவியாய் வெளியேறி அவர்களைச் சுற்றிச் சுகந்தம் பரப்புமா?” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பிப் பக்தர்களின் மனதைப் புண்படுத்தி அவர்கள் இட்ட சாபத்தை மூட்டை மூட்டையாய்ச் சுமப்பவன் நான்!

ஆனாலும், தனிப்பட்ட முறையில் பெயர் குறிப்பிட்டு எந்தவொரு மகானையும் நான் விமர்சித்ததில்லை.

இந்த வாரக்[18.11.2013] குங்குமம் இதழில் தொடராக வெளிவரும் ஷீரடி சாயிபாபா பற்றிய கட்டுரையைப் படித்ததால் முகிழ்த்த இப்பதிவு மட்டும் விதிவிலக்கானது.

தாஸ்கணு என்பவரும் ‘நாநா’ என்பவரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

“அண்மையில் பாபா நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சி ஏதேனும் தெரிய வந்ததா?” என்கிறார் தாஸ்கணு.

“ஆமாம். எனக்குக் கோபால்குண்ட் என்று என்றொரு நண்பர் இருக்கிறார். தலை சிறந்த சாயி பக்தர். அவருக்குக் குழந்தைகள் இல்லை. நிறைய முயற்சிகள் செய்தார். மருத்துவம், பிரார்த்தனை எதுவும் பலிக்கவில்லை. கடைசியில் அவர் சாயிபாபாவைச் சரணடைந்தார். அவரின் அருளால் குழந்தை பிறந்தது” என்கிறார் நாநா.

‘பிரார்த்தனை ஏதும் பலிக்கவில்லை. பாபாவின் அருளால் குழந்தை பிறந்தது’ என்ற வரிகளைப் படித்ததும் வழக்கம் போல என் ‘துஷ்ட புத்தி’ ஒரு கேள்வி எழுப்பியது.

‘பிரார்த்தனைன்னா கடவுள் அல்லது கடவுள்களை மனதில் இருத்திச் செய்யப்படுவது. கடவுள் அல்லது கடவுள்களால் சாத்தியப்படாத ஒன்று பாபாவால் எப்படிச் சாத்தியப்பட்டது?’

பதிலைத் தேடி மீண்டும் ஆரம்பத்திலிருந்து கட்டுரையைப் படித்தேன்.

விடை கிடைத்தது!

‘யார் என்னிடம் ஆர்வம் உள்ளவர்களாகவும், என்னையே தியானிப்பவர்களாகவும், என்னையே அடையத்தக்க குறிக்கோள் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்களோ...அவர்களின் யோக ஷேமங்களை நானே ஏற்றுக் கொள்கிறேன் [பாபா மொழி]’ என்ற குறிப்பு தலைப்பை ஒட்டி அச்சிடப்பட்டிருந்தது.

என்னுள் பல ஆச்சரியக் குறிகளும் வினாக் குறிகளும் அணிவகுத்து நின்றன.

பாபாவைக் கடவுளின் அவதாரம் என்கிறார்களே அது எத்தனை பெரிய தப்பு. அவர் கடவுள்...இல்லையில்லை, கடவுளுக்கும் மேலானவர் என்பது புரிந்தது!

‘பாபாவின் உண்மையான இருப்பிடம் சொர்க்கமே. இந்த உலகில் ஒவ்வொரு கணமும் மனிதனின் வாழ்க்கையை உன்னத நிலைக்கு உய்விக்கவே அவர் பாடுபடுகிறார்’ என்று பாபாவின் படத்தைப் போட்டு அதையொட்டி இப்படியொரு குறிப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.

என் அற்பப் புத்தி மீண்டும் தலை உயர்த்தி ஒரு கேள்வியை உதிர்த்தது...........

‘மனித வாழ்வை உன்னதமாக்க, சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்து இம்மண்ணில் மனித உருவில் நடமாடிய பாபா, தான் ஏற்று வந்த கடமையை முழுமையாக நிறைவேற்றாமல் சொர்க்கத்துக்குத் திரும்பிவிட்டாரே, அது ஏன்?’

‘கடவுளுக்கும் மேலானவர் பற்றி இப்படியொரு கேள்வி கேட்கலாமா?’ -எனக்குள் உறைத்தது.

‘பாபா இங்கே இருந்தவரை, கோடானுகோடி மக்கள் அவரை நாடிப் போய்ச் சரணடைந்து சகல துன்பங்களும் நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ்ந்தார்கள்; வாழ்கிறார்கள்; இன்றளவும் அவரை வானளாவப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவரைக் குறை சொல்ல உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது?’ என்று என் ‘நாசகார’ப் புத்திக்கு ‘நறுக்’ என்று நாலு குட்டு வைத்தேன்.

கடவுள், ஆன்மா, சொர்க்கம் நரகம் பற்றியெல்லாம் எடக்குமடக்காகக் கேள்வி கேட்டே பழக்கப்பட்ட நான், இன்று ஒரு நாளாவது பாபாவின் பரிசுத்த பக்தனாக மாறிப் பாபாவின் அருளைப் பெறுவதென்று முடிவெடுத்தேன்.

என் பெரியம்மா மருமகளுக்குத் திருமணமாகி நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. எத்தனையோ முயற்சிகள் செய்தும், மகாப் பெரிய மருத்துவ நிபுணர்களையெல்லாம் பார்த்தும், சக்தி வாய்ந்த  கடவுள்களையெல்லாம் பிரார்த்தனை செய்தும் பலன் கிட்டவில்லை.

அவர்களின் தீராத துயரம் தீர்வதற்கு, சொர்க்கத்திலிருக்கும் பாபாவை நெஞ்சில் நிறுத்தி, இன்று இரவு முழுக்கப் பிரார்த்தனை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். பெரியம்மா வீட்டாரும் செய்வார்கள். விரும்பினால் நீங்களும் செய்யலாம்.

பாபா அருள்பாலிப்பார் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

பெரியம்மாவுக்குப் பேத்தியோ பேரனோ பிறந்ததும் பாபாவை வாழ்த்தி மரபுக்கவிதையில் ஒரு பதிவிடவும் உத்தேசித்திருக்கிறேன்.

அடுத்த ஆண்டு இதே ஐப்பசித் திங்களில் அதை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
[இன்றுவரை[12.11.2017] பிரார்த்தனைக்குப் பலன் ஏதும் கிட்டவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன் -‘பசி’பரமசிவம்]
#####################################################################################

சுடப்பட்ட பிற பதிவுகள்:
1.அவதாரங்களிடம் ஆறு கேள்விகள்! http://kadavulinkadavul.blogspot.com/2014/03/blog-post_4804.html
2.சுஜாதாவின் ‘உயிரின் ரகசியம்’ நூலிலிருந்து............ http://kadavulinkadavul.blogspot.com/2014/01/blog-post_5.html

3.டுபாக்கூர் ‘வாஸ்து’வும் டூப்ளிகேட் கடவுள்களும்! http://kadavulinkadavul.blogspot.com/2013/08/blog-post.html

4.கேடு கெட்ட மூடரே, கேளுங்கள்!!!

5.கடவுளின் மரணம்........... ஓர் அனுமானம்!!!!!!!!!!!!... http://kadavulinkadavul.blogspot.com/2014/04/blog-post.html

6.சில நூறு ஆண்டுகளில் அனைத்து மதங்களும் அழியும்!!! http://kadavulinkadavul.blogspot.com/2013/09/blog-post_25.html

7.ஆகாயக் குறிப்பேடு’ அல்லது ‘பிரபஞ்ச அறிவு’?  http://kadavulinkadavul.blogspot.com/2013/11/blog-post_11.html

8.ஒரு ‘கூமுட்டை’யின் ‘கூரு’ கெட்ட எட்டு கேள்விகள்! http://kadavulinkadavul.blogspot.com/2013/12/blog-post.html

9.விவேகானந்தரின் புரியாத 'கடவுள் கொள்கை'!!! http://kadavulinkadavul.blogspot.com/2014/04/blog-post_23.html

10.கேதர்நாத் கடவுளும் மறை கழன்ற கோயில் பூசாரியும்! [சாமி கும்புடுற எல்லோரும் சுயநலவாதிகள்] http://kadavulinkadavul.blogspot.com/2013/07/blog-post.html

Saturday, November 11, 2017

தியானமும் மயானமும்!!!

'தியானம் என்பது மனம் அமைதி பெற அதை ஒருநிலைப்படுத்திச் செய்யப்படும் பயிற்சி ஆகும்.'  -தியானத்திற்குத் ‘தமிழ் விக்கிப்பீடியா’ தரும் சுருக்கமானதொரு விளக்கம் இது.
தியானம் செய்வது குறித்துக் கூகிளிலும் புத்தகங்களிலும் பல்வேறு விளக்கங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் எந்த ஒன்றையும்  புரிந்துகொள்வது எளிதாக இல்லை.

#rightmantra.com என்னும் தளம், ‘உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். அங்கே 12 இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரை இருப்பதாகக் கற்பனை செய்யவும். அதில் உங்கள் இஷ்ட தெய்வம் வீற்றிருப்பதாக எண்ணவும். அந்தத் தெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரிக்கவும். இது உங்கள் உடலையும் உள்ளத்தையும் அமைதிப்படுத்தும்’ என்கிறது# 

அதென்ன ‘உணர்வு மையம்’? புரியவில்லையே. இதுவே புரியாத நிலையில் சிவப்புத் தாமரையைக் கற்பனை செய்வது எப்படி? இஷ்ட தெய்வத்தை அங்கே அமர்த்துவது எப்படி? கடவுளின் இருப்பே சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில் இம்மாதிரியான தியான முறைகள் பித்துக்குளித்தனமானவை. 

#நல்ல இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு அந்த இடத்தில் ஊதுபத்தி ஏற்றி விட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமர்ந்த பின் உங்களால் முடிந்தவரை மூச்சுக் காற்றினை நாசியின் வழியாக வேகமாக உள்ளிழுத்து வேகமாக வெளியிடவும். காற்றை உள்ளிழுப்பதும், வெளியிடுவதும் சம அளவில் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை ஒரு நிமிடம் வரை செய்யலாம்.

இப்பயிற்சி முடிந்ததும் அமைதியாக இருந்து உங்கள் மூச்சுகாற்று சாதாரண நிலைக்கு வந்தபின் மனதில் உதடுகள் அசையாமல்,

“நான் தளர்வாக இருக்கிறேன.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் தயாராக இருக்கிறேன்.

என் மனம் முழுவதும் என் மூச்சுக்காற்றின் மீது கவனமாக இருக்கிறது.

நான் இடைவிடாமல் விழிப்புணர்வோடு என் மூச்சுகாற்றினை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்” 
என்று  மனம் உருகிச் சொல்ல வேண்டும்.

நீங்கள் பத்மாசனத்திலோ அல்லது வஜ்ஜிராசனத்திலோ அமர்ந்து ஐந்து நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். ஆசனம் தெரியாதவர்கள் சப்பணமிட்டு அமர்ந்த நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு உடல் அசைவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன வார்த்தைகளை மனதில் ஒரு நிமிடம் பதியும்படி சொல்லவும். இவ்வார்த்தைகளுக்குத் தகுந்தாற்போல் நம் மனம் அமைய வேண்டும். ஏழு நாட்களில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் உடலும் மனமும் அமையும்# என்றிப்படிச் சொல்பவர்களும் உண்டு[http://www.eegarai.net/t3077-topic.

மூச்சுக்காற்றை இழுத்துவிடுவது நல்ல உடல்நலப் பயிற்சிதான்; ‘யோகா’வில் சேர்த்தி. எளிதாகச் செய்துவிடலாம். தளர்வாகவும் மகிழ்ச்சியாகவும் தயாராகவும்[எதற்கு?] இருக்கிறேன் என்றெல்லாம் சொல்வதும் அரிய செயலல்ல; சொல்லிவிடலாம். மூச்சுக் காற்றைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன்னு சொல்லணுமாமே, அது எதற்கு?

மூச்சுக் காற்றை ஏன் கவனிக்கவேண்டும்? 


மனம் உருகிச் சொல்லணுமாம். சொன்னால் ஏழு நாட்களில் மன அமைதி கிட்டுமாம்.  கிட்டுமா?


ஊஹூம்...பைத்தியம்தான் பிடிக்கும்.

நம் சத்குரு ஜக்கி வாசுதேவ் அய்யா தியானம் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். அவற்றின் சுருக்கம் கீழே.....

#கண்களை மூடிக் கொண்டு அமர்வதை தியானம் என்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய முடியும். சிலவற்றின் மீது கவனத்தைக் குவிக்க முடியும், ஒரு மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க முடியும். இப்படி பல விஷயங்கள் உள்ளன. ‘நீங்கள்’ என்பது என்ன? தற்போதைய நிலையில் உங்களுக்கு உடல் இருக்கிறது, எண்ண ஓட்டங்கள் உள்ளன, உணர்ச்சிகள் உள்ளன. இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளைத்தான் ‘நான்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள், இல்லையா? 

இந்த உடலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் பிறக்கும் போது இவ்வளவு சிறிதாக இருந்தீர்கள். இப்போது இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறீர்கள். எப்படி? சாப்பாட்டின் மூலமாகத்தான், இல்லையா? எனவே உடல் என்பது ஒரு சாப்பாட்டுக் குவியல்தான். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு தான் இங்கே ஒருவித உடலாக அமர்ந்திருக்கிறது. மனம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? மனம் என்பது நீங்கள் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சுவைத்த, தொட்டதன் மூலமாக பதிந்த பதிவுகளின் குவியல்தான். ஐம்புலன்களின் மூலமாகச் சேர்ந்தவற்றை மனம் என்கிறீர்கள். 

எனவே, ‘மனம்‘ என்று நீங்கள் சொல்வதும் உண்மையில் உங்கள் மனமல்ல. இவை வெளியிலிருந்து சேகரமாகும் பதிவுகள் தான். உங்கள் உணர்ச்சியென்பது நீங்கள் உங்கள் தலையில் சேகரித்து வைத்துள்ளவற்றின் வெளிப்பாடுதான். எனவே தியானம் என்பதன் நோக்கம், எவை நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களைத் தனியே பிரித்தெடுப்பதுதான்[http://isha.sadhguru.org/blog/ta/enakku-dhyanam-varuma]

எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்குள் உடலின் மூலமாகவோ மனதின் மூலமாகவோ தான் வருகிறது. பலவிதமான துன்பங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் தாங்களாகவே எல்லாவிதமான துன்பங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள்[மனிதர்களா கண்டுபிடித்தார்கள்?! அது இயற்கையானதல்லவா?]. ஆனால் எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் போது நான் உடலல்ல; நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா? இதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு#

தான் சொல்ல நினைத்தவற்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் சத்குரு ஜக்கி.

ஒரு வரியில் சொன்னால், உணர்ச்சி, எண்ணம் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பிரித்தெடுப்பதுதான்[மனதை வெறுமை ஆக்குவது] ‘தியானம்’ என்பது இவரின் கருத்து.

சொல்வது எளிது. செயல்படுத்த இயலுமா? 

இது சாத்தியப்பட்டால் மனத் துன்பம், உடல் துன்பம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்.

இவ்விரண்டிலிருந்தும் விடுபட்ட ஞானிகள், மகான்கள் ஆகியோருக்கான ஒரு பட்டியலை சத்குரு கொடுத்திருக்கலாம். செய்யவில்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், புட்டபர்த்தி சாயிபாபா, சீரடி சாயி, ரமண மகரிஷி என்றிவர்களைப் போன்ற மகான்களில் இவ்விரண்டு துன்பங்களிலிருந்தும் முற்றிலுமாய் விடுபட்டவர்கள் எத்தனை பேர்?

மனத் துன்பங்களிலிருந்து விடுபட்டார்களோ இல்லையோ, உடல் துன்பங்களிலிருந்து.....?


மேற்கண்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள்.  அவர்களின் சாவுக்கான காரணங்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்; அவர்கள் செய்த தியானத்தால் விளைந்த பயன்  புரியவரும்.

ஆக, செத்தொழிந்து மயானத்தில் அடைக்கலம் புகும்வரை உணர்ச்சி, எண்ணம் போன்றவற்றிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியமே இல்லை; இல்லவே இல்லை.

எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அகற்றி மனதை வெறுமையாக்குவது தேவையா என்னும் கேள்வியும் இங்கு எழுகிறது.

நம் பதில், தேவையற்றது என்பதுதான். தியானத்திற்குப் பதிலாக.....

தீய எண்ணங்களை மட்டும் மனதிலிருந்து அகற்றி எந்நேரமும் நல்ல எண்ணங்களை அதில் நிறைத்து வாழ்வது சிறந்தது.

நல்ல எண்ணங்களை மனதில் சேமிப்பதற்கு நேரம் காலம் ஏதும் தேவையில்லை. அது தனியிடமோ பொது இடமோ, ஓய்வு கிடைக்கும்போதெல்லாம்.....

‘வீண் கவலைகளுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன்.


‘இயன்றவரை பிறருக்கு உதவிகரமாக இருப்பேன்.’


‘தோல்விகளால் மனம் தளர மாட்டேன்; கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன்; சாதிப்பேன்.’


‘மூடநம்பிக்கைகளை அடியோடு விட்டொழிப்பேன்.’

‘தன்னம்பிக்கையை வளர்ப்பேன். இறுதி மூச்சுவரை, தீய உணர்வுகளை அண்டவிடாமல் வாழ்ந்து முடிப்பேன்.’

என்றிவை போன்ற நல்லெண்ணங்களை அசைபோட்டு உள் மனதில் அவற்றைப் பதிய வைக்கும் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமான இன்றியமையாத் தேவை இப்பயிற்சிதான்; தியானம் அல்ல.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முகப்புப் படம்[[Header] சத்குருவின் வலைப்பக்கத்திலிருந்து சுட்டது. அன்னாருக்கு நன்றி.

Sunday, November 5, 2017

ஒட்டுமொத்த மூடத்தனத்தின் உறைவிடமா குமுதம்!

‘குமுதம்’ தடை செய்யப்படவேண்டிய ஒரு வார இதழ். காரணம், ‘கடவுளின் குரல்’ என்னும் தலைப்பில், அது தொடர்ந்து வெளியிட்டுவரும் ‘கப்சா’ கதைகள். .0001% கூட நடைமுறை சாத்தியம் இல்லாத அந்தக் கதைகள், ‘மகா பெரியவா’வின் பெருமை பேசுவன அல்ல; சிறுமைப்படுத்துவன; மக்களின்  பக்தி உணர்வைப் பெருக்குபவை அல்ல; அவர்களின் பகுத்தறியும் திறனைச் சிதைத்துச் சீரழிப்பவை.

இது குறித்து ஏற்கனவே வெளியான இரு பதிவுகள்:

1. [http://kadavulinkadavul.blogspot.com/2017/03/1.html ‘உலக மகாகாகாகாகாகாகாகா நம்பர் 1 நகைச்சுவைக் கதை!!!!!!!!!!’

2.http://kadavulinkadavul.blogspot.com/2017/08/blog-post_18.html
மகா பெரியவா’[பரமாச்சாரியார்] உயிருடன் இருந்திருந்தால்.....!

இப்பதிவு புதியது; 01.11.2017 குமுதம் ‘லைஃப்’இல் இடம்பெற்ற கதை[குமுதம் உண்மை நிகழ்வு என்கிறது] பற்றியது.

ரு குட்டிக் குரங்கு.

தினமும் ‘மகா பெரியவா’ ‘பிட்சாவந்தனம்[?]’ செய்யும்போது தவறாம மடத்துக்கு வந்துடுமாம். “கொஞ்சம் அன்னத்தை எடுத்துண்டுவந்து போடு”ன்னு மகா பெரியவா சொல்லுவாராம். சீடரும் அன்னத்தைக் கொண்டுவந்து போட, அதை மிச்சம் வைக்காம சாப்பிட்டுட்டு ஓடிடுமாம் குட்டிக் குரங்கு.

இதுலே என்ன ஆச்சரியம்னா, பெரியவா சொல்லாம வேறு யார் எதைக் கொடுத்தாலும் அது சாப்பிடாதாம். உதாரணத்துக்கு, சீடர் ஒருவர் ஒரு வாழைப்பழத்தை நீட்ட குரங்கு அதைச் சீந்தவே இல்லையாம்!

பரமாச்சாரியார், ‘கோவிந்தா’ன்னு தான்  செல்லமாக அழைத்த அந்தக் குட்டியின் வரவைத் தினசரி எதிர்பார்ப்பாராம். அதுவும் தவறாம வந்து அன்னம் சாப்பிட்டுட்டுப் போகுமாம்.

அன்னிக்குப் பார்த்து அது மடத்துக்கு வரலையாம். காரணம் என்னன்னா, பக்கத்துத் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் அது நுழைஞ்சுடுத்தாம். அந்த நேரம்பார்த்து வீட்டுக்காரர் வீட்டைப் பூட்டிட்டு, பெரியவாளைத் தரிசனம் பண்ணி, தான் வாங்கவிருந்த வீட்டின் பத்திரத்தை அவரின் திருவடிகளில் சமர்ப்பிச்சி ஆசீர்வாதம் வாங்கிண்டு போக மடத்துக்கு வந்துட்டாராம்.

மடத்துக்கு வந்த  அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அது என்னடான்னா, மொதல் நாள் ராத்திரியே, ஒரு நோட்புக் நடுவுல வெச்சிப் பைக்குள்ள பத்திரப்படுத்தின பத்திரம் காணாம போயிடிச்சாம். நோட்புக் மட்டும் இருந்திச்சாம்.

அவர் தவியாத் தவிச்சிண்டிருந்தப்போ அவரை அழைச்ச பெரியவா, “பத்திரம் உன்னோட அகத்துல பத்திரமா இருக்கு. பதட்டப்படாம போய்த் தேடு. நீ தேடுற பத்திரம் கிடைக்கும். நான் தேடுற குரங்கும் அங்கேதான் இருக்கு” என்றாராம்.

அவர் போயி வீட்டைத் திறந்து பார்த்தாராம். அங்கே குட்டிக்குரங்கு இருந்திச்சாம். அது கையில் பத்திரம்! மறுபடியும் அதிர்ச்சிக்குள்ளான அவர், சத்தம் போட்டுண்டு குரங்கை நெருங்க, அது அவருக்கு டிமிக்கி கொடுத்துட்டு மடத்துக்கு ஓடித்தாம்.

‘குட்டிக்குரங்கு அந்த வீட்டுக்கு ஏன் போச்சு? வீட்டுக்காரர் வீட்டைப் பூட்டும்போது ஏன் தப்பிச்சி வெளியே வரல? அவர் பூட்டிட்டுப் போன பிறகுதானே தான் வீட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டது தெரிந்திருக்கும்? அப்புறம் எப்படி பையிலிருந்த பத்திரத்தை எடுத்தது? 

வீடு பூட்டப்படும் என்பது தெரிந்தே வெளியேறாமல், மகா பெரியவரின் மந்திர சக்தியால் பத்திரத்தை எடுத்துக்கொண்டதா? மீண்டும் வீட்டுக்காரரின் வருகையை எதிர்பார்த்திருந்து, அவர் வந்து வீட்டைத் திறந்ததும் ‘மகா பெரியவா’வைக் காணப் பத்திரத்துடன் ஓட்டம் பிடித்ததா?’

இப்படி ஏராளமான கேள்விகள் கேட்க நினைப்பீர்கள். வேண்டாம். எல்லாம் மகா பெரியவா நடத்துற திருவிளையாடல்னு நினைச்சிக்கோங்க. மனசை அலட்டிக்காம மிச்சக் கதையையும் கேளுங்க.

பத்திரத்தோட வெளியே ஓடின குரங்குக் குட்டி நேரே காஞ்சி மடத்துக்குப் போச்சாம். அதைப் பார்த்ததும், “கோவிந்தா வந்துட்டியா?”ன்னு கேட்டு அதுக்கு வழக்கம்போல சாதம் வைக்கச் சொன்னாராம் மகா பெரியவா. குட்டியும் தன்கையிலிருந்த பத்திரத்தைப் பத்திரமா அங்கே இருந்த மேடையில் வச்சுட்டுச் சாதம் சாப்பிட்டுட்டுப் போயிடிச்சாம். பரமாச்சாரியாரின் அனுக்கிரஹத்தால் ஐந்தறிவு ஜீவியான குரங்கு ஆறறிவு ஜீவியாய் மாறிடிச்சு பார்த்தேளா!?

பின்னர், மடத்துக்குப் பதறியடிச்சி ஓடிவந்த பத்திரக்காரரிடம் ஆசீர்வாதம் பண்ணிப் பத்திரத்தைக் கொடுத்த ஆச்சார்யா, “பத்திரத்தைப் பத்திரமா வச்சிக்கோ”ன்னு ஜோக்கும் அடிச்சாராம். அவருடைய ஹாஸ்யத்தை ரசிச்சி அங்கேயிருந்தவா அத்தனை பேரும் சிரிச்சாளாம்[நீங்களும் சிரிக்கலாம்].

குமுதம் வார இதழ், தொடர்ந்து நடைமுறை சாத்தியமே இல்லாத இம்மாதிரிக் கதைகளை வெளியிட்டு வருவதன் உள்நோக்கம்.....

பரமாச்சாரியார் என்பவர், முக்காலமும் உணர்ந்த மகா ஞானி; தாமாகவே பிறரின் குறையறிந்து நிவர்த்தி செய்கிற கர்ம யோகி என்றெல்லாம் பரப்புரை செய்வதுதான்.

 குமுதம் குழுவினருக்கு எம் வேண்டுகோள்.....

“எழுதுங்கள். உங்களின் ‘மகா பெரியவா’ புகழ் பேசுவதற்காக எத்தனை கற்பனைக் கதைகள் வேண்டுமானாலும் எழுதுங்கள். அந்தக் கற்பனைகள் பகுத்தறிவுக்கு உகந்தனவாய், நம்பும்படியானவையாய் இருக்கட்டும்; நகைப்புக்குரியனவாய் இருத்தல் வேண்டாம்.”
=====================================================================================

Tuesday, October 31, 2017

கடவுளும் சில கேள்விகளும் உங்கள் மனசாட்சியும்!!!

‘கடவுளின் கடவுள்’ என்னும் வலைப்பக்கத்தை[blog] வடிவமைத்து மிகுந்த உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், நான் ‘வாங்கிக் கட்டிக்கொள்ள'க் காரணமாக இருந்த பதிவுகளில் ‘கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!’ என்பதும் ஒன்று.
                  
கருத்துகள், வாசிப்பவர் மனதில் ஆழப் பதிந்திட ஆங்காங்கே சற்றுக் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டன. மறுபதிப்பில் அவை தவிர்க்கப்பட்டன.  


நீங்கள் கோயிலுக்குப் போகும் வழக்கம் உள்ளவரா? கீழ்க்காணும் கேள்விகளை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பதில் அளிப்பது உங்கள் ‘மனசாட்சி’யாக இருக்கட்டும்!
கேள்வி 1:
“கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தவர். அவர் எல்லாம் வல்லவர்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். அணுவிலும் அவர்தான் இருக்கிறார். ஏன்.....உங்களுக்குள்ளேயும் அவர் நிரந்தரமாய்த் தங்கியிருக்கிறார். உங்களைப் படைத்த அவருக்கு உங்களைப் பாதிக்கிற கஷ்ட நஷ்டங்கள் பற்றி அத்துபடியாய்த் தெரிந்திருக்கும். உண்மை இதுவாக இருக்கும் போது, நீங்கள் முறையிட்டால்தான் உங்கள் குறைகளை அவர் போக்குவார் என்று நினைப்பது சரியா? கொஞ்சம் சிந்திப்பீர்களா? ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்ற ‘வழக்குமொழி’யெல்லாம் வேண்டாம்.

கேள்வி 2:
உங்களுக்கோ உங்களின் சொந்தபந்தங்களுக்கோ நேரிட்ட துன்பங்களைக் களையும்படி நீங்கள் எத்தனை முறை அவரிடம் முறையிட்டிருக்கிறீர்கள்? எத்தனை முறை அவர் உங்கள் வேண்டுகோள்களுக்குச் செவி சாய்த்திருக்கிறார்? ஒரு பட்டியல் போட்டுப் பார்க்கலாம். செய்வீர்களா?

கேள்வி 3:
உங்கள் வேண்டுதல்களில் ஒன்றுகூட நிறைவேற்றப்படாத பட்சத்தில், கடவுளின் கருணை உள்ளம் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டதில்லையா? தெளிவு பெற முயன்றதில்லையா?

கேள்வி 4:
உங்கள் கோரிக்கைகளில் பல நிறைவேறாமல் மிகச் சில மட்டுமே நிறைவேறும் நிலையில், அவ்வாறு நடப்பது கடவுளின் கருணையால்தான் என நீங்கள் நம்புவது உண்டா? “ஆம்” எனில், பல கோரிக்கைகளை அவர் நிராகரித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன?

கேள்வி 5:
அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுள்தான் என்றால், நம்மைத் தாக்குகிற துன்பங்களுக்கும் அவரே காரணம். எனவே, அவரைப் போற்றித் துதி பாடுவது தேவையற்றது என்ற எண்ணம் உங்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லையா? ஏன்?

கேள்வி 6:
துன்பங்கள் நேர்வது கடவுளால் அல்ல என்று நீங்கள் நம்பினால், நம்மை இம்சிக்கிற துன்பங்கள் தாமாக வந்தன என்று அர்த்தமாகிறது. நமக்கு உண்டான துன்பங்கள் விலகும் போது அவை தாமாக விலகின எனக் கொள்ளாமல் கடவுளின் கருணையால் அவை நிகழ்ந்தன என்று நம்புகிறீர்கள். அவ்வாறு நம்புவது அறிவுடைமை ஆகுமா?

கேள்வி 7:
ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்தின் துன்பம் களையுமாறு பிறருடன் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்திருக்கிறீர்களா? அம்மாதிரியான வழிபாடுகளால் எத்தனை முறை பலன் கிட்டியிருக்கிறது?

வாட்டி வதைக்கும் வறுமை, தீராத நோய்கள், மதச் சச்சரவுகள், இன மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை காரணமாக, உயிர்கள் கடும் துன்பத்திற்கு ஆட்பட்டுச் சித்திரவதைக்குள்ளாவதையும் சீரழிந்து செத்தொழிவதையும், இது போன்ற இன்ன பிற அவலங்களையும் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை என்பதற்காகக் கடவுளை நொந்துகொண்டதுண்டா? அவ்வாறு நொந்துகொள்வது தவறாகுமா?

கேள்வி 8:
“கோயிலுக்குப் போயி ஆண்டவனை வழிபட்டா, ஒருவித நிம்மதி பிறக்குது; மனசு சுத்தமாகுது.” இது மிகப் பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. நீங்களும் இதை நம்புகிறீர்களா?

நம்மில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுளைக் கும்பிடுபவர்கள்தாம். அத்தனை பேர் மனமும் சுத்தமானவையா என்ன? [வழிபடாதவர்களின் மனங்கள் தூய்மையானவை என்று நான் சொல்லவில்லை].

கோயிலுக்குப் போவதைக் கைவிட்டு[இக்கருத்து, தனி விவாதத்திற்குரியது] ஒரு மருத்துவமனைக்குப் போகலாம். அங்குள்ள நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது நம் உள்ளம் இளகும்; உருகும்; கெட்ட எண்ணங்கள் அகன்று அது தூய்மை பெறும்.

அனாதை இல்லங்களைப் பார்வையிடலாம். நம்மால் முடிந்த அன்பளிப்புகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து ஆறுதல் சொன்னால். நெஞ்சில் அன்பு சுரக்கும்; மகிழ்ச்சி நிரம்பும்.

மனநலம் பாதிக்கப் பட்டவர்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்திக்கலாம். அவர்களின் பரிதாப நிலை கண்டு கண்ணீர் உகுக்கும்போது மனதில் கருணை பிறக்கும்.

இன்னும், முதியோர் இல்லம்; குழந்தைகள் காப்பகம் என்று நம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகிற இடங்கள் நிறையவே உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைத் தவிர்த்து, கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கினால் நிம்மதி கிட்டும்; மனம் தூய்மையடையும் என்று சொல்லப்படுபவை ஏற்கத்தக்கனவா? 

மேற்கண்ட வினாக்கள், கடவுள் வழிபாடு குறித்துச் சிந்தித்தபோது என்னுள் முகிழ்த்தவை. இவற்றிற்கான பதில்களை  நடுநிலை உணர்வுடன் தேடுவது சிறந்த சிந்தனையாளரான உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படக்கூடும்.

நன்றி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Friday, October 27, 2017

கதைகள் எட்டு வகை!!

என் வாசிப்பு அனுபவத்தின் வாயிலாகக் கதைகளை எட்டு வகையாகப் பாகுபடுத்தியிருக்கிறேன். உங்களின் அனுபவம் மாறுபடலாம். எண்ணிக்கையும் மாறுபடக்கூடும். சும்மா படித்துவையுங்கள்!
ஒன்று:
கதையில் எதிர்பாராத முடிவைக் கொடுத்து வாசகனைக் கவர்தல் ஒருவகை. இம்மாதிரிக் கதைகள் நிறையவே வெளியாகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஒரு பக்கக் கதைகள்.

இரண்டு:
அரைத்த மாவை அரைத்தல். ஏற்கனவே வெளியான கதைகளின் நிகழ்வுகளை மாற்றியமைத்து, கதைமாந்தர்களுக்குப் புதுப்பெயர்கள் சூட்டிப் புதுக்கதை படைப்பது. சுற்றிவளைக்காமல் சொன்னால், ஒருவர் படைத்த கதையின் கருவை இன்னொருவர் திருடுவது. அதாவது, கதைத் திருட்டு! இம்மாதிரிக் கதைகளும் பெருமளவில் வெளியாகின்றன.

மூன்று:
அரைப் பக்கத்தில் அல்லது ஒரு பக்கத்தில் எழுதி முடிக்க வேண்டியதை எட்டு அல்லது பத்துப் பக்கங்களில் பூசி மெழுகுவது. இம்மாதிரி ‘இழுத்தடிப்பு’ வேலையைச் செய்பவர்கள் பெரும்பாலும் பிரபல எழுத்தாளர்களே!

நான்கு:
எத்தனை முறை படித்தாலும் புரியாத படைப்புகள். இப்படி எழுதியே தமிழில் ‘பிரபலங்கள்’ பட்டியலில் இடம் பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்!

ஐந்து:
பாசாங்குக் கதைகள். எதார்த்த வாழ்வில் இடம்பெறாத சோகங்களையும் துயரங்களையும் பூதாகரமாக்கிக் கதைகளை உருவாக்குவது. இவையும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

ஆறு:
பொழுதுபோக்குக் கதைகள். இவ்வகைக் கதைகளை இரண்டாகப் பிரிக்கலாம். கதை படிக்கும் வாசகனின் பொழுதை வீணடிப்பது ஒன்று. சூதாடுவது, பந்தயம் கட்டுவது என்பன போல. பின்விளைவு ஏதுமின்றி, வாசகனைச் சிறிது நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மற்றொன்று. இன்னிசை கேட்பது போலவும் இயற்கையை ரசிப்பது போலவும் என்று சொல்லலாம்.

ஏழு:
வாழ்க்கைப் பிரச்சினைகளையோ சிக்கல்களையோ போராட்டங்களையோ இயல்பாகப் படம் பிடிப்பது.

வேலை தேடிச் சோர்ந்துபோன ஒரு பட்டதாரி வாலிபன், பழைய பேப்பர்களும் பிளாஸ்டிக் பொருள்களும் சேகரித்து விற்றுக் கொஞ்சம் சம்பாதிக்க நினைக்கிறான்; காரியத்தில் இறங்குகிறான். முதல் நாளே அடி உதை விழுகிறது. உதைத்தவர்கள், ஏற்கனவே அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்கள். 

இவ்வகைக் கதைகளே மக்களுக்குப் படிப்பினையும் மிக்க பயன்களும் நல்குபவை; அரிதாகவே வெளியாகின்றன.

எட்டு:
பிரச்சினைகளை எதார்த்தமாகச் சொல்வதோடு, அவற்றிற்குத் தீர்வும் தர முயலும் படைப்புகள். இவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவை.

அனைத்துப் பிரிவுகளுக்கும் எடுத்துக்காட்டுகள் சேர்த்திருந்தால் பதிவு மிகு பயனுடையதாக அமைந்திருக்கும். நேரமில்லை. மன்னித்திடுக!