தேடல்!

கடவுளின் பெயராலும் புனித நூல்களின் பெயராலும் மூடநம்பிக்கைகளைத் திணிப்பவர்கள் புத்திசாலிககள். நம்புகிறவர்கள் படுமுட்டாள்கள்!!!

Jan 31, 2017

கடவுள்...மனிதன்...சாம்பார்...ரசம்...பாயசம்!!!

100% இது நகைச்சுவைப் பதிவல்ல!

“உலோகக் கம்பிக்குள் மின்சாரம் பாய்வதைப் பார்க்க முடியாது; ஆனால், உணர முடியும். அது போல, கடவுளையும் கண்களால் காண இயலாது; உணர மட்டுமே முடியும்” என்றிப்படிச் சொன்னார்கள்... சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

‘கனியின் சுவையை அதை உண்ணும்போது உணரலாமே தவிர கண்களால் காண முடியாது[வார்த்தைகளால் விவரிப்பதும் சாத்தியமில்லை]. மலரின் வாசனையை நுகர்வதன் மூலம் உணர இயலுமே தவிர, பார்க்க இயலாது. மென்மையானவற்றைத் தொடுவதன் மூலம் ஒருவித இன்பத்தை உணரக்கூடுமேயன்றி அச்சுகத்தை விழிகளால் காண்பது இயலாது. இன்னிசையில் பெறும் சுகமும் இப்படித்தான்’ என்று இவை போன்ற உதாரணங்களைச் சொல்லிச் சொல்லி, கடவுளைக் காண முடியாது;  உணர மட்டுமே முடியும்’ என்று சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

கம்பிக்குள் மின்சாரம் பாய்வதைத் பார்க்க முடியாதுதான். ஆனால், அதைத் தொட்டு உணர முடியும். அது போல எதைத் தொட்டால் கடவுள் இருப்பதை உணர்வது சாத்தியப்படும்?

கனியின் சுவையை, அதைச் சுவைப்பதன் மூலம் உணர முடியும்.  பூவின் வாசனையை, அதை நுகர்வதன் மூலம் உணர முடியும். எதைச் சுவைத்தால், எதை நுகர்ந்தால் கடவுளை உணர முடியும்? 

எந்தவொரு பொருளாயினும், அதனுள் ஊடுருவியிருக்கும் சக்தியை அல்லது சுவையை அல்லது மணத்தை அல்லது சுகத்தை ஐம்புலன்கள் வாயிலாக நம்மால் உணர முடிகிறது.

பார்த்தறிய இயலாத சினம், சீற்றம், பொறாமை, இரக்கம் போன்ற உணர்ச்சிகளை, உடம்பில்[குறிப்பாக நரம்புகளில்] நிகழும் அதிர்வுகளின் மூலம் உணர்கிறோம்.
இவ்வாறு, ஐம்புல நுகர்ச்சியின் மூலமோ அதிர்வுகளின் மூலமோ கடவுளை உணர்வதற்கான சாத்தியம் கொஞ்சமும் இல்லை என்பது அறியற்பாலது.

கடவுளை உணர இயலாத நம்மால் நமக்குள்ள ஆறாவது அறிவை மட்டும் உணர்வது சாத்தியமாகிறது. அது எப்படி?

ஐந்தறிவுவரை உள்ள பிற உயிரினங்கள் செய்யாத செயல்களை நாம் செய்வதால்[சோறு சமைப்பது, சாம்பார் ரசம் பாயசம் வைப்பது, புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது முதலானவை] அது சாத்தியமாயிற்று.

மனிதர்களாகிய நம்மைப் போல அல்லது நம்மைக் காட்டிலும் அறிவுபூர்வமானதும் உயர்வானதுமான செயல்களைக் கடவுள் செய்திருந்தால், அச்செயலின் மூலமாகவேனும் அவரை நம்மால் உணர முடியும்.  அவ்வாறு அவர் செய்திருப்பதற்கான ஆதாரம் ஏதும் இன்றளவும் கிடைத்திடவில்லை. இல்லை...இல்லவே இல்லை.

“இல்லையில்லை. கடவுளின் இருப்பை உணர்ந்ததாக[பார்த்ததாகச் சொல்வது 100% புருடா] அந்த ஞானி சொன்னார்; மகான் சொன்னார்; அவதாரம் சொன்னார்; தூதுவர் சொன்னார்; புதல்வர் சொன்னார்; அவர் சொன்னார்; இவர் சொன்னார்” என்றெல்லாம் பரப்புரை செய்வதும், கடவுளின் பெயரால் எண்ணற்ற மூடநம்பிக்கைகளை வளர்ப்பதும் மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களாகும்.

[ஆறாவது அறிவின் ‘அனுமானங்கள்’ வாயிலாக அவரின் இருப்பை உறுதி செய்வதும் சாத்தியமல்ல[தொடர்புடைய பதிவின் முகவரி:  http://kadavulinkadavul.blogspot.com/2016/03/blog-post_93.html ].

எனவே, மேற்குறிப்பிட்ட செயல்களைத் தவிர்த்து,  பொருள்களின்/உயிர்களின் தோற்றம், இயக்கம், அழிவு குறித்தெல்லாம் நடுநிலையுடன் சோர்வின்றி ஆராய்ந்துகொண்டிருப்பதே அறிவுடையோர் ஆற்ற வேண்டிய இன்றியமையாப் பணியாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

12 comments:

 1. எடுத்துச் சொன்ன உவமானத்தை இரசித்தேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. ரசித்ததற்கு நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. Replies
  1. பாராட்டுக்கு நன்றி நண்பரே.

   Delete
 3. கடவுளும் கரண்ட் மாதிரி என்பவர்களுக்கு ஒரு கேள்வி ..... கரண்ட்டை யார் தொட்டாலும் ஷாக் அடிக்கும் !கடவுளையும் அந்த மாதிரி எல்லோராலும் ஏன் உணர முடியவில்லை :)

  ReplyDelete
  Replies
  1. கரண்டை வைத்துக் கடவுளை நிரூபிக்க முயற்சிப்பவர்களுக்கே வெளிச்சம்.

   நன்றி பகவான்ஜி.

   Delete
 4. Replies
  1. காற்றைச் சுவாசிப்பதன் மூலமும் கடவுளை உணர முடியுமோ என்னவோ?!

   நன்றி தனபாலன்.

   Delete
 5. நான் கடவுளைப் பார்த்தில்லை. உணர்ந்ததும் இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நம்பவதும் இல்லை.

  ஆனாலும் கடவுள் இருக்கிறார் என்று நம்புவது ஏதோ ஒரு விதத்தில் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.

  நாம் இருட்டில் நடக்கும்போது ஒரு விதமான நம்பிக்கையில் நடக்கிறோம் அல்லவா? அதைப் போல கடவுள் நம்பிக்கையும் பலருக்கு ஒரு வித மன அமைதிக்கு உதவுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

   போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் நாம் தேடி அலைவதே இந்த அமைதியைத்தான். இந்த அமைதி[மட்டும்]யைப் பெறுவதற்குக் கடவுள் நம்பிக்கை உதவும் என்றால் வரவேற்கத்தக்கதே.

   கடந்த காலங்களில் கடவுளின் பெயரால் நிகழ்த்தப்பட்ட மதக் கலவரங்களும் பேரழிவுகளும், மக்களுக்கு நேர்ந்த அளப்பரிய துயரங்களும் மறக்க இயலாதவை. நிகழ்காலத்திலும்கூட மூடநம்பிக்கைகளின் பெருக்கத்திற்கும் சுயநலவாதிகளின் ஆக்கத்திற்கும் இது[வும்] முக்கிய காரணமாக இருக்கிறது.

   எனக்கென்னவோ, கடவுள் நம்பிக்கையால் பெறும் அமைதியைக் காட்டிலும் ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் பெறும் அமைதி நிலையானது என்று தோன்றுகிறது.

   நான் கடவுள் குறித்துச் சொல்கிற கருத்துகளால் அதிகம் விளைவது நன்மையா தீமையா என்று எனக்குத் தெரியாது. ஆயினும், நல்லது நடக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக உள்ளது.

   ஒளிவுமறைவின்றிக் கருத்துச் சொல்வது தங்களின் இயல்பு. இந்தப் பதிவின் மீதான கருத்துரைக்கு என் மனப்பூர்வ நன்றி.

   Delete
 6. அருமையான பதிவு.
  //கடவுளை உணர முடியும்//
  கடவுள் தனக்கு லஞ்சம் தரும்படி கேட்பதை உணர்ந்து தானே லஞ்சம் கொடுக்கிறார்கள் :)

  ReplyDelete
  Replies
  1. உண்மை நண்பரே. கடவுள் என்று ஒருவர் இருந்தால், நம்மவர்கள் மத்தியில் லஞ்சம் பெறாமல் காலந்தள்ள முடியுமா என்ன?!

   நன்றி வேகநரி.

   Delete