திங்கள், 9 ஜனவரி, 2017

“அதுதான் தப்புன்னா, இதுகூடவா தப்பு?”

பணபலமும் ஆள்பலமும் கொஞ்சமே கொஞ்சம் ‘தில்’லும் இருந்தால் போதும், தினம் தினம் 'காதல்' பண்ணலாம். ஜாதி ஒரு பொருட்டே அல்ல!

கைபேசியின் அழைப்பு.

“அலோ...” சொன்னார்  மனோகர்.

“தலைவரே, நான் குமார் பேசுறேன். அமுதா நம்ம ஜாதிப் பொண்ணு. ‘அந்த’ ஜாதிப் பயலோட மலைக் கோயிலுக்குப்  போற பஸ்ஸில் ஒன்னா உட்கார்ந்திருக்கா. ரெண்டு பேரும் காதலிக்கிறாங்கன்னு காலேஜ் பசங்க பேசிக்கிறாங்க. இது விசயத்தை ஏற்கனவே உங்ககிட்டே சொல்லியிருக்கேன். இப்போ சாமி சந்நிதியில் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களோன்னு சந்தேகமா இருக்கு” என்றான் குமார்.

“பல தடவை எச்சரிக்கை பண்ணியும் அமுதாவோட பழகுறதை அவன் நிறுத்தல. இது சம்பந்தமா அமுதாவோட அப்பன் காளியப்பன்கூட ஃபோனில் பேசிட்டேன். நீ உடனே புறப்பட்டு வா. காளியப்பனைச் சந்திப்போம். அடியாட்களோட அவரையும் கூட்டிட்டுக் கோயிலுக்குப் போவோம். அவனைக் கடத்திட்டுப் போயிக்  காலி பண்ணிடலாம்.” -கொதிக்கும்  நெருப்பு வார்த்தைகளை உதிர்த்தார் மனோகர்.
காளியப்பன் வீடு.

சற்று நேரக் கலந்தாலோசனைக்குப் பிறகு அவர்கள் புறப்பட ஆயத்தமானார்கள். அப்போது அமுதாவே அங்கு வந்து சேர்ந்தாள்.

எதிர்பாராத அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்ட மனோகர், அமுதாவை விசாரிக்கும்படி காளியப்பனுக்கு ஜாடை காட்டினார்.

“மலைக் கோயிலுக்குப் போயிருந்தியா?” -மகளை முறைத்தபடி கேட்டார் காளியப்பன்.

“ஆமாப்பா. நான் என் கிளாஸ்மேட் கலைச்செல்வனைப் பத்தி உங்ககிட்டே சொல்லியிருக்கேன். ரொம்ப நல்லவன்; புத்திசாலி. நான் பி.எஸ்ஸி. முதல் வகுப்பில் தேறினதுக்கு அவன்தான் காரணம்.  இப்போ பி.ஜி.யிலேயும் எனக்குக் கிளாஸ்மேட். அவனை நான் கூடப் பிறக்காத சகோதரனா நேசிக்கிறேன். நாங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறதா யாரோ வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்காங்க. அதனால மலைக்கோயிலுக்குப் போயி நண்பர்கள் முன்னிலையில் கலைச்செல்வனுக்கு ‘ராக்கிக் கயிறு’ கட்டிட்டேன். தாழ்த்தப்பட்ட ஜாதிப் பையனைக் காதலிக்கிறதுதான் தப்புன்னா, சகோதரனா ஏத்துக்கிறதுகூடத்  தப்பாப்பா?”

-சொல்லி முடித்து மனோகரை உற்று நோக்கினாள் அமுதா. அவரின் பார்வை தரையில் தாழ்ந்து கிடந்தது; முகத்தில் அசடு வழிந்துகொண்டிருந்தது.
===============================================================================

4 கருத்துகள்: