திங்கள், 27 மார்ச், 2017

‘கிறு...கிறு’க்க வைக்கும் ‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சை!!!

இந்நாள்வரை, இவ்வுலகில் மூளைமாற்று அறுவைச் சிகிச்சை நடந்ததில்லை; ‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சை...?!

தலைமாற்று அறுவைச் சிகிச்சை பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்களாம்.
1908 ஆம் ஆண்டில், ஒரு நாயின் தலையை வெட்டி எடுத்துவிட்டு மற்றொரு தலையைப் பொருத்தும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் படிப்படியான வளர்ச்சிக்குப் பிறகு, நாயின் தலையை அகற்றிவிட்டு வேறொரு தலையைப் பொருத்தும் மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. சிகிச்சைக்குள்ளான நாய்கள் இறந்துவிட்டன.

‘நாய்கள் பாவம்’ என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் விஞ்ஞானிகள் தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்கள்.

1970 ஆம் ஆண்டில், மூளை நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜெ.வெயிட் என்பவர் குரங்கின் தலையை மாற்றி வைத்து அறுவை செய்தார். வெற்றிகரமான அறுவை!

அறுவைக்குள்ளான குரங்கின் உடல் செயலிழந்தது. இருப்பினும், அந்தக் குரங்கால் கேட்கவும் உணரவும், சுவைத்துச் சாப்பிடவும் முடிந்ததாம்! கண்ணெதிரில் உள்ள பொருளின் நகர்வுக்கு ஏற்ப அது தன் கருமணியை அசைத்ததாம்!

ஆயினும் என்ன, ‘உடல் உறுப்பை ஏற்க மறுத்தல்’ என்னும் நோய் எதிர்ப்புச் சக்தி அந்தக் குரங்கை வாழவிடவில்லை.  ஒன்பதாவது நாளில், குரங்கு தன் மேல் உலக யாத்திரையை மேற்கொண்டுவிட்டது. ‘இது காட்டுமிராண்டித்தனமான செயல்’ என்று விஞ்ஞானிகள் பலரும் கண்டித்தார்கள்.

என்ன கண்டித்து என்ன பயன்?

இத்தாலிய மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ‘சார்ஜியோ கேனாவீரோ’ என்பவர், மனிதத் தலையை மாற்றி வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறாராம்! இது, சீனா அல்லது அமெரிக்காவில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்.

கேனாவீரோ சுத்தக் கேணயவீரோவாக இருப்பாரோ!?
===============================================================================

நன்றி: ‘மூளை’; முதல் பதிப்பு: டிசம்பர் 2016; விகடன் பிரசுரம்.

2 கருத்துகள்: