ஞாயிறு, 19 மார்ச், 2017

புத்தனுக்குப் போதி மரத்தடியில்[அரச மரம்] ஞானம் பிறந்ததா?

ஆறறிவு படைத்தவர் அனைவரும் மனிதர்களே. மரபு மற்றும் வாழும் சூழ்நிலை காரணமாகச் சிந்திக்கும் திறன் கூடவோ குறையவோ செய்யலாம். ஞானிகள், அவதாரங்கள் என்று எவரும் இல்லை.
கவுதம புத்தன் அரச குலத்தில் பிறந்து, அளப்பரிய சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்தவன். அதிலிருந்து விடுபட்டு, எளிய மக்களின் வாழ்க்கை அவலங்களை எதிர்கொள்ள நேரிட்டபோது கடும் அதிர்ச்சிக்கு உள்ளானான். அந்த அதிர்ச்சி அவனை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியது.

துன்பங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காகக் கானகங்களில் அலைந்தான்;வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தான். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தான். அவருடைய போதனை புத்தனை வெகுவாகக் கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றான்.

சுயமாகச் சிந்தித்தான்;  எங்கெல்லாமோ அலைந்து திரிந்துகொண்டே சிந்தித்தான்; இடம் பெயராமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே சிந்தித்தான்; ஊண் உறக்கமின்றிச் சிந்தித்தான். துன்பங்களுக்கான மூலகாரணங்கள் ஒவ்வொன்றாகப் புரிய ஆரம்பிக்கின்றன.

துன்பங்களிலிருந்து விடுபட.....

‘ஆசையைத் துறக்க வேண்டும்’ என்ற உண்மையை ஒரு நாள் உணர்ந்திருப்பான். இது போதி மரத்தடியில் நிகழ்ந்திருக்கலாம் 

‘உயிர்வதை கூடாது’ என்னும் அறநெறியைப் பிறிதொரு நாள் உய்த்துணர்ந்திருப்பான். இது, வேம்பு போன்ற வேறொரு மரத்தின்கீழ் நிகழ்ந்திருக்கக்கூடும்.

‘அழுக்காறு வேண்டாம்’ என்னும் உயர் நெறியை ஓராண்டு கழித்து அவன் ஆராய்ந்து அறிந்திருக்கக்கூடும். இந்த நீதி, ஓடும் ஆற்று நீரில் குளித்துக்கொண்டிருக்கும்போது அவன் சிந்தனையில் மலர்ந்திருக்கலாம்.

‘தீமை புரிய வேண்டாம்; நல்லதே நினை; செய்' என்பன போன்ற பல அறநெறிகளைச் சிந்தித்து அறிவதற்குச் சில ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம். இந்த எண்ணம், தீச்செயல் புரிவோரை நினைவுகூர்ந்தபோது மனதில் அரும்பியிருக்க வாய்ப்புள்ளது.

ஆக, புத்தன் சொன்ன அறவுரைகளும் வகுத்தளித்த வாழ்க்கை நெறிகளும்  ஒரு நாளில், குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிட்ட சில மணி நேரங்களில் அவனால் அறியப்பட்டவை அல்ல; உணரப்பட்டவை அல்ல என்பது அறியத்தக்கது. இதுவே எதார்த்தமும்கூட.

//கயாவில் உள்ள போதி என்ற இடத்தில் ஒரு மரத்தின் கீழ் 49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்றார் புத்தர்// [wikivisually.com/lang-ta/wiki/கௌதம_புத்தர்].  

//தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம்[?] தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார்// -விக்கிப்பீடியா

//49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோதயம் கிடைத்தப் பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமயபோதனைகளையும், உபதேசங்களையும் போதித்தார்// -etamilwin.blogspot.com/2015/04/blog-post_21.html

என்றிவ்வாறான பல நம்பிக்கைகள் இன்றளவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
யாரோ ஒருவர் அல்லது சிலர் சொல்லிச் சென்றதைப் பின்னர் வந்தவர்கள் 
வழிமொழிந்து வந்திருக்கிறார்கள்.

வாழ்க்கையைச் சீர்திருத்துவதற்கான பல உயர்ந்த தத்துவங்கள் அல்லது கொள்கைகள் ஒரு 
குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட சிறு கால அவகாசத்தில் உதித்தவை என்பது சாத்தியமே 
இல்லாத நிகழ்வாகும்.

ஞானம்’ என்பது மனித குலத்தில், அரிதாக வெகு சிலருக்கு மட்டுமே வாய்ப்பது’ என்பதாக ஒரு 
நம்பிக்கை, காலங்காலமாக மக்கள் மனங்களில் திணிக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலுமாய் 
அகற்றப்படவேண்டிய ஒன்று. 

ஆறறிவு படைத்த அனைவரும் மனிதர்களே. மரபு மற்றும் வாழும் சூழ்நிலை காரணமாகச் சிந்திக்கும் திறன் கூடவோ குறையவோ செய்யலாம். ஞானிகள், அவதாரங்கள் என்று எவரும் இல்லை.
===============================================================================
புத்தரை,  ‘புத்தன்’ என்றே குறிப்பிட்டுள்ளேன். இதை விரும்பாதவர் பொறுத்தருள்வீர்!

2 கருத்துகள்:

  1. முற்போக்கான சில சிந்தனைகளுக்கு சொந்தக் காரர் புத்தர் என்று வேண்டுமானால் சொல்லலாம்தானே :)

    பதிலளிநீக்கு