தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Mar 7, 2017

இனிக்க இனிக்கக் கதைகள்! இனியும் வளருமா இந்துமதம்?!?!

பக்தர்கள், கடவுளைப் பார்த்ததாக மட்டுமல்ல, அவருடன் நேருக்கு நேர் பேசியதாகவும் சொல்லப்படும் கதைகள் ஏராளம்! இக்கதைகளை மீள்பதிவு செய்வதில் இன்றைய தமிழ் நாளிதழ்களும் ஏனைய பருவ இதழ்களும் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் விளைவு.....?!?!?
கி.பி.1009 ஆம் ஆண்டில் பூவிருந்தவல்லியில் [பூந்தமல்லி] பிறந்தவர் திருக்கச்சி நம்பி; வைணவர்; காஞ்சிப் பெருமாளுக்கு ‘ஆலவட்டக் கைங்கர்யம்’ எனப்படும் விசிறி வீசுவது இவரின் தொழில்.

விசிறி வீசும்போது வரதராஜப் பெருமாளுடன் உரையாடும் பேறு பெற்றவராம் இவர்!

ஒரு நாள், ரங்கநாதரைத் தரிசனம் செய்வதற்காக ஸ்ரீரங்கம் சென்றார். அவரின் அழகில் மயங்கி, “உனக்கு நித்தமும் ஆலவட்டச் சேவை செய்யும் பேற்றை எனக்கு வழங்கு” என்றார்.

“காவிரி நதிக்கரை ஓரம் குடியிருக்கிறேன் நான். இங்கு குளுகுளுன்னு காத்து வீசுது. திருமலைக்குச் சென்று அங்குள்ளவருக்கு விசிறி வீசு” என்றார் திருவரங்கன்.

திருமலை சென்று ஏழுமலையானிடமும் தன் விண்ணப்பத்தை முன்வைத்தார் திருக்கச்சியார். அவரோ.....

“ஏழுமலைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன. இங்கு இதமான தென்றல் வீசுவதால் நான் எந்நேரமும் இன்பசாகரத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். காஞ்சிபுரம் செல்.  அங்குள்ள வரதராஜப் பெருமாள், பிரம்மனது தவப்பயனால் வெம்மை தகிக்கும் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர்[வேள்விக் குண்டத்தில் அவதரித்ததன் அடையாளமாக அவரின் முகத்திலும் தேகத்திலும் ஆங்காங்கே தீக்காயங்களின் வடுக்கள் தென்படுமாம்!...என்ன எழவுடா இது, மும்மூர்த்திகளில் ஒருவரை நெருப்பு சுடுமா என்றெல்லாம் குழம்ப வேண்டாம்] அவர் என்பதால்  நீ தொடர்ந்து அவருக்கே சேவை செய்” என்று இவரை அனுப்பி வைத்தாராம் வேங்கடவன்.

ஒரு நாள், ஆற்றில் குளித்துவிட்டு வந்த திருக்கச்சியாரிடம், “உங்களின் பாதம் பட்ட மண்ணை உடம்பெங்கும் பூசிக்கொண்டால் மோட்சம் கிடைக்கும்” என்றாராம் ஒருவர். அப்படியும் நடக்குமா என்ற சந்தேகம் வந்தது கச்சியாருக்கு. வரதராசனிடமே கேட்டார் அவர். அவரும் “ஆமாம்” என்றாராம்.

“உனக்குத் தினமும் விசிறி வீசுகிறேனே, எனக்கும் மோட்சம் கிட்டும்தானே?” -திருக்கச்சி நம்பி.

“கிட்டாது” -வரதராசன்.

“ஏன்?”

“நான் தினமும் உன்னுடன் பேசுகிறேனே. அது போதாதா?” என்றார் கடவுள்.

இப்படியாக, இன்னும் எப்படியெல்லாமோ தொடர்கிறது திருக்கச்சி நம்பியின் கதை.

வாசகனை அடிமுட்டாள் ஆக்குகிற இவ்வாறான கதைகளை கணக்கு வழக்கில்லாமல் நம் தமிழ் நாளிதழ்களும் ஏனைய பருவ இதழ்களும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன[கிறித்தவ இஸ்லாமியக் கதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு].

இவர்கள் பக்தியுணர்வை வளர்க்கிறார்களாம்! மனித மனங்களைப் பக்குவப்படுத்துகிறார்களாம்! மனங்களில் நிம்மதி பரவுகிறதாம்! உண்மையில்.....

இவர்களுக்கு இதழ்  விற்பனையே முதன்மை நோக்கம்; மூடநம்பிக்கைப் பெருக்கம் குறித்தோ, சமுதாயச் சீரழிவு குறித்தோ கிஞ்சித்தும் கவலையில்லை.

இவர்கள் மட்டுமல்ல, வேறு எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை!!!
===============================================================================
இந்தக் கதையை எழுதியவர் பி.சுவாமிநாதன். வெளியான இதழ்: ‘ராணி, 05.03.2017.